தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்து காலத்தால் அழிக்கமுடியாதவை சிலவற்றை இங்கே இந்த இடத்தில் தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (TShrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Monday, June 16, 2014

ப்ரஸன்னம் - பிரமிள் (சிறு பகுதிகள்)

 ப்ரஸன்னம் - - பிரமிள்

I. நாக பாலசுப்பிரமணியனின் பைலில் இருந்து (தட்டச்சு : தீட்சண்யா ரா)
              
கார் இடம் தெரிந்தாற்போல் ஸ்லோடவுனாகி நின்றது. வீடும் தோட்டமும் துரவுமாக இருந்த இடம் இப்போது மண்திடல்களும் வெற்று நிலமுமாக வெறிச்சோடிக் கிடப்பது தூரத்திலேயே தென்பட்டுவிட்டது.

தனிமை. போதாததுக்கு உச்சிக்கோடை. அதுவும் போதாது என்று சரியாக மத்யானப் பொழுது பன்னிரண்டுக்கு நான் இங்கே நிற்க வேண்டும் என்பது முகுந்தனின் திடமான கூற்று.

நான் கார் எஞ்சினை நிறுத்தினேன்.

தெருவோரத்திலிருந்து சுற்றிலும் எங்கள் பழைய நிலம் வெறிச்சோடிக் கிடந்தது. அங்கங்கே மானாங்காணியாக முளைத்த பூண்டுகள் செடிகள் யாவும் ஆரம்பித்த துளிர்ப்பை இழந்து உள்வாங்கிக்கொண்டிருந்தன. தூரத்தே குடிசை வரிசைகளும் வீடுகளுமாக சில மானுடத் தடயங்கள் இருந்தும் என்பால்யகாலத்து வீடு இருந்த திடலை மையமாக்கி ஒரு பாழ்நிலம் பரந்து செல்வதாக உணர்ந்தேன். நிலவெளியில் உயிர் அற்றமசான வெறிச்சோட்டம்.
புல்பொட்டுகள் நிலத்தோடு நிலமாய் வதங்கிவிட்டன. நிலம் கெட்டித் தன்மை இழந்த மணல் வெளியாகி விட்டது. மண் புழுதியாய்ப் பதறிக் கொண்டிருந்தது.
என்னை இங்கே இந்த வேளைக்கு வந்து நிற்கும்படி முகுந்தன் கூறியது ஏன் என்று துருவிக் கேட்கவில்லை. நானும் அவனும் விசித்திரமான இடங்களில் விசித்திரமான பொழுதுகளில் கெடுவைத்துச் சந்தித்த காலங்கள் போய் விட்டன. இப்போது அவனால்   படுக்கையிலிருந்து இம்மியும் அசைய முடியாது . இருந்தும் நான் ஏன் என்று கேட்கவில்லை.

நாகேஸ்வரத்தை விட்டு திருநெல்வேலி செல்லும் ரஸ்தாவை காரில் சுமார் ஒருமணி  நேரம் கவர் பண்ணினால் பெரும்புதூர்க் கிராமத்தை நோக்கித் திரும்பும் கப்பி ரஸ்தா, அவ்வப்போது போடப்பட்ட தார்ப் பூச்சுகளைச் செல்லுபடியாகாமல் அடித்துவிட்டு கப்பி ரஸ்தாவாகவே திரும்பி ஓடும். இதில் மேலும் ஒரு அரைமணி நேரம் பள்ளங்களில் விழுந்து எழுப்பி, கல்திரணைகளைச் சுற்றி அரை வட்டமாக ஸ்டியரிங்கை ஒடித்து ஊர்வல கதியில் வந்தால் எங்கள்  தோட்டம் . அதாவது அப்பாவினால் ஒருநாள் திடீரென வந்த விலைக்கு விற்கப்பட்ட தோட்டம்

“ அங்கே யாருமில்லை ” என்றான் முகுந்தன், “  அதாவது உயிருடன் ” என்றும் சேர்த்துக்கொண்டான். நான் உயரத்திலிருந்து வந்த புன்னகையுடன் அவனைப் பார்த்துவிட்டு “ சரி ” என்று எழுந்தேன். இது நடந்தது நேற்று மாலை.

காரிக்குள் டிரைவிங்  ஸீட்டை நோக்கி கிறுகிக் கொண்டிருந்த கையகல மின்விசிறி தனி பாட்டரியில் தன் பாட்டுக்கு உஷ்ணக்காற்றை கத்திக் கம்பிகளாக்கி சிலம்பாடிற்று. இதன் ஒரே பெறுபேறாக என் முகத்தில் மொய்த்து அளைந்தபடி இருந்தது உஷ்ணம். விசிறியை நிறுத்தினால் வெறும்  நெருப்பு, ஓடவிட்டால் அறுக்கும் நெருப்பு. நிறுத்துவது விவேகம் , ஆனால் ஓடவிடுவதனால் ஆகும் பாட்டரிச் செலவில், சிறிய அந்த யந்திரத் திறன் என்னைச் சேவிக்கிறது என்ற பிரக்ஞையில், உஷ்ணமோ இல்லையோ, ஒரு ஆறுதல், ஒரு பாதுகாப்புணர்வு.

மத்யானத்துக்கு ஒரு வினாடி இருக்கலாம். “ என் ரப்பர் எங்கேடா ?” காலமாகிவிட்ட அக்காவின் குரல் என்னை மயிர்க்கூச்சலிடவைத்து காருக்குள் ஒலித்து விட்டு வெட்டவெளியில் மொழியிழந்த நினைவாக ஓடிற்று, மறு வினாடி நான் எங்கள் வீட்டு ஜன்னல் வழிநாக முற்றத்தைப் பார்த்தபடி நிற்கிறேன்.
                    ஃ                                                                                 ஃ

பைரவனுக்கு அது இம்மியும்  படாது. ஏனென்றால் அவன் முற்றத்து வெய்யிலில் நின்றபடி எங்களைச் சேவிக்கிறான். அப்பாவை, அம்மாவை, அக்காவை, என்னை. எங்கள் அவன் காணாவிட்டாலும் எங்கள் வீட்டை அவன் சேவித்தபடி நிற்க வேண்டும். இல்லாவிட்டால் அவனுக்கு பிராணன் போய்விடும்.

அவன் ஏன் அப்படி நிற்கிறான் என்பதுக்கு அம்மா கொடுத்த விளக்கம் அது. எனது பால்ய காலத்துப் பசுமைநின் மையமாக முற்றத்தில் நிற்கிறான் பைரவன், ஏறத்தாழ நிர்வாணமாய். இதைவிட்டால் என் மனசில்  பசுமையாக நிற்பது அக்காவின் ரப்பர்கள் தான்.

அக்கா என்னை கிள்ளுவாள். அவள் கிள்ளுவது பயங்கரமாக வலிக்கும். ஆனால் அவளை நான் கிள்ளினால் அவளுக்கு வெறும் கிச்சுக்கிச்சு. எனவே என் ஆத்திரம் அவளுடைய தசைகளைவிட அவளுக்கு பவித்திரமாகத் தோன்றிய அவளுடைய ரப்பர் துண்டுகள் மேலெ திரும்பின. அவள் என்னைக் கிள்ளிய போதெல்லாம் சமயம் பார்த்திருந்து அவளுடைய ரப்பரைத் திருடிக்கொண்டு போய் அப்பாவின்  ஷேவிங் பிளேடினால் சீவுவேன். பெரும்பாலும் ஜன்னல் வழியாகத் தெரியும் பைரவனைப் பார்த்தபடி சீவுவேன். அவனை நான் பார்க்க, அவன் என் பழியைப் பகிர்ந்து கொள்ள, அப்பாவின் ஷேவிங் பிளேடினால் அக்காவின் தசைகளைப் பாளம் பாளமாகச் சீவும் குரூர திருப்தியுடன் ஜன்னல் விளிம்பை பலி பீடமாக்கி  ரப்பரைச் சீவுவேன். பைரவனின் பிரசன்னத்தில் இந்த மகா குரூரமான தர்மானுஷ்னத்தை நான் செய்தால்தான் அக்கா கிள்ளியது எனக்கு ஆறும். இல்லாவிட்டால் ஏனென்று இல்லாமலே எடுத்ததுக்கெல்லாம் அழுவேன். அடம்பிடிப்பேன். அம்மாவிடம் வசவு, சிலவேளை முதுகில் பளார் அறை ஆகியன இவற்றின் விளைவாக மேலும்  கிடைக்க வாய்ப்பு உண்டு.

பைரவனைப் பார்த்துப் பார்த்து ரப்பரை யான் சீவிம் வேளைகளில் அக்கா ஏதோ விபரீதத்தை உணர்ந்தவளாக, “ என் ரப்பர் எங்கேடா ? ” என்று கத்துவாள். அப்போது ஒரு அற்புதத்தைப்போல, இன்னொரு உலகத்திலிருந்து பிறந்த அசரீரியைப் போல பைரவன் நின்ற திசையிலிருந்து ஆழ்ந்த கனமான ஒரு ஆண்குரல் “ களுக் ” என்று சிரிக்கும் சப்தம் கேட்கும். நான் நிமிர்ந்து பார்ப்பேன். ஆனால் கருத்த அவனது உடலில், முகத்தில், எங்குமே சலனம் இராது. சிரித்தது அவனல்ல என்றே தோன்றவைக்கும் அவனது நிச்சலான சிலைத் தோற்றம்.

