Monday, September 15, 2025

நாய்க்காரச் சீமாட்டி - ஆன்டன் செகாவ் (மொ. பெ. பூ.சோமசுந்தரம்)

 நாய்க்காரச் சீமாட்டி - ஆன்டன் செகாவ் (மொ. பெ. பூ.சோமசுந்தரம்)

கடற்கரையில் புது முகம் ஒன்று—நாய்க்காரச் சீமாட்டி ஒருத்தி-காணப்பட்டதாகப் பேசிக் கொண்டார்கள். இரண்டு வாரங்களுக்கு முன்பு யால்தாவுக்கு வந்து அதன் வழிமுறைகளுக்குப் பழக்கப்பட்டிருந்த திமீத்ரி திமீத்ரிச் கூரொவும் புதிதாக வந்தோரிடம் அக்கறை செலுத்தத் தொடங்கியிருந்தார். நடுத்தர உயரமும் வெண்பொன் கேசமும் கொண்ட இளநங்கை ஒருத்தி பெரெட் தொப் பியணிந்து கடற்கரை நடைபாதை வழியே செல்வதை வெர்னே கபேயின் முகப்புப் பந்தலின் கீழ் அமர்ந்திருந்த அவர் கவனித்தார். வெள்ளை நாய் ஒன்று அவள் பின்னால் ஓடிற்று. 
அப்புறம் அவர், நகரப் பூங்காவிலும் சதுக்கத்திலும் தினந்தோறும் பலமுறை அவளைச் சந்தித்தார். எப்போ தும் அவள் அதே பெரெட் தொப்பி அணிந்து, வெள்ளை நாய் பின்தொடர, தனியாகவே உலாவினாள். அவள் யார் என்பது ஒருவருக்கும் தெரியவில்லை. எல்லோரும் அவளை 'நாய்க்காரச் சீமாட்டி” என்றே அழைத்தார்கள். 

இவள் இங்கே கணவனுடனோ தெரிந்தவர்களுடனோ இல்லை என்றால் இவளை அறிமுகப்படுத்திக் கொள்வது வீண் போகாது” என்று எண்ணமிட்டார் கூரொவ். 
அவருக்கு இன்னும் நாற்பது வயதாகவில்லை, அதற் குள் பன்னிரண்டு வயதில் ஒரு மகளும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களான இரு மகன்களும் இருந்தார்கள். கல்லூரி யில் இரண்டாவது ஆண்டு படித்துக் கொண்டிருந்த பொழுதே பெரியவர்கள் அவருக்கு மணம் முடித்து விட் டார்கள்; இப்போதோ அவர் மனைவி அவரைக் காட்டி லும் ஒன்றரை மடங்கு முதியவளாகத் தோற்றமளித்தாள். நல்ல உயரமும், கரும் புருவங்களும், விறைப்பும், பெரு மிதமும், கம்பீரமும் வாய்ந்த இந்த மாது, அவளே தன்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டது போல, “சிந்தனை யாளி''. ஏராளமாகப் புத்தகங்கள் படிப்பாள், கணவரை மற்றெல்லோரும் அழைப்பது போன்று திமீத்ரி எனஅழைக் காமல் திமீத்திரி என அழைப்பாள். அவரோ அவளை நுனிப்புல் மேய்பவள், குறுகிய நோக்கினள், நயப் பாங்கு அற்றவள் என உள்ளூறக் கருதிவந்தார்; ஆயினும், அவளிடம் அவருக்கு ஒரே அச்சம். வீட்டில் அவருக்கு இருப்பே கொள்ளாது. அவளுக்குத் துரோகம் செய்ய அவர் வெகு காலத்துக்கு முன்பே தொடங்கிவிட்டார், அடிக்கடி துரோகம் செய்து வந்தார்; அந்தக் காரணத் தினால்தான் போலும், பெண்களைப் பற்றி எப்போதுமே இகழ்ச்சியாகப் பேசினார்; தமக்கு முன்னிலையில் மாதரைப் பற்றிய பேச்சு எழுந்ததும், “கீழ் இனத்தவர்!” என்று அவர்களைக் குறிப்பிட்டார். 
கசப்பான அனுபவத்திலிருந்து தாம் போதிய பாடம் கற்றுக் கொண்டு விட்டதாகவும், எனவே பெண்களை எப்படி வேண்டுமாயினும் அழைக்கத் தமக்கு உரிமை யுண்டென்றும் எண்ணி வந்தார் என்றாலும் இந்தக் “கீழ் இனத்தவர்' இல்லாமல் இரண்டு நாட்கள்கூட அவரால் வாழ முடிவதில்லை. ஆண்கள் கூட்டத்தில் அவருக்குச் சலிப்பாக, கட்டிப் போட்டது போலிருக்கும்; அவர்களிடம் கலகலப்பாகப் பேசாமல் உர்ரென்றிருப்பார். பெண் களிடையிலோ, விட்டேற்றியாயிருப்பார்; அவர்களுடன் என்ன பேசுவது; எப்படிப் பழகுவது என்று அவருக்குத் தெரியும்; அவர்கள் நடுவே வாய் திறவாமலிருப்பது கூட அவருக்கு எளிதாயிருந்தது. அவரது தோற்றத்திலும் சுபாவத்திலும், அவர் இயல்பு முழுவதிலுமே இருந்த இனந் தெரியாத கவர்ச்சி பெண்களை அவரிடம் இணக்கங் கொள்ளச் செய்தது, வசீகரித்தது; இதை அவர் அறிந் திருந்தார். அவரையும் ஏதோ ஒரு சக்தி பெண்கள்பால் வலிய ஈர்த்தது. 

அந்தரங்கத் தொடர்பு ஒவ்வொன்றும் தொடக்கத்தில் வாழ்க்கையை இன்பப் புதுமையுள்ளதாக்கி, இனிய சுளுவான நிகழ்ச்சியாக விளங்கினாலும், குல மகளிர் விஷயத் தில், அதிலும் அடியெடுத்து வைக்கத் தயங்குபவர்களும், 

உறுதியற்றவர்களுமான மாஸ்கோ மாதர் விஷயத்தில், அசாதாரணச் சிக்கல் நிறைந்த பெரும் பிரச்சினை ஆகி விடுவதையும், முடிவில் நிலைமை சகிக்க முடியாத அளவு துன்பகரமாகி விடுவதையும் கூரொவ் மீண்டும் மீண்டும் நேர்ந்த உண்மையிலேயே கசப்பான அனுபவத்திலிருந்து தெரிந்து கொண்டிருந்தார். ஆனால் கவர்ச்சியான பெண் யாரையேனும் புதிதாகச் சந்திக்கும் போதெல்லாம் இந்த அனுபவம் நினைவிலிருந்து எப்படியோ நழுவிவிடும், வாழ்வு வேட்கை மேலெழும், எல்லாமே சகஜமாகவும் வேடிக் கையாகவும் தென்படும். 
இவ்வாறாக, ஒரு நாள் பூங்கா ரெஸ்டாரெண்டில் அவர் உணவருந்திக் கொண்டிருக்கையில், பெரெட் தொப்பிய ணிந்த நங்கை நிதானமாக நடந்து வந்து பக்கத்து மேஜை யெதிரே அமர்ந்தாள். அவளது முகபாவம், நடை, உடை, முடி ஒப்பனை எல்லாமே அவள் நாகரிக சமூகத்தைச் சேர்ந் தவள், மணமானவள், யால்தாவுக்கு முதல் தடவையாக வந்திருக்கிறாள், இங்கே அவளுக்குச் சலிப்பு தட்டி விட் டது என்பவற்றைக் காட்டின. யால்தா வருபவர்களது ஒழுக்கக்கேடு பற்றிய கதைகளில் பெரும்பாலானவை வெறும் புரளி, தம்மால் முடிந்தால் சந்தோஷமாக வரம் பைக் கடந்திருக்கக் கூடியவர்கள் இட்டுக்கட்டிய கற்பனை என்பது கூரொவுக்குத் தெரியும், அவர் இவற்றைக் காதில் போட்டுக் கொள்வதே இல்லை. ஆயினும் தம்மிடமிருந்து மூன்று தப்படி தள்ளிப் பக்கத்து மேஜை முன்னால் அந்தச் சீமாட்டி வந்தமர்ந்ததும் சுலபமான வெற்றிகளையும், மலைக்கு உல்லாசப் பயணங்கள் செல்வதையும் பற்றிய இந்தக் கதைகள் அவர் நினைவுக்கு வந்தன; சொற்பகாலத் தொடர்பு கொள்வது, அறிமுகமற்ற, பெயர் கூடத் தெரி யாத பெண்ணுடன் காதல் லீலை புரிவது என்ற மனோகர மான எண்ணம் அவரைத் திடீரென ஆட்கொண்டது. 
சீமாட்டியின் நாயைச் செல்லமாகச் சுடக்குப் போட்டுக் கூப்பிட்டு, அது பக்கத்தில் வந்ததும் விரலை ஆட்டி அதைப் பயமுறுத்தினார். நாய் உறுமியது. கூரொவ் மீண்டும் விரலை ஆட்டினார். 
சீமாட்டி அவரை ஏறிட்டுப் பார்த்துவிட்டு மறு கணமே கண்களைத் தாழ்த்திக் கொண்டாள். 
‘கடிக்காது’” என்று சொன்னாள்; அவள் முகம் கன்றிச் சிவந்தது. 
இதற்கு எலும்புத் துண்டு கொடுக்கலாமா?” என்று கேட்ட கூரொவ், அவள் தலையசைப்பால் சம்மதம் தெரிவித்தமே, "நீங்கள் யால்தா வந்து அதிக நாள் ஆகிறதோ?” என்று நேசம் தொனிக்க வினவினார். 

'ஐந்து நாளாகிறது. 
'நான் இங்கே இரண்டாவது வாரத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன். 
இருவரும் சிறிது நேரம் மௌனமாயிருந்தார்கள். “நாட்கள் என்னவோ விரைவாகத்தான் ஓடுகின்றன, ஆனபோதிலும் ஏனோ இங்கே ஒரே சலிப்பாயிருக்கிறது!” என்று அவரை நோக்காமலே கூறினாள் அவள். 

