தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Wednesday, April 30, 2014

கண்ணாடியுள்ளிருந்து - பிரமிள், கண்ணாடியுள்ளிருந்து கவிதைகள் முப்பத்தெட்டு மார்ச் 1973 - வெங்கட் சாமிநாதன் எழுதிய முன்னுரையா?

குறுங்காவியம் :

கண்ணாடியுள்ளிருந்து

(தட்டச்சு - ரா ரா கு)

1.

யாரிது?
இதுதான் என் பிறப்பா
இது பிரதி,
எனது புதிய மறுமை
பிறப்பல்ல.
பிறப்பதற்கு
வாழும் கணமே
சாவாக வேண்டும் ,நாமோ
வெறுமே சாகிறோம்.

கண்ணாடி சமீபிக்கிறது
எனது எண்ணங்கள்
கதவைத் தட்டுகின்றன.
தட்டும் ஒலி எதிரொலித்து
எனது இரட்டையின்
காலடியில் சப்திக்கிறது.
ஒவ்வொரு
அடிச்சுவட்டுடனும்
என் இதயத்திலிருந்து
வீழும் ஒரு நக்ஷத்ரம்
எனது இருளுருவின்
விளிம்புவரை தானிந்த
உலகின் தொடுவானம்.

கண்ணிமைகள்
தொட்டுக்கொள்கின்றன.
கண்கள்
இமைகளின் ஆழத்துள்
எதையோ தேடி
தாமே தயாரித்த
தரிசனங்களைப்
பருகுகின்றன.

2.

நாம் ஒருவருள் ஒருவர்
ஊடுருவ முடியாதா?
ஊடுருவி நின்றாடி
எமது ரத்தத் துடிப்பின்
நடனத்தைப்
பருகமுடியாதா?
எதிர்பார்த்து எதிர்பார்த்து
மனம் வாய்புலம்புகிறது
எமது காலடிகள்
சமன் கோடுகளில் வளர்கின்றன.
பொறுமையிழந்து
எம்மிடையே நிகழும் வெளிமீது
மின்னல்களை வரைகிறேன்.
விடிவு வருகிறது
புறாக்களின் வெள்ளித் துடிப்பில்
எனது மலட்டுத்தனம்
தூக்கம் கலைகிறது.
அத்துடன் மரணமும்
இதயத்தின் உதிரத்தாலாட்டில்
மரணம்
புரண்டு படுக்கட்டும்.

கேள்,
குரல்கள்!
ஒளியின் திடீர் ஊளை,
இந்த வெற்றொளி
கண்காணா ஊற்றொன்றின்
ஊளைதான்.
ஒளியின் பேராழத்துள்
ஊற்று ஒளித்திருக்கிறது.
தனது நீர்ப்பெருக்கின்மீது
தானே மிதந்து
ஊற்று எதிரேறட்டும்.
தொடுவான் மீது
இவ் ஒளி உதரம் அழட்டும்.
அழுகை இறுகி
நக்ஷத்ர சக்திகளின்
சிற்றலைகளாகட்டும்,
அவை தமது அச்சுகளிலிருந்து
உலகங்களையும்
மண்துகள்களையும்
கக்கட்டும்...
அல்ல -
நீர்ப்படலத்தில் ஏறி மிதப்பது
ஊற்றாகாது
குமிழ்.

3.

சிகிக்சைக் கருவிபோல்
ஒரு கதிர்
என்னைத் துளைத்து
நுழைகிறது.
தனது நகத்தைக் கழற்றி
என்னுள் எங்கோ
எரிய விடுகிறது.
அவ்வுயின் மீதெனது
நடனங்கள் பிறக்கின்றன,
புலன்களின் மீது
கதவுகள் பூக்கின்றன.
பிறகு பிறந்து
நடக்கும் இரவு
இரவுடன் நடக்குமொரு
அந்தகாரத்தின் அளவின்மை
என்னுடன் பின்தங்கும்
அதன் ஒரு துளி -
இருண்ட நெருப்பு,
ஊமை நட்பு.
பகலூடே,
எனது இருப்பினூடே,
நடக்கும் நிழல்.
மதியக் கணத்தில்
என் இதயத்தை நெருடுமொரு
ஊமைத்தனம்.
என்னிலிருந்து எழும்
லிங்கமாய்த் துடித்து
இரவினுள் புதைய
இணங்குகிறான்.
இரவினுள்,
காலம் காலமாய்
கொள்ளை
போய்க்கொண்டிருக்கும்
வைரங்கள் போல்,
போகாத நக்ஷத்ரங்கள்
வெறுமை மீது
ஒன்றையொன்று
 உற்றுநோக்கும்
இரண்டும் கண்ணாடிகளினுள்
வெளியினுள் வெளி.
.எங்கும்
கோடானுகோடி
பிரதிபிம்பங்கள்.
கர்ப்பக் கிரகத்து
வௌவால்களாய்த் தவிக்கும்
நிழல்கள்.
போக வழியற்று
சுற்றிக் குவியும்
இருள் குழுவினுள்
சூர்ய ஊற்று
நிழலாய் உறைகிறது.
கதிர்களின்
காக்கை அலகுகள்,
இருண்ட அலறல்கள்.
இருள் நெருங்கி
வைரப் புன்னகைகளில்
வர்ணவில் சமிக்ஞையிட்டு
அழைத்ததும்
எனது நிழல்
நிமிர்ந்து
இரவினுள் புதைகிறது.
எங்கும்
உருவெளித் தோற்றங்கள்,
இரவினுள் புதைந்து
முடங்கிக்கிடக்கும் நிழல்கள்
ஒன்றையொன்று கண்டு நிற்கும்
கண்ணாடிகளினுள்
புதைந்து
தனது பிரதிகளின் கானகத்துள்
தன்னை மறக்கிறது
எங்கும் வியாபித்த
ஒற்றை யுரு.

4.

பிரதி பிம்பத்துக்கு
முதுகு இருக்குமா?
கண்ணாடியின் மர்மப்படலம்
கண்ணுக்குத் தெரியாது.
அதன் வித்தை ஒரு
போலிவெளி
பகலைக் கவ்வும் ஒரு
நிழல் நோய்.
என் இருப்பைக் கவ்வும் ஒரு
மூளை.
கதிரின் மீது
நரம்பு வலை,
ஆனால்
தனித்த சுடருக்கு
நிழலில்லை.
சுடரைச் சூழ்ந்து
இரவாய் விரிகிறது என்
தசையின் நிழல்,
இரவினுள்
ஒரு சுடர்,
இதயத்துடிப்பு,
வெளியில் ஒளிப்
பிளவு,
மிருதுச் சுவடு.
முரசொலி கேட்கிறது,
மத்தளங்கள் நடனம்.
சொர்க்கத்துள் நுழைகிறது
மயானச் சாம்பல்.
பரிதியைத் தீண்டும் ஒரு
பனி விரல்.
இவ்வொளி யோனியை
தடவி விரித்தது எவர்கை?
எவ்வகைப் பிரியம்?
இதயத்தின் மத்தளத்தில்
அதிர்வு
மௌனம்
உயிர்ப்பு
மரணம் :
இக்கணம்
இக்கணம்.
யாவற்றினுடனும்
எனது உடன்பிறப்பு,
என்னுடன் யாவும்
யானெனும் கோஷம்.
யுகாந்திரங்களாயினும்
நிலைத்திருப்பது ஒரு கணம்.
இக்கணம்.
மறுகணம்
மீண்டும் எதிரேறும்
எதிர்காலம்
ஒளியைப் பிரதியெடுக்க
மனசை விரித்தேன்
மனசானேன்.
இருள்.
இதயத்தை மூடும்
மனசின் சவப்பாறை.
மலரின் மீது ஓர்
ஊமை வியாதி.
ரத்தச் சக்தியுள்
புதையும் ஒளித் தாவரங்கள்,
ஓளி குவிந்து
வெறும் புழுதி
மணல்.
கண்ணாடிப் பாலைமீது
நடுக்கம் பிறக்கிறது,
புழுதியுடல் பெற்றது காற்று.
எரிந்து கோஷிக்கும்
மணற் சுவாலைகள்
என்னைச் சூழுமொரு
அசைவுச் சுவர்.
பிறகு
ஒவ்வொரு மணல்மீதும்
எனது தசை நிழலின் படிவு,
பாரம்
இறங்குதல்
மண்டுதல்.
உதரக் கண்ணாடி
என்னை அழைக்கிறது.
முகத்தில் முளைத்த
முலைகளாய் மயக்கும் என்
பிரதிகளின் கண்கள்,
என் மீதழுந்தும்
பார்வைக் குவடுகள்.