எப்போதும் முற்றத்தின் இடப்புறமாகவே நிற்பான் பைரவன். காலையில் நாங்கள் போஜனம் பண்ணுவதற்கு முன்பே வந்துவிடும் அவன் நாங்கள் சாப்பிட்டான பிறகு கூட நின்ற நிலையிலேயே நிற்பான். பட்டையான  வாழை நார் ஒன்று அவனது இடுப்பைச் சுற்றி இருக்கும். அதில் செருகி இறுக்கப்பட்ட வாழை மடல் ஒன்றுதான் அவனுடைய கோவணம். துணி அல்ல.  ஏனென்றால் அவன் துணி எதையும் தொடக்கூடாது. இது அம்மாவின் விளக்கம்,

“ தொட்டால் ?” என்பேன் நான்
,
“ தோஷம் ! ” என்பாள் அம்மா. தோஷம் ! இந்த  வார்த்தையினால் தீண்டப்பட்டதும் விளக்கங்களைத் தேடி விசாரணைகளாக நீளும் மனம் நெருப்பினால் தீண்டப் பட்டாற்போலத் திகைத்துச் சுருங்கும்.
எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்தே பைரவனை இதே நிலையில் பார்க்கிறேன்.

காலையில் அப்பா பெட்ரோல்பங்கிற்குக் கிளம்புவார்- மெயின்ரோடில் ஒரு வெள்ளைக்காரனின் பெட்ரோல் பங்கில் அவர் கணக்கப்பிள்ளை. காலை என்றால் சுமார் ஏழு மணி. எட்டு மணி என்றால் லேட். கிளம்பி, பஞ்ச கச்சம் , அதற்கு ஒரு கையகல பெல்ட், கோட், டை, தலைப்பா, ஷு எல்லாமாக வந்து முற்றத்தில் இறங்காமல் கதவைத் திறந்த நிலையில் கூடத்துக்குள்ளேயே நிற்பார். ஒரு கால் மட்டும் வாசற்படியை மிதித்து நிற்கும். நின்றபடி தெருவுக்கும் வீட்டுவாசலுக்கும் இடைப்பட்ட புழுதி முற்றத்தை ஹிட்லர் போல பார்ப்பார். ஏனோ அந்தச் சமயத்தில் ஒரு திகில் பரவும். எனக்குள் என்றில்லை. அடுக்களையின் ஈரவிறகிலிருந்து கிளம்பும் புகையாக. கவளியிலும் தான், அம்மாவுக்கு அந்த சமயத்தில் ஆஸ்துமா இழுத்துக்கொண்டிருந்தால் அந்த இழுப்பைக்கூட நிறுத்தி விடும் இந்தத் திகில்.

அப்பா பெட்ரோல் பங்கிற்குக் கிளம்பிவிட்டார். ஆனால் முற்றத்தில் இறங்கவில்லை.  காரணம், இடதுபுறமாக, ஒரு ஓரத்தில்  எனினும் முற்றத்தில் நின்று  கொண்டிருக்கிறான் பைரவன்.  அப்பாவின் ஹிட்லர் பார்வை, நிமிர்ந்து, நெடுந்தூரத்தில் அணிவகுத்து நிற்கும் பகைவர் பட்டாளத்தைக் கணிக்கும் தோரணையில் எதிரே தென்னங்கீற்று வேலியில் இருந்த தகரக்கதவைப் பார்க்கிறது.

இந்த முகூர்த்தத்தில் கிளம்பும் விபரீத உணர்வைப் பற்றி நான்  பூணூல் போட்ட பிறகுதான் அம்மா எனக்கு விளக்கினாள். அதுவும் இனி நான் பைரவனைப் பார்க்கக் கூடாது அவனால்  பார்க்கபடவும் கூடாது என்ற அச்சுறுத்தலுக்கு ஒரு ஆதார விளக்கமாக.

முற்றத்தில் எவ்வளவு ஓரமாக நின்றாலும் அவனது தோற்றம் அப்பாவின் ஓரக்கண்ணில் விழுந்து விடுமாம். லட்சோபலட்சம்  வருஷங்களாக ஜீவமரணப் போரட்டத்தின் விளைவாக உயிர்  வர்க்கத்தின் கண்கள் விசேஷ சமயங்களுக்கு ஏற்ற பார்வையைச் செலுத்துகின்றன. பறவைகள் இரண்டு புறங்களையும்  பார்க்கும் விதமான பார்வை அமைப்பு கொண்டவை. பொடிநடையும் ஓட்டமுமாகப் போகிற போது நாய் தனது இரண்டு கண்களுள்  ஒன்றை முன்னுக்கும் ஒன்றைப் பின்னுக்குமாக அட்ஜஸ்ட் பண்ணி இருப்பதை பக்கவாட்டாக அது லேசாய்த் திரும்பிபடியே ஓடுவதில் கவனிக்கலாம். போர்க் குதிரையிடமும்  இந்தக் குணம் உண்டு. இவை ஓடும்போது  இவற்றின் உடல் நேர்க்கோட்டில் இராது. ஜீவிதப் போருக்கு ஏற்றபடி பார்வை அமைப்பு கொண்ட பிராணிகளுள் கீரி மிகவும் விசேஷமானது. ஏறத்தாழ எல்லாத் திசைகளையும் ஒரே சமயத்தில் பார்க்கக்கூடிய விதமாக அதன் கண்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொடிய விஷப்பாம்புகளுடன் போராட வேண்டிய  அவசியத்தின் விளைவு கீரியின் நான்கு திசைப்பார்வை.

அப்பாவிற்கும் கீரியின் முகம்தான். ஆனால் பெயர் நாகையர் . விவரம் தெரியாதவர்கள், அல்லது தெரிந்தும் தெரியாத மாதிரி நடிப்பவர்கள், “ நாக்கையர் ” என்று விலாசமிட்டு கடிதம் எழுதிவிட்டால் ஓடிப்போய் தபால் பட்டுவாடா செய்த போஸ்ட் மேனைப் பிடித்து வைத்து அவனை வைவார் . “ நான் நாகையரடா ? இது எவனோ நாக்கையனுக்கில்லை வந்திருக்கு ? திருப்பி அனுப்பிச்சுடு !” என்று கத்துவார். பெரும்பாலும் இந்த விஷமத்தைச் செய்வது அம்மாவின் தம்பியாகப்பட்ட வெங்கு மாமாவாகவே  இருக்கும். அவர் கவரில்  தமது விலாசத்தைத் தந்திருக்க மாட்டார். போஸ்ட்மேன் , “ இதை   நான் யாருக்கு சாமி  அனுப்பறது ?” என்பான். “ வெங்குதான் அனுப்பி இருக்கான் ” என்று கண்டுபிடித்து விட்டு ஆகாமார்க்கமாக வசவை அனுப்புவதுக்காக அண்ணாந்து கத்துவர் அப்பா, “ டேய் வெங்கூ! யார்றா நாக்கையன் ? ஏண்டா அட்ரஸ் எழுதத் தெரியாமே வேஷ்டி கட்டிண்டிருக்கே ? நீ தப்பிப் பொறந்தவண்டா !  உன் தோலைத் தொட்டாலே கருப்பு ஒட்டிக்கும்டா ! ” என்ற பாணி. ஆனால் பதில் எழுதும்போது  “ இவ்விடம்   க்ஷேமம். அவ்விடம் க்ஷேமத்துக்கு ” என்ற உபயகுசலோபரி வகையறாவாகத்தான் இருக்கும் . நாக்கையன் கூச்சல் போஸ்ட்மேனோடு அல்லது ஆகாசத்தோடு போச்சு. இது எப்படி எனக்குத் தெரியும் என்றால் எழுதிய கடிதத்தை அப்பாவுக்கு அவர் உரக்கப் படித்துக் காட்டும்போது என் காதில் விழும்.

அப்பேர்ப்பட்டவர் எங்கள் அப்பா. ‘  அவர் ஒரு ஜ்வாலை ’ என்று நான் ஒரு கதையில் எழுதி இருக்கிறேன். “ ஜ்வாலை என்ற வார்த்தை உமது அப்பாவை ஜ்வாலையாக சித்தரித்து விடாது ” என்று ஒரு விமர்சகப் பயல் எழுதிவிட்டான். எனவே இங்கே கொஞ்சம் விபரம் தந்திருக்கிறேன்.