'சலிப்பாயிருக்கிறது என்று சொல்வது வெறும் சம்பிரதாயம்தான். 
பேல்யேவ், ஷிஸ்த்ரா போன்ற மூலை முடுக்குகளில் வசிக்கும் போது யாருக்கும் சலிப்பு உண்டாவதில்லை. ஆனால் இங்கே வந்ததும், 'ஐயோ, ஒரே சலிப்பு! ஐயோ, ஒரே புழுதி!' என்று முறையிட ஆரம்பித்து விடுகிறார்கள், ஏதோ இப்போதுதான் ஸ்பா னிய நகர் கிரநாடாவிலிருந்து நேரே வந்து இறங்கியவர் கள் போல.” 
அவள் சிரித்தாள். பின்பு இருவரும் அறிமுகமற்றவர் கள் போலப் பேசாமல் உணவருந்தினார்கள். ஆயினும் சாப்பாட்டுக்குப் பின் இருவரும் சேர்ந்து வெளியேறி, எங்கு போனாலும், எதைப் பற்றிப் பேசினாலும் ஒன்று தான் என்ற மனோபாவங் கொண்ட, கட்டற்ற, குதூகல மான மனிதர்கள் போன்று, வேடிக்கையும் விளையாட்டு மாக உரையாடலானார்கள். உலாவியவாறே, கடல் மீது தென்பட்ட விந்தையான ஒளியைப் பற்றிப் பேசினார்கள்; கடல் நீர் மனோரம்மியமான இளம் ஊதா நிறத்துடன் திகழ்ந்தது; அதன் மீது நிலவொளி தங்க ரேகைகளிட் டது. பகல் வெக்கைக்குப் பின் ஒரே புழுக்கமாயிருப்பதைப் பற்றி வார்த்தையாடினார்கள். தாம் மாஸ்கோவாசி என் றும், கல்லூரியில் மொழி இயல் கற்றதாகவும், ஆனால் வங்கியில் வேலை செய்வதாகவும், தனியார் இசைநாடகக் குழுவில் பாடுவதற்கு ஒரு காலத்தில் பயின்றதாகவும் பின்பு அந்த எண்ணத்தை விட்டதாகவும், மாஸ் கோவில் தனக்கு இரண்டு சொந்த வீடுகள் இருப்பதாக வும் கூரொவ் அவளிடம் சொன்னார். அவள் பீட்டர்ஸ்பர் கில் வளர்ந்ததாகவும் எஸ். என்ற நகரில் வாழ்க்கைப் பட்டதாகவும், இரண்டு ஆண்டுகளாக அவ்வூரில் இருந்து வருவதாகவும், யால்தாவில் இன்னும் ஒரு மாதம் தங்கப் போவதாகவும்,அவளது கணவரும் ஓய்வெடுத்துக் கொள்ள விரும்புவதாகவும், எனவே அவரும் யால்தாவுக்கு வரக் கூடுமென்றும் கூரொவ் அவளிடமிருந்து தெரிந்து கொண் டார். கணவர் வேலை செய்வது குபேர்னியா நிர்வாகக் கவுன்சிலிலா அல்லது சேம்ஸ்த்வோ போர்டிலா என அவ 
ளால் தெளிவாகக் கூற முடியவில்லை. அவளுக்கே இது வேடிக்கையாயிருந்தது. அவளது பெயர் ஆன்னா செர்கேயிவ்னா என்பதையும் கூரொவ் தெரிந்து கொண்டார். 

ஓட்டல் அறைக்குத் திரும்பிய பின்னர் கூரொவ் அவளைப் பற்றி எண்ணமிட்டார். மறுநாள் தாம் அவளைச் சந்திப்பது நிச்சயம், கட்டாயம் சந்தித்தாக வேண்டும் என நினைத்தார். உறங்குவதற்காகப் படுத்தவர், மிகச் சமீ பத்தில்தான் அவள் உயர்நிலைப் பள்ளி மாணவியாயிருந் தாள் என்பதையும் இப்போது தமது மகள் படிப்பது போலவே பாடங்களைப் படித்துக் கொண்டிருந்தாள் என் பதையும் நினைவு கூர்ந்தார்; அவளது சிரிப்பிலும், பழக்க மில்லாதவனுடன் பேசும் விதத்திலும் எவ்வளவு கூச்சமும் தயக்கமும் காணப்பட்டது என்பதையும் ஞாபகப்படுத்திக் கொண்டார். வாழ்க்கையிலேயே இப்போதுதான் முதல் தடவையாக அவள் தனியாயிருக்கிறாள் போலும், ஆண்கள் அவளை ஒரேயொரு மறைமுக நோக்கத்துடன் (இந்த நோக்கத்தை அவள் ஊகிக்காமலிருக்க முடியாது) பின் தொடர்வதற்கும், உற்றுப் பார்ப்பதற்கும் அவளுடன் உரையாடுவதற்கும் வாய்ப்பான நிலைமை இப்போதுதான் ஏற்பட்டிருக்கிறது போலும் என்று எண்ணினார். அவளது நேர்த்தியான மெல்லிய கழுத்தையும் அழகிய சாம்பல் நிறக் கண்களையும் நினைத்துப் பார்த்தார். 

அவளிடம் ஏதோ ஏக்கம் இருக்கிறது'’ எனச் சிந்தித்தவாறே உறங்கிப் போனார். 


அவர்கள் பரிச்சயமாகி ஒரு வாரம் கடந்து விட்டது. அன்று விழா நாள். அறைக்குள் ஒரே புழுக்கம், வெளி யிலோ சூறைக் காற்று படலம் படலமாகப் புழுதியைக் கிளப்பியது, தொப்பிகளைத் தலைகளிலிருந்து பறக்கடித் தது. நாள் முழுதும் தாகம் எடுத்த வண்ணமாயிருந் தது. கூரொவ் அடிக்கடி கபேக்குப் போய் ஷர்பத்தும் ஐஸ் கிரீமும் வாங்கி வருவதும் ஆன்னா செர்கேயிவ்னாவுக்கு உபசாரம் செய்வதுமாயிருந்தார். வெக்கை பொறுக்க முடியவில்லை. 
மாலையில் காற்று அடங்கியதும் அவர்கள் கப்பல் வரு வதைப் பார்க்கும் பொருட்டுத் துறைமுகம் சென்றார்கள். கப்பல் துறையில் ஏராளமானோர் குறுக்கும் நெடுக்கும் உலாவியவாறு, யாரையோ வரவேற்பதற்காகப் பூச் செண்டுகளுடன் காத்திருந்தார்கள். நாகரிக யால்தாக் கூட்டத்தின் இரண்டு சிறப்பியல்புகள் அங்கே சட்டெனக் கண்ணில் பட்டன: முதலாவது, வயது முதிர்ந்த சீமாட்டி கள் யுவதிகள் போன்று உடையணிந்து கொண்டிருந் தார்கள்; இரண்டாவது, ஜனரல்களின் தொகை அதிகமாயிருந்தது. 

கடலில் கொந்தளிப்பு மிகுந்திருந்த படியால் கப்பல் தாமதித்து, சூரியன் மறைந்த பின்பே வந்து சேர்ந்தது; துறையோரமாக நிறுத்தப்படுவதற்கு முன்னர் நெடு நேரம் இப்புறமும் அப்புறமும் திரும்பிச் சாரி பாய்ந்தது. ஆன்னா செர்கேயிவ்னா தெரிந்தவர் யாரையோ தேடுபவள் போலக் கப்பலையும் பிரயாணிகளையும் காட்சிக் கண்ணாடி வழியே துருவிப் பார்த்தாள். பின்னர் கூரொவ் பக்கம் திரும்பிய போது அவள் விழிகள் பளிச்சிட்டன. மிக அதிகமாகப் பேசினாள், சரமாரியாகக் கேள்விகளைப் பொழிந்தாள், எதைப் பற்றிக் கேட்டோம் என்பதை அக் கணமே மறந்து விட்டாள். பிறகு காட்சிக் கண்ணாடியைக் கூட்டத்தில் தவறவிட்டு விட்டாள். 
நாகரிகக் கும்பல் கலைந்து சென்றது, முகங்கள் கண் ணுக்குத் தெரியவில்லை, காற்று அடங்கி விட்டது, ஆயி னும் கூரொவும் ஆன்னா செர்கேயிவ்னாவும், கப்பலிலிருந்து இன்னும் யாராவது வருகிறார்களா என்று எதிர்பார்ப் பவர்கள் போல நின்று கொண்டிருந்தார்கள். ஆன்னா செர் கேயிவ்னா பேசுவதை நிறுத்திவிட்டு கூரொவை நோக் காமல் மலர்களை முகர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். 
“பருவநிலை நல்லதாகி இனிமையான மாலையாக மாறி விட்டது. இப்போது நாம் எங்கே போகலாம்? எங்காவது வண்டியில் செல்வோமா?” என்றார் கூரொவ். 
அவள் பதில் பேசவில்லை. 
அவர் அவளையே நிலையாக நோக்கிக் கொண்டிருந்து விட்டுத் திடீரென அவளைக் கட்டித் தழுவி உதடுகளில் முத்தமிட்டார். மலர்களின் நறு மணமும் ஈரிப்பும் அவரைச் சூழ்ந்தன. மறு கணமே யாரேனும் பார்த்து விட்டார்களோ என்று அச்சத்துடன் பின்பக்கம் திரும்பிப் பார்த்தார். 
'உங்கள் அறைக்குப் போவோம்... என்று தணி வான குரலில் சொன்னார். 
ருவரும் விரைந்து நடந்தார்கள். 
அறையில் இறுக்கமாயிருந்தது. ஜப்பானியக் கடையில் அவள் வாங்கியிருந்த ஏதோ ஒருவகை அத்தரின் மணம் வீசியது. இப்போது அவள் மீது கண்ணோட்டிய கூரொவ், வாழ்க்கையில்தான் எத்தகைய விந்தைச் சந்திப்புகள் நிகழ்கின்றன!” என எண்ணமிட்டார்.அவருடன் உடலுறவு கொண்ட பலவகையான மாதரையும் பற்றிய நினைவு கள் அவர் மனத்துள் எழுந்தன. அவர்களில் சிலர் கவலை யற்ற, இனிய சுபாவமுள்ள பெண்கள்; உடலுறவில் இன் பமுற்றவர்கள்; மிக மிகக் குறுகிய நேரத்திற்கேயாயினும் தங்களுக்கு மகிழ்ச்சி அளித்ததற்காக அவரிடம் நன்றி பாராட்டியவர்கள். அவர் மனைவியைப் போன்ற வேறு சிலரோ, உண்மை ஆர்வம் இன்றி, வெட்டிப் பேச்சும், பசப்பும், நடிப்புமாக, இதெல்லாம் வெறும் களியாட் டமோ வேட்கையோ அல்ல, அதனிலும் ஆழ்ந்த மகத்து வம் வாய்ந்தது என்பது போன்ற பாவனையுடன் காதல் புரிந்தவர்கள். மற்றும் நல்ல அழகிகளான இரண்டு மூன்று பெண்கள் இருந்தனர், விறுவிறுப்பு இழந்து போனவர் கள், வாழ்க்கை வழங்கக் கூடியதைக் காட்டிலும் அதிக இன்பத்தை அதனிடமிருந்து வலிந்து பெற வேண்டுமென்ற வைராக்கியத்தின் மூர்க்க வெறி இவர்களது முகபாவத் தில் பளிச்சிட்டு மறையும். இவர்கள் புத்திளமையைக் கடந்தவர்கள், சபல சித்தமுள்ளவர்கள், கோணப் புத்தி யும் கொடுமனமும் கொண்டவர்கள், மதியீனர். இவர் களிடம் கூரொவுக்கு இருந்த மோகம் அடங்கியதும், அவ ருக்கு இவர்களது அழகு வெறுப்பையே ஊட்டியது; இவர் உள்ளாடைகளின் ஓர ஒப்பனைப் பின்னல்கள் மீன் செதிள்களைத்தான் நினைவுபடுத்தின. 