உதரக் கண்ணாடி
என்னை அழைக்கிறது,
மூடிய கதவின்
சாவித் துவாரத்தில்
வாழ்க்கையின் நடிப்பு
புல்நுனி மீதுறையும்
பனித்துளியில்
ஒரு மலையின் பிரதிபிம்பம்.
மீண்டும்
நான் கண்ணாடியுள் பிறக்கிறேன்
ஆனால், கண்ணாடியுள் நிற்பவன்
நிழலுக்கும் பதிதன்
கண்ணாடி
ஊடற்ற ஒரு
போலி வெளி
வெற்றுத் தளம்
நிர்பரிமாணம்

5.

தசைச் சுவர்வீசும் இப்
புவன நிழல் வெளியில்
சுடர்கள் ஆடுகின்றன.
ஒவ்வொரு சுடரும்
பெண்குறி விரிப்பு
தசை நிழல் பிளவு.
அவற்றை நோக்கி
காற்றில் ஏறும்
மயானச் சாம்பலாய்
எனது லிங்கம்
மீண்டும் எழுகிறது
பனிவிரலாய் நிற்கிறது
உடனெழுந்து நிற்கும்
கேள்விகள்.
இச்சுடர்களின் பொருள்?
பார்வை?
இவற்றில் துடிப்பது
இக்கணம்.
பயத்தில் உறைகிறேன்.
விரிந்து மூடி
துடிக்கும் கதவு.
பார்த்துப் பழகச்
சமீபித்தால் கண்ணாடி.
இக்கணம் இக்கணம்
எனது கண்கள்
குகைகளாகின்றன.
என்னை என் கபாலம்
எதிர்கொண்டழைக்கிறது.
வெளியெங்கும் சுடரா?
நிழலெங்கே?
உள்ளே.
புற வுலகெங்கும்
ஒளிப் புழுதி,
புழுதிச் சுவர்.
திரும்பி நடக்கிறேன்.
திரும்ப திரும்ப
வளைய வருகிறேன்,
எரியும் மணல்மீது
சேற்றுச் சுவடுகள்.
சுடர்களோ என்னோடு
இதயத்துள் ஒடுங்குகின்றன.
ஆனால் இங்கே,
பாலைமீ தெங்கும்
திசையின்மையுள்
திசை தவறி ஓடும்
சுவடுகள்.
கண்ணாடி
வெறிச்சிட்டு நிற்கிறது.

 *
 Doubling Up - a small poem published in QUEST.  Then expanded by Pramil to கண்ணாடியுள்ளிருந்து  - அஃக் -1973.

பிரமிளின் முதல் கவிதைத் தொகுதியின் பெயர் கண்ணாடியுள்ளிருந்து.
கண்ணாடியுள்ளிருந்து (1973) என்பது 5 பகுதிகளாய் இருக்கும் நெடுங்கவிதை.
(எதிரெதிரில் இருந்து, எண்ணற்ற பிரதிகளை ஒன்றுக்குள் ஒன்றாய் உருவாக்கும் சலூன் கண்ணாடிகளை மனதிலிருத்திக்கொள்ளவும்)

விமலாதித்த மாமல்லன் @maamallan
27th April 2014 from TwitLonger

கண்ணாடியுள்ளிருந்து கவிதைகள் முப்பத்தெட்டு மார்ச் 1973

நன்றி : http://trincovoice.blogspot.in/2014/11/1973.html

"ஃ" ஓர் எழுத்தாயுத மாத ஏடு

கண்ணாடியுள்ளிருந்து கவிதைகள் முப்பத்தெட்டு மார்ச் 1973

மணிவிழா கொண்டாடும் சி.சு.செல்லப்பாவுக்கு சமர்ப்பணம்

வெங்கட் சாமிநாதன்
பிரமிள் பானுச்சந்ரென்

நம் உணர்வுலகு அநுபவ உலகு பல பரிமாணங்களைக் கொண்டது. உணரக் கிடைக்கும் அனந்தம் முழுமையும் சிந்தனையின் வாய்ப்படுவதில்லை. நம்மில் பெரும்பாலோர்க்கு அவரவர் சிந்தனை மொழிவழிப்பட்டதாகும். இதன் விளைவாக அவர்கள் சிந்தனை மொழியின் பரிமாணச் சிறைக்குள் அடைபட்டுப்போகிறது. இச்சிறைச் சுவருக்குள்ளேயே, அநுபவ உணர்வுலகமும் அடங்கி விட்டதாக அவர்கள் தீர்மானித்துக் கொள்கிறார்கள். வேறு வார்த்தைகளில் நமக்குச் சாத்தியமாகவிருக்கும் அநுபவ, உணர்வுலகு ஒரு பெரும்  வட்டம் எனக் கொண்டால், அதனுள் ஒரு சிறு வட்டம் சிந்தனை உலகு. அதனுள்ளும் சிறிய வட்டம் மொழி சாத்திய உலகு. ஒரு லட்சிய நோக்கில், மொழி சாத்திய சிறு வட்டம் படிப் படியாக விரிந்து, ஆழ்ந்து, உக்கிரஹித்து அநுபவ உணர்வுலகின் பெரு வட்டத்தில் தன்னை ஐக்கியப் படுத்திக் கொள்ளவேண்டும். நம் கலைஞனர்கள், இலக்கியாசிரியர்கள், "பெரும் பெரும் " விமரிசக தகைகள் எல்லாம் மொழி சாத்திய உலகான சிறு வட்டத்தையே அநுபவ உணர்வுலக பெருவட்டமாகக் கண்டு மயங்குகிறார்கள். இது பரிதாபத்திற்குரியது.

மொழி சாத்திய சிறு வட்டம் என்று யான் சொன்னது இப்போதைய சந்தர்ப்ப சௌகர்யத்திற்காகத்தான். ஏனெனில் இக்கட்டுரை எழுதும் சந்தர்ப்பத்தில் என் சர்ச்சைக்குட்படுவது மொழி என்னும் குறியீடு. வேறு சந்தர்ப்பங்களில், அச்சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு வண்ணம், கோடு, சப்தம், காட்சி என ஆரம்பச் சிறு வட்டத்தின் குறியீடுக் குணத்தை மாற்றிக்கொள்வேன்.இருப்பினும் வெவ்வேறு வகைக் குறியீட்டுச் சாதனங்களின் சிறுவட்டமாக ஆரம்பிக்கும் ஒன்று அநுபவ உணர்வு பெரும் வட்டத்திற்கும் போகும் விரிவில், ஆழத்தில், உக்கிரத்தில் ஒருமை பெற்று இனங்காட்டிப் பிரிக்க முடியாத ஒரு முழுமையை அடைகிறது. அதனால்தான் நம் உணர்வு அநுபவ உலகு பல பரிமாணங்களைக் கொண்டது என்றேன்.

