தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்து காலத்தால் அழிக்கமுடியாதவை சிலவற்றை இங்கே இந்த இடத்தில் தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (TShrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Wednesday, April 23, 2014

அவமானப்படுத்தப்பட்டவள் - சிவரமணி

நன்றி http://www.peddai.blogspot.in/2005/03/blog-post_08.html

உங்களின் வரையறைகளின்
சாளரத்துக்குப் பின்னால்
நீங்கள் என்னைத் தள்ள முடியாது.
இதுவரை காலமும்,
நிரந்தரமாக்கப்பட்ட சகதிக்குள் கிடந்து
வெளியே எடுத்து வரப்பட்ட
ஒரு சிறிய கல்லைப் போன்று
நான்
என்னைக் கண்டெடுத்துள்ளேன்
என்னுடைய நாட்களை நீங்கள்
பறித்துக் கொள்ள முடியாது.
கண்களைப் பொத்திக் கொள்ளும்
உங்கள் விரல்களிடையே
தன்னைக் கீழிறக்கிக் கொள்ளும்
ஒரு குட்டி நட்சத்திரம் போன்று
எனது இருத்தல்
உறுதி பெற்றது.

நிராகரிக்கப்பட முடியாதவள் நான்
இனியும் என்ன
தூக்கியெறியப்பட முடியாத கேள்வியாய்
நான்
பிரசன்னமாயுள்ளேன்
என்னை
அவமானங்களாலும்
அநாகரிக வார்த்தைகளாலும் போர்த்துங்கள்

ஆனால்,
உங்கள் எல்லோரினதும்
நாகரிகம் வாய்ந்த கனவுகளின் மீது
ஒரு அழுக்குக் குவியலாய்
பளிச்சிடும் உங்கள் சப்பாத்துகளை
அசுத்தம் செய்கிறேன்.

என்னுடைய நியாயங்கள்
நிராகரிக்கப்படும் வரை
உங்களின் எல்லாப் பாதைகளும்
அழுக்குப் படிந்தவையே.

(1990)
~சிவரமணி, வயது 22
தற்கொலைக்கு ஒரு வருடம் முன்.
POSTED BY ஒரு பொடிச்சி AT 3/08/2005 08:37:00 AM  

10 COMMENTS:

 Blogger Thangamani said...
செல்வி, சிவரமணி கவிதைகள் தொகுப்பு ஒன்றைப் படிக்க நேரிட்டது பல வருடங்களுக்கு முன். அவை ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. இந்தக் கவிதையை இங்கு பதிவு செய்து மீள்வாசிப்புக்கு உதவியதற்கு நன்றி!

3/07/2005 11:46:00 PM
 Blogger ஒரு பொடிச்சி said...
நன்றி தங்கமணி. நேற்று ஒரு நூலைப் பற்றி எழுதியபோது அதில சிவரமணி வந்து, இக் கவிதை போடத் தோன்றிற்று. மகளிர் தினம் என்றிற ஒன்றிற்கு இவளது கவிதை ஒரு பெரிய irony எல்லா!

உங்களை அந்த நூல் பாதித்தது சந்தோசமாக இருக்கு. எமக்கு பிடித்ததற்கு நெருக்கமான (ஈழம், பெண் etc) விடயங்கள்தான் காரணமோ என்று நினைத்ததுண்டு.

பெப்.உயிர்மை இதழில் எஸ்.ராமகிருஷ்ணன் அனா அகமத்ரோவா, சில்வியா பிளாத் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார் "சொற்களின் தேவதைகள்" என்று. மிகவும் நெகிழ்ச்சியாக ஒரு புனைவை எழுதுவதுபோலவே எழுதியிருந்தார்- அந்தப் பெண்களை பக்கத்திருந்து பார்த்து உணர்ந்ததுபோல! 
சிவரமணியைப் பற்றியும் அப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது. செம்மண்ணின் தேவதை என்று!
இந்தத் தினத்தில் இதை இங்கே பகிர்வதில் ஒரு குரூர திருப்தி இருக்கிறது. இப்போ மேல, 'தற்கொலைக்கு ஒரு வருடம் முன்' என்றும் போட்டிருக்கிறேன். ரொம்பத் திருப்தியாய் இருக்கிறது!
தங்கமணி! 'சொற்களின் தேவதைகள்' அ எங்கயாவது எழுதோணும் என நினைத்தது, இப்ப எழுதியாச்சு. அது மிகவும் நல்லதொரு அறிமுகம்.
நன்றி.