இங்கேயோ, அனுபவமில்லாத இளமையின் பேதமை யும் தடுமாற்றமும் கூச்சமும் வெளிப்படையாகப் புலப் பட்டன. இதற்றோடு, யாரோ திடீரெனக் கதவைத் தட்டி விட்டது போல, ஒருவகையான பதைபதைப்பும் தென் பட்டது. “நாய்க்காரச் சீமாட்டி” ஆன்னா செர்கேயிவ்னா, நடந்த விவகாரத்தை விசேஷ முக்கியத்துவம் வாய்ந்த தாக, ஆழ்ந்த தன்மை கொண்டதாக, தனது வீழ்ச்சியாகக் கருதுவது போன்று தோன்றியது. இது கூரொவுக்கு விந் தையாகவும் பொருத்தமற்றதாகவும் பட்டது. ஏக்கமும் சோர்வும் குடி கொண்ட அவளது முகத்தின் இரு மருங் கிலும் நீண்ட கூந்தல் சோகமாகத் தொங்கியது. பழம் பெரும் ஓவியங்களில் காணக் கூடிய பாவிப் பெண் போன்று வருத்தத்துடன் சிந்தனையிலாழ்ந்திருந்தாள். 
இது சரியல்ல. இனி நீங்களே என்னை மதிக்கமாட் டீர்கள்” என்றாள். 
மேஜை மேல் முலாம் பழம் இருந்தது. கூரொவ் அதில் ஒரு சிறு துண்டு நறுக்கி, நிதானமாகத் தின்ன ஆரம்பித் தார். யாரும் பேசவில்லை, குறைந்தது அரைமணி நேரம் இப்படிக் கழிந்திருக்கும். 
ஆன்னா செர்கேயிவ்னாவைப் பார்க்கப் பரிதாபமாயிருந் தது. வாழ்க்கையை அதிகம் அறியாத, பேதைமை வாய்ந்த ஒரு நல்ல பெண்ணுக்குரிய தூய்மை அவளிடமிருந்து வெளிப்பட்டது. மேஜை மேல் எரிந்து கொண்டிருந்த ஒற்றை மெழுகுவத்தியின் வெளிச்சத்தில் அவளது முகம் சரிவர தெரியவில்லை, ஆயினும், நெஞ்சு பொறுக்க மாட்டாதவளாய் அவள் வேதனைப்பட்டாள் என்பது தெளிவாகவே தெரிந்தது. 
"எதற்காக நான் உன்னை மதிக்க மாட்டேன் என்கிறாய்? அர்த்தமில்லாத பேச்சாய் என்ன சொல்வது என்று தொரியாமல் இருக்கிறதே” என்றார் கூரொவ். 
“கடவுள் என்னை மன்னிப்பாராக!” என்று கண்களில் கண்ணீர் ததும்பக் கூவினாள் அவள். "பயங்கரம், பயங் கரம்” என்றார். 

சமாதானம் தேடிக் கொள்ளத் தேவையில்லையே.” “என் செயலுக்குச் சமாதானம் ஏது? நான் கெட்ட வள், இழிந்தவள். என்னை இகழ்ந்து கொள்கிறேனே தவிர சமாதானம் தேடிக் கொள்ள நினைக்கவில்லை. கணவரை அல்ல, என்னையே நான் ஏமாற்றிக் கொண்டு விட்டேன். இப்பொழுது மட்டும் அல்ல, எவ்வளவோ காலமாக என்னையே ஏமாற்றிக் கொண்டு வருகிறேன். என் கணவர் நேர்மையானவராக, தகுதி வாய்ந்தவராக இருக்கலாம், ஆனால், நிச்சயமாக அவர் சரியான அடிவருடி! அலுவலகத் தில் அவர் என்ன செய்கிறாரோ, என்ன வேலை பார்க் கிறாரோ அறியேன், ஆனால் அண்டிப் பிழைக்கும் அடிவருடி என்பது மட்டும் எனக்குத் தெரியும். அவருக்கு வாழ்க்கைப் பட்ட போது எனக்கு இருபது வயது; அடங்கா ஆவல் என்னை அலக்கழித்தது; நான் நாடியது மேன்மை வாய்ந் தது. வேறு விதமான வாழ்க்கை இருக்கத்தான் வேண்டும் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். வாழ விரும்பி னேன்! நன்கு வாழ, முழுமையாக வாழ... அடங்கா ஆவல் என்னை அரித்துத் தின்றது... உங்களுக்கு அது புரியாது, ஆனால் ஆண்டவன் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன், என்னால் என்னை அடக்கியாள முடியவில்லை, எனக்கு ஏதோ நேர்ந்து விட்டது, கட்டுப்படுத்திக் கொள்ளவே இயலாது போயிற்று. உடம்பு சரியாயில்லை என்று கணவரிடம் சொல்லிவிட்டு இங்கே வந்தேன்... மதிமயங்கிய நிலையில், பைத்தியக்காரி போல இங்கே நான் சுற்றித் திரிந்து கொண்டிருந்தேன்... ஆனால் இதோ நான் கேவலமான பிறவியாய், உருப்படாதவளாய், எல்லாருடைய இகழ்ச் சிக்கும் உரியவளாய் விட்டேன்.” 
கூரொவுக்கு இந்தப் பேச்சைக் கேட்கச் சலிப்பாயிருந் தது. அவளது வெகுளித்தனமும் சிறிதும் எதிர்பாராத, கொஞ்சமும் பொருத்தமில்லாத அவளது அங்கலாய்ப்பும் அவருக்கு எரிச்சலையே உண்டாக்கியது. விழிகளில் கண்ணீர் இல்லாதிருந்தால் அவள் வேடிக்கை செய்கிறாள், அல்லது நடிக்கிறாள் என்று எண்ணியிருப்பார். 
எனக்குப் புரியவில்லை. உனக்கு என்ன வேண்டும் என்கிறாய்?’” என்று சாந்தமான குரலில் 
அவர். 
கேட்டார் 
அவரது மார்பிலே முகத்தைப் புதைத்து அவரோடு ஒண்டிக் கொண்டாள் அவள். 
“நம்புங்கள், கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன், என்னை நம்புங்கள்... நேர்மையான, தூய்மை வாய்ந்த வாழ்க் கையே எனக்கு வேண்டும். கெட்டதை என்னால் சகிக்க முடியாது. என் செயல் எனக்கே விளங்குவதாய் இல்லை. சாதாரண மக்கள் சொல்வார்கள்: 'பிசாசு பிடித்து விட் டது' என்று. எனக்குப் பிசாசு பிடித்திருப்பதாகத்தான் இப்போது நானும் சொல்லிக் கொள்ள வேண்டும்’’ என்றாள். 
வேண்டாம், வேண்டாம்...” என முணுமுணுத்தார் 
கூரொவ். 
அவளது நிலைக்குத்திட்ட, கிலி கொண்ட விழிகளுள் உற்று நோக்கி, அவளை முத்தமிட்டு, தணிந்த குரலில் கொஞ்சலாகத் தேறுதல் கூறினார். சிறிது சிறிதாக அவள் நிம்மதியடைந்தாள். அவளுக்கு உற்சாகம் பிறந்தது. 
இருவரும் சிரிக்கலானார்கள். 
சற்று நேரத்துக்குப் பின் அவர்கள் வெளியே சென்ற போது 
கரையோர நடைபாதையில் எந்த ஆத்மாவும் இல்லை. சைப்ரஸ் மரங்களுடன் நகரம் உயிரற்றதாகத் தோன்றியது. கடல் மட்டும் பேரிரைச்சலுடன் கரையில் மோதிக் கொண்டிருந்தது. தன்னந்தனியான மீன்படகு 
ஒன்று அலைகள் மேல் அசைந்தாடியது, அதிலிருந்த விளக்கு தூங்கி வழிவது போல மினுமினுத்தது. 
குதிரைவண்டி ஒன்றைத் தேடிப் பிடித்து ஏறிக் கொண் இருவரும் ஓரியாந்தாவுக்குச் சென்றார்கள். 
“நடையில் மாட்டியிருந்த முகவரிப் பலகையைப் பார்த்து உனது குடும்பப் பெயரை இப்போதுதான் தெரிந்து கொண்டேன். வான் திதெரித்ஸ் என்று எழுதி யிருந்தது. உன்னுடைய கணவர் ஜெர்மானியரா?”” என்று கேட்டார் கூரொவ். 

'இல்லை. 
அவருடைய பாட்டனார் ஜெர்மானியர் போலிருக்கிறது. அவர்  ருஷ்யச் சத்திய சமயத்தவர் 
தான். 
ஓரியாந்தா சேர்ந்ததும், மாதாகோயிலின் அருகே பெஞ்சியில் அமர்ந்து, கீழே கடலை நோக்கியவாறு மாயிருந்தார்கள். காலை மூடுபனிக்கிடையே யால்தா நகர் தெளிவின்றி மங்கலாகத் தெரிந்தது. மலைச்சிகரங்களுக்கு மேல் அசையாது நின்றன வெண் முகில்கள். மரங்களில் இலைகள் சிலுசிலுக்கவில்லை. வெட்டுக் கிளிகள் சிலம்பின. கடலின் ஒரே மாதிரியான, ஆழ்ந்த முழக்கம் கீழிருந்து வந்து, அமைதி பற்றி, நம் எல்லோருக்கும் நேரவிருக்கும் மீளா உறக்கம் பற்றி உரையாடியது. யால் தாவோ ஓரியாந் தாவோ இல்லாத காலத்திலும் கடல் இவ்வாறே முழங் கியது, இப்போதும் முழுங்குகிறது, நாம் மறைந்த பிறகும் இதே போல எதையும் பொருட்படுத்தாமல் ஆழ்ந்து முழுங்கிக் கொண்டிருக்கப் போகிறது. இந்த இடையறாத தன்மையில், வாழ்வையும் சாவையும் பற்றிய இந்த முழுமையான அலட்சியபாவத்தில்தான் நமது நிலையான கடைத்தேற்றம், உலகில் உயிர்க்குலத்தின் நிரந்தர இயக் கம், ஓயாத மேம்பாடு ஆகியவற்றின் மர்மம் அடங்கி யிருக்கிறது போலும். ள நங்கையின் அருகே—கடல், மலைகள், மேகங்கள், விரிந்த வானவெளி ஆகியவற்றின் மோகனச் சூழ்நிலையின் சௌந்தரியத்தில் சொக்கிப் போய், அமைதியடைந்து வைகறையின் மெல்லொளியில் எழிலின் உருவாகத் திகழ்ந்த யுவதியின் அருகே- அமர்ந்தவாறு, கூரொவ் சிந்தித்தார்: பார்க்கப் போனால் இவ்வுலகத்தில் எல்லாமே உண்மையில் வனப்பு வாய்ந் தவையே-எல்லாமே, அதாவது, வாழ்வின் மேலான இலட்சியங்களையும் மனித மாண்பினையும் மறந்துவிடும் போது நாம் எண்ணும் எண்ணங்களையும் செய்யும் செயல் களையும் தவிர, எல்லாமே வனப்பு வாய்ந்தவையே என்று தம்முள் கூறிக் கொண்டார். 
யாரோ ஒருவன்- காவலாளாயிருக்கும்—பக்கத்தில் வந்து அவர்களை உற்றுப் பார்த்துவிட்டு அப்பால் சென்றான். இதிலுங்கூட ஏதோ மர்மமும் அழகும் மிளிர் வதாகத் தோன்றியது. பியதோஸியாவிலிருந்து வரும் 