பெரு வட்டம், சிறு வட்டம் எனச் சொன்னதால்தான், ஒன்றிலிருந்து மற்றுன்றிற்கு நிகழும் நகர்வு எனக் கொள்வது தவறு. இது நிகழ்வது முழுக்க முழுக்க 'இடமற்ற' மன விஸ்தாரத்தில். சிறு வட்டச் சிறையோ, பெரு வட்ட விரிவோ அவரவர் மனதில், பிரக்ஞையில் நிகழ்வது. ஒருவன் பெருவட்ட இருப்பை மறுத்து தான் சிறைப்படும் சிறு வட்ட அணைப்புதான் வாழும் சந்தர்ப்பங்களையும் அவன் சிந்தனையின் பரிமாணங்களையும் பொறுத்தது.


பெரு வட்ட உணர்வுலகோ, சப்தம், மொழி என்ற பரிமாண எல்லைகளில் சிறைப்படுவதில்லை. மொழிச் சாதன சிறு வட்டத்தில், பயிற்சி, வாழ்க்கைச் சந்தர்ப்பங்கள், ஈடுபாட்டின் ஓரச் சாய்வு ஆகியவற்றின் காரணமாக சிறைப்படுபவன், பெருவட்ட உணர்வுலகில் , மொழியின் பரிமாணம் மூலம் தான் தரிசிப்பதை மாத்திரமே எடுத்துக் கொள்கிறான். அவனுக்குக் கிடைப்பது ஒரு சிதைந்த உலகு. மூளியான சத்தியம். "எனக்கு இலக்கியம் ஒன்றில்தான் குறி, மற்றவற்றைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை" என்பவன் எவ்வளவு பெரும், பெரும், இலக்கிய கர்த்தாவானாலும் அவன் உலகு சிதைந்த உலகுதான். உண்மையின் தரிசனத் தேடல் கொண்ட இலக்கிய கர்த்தா அவ்வாறு சொல்ல மாட்டான். சிதைபட்ட உலகை மூளியான சத்தியத்தை ஏற்றுக் கொள்ளவும் மாட்டான். அவன் தேடலில் பெருவட்ட உணர்வுலகின் மற்ற பரிமாணங்களின் சாயல் நிழல் தட்டியிருக்கும். இருக்காவிட்டால், சத்தியத் தேட்டையின் வெறும் சாதனமேயாகிய மொழியை சத்தியமாகக் கண்டு மயங்கியவன் அவன். சாதனங்களில் ஏதும் பவித்ரத்வம் இல்லை. சத்தியம் இல்லை.

சந்தர்ப்ப வசமாகவோ, ஈடுபாட்டின் விளைவாகவோ, வண்ணங்களையும், கோடுகளையும் தான் சிறுவட்ட ஆரம்பமாகக் கொண்ட வான்கோ, பெரு வட்ட உணர்வுலகில் உள்மன உளைச்சல் என்ற பரிமாணத்தையும் கண்டான். "முதுமை" கவிதையில் பரிதி, "பரிதிப் பிணம்" ஆகிறது. வான்கோவின் ஓவியத்தில் சூரியனும், ஸிப்ராஸ் மரங்களும் வயல்வெளிகளும் சைத்ரிகனின் மன உளைச்சலை ஸ்வீகரித்துக் கொள்கின்றன. பெரும் சந்தேகக் குறிகளில் ஆரம்பித்து ஐன்ஸ்டின், உணர்வு அநுபவித்தறியாத பிரபஞ்சத்தின் கூறுகளைக் கண்டான். அன்றாட வாழ்வின் பரிதவிப்பில் பிரயாணத்தைத் தொடர்ந்த கார்ல் மார்க்ஸ் சமுதாயத்தின்,மனித சரித்திரத்தின் பிரவாஹ கதியை, அலையாடலை நிர்ணயித்து விட்டான். வண்ணப்புள்ளிகளின் சிறு வட்டத்திலிருந்து காட்சிப் பதிவின் ஒளிச் சேர்க்கைக் கூறுகளைக் காணும் எல்லையை அடைந்தவன் ஸுராட் (Seurat). ஜப்பானிய சித்திர எழுத்துக்களின் அமைப்பு முறை, ஐஸ்ன்டினையும், நரம்பு பலவீனங்களின் ஆராய்ச்சி பாவ்லோவையும், மனித மனத்தின் இயல்புகளுக்குக் கொண்டு சேர்த்தது. இப்படி, மனித வரலாற்றின் சிந்தனா சரித்திரத்தில், ஒரு பரிமாண சாதனா ஆரம்பத்திலிருந்து அதன் வழியே தொடங்கிய பிரயாணம் மற்ற வேறு பரிமாண சாதனா எல்லைகளுக்குத் தாவிய நிகழ்ச்சிகள் அனந்தம். இருந்த இடத்தை விட்டு நகராத பிரகிருதிகள் தாலுகா ஆபீஸ் டெஸ்பாச் கிளார்க்குகள் மாத்திரமல்ல, தமிழ் நாட்டு இலக்கிய விமர்சகப் பெரும் புள்ளிகளும்தான்.

பிரமிள் பானுச்சந்ரென் மொழிவழி சாதனைக்குள் காலெடுத்து வைக்குமுன் இந்த ஆரம்ப அறிமுக எச்சரிக்கை தேவைப்படுகிறது. பானுச்சாந்ரெனின் "கவிதைகள்' இன்ன உலகில் இன்ன பரிமாண எல்லையில்தான் இயங்கும் என நம் தமிழ்தந்த மொழிவழிச் சாதனா சிருவட்டச் சிறைக்குள் இருந்துகொண்டு நிர்ணயிபபதோ, எதிர் பார்ப்பதோ தவறாக முடியும். பானுசந்ரெனின் அநுபவ உணர்வுலகப் பெரு வட்டம் மொழி வழி சாதனா வட்டமாக (கவனிக்கவும், சிறு வட்டமாக அல்ல) தன்னை மாற்றிக்கொள்ள முயல்கிறது. அவர் எழுத்துக்களில் - இங்கு அவர் கவிதைகளில் சிறு வட்டம் பெரு வட்டமாகத் தன்னை விரித்துக் கொள்கிறது. உக்கிரஹித்துக் கொள்கிறது. அவ்விரிதலில், உக்கிரஹிப்பில், அதன் பரிமாண எல்லைகள் மாறியிருப்பதைக் காணலாம், காணச் சக்தி உள்ளவர்கள் ஏனெனில் முதலும் கடைசியுமாக மொழி வெறும் குறியீடே. வாடிப்பட்டி வைரமுத்துப் பிள்ளையிடம் 'Icicles' (ஐஸ் படிமம்) என்று மட்டுமே சொல்லி அதை உணர்த்த முடியாது. பானுச்ச்ந்ரெனின் உணர்வுலகில் கொஞ்சமாவது தானே எட்டிப் பார்த்திருக்க வேண்டும். அவர் காட்டும் பரிமாண விஸ்தாரங்களில் கொஞ்சமாவது தாமும் உணரும் சக்தி வேண்டும்.

நமக்கும் பரிச்சயமான, பாதுகாப்புத் தரும் நம்பிக்கை உணர்வு ஊட்டும் உலகங்களும் பரிமாணங்களும் பானுச்சாந்ரெனின் உலகில் தகர்க்கப்படுகின்றன. கண்களின் வீச்சுத் தொடும் அடிவானம் வரையாவது நீங்கள் சென்று, அடிவானத்திற்கப்பால் அகன்று விரியும் உலகத்தைப் பற்றிய ஞானம் இருந்தால்தான், அடிவானம் வரை மொழிவகுத்த பாதை வழியே சென்று அதற்கும் அப்பால் பானுச்சாந்ரென் அமைக்கும் மொழிவழிப் பாதை வழியே அவர் இட்டுச் செல்லும் உலகத்திற்குப் பயணம் செல்ல சாத்தியமாகும். இல்லையெனில் "எனக்கு இலக்கியம் தான் குறி" என்று தெரு முனையிலேயே டேரா போட்டுக் குருட்டு வாழ்க்கை நடத்த உங்களுக்குச் சுதந்திரம் உண்டு.

