தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Monday, April 11, 2016

குளிப்பதற்கு முந்திய ஆறு - வண்ணதாசன்

 குளிப்பதற்கு முந்திய ஆறு - வண்ணதாசன்

https://ia600806.us.archive.org/24/items/orr-12216_Kulippatharku-Mundhiya-Aaru/orr-12216_Kulippatharku-Mundhiya-Aaru.pdf

'பியோ, சொல்வதைக் கேள் பியோ.. 

அப்புறம் போகலாம். நீயும் உன் வயலின் பெட்டியும் நனைய வேண்டாம்.

"பாதாளச்சாக்கடை துவாரம் திறந்திருக்கப் போகிறது. 

மேலே உடைகள் இன்றி அவள் எப்படிக் கீழே இறங்கி ஒட முடியும்? கதவை அவன் திறப்பதற்குள் எட்டிப்பிடித்தபோது, ஹவுஸ் கோட்டை அள்ளி முன் பக்கம் அனைத்துக் கொண்டாள். தடுப்புக்கு அடுத்த படுக்கையறையில் வர்ஷா படித்த பாடப் புத்தகத்துடன் தூங்கிக் கொண்டிருக்கிறாள். பதின்மூன்று வயதுக்குள் ஏற்கெனவே நிறையத் தெரிந்திருந்தாள். இன்னும் தெரியவேண்டாம். 

வர்ஷாவுக்கு அப்பாவை ரொம்பப் பிடிக்கும். பியோவிடம் அவள் அப்பாவைப் பற்றித்தான் நிறையப் பேசியிருப்பாள். அப்பாவுக்கு மழைபிடிக்குமாம். அவள் மழையாம். வர்ஷா பியோ அங்க்கிளிடம் சொல்வாள். இன்றைக்குக் காலையில் கூட வர்ஷாவும் நந்துவும் அம்மாவும் போய்க் கொண்டிருக்கையில்- 'அக்கா என்று யூனிபாரத்தைப் பிடித்து நந்துதான் இழுத்தான். நேரம் ஆயிட்டுது தம்பி என்று அம்மா மேலும் நடக்கையில், வர்ஷா பார்த்தாள். 

கோதண்ட ராமசாமி கோயில் பக்கம் விழுந்து கிடந்தது யார் என்று தெரிந்து விட்டது. கண்ணாடியைக் காணோம். நெற்றியிலும் மூக்கு எலும்பிலும் ரத்தம் கசிந்திருந்தது. முன் எப்போதோ இப்படி விழுந்து கிடக்கும் போதுதான் முன் பற்கள் போய்விட்டன. அடர்த்தியான மீசை உடைந்த பற்களை விகாரப் படுத்தியதே தவிர, மறைக்க வில்லை. மேலும் சாராய வாடை பேசும்போது இன்னும் அதிகமாகிறதையும் அது உண்டாக்கிவிட்டது.

சுந்தரிக்கு அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்க முடியவில்லை. இந்தத் தெருவும், பெருமாள்கோவிலும் இரண்டு பக்கமும் இடிபாடுகளுடன் சுற்றி இருக்கும் அபார்ட்மெண்டுகளுக்குச் சம்பந்தமில்லாமல் அதன் ஆதி முகத்துடன் இருப்பதை அவளால் தாங்க முடியாது. ஸ்டேஷனிலிருந்து அந்தத் தெரு வழியாகக் குறுக்கே நடந்தால், மிகச் சமீபத்தில் வீடு வந்துவிடும் எனினும் அவளால் அவசரம் நிறைந்த நேரங்களிலும்கூட அந்தத் தெருவில் நடக்க இயலாது. எந்த வகையிலும் தொடர்பில்லாத ஒரு தெரு எப்படி இப்படி ஒரு இம்சையை அவளுக்குள் உருவாக்கியிருக்க முடியும் என்று தெரியவில்லை. 