கப்பல், விளக்குகள் இன்றி, துறையை 
துறையை நெருங்குவது காலைப் புலரொளியில் பளிச்செனத் தெரிந்தது. 
“புல்லில் பனி படிந்திருக்கிறது'' என நீண்ட மௌனத்துக்குப் பிறகு கூறினாள் ஆன்னா செர்கேயிவ்னா. ஆமாம். திரும்பிச் செல்வோம், நேரமாகி விட்டது.’’ 
நகருக்குத் திரும்பினார்கள். 
இதன் பின்னர் தினந்தோறும் நடுப்பகலில் அவர்கள் கரையோர நடைபாதையில் சந்தித்தார்கள், பகலுணவும் மாலையுணவும் சேர்ந்து அருந்தினார்கள், உலாவினார்கள், கடலைக் கண்டு வியந்தார்கள். அவள் தனக்குத் தூக்கம் வருவதில்லையென்றும், நெஞ்சு படபடக்கிறதென்றும் குறை பட்டுக் கொண்டாள். ஒரே மாதிரியான கேள்வி களை திரும்பத் திரும்பக் கேட்டாள். ஒரு சமயம் பொறாமையாலும், இன்னொரு சமயம் அவர் தன்னைப் போதிய அளவு மதிக்கவில்லையோ என்ற அச்சத்தாலும் துன்புற்றாள். அடிக்கடி அவர், சதுக்கத்திலோ பூங்கா விலோ சுற்றுமுற்றும் யாரும் இல்லாத நேரம் பார்த்து, அவளை அருகே இழுத்துத் தழுவி ஆவேசமாக முத்த மிடுவார். ஒருவித வேலையுமற்ற சுகவாழ்வு; யாரேனும் பார்த்துவிடப் போகிறார்களே என்ற அச்சத்துடன் 
சுற்றுமுற்றும் கண்ணோட்டியவாறு பட்டப் பகலில் முத்த மிட்டுக் காஞ்சுதல்; வெக்கை; கடல் வாடை; நன்கு உண்டு நன்கு உடுத்தி வேலை ஏதுமின்றி மிடுக்காய் நடை போடுவோர் ஓயாமல் கண்ணெதிரே தோன்றி மறைந்த காட்சி. -இவை எல்லாம் கூரொவுக்குப் புத்துயிரும் ஊக்கமும் அளிப்பனவாய் இருந்தன. அவர் ஆன்னா செர் கேயிவ்னாவை அழகி என்றும், மோகினி என்றும், மெச் சினார், அடங்காத துடிப்புடன் அவளோடு காதல் புரிந் தார், ஓரடி விலகாமல் அவளையே சுற்றிவந்தார். அவளோ அடிக்கடி சிந்தனையில் ஆழ்ந்தாள், தன்னை அவர் மதிக்க வில்லையென்றும், துளிக்கூடக் காதலிக்கவில்லையென்றும், உதவாக்கரைப் பெண்ணாகவே கருதுவதாகவும் ஒப்புக் கொள்ளுமாறு செய்ய எப்போதும் முயன்று வந்தாள். அநேகமாக ஒவ்வோர் இரவும் அவர்கள் வண்டியிலேறி நகருக்கு வெளியே ஓரியாந்தாவுக்கோ, அருவிக்கரைக்கோ போவார்கள். இந்த உல்லாசப் பயணங்கள் இன்பமாகவே இருந்தன. இவை ஒவ்வொன்றும் எழிலும் சிறப்பும் மிக்க புதுப் புது மனப்பதிவுகளை அளித்தன. 
அவளுடைய கணவர் வந்து விடுவாரென எதிர்பார்த் தார்கள். ஆனால் அவரிடமிருந்து கடிதம் மட்டுமே வந்தது. கண்நோய் காரணமாகத் தாம் வெளிச்செல்ல முடியாதபடி ஆகி விட்டதால் அவளை உடனே ஊர் திரும்புமாறு அதில் அவர் வேண்டிக் கொண்டிருந்தார். ஆன்னா செர்கேயிவ்னா அவசரமாகப் புறப்பட ஆயத்தம் செய்தாள். 
'நான் போவது நல்லதுதான். இதுவே விதி” என்று கூரொவிடம் கூறினாள். 
யால்தாவிலிருந்து அவள் குதிரைவண்டியில் புறப்பட் டாள். அவரும் ரயில் நிலையம் வரை உடன் சென்றார். பகல் முழுவதும் பயணம் செய்தபின்பே ரயில் நிலையம் சேர்ந்தார்கள். ஆன்னா செர்கேயிவ்னா விரைவு வண்டியில் ஏறி, இடத்தில் அமர்ந்தபின், இரண்டாவது மணி அடித் ததும் அவள் கூரொவிடம், "எங்கே, இப்படித் திரும்புங் கள், இன்னொரு தடவை உங்களைப் பார்க்கிறேன். இன் னும் ஒரே தடவை. அப்படித்தான்” எனக் கூறினாள். 
அழவில்லையாயினும் அவள் ஏக்கமே வடிவாய், நோயுற்றவள் போல அருந்தாள். அவளது உதடுகள் துடித்தன. 
“உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பேன்... உங்கள் நினைவாகவே இருப்பேன். ஆண்டவன் உங்களுக்கு அருள்வாராக. என்னைப் பற்றிக் கெடுதலாக நினைக்காதீர் கள். நாம் ஒரேயடியாகப் பிரிகிறோம், மீண்டும் சந்திக் கவே மாட்டோம். அதுதான் சரி, ஏனெனில் நாம் சந்தித் திருக்கவே கூடாது. நல்லது, விடை கொடுங்கள். கடவுள் உங்களுக்கு அருள் பாலிப்பாராக” என்றாள். 
ரயில் விரைவாகச் சென்று விட்டது, அதன் விளக்கு கள் சீக்கிரமே மறைந்து விட்டன; ஒரு நிமிடத்திற்கெல் லாம் அதன் தடதடப்புக் கூடக் காதில் விழவில்லை— இந்த இன்ப மயக்கத்துக்கு, இந்தப் பித்துக்குச் சட்டென முடிவு கட்டிவிட வேண்டுமென்று எல்லாம் சேர்ந்து திட்டமிட்டுச் சதி புரிந்தாற் போல் யாவும் அமைந்தன. 

கூரொவ்  தாலைவில் பார்வையைச் செலுத்தியவாறு, வெட்டுக் கிளிகளின் கிறீச்சொலியையும், தந்திக் கம்பிகளின் ரீங்காரத்தையும் அப்போதுதான் உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டவர் போன்ற உணர்ச்சியுடன் கேட் டார். தமது 
வாழ்க்கையில் இது இன்னுமொரு எதிர் பாராத சம்பவம் அல்லது தற்செயல் நிகழ்ச்சி என்றும், இதுவும் முடிந்துவிட்டதென்றும், எஞ்சியிருப்பதெல்லாம் நினைவு மட்டுமே என்றும் எண்ணினார்... அவர் உள்ளம் கரைந்து உருகியது, துயருற்றது. அவருக்கு ஓரளவு பரிதா பமாகவுங்கூட இருந்தது. இனி எந்நாளும் அவளை அவர் பார்க்கப் போவதில்லை, அவருடன் இருக்கையில் இந்த யுவதி உண்மையில் இன்பமடையவில்லை. அவர் அவளிடம் நட்பும் பாசமுமாக இருந்தது மெய்தான்; ஆயினும் அவளுடன் அவர் நடந்து கொண்ட முறையில், அவரு டைய குரலில், கொஞ்சல்களில் கூட, ஏளனத்தின் சாயல் அல்லவா, பாக்கியசாலியான ஆணின், அதிலும் அவளைப் 
பிளாட்பாரத்தில் தனியே நின்று, இருண்ட போல் இரு மடங்கு வயதான ஆணின் மெத்தனமான அகம்பாவச் சாயல் அல்லவா படிந்திருந்தது? அவள் ஓயாமல் அவரை நல்லவரென்றும் அசாதாரண மனித ரென்றும் பெருந்தன்மை வாய்ந்தவரென்றும் கூறி வந் தாள். அவர் உண்மையில் இருப்பது போலன்றி வேறு விதமாய் அவள் கண்ணுக்குத் தோன்றியிருக்க வேண்டும். அப்படியானால் அவர் தம்மையும் அறியாமலே அவளை ஏமாற்றி விட்டார் என்றுதானே அர்த்தம்.... 
ரயில் நிலையத்தில் அதற்குள் இலையுதிர்கால வாடை வீசியது, மாலை குளிராயிருந்தது. 
பிளாட்பாரத்திலிருந்து வெளியே வந்து கொண் டிருந்த கூரொவ், “நானும் வடக்கே போக வேண் டி வேளை வந்து விட்டது. ஆமாம், புறப்பட்டாக வேண் டும்!” என்று தம்முள் கூறிக் கொண்டார். 