அவருடைய ஓரக்கண்ணில் கூட பைரவன்  பட்டுவிடக்கூடாது. அதாவது எல்லாத் திசைகளையும் ஒரே சமயத்தில் பார்க்கூடிய கீரியின் முகவாகு கொண்ட அப்பாவின் கண்கள் இப்போது பட்டை கட்டின ஜட்காவண்டிக் குதிரையின் கண்களைப் போல நேர் எதிரே மட்டும் பார்த்தாக வேண்டும். சாத்யமா ? ஏன் சாத்யமில்லை ? ஓரக் கண்ணில் பைரவன் பட்டு, அதன் விளைவாக அப்பா உடுத்திருந்ததை எல்லாம் களைந்துவிட்டு, மீண்டும் ஸ்நானம் பண்ணி, லேட்டாகி , வெள்ளைக்காரனின் அடாவடிக்கு இலக்காக வேண்டிய ஜீவ மரணப் போரட்டத்தில், ஏன் கீரிப் பார்வை பட்டை கட்டின ஜட்காவண்டிக் குதிரைப் பார்வை ஆக முடியாது ? முடியும் ! முடிந்திருக்கிறது. இதோ அப்பா பக் பக் என்று புழுதியில் ஷூ ஒரு சப்தமில்லாத சப்தத்தை எழுப்ப நடந்து தகரக் கதவை நோக்கி போகிறாரே ! கதவு திறக்கிறது. அப்பா மறைகிறார். கதவு மீண்டும் மூடி விழுகிறது.
பைரவன் நின்ற நிலையில்  சலனமில்லை. நான் அவனைப் பார்ப்பதை அக்கா பார்த்துவிட்டால், “ அம்மா ! இப்பவும் இவன் அதைப் பார்த்துண்டு ! என்று கோள் சொல்லி கூச்சலிடுவாள்.

“ கொழந்தைங்கள்ளாம் உள்ளே வந்துடணும். ஸ்கூல்  இல்லேன்னா இதுகள் அடிக்குற லூட்டி ! ” அம்மாவின் திசையில்லாத ஏக சக்ராபத்தியம்.
வீட்டில் பைரவனைப் பற்றிக் குறிப்பிட வேண்டி வந்துவிட்டால் அவன் அவனல்ல. உபாதை தருகிற ஒரு இடையறாத நோயைப் போல,  அருவருப்பான, ஆனால் அறுத்து எறிய வேண்டிய ஒரு மர்மமான உறுப்பைப் போல அவன் ஒரு ‘ அது ’.

நான் பூணூல் போட்ட சின்னையராக நமஸ்காரங்கள் பெறத்துவங்கிய பிறகு பைரவனை நான் பார்க்கக் கூடாது, அவனுடைய நிழல்கூட என் ஓரக்கண்ணிலேனும் படக்கூடாது, பட்டுவிட்டால் உடனேயே ஸ்நானம் செய்து விடவேண்டும் என்ற கெடுபிடி !

இருந்தும் நான் பைரவனைப் பார்ப்பேன். அக்காவின் ரப்பர் சதைகளை அப்பாவின் பிளேடினால் நான் அறுத்துத் தள்ளிய தர்மானுஷ்டானத்தின் சாக்ஷி அவன், எப்படி அவனை நான் பார்க்காமல் இருக்க முடியும் ? நான் பார்ப்பதன் மூலமே அவன் இருந்து கொண்டிருக்கிறான் என்றும், அவன் இல்லாவிட்டால் என் தார்மிகத்துக்கு அவசியமான தூண் போன்ற ஏதோ ஒன்று மறைந்து விடும் என்றும் எனக்குத் தோன்றி இருக்கிறது. அது மட்டுமல்ல. அவன் எங்களைச்  சேவிப்பவன்.  அவனது சேவிதம் இல்லாவிட்டால் சேவிக்கப்படும் தன்மை எங்களுக்கு இராது, அப்பாவுக்கு, அம்மாவுக்கு, அக்காவுக்கு, எனக்கு இராது. இது எங்களையே இல்லாமல் ஆக்கிவிடும். அம்மாவின் விளக்கங்களும், அக்காவின் ரப்பர் துண்டுகளும், அப்பாவின் ஷேவிங் பிளேடுமாகச் சேர்ந்து  சமைத்த என்னுடைய நிலைபேற்றுத் தத்துவம் இது,

இதில் நகைப்புக்கு இடமாக ஏதும் இல்லை. எகிப்தின் ஆதிகால அரசனைப் போன்றவனே நானும், அந்த அரசன் நாலு குண்டங்களில் புகை எழும்பும் புகைக்கோடுகள், தூண்களாக ஆகாசத்தைத் தாங்கின. அரசன் இந்தப் புகைத்தூண்களைப் பராமரிக்காமல் தாங்கின. அரசன் அநுதப் புகைத்தூண்களைப் பராமரிக்காமல் விட்டு விட்டால் ஆகாயம்  ‘ டமால் ’ என்று கீழே விழுந்துவிடும். என்னைப் பொறுத்தவரை பைரவன்தான் இந்தத் தூண். அவன் முற்றத்தில் நிற்காத சமயங்களில் என் மனசில்  ஒரு விபரீத உணர்வு ஏற்பட்டுவிடும். எனவே அவன் நிற்பதைப் பார்த்து நிச்சயிப்பது என்னுடைய சிறு பிரபஞ்சத்தின் தவிர்க்கமுடியாத நியதி ஆயிற்று.

இருந்தும் எனக்கு வேறொரு விசாரமும் பிறந்து விட்டது - எங்கள் வேலியின் தகரக்கதவை அவன் தொட்டு, திறந்து, உள்ளே வந்து முற்றத்தில் நின்றது எப்படி ? அவனைப் போன்று வாழைமட்டையினால் மட்டுமே மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளக்கூடிய நிலையில் இருக்கும் எவனுக்கும் இல்லாத இந்த சமூக சக்தி இவனுக்கு மட்டும் வந்தது எப்படி ? அதுவும் அவனது தர்மத்தையே திடுக்கிடவைக்கிறவனாக எப்படி இவன் இங்கே நின்றுகொண்டிருக்கலாம் ? இதற்காக இவன் கொல்லப்பட்டால்கூட மனுதர்மம் ஆமோதிக்குமே !

அம்மாவிடமிருந்து பதில் இல்லை. அப்பாவிடம் இதைக் கேட்க முடியாது என்பது மட்டுமில்லை. அவரது பழைய ஷேவிங் பிளேடைக்கூட “ பென்சில் சீவணும் ” என்று கேட்க முடியாது. திருடினால்தான் உண்டு.

பதில் பெற முடியாத இந்தக் கேள்விகளை திகைப்பில் ஆழ்த்தி மறையவைத்து விட்டன நான் பெரியவனாகிக் கொண்டிருந்த சமயத்து நிகழ்ச்சிகள்.

திடீரென்று ஒருநாள் பைரவனை எங்கள் முற்றத்தில் காணோம். அப்புறம் அவனை எங்கள் முற்றத்தில் என்றுமே காணோம். இதைத் தொடர்ந்துதான் நான் அவனது பெயர் பைரவன் என்பதையும் அவன் மகாத்மா காந்தியின் கட்சியில் சேர்ந்துவிட்டான் என்பதையும் அறிந்தேன். எனக்கு இந்த விபரங்களைத் தந்தவர் வெங்குமாமா. அவரைத் தான் என்னுடைய  வளர்ந்த பிராயத்தின் முதல் நண்பர் என்று குறிப்பிட வேண்டும்.

மகாத்மா காந்தியின் ஆலயப் பிரவேச இயக்கத்துக்காக ஹரிஜனர்களிடையே தைரியத்தையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தும் தலைவன் இப்போது, அஹிம்சை வீரன் பைரவன், இப்போது.

 ‘ அது ’ என்ற அஃறினைத் தன்மையை பைரவன் உடைத்து எழுந்து விட்டான். அதுவரை எங்கள் முற்றத்தில் ஒரு அபூர்வமான கருடப் பட்சி இட்ட முட்டை அவன். கோது தனது கதவுகளைத் திறந்துவிட்டது. இப்போது ‘ அது ’ என்ற நிலை மாறி ‘ அவன் ’ ஆகி ‘ பைரவன் ’ என்ற பெயருடன் மனிதார்த்த வியக்திச் சிறகுகளைப் பெற்று எழுய்நுவிட்டான். அவனது சஞ்சாரத்தை நான் ஊர்த் தூஷனைகளில்  ஊடுருவிய அவனது சிறகுகளின் ஆகாய மிதப்புகளாக தொடர்ந்து உணர்ந்து கொணுடிருந்தேன்.

இருந்தும் எங்கள் வீட்டில் அவன் குறிப்பிடப்பட்டால் அவன் அவனல்ல, ‘ அது ’ தான்.

“ அது நின்ற இடத்துலே ஒரு குழி தோண்டு ”.

“அது மாதிரி ஏன் நின்னுண்டிருக்கே ? ”

“ அதுவும் ஒழிஞ்சுது பீடையும் ஒழிஞ்சுது !”

ஆனால் ‘ அது ’ ஒழியவில்லை ! வீட்டிலிருந்து ஒழ்க்கப்பட்ட சில்லறைக் கழிவுகளைக் கொட்டும் குழியாக ‘ அது ’ நீடிக்க ஆரம்பித்தது.