3/08/2005 05:58:00 AM
 Blogger மதி கந்தசாமி (Mathy) said...
எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளில் ஒன்று. இங்கே பகிர்ந்துகொண்டதற்கு நன்றி!

3/08/2005 07:11:00 AM
 Anonymous Balaji-paari said...
ikkavithai naRu. 
unmaigal urakka sollappada vendum.
Mahilir thina vaazhthukkazhum.
Nandrigal Peddai

3/08/2005 10:59:00 AM
 Blogger ஈழநாதன்(Eelanathan) said...
பொடிச்சி சிவரமணி ஈழத்து பெண் கவிஞர்களுள் பேசப்படவேண்டிய ஒருவர் அவரது மறைவு எமக்கு இழப்பே.அவரது மறைவுக்கு முந்திய கவிதைகளில் அளவற்ற விரக்தி தொனித்ததாக ஓரிடத்தில் வாசித்தேன் எங்கென்று மறந்துவிட்டது சரியான தகவலா?

3/08/2005 04:35:00 PM
 Blogger டிசே தமிழன் said...
பொடிச்சி, நேற்று நீங்கள் சிவரமணியின் இந்தக்கவிதையைப் போடுவதற்கு சற்று முன்னர்தான் எஸ்.ராவின் தேவதைகளின் சொற்கள் வாசித்து மிகவும் நெகிழ்ந்து போயிருந்தேன். அந்தக்கட்டுரையை வாசித்தபோது சிவரமணியையும் எஸ்.ரா கொஞ்சம் கலந்து பேசியிருந்தால் நன்றாயிருந்திருக்கும் என்று நினைத்திருந்தேன் (நீங்கள் அதை ஏற்கனவே குறிப்பிட்டு விட்டீர்கள்). சில்வியா பிளாத், ஆன் செக்ஸ்டன் போன்றவர்கள் குடும்ப அமைப்பு மீதான பயங்களில்/வன்முறைகளில் தற்கொலை செய்துகொண்ட புள்ளிக்கும், அன்னா அகமத்ரோவா அரசியல் நிலைப்பாடுகளால் குலைந்துபோவதற்கும் இடையிலான ஒரு புள்ளியில் (அல்லது இவர்கள் அனைவரையும் இணைக்கக்கூடிய ஒரு தளத்தில்) சிவரமணியின் வாழ்க்கை வருகிறது. 19 வயதில் சில்வியா பிளாத் குடும்ப அமைப்புப்பற்றி எழுதிய குறிப்புக்கும், சிவரமணியின் இறுதி நாள்களுக்கும் மிக நெருக்கமிருக்கிறதென்று தோன்றுகிறது. எஸ்.ரா குறிப்பிட்ட பெண்களைவிட ரமணி மிக இள வயதிலேயே தனது முடிவைத்தேடியும் கொண்டவர். சிவரமணியின் நீங்கள் மேலிட்டிருந்த படத்தை, சிறுவயதில் அக்காவின் ஆல்பமொன்றில், 'கேட்ட கேள்விக்கு விடையில்லாதபோது மெளனமாக இருக்கப் பழகவும்' என்ற ரமணியின் வார்த்தையுடன் பார்த்திருக்கின்றேன். இன்று தற்கொலைகள் பற்றி வாழ்வு நிரம்பவே போதித்துவிட்டதால், இந்தப்படம் வேறொரு அர்த்தத்தைத் தந்து, மனதை மிகவும் கனக்கச்செய்துவிடுகிறது.