அவர் மாஸ்கோவுக்குத் திரும்பி வந்ததும் குளிர்கால நடைமுறைகள் தொடங்கி விட்டன: வீட்டில் கணப்புகள் 
மூட்டப்பட்டன; காலையில் குழந்தைகள் பள்ளி செல்ல ஆயத்தம் செய்து கொண்டு தேநீர் அருந்துகையில் இருட் டாகவே இருந்ததால் ஆயா கொஞ்ச நேரத்துக்கு விளக் கேற்ற வேண்டியிருந்தது. கடுங் குளிர் ஆரம்பித்தது. முதன்முதல் வெண்பனி பெய்து, சறுக்கு வண்டியில் முதல் தரம் சவாரி செய்யும் போது வெண்ணிறத் தரையையும், வெண்ணிறக் கூரைகளையும் காண இனிமையாயிருக்கிறது; தாராளமாக, சிரமமின்றி மூச்சுவிட முடிகிறது; புத் திளமைப் பருவம் நினைவுக்கு வருகிறது. உறை பனி படிந்து வண்மையாக ஒளிரும் முதுபெரும் லிண்டன் மரங்களும் பிர்ச் மரங்களும் பெருந்தன்மை வாய்ந்த தோற்றம் பெறுகின்றன. சைப்ரஸ், கூந்தற்பனை மரங்களைக் காட் டிலும் இவை நமக்கு நெருங்கியவை; இவற்றின் அரு காமையிலிருக்கும் போது மலைகளையும் கடலையும் பற்றிய நினைவுகள் தலை காட்டுவதில்லை. 
கூரொவ் மாஸ்கோவிலேயே பிறந்து வளர்ந்தவர். அவர் மாஸ்கோ திரும்பிய அன்று வானம் தெளிவா யிருந்தது, கடுங்குளிராய் இருந்தது. மென்முடி உள்வரி யிட்ட மேல் கோட்டும் கதகதப்பான கையுறைகளும் அணிந்து பெட்ரோவ்கா வீதிக்கு உலாவச் சென்றார். சனிக்கிழமை மாலை மாதாகோயில் மணியோசையைக் கேட்டதும், அண்மையில் முடிவுற்ற அவரது பயணமும் அவர் சென்றிருந்த இடங்களும் அவற்றின் கவர்ச்சியை அறவே இழந்து விட்டன. கொஞ்சங்கொஞ்சமாக அவர் மாஸ்கோ வாழ்க்கையில் மூழ்கலானார். தினந்தோறும் மூன்று செய்தியேடுகள் படித்தார், ஆனால் மாஸ்கோச் செய்தியேடுகளைப் படிப்பதில்லை என்பது தமது கோட்பா டென்று சொல்லிக் கொண்டார். ரெஸ்டாரெண்டுகள், கிளப்புகள், விருந்துகள், கொண்டாட்டங்கள் ஆகிய இந்த சுழல் திரும்பவும் அவரைத் தன்னுள் இழுத்துச் சென்றது. பெயர் பெற்ற வழக்கறிஞர்களும் நடிகர்களும் தமது வீட்டுக்கு வந்து செல்வது பற்றியும், மருத்துவர் கிளப்பில் தாம் ஒரு பேராசிரியருடன் சீட்டாடுவது பற்றியும் முன்பு போலவே பெருமைப்பட்டுக் கொண் டார்... இப்போது அவர் பாடு ஒரே வேட்டை தான்.... ஒரு மாதம் கழிந்ததும் ஆன்னா செர்கேயிவ்னாவின் 
நினைவு மங்கிவிடும், பரிதாபத்துக்குரிய அவளது புன்னகை யுடன், ஏனைய பல பெண்களைப் போல் கனவிலே மட்டும் எப்போதாவது காட்சி தருவாள் என்றுதான் கூரொவ் நினைத்தார். ஆனால் ஒரு மாதத்துக்கு மேல் கழிந்து; குளிர் காலம் அதன் உச்சத்தை அடைந்து விட்டது, அப் போதும் ஏதோ முந்திய நாள்தான் ஆன்னா செர்கேயிவ் னாவை விட்டுப் பிரிந்தது போல அவர் நினைவில் யாவும் பசுமையாயிருந்தன. அது மட்டுமல்ல, நாளாக ஆக இந்த நினைவுகள் அதிக வலிவடைந்து வந்தன. சந்தடி யற்ற மாலை நேரத்தில், பாடங் கற்கும் குழந்தைகளின் குரல்கள் அவரது படிப்பு அறைக்கு எட்டும் பொழுதும், ரெஸ்டாரெண்டில் அவர் பாட்டோ, ஆர்கன் வாத்திய இசையோ கேட்கும் பொழுதும், கணப்புப் புகைபோக் கியில் பனிப்புயல் இரையும் பொழுதும், கப்பல் துறையில் நடந்தவை, மலைகள் மீது மூடுபனி அடர்ந்த அதிகாலை, பியதோஸியாவிலிருந்து வரும் கப்பல், ஆசை முத்தங்கள் எல்லாம் சட்டென அவர் நினைவுக்கு வந்துவிடும். நிகழ்ந்த வற்றை எண்ணிப் பார்த்தவாறே அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடப்பார்; சிரிப்பார். அப்புறம் நினைவுகள் கனவுகளாக மாறும், நடந்தவை நடக்கப் போகிறவற் றுடன் கற்பனையில் கலந்துவிடும். ஆன்னா செர்கேயிவ்னா அவர் கனவில் தோன்றவில்லை, நிழல் போல எங்கும் அவர் பின் சென்றாள், எப்போதும் அவரைத் தொடர்ந் தாள். கண்களை அவர் மூட வேண்டியதுதான், உடனே உயிரோவியமாக எதிரே அவள் காட்சியளித்தாள், 
உண்மையிலிருந்ததை விட அதிக வனப்புடனும், அதிக இளமையுடனும், அதிக ஒயிலுடனும் தோன்றினாள். தம் மையும் அவர் யால்தாவில் இருந்ததைவிட நல்லவராக இருக்கக் கண்டார். மாலை வேளைகளில் புத்தக அலமாரி களிலிருந்தும், கணப்பிலிருந்தும், மூலையிலிருந்தும் அவள் எட்டிப்பார்த்தாள்; அவள் மூச்சு விடுவதும், அவளது ஆடை இனிமையாகச் சரசரப்பதும் அவர் காதில் விழுந் தன வீதியில் செல்லுங்கால் எல்லாப் பெண்களையும் விழிகளால் தொடர்ந்து, அவளைப் போன்றவள் யாராவது இருக்கிறாளா என்று தேடினார். 

தமது அனுபவங்களை யாரிடமாவது சொல்ல வேண்டு மென்ற அடங்கா ஆசை அவரை ஆட்கொண்டது. ஆனால் வீட்டில் காதலைப் பற்றிப் பேச முடியாது, வெளியே மனம் விட்டுப் பேச யாருமில்லை. குடியிருப்பவர் களிடமோ, வங்கியில் சக ஊழியர்களிடமோ சொல்வதற் கில்லை. தவிர, என்னத்தைச் சொல்வது? அப்போது அவர் காதலித்தாரா என்ன? ஆன்னா செர்கேயிவ்னாவுடன் அவருக்கு இருந்த உறவினில் எழிலார்ந்ததோ, கவிதை நயமுடையதோ, அறிவுறுத்துவதோ, அல்லது சுவை யானதோ கூட ஏதேனும் இருந்ததா? ஆகவே காதலைப் பற்றியும் பெண்களைப் பற்றியும் பொதுப்பட பேசுவ துடன் திருப்தியடைய வேண்டியிருந்தது. அவர் என்ன சொல்ல விரும்பினார் என்று யாருக்கும் விளங்கவில்லை. அவருடைய மனைவி மட்டும் கரும் புருவங்கள் துடிக்க, "இந்தா, திமீத்திரி, கோமாளி வேஷம் உனக்குக் கொஞ் சங்கூடப் பொருத்தமாய் இல்லை'' என்று சீறினாள். 
ஒரு நாள் இரவு மருத்துவர் கிளப்பில் சீட்டாடி விட்டு சக ஆட்டக்காரர்களில் ஒருவரான அரசாங்க அலுவல ருடன் சேர்ந்து புறப்படுகையில் அடக்க மாட்டாமல் கூரொவ் அவரிடம் கூறினார்: 
'யால்தாவிலே எவ்வளவு அற்புதமான பெண்ணுடன் எனக்குப் பரிச்சயம் ஏற்பட்டது தெரியுமா உங்களுக்கு?” அந்த அலுவலர் பேசாமல் சறுக்கு வண்டியில் ஏறி உட்கார்ந்த பின் சட்டெனத் திரும்பிக் கூப்பிட்டார்: 
"beத்ரி திமீத்ரிச்!” 
"" GT GOT GOT?", 

‘நீங்கள் சொன்னது சரிதான்: மீன் கறியில் கவிச்சு தான் அடித்தது!” 
சர்வசாதாரணமான விவரம்தான், ஏனோ கூரொவை இது கொதிப்புறச் செய்தது. அவமானப் படுத்துவதாய், அசிங்கமானதாய் அவருக்குப் பட்டது. எல்லாம் காட்டு மிராண்டி முறைகள்! மோசமான மனிதர்கள்! ஒன்றுக்கும் உதவாத மாலைப் பொழுதுகள்! உப்பு சப்பற்ற, வெறுமை யான பகல்கள்! வெறித்தனமான சீட்டாட்டம், வயிறு புடைக்க சாப்பாடு, மிதமிஞ்சிய குடி, ஒரே விஷயத்தைப் பற்றிய ஓயாத பேச்சு. பெரும் பகுதி நேரமும் சக்தியும் யாருக்கும் பயனில்லாத வீண் வேலைகளிலும் திரும்பத் திரும்ப ஒன்றையே விவாதிப்பதிலும் விரையமாகின்றன. றுதி விளைவு என்னவெனில் குறுகிச் சிறுத்து மண்ணிலே உளையும்படியான: கேவலமான வாழ்வுதான், புன்மை வாய்ந்த அற்பங்களில் சூழலுவதுதான். இதிலிருந்து தப்பியோடவும் வழியில்லை. பைத்தியக்கார மருத்துவ மனையிலோ, கைதிகளது குடியிருப்பிலோ அடைபட்டிருப் பது போன்ற நிலைமை! 
கூரொவ் இராத் தூக்கமின்றி ஆத்திரத்தால் கொதித்துக் கொண்டிருந்தார், மறு நாள் முழுதும் தலை வலி 
அவரை வருத்திற்று. அடுத்த இரவுகளிலும் சரி வரத் தூங்க முடியாமல் படுக்கையில் உட்கார்ந்து சிந்தித் தார்,இல்லையேல் அறையில் மேலுங் கீழுமாக நடைபோட் டார். குழந்தைகளைக் கண்டாலே கரித்தது, வங்கியை நினைத்ததுமே கசந்தது. எங்குமே போகப் பிடிக்கவில்லை, எதைப் பற்றியும் பேச விருப்பமில்லை. 
டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது அவர் பயணத்துக்கு ஆயத்தம் செய்தார். ஓர் இளைஞனின் காரியமாகப் பீட்டர்ஸ்பர்க் போவதாக மனைவியிடம் சொல்லிவிட்டு, எஸ். நகருக்குச் சென்றார். எதற்காக? அவருக்கே தெளிவாகத் தெரியவில்லை. ஆன்னா செர்கே யிவ்னாவைப் பார்த்துப் பேச வேண்டும், முடிந்தால் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது மட்டும் தான் தெரிந்தது. 
எஸ். நகருக்குக் காலையில் போய்ச் சேர்ந்து, ஹோட் டலில் யாவற்றிலும் சிறந்த அறையாகப் பார்த்து அமர்த்திக் கொண்டார். அறையில் தரை முழுவதும் இராணுவக் கம்பள விரிப்பிடப் பட்டிருந்தது; 
மேஜை மேல் தூசிபடிந்த மசிக்கூடு இருந்தது. உயர்த்திய கரத்தில் தொப்பியைப் பிடித்தவாறு குதிரைச் சவாரி செய்யும் தலையில்லா வீரனின் உருவம் இந்த மசிக்கூட்டை அலங்கரித்தது. ஹோட்டல் காவலாள் அவருக்கு வேண்டிய தகவல்களைத் தெரிவித்தான்: அதா வது, வான் திதெரித்ஸ் ஸ்தாரோ-கன்சார்நயா வீதியில் சொந்த வீட்டில் வசிப்பதாகவும், ஹோட்டலிலிருந்து வீடு தூரமில்லை என்றும், அவர் செல்வச் செழிப்புடன் வாழ் வதாகவும், சொந்தக் குதிரைகளும் வண்டியும் வைத்திருப்பதாகவும், ஊர் முழுவதும் அவரை அறியுமென்றும் சொன்னான். அவரது பெயரை த்ரீதீரித்ஸ் என உச்சரித் தான் காவலாள். 