வெள்ளைக்காரனுடன் இருந்த தாறுமாறான உறவுகளில் சலிப்படைந்த அப்பா, சேர்த்துவைத்த பணத்தில் கிராமத்திலேயே ஒரு துணிக்கடை போட்டுவிட்டு தலைப்பாகை, கோர்ட், பெல்ட், ஷீ எல்லாவற்றையும் துறந்தார். துண்டுவேஷ்டி, ஷர்ட் சகிதம் வழக்கம் போல் கடைக்குக் கிளம்பி வந்து வாசலில் நின்று வழக்கம்போல் தமது கீரிப்பார்வையை ஜட்காவண்டிக் குதிரைப்பார்வையாக மாற்றி அமைக்கிறார். ‘அது ’ நின்ற இடத்தில் இப்போது ஒரு குழி. அவ்வப்போது அதற்குள்  நிரம்பும் குப்பையில் எரியும் தீக்குச்சியை போட்டுவிட்டு முற்றத்து மரம் ஒன்றில் ஏறி, இலை, கிளைகளில் ஒளிந்திருந்து வேடிக்கை பார்ப்பேன். குழியிலிருந்து எழும்பும் புகை எகிப்திய அரசனின் குண்டத்துப் புகைத்தூணாக நிற்கும். வீட்டுக்குள் இருந்து வந்த அப்பாவாசலை எட்டியதும் திடுக்கிடுவார். சடேரென்று புகைத்தூணைத் திரும்பிப் பார்ப்பார். அந்தக் கணத்தில் அவர் முகத்திலே தோன்றி மறையும் கலவரம் , ஆம், அங்கே  அந்தக் கணத்தில் அப்பாவின் ஓரக்கண் கண்டது வெறும் புகையை அல்ல பைரவனை. அதாவது, அவன் திடசொரூபியாக தந்த பிரசன்னத்தை புகைவடிவாக்கிய அப்பாவின் கண்ணுக்கு ஒரு புகை வடிவத்தை நான் பைரவனின் பிரசன்னமாக்கிவிட்டேன்.

ஏறத்தாழ இந்தச் சமயத்தில் தான் நான் எழுத்தாளன் ஆனேன், நான் எழுதியவை பிரசுரமானது பின்னாடியே என்றாலும் கூட !
எனது முதல் பிரசுரத்துக்கு வழி வகுத்தது எனது கம்யூனிஸம். ஆயினும் இந்த முதல் பிரசுரத்தின் ஆதாரப் புகைத்தூண் பைரவன். அவனது சமூக இயக்க சக்தியை கம்யூனிஸப் புரட்சிக் கதை ஒன்றுக்காக  இரவல் வாங்கிக் கொண்டேன். அவனது இயக்கம் காந்தீய அஹிம்ஸையைச் சார்ந்தது. எனது புரட்சிக்கதாநாயகனோ வன்முறைகப் போராளி. இருந்தும், முற்றத்தில் அசையாமல் நின்று கொண்டிருந்த அவனது நிச்சலனமான புரட்சியும், அப்பாவின் ஷேவிங் பிளேடைத் திருடி அக்காவின் ரப்பர் சதைகளை அறுத்துத் தள்ளிய என் கிளர்ச்சியும்  என்னுள் ஏற்கெனவே இணைந்திருந்தன. இதனால் பைரவனின் அஹிம்சையை கம்யூனிஸ வன்முறையாக்குவதில் எனக்கு எதுவித சிரமும் இருக்கவில்லை.

என் முதல்  பிரசுரமான இந்தக் கதை தண்ணீருக்காகப் போராடுவதைச் சித்தரிக்கும் ‘நீர் நிலை ’. நாயகனுக்கு கதை முடிவில் தடிக்கம்புக் குத்து. அதாவது பைரவனுக்குக் கிடைத்ததையே நான் எனது  கதாநாயகனுக்கு இரவல் பெற்று கொடுத்திருந்தேன்.

ஆம், பைரவன் இறந்த பிறகுதான் என் சிறகுகள் விரிந்தன. வயிற்றில் தடிக்கம்புக்குத்தோடு ஒரு வாரம் மரணப் படுக்கையில் கிடந்த  அவனைப் போய் திருநெல்வேலி ஆஸ்பித்திரியில் பார்க்க வேண்டும் என்று வெங்கு மாமாவிடம் கூறினேன். என்னைத் தடுத்துவிட்ட அவர் தனியாகப் போய்ப் பார்த்திருக்கிறார். அவருக்கு என் தைரியத்தின் மீது அவநம்பிக்கை. அவருக்கு என் தைரியத்தைக் காட்டுவதற்காகத்தான் நான் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தேன் எனலாம். ஆனால் இதுகூட எனது பயங்குள்ளித்தனத்தினால் நான் செய்த காரியம்  என்ற விதமாகத்தான் வெங்குமாமாவுக்கு தோன்றியிருக்கிறது.

முதல் தடவை நான் எழுப்பிய புகைத்தூணைப் பார்த்து கணநேரக் கலவரம் அடைந்தாலும், போகப் போக இந்தத்தூண் அப்பாவுக்கு ஒரு அத்யாவசியமான தாக்குதலுக்கு உரிய சமூக இலக்கு ஆகிவிட்டது. பிள்ளைகளும் முதலியார்களுமான தம்முடைய மிக அபூர்வமான நண்பர்களுடன்  கூடத்தை அடுத்திருந்த தமது ரூமில் அரசியல் பேசுவார் அப்பா. பேசியபடி அன்றைய செய்தியைப் பற்றிய உச்சகட்ட முடிவுரையை அறுதியிடுவதற்காக எல்லாரும்  முற்றத்துக்கு வருவார்கள். அப்பாவின்  தலை அவரது நாக்கின் துடிப்புத் தாளமால் கிடுகிடுவென்று ஆடியபடி இருக்கும். முடிவில் ஆவேசத்தோடு புகைத்தூணைப் பார்த்துக் கத்துவார் அப்பா.

“ இது காந்தியால் வந்தது ! காந்தியால் வந்தது ! இன்றைக்கு ஆலயப்ரவேசம், நாளைக்கு நடுவீட்டுக்குள் வந்து நின்று உன் பொண்ணைக் குடு, உன் சொத்தில் பாதியைக் குடு ! போச்சு! போச்சு ! ”

முகுந்தனை நான் முதன் முதலில்  பார்த்தது அப்பாவுடன் தான் - அப்பா எனது புகைத்தூணைப் பார்த்து  மேற்கண்டவாறு கத்திய சந்தர்ப்பம் ஒன்றில்தான்.

என் வாலிப வயதைச் சேர்ந்தவன்  என்றாலும், என்னைவிட ரொம்பவும்  முதிர்ந்த பாணியிலேயே முகுந்தன் என்னிடம், அதுவும் “ அப்பா  இருக்கிறாரா ? ”  என்ற விஷயமாக மட்டும், பேசுவான். அப்பா இருக்கும்போது என்னை அவன்கண்டு கொள்வதுகூட இல்லை.

ஹிட்லர் நாகையர் வீட்டு முற்றத்தில் பைரவன் வந்து நின்றதின் அடிப்படை ரகஸியத்தை தான் அறிவதற்குச் செய்த முயற்சிகள் யாவும் தோல்வியடைந்த விஷயம் பழையகதை. இப்போது  அது விஷயத்தில் எதிர்பாராதபடி உதவியிருப்பவன் இதே முகுந்தன்தான் என்றால் அதற்குக் காரணத்தை பைரவனிடத்தில் , அவனது பிரசன்னத்திலிருந்து நான் இரவல்பெற்று எழுதிய ‘ நீர் நிலை ’ யில் காண வேண்டும்,  ஏனெனில்,

கதை வெளிவந்திருந்த சமயத்தில் “நீர் தானோ ‘நீர் நிலை’யை எழுதியவர்?” என்ற கேள்வியுடன் அப்பா இல்லாத சமயத்தில் வந்து உட்கார்ந்திருந்து பேச ஆரம்பித்து விட்டான் முகுந்தன். அவன் எனது நண்பனாகியது இந்த சந்தர்பத்தில்தான்.


..........................
........


II. சிரோமணி வெங்கடேசன் எழுதியது (தட்டச்சு : ரா ரா கு)

மேலே உள்ளவை அடங்கிய ஒரு பைலை நான் என் சகோதரி வீட்டில் ஒரு ரசீதைத் தேடும் போது பார்க்க நேரிட்டிருக்கிறது. அதுவும் முகுந்தன் எந்த விநாடியும் உயிர் நீத்துவிடக்கூடிய நாள் என்று நாங்கள் நினைத்திருந்த சில நாட்களுள் ஒன்று அது. என் சகோதரியின் மகன், அதாவது என் மருமான், ‘ பாலு ’ என்ற பாலசுப்ரமணியம் மேலே தந்துள்ளவற்றில் சில விஷயங்கள் தெரிந்தே மறைக்கப் பட்டுள்ளன. பாலு ஒரு எழுத்தாளன் இருந்தாலும் ஒரு மனிதன். அதிலும் சில்லரை மனிதன். எனவேதான் தமது தந்தையின் தந்தையான ருத்ரமூர்த்தி சாஸ்திரிகள் ஆயுர்வேதத் துறையில் நன்கு தெரிய வந்துள்ளவர். ‘ நீலகண்ட நவநீதம் ’ என்ற சமஸ்கிருத நூலின் ஆசிரியர். பாலு இந்த விபரங்களை மழுப்பியதற்குக்  காரணம் உண்டு.