இன்று பெரும்பாலான தமிழ்க் கவிதை செல்லும் பாதை, ஏற்கனவே மொழி மொழி சிரமைத்துத் தந்துவிட்ட பாதையில் நீங்கள் அமைத்துக்கொண்ட சௌகரியமான ஒரு நடை பாதையேயாகும். இந்த நடைபாதைக்குள்தான் செப்பனிடுதல், கல்பதித்தல், சீரமைத்தல், அரசியலில் அலங்கார தர்ம கோஷங்கள் எழுதுதல் எல்லாம் நடைபெறுகின்றன. இன்னொரு சிலரோடு பானுச்சாந்ரெனும் மொளிவழிப் பாதைக்கப்பால் உள்ள உலகின் தரிசனங்களைக் காட்டுபவர்.

புதுக்கவிதையில் மரபில், பிரமிள் பானுச்சாந்ரெனின் கவிதைகளைத் தனித்துக் காட்டும் குணங்கள் இரண்டு. ஒன்று அவரது படிம உலகம். இவ்வாறாக நான் பிரித்துக் காட்டியது ஒரு விளக்க சௌகர்யத்திற்காகத்தான். மன--பிரபஞ்ச உணர்வுலகம்தான் படிம ரூபமாக நமக்குக் காட்சியளிக்கிறது. படிமம், காட்சி வழிப்பட்டது. ஓவிய சிற்ப உலகிலிருந்து இடம் பெயர்ந்தது. மன--பிரபஞ்ச உணர்வுலகம், சிந்தனை வழிப்பட்டது. மனோதத்துவ--பிரபஞ்ச ஆராய்வு வழிப்பட்டது. ஆகவே "இலக்கியக்குறி" கொண்ட கற்பரசிகள், மொழிக் கண்ணகிகள் இங்கு கால்வைப்பது ஆபத்தானது. அநுபவ உணர்வுலகில் மற்ற பரிமாணங்களும் உண்டு என அறிந்து அவ்வுலகில் சஞ்சரிக்க விரும்புகிறவர்களுக்கு இங்கு இடம் உண்டு.

மேலே செல்லுமுன் இன்னுமொரு விளக்கம் அவசியம். படிமம் என்பது இங்கு உத்தி அல்ல. காட்சி அனுபவம். அநுபவ சத்தியம். அநுபவ உணர்வுலகமும் படித்தறிந்த தகவல் சேர்க்கை அல்ல, அதுவும் அநுபவ சத்தியம். உத்திகளாகவும், புதுமைகளாகவும், அநுபவ சத்தியத்தைக் காண்பவர்கள் வான்கோழி நட்டியமாடுபவர்கள். அவர்களில் ஒருவரின் கவிதை ஒன்றை மாதிருக்கென தரலாம்.

மலைகள் என்னும் 
குறும்பற்கள் 
முளைத்திராத 
பூதலத்தின் 
கொக்கு போலக் 
காலூன்றி 
நிற்கும் மரங்கள் 
அதற்கப்பால் 
எழுந்து வீழ்ந்து 
தடுமாறும் 
நடக்கத் தெரியாத கடலலைகள் 
யார் சென்றாலும் 
விரல் நீட்டும்.

இங்கு வான்கோழி படிம நடனம் ஆடுகிறது.

மலைகள் என்னும் 
குறும்பற்கள்  
முளைத்திராத ... போயிற்று. இதற்குள்ளேயே பூனை சாக்குப்பைக்கு வெளியே தலை நீட்டி தப்பித்தோடி விட்டது. 


எண்சீர் விருத்தத்திலிருந்து, அறுசீர் விருத்தத்திற்கும், களிப்பாவுக்கும், அகவலுக்கும் என்று கிளைக்குக்கிளை தாவும் பண்டித லாவகம், படிமத்தையும் கிளையாகக் கணித்து தாவியதன் விளைவு இக்கால் முறிவு. இப்படியும் பானுச்சாந்ரென் 70 வருடத்திற்கு முந்தைய ஐரோப்பிய முயற்சிகளிலிருந்து கற்றதல்ல.இன்று இன்னொருவர் பானுச்சந்ரெனிடமிருந்து கற்க.

இவ்வான்கோழி நடனத்திற்குக் காரணமே நம் விமரிசகப் பெருந்தகைகள் தாம். சோதனை என்ற இயக்கத்தின் தாத்பர்யத்தையும், உள்ளார்ந்த உந்துதலையும் முன் வைக்காமல், இப் பெருந்தகைகள், "சோதனை, சோதனை" என்று இலக்கியக் கற்பு நச்சு பண்ணியதன் வினைதான் இவ்வான்கோழி நடனம். சோதனையின் உந்துதலே, ஒரு பரிமாண அநுபவத்திலிருந்து இன்னொரு பரிமாண சோதனைக்குத் தாவும் இயக்கம் தான் என்பதை இலக்கிய கண்ணகிகள் உணரவும் இல்லை, ஆதலால் அதை எடுத்துரைக்கவும் இல்லை.

படிமம் என்பது சம்பிரதாயமாக (கவனிக்கவும்) "சம்பிரதாயமாக" ஓவிய, சிற்ப வழி அநுபவம் ஆகும். மன உளைச்சல்கள், சம்பிரதாயமாக, சொல் வழி, இலக்கிய வழி அநுபவம் ஆவது போல, மன உளைச்சல்கள் வான்கோ என்ற ஓவியனிடம் சாதனையாக பதிவு பெற்றது போல, படிம அநுபவங்கள் மொழிவழி வெளியீடு பெறும் சந்தர்ப்பங்கள் தாம் 70 வருடங்களுக்கு முன் ஐரோப்பாவில் நடந்த படிம கவிதை முயற்சிகள். இங்கு பிரமிள் பானுச்சாந்ரெனின் கைகளில் இன்று தமிழும் நிகழ்ந்திருக்கிறது.இந்நிகழ்ச்சியின் ஊற்றுக் கண்ணை, பானுச்சாந்ரெனின் அநுபவ உணர்வுலகின் நிதர்ஸனத்தில் தான் காண வேண்டும். 1961-ம் வருட "எழுத்து" 36-ல் வெளிவந்த கவிதை "விடிவு" 

பூமித் தோலில் 
அழகுத் தேமல்.
பரிதி புணர்ந்து 
படரும் விந்து.
கதிர்கள் கமழ்ந்து 
விரியும் பூ.
இருளின் சிறகைத் 
தின்னும் கிருமி.
வெளிச்சச் சிறகில் 
மிதக்கும் குருவி.

இங்கு ஒரே காட்சி ஐந்து ரூபங்களில் ஐந்துவித தோற்றங்களில் ஒன்றையழித்து மற்றொன்றாக தோன்றி மறைகிறது.இது தமிழில் முதன் முதல் படிமக் கவிதை. இதன் பிறப்பிற்குக் காரணங்களாக இன்னொரு படிமக் கவிஞரை நாம் தேட வேண்டிய அவசியத்தை பனுச்சாந்ரென் வைக்கவில்லை. இதன் தோற்றத்திற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று, "எழுத்து" தொடங்கிய புதுக்கவிதை மரபு அளித்த சுதந்திர இயக்கம், மற்றொன்று மிக முக்கியமானது. உணர்வுலகக் குணா விசேஷம். "விடிவு" கவிதையில் கண்ட படிம இயல்பின் ஆரம்பங்களைப் படிமக்கவிதை அல்லாத 1960. ஜனவரி "எழுத்து"--வில் வந்த "நான்" கவிதையில் காணலாம்.