கூரொவ் அவசரமின்றி நடந்து, ஸ்தாரோ-கன்சார் வீதிக்குச் சென்று வீட்டைத் தேடிப் பிடித்தார். அந்த வீட்டின் முன்பக்கத்தில் உச்சியில் கூராணிகளுடன் கூடிய நீளமான பழுப்பு நிற வேலியடைப்பு எழுப்பப்பட் டிருந்தது. 
சன்னலையும் வேலியடைப்பையும் மாறி மாறிப் பார்த்த கூரொவ், “இந்த மாதிரி வேலியடைப்பு எழுப் பினால் எவரும் தப்பி ஓடத்தான் விரும்புவர்” என்று நினைத்துக் கொண்டார். 
இன்று விடுமுறையாதலால் கணவர் அனேகமாய் வீட்டில்தான் இருப்பாரென கூரொவ் 
கூரொவ் சிந்திக்கலானார். இல்லாவிட்டாலும் இப்படித் திடுமென அவள் வீட்டிலே போய் நின்று அவளைச் சங்கடத்துக்கு உள்ளாக்குவது மதிகெட்ட செயல். குறிப்பு எழுதி அனுப்பலாம், ஆனால் அது கணவர் கைக்குப் போய்ச் சேருமாயின் பெருங் கேடுதான் விளையும். தக்க தருணம் வாய்க்கலாம், அவளைப் பார்க்கும்படி நேரலாம் என்று காத்திருப்பதுதான் நல்ல தென நினைத்தார். ஆகவே, தெருவில் மேலும் கீழுமாய் நடந்து வேலியடைப்பை நெருங்கியதும் நடையைத் தளர்த்திக் கொண்டு வாய்ப்பு கிட்டுமா என்று பார்த்த படிக் காத்திருந்தார். பிச்சைக்காரன் ஒருவன் வாயிலுக் குள் புகுந்ததையும் நாய்கள் அவனை விரட்டியடித்ததை யும் கண்டார். பிறகு ஒரு மணி நேரம் கழித்து, பியானோ இசையின் தெளிவற்ற மெல்லிய நாதங்கள் அவர் காதுக்கு எட்டின. வாசிப்பது ஆன்னா செர்கேயிவ்னாவாகத்தான் இருக்குமென நினைத்தார். முன்வாயிற் கதவு திடீரெனத் திறந்தது. யாரோ கிழவி வெளியே வந்தாள். அவள் பின்னால் ஓடி வந்தது அவர் நன்கு அறிந்திருந்த அந்த வெள்ளை நாய். கூரொவ் அதைக் கூப்பிடப் போனார், ஆனால் அவருக்கு நெஞ்சு படபடத்தது, மனக் கிளர்ச்சி அடைந்துவிட்ட அந்த நிலையில் நாயின் பெயர் அவர் நினைவுக்கு வரவில்லை. 

அவர் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார், அந்தப் பழுப்பு நிற வேலியடைப்பின் மீது அவருக்கு வெறுப்பு மேலும் மேலும் கடுமையாகியது. தம்மைப் பற்றி ஆன்னா செர்கேயிவ்னா மறந்து விட்டாள், பொழுது போக்குக்காக இதற்குள் வேறு ஆள் யாரையேனும் பிடித்துக் கொண்டிருப்பாள் என்று இப்பொழுது எரிச்ச லாய் நினைத்துக் கொண்டார். பொழுது விடிந்து பொழுது போனால் இந்தப் பாழாய்ப் போன வேலியடைப்பைப் பார்க்க வேண்டியுள்ள இளம் பெண் வேறு என்ன செய் வாள்? அவர் ஓட்டல் அறைக்குத் திரும்பினார், என்ன செய்வதென்று தெரியாமல் சிறிது நேரம் சோபாவில் உட்கார்ந்திருந்தார், பிறகு சாப்பாட்டை முடித்துக் கொண்டு, நெடுநேரம் உறங்கினார். 
அவர் கண்விழித்த போது மாலையாகி விட்டது. இரு ண்ட சன்னல்களை நோக்கியவாறு, 
‘அசட்டு வேலை, தொல்லை பிடித்தது!'' என்று தம்முள் கூறிக் கொண்டார். "எப்படியோ தூங்கித் தொலைத்து விட்டேன். இனி இராப் பொழுதை எப்படிக் கழிப்பது?'' 
மருத்துவமனைப் போர்வை போன்ற, மலிவான, 
சாம்பல் நிறக் கம்பளியைப் போர்த்திக் கொண்டு கட் டிலில் எழுந்து உட்கார்ந்து, சிடு சிடுப்புடன் தம்மைத் தாமே கடிந்து கொண்டார்: 
“நீயும் உன் நாய்க்காரச் சீமாட்டியும்!.. பிரமாதச் சாதனை தான்!.. பெரிதாய் ஓடி வந்தாயே, என்ன ஆயிற்று 
பார்!” 
காலையில் அவர் ரயில் நிலையத்தில் வந்து இறங்கிய போது, உள்ளூர் நாடக மன்றத்தில் “கெய்ஷா’” நாடகம் அன்று முதல் முறையாக நடிக்கப்படப் போவதாகக் கொட்டை எழுத்துக்களில் அறிவித்த விளம்பரத்தைக் கவனித்திருந்தார். இப்போது அது நினைவுக்கு வரவே, உடை மாற்றிக் கொண்டு நாடக மன்றத்துக்குப் புறப் பட்டார். 
“நாடகங்களின் 
முதல் இரவுக் காட்சிக்கு அவள் தவறாமல் வருகிறவளாய் இருக்கலாமே” என்று தம்முள் கூறிக் கொண்டார். 
நாடகமன்றம் நிறைந்திருந்தது. எல்லாச் சிற்றூர் மேல் புகை நாடகமன்றங்களைப் போலவே இங்கும் சரவிளக்குகளுக்கு மண்டியிருந்தது, சுற்று மாடியடுக்குகளில் இருந்தோர் அமைதியின்றி இரைந்து கொண்டிருந் தார்கள். முன்வரிசையில், ஆடம்பரமான உள்ளூர்ப் பெரிய மனிதர்கள் திரை எப்போது உயர்த்தப்படுமென்று 
திர்பார்த்தவாறு 
பின்பக்கம் கையை இணைத்துக் கொண்டு நின்றிருந்தார்கள். ஆளுநரது மாடத்தில் ஆளு நரின் மகள், மென்முடிக் கழுத்துச் சுற்றாடை அணிந்து முன்னிருக்கையில் வீற்றிருந்தாள்; ஆளுநர் அடக்கத்துடன் திரைச்சீலையின் மறைவில் அமர்ந்திருந்தார். அவருடைய கைகள் மட்டும்தான் வெளியே தெரிந்தன. மேடைத் திரை அசைந்தது, வாத்தியக் குழு நெடுநேரம் சுருதி சேர்த்துக் கொண்டிருந்தது. வரிசையாக எல்லாரும் உள்ளே வந்து இருக்கைகளில் அமர்ந்த போது கூரொவின் கண்கள் பரபரப்புடன் அவர்களைத் தூழாவிக் கொண் டிருந்தன. 

ஆன்னா செர்கேயிவ்னாவும் வந்தாள், மூன்றாவது வரிசையில் அமர்ந்து கொண்டாள். கூரொவின் கண்கள் அவளை வந்தடைந்ததும் அவருக்கு இதயம் வெடுக்கென நின்று விட்டது போலிருந்தது. உலகில் தமக்கு இவளைக் காட்டிலும் அன்புக்குரிய நெருங்கிய ஆத்மா யாரும் இல்லை, இவள் இல்லையேல் வாழ்வில் தமக்கு ஏதும் இல்லை என்பது அக்கணமே அவருக்குத் தெளிவா கியது. சிறு உருவாய் நகரத் திரளில் கண்ணுக்குத் தெரியாதபடி மறைந்து விடும்படியானவள், தனிச் சிறப்பு ஏதும் இல்லாதவளாய் அசட்டுக் காட்சிக் கண்ணாடியைக் கையில் 
பிடித்திருந்தவள்—இப்பொழுது இவள் அவ ருடைய வாழ்வு அனைத்துக்கும் மையமாகி விட்டாள். அவரது துன்பமும் இன்பமுமாகி, அவரது வாழ்வில் இனி அவளே எல்லாம் என்றல்லவா ஆகி விட்டாள். பக்குவ மடையாத கற்றுக்குட்டிப் பிடில்காரர்களையுடைய சோபையற்ற வாத்தியக் குழுவிடமிருந்து எழுந்த ஒலிகளைக் கேட்டு 
கேட்டு அயர்ந்தவாறு, இவ்வளவு அழகாய் ருக்கிறாளே என்று எண்ணினார்... எண்ணங்களிலும் கனவுகளிலும் மிதந்தார்... 
296 
ஆன்னா செர்கேயிவ்னாவுடன் கூட வந்தவர் பின்புறம் கவிந்த தோள்களையுடைய நெட்டையான இளைஞர்— சிறிய கிருதா வைத்திருந்தார், அடிக்கொரு தரம் தலையை ஆட்டியவாறு நடந்து வந்து அவளுக்குப் பக்கத்து இருக் கையில் அமர்ந்து கொண்டார், எந்நேரமும் யாருக்கோ சிரம் தாழ்த்தி வணக்கம் தெரிவிக்கிறாரென நினைக்கத் தோன்றியது. அவளது கணவராகவே இருக்க வேண்டும். முன்பு யால்தாவில் அவள் மனம் கசந்து, அடிவருடி என்று குறிப்பிட்டாளே அந்த ஆளாகவே இருக்க வேண் டும். மெய்தான், அவரது ஒல்லியான நெட்டை உருவிலும் கிருதாவிலும் உச்சந் தலையிலிருந்த சிறு வழுக்கையிலும் பணியாளுக்குரிய அடிவருடித்தனம் தென்படத்தான் செய் தது. அவர் முகத்தில் இனிப்பான புன்னகை பூத்திருந்தது, பணியாளது முறை உடுப்பிலுள்ள பணிச்சின்ன வில்லை 
யைப் போல் அவரது கோட்டின் மார்பில் ஏதோ ஒரு விஞ்ஞானக் கழகத்தின் பதக்கச் சின்னம். பளிச்சிட்டது. முதலாவது இடைவேளையின் போது கணவர் புகை பிடிப்பதற்காக வெளியே சென்றார். அவள் மட்டும் தனியே இருக்கையில் அமர்ந்திருந்தாள். சற்று பின்னால் உட்கார்ந்திருந்த கூரொவ் அவளிடம் சென்று, புன் னகையை வலிய வருவித்துக் கொண்டு நடுங்கும் குர லில், வணக்கம்” என்றார். 
அவள் நிமிர்ந்து அவரைப் பார்த்தாள், உடனே அவளுக்கு முகம் வெளிறி விட்டது. கலவரத்துடன் மறு படியும் அவரை உற்றுப் பார்த்தாள், அவளால் தன் கண்களை நம்ப முடியவில்லை. கையிலிருந்த காட்சிக் கண் ணாடியையும் விசிறியையும் இறுகப் பிடித்து நெரித்தாள், மூர்ச்சித்து விடாமல் இருக்கும் பொருட்டு அரும்பாடு பட்டாள் என்பது தெரிந்தது. இருவரும் மௌனமாயிருந் தார்கள். அவள் வீற்றிருந்தாள், அவளது குழப்பத்தைக் கண்டு மிரண்டு போன கூரொவ் அவளுக்குப் பக்கத்தில் உட்காரத் துணியாமல் நின்று கொண்டிருந்தார். சுருதி கூட்டப் பெற்ற பிடில்கள் புல்லாங் குழல்களுடன் சேர்ந்து இசைத்தன. ஒன்று புரியாமல் இருவரும் கலங்கினர், நாற் புறமிருந்தும் எல்லோரும் தங்களையே நோக்குவதாய் நினைத்தனர். முடிவில் அவள் எழுந்து வெளிச் செல்லும் வாயில் பக்கம் நடந்தாள், அவர் பின் தொடர்ந்தார். இருவரும் எங்கே போவது என்று தெரியாமல் நடைகளில் நடந்தார்கள், படிக்கட்டுகளில் ஏறி இறங்கினார்கள். நீதித் துறை அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், அரசாங்க அதிகாரிகள் ஆகியோருக்குரிய உடுப்புகள் அணிந்த வர்கள், பதக்கங்கள் பூண்டவர்கள், அவர்கள் முன் தோன்றி மறைந்தார்கள்; சீமாட்டிகள் பளிச்சிட்டுச் சென் றனர், மாட்டல்களில் தொங்கிய மென்முடிக் கோட் டுக்கள் கண் முன்னால் வந்து நின்ற பின் மறைந்து போயின, காற்று குப்பெனக் குளுமையாய் வீசியது, சிக ரெட்டுத் துண்டுகளின் வீச்சம் அதில் மிதந்து வந்தது. கூரொவுக்கு நெஞ்சின் படபடப்பு காதில் இரைந்தது. 
“அட கடவுளே! எதற்காக இங்கே இவர்கள் எல் லாரும்... எதற்காக இந்த வாத்தியக் குழு...." என்று வேதனையுடன் நினைத்தார். 
திடீரென அவருக்கு நினைவு வந்தது: அன்று யால்தா விலிருந்து ஆன்னா செர்கேயிவ்னாவை வழியனுப்பியதும் எல்லாம் முடிந்து விட்டது, இருவரும் இனி ஒருபோதும் சந்திக்கப் போவதில்லை என்று தமக்குள் சொல்லிக் கொண்டது நினைவு வந்தது. ஆனால் முடிவு இப்போது நெடுந் தொலைவுக்கு அப்பால் அல்லவா சென்று விட்டது! “மேல் வகுப்புக்குப் போகும் வழி” என்று குறிக்கப் பட்டிருந்த இருளடைந்த குறுகலான படிக்கட்டின் பக்கம் வந்ததும் அவள் நடையை நிறுத்தினாள். 