3/09/2005 07:50:00 PM
 Blogger selvanayaki said...
கவிதையின் வீச்சு மிகவும் பிடித்தமானதாகவும், கவிஞரின் முடிவைப் பற்றி அறிந்தது வலியாகவும் இருக்கிறது. மகளிர் தினத்துக்கு மிகப் பொருத்தம் நீங்கள் இன்று இதைப் பகிர்ந்து கொண்டது.

3/10/2005 03:10:00 PM
 Blogger ஒரு பொடிச்சி said...
ஈழநாதன், டீஜே,
சிவரமணியைப் பற்றிப் பேசுகிறபோது, உடனடியாக எனக்குத் தோன்றுகிற விசயம், 'அவளை'த் தெரிந்தவர்கள் யாரும் அவளைப் பற்றி எழுதவில்லை என்பதே.
சித்ரலேகாவோ இன்ன பிற அறிவுசீவிகளோ அல்ல, அவளோடு பழகிய, அவளை உணர்ந்த மனிதர்கள் எல்லோரும் எழுத மறுத்து மௌனமாக உள்ளார்கள் என்பதே அவள் பற்றி பெரியதொரு வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் அவளை எழுதுமட்டும் காத்திருப்போம். சிலவேளை அப்போது அவளது ஆளுமை பொதுத்தளத்தில் விரிவாகப் பேசப்படலாம். 
அதனால்தான் அவளையும் குறிப்பிட்டு,
எஸ்.ரா எழுதியிருக்கலாமென்றொரு எண்ணம் எனக்குத் தோன்றவில்லை. 22 கவிதைகளை மட்டுமே விட்டுச் சென்ற ஒருத்தியும் (அதையும் அழித்துவிடுமாறு கூறி) உலகின் இரு முக்கிய ஆளுமைகளும் இணைகிற முடிவுதான் ஒன்று, இந்த இரு 'சொற்களின் தேவதைகள்' போல சிவரமணியின் படைப்பாளுமையை ஒருவர் ஒப்பிட அவளது பிரதிகளே இல்லையே.. எனினும் சிவரமணி அவர்களுக்கீடான ஒரு ஆளுமைதான், ஆனால் முன்னெடுத்துச்செல்லப்படவில்லை. 
சிவரமணிதந்த மனப்பதிவை இன்னொரு சமயம் எழுதவேண்டும்.

அப்புறம், ஈழநாதன், அவளது இறுதிக்கவிதைகளில் 'விரக்தி' இருந்ததென்ற விமர்சனம் (நான் அதை அவர்கள் சொல்லுகிற 'விரக்தி'யாகப் பார்க்கவில்லை) உண்மைதான். முக்கியமாக சிவசேகரம் தற்கொலை 'கோழைத்தனமான' முடிவு 'அதைத்தான் சிவரமணி பெண்களிற்கு முன்வைக்கிறாரா' என்றெல்லாம் நிறைய விமர்சனம் வைத்திருந்த ஞாபகம். இவைகள் விமர்சனங்கள் என எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால் சிலபேர் சிவரமணியின் ஆரம்பகால (16, 17 வயது) க்கவிதைகளிலையே பிறகு அவள் தற்கொலையைத் தேர்வதற்கான 'சாத்தியங்கள்' இருந்தன என எழுதியதை என்னவென்பது? தங்களது கருத்தொன்றை 'நிறுவுவதற்காக' இப்படிக் கூறுபவர்கள்தான் மிக மிக அச்சமூட்டுகிறார்கள். 
சமகால நவீனக் கவிஞர் ஒருவர் ஒருமுறை எழுதினார். 'ஒரு காரணத்தைத் தராமல், ஒருவன் தற்கொலை செய்துகொள்கிறான், அதுவே எங்கள் எல்லோரையும் (அதற்கான) பொறுப்பாளியாக்கிக்கொண்டிருக்கிறது' எண்டிறதுமாதிரி ஏதோ. சிவரமணி அந்த சிரமத்தைக்கூட எங்களுக்கு வைக்கவில்லை. 'நான் சிந்திச்சு சுயமா எடுத்த முடிவு, என்ர கைக்கெட்டிய எல்லாத்தையும் எரிச்சிட்டன், முடிஞ்சா மீதி இருக்கிறதையும் எரித்துவிடுங்கள், எனக்குச் செய்யிற பெரிய உதவி' என்று எழுதி வைத்திற்றுத்தான் போயுள்ளா! நாங்கள்தான் அந்த 22 கவிதைகளையும் (அதிலும் சில பிரச்சினைகள்)வச்சு அவள்ட ஆன்மாவ நிம்மதியற்று தவிக்க விட்டெண்டு இருக்கிறோம்!
மற்றப்படி
சிவரமணியின் ஆரம்பகாலங்கள் சமத்துவமான ஒரு எதிர்காலத்தை விரும்பிய ஒரு இளம்பிள்ளையின் நம்பிக்கை, நம்பிக்கை நம்பிக்கை மட்டுமே உடைய கவிதைகள். அதையே தமக்கேற்ப அர்த்தப்படுத்தி மகிழ்கிறவர்களைப் பாக்கிறபோத பிற விமர்சனங்கள் பறவாயில்லை என்று தோன்றும். இது பற்றி இன்னொரு சமயம் நிச்சயம் எழுதுவேன், அவளைப்பற்றிய மனப்பதிவாக ஏனும்..
மதி பாலாஜி செல்வநாயகி.
எல்லோருக்கும் நன்றி