அம்மாவுக்கு அந்தத் தெரு மீது இருந்த மனநிலையை வர்ஷா புரிந்திருந்தாள் என்றே சொல்ல வேண்டும். ஆனால் நந்துவும் அவளும் மட்டும் வருகிறபோது அதன் வழியே வருகிறதற்குப் பழகியிருந்தாள். இந்தத் தெருவில்தான் நிறையக் கோலமிடுகிறார்கள். வர்ஷா ப்ளாட்டில் ஸ்டிக்கர் கோலம்தான். தளக்கல் மாதிரி எல்லார் வீட்டு முன்னாலும் அது. இந்தத் தெருவில் நிறைய ஒட்டு வீடு இருக்கிறது. போளி கிடைக்கும் என்ற போர்டிற்குக் கீழ் ஒரு பெரியவர் திண்ணையில் உட்கார்ந்து எப்போதும் விற்றுக் கொண்டிருப்பார். தெப்பக் குளம் சிதிலமாகிக் குப்பை மேடு ஆகிக்கொண்டிருக்கிறது. மழைபெய்து தேங்கிய தண்ணீரில் கோபுரம் அலம்புகிறது. காவிப் பட்டைகள் நெளிந்து தத்தளிக்கின்றன. அப்பாவும் இன்றைக்குத் தற்செயலாக அங்கேதான் கிடக்கிறார். 

அம்மா அந்த இடத்தை வழக்கத்திற்கு அதிகமான வேகத்துடன் கடந்தாள். இவளிடம் ஒன்றும் சொல்லாமல், நந்துவைப் பார்த்து, 'தம்பி, வேகமாக நட. நான் ஏற்கெனவே லேட் என்று துரிதப் படுத்தினாள். ஒரு சைக்கிள் ரிக்ஷா பிடித்து முகவரி சொன்னால்கூடக் கொண்டுபோய் விட்டுவிடுவான்தான். ஒரு நாளில் எத்தனையோ விதமான அகாலங்களில் அவன் அப்படிக் கொண்டுவிடப்படுவது புதிதல்ல. அவனுடைய பத்திரிகை அலுவலக நண்பர்கள், அவன் எழுத்தின் மீது மரியாதை உள்ள ஒவிய நண்பர்கள், பியோவைப் போல, அவனுடைய நாவல் ஒன்று படமாகத் துவங்கி வெவ்வேறு காரணங்களுக்காக நின்று விட்ட பிறகும் இன்னும் வந்து கொண்டிருக்கிற சினிமா உலக இளைஞர்கள் என்று ஏதோ ஒர் ரூபத்தில், வாகனத்தில் அவனை வீட்டில் கொண்டுவந்து சேர்த்துக் கொண்டுதாணிருக்கிறார்கள். 

பியோ முதல் முறை வந்தது அப்படி ஒரு நிலைமையில்தான். நடிப்பில் பெயர் வாங்கி, உயர்ந்த படங்களின் மீது கவனத்தைத் திருப்பத் துவங்கியிருந்த ஹரிபிரசாத்தும் பியோவும் இவனைத் தோளில் தாங்கிக் கொண்டிருந்தார்கள், சுந்தரி கதவைத் திறக்கும் போது.

அழைப்பு மணி அடிப்பதற்கு முன் நந்துவும் அவளும் மீன் தொட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பியோ, ஹரிபிரசாத், இந்த நிலைமையில் அப்பா யாரும் உள்வருவது நினைவின்றி நந்து மீன்தொட்டியையே பார்த்துக் கொண்டிருந்தான். கவனித்துக் கொள்ளுங்கள் என்று இவளிடமும், வருகிறேன், பியோ என்று இன்னொருவனிடமும் ஹரி பிரசாத் சொல்லி நகரும்போது, என் வயோலின் என்று கீழே ஒடிப் போனான். கார் கதவுகள் அடைக்கப்படுகிற சப்தம் சுந்தரிக்குப் பிடிக்கும். பியோதான் அவ்வளவு நுட்பமாக கார் கதவைச் சாத்தியிருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். தாவித் தாவி, இந்த இரண்டு தளங்களுக்குரிய படிக்கட்டில் மிகச்சுருக்கமான நேரத்தில் வரும்வரை சுந்தரி வாசலில் நின்றாள். நீண்ட அங்கி போன்ற இந்த உடுப்பைமேலும் தொய்வாக்குவதுபோல் மார்பு அடிவயிறு எல்லாம் திரள்வது போலானது அவளுக்கு, பியோ வயலின் பெட்டியைச் சாப்பாட்டு மேஜையை ஒட்டிய நாற்காலியில் வைத்தான். இவள் பெற்றுக் கொள்ளக் கையை நீட்டியபோது தரவில்லை. தராதது கூடப் பிடித்திருந்தது. நேராகப்போய் மீன்தொட்டிக்கு முன்னால் இருந்த நந்துவின் உச்சிச் சிகையைக் கலைத்தான். துங்கிவிட்டான் போல என்று அப்படியேதுக்கித் தடுப்புக்குள் போனான். கம்பி உருளையின் மேல் வளையங்கள் திரைச்சீலையோடு இழுபட பியோ வெளிவந்த விதம், ஒரு அரங்கத்தில் நுழைவது போல இருந்தது. ஹவிஸ்டன் பல்கலைக்கழகம் என்று ஆங்கிலத்தில் சிவப்பாக எழுதியிருந்த அந்த பனியனுடன் பியோ குனிந்து, இவரை இன்னும் செளகரியமாக எங்கே படுக்க வைக்கலாம்? என்று இவளுடைய முகத்தைப் பார்த்தான்.