துணுக்குற்று மிரளச் செய்து விட்டீர்கள்!” என்று அவள் மூச்சு விட முடியாமல் திணறியவாறு சொன்னாள்; இன்னமும் கதிகலக்கம் அவளை விட்டு நீங்கவில்லை, முகம் வெளிறிட்டுதான் இருந்தது. 'ஐயோ, என்னைத் துணுக் குற்று மிரளச் செய்து விட்டீர்கள்! உயிரே போய் விட் டது! ஏன் இங்கே வந்தீர்கள்? ஐயோ, எதற்காக வந்தீர் கள்?'' என்றாள். 
'ஆன்னா, இதைக் கேள்” என்று தணிவான குரலில் பதற்றத்துடன் அவசரமாய் அவர் கூறினார். 
அவர் கூறினார். “ஆன்னா, தைக் கேள்... இதை நீ புரிந்து கொள்ள வேண்டும்... மன்றாடிக் கேட்கிறேன், புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்....' 

அவள் அச்சமும் மன்றாடலும் காதலும் கலந்த பார் வையை அவர் மீது பதித்தாள், பிறகு அவரது முகச் சாயலைத் தன் நினைவில் நிலையாக பதிய வைக்க முயலுவது போல் அப்படி அவரை அசங்காமல் உற்றுப் பார்த்தாள். 
“நான் பட்ட துன்பத்துக்கு அளவே இருக்காது”. அவரது பேச்சைக் காதில் வாங்கிக் கொள்ளாமலே அவள் தொடர்ந்து கூறினாள். “வேறு எதைப் பற்றியும் நினைக்க முடியாதவளாய் இத்தனை காலமும் 
காலமும் உங்களையே நினைத் திருந்தேன். உங்களைப் பற்றிய நினைவுகளில்தான் உயிர் வாழ்ந்து வந்திருக்கிறேன். யாவற்றையும் மறக்க வேண் டும் என்றுதான் எவ்வளவோ முயற்சி செய்து பார்த் தேன்—ஐயோ, நீங்கள் ஏன் இங்கே வந்தீர்கள்?'’ 
மேலே நடைவழியில் நின்று புகை பிடித்துக் கொண் டிருந்த உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் இருவர் கீழே பார்த்தார்கள். ஆனால் கூரொவ் எதையும் 
எதையும் லட்சியம் செய்யாமல் ஆன்னா செர்கேயிவ்னாவை அருகே இழுத்து அணைத்து மாறி மாறி முகத்திலும், கன்னங்களிலும், கரங் களிலும் முத்தமிட்டார். 

என்ன செய்கிறீர்கள், ஐயோ, என்ன செய்கிறீர் கள்?’’ என்று அவள் மெல்ல அவர் பிடியிலிருந்து விலகிக் கலவரத்துடன் கூறினாள். 'இருவரும் சித்தம் கலங்கியவர்கள் ஆகி விட்டோம். இன்றைக்கே திரும்பிப் போய் விடுங்கள், இந்தக் கணமே போய் விடுங்கள்... எல்லாத் தெய்வங்களின் பெயராலும் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்... யாரோ வருகிறார்கள்!'' என்றாள். 
கீழிருந்து யாரோ மாடிப்படியேறி வந்து கொண் டிருந்தார். 

“நீங்கள் போய் விடத்தான் வேண்டும்” என்று ஆன்னா செர்கேயிவ்னா இரகசியக் குரலில் தொடர்ந்து கூறினாள். 'காதில் விழுகிறதா, திமீத்ரி திமீத்ரிச்? நான் மாஸ்கோ வந்து உங்களைச் சந்திக்கிறேன். எந்நாளும் எனக்கு மகிழ்ச்சி இல்லை- இதுகாறும் இருந்ததில்லை, இப்போது இல்லவே இல்லை, இனிமேலும் இருக்கப் 
ருக்கப் போவதில்லை! ஆகவே என்னை மேலும் துன்புறுத்த வேண்டாம்! நிச்சயம் மாஸ்கோ வருவேன், உங்களைச் சந்திப்பேன்—ஆணையிட்டுச் சொல்கிறேன்! இப்போது நாம் பிரிந்தாக வேண்டும்! என் அன்பே, ஆருயிரே! நாம் விடை பெற்றுக் கொள்ளத்தான் வேண்டும்!” என மொழிந்தாள். 
அவர் கையைப் பிடித்துக் குலுக்கிவிட்டுப் படிக் கட்டில் அவள் வேகமாகக் கீழே இறங்கினாள், மீண்டும் மீண்டும் அவரைத் திரும்பிப் பார்த்துக் கொண்டாள். மெய்யாகவே அவள் துன்புற்றாள் என்பதை அவளது விழிகள் காட்டின. கூரொவ் சற்று நேரம் நின்று உற்றுக் கேட்டு விட்டு, சந்தடியெல்லாம் அடங்கிப் போனதும் அங்கிருந்து விலகி, மேல் கோட்டை வாங்கிப் போட்டுக் கொண்டு நாடகமன்றத்தை விட்டு வெளியே சென்றார். 

ஆன்னா செர்கேயிவ்னா மாஸ்கோவுக்கு வந்து அவரைச் சந்திக்கத் தொடங்கினாள். மாதர்நோய் நிபுணர் ஒரு வரைக் கலந்தாலோசிக்க வேண்டுமென்று கணவரிடம் கூறிவிட்டு, இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எஸ். நகரிலிருந்து புறப்பட்டு வந்தாள். அவள் கணவர் அதை நம்பவும் செய்தார், நம்பாமலும் இருந்தார். மாஸ்கோவில் எப்போதும் அவள் "ஸ்லாவ்யான்ஸ்கிய் பஜார்” ஓட்டலில் தங்கினாள். வந்திறங்கியதும் சிவப்புக் குல்லாய் அணிந்த ஓர் ஏவலாள் மூலம் கூரொவுக்குச் செய்தி சொல்லி அனுப்பினாள். கூரொவ் அந்த ஓட்ட லுக்குச் சென்று அவளைச் சந்திப்பது வழக்கம். மாஸ் கோவில் யாருக்கும் இது தெரியாது. 
குளிர்காலத்தில் ஒரு நாள் காலை கூரொவ் அவளைக் காணச் சென்றார் (முந்திய நாள் மாலை ஏவலாள் வந்த போது அவர் வீட்டிலில்லை). மகளுடைய உயர்நிலைப் பள்ளி யும் அந்த வழியில் இருந்ததால் அவளை அங்கே கொண்டு போய் விடலாமென்று தம்முடன் அழைத்துச் சென்றார். ஈரம் தோய்ந்த பெரும் திவலைகளாகப் வெண்பனி பெய்து கொண்டிருந்தது. 
"வெப்பநிலை மூன்று டிகிரியாக இருந்த போதிலும் பனி பெய்கிறது பார்' என்று மகளிடம் சொன்னார் கூரொவ். “இந்த வெப்பநிலை தரையருகே மட்டுந்தான், வாயு மண்டலத்தின் மேலடுக்குகளில் வெப்பநிலை வேறா யிருக்கும்.'' 

