தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்து காலத்தால் அழிக்கமுடியாதவை சிலவற்றை இங்கே இந்த இடத்தில் தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (TShrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Thursday, April 17, 2014

பிறவாத கவிதை - பிரமிள்


பிறவாத கவிதை - பிரமிள்

மீண்டும் மீண்டும்
நோக்காடு வந்தும்
பிள்ளை பிறக்கவில்லை.
'வாடா' என்றழைத்த
ரிஷித்தகப்பன் குரலுக்கும்
சுகப் பிரம்மமாக
வந்துதிக்கவில்லை.
இதயத்தின்
பட்டுத் துரும்புக்
கூட்டுக்குள்
புழுவாய் நெளிந்து
கிடக்கிறது இது.

துரும்பென்ன தூணென்ன?
கூவி அழைத்தவுடன்
கல்த் தூண்
அசுர சேனை
அக்குரோணி ஆயிரத்தோடு
ஹிரண்யக் கொடுநெஞ்சம்
பிரகலாத தாபம்
மூன்றையும்
ஒரே கணத்தில்
கிழித்து
காலத் துரும்பை
எற்றி எடுத்து
எரித்து நீறாக்கி
நிற்க வேண்டாமா
கவிதை?


கவிதை

திமிங்கிலம் பிடிக்க
கப்பலேறி
கடல் நீரில்
குழி பறித்தேன்.
வந்து கவ்வி
வசப்படு மென்று
புலிக்கு இரையாய்
தூண்டிற்புழு தொங்கவிட்டு
மரத்திலே காத்திருந்தேன்.

        தூண்டில் துளிர்த்து
        இலையில் ஊர்ந்து
        வசமாயிற்று
        புயல்.
        நீர் சுழன்று குழிந்து
        பிடிபட்டது
        பிரளயம்.  


'இந்த இரண்டு கவிதைகளும் பொதுவாகக் கலை என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய பிரமிளின் பார்வை என்றும் கொள்ளலாம்.
http://www.maamallan.com/2011/02/blog-post_04.html