ஸ்வர்ண சாஸ்திரிகளின் ஏழாம் தலைமுறைப்பிள்ளை ருத்ரமூர்த்தி. ஆறு தலைமுறை வரைதான் சாஸ்திரி என்ற பட்டம் தொடர முடியும். வீட்டுக் கல்வியின் வீக்ஷண்யம் அத்துடன் கலைகிறது. ஏழாம் தலைமுறைக்காரன் மீண்டும் வேதத்யயனாதிகளையும் இதர சாஸ்திரங்களையும் ஒரு குருவின் கீழ் கற்று சாஸ்திரிப்பட்டத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டும். இவ்விதம் திருவிடைமருதூர் கிருஷ்ண சாஸ்திரிகளிடம் அமர்ந்து கற்றுத் தெளிந்து சாஸ்திரியாகிவர் ருத்ரமூர்த்தி. இவரது மூத்த பிள்ளையான நாகையர் இரண்டாம் தலைமுறையினராதலால் சாஸ்திரி என்று அழைக்கப்படுவதில் தடை இராது. ஆனால் அவர் அழைக்கப்பட்டது ‘ஹிட்லர்’ என்றுதான். இந்தப் பட்டத்தை நாகையருக்கு வழங்கியவர் அவரது பிதாவான ருத்ரமூர்த்தி சாஸ்திரிகளே என்பதும் இது பாலுவுக்கு, சுயமாகத்தெரியாவிட்டாலும் என்னைப் போன்றவர்கள் மூலம் நன்றாகவே தெரியவந்த விஷயம் என்பதும் கவனத்துக்கு உரியவை. இந்தப் பட்டத்தை ஒரு சாபம் போன்று தமது மூத்தபிள்ளையின் மீது வீசிவிட்டு சாஸ்திரிகள் வெளியேறியது 1939ல். பிறகு அவர் வீடு திரும்பவில்லை. சந்யாசியாகி விட்டதாக ஒரு வதந்தி எழுந்து நிலைத்து விட்டது. 1939ல் பாலுவுக்கு வயது ஏழு. குடும்ப உலகில் வெடித்து ஊரில் மோதி அதிர்ந்த இந்த நிகழ்ச்சியை மறந்திருக்கக் கூடிய வயது அல்ல அது.

ருத்ரமூர்த்தி சாஸ்திரிகள் வெளியேறிய மறுநாளே பாலுவின் விறைத்த விரல்களில் இருந்து ‘பைரவன்’ என்றும் ‘அவன்’ என்று்ம் புறப்படுகிற மஹாகனம் பிரம்மஸ்ரீ பைரவமூர்த்தி சாஸ்திரிகள் நாகையரின் வீட்டு முற்றத்தில் தமது மௌனப்போரை ஆரம்பிக்கிறார். அவர் ஏன்  அங்கே அவ்விதம் நின்றார் என்பது பாலுவுக்கு ஆரம்பத்திலிருந்தே தெரியவந்து ஆழ வேரூன்றி உறுதி பெற்றுவிட்ட விஷயமாகும். இதை தமது விவரணையின் சுவாரஸ்யத்துக்காவே மறைத்து முகுந்தன் மூலம் இறுதியில் வெளிக்கொணர்ந்திருக்கிறார் கதாசிரியர் பாலு என்று நியாயப்படுத்தலாம். ஆனால் எப்போதுமே சுத்தமான பஞ்சகச்சதாரியாக விளங்கிய பைரவசாஸ்திரிகளுக்கு ஏன் வாழைமடலாடை கட்டி இருக்கிறார் பாலு? என்ன இருந்தாலும் பைரவர் ஒரு பறையர் என்று காட்டி, அந்தப்பறையர் மீது தமக்கு மட்டும் ஒரு புரட்சிகர அக்கறை இருக்கிறது என்று பந்தாபண்ணுவதற்குத்தான் என்கிறேன். இதற்கு அத்திவாரமாகவே பைரவரின் சாஸ்திரீய ஆளுமையைக் கூட மறைத்திருக்கிறார் ஸ்ரீமான் பாலு. இதற்கும் அடியில் கிடந்து பாலுவை அரிக்கும் விஷயம் அவரது பிதாவான நாகையரை ‘ஹிட்லர்’ ஆகக்கண்ட அதே தாதரான ருத்ரமூர்த்தி சாஸ்திரிகள், ஒரு பறையனை சாஸ்திரியாக்கி இருக்கிறார் என்பதுதான். இதில் பயங்கர கொதிப்பு அடைந்திருந்த பார்ப்பனர், முதலிகள், பிள்ளைகள் பலருடன் பாலுவுக்கு நல்ல கொண்டாட்டம் உண்டு. இதனால்தான் அவரது புரட்சிகர கம்யூனிசப் போக்கை நான் மதித்ததில்லை.

தமது பிதாவின் மூலம் தமக்கு இயல்பாக வந்து விழுந்திருக்கக் கூடிய சாஸ்திரிப்பட்டத்தை இழந்தமையாலேயே புதிய புரட்சிகரப்பட்டங்களைத் தேடி ஓடியிருக்கிறார் பாலு. இதோடு, இந்தப் புரட்சிவாதிகளின் அதே இருட்டடிப்பு முறையைப் பின்பற்றி தமது தாதையாரான ருத்ரமூர்த்தி சாஸ்திரிகளின் பெயரையே சரித்திரத்தில் இல்லாமல் பண்ணியிருக்கிறார் ஸ்ரீமான் பாலு, நிற்க!

ருத்ரமூர்த்தி சாஸ்திரிகளின் அதேவிதமான ஆழ்ந்த மனோபாவம் கொண்ட அறுபது பிராம்மணர்களின் முன்னிலையில் பைரவமூர்த்தி என்ற இருபத்தொரு வயதுப் பறையர், சமஸ்கிருதத்தில் தமது சாஸ்திர ஞானத்தை நிரூபித்து தந்தையின் பட்டத்தை சுவீகரித்தார். தலைமுறை வழியில் சுதாவாகவே இதை சுவீகரித்திருக்கவேண்டிய நாகையர் தமது தந்தையினால் சாஸ்திரியாகப் பட்டம் பெற்ற பைரவரை ‘தீண்டத் தகாதவன்’ என்று ஓயாது தலையை ஆட்டி ஆட்டி, தந்தை முன் விரலை நீட்டிக் காட்டிக் காட்டி தமது நாக்கின் விறைப்பை நிரூபித்து, ஹிட்லரானார்.

பாலு இந்த விஷயங்களை மறைத்திருப்பதை நியாயப்படுத்தினாலும் கூட ‘பைரவமூர்த்தி கோயில்’ என்று அவர் தமது விவரணை முடிவில் குறிப்பிடும் இடமான ருத்ரமூர்த்தி சாஸ்திரிகளின் பூர்வீக நிலத்தில் நடந்ததாக பாலு எழுதியுள்ள ஒரு நிகழ்ச்சி பெரியதொரு பொய்யாகும். பாலுவின் கார் மீதோ, அவர் மீதோ, எவரும் கல் வீசவில்லை. இந்த எனது கூற்றுக்கு நம்பகமான சாட்சியத்தை என்னால் ஆஜர்படுத்த முடியாது என்று பாலு கூறுவாரேயானால், அந்த இடத்தை கோவில் என்று கூறிய சிறுவனை அவர் திரும்பிப் பார்க்காதததை நினைவூட்டுவேன். பார்த்திருந்தாரேயானால் சிறுவனருகே நின்றுருந்த என்னை அவர் கண்டிருப்பார்.

இவ்வளவு தூரம் விஷயம் வெளிப்பட்டுவிட்ட பின்பு கீழே நான் தருகிற இரண்டு கடிதங்கள்  ரகசியமாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. நீலகண்ட நவநீத’த்தினை தான் தமிழாக்கம் செய்யவேண்டும் என்றும், அதன் முன்னுரையில் இந்த கடிதங்கள் மூலம் வெளிப்படும் விஷயம் தரப்படவேண்டும்  என்றும் முகுந்தன் யோஜனை சொல்லி இருந்தார். ஆனால், ஸ்ரீமான் பாலு செய்தள்ள கைங்கர்யத்தினால் இந்தக் கடிதங்களை இப்போதே வெளிப்படுத்த வேண்டி இருக்கிறது. எதற்கும் முகுந்தனிடம் ஒரு வார்த்தை சொல்லி விடலாம் என்று நினைத்த போது பாலுவே போன் பண்ணினார் - முகுந்தனை இனி எந்த வார்த்தையும் இனி எட்டாது.

III. முகுந்தன் கடிதம்

                                                                                                   விருதுநகர்க் கொடி, 25-11-59

மஹாகனம் வெங்கு அவர்களுக்கு முகுந்தன் நின்று கொண்டு அவசரமாக எழுதியது. இதற்குரிய பதிலை நாகேஸ்வரத்துக்கு விபரமாக எழுதி அனுப்ப வேண்டும். மறந்து விட்டது! அநேக நமஸ்காரங்கள்.

ஹிட்லாராத்து சமாச்சாரம் ரொம்ப ‘டீப்’ என்றீர்கள்! ‘எல்லாம் எனக்குத் தெரியும்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பிப் போனவன் வந்திருந்த பாலுவை தற்செயலாகப்  பார்த்தேன். வயிற்றில் தடிக்கம்புக் குத்தோடு பைரவ சாஸ்திரிகள் கிடந்தபோது நீங்கள் போய் பார்த்திருக்கிறீர்கள் என்பது எனக்கு நீங்கள் சொல்லி தெரியும். ஆனால் விருதுநகருக்கு நான் ஏறிய தூத்துக்குடி பாஸஞ்சர் நகர ஆரம்பித்ததும், என் ஜன்னலுக்கு வெளியே பிளாட்பாரத்தில் நடந்து வந்தபடி பாலு அடிக்கோடு போட்டான். --“ வெங்கு மாமா போய்ப்பாரத்து பேசினார்.’ அடிக்கோடு ‘பேசினார்’ என்ற பதத்தில்  உங்கள் ‘டீப்’ ரயிலின் கடகடப்பாக எனக்குள் தத்தளிக்க ஆரம்பித்தது.