ஆரீன்றாள் என்னை 
பாரீன்று பாரிடத்தே 
ஊரீன்று உயிர்க்குலத்தின் 
வேரீன்று பெரும் வெளியில் 
ஒன்று மற்ற பாழ் நிறைந்து 
உருளுகின்ற கோளமெல்லாம் 
அன்று பெற்று விட்டவளென்
தாய்!

வீடெதுவோ எந்தனுக்கு?
ஆடு(ம்) அரன் தீவிழியால் 
முடிஎரித் துயிரறுத்த 
காடு ஒத்துப் பேய்களின்றி 
ஆருமற்ற சூனியமாய் 
தளமற்ற பெரு வெளியாய் 
கூரையற்று நிற்பது என் 
இல்!

யரோ நான்?--ஓ!--ஓ!
யாரோ நான் என்றதற்கு 
குரல் மண்டிப் போனதென்ன?
தேறாத சிந்தனையும் 
மூளாது விட்டதென்ன?
மறந்த பதில் தேடியின்னும் 
இருள் முனுகும் பாதையிலே 
பிறந்திறந்து ஓடுவதோ 
நான்?

இக்கருவின் வளர்ச்சியை, இதற்கடுத்து நவம்பர் 1960 23-ம் "எழுத்து" இதழில் வெளிவந்த "பயிர்" என்ற கவிதையில் பார்க்கலாம்.

வேலி கட்டா வானத்தில் 
வெள்ளிப்பயிர் வளர்க்க 
தாலிகட்டிச் சத்தியினை 
ஈர்ப்பென்ற நீர் பாய்ச்சி 
காலமெல்லாம் காத்திருக்க 
வைத்து விட்டாய்; வைத்து மென்ன?
ஊழியென்ற பட்சி அவன் 
அயர்ந்திருக்கும் வேளையிலே 
வேலி கட்டா வானத்தில் 
வெள்ளி விதைக ளெல்லாம் 
அள்ள விழுங்கும் வரை 
நீர் பாய்ச்சி என்ன பயன் 
வேர்  முளைக்கக் காணோமே!


இதையடுத்து வளர்ந்து முதிர்ந்ததுதான் "விடிவு" கவிதை காட்டும் படிமவியல், நேரிசை வெண்பாவிலிருந்து தாவிய அடுத்த கிளையில்ல பானுச்சாந்ரெனின் படிமங்கள்.

"சமூகம் கெட்டுப் போய் விட்டதடா?
சரி, சோடாப் புட்டி உடைக்கலாம் வாடா"

என்று வேறொருவர் தமது அங்கத சமூகப் பார்வைக்கிளையிலிருந்தும்,

"அடுக்கி வைத்த செங்கற் சூளையிலே 
தனித்த செங்கல்லொன்று சரிகிறது"

என்ற செங்கற் சூளை சித்தாளின் காவல் பார்வைக்கிளைக்கு அவரே தாவ முயல்வது போல, படிம உலகுக்குத்தாவ முடியாது.

ஏன்?

பானுச்சாந்ரெனின் மன-- பிரபஞ்ச உணர்வுலகம் தான் படிமங்களாக காட்சி தருகின்றன. இவற்றை இரு வேறு அம்சங்களாக பிரித்து என் விளக்க சௌகர்யங்களுக்காக என நான் முன்னரே சொன்னேன்.

இம் மன-- பிரபஞ்ச உணர்வு கற்றுத் தெரிந்ததல்ல. கலைஞனின் உடன் பிறந்த ஆளுமை. பிரபஞ்சத்தின் பரப்பு அனந்தம் என்ற இடபரிமாணம், மன எழுச்சியின் உக்கிரமாக எழும் உணர்வுப் பரிமாண மாற்றம், படித்தறிந்து கொள்ளும் தகவல் சேர்க்கை அல்ல. ஆளுமையின் உள்ளிருந்து விகசிக்கும் பார்வை அநுபவம். உணர்வின் மலர்ச்சி. சான்றுகளைக் கவிஞனின் வளர்ச்சியில் காணலாம்.

படிமம், உணர்வு ஆகிய இரு குணங்களின் மங்கலான ஆரம்பங்களை, பானுச்ச்ந்ரென் தன் 20,21-ம் வயதில் எழுதிய 'நான்' கவிதையில் பார்க்கலாம். "பயிர்" என்ற கவிதையில் மங்கல் சிறிது நீங்குகிறது. தெளிவு தோன்றுகிறது. முற்றிலும் படிமத் தெளிவு பெறுவது "விடிவு"  "மின்னல்" ஆகிய கவிதைகளில்.

ஒரு ஓவியனின் பண்புகள், "எழுத்து" பத்த்ரிகை அளித்த சந்தர்ப்பவசமாக, இங்கு தூரிகையையும், வண்ணங்களையும் தேடுவதற்குப் பதிலாக, சொற்களைக் கையாள வைத்துக் கவிதைகளைப் பிறப்பித்திருக்கின்றன. "நான்" கவிதையில் எழுந்த ஒரு கருவின், தெளிவும், உருவும் மங்கலாகத் தெரிந்த  ஒரு கருவின், படிமம் பரிணாமம் மாத்திரம் "மின்னல்", "விடிவு", கவிதைகளில் தெளிவும் உருவும் பெறுகிறது. "நான்" கவிதையில் மங்கலாகத் தொடங்கிய, தெளிவும் உருவம் பெறாத இன்னொரு பரிமாணமாகிய, உணர்வு மனவெழுச்சி "பயிர்" கவிதையிலும் தலைகாட்டியது. அதை "விடிவு", "மின்னல்" கவிதைகளில் நாம் காண்பதில்லை.அதன் தெளிவு, ரூப முதிர்ச்சியை "மறைவு" (எழுத்து - 36, டிசம்பர் 61) கவிதையில் காணலாம்.

ஆக இங்கு பரிமாணங்களும் கிளைவிட்டுப் பிரிவது ஆரம்ப காலங்களில்தான். பின் வருடங்களில், காட்சித் தோற்றத்திலும், உணர்வுப் பாங்கிலும் அவை எப்போதும் ஒன்றிணைந்து முழுமையாகின்றன.

இம் முழுமையின் சீரான பிரவாஹத்தை 60-ன் ஆரம்ப காலங்களிலிருந்து இன்று எழுதப்பட்ட "கன்னாடியுளிருந்து" என்ற குறுங்காவியம் வரை நாம் காணமுடியும்.

இப் பிரவாஹம் ஒரு மன--பிரபஞ்ச உணர்வுலகம். தெளிவிற்காக சற்று விரித்துச் சொல்வதானால், மனம் என்பது மன உள்வெளிப் பிரபஞ்சம், பிரபஞ்ச உணர்வு என்பது பிரபஞ்ச வெளி மன இயக்கம்.

