தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Monday, April 21, 2014

காதல், சிணுக்கம், காதல், கொக்கு - ந.பிச்சமூர்த்தி

காதல் - ந.பிச்சமூர்த்தி
http://www.srmuniv.ac.in/tamilperayam


எண்ணாத நாள் ஒன்றில்
வந்தார் -
கோடை மழைபோல்
காட்டாற்று வெள்ளம்போல்
வீடெங்கும் குப்பைகூளம்
எங்கிலும் கந்தல் துணிகள்
முகம் எங்கிலும் வேர்வை
கைஎங்கும் சமையல் மணம்
எங்கும் இல்லநெடி
சிறு புகைச்சல்,
ஒட்டடை
வேளை பார்த்தா
நாதர் வந்தார்?
அசடானேன்.
கேட்பது அல்ல காதல்
தருவதுதான் என்று
தரையில் அமர்ந்தார்

என்னைக் காணேன்.

சிணுக்கம் 

"அடி கிறுக்கே !
சென்றால் அன்றோ விடைபெற வேண்டும்
போனால் அன்றோ வரவேண்டும்?
என்உயிர் என்னிடம்
இல்லாது இருக்கையில்
இருவர் ஏது?......
வீட்டில் இருந்தும்
என்னுடன் வருகிறாய்
வெளியே சென்றாலும்
உன்னுடன் இருக்கின்றேன்
கிறுக்கே” என்றேன்
சிணுக்கம் சிரிப்பாச்சு -

காதல் - பிச்சமூர்த்தி
 http://www.srmuniv.ac.in/tamilperayam/tamil_courses/Lessons/MA_Tamil/I_Year/matt01/html/mat01005pp2a.htm

மாந்தோப்பு வஸந்தத்தின் பட்டாடை உடுத்திருக்கிறது.
மலர்கள் வாசம் கமழ்கிறது.
மரத்திலிருந்து ஆண்குயில் கத்துகிறது.
என்ன மதுரம்! என்ன துயரம்!
ஆண்குயில் சொல்லுகிறது:
காதற்கனல் பெருக்கெடுத்து விட்டது;
கரைகள் உடைந்து போயின;
நெஞ்சத்தின் வேர்கள் கருகுகின்றன.
குயிலி! காதல் நீரை வார்த்துத் தீயை அணைப்பாய்,
கருகிய வேர்களுக்கு உயிரை ஊட்டுவாய்
க்காவூ.... க்காவூ....


அடுத்த கொல்லையில் எதிர்க்குரல் -
பெண்குயில் கூவுகிறது.
என்ன சோகம்! என்ன இனிமை!
பெண்குயில் சொல்லுகிறது;
தனிமை உயிரைத் தணலாக்கி விட்டது;
தணல் உன் குரலால் ஜ்வாலையாகிறது.
என் நெருப்பு உன் நெருப்பை அணைக்குமா?......
காதல் தீர்வதைவிட இக்கிளர்ச்சியே போதை.
இத்துன்பமே இன்பம்.
குயிலா! நெருப்பை வளர்ப்போம்.
க்காவூஉ.... க்காவூஉ


காதல் தெய்வம் காற்றொலியுடன் கலந்து சொல்லுகிறது;
ஒன்றுபட்டால் ஓய்வுண்டாகும், தேக்கமுண்டாகும்,
கலந்தால் கசப்பு உண்டாகும்;
காதற்குரல் கட்டிப் போகும்...


பிரிவினையின் இன்பம் இணையற்றது.
தெரியாமலா ஈசனும் இயற்கையும் ஓடிப் பிடிக்கிறார்கள்?
தெய்வ லீலையை உரக்கச் சொல்லு.
க்காவூ..... க்காவூஉ.....

கொக்கு 

கொக்கு
படிகக் குளத்தோரம்
கொக்கு.
செங்கால் நெடுக்கு
வெண்பட்டுடம்புக்
குறுக்கு
முடியில் நீரை நோக்கும்
மஞ்சள் கட்டாரி மூக்கு.
உண்டுண்டு
அழகுக் கண்காட்சிக்குக்
கட்டாயக் கட்டணம்.
சிலவேளை மீனும்
பலவேளை நிழலும்…
வாழ்வும் குளம்
செயலும் கலை
நாமும் கொக்கு.
சிலவேளை மீனழகு
பலவேளை நிழலழகா?
எதுவாயினென்ன?
தவறாது குளப்பரப்பில்
நம்மழகு-
தெரிவதே போதாதா?