எனக்கு சொல்ல வேண்டியதை எல்லாம் ஹிட்லர் சொல்லி விட்டாரே என்ற ஹோதாவில்தான் அப்படிப்பேசினேன். ஆனால் சாஸ்திரிகளுடன் ஹிட்லர் பேசியதில்லை. நீங்கள் பேசி இருக்கிறீர்கள். அதுவும் அவரது கடைசி நாட்களில். இதில்தான் நீங்கள் குறிப்பிடும் விஷயம் இருக்க வேண்டும். இந்த ஏழு நாட்களுக்குள் நான் மீண்டும் திருநெல்வேலி வரமுடியாது, இங்கே ஒரு உர ஏஜண்டுடன் பேசிய பிறகு ஊரில் கணக்கு  வழக்குகளுக்காக அலைய இருக்கிறது. எனவே பதில் எழுதவேணும். தமியோனை க்ஷமித்து, விபரங்களுடன்

                                                                                                                 தங்கள் ஆத்மபுத்ரன்
                                                                                                                        அ.கி.முகுந்தன்


IV. வெங்கடேசன் கடிதம்
........

தாவரப் பிரபஞ்சமாகப் பரவிச்செறிந்த கானகத்தின் பசிய இருளினுள் தன்மயத்தினது வக்ரமான சுயமுக ரஸனைகள் மடிந்துபடுகின்றன. கொடிய விலங்குகளின் பதுங்கு பிலங்களில் இருந்து பிறந்து ஒரு தைலதாரையாக விரிந்தபடி இருக்கிறது மரணவெளி. அதற்கு அஞ்சுவோன் கானகத்தின் எண்ணற்ற இரைகளுள் ஒன்று. அஞ்சாத உள்ளத்தினுள் மரணம் தியான போதம் பெறுகிறது. உயிரின் மிகத்தீவிரமான விழிப்புணர்வு பெற்ற உள்ளங்கள் அத்தகைய கானகங்களை சாந்நித்ய கேந்திரங்களாக்கின்றன. அந்தக்கேந்திரத்தில் பறையனும் இல்லை பிராம்மணனும் இல்லை. ஆனாலுங்கூட மூட்டை தூக்கியின் ஸ்பரிசத்தை நீறாக்கும் மந்திரங்கள் சாஸ்திரிகளின் மனநாக்கில் இடையறாது உருண்டபடிதான் இருந்தன.

சில மூலிகைகளை இனம் காணுவதற்கும், அவை இருக்குமிடங்களை அறிவதற்கும் உள்ளுணர்வு, அல்லது வாகட வித்வம் வேண்டும். நிச்சயமாக மூட்டை தூக்கிக்கு வாகடம் பற்றி எதுவும் தெரிந்திருக்க நியாயம் இல்லை. இருந்தும் அபூர்வ மூலிகைகளைக்கூட இனம் காணும் சக்தி மூட்டை தூக்கிக்கு இயல்பாகவே அமைந்திருப்பதை கவனித்தார் சாஸ்திரிகள். சிறுபுலிக்காலிலை, விஷ தாழையிலை போன்று, வாகடங்களிலேயே அபூர்வமாகக்  குறிப்பிடப்படும் மூலிகைகளின் பெயர்கள் தெரியாவிட்டாலும் பல்வேறு சிறு தாவரங்கள் பின்னிப்பிணைந்த புதர்களினுள்கூட ஒளிந்திருந்த அவற்றை மூட்டை தூக்கி குறிபார்த்துக் கைநீட்டி வேரோடு கல்லி எடுத்து சாஸ்திரிகளின் முகத்துக்குக்காட்டி, “சாமி! இது?” என்று குழந்தைபோல் காட்டிக் கேட்டபோது “இது எப்படி” என மனம் குழம்பினார். மூட்டை தூக்கியின் ஸ்பரிசத்தை நிர்த்தாரணம் செய்ய அவர் மானசீகமாக உருட்டிய மந்திரங்கள் மூலாதாரத்தை நோக்கி வெட்கிச்சுருண்டன. தொடர்ந்து நடந்தார்கள்.

கானக விருட்சங்கள் அபூர்வ ஜாதி மரங்களாகச் செறிந்து ஈவு இடை குறைந்து கொண்டிருந்தது. சாஸ்திரிகளுக்கு திக்குத்திசை பிசகிவிட்டது. ஆனால் மூட்டை தூக்கிக்கு எதுவுமே பிசகவில்லை. அவர்கள் ஆரம்பித்த கிராமத்தின் திசை, தூரம், அந்த வேளையில் எத்தனை நாழிகை என்ற கணக்கு உட்பட அவன் ஒருதடவை அவரை நோக்கித் திருப்பித் திடீரென ஒப்பித்தபோது, அவரது மனக்கிலேசத்தை எப்படியோ உணர்ந்து ஆசுவாசம் தரும் தோரணை தெரிந்தது.

அப்போது அவர்கள் வந்துகொண்டிருந்த இடத்தில் விருட்சங்களின் வயது ஐநூறாண்டுகளைத் தாண்டியிருக்கலாம். அவற்றுக்கும் முந்திய மரங்கள் முதுமையினால் இறுகிக்கல்லாகிக் கொண்டிருக்கும் நிலை. எங்கும் மரப்பாறைகளின் திடீர்த்தோற்றங்கள் ஒரு எல்லையற்ற அநாதியான கோவிலின் சிதைவினூடே இந்த ஆரண்யம் தலையெடுத்தாற்போன்ற உணர்வைத் தந்தன. ஒவ்வொரு மரமும் மாபெரும் கோபுரங்களின் சுற்றளவுக்குப் பருத்து, அருகே நின்று அண்ணாந்து பார்த்தால் செங்குத்தான மலைச்சரிவு போல் எழுந்து உயரத்தில் எங்கோ ஒரு தூரத்தில் கிளைகள் வீசிச்செறிந்த இலைகளுடன் நின்றன. மரங்களிடையே பின்னிப் படர்ந்து உயரத்துக் கிளைகளில் இருந்து தொங்கிக் கொண்டிருந்த கொடிகளின் பருமனை ஒரு மனிதனது இரண்டு கைகளினால்கூட வளைத்துப் பிடிக்க முடியாது. உச்சிவேளைச் சூரியனின் வெளிச்சம்கூட சரிவர ஊடுருவாத கர்ப்பக் கிருகத்து அரை இருள் அங்கே நிலவியது. எங்கோ, அருகில் காலதேச வரம்புகளை மீறிய மகாசக்தி ஒன்று இடையறாது தோன்றியபடி நிற்கும் உணர்வு. தமக்குப் பின்னால் நின்ற மூட்டை தூக்கியை சாஸ்திரிகள் திடீரென திரும்பிப் பார்த்தார். உடனே அந்த அபூர்வ உணர்வு மறைந்தது. அதுவரை அவரையே பார்த்தாற்போன்று நின்ற அவனது பார்வையும் சடாரென அவரை விட்டுத்திரும்பியது.

திரும்பியவன் பெரும் பொதியாகி விட்ட மூட்டையைத் திடீரென வீசிவிட்டு      “கைத்தடியை வீசி எறி! கும்புடு! ” என்று உத்தரவிடும் குரலில் கூவியபடி கைகளைக் குவித்து சிரசில் வைத்தான். ருத்ரமூர்த்தி சாஸ்திரிகள்  தம்மை மீறியே உத்தரவை நிறைவேற்றுகிறவராக கைத் தடியை நழுவ விட்டார். அதன் வெண்கலப் பூண் ஒரு மரப்பாறையில் நங் என்று விழவும் அவரது கண்கள் கொடி மரங்களில் தனது தோற்றத்தைச் சுருட்டி  தரையில் பாதி இறங்கி நின்ற அதன் சலனமற்ற பனிரண்டு அடி நீளமுள்ள கிருஷ்ண நாகத்தைக் கண்டு விட்டன. தரையிலிருந்து நாலைந்து அடி உயரம் எழுந்து படமெடுத்து நின்ற அதன் சலனமற்ற கழுத்துக்குப் பின்னால்  கொடிகளினிடையே பிடித்திருந்த நீண்ட உடல் சப்தமற்ற பாதரஸக் குழம்பாக  ஒழுகி இறங்கிக் கொண்டிருந்தது. அதைக்கண்டதும் அவரது கைகள் எழுந்து தற்காப்பின் அவலத் துடிப்புடன் எதிரே கண்டதை மாற்றியமைக்கும் ஜால வித்தை ஒன்றைச் சாதிக்க முயன்றவை போல் உதறின. உடனே நாகம் லேசாக வாய்பிளந்து அவரது முகத்தை நோக்கிச் சீறிற்று. நாகத்துக்கும் அவருக்குமிடையே இருந்த சுமார் பதினைந்து அடி தூரத்தினைத் தாண்டி, இடையில் ஒரு கிரணக் கோட்டில் வைரத்தூசிகள் போல ஒளிர்ந்து அவரது முகத்தில் ஒரு மெல்லிய தூவானம் விழுந்தது. உடனேயே சாஸ்திரிகளுக்குக் கண்கள் எரிந்து இருண்டன. அப்படியே விழுந்து விட்டார்.