மன உள் வெளி பிரபஞ்சமாக விரிகிறது (the inner cosmos of the mind). பிரபஞ்ச வெளியின் அனந்த விரிவு மன இயக்கமாக எழுச்சி அடைகிறது (the cosmos as the mind ). இவ்விரண்டும் ஒரு தனித்த புள்ளியிலிருந்து உள் நோக்கியும், வெளியில் விரிந்தும் பெறப்படும் பிரயாணம் என்று சொல்வது புரிந்துகொள்ள சாத்தியமாகத் தரப்படும் விளக்கமாகக் கொள்ளலாமே தவிர, அது உண்மையின் முழுப் பரிமாணமும் ஆகாது. இது தனித்த ஒரு புள்ளியிலிருந்து இரு வேறு பரிமாணங்களில் சஞ்சரிப்பது அல்ல. இவ்விரு உலகங்களும் பரிமாணங்களும் ஒன்றேயாகும். உதாரணத்திற்கு, உள் நுழைந்து வெளி நீளும் ஒன்றேயான டெலஸ் கோப் போல, உட்சுழன்று, விரிந்தாலும் நீர்ச் சுழல்போல, சுழற்காற்றுப் போல எனக் கொள்ளலாம். பிரக்ஞையின் உள்நோக்கிய பிரயாணந்தான், பிரபஞ்ச வெளியின் அகண்டத்தைப் பார்வையில் அணைக்கும் முயற்சிதான் மன உள் வெளியின் பிரபஞ்சத்திற்கு இட்டுச் செல்கிறது. உபநிஷத ஞானிகள் தம் சிந்தனையை உள்நோக்கிய தியானம் அகண்ட பிரபஞ்சத்தைத் தரிசிக்க உதவியது. பிரபஞ்சத்தின் அனந்த வெளியை நோக்கிச் சென்ற அமெரிக்க அஸ்ட்ரோ நாட்'கள் ஒவ்வொருவரும் திரும்பி வந்தும் கண்டது உள் நோக்கிய மனச் சஞ்ச்சாரம்தான். வெறும் மனித யந்திரங்களாக பயிர்சிக்கப் பெற்று உருவாகிய ஒவ்வொரு அஸ்ட்ரோ நாட்'டும் பிரமிக்கத்தக்க வகையில், கவிஞர்களாகவும் தியானிகளாகவும், உலகு துறந்த ஆன்மிகர்களாகவும், மனிதகுல நேயர்களாகவும் மாறிவிட்டனர். இவ்வாறு மாறுவார்கள் என யூகிக்கக்கூட, அவர்களது விண்வெளிப் பிரயாணத்திற்கு முந்தைய வாழ்க்கையில் ஏதும் வாய்ப்பு இருக்கவில்லை. விண்வெளியின் சஞ்சாரம் அவர்கள் மனவியக்கத்தை முற்றிலும் மாற்றிவிட்டது.விண்வெளியின் அகன்ற விஸ்தாரத்தில் (அதாவது) ஓர் இடபரிமாண அநுபவத்தில், உள் வெளி பிரபஞ்சத்தின் (அதாவது) உணர்வு பரிமாண அநுபவத்தின் தரிசனம் கிடைத்துள்ளது. ஏக சாதனா (இலக்கிய, மொழி ) விரதிகள் கவனிக்க வேண்டும்.

இங்குதான் நான் முன்னர் சொன்ன, வெளிவட்டத்தில் நிகழும் பரிமாண மாற்றத்தை, அல்ல, ஒன்றியைந்த கலப்பை, பார்க்கிறோம். திரும்பவும், பெருவட்ட அநுபவ உணர்வுலகு, சிறு வட்ட தொடக்கத்தைத் தன்னுள் அணைத்துக் கொண்டுள்ளது.

பிரமிள் பானுச்சாந்ரெனின் மன சஞ்சாரம், உள்ளுணர்வுப் பாங்கானது (intuitive).  இடசஞ்சாரம் பிரபஞ்சத்தையே அணைத்து உறவாடும் தன்மையது. இந்த ஊஞ்ச்சலாட்டத்தை "நான்" கவிதையிலிருந்து, "கண்ணாடியுள்ளிருந்து" வரை காணமுடியும். தாயின் நினைப்பு, "ஒன்றுமற்ற பாழ் நிறைந்து உருளுகின்ற கோளமெல்லாம் அன்று பெற்றவளிடம்" கொண்டு சேர்க்கிறது. ஆருமற்ற, சூனியம், தளமற்ற பெருவெளி, "இல்" ஆகிற்று. குரல் மண்டிப் போனது, இருள் முனகும் பாதையில் பிறந்திறந்து ஓடுவது, நான் என எஞ்சுகிறது.

கண்ணாடியுள்ளிருக்கும் தன்னை நோக்கிய விசாரம் பிரபஞ்சத்தின் அகன்ற விஸ்தாரம் முழுமையுமே அரவணைத்துக் கொள்கிறது. இட விஸ்தாரம் மன இயக்கமாக எழுச்சி பெறுகிறது. உள் மன இயக்கம் இட விஸ்தாரமாக விரிகிறது.

கண்ணாடியின் படிம விஷேசம், பார்வை சாதனா விஷேசம் இங்கு கவனத்திற்குரியது. கண்ணாடி நமக்கு நம்மைக் காட்டுகிறது.நமது பிரதிபிம்பத்தை,நமது வெளித் தோற்றத்தைக் காட்டுகிறது. நமது வெளித்தோற்றத்தின் கூரிய ஆராய்வு, நம்மிலிருந்து நம்மை வேறுபடுத்தி, ஆராய்பவனிலிருந்து ஆராயப்படும் பொருளை தனித்துக் காட்டுகிறது. ஒரு கூரிய பார்வை, தன்னை, "தான்"ஐ மறந்த பார்வை, வெளித் தோற்றத்தை ஊடுருவுகிறது. இது மன உணர்வு, இயக்க பரிமாணம்.

அதே சமயம்,

வேறு நோக்கில், இடவிஸ்தாரமாக, கண்ணாடி 'தன்'னின் இருப்பை மறைத்து, எல்லையற்ற ஒரு அகண்ட பிரபஞ்சத்தை சிருஷ்டிக்கிறது.சுற்றியும் உள்ள கண்ணாடிகள் (கண்ணாடிச் சுவர்கள்) சிருஷ்டிக்கும் பிரபஞ்ச வெளி, அதனுள் தோன்றும் கோடானு கோடி பிரதிபிம்பங்கள்:

வெறுமை மீது 
ஒன்றை யொன்று உற்று நோக்கும் 
இரண்டு கண்ணாடிகளினுள் 
வெளியினுள் வெளி 
எங்கும் கோடானு கோடி 
பிரதிபிம்பங்கள் 
கர்ப்பக் கிரஹத்து 
வௌவால்களாய்த் தவிக்கும் நிழல்கள் 

இங்கு இட-மன வெளி பிரபஞ்ச விஸ்தாரத்தில், இட-கால-மன பரிமாணங்கள் மடிகின்றன. உக்கிரமடைகின்றன.காலம் ஸ்தம்பிக்கிறது. ஒளிவருட வேகமும் கொள்கிறது. எது உண்மை? எது தோற்றம்? எது சத்தியம்? எது நிதர்சனம்?நேற்று, இன்று, நாளை எல்லாம் ஒரே புள்ளியில் சமைகின்றன. உணர்வுகள்,பிம்பத் தோற்றங்கள், படிமங்களாக எழுந்து மறைந்து ...