3/13/2005 10:06:00 PM
 Blogger ஈழநாதன்(Eelanathan) said...
நன்றி பொடிச்சி
"தவிர்க்க முடியாத கேள்வியாய் உங்கள் முன் பிரசன்னமாயுள்ளேன்" என்று சிவரமணி எழுதி வைத்துவிட்டுப்போன இந்த வரிகள் என்றுமே மறக்கமுடியாதவை.சேரனும் மலியும் தற்கொலைகள் பற்றி தனது சிங்கைத் தமிழ் முரசு தொடரில் குறிப்பிட்டுள்ளார்.அதிலே தனது நண்பியான சிவரமணி தற்கொலை செய்து கொண்டதையும் குறிப்பிட்டுள்ளார்.

3/14/2005 12:28:00 AM
 Blogger ஒரு பொடிச்சி said...
பொதுவாகவே எமது பழக்கத்தில் இருக்கிற சில விடயங்கள் சம்பிரதாயங்கள்தான். உதாரணமாய், என்னிடம் ஒருவர் சொன்ன கருத்தை எழுதுகையில் 'ஒரு நண்பர் சொன்னார்' என நான் எழுதினால்,அதன் அர்த்தம் அவர் எனது நண்பர் என்பது அல்ல, 'நண்பர்' என்பதற்கு நமது அகராதியில் என்ன அர்த்தம் என்றும் பார்த்தால்! அதேபோல சேரன் 'நண்பி' என எழுதுவதும். ராஜினி, செல்வி, சிவரமணி இவர்களுடைய சமகாலத்தவர்களான வ.ஐ.ச சேரன் போன்றவர்கள் அவர்களை 'நண்பி' என எழுதலாம். ஆனால் சேரன் சிவரமணியிலும் 10 ஆண்டுகள் முதியவர் என நினைக்கிறென் (ரமணி 1967 இல் பிறந்தவர்). நான் இங்கு அவளின் 'நண்பர்கள்' என எழுதுவது, அவளுடன் படித்த, அவளுடன் வாழ்ந்த, அவளை அறிந்தவர்களை. சேரன் சி.ரமணியைப்பற்றி எழுதுவதை நான் சித்ரலேகாபோன்ற புத்திசீவியெழுதுவதாயே பார்க்கிறேன். இவர்களது எழுத்து முக்கியமான 'பதிவுகளாக' இருக்கும். அதற்காப்பால் சி.ரமணியை அறிய இன்னமும் எதுவும் எழுதப்படவில்லை. 
நான் பிறகொருக்கால் சிவரமணியைப் பற்றி கட்டாயம் எழுதுவேன், எழுதவேணும். அப்போது இவைகள் பற்றி மேலும் பேசலாம். நன்றிp://www.peddai.blogspot.in/2005/03/blog-post_08.html