.......

ருத்ர மூர்த்தி சாஸ்திரிகளுக்கு பிரக்ஞை திரும்பியபோது ஒரு மாய வலையைப் போல இரவு கவிந்து விட்டது. அன்று பௌர்ணமி, மரக்கிளை இடுக்குகளில் சந்திரன் சிக்கி உடைந்து திட்டுத்திட்டாக கானகத்தினுள் ஒளியைச் சிந்தி இருளைப் பெரிது படுத்திக்கொண்டிருந்தான். மேலும் பிரக்ஞை விரிவடைந்தபோது தாம் குப்புறக் கிடப்பதையும் தமது நெற்றியை ஒரு கை தூக்கி முகத்தை லேசாக நிமிர்த்திப் பிடிப்பதையும் உணர்ந்தார். அவரது முகத்துக்கு முன் இன்னொரு கை சந்திர வெளிச்சத்தை ஏந்திய வெறும் கையாக, ஆனால் ஏதோ திரவத்தை உள்ளங்கையில் கொண்ட பாவனையில் அவரது இரண்டு கண்களுக்கும் மாறி மாறி ஆடிற்று. கண்களை விரித்த படியேதான் அவர் மூர்ச்சையாகி இருக்கிறார். இப்போது இரண்டு கண்களும் எரிந்து, குளிர்ந்து, எரிந்து, குளிர்ந்தன. கண்ணுருண்டைகளில் முகம் கொண்டு உடலினுள் நீண்டிருந்த ஒரு தழல் கண்வழி காற்றாக இறங்கிக் கொண்டிருப்பதைஉணர்ந்தார். மூட்டை தூக்கியின் குரல் “இதைக் கண்ணாலே பாரு சாமி! நான் கையில வச்சிருக்கதை” என்று மென்மையாகக் கூறியது.

ருத்ரமூர்த்தி சாஸ்திரிகளுக்கு மூட்டை தூக்கியின் கை மட்டுமே தெரிந்தது. மிகச் சிரமப்பட்டு, வரண்டு மேலண்ணத்துடன் ஒட்டிவிட்ட நாக்கை அவர் அசைத்தபோது புறப்பட்ட ஒரே வார்த்தை, “தீர்த்தம்!” ஆனால் மூட்டை தூக்கி தனது பரிகாரத்திலிருந்து அசையவில்லை. நெடுங்காலம் போன்று கழிந்த ஒரு நாழிகைக்குள் சாஸ்திரிகளுக்கு எழுந்த தாகம் கூட அடங்குமளவுக்கு உடலின் திரவதத்துவம் சமாந்திரம் பெற்றுவிட்டது. எழுந்து உட்கார்ந்து கலைந்த குடுமிச் சிகையை உதறி முடிந்து கொண்டார். தமது மூளை என்றுமில்லாத உக்ரத்துடன் கொந்தளிப்பதை உணர்ந்தார். உடல் பூராவும் புதிய சக்திகள் ஊடுருவி உலவிக்கொண்டிருந்தன, கை ஒன்றில் எதையோ குவித்துத் தூக்கிய நிலையில் நின்ற மூட்டை தூக்கியிடம் அதைத் தமக்குக் காட்டும் படி சமிக்கையிட்டு அழைத்தார்.

.......திடீரென  திருவண்ணாமலையில் பகவான் ரமணமகரிஷியிடம் அவர் பேசிக்கொண்டிருந்த ஒரு சந்தர்ப்பத்தில், கூட இருந்த பெயர் தெரியாத ஜடாதாரி ஒருவர் குறிப்பிட்ட‘நீலகண்டம்’  என்ற சூஷ்ம மூலிகை பற்றிய நினைவு இப்போது நினைவுள் மோதியது. வாகடங்களில் கூடக் குறிப்பிடப்படாமல், சித்த மரபில் செவி வழிச்செய்தியாக மட்டுமே அதுபற்றிய விபரங்கள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன. பரிசுத்தமான கண்களுக்கு மட்டுமே அது தென்படும், அதுவும் தன்னையே அது காண்பித்தால்தான் உண்டு. இது எங்கோ ஒரு சில அமானுஷ்யமான இடங்களில் அதுவும் அபூர்வமாகத் தோன்றும். இயற்கைக்கும், இயற்கைக்கு ஆதாரமாகத் அதற்கு அப்பால் நிலவும் தத்துவங்களுக்கும் இடைப்பட்ட பரிமாணமே நீலகண்டத்தின் கேந்திரம். எனவே இதற்கு ஊட்டம் தருவது நிலமுமல்ல நீருமல்ல, காற்றுமல்ல - ஒளி, ஆகாயம் போன்ற சூஷ்ம போஷணைகள்கூட அல்ல. மனோமயமான இதற்கு ஊட்டம் தருவது தன்னை அறிந்து அகவிடுதலை பெற்ற ஒருவனது ப்ரஸன்னம் மட்டுமே. அத்தகையவன் ஒருவனேனும் உலகில் உள்ளவரை இது எங்கிருந்தாலும் செழித்துப் பரவும். இன்றேல் உலகிலிருந்து மறையும். இதன் ஔஷத சக்திகள் மர்மம் பொதிந்தவை. வெறும் சரீர உபாதைகளையும் தாண்டிய கர்ம வெளியைக்கூட இது தீண்டும். ஒருபுறம் சிகிச்சையாக விளையக்கூடிய இதன் பாதிப்பு மகா குரூரமான ரோகமாகவும் மறுபுறம் வடிவெடுக்கும். அந்த வேளையில் இது அகமுகச்சிகிச்சையை நிறைவேற்றுகிறது. இது தோன்றிய ஒன்றல்ல. பிரபஞ்சத்தின் தாதுக்களைப் போன்று இதுவும் அநாதியான ஒன்று. இதனை எடுத்து ஔஷதமாகப் பிரயோகிக்கக் கூடிய சக்தி தன்னை அறிந்து தாண்டிய நிஷ்டாபரர்களுக்கே உண்டு.

அந்த பௌர்ணமியன்றுதான் ருத்ரமூர்த்தி சாஸ்திரிகள் தமது ஆன்மிகத் தகுதியின் சரியான எடை என்ன என்பதை அறிந்தார் . மூட்டை தூக்கியின்கரிய திரையோடிய முகத்தில் நின்ற பெரிய கண்களை ஏறெடுத்துப் பார்த்தார். அங்கே சுரந்த கருணையும் பயமற்ற பணிவும் அந்தப் பறையனை ஒரு சூக்ஷ்மமான சக்கரவர்த்தியாக்கின. அதற்கு பிறகும் மூட்டையை தான் தூக்கியே ஆகவேண்டும் என்ற அவன் பிடிவாதத்தில் ருத்ரமூர்த்தி சாஸ்திரிகள் உள்ளூரக் கலங்கினார்.


......