இவ்வுணர்வுப் பிரவாஹம் படிமப் பிரவாஹம்,பிரபஞ்ச நீட்சி சிரமம் தரும். இப்பிரவாஹம் எனக்குள் பல ஞாபகங்களை எழுப்புகிறது. எல்லா ஞாபகங்களும் அலையாடி ஸ்தம்பித்து நின்றுவிடுகின்றன. ஒன்று: விண்வெளியில் பிரயாணம் செய்த அஸ்ட்ரோ நாட்'கள், காஸ்மோ நாட்'கள் மூலம் தெரிந்த பிரபஞ்ச வெளி அநுபவங்கள், அவர்களது அப்போதைய மன எழுச்சிகள், பரவசங்கள், பின்னர் அல்டஸ் ஹக்ஸ்லியின் Doors of Perception என்ற புத்தகம். மெஸ்காளினைச் சாப்பிட்டுத் தன்னுள் அது நிகழ்வித்த  பிரக்ஞை மாற்றங்களை அநுபவங்களை அல்டஸ் ஹக்ஸ்லி அப்புத்தகத்தில் கூறியிருக்கிறார். அவரைப் போலவே ஹிப்பிகளும் நிர்மல ஆனந்தம் என, L.S.D.யையும், சரஸ்ஸையும் சாப்பிட்டு அனுபவம் தேடுகிறார்கள். இவ்வற்றின் உந்துதலைப் பற்றியெல்லாம் டிமொதி லிரி (Timothy Leary) எழுதியிருக்கிறார். இக்குறுக்கு வழிகளெல்லாம் மாரீஸத் தோற்றங்கள் என லீரியே ஒப்புக்குக் கொண்டிருக்கிறார். நம் மரபிலும், கஞ்சாவும், அபினியும் உண்ட யோகிகள் உண்டு. இந்த யோகிகளிடமிருந்துதான் ஹிப்பிகள் தங்கள் ஆனந்த மார்க்கத்தைக் கற்றனர். ஆனால் இவர்களுக்கெல்லாம் ஆதர்ஸனமாக இருந்தது நம் மரபின் புராதன ரிஷிகளின் தியான வழித்தேட்டை. தியான வழித் தேட்டை நிச்சயமானது. முறையும் உண்மையும் ஆனது. மனக் கட்டுப்பாட்டிற்கு அடங்கியது. அல்டஸ் ஹக்க்கியும், ஹிப்பிகளும் தேடுவது நிச்சயமில்லாதது. அநுபவம் எத்தகையதாக இருக்கும் என்பதை L.S.D.யோ மற்றதோ உட்கொள்ளுமுன் நிர்ணயிக்க இயலாதது. நிகழப் போவது நிர்மல ஆனந்தமா, அல்லது பயங்கர சொப்பனமா என்பது எவ்வளவு நீண்டகால, சரஸ், L.S.D.பழக்கத்திலும், பயிற்சியிலும் தீர்மானிக்க இயலாதது. ஹிப்பிகளுடன் உடன் சேர்ந்து சோதனை செய்த டிமொதி லீரி (Timothy Leary) இதையெல்லாம் உணர்ந்து சொல்லியிருக்கிறார். இந்த அநுபவ மனமயக்கம் பிரக்ஞையின் பேதலிப்பு. இருப்பினும் இவையெல்லாம் (ஹிப்பிகளின் அநுபவத்தில் பல சமயங்களில் நேரும் பயங்கர சொப்பனங்களைத் தவிர்த்து) ஒரு படிம ஒற்றுமை கொண்டவை. ஆனால் சுயமன எழுச்சி அற்றவை.

எதற்காக இவ்வளவும் சொல்ல நேர்ந்தது என்றால் பானுச்சந்ரெனின் "கண்ணாடியுள்ளிருந்து" காவியத்தில் தோன்றும் படிமங்கள் இவற்றையெல்லாம் ஞாபகப்படுத்தியும், ஆனால் ஒரு பெரிய வித்தியாசம்,மேற்சொன்னவர்கள் எல்லோரின் அக்கண அனுபவத்திற்கும், அவர்களது எஞ்சிய வாழ்க்கைக்கும் ஏதும் சம்பந்தமில்லை. ஒன்றிற்கொன்று உறவு கொண்டு பிறப்பன அல்ல. அது மாத்திரமல்ல இவை பானுச்சாந்ரெனின் கவிதை இயக்க முழுமையுடனும் இக்காவியத்தின் படிமப் பிரவாஹம் உறவு கொண்டது. எல்லாமே ஒரு முழுமையும், சம்பந்தமும் கொண்டவை.

"கண்ணாடியுள்ளிருந்து" குறுங்காவியத்தின் படிமப் பிரவாகமும், உணர்வு எழுச்சிகளும் ஒரே நாணயத்தின் இரு முகங்கள் அவை. பிரக்ஞை விழிப்பில் உள்ளுணர்வின் (intuitive) இயக்கத்தில் பிறப்பவை. ஒவ்வொன்றிற்கும் ஆதார நிதர்ஸனம் உண்டு.

"தசைச் சுவர்கள் வீசும் இப் 
புவன நிழல் வெளியில் 
சுடர்கள் ஆடுகின்றன 
ஒவ்வொரு சுடரும் 
பெண்குறி விரிப்பு 
தசை நிழல் பிளவு.
அவற்றை நோக்கி 
(எனத் தொடர்ந்து)

....   ....   ....   ....

கண்ணாடி 
இக்கணம்.
இக்கணம்,"  (வரை)

இது போல ஒவ்வொன்றிற்கும் ஆதார சிந்தனை உண்டு.

"மூடிய கதவின் 
சாவித் துவாரத்தில் 

(இங்கே ஒரு பக்கம் விடுபட்டிருக்கலாம்)

கள். மற்ற பரிமாணங்களும், அனுபவங்ககளும், கலைச் சாதனங்களும் இலக்கியத்துடன் சம்பந்தமற்றவை என்பவர்கள், எங்கோ பெரும் தவறு செய்கிறார்கள். இத்தகையவர்களின் இயக்கமும் சாதனையும் கலையாவதில்லை.

அது வெறும் தொழிற்திறன். சொல்வழி தொழிற்திறன். வியாபாரப் பொருள். சத்தியத்தின் தரிசனமற்றது. தச்சன் மரத்தைக் கையாளுவதைப் போல, சொல் அவர்களது படைப்புகளுக்கு ஒரு மரச் சாதனம். வியாபார raw material. இவ்வாறான அஞ்சறைப் பெட்டி நோக்கு (அனுபவம் ஓர் அறையில், படிப்பு ஓர் அறையில், சொந்த வாழ்வும் தர்மமும் ஓர் அறையில்,எழுத்து ஓர் அறையில்.....) இத்தொழில்  காரர்களுக்கு பல சௌகர்யங்களைக் கொடுக்கிறது.

மனித நேயமற்றவர்கள், சதிக்குணம் கொண்டவர்கள், சூழ்ச்சி மனத்தவர்கள், சுயநலக்காரர்கள், மற்றவர்களை அழுத்தி தான் முன்னேற விரும்புகிறவர்கள் எல்லாம் மிக அழகாக கேடிழைக்கப்படும்.பரிதவிக்கும் மனிதர்களுக்காக, அல்லல்படும் ஜீவன்களுக்காக இரக்கம் சொட்டச் சொட்ட கண்ணீர் உகுத்துக் கதைகள் புனையலாம், மிகுந்த தொழில் திறனோடு.

சூழ்ச்சிக்காரனும், சதிகாரனுமான தச்சன் செய்த நாற்காலி பயனுள்ளதாகவே இருக்கும்.ஏன்னெனில் தச்சனின் மனத்திற்கும் நாற்காலிக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் கற்பழிப்பை அன்றாட வேலையாகக் கொண்டவர் செய்யும் ராமாயணக் காலட்சேபம் அசத்தியமாவது போல, வெறும் தொழில் ஆவது போல சூழ்ச்சிக்காரனும் சதிகாரனுமான ஒருவன் எழுத்தும் கைத்திறன் வாய்ந்த எழுத்தில், நிறைந்து வழியும் இரக்கமும் கருணையும் அசத்தியமானது.

ஏனெனில் தான் வாழ்வுக்கும் எழுத்துக்கும் பொதுவாகவும் ஒருமையாகவும் ஊற்றுக்கண்ணாகவும் இருக்கவேண்டிய மனவெழுச்சி,இங்கு முரண்படுகிறது.  எழுத்துக்கு வரும்போது தான் வாழ்வுண்மைக்கு மாறான ஒரு அசத்திய மனவெழுச்சி தயார் செய்து கொள்ளப்படுகிறது.

அந்தத் தயாரிப்புப் பொருள் தொழிலுக்கு வேண்டிய raw material. அவன் எழுத்து வெறும் தச்சு வேலை.

இருப்பினும் எழுத்துக்கும் சொந்த வாழ்வுக்கும் என்ன சம்பந்தம்? எழுத்து நன்றாக இருக்கிறதா இல்லையா பார் என்கிறார்கள்.இது தொழில் திறனுக்கும் சத்திய தரிஸனமேயாகும் கலைக்கும் வித்தியாசம் தெரியாத குறைதான்.