“அதிருக்கட்டும், அப்பா, குளிர்காலத்தில் இடி இடிப் பதில்லையே, ஏன்?'' என்று கேட்டாள் பெண். 
அவர் இதைப் பற்றியும் அவளுக்கு விளக்கினார். இவ் வாறு மகளுடன் பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில் அவர் வேறு விஷயங்களைப் பற்றிச் சிந்தனை செய்தார். தமது காதலுக்கு உரியவளைச் சந்திப்பதற்காகச் செல் வதையும், தமது இந்தக் காதல் வெளியே யாருக்கும் தெரியாததாய் இருப்பதையும், இனியும் அவ்வாறே இருக்கப் போவதையும் அவர் நினைத்துப் பார்த்தார். அவர் இரட்டை வாழ்க்கை வாழ்ந்து வந்தார்— 
ஒன்று எல்லார் கண்ணுக்கும் தெரியும்படியான பகிரங்க வாழ்க்கை, வழக்க வழியிலான உண்மையும் வழக்க வழி யிலான ஏமாற்றும் மிகுந்தது, அவரது நண்பர்களும் அவ ருக்குத் தெரிந்த ஏனைய எல்லாரும் வாழ்ந்து வந்ததற்கு முற்றிலும் ஒத்தது; இன்னொன்று மறைவில் நடைபெற்ற இரகசிய வாழ்க்கை. நிலைமைகளின் விபரீத இணைவின்— சந்தர்ப்பவசமான இணைவாகவும் இருக்கலாம்-காரண மாய், எவை எல்லாம் அவருக்கு முக்கியமாகவும் கருத் துக்கு, உரியனவாகவும் இன்றியமையாதனவாகவும் இருந் தனவோ, எவற்றில் அவர் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்ளாமல் உள்ளப் பூர்வமாய் ஈடுபட்டு வந்தாரோ, எவை அவரது வாழ்வின் உட்கருவாய் இருந்தனவோ அவை யாவும் வெளியே தெரியாதபடி இரகசியமாய் நடந்தேறின; அதே போது அவரிடமிருந்த பொய்மை யெல்லாம், தம்மையும் தம்மிடமிருந்த உண்மையையும் மூடி மறைத்துக் கொள்ள அவர் பயன்படுத்திக் கொண்ட வெளி வேடங்கள் எல்லாம்—உதாரணமாக வங்கியில் அவரது வேலை, கிளப்பில் அவரது விவாதங்கள், அவரது 'கீழ் இனத்தவர், ஆண்டு விழாக் கொண்டாட்டங் களுக்கு மனைவியுடன் கூட போய் வந்தது ஆகியவை எல் லாம்—மறைவின்றிப் பகிரங்கமாய் நடந்தேறின. தம் மையே அளவுகோலாகக் கொண்டு அவர் ஏனையோரையும் மதிப்பிட்டார்; கண்ணுக்குத் தெரிந்தவற்றை அவர் நம்பவில்லை, ஒவ்வொருவர் வாழ்விலும் மெய்யானவையும் சுவையானவையும் இருப்பவை, யாவும் வெளியே தெரி யாதபடி இரவின் இருட்டில் இரகசியமாக நடந்தேறுவ தாய் அனுமானித்துக் கொண்டார். ஒவ்வொரு ஆளின் வாழ்வும் மர்மத்தையே மையமாகக் கொண்டு சூழலு கிறது, அதனால் தான் தனிப்பட்ட சொந்த இரகசியங் களுக்குத் தக்க மதிப்பு அளிக்கப்பட வேண்டும் என்று பண்பட்டவர்கள் எல்லாரும் அப்படி வலுவாய் வற்புறுத்து கிறார்களோ, என்னமோ என்று அவர் நினைத்தார். 
மகளை உயர்நிலைப் பள்ளி வரை கொண்டுபோய் விட்டபின் கூரொவ் “ஸ்லாவ்யான்ஸ்கிய் பஜார்” ஓட்ட லுக்குச் சென்றார். முன் கூடத்தில் மேல் கோட்டைக் கழற்றிவைத்துவிட்டு, மாடிக்குச் சென்று, அறைக் கதவை மெல்லத் தட்டினார். ஆன்னா செர்கேயிவ்னா, அவருக்கு மிகவும் பிடித்தமான பழுப்பு நிற உடையணிந்திருந்தாள். பயணத்தாலும் பரபரப்பினாலும் களைத்து ஓய்ந்து போய், முந்திய நாள் மாலையிலிருந்தே அவரது வருகையை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தாள். அவள் முகம் வெளிறியிருந்தது, புன்னகை புரியாமலே அவரை உற்று நோக்கினாள். ஆயினும் அறைக்குள் அவர் வந்து சேர்வதற் குக்கூட அவகாசம் அளிக்காமல் பாய்ந்தோடி வந்து அவர் மார்போடு ஒட்டிக் கொண்டாள். பல ஆண்டுகளாகச் சந்திக்காதது போல் அப்படி நெடுநேரம் இதழ் பதித்து முத்தமிட்டுக் கொண்டார்கள். 
‘‘என்ன சேதி? எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டார் அவர். “புதிதாய் ஏதேனும் நடந்ததா?'' 
இதோ சொல்கிறேன்... ஒரு நிமிடம்... பேச முடிய வில்லை....'' 
அழுகை பீறிட்டுக் கொண்டுவந்ததால் அவளால் பேச முடியவில்லை. எதிர்ப் பக்கம் திரும்பி, கைக் குட்டையால் கண்களைத் துடைத்துக் கொண்டாள். 
‘துயரம் தீர அழுது நிம்மதியடையட்டும், காத்திருக் கலாம்” என்று நினைத்து, அவசரமின்றி அவர் சாய்வு நாற்காலியில் அமர்ந்தார். 
மணியடித்து அவர் தேநீர் கொண்டுவரச் சொன்னார். பிறகு அவர் தேநீர் அருந்திய போதும் சன்னலைப் பார்த்த படித்தான் அவள் நின்று கொண்டிருந்தாள்.... உணர்ச்சி மேலிட்டவளாய்க் கண்ணீர் வடித்தாள், இருவரது வாழ்க் கையும் சோகம் வாய்ந்ததாய் இருப்பதை நினைத்து உள்ளம் வெதும்பினாள். திருடர்களைப் போல் அல்லவா யார் கண்ணிலும் படாமல் இருவரும் இரகசியமாகச் சந்திக்க வேண்டியிருக்கிறது! இருவரது வாழ்க்கையும் பாழாகி விட்டதே! 
"வேண்டாம், அழாதே!'' என்றார் அவர். 
அவருக்குத் தெளிவாகவே தெரிந்தது- தம் இருவரது காதலும் விரைவில் முடிவடையப் போவதில்லை, இது எப்போது முடிவுறும் என்று யாராலும் சொல்வதற்கில்லை என்பது தெளிவாகவே தெரிந்தது. ஆன்னா செர்கேயிவ்னா வுக்கு அவர் மீது இருந்த காதல் நாளுக்கு நாள் மேலும் மேலும் ஆழமாகியே வந்தது, அவரை அவள் தனக்குரிய தெய்வமாகக் கொண்டிருந்தாள். அவளிடம் போய் இதெல்லாம் ஒரு நாள் முடிவடைந்தாக வேண்டுமென்று சொல்லிப் பயன் இல்லை. ஒருபோதும் அவள் நம்ப மாட்டாள். 
அருமையாய் அன்பு மொழிகள் சொல்லி அவளைத் தேற்றும் நோக்கத்துடன் கூரொவ் அவளிடம் சென்று அவளது தோள்களை அணைத்துப் பிடித்துக் கொண்ட போது திடுமென நிலைக் கண்ணாடியில் தமது உருவம் 
தெரியக் கண்டார். 
ஏற்கெனவே அவருக்குத் தலை நரைக்கத் தொடங்கி யிருந்தது, கடந்த சில ஆண்டுகளில் இப்படித் 
இப்படித் தாம் மூப்படைந்து விட்டதைக் கண்ட போது அவருக்கு வியப் பாய் இருந்தது. அவரது கைகளால் அணைக்கப்பட்டிருந்த அந்தத் தோள்களோ, கதகதப்புடன் துடித்தன. இன்னும் இளமைப் பூரிப்பும் எழிலும் வாய்ந்திருந்த இந்த ஜீவனுக் காக, விரைவில் தம்மைப் போலவே வாடி வதங்கவிருந்த இந்த ஜீவனுக்காக அவர் உள்ளம் கரைந்து உருகியது. அவள் எதற்காக இப்படி அவரைக் காதலிக்கிறாள்? பெண்கள் எப்போதுமே அவரை அவரது உண்மை வில் அல்லாமல் வேறொரு உருவில் கண்ணுற்று வந்தார் கள். அவர்கள் காதல் கொண்டது அவர் மீதல்ல; அவர் களது கற்பனையின் படைப்பான வேறொரு ஆளின் மீது, வாழ்நாள் முழுதும் அவர்கள் ஆர்வத்துடன் தேடிக் 
உரு கொண்டிருந்த அந்த ஆளின் மீது அவர்கள் காதல் கொண்டார்கள். அவர்கள் தங்களது தவறைக் கண்டு கொண்ட பின்னரும் அவர்கள் முன்பு போலவே தொடர்ந்து அவரைக் காதலித்தார்கள். அவர்களில் ஒருத் யாவது அவரால் இன்பமடைந்ததில்லை. காலம் கழிந்து சன்றது, அவர் வெவ்வேறு பெண்களையும் சந்தித்து நெருங்கிய உறவு கொண்டார், பிறகு பிரிந்து சென்றார். ஆனால் யார் மீதும் அவர் காதல் கொண்டதில்லை. அவர் களிடையே என்னென்னமோ இருந்தது, காதல் மட்டும் இருந்ததில்லை. 
இப்போதுதான், தலை நரைத்த பிறகு, வாழ்வின் முதன் முதல் மெய்யாகவும் முழுமையாகவும் காதல் 
கொண்டார். 
ஆன்னா செர்கேயிவ்னாவும் அவரும் ஒருவரை ஒருவர், நெருங்கிய, அத்யந்த முறையில், கணவரும் மனைவியும் போலக் காதலித்தனர், உயிருக்கு உயிரான நண்பர்கள் போல ஒருவரை ஒருவர் நேசித்தனர். இருவரும் ஒருவருக் காக ஒருவர் விதியால் திட்டமிடப்பட்டதாக அவர் களுக்குத் தோன்றியது. அவளுக்கு வேறொரு ஆள் கணவ ராகவும், அவருக்கு வேறொருத்தி மனைவியாகவும் இருந் தது ஏனென்று அவர்களுக்கு விளங்கவில்லை. பருவம் மாறியதும் மண்டலம் விட்டு மண்டலம் செல்லும் ஆணும் பெண்ணுமான இரு பறவைகளை யாரோ பிடித்துத் தனித் தனிக் கூண்டுகளில் அடைத்து விட்டது போன்றிருந்தது அவர்களது நிலைமை. கடந்த காலத்திலும் நிகழ் காலத் திலும் இருவரும் புரிந்த வெட்கத்துக்குரிய எல்லாத் தவறுகளையும் ஒருவருக்கு ஒருவர் மன்னித்துக் கொண்டு விட்டார்கள். இந்தக் காதல் இருவரையும் மாற்றி விட் டதை இருவரும் உணர்ந்தனர். 
முன்பெல்லாம் மனச் சோர்வு ஏற்பட்டதும் மனத் துக்குத் தோன்றிய எந்த நியாயத்தையும் கொண்டு அவர் தம்மைத் தேற்றிக் கொள்வது வழக்கம்; இப்பொழுது அவருக்கு இந்த நியாயங்கள் பொருளற்றவையாகி விட் டன; ஆழ்ந்த இரக்கம் அவரை உள்ளம் குழையச் செய்தது நேர்மை வாய்ந்தவராய், அன்பு மிக்கவராக இருக்க விரும்பினார்.... 

'அழாதே, என் கண்ணே. வேண்டிய மட்டும் அழுது விட்டாய், போதும்... வா, பேசுவோம், என்ன செய்வது என்று ஆலோசிப்போம்” என்றார். 
பிறகு அவர்கள் நெடுநேரம் கலந்தாலோசித்தார்கள். யார் கண்ணிலும் படாமல் மறைப்பதும் ஏமாற்றுவதும் வெவ்வேறு நகர்களில் வசிப்பதும் நெடுநாள் சந்திக்கா மலிருப்பதும் எல்லாம் தேவைப்படாதபடிச் செய்வது எப்படி, சகிக்க முடியாத இந்த விலங்குகளைத் தகர்ப்பது எப்படி என்று ஆலோசனை செய்தார்கள். 
தலையை இறுகப் பற்றியவாறு, “எப்படி? எப்படி? எப்படி?'' என்று திரும்பத் திரும்ப கேட்டார் கூரொவ். 
தீர்வு நெருங்கி வந்து விட்டது, இன்னும் இரண்டு விரற்கடையே பாக்கி, பிறகு வனப்பு மிக்க புது வாழ்வு ஆரம்பமாகி விடும் என்பதாகத் தோன்றியது. ஆனால் மறு கணமே, முடிவுக்கு இன்னும் நெடுந் தொலைவு இருக் கிறது, யாவற்றிலும் கடினமான, மிகச் சிக்கலான பகுதி இப்போதுதான் ஆரம்பமாகிறது என்பதை இருவரும் உணர்ந்தார்கள். 
1899

தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்