“ அப்பாவின் உத்தரவின் பேரில் நான் அவரது நிலத்தில் பங்கு கேட்டேன். எனக்கு அது கிடைக்கவேண்டும் அல்லது நாகையரின் கையினால் நான் கொல்லப்படவேண்டும், என்பது அப்பாவின் தீர்மானம். ஆனால் அப்புறம் மகாத்மா காந்தியின் இயக்கத்தில் சேர்ந்த பிறகு அப்பாவின் உத்தரவைத் தொடர்ந்து நிறைவேற்ற என்னால் முடியவில்லை. வேதமனனங்களை மனசில் உருட்டியபடி வெயிலில் வெட்டியாக நிற்பது எந்த விதமான செயல் முறையிலும் அடங்குவதாக எனக்குத் தோன்றவில்லை. நாகையரோ என்னைக் கண்டு கொள்ளாமல் விட்டதன் மூலம் என் மௌனப்போரை ஆனாயாசமாக முறியடித்துவிட்டார். அப்பாவிடம் பேசி நிலைமையச் சீர்திருத்தலாம் என்றால் அவர் போன இடம் தெரியவில்லை. திருவனந்தபுரத்தில் மகாத்மா காந்தி தங்கியிருந்தபோது அவரிடம் நண்பர்கள் என்னை இட்டுச் சென்றார்கள். அவர்கள் மூலம் என் கதை பூராவும் காந்திக்குத் தெரிந்திருந்தது. ‘வாருங்கள் சாஸ்திரிகள்’ என்று தமிழில் உபசரித்து குழந்தைபோல் தமது தமிழுக்கு தாமே குதூகலித்தார். அவரிடம் என் தந்தையின் உத்தரவைப் பற்றிக் கூறினேன். ‘உங்களுக்கு உரியது உங்களுக்குத் தரப்படாவிட்டால் உங்களுக்கு உரியதையும் கொடுத்து விடுவதுதான் உயர்ந்த எதிர்ப்பு’ என்றார் காந்தியடிகள் ஆங்கிலத்தில். எனக்கு அந்த மொழி தெரியாது.நண்பர்கள் மொழிபெயர்த்தார்கள்.  நான் திரும்பி வந்து அம்மாவின் அனுமதியோடு நீலகண்டத்தை இரண்டு கைகளாலும் இடம் தேடி அள்ளினேன். கைகளுக்கு மேலே அந்தரத்தில் நின்று உருளும் மின்காந்தம் ஒன்று என் கைகளூடே பரவி உடல் முழுவதையும் ஆட்கொண்டது. அந்த சமயத்தில் எனக்காகப் பயந்து, என் முதுகின் மீது கை வைத்திருந்த அம்மாவின் உடலூடேயும் இந்த சக்தி பரவியதாக அவர்கள் சொல்கிறார்கள். நாங்கள் இருந்த இடம் பெரும் புதூரிலிருந்து வடக்கே இரண்டு கல் தூரத்திலிருந்த கானக விளிம்பிலாகும். அங்கிருந்து நானும், என் பின்னால் அம்மாவுமாக ஓட்டமும் நடையுமாக நீலகண்டத்துடன் புறப்பட்டோம். வழியில் ஓரிருதடவைகள் என் உடல் பதறிற்று. அந்த சந்தர்ப்பங்களில் உலகத்தோற்றங்கள் யாவும்  மறைந்தன. வெறும் சக்திகள் மட்டும் முட்டி மோதிச் சஞ்சரிக்கும் வெற்றிடம் ஒன்றினூடே என்னை ஈர்த்தபடி முன்சென்று கொண்டிருந்தது நீல மின்னல்களாகப் பின்னி உருக்கொண்ட அற்புதக் கோளம் ஒன்று. அதே சமயம் ஒரு தடவை அம்மாவின் குரல் என்னை அழைத்து அலறக்கேட்டடேன். அவன் கண்களில் திடீரென மறைந்துவிட்டதாக அவர்கள் பின்னாடி கூறுகிறார்கள். அவர்களது அலறலுக்கு உள்ளம் வீழ்ந்ததும் நான் பாதை பிசகாமல் அம்மா பின் தொடர ஓடிக்கொண்டிருப்பது தெரிகிறது. இரண்டாம் மூன்றாம் தடவைகள் இது நடந்தபோது அம்மா அலறவில்லை. பெரும்புதூரை அடைந்து விட்டதாக உணர்ந்தோம். அப்போது உச்சிவேளை. சுமார் ஒரு மணி நேரத்துகுள்ளேயே நாகையரின் கதவை அணுகி விட்டோமெனினும், யுக யுகாந்திரங்களினூடே நானும் அம்மாவும் கைக்கெட்டி, எட்டாத ஒரு லட்சிய சக்தியைத் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தாற் போலத் தோன்றியிருக்கிறது. அப்பா எழுதிவைத்துள்ள ‘ நீலகண்ட நவநீத’த்தில் இந்த அம்சங்கள் விவரிக்கப்படவில்லை. நீங்கள்தான் இவற்றை அவசியம் என்றுபட்டால் உங்கள் சேர்க்கையாக எழுதிக்கொள்ள வேண்டும். கதவை அம்மா திறக்க நான் உள்ளே சென்றேன். என்னை நாகையர் தமது தோட்டத்துக்குள் வெட்டிப் போடக்கூடும் என்பதுக்கு அஞ்சாதிருந்த அம்மா இப்போது என்னை தனியே விட விரும்பாமல் உள்ளே என்னுடனேயே வந்தார்கள். நாகையர் வீட்டு முற்றத்தில் நான் நின்ற இடத்தில் குனிந்து நீலகண்டத்தை ஊன்றி பின்பு கைகளை அகற்றி குவித்தேன். அம்மா என்னைத் தொட்டு ‘மேலே’ என்றார்கள். நான் அண்ணாந்தேன். என் கையை நீத்தது தரையில் இறங்கவில்லை. தன்னிச்சையாக மேலேழுந்து எத்தனை மைல் தூரம் என்று கணக்கிடமுடியாத தூரத்தில் ஒளிப்புள்ளியாக ஓடி மறைந்தது.‘ஆம்’ என்று மனம் தனது சுமைகள் இறங்கியதில் ஆசுவாசம் கொண்டது. திரும்பி நடந்த எங்களுடைய கண்ணீர்த்திரையினூடே வீட்டு ஜன்னலில் ஒரு முகம் கண்ணீரினால் பிளவுண்டு இரண்டானாற்போல வேவு பார்ப்பது தெரிந்தது. அந்த முகம்-அல்லது முகங்கள், அவையும் நாங்கள் கண்டதைக் கண்டிருக்கக் கூடுமோ? கண்டதைத் தேடித்தான் குழி தோண்டினார்களோ?” இவைதான் என் முன் பைரவ சாஸ்திரிகள் கூறிய இறுதி வார்த்தைகள். அதுவரை சிரித்தே அறியாத உக்ரத்தில் தோயந்தாற் போலிருந்த பெத்தம்மாளின் முகம் மகனின் இந்த இறுதிச் சொற்களில் இளகி புன்னகைத்தது. அவர்கள் முகத்தில் அப்போது ஒரு சிறுமியின் விஷமத்தனம் தோன்றி மறைந்தது.

மறுநாளே பைரவ சாஸ்திரிகள் காலமானார். என்னிடம் மிஞ்சியது நீலகண்டத்தின் இயற்கையைப் பற்றிய விசாரம் தான். அவர் கேட்ட ஓரிரு கேள்விகளுக்கான பதிலில் இவை பூர்த்தி பெறலாம். ஆனால் நாகையரின் வீட்டினர் எவரும் வெட்டப்பட்ட குழிபற்றிய எந்தக் கேள்விக்கும் பதில் தரவில்லை. இப்போது ஏனோ நாகையரின் வீட்டினர் எவரும் வெட்டப்பட்ட குழிபற்றிய எந்தக் கேள்விக்கும் பதில் தரவில்லை. இப்போது ஏனோ நாகையர் திடீரென்று தமது தோட்டத்தை விற்பதற்காக முனைந்து நிற்கிறார். வாங்குவதற்கு நான் முன் வந்தபோது அக்காளுக்கு ஆஸ்துமாவே வந்து விட்டது. “ வேண்டாண்டா ! உனக்கு இது வேண்டாண்டா வெங்கூ !” என்கிறாள்.

ஒன்று செய்யேன். நாகையரின் நாக்கில் நீதான் கஞ்சிரா வாசிக்கிறவனாச்சே. பாலு உன்னைத் தன் சட்டைப் பைக்குள் வைத்திருக்கும் குச்சிமிட்டாய் என்று வேறு நினைச்சுண்டிருக்கிறார். ஏன் பைரவரின் கேள்விகளுக்கு நீயே பதிலைக் கண்டுபிடிக்கக் கூடாது ? முன்பே இதுபற்றி உன்னிடம் கேட்டிருக்கலாம் தான், ஆனால் நானே கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் நாட்கள் போய்விட்டன.
                                                                                                       மீண்டும் ஆசிர்வாதங்கள்                                                                                                             சிரோமணி வெங்கடேசன்
V. முகுந்தன் கடிதம்


அநேக நமஸ்காரங்கள். உங்கள் கட்டுரைக் கடிதத்தை நேற்று மாலைதான் படிக்க முடிந்தது. இரவு முழுவதும் தூங்காமல் கொட்டக்கொட்ட விழித்தபடி இருக்கும் படி பண்ணிவிட்டீர்கள். இப்படி முடிவதற்கத்தான் எல்லாமே ஆரம்பித்திருக்கின்றன என்று நிச்சயித்துக்கொண்டு மீண்டும் ஒரு இரவு தாண்டி உங்கள் கடிதத்தைப் படித்தேன். நீங்கள் தேடும் பதில் என்னிடமே உள்ளது.

VI. தொகுப்புரை

.......
என்னுள் உருண்டு குரலில் கமறிய பழிக்குரல் திடுக்கிட்டு ஒரு திடீர்த்தகிப்பில் கருகிய இருள்ரேகையாக மறைந்தது. வயோதிபர் களங்க மற்றுப் பொலிந்த குழந்தையின் பல்லற்ற புன்னகையினால் என்னை வினவுகிறவராகப் பார்த்தார். அவரது மூக்கு, ஆச்சர்யமாக, நான் எங்கோ கண்ட ரதமண்டபத்தினது கல்யானைபோல் முகத்திலிருந்து திமிறியபடி புறப்பட்டு நின்றது. புதர் மண்டிய புருவத்தின் கீழே ஒரு இருண்ட ஆழத்தில் தேடிக்கொண்ட தண்ணீராக மின்னின கண்கள். அவரது வினவல் சொல்லுருப்பெறுமுன் - எனக்குள்

‘வேண்டாம்’ என்று குறுக்கிட்ட வெட்கத்தின் நாசூக் வடிவான அறிவை மீறி விரிந்த இதயத்தின் உணர்வுக்கோளம் அழுகையின் உடைசலாகும் எல்லையில் விழிப்படைந்து ஸ்தம்பித்தது. சொல்லின் அளவைகளுக்கு எட்டாத ஏதோ ஒன்று இந்த உணர்வு மையத்தை தீண்டியும் தீண்டாமல் ஸ்பரிசித்தது, நிறமற்று, ஆழ்ந்தகன்ற நீல நுண்மையாய், யாருமறியா அந்தரங்க ஆதரவின் மகாமர்மமாய், தர்மாதர்மங்களற்ற இன்மையாய்.
                                                                                                         
  தீவ் கோஷ பூஜித்
.