மனித நேயமும், 'தான்' அழிந்த பார்வையும் அடிப்படையான தர்மங்களும் சத்தியத்தின் பரிமாணங்கள் எனக் காணாது, 'இலக்கியக் குறி' கொண்டவர்களுக்கு மேற்கண்ட தொழில் திறனாளர்கள், இலக்கியாசிரியர்களாகத் தென்படலாம். சத்தியத்தின் இக்குறியிட்ட பரிமாணங்கள் அற்ற மனிதனும் அவன் தொழில் திறனான எழுத்தும் வேறுபடும் பொழுது அவ்வெழுத்து கலையோ.இலக்கியமோ ஆகாது என்பது இன்னும் நம் 'பெருந்தகைகள்' பலருக்குத் தெரியவில்லை. மனிதனும் எழுத்தும்,பார்வையும், அடிப்படை தர்மங்களும் வேருபடுத்தப்படமுடியாத ஒரு முழுமை. அம்முழுமை புரிந்துகொள்ளப்படும் பொழுது,பிரமில்  பானுச்சந்ரென் அவர் கவிதைகள், அவர் அநுபவ உலகம், அவர் எழுத்துக்கள், ஓவியங்கள், சிந்தனை நிலை, இன்னும் மற்றவை எல்லாமே வேறுபடுத்தப்படி முடியாத ஒரு முழுமையாக இருப்பதை  நாம் உணர்ந்துகொள்ள முடியும்.

வெங்கட் சாமிநாதன் 
புதுடில்லி 
ஜனவரி  16 1973

 Piramil's painting

இன்னும் வர இருப்பது பிரமில் பானுசாந்ரெனின் 'கண்ணாடியுளிருந்து கவிதைகள் முப்பத்தெட்டு.




கைப்பிடிக்குள் கடலை அடக்கிய கவி

    சௌந்தர மகாதேவன்







    பிரமிள் என்கிற தருமு சிவராம் தமிழ்ப் படைப்புலகின் ஆச்சரியமான ஆளுமை. சொற்கள் குறுகி அவர் முன்னிறுத்தும் படிமங்கள் ஓங்கி உயரும்போது, வாசகன் அவர் கவிதைவெளிக்குள் கண்கூச நடக்கிறான். உலையில் செந்நிறத்துண்டாய்ப் பழுக்கக் காய்ச்சிய இரும்பு, தண்ணீர் பட்டவுடன் உஸ் என்ற சப்தத்தோடு காணமல்போகுமே அதைப் போன்ற காணாமையை அவர் கவிதைகள் பதிவுசெய்கின்றன.
    “சொல்லற்ற சுமைதர பேசு” எனும் பிரமிள், படிமங்களைப் படியெடுத்துத் தருகிறார். பிரமிள் ஓர் புதிர்ப் புதையல். யாருமற்றப் பெருவெளியில் பேருமற்று வாழும் அநாமதேயன் அவர் கவிவெளிக்குள் வெறுமையோடு நடப்பான்.சொற்கள் துறந்து சுள்ளென்று வலிக்குமாறு கவிபுனைய அவரால் முடிந்திருக்கிறது. வசதியாய் அமர்ந்து வாசித்துவிட முடியா நெருடல்களோடு அவர் கவிதை வாசக மனதுக்குள் இறங்குகிறது. “மண்டபம்” பிரமிளின் சிறப்பான கவிதைச் சிற்பம். மண்டபத்தோடு மனமும் தலைகீழாகிறது..
    “சுவரெங்கும்\ நிழல்கள்கீறி\ விரிசல்களாயிற்று\ ஊடே பிளந்தது அகாதம்\ சிலைகள் விரூபித்து\ வெண்கலக் கழுகுகளாயின\ என்னைச் சுற்றிற்று\ கூக்குரல்களின்\ சப்த வியூகம்..” என்று அற்புதமாகத் தொடர்கிறார். வழக்கமான பொருளைத் தாண்டி பரந்த பொருளுக்குள் விரித்துச் செல்கிறது அவரது கவிஈட்டி. நிலவின் மீதும் நிழலின் மீதும் நீண்டு படர்கிறது அவரது கவிதைப் படிமம். காவியம் என்ற கவிதை அருமையானது.
    “சிறகிலிருந்து பிரிந்த/இறகு ஒன்று/காற்றின் தீராத பக்கங்களில்/ஒருபறவையின் வாழ்வை/எழுதிச் செல்கிறது” எனும் கவிதை மனவெளியில் பறக்கவைக்கிறது. தேர்ந்த ஓவியராகவும் சிற்பியாகவும் இருந்த காரணத்தால் ஓவியத்தின் நேர்த்தியோடு அவரால் கவிச்சிற்பம் செதுக்க முடிந்திருக்கிறது. வரிகளுக்கிடையே அவர் வகிக்கும் மௌனம் வலிதருவது, வாசகனைச் சில நேரங்களில் திகைக்க வைக்கிறது. படிமங்களின் படியில் வியப்புக்குரிய புள்ளிகளை இட்டு அவரால் கவிதைக் கோலமிட முடிந்திருக்கிறது.
    ஆசைகள் அவருக்கு அவசியமானவை. தளைகளை அறுத்தெறிய அவர் கவிதைகள் முயன்றதைவிடத் தளைகளைத் தாண்ட முயன்றன.
    காலமும் அவருக்கு விளையாட்டுப் பொருள்தான். “காலத்தைத் திரித்து\நேற்று நாளை\இரண்டுக்கும் நடுவே\இன்று முடிந்திருக்கிறது\ முடிச்சின் சிடுக்கு- நான்\ அத்துவிதம் கணந்தோறும் நான்\ செத்தவிதம்.\
    சொல்வேன் உண்டென்று \ சொல்லில் இல்லாதது.\ சொல்வேன் உண்டென்று சொல்லில்,\இல்லாதது.\ சொல்வேன் உண்டென்று\ சொல், இல்\இல்லாத\அது.” எனும் கவிதையில் பிரமிள் காலத்தைப் பிய்த்துப்போட்டுச் சொற்களால் அதைச் சோதித்துப் பார்க்கிறார்.
    வருத்தத்தின் நிறுத்ததில் அவர் வரிகள் நின்றுகொண்டிருப்பதில்லை. வெளிச்சமற்ற வெளிகளில் புகுந்து அவர் கவிதைகள் யாதர்த்த வாழ்வியலை ஒளியூட்ட முயல்கின்றன. பிரபஞ்சத்தின் புரியாமையை அவர் கவிதைகள் புரியவைக்க முயல்கின்றன.மேலோட்ட வாசிப்புக்கு அவர் கவிதைகள் இடந்தராதனவாய்க் காட்சியளிக்கின்றன. “வேலைக்கேற்ற ஊதியம்/கேட்கும் கோஷம் உன் கோஷம்/அதுவும் வேண்டாம் ஆளைவிடு/
    என்ற கூச்சல் என் கூச்சல்” என்ற வரிகள் இரைச்சலை இரைத்த பேச்சாய் சத்தமாய்க் காதுக்குள் கத்துகிற குரலாய் மீண்டும் மீண்டும் ஒலிக்கின்றன. விட்டுவிடுதலையாகும் மனநிலையைக் கொண்ட பிரமிள் யதார்த்தக் கவிதைகளைத் தன் மன அமைதியாகப் படைத்தார். கணநேர மகிழ்வுத் திளைப்பாய் அவர் கவிதைகள் அமைந்ததில்லை, ஏதோ சொல்ல ஆவலாய் அருகில் வந்து ஏதும்சொல்லாமல் செல்கிறவனைப் போல் வாசகனுக்கு அருகில் நின்றுகொண்டு அமைதியால் ஏதோவொன்றை உணர்த்திக்கொண்டே இருக்கின்றன.
    - சௌந்தர மகாதேவன், பேராசிரியர் - தொடர்புக்கு: mahabarathi1974@gmail.com