அவளுடைய படுக்கையறையில் வர்ஷா தூங்கிக் கொண்டிருந்தாள். நாற்காலியில் அவள் களைந்திருந்த உள்ளாடைகள் தொங்கின. அவசரம் அவசரமாக அவற்றை அப்புறப்படுத்துகையில், 'கருப்பு உள்ளுடைகளின் காலம் என்று நந்துவின் அப்பா எழுதிய கவிதை வரிகளைப் பியோ சொன்னான். சொன்னபடியே கட்டிலுக்கு அருகில் விரித்த விரிப்பில் படுக்க வைத்தான்.

'நான் சற்று நேரம் மீன் தொட்டியின் அருகில் இருக்கிறேன். முடிந்தால் எனக்குக் கெட்டியான காப்பி கொடுங்கள். நிறையக்

கசப்பு, நிறையச் சர்க்கரை. பால் வேண்டாம் என்று சிரித்துவிட்டு, மீன்தொட்டி அருகில் இரண்டு கைகளுக்குள் முகம் தாங்கியபடி பியோ உட்கார்ந்தான்.

சுந்தரிக்கு மீண்டும் அந்த உணர்வு வந்தது. பீங்கான் கோப்பைகள் இரண்டைக் கழுவும்போது, கழுவுதொட்டிக் கண்ணாடியில் தன் முகம் தெரிந்தபோது பிடித்திருந்தது. கோப்பைகளைச் சற்று வைத்துவிட்டுக் குளியலறைக்குள் போய்க் கதவைச் சாத்தி உடையை முழுவதுமாகத் தளர்த்திக் கொண்டாள். கழிப்பறைப் பீங்கானில் பாச்சை மீசை ஆட்டியது. உபயோகிக்கவில்லை எனினும் கால்களில் இரண்டு குவளைதண்ணிர் ஊற்றினாள். ஆடைகளை மீண்டும் அணிய விருப்பமற்று இருந்தது எனினும், முன்போல மிகச் சீராக உடுத்தி, பீங்கான் கோப்பைகளை எடுத்துக் கொண்டு மிக உஷ்ணமாகக் காப்பி கலந்தாள்.

"பியோ காப்பி உனக்கு என்று நீட்டினாள். மீன் தொட்டியைப் பார்த்துக் கொண்டு இடது கையை மட்டும் நீட்ட, கையிலிருந்த கோப்பையை மறு கைக்கு மாற்றிக்கொண்டு, வெற்று விரல்களால், இல்லாத ஒரு கோப்பையைத் தருவதுபோல் நீட்டிக்கொண்டிருந்தாள். தட்டையான கைக்கடிகாரமும் சாக்லட் நிறப் பட்டியும் அணிந்த அவனுடைய நீண்ட விரல்களை அவளுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. 

நல்ல காப்பி என்று முதல் உறிஞ்சுதலிலேயே சொன்னான். 

'எல்லோரும் நினைத்துக் கொள்வதும் சொல்வதும் போல, நீங்கள் வாங்கிய இந்தக் குடியிருப்பு, இந்தத் தொலைக்காட்சிப் பெட்டி இந்த சாப்பாடு மேஜை மட்டுமா அவரை அலைக்கழிக்கும். 

பியோ மீன்களையே பார்த்துக் கொண்டிருந்தபடி கேட்டான். மீன்களைப் பார்த்தபடி கேட்பதற்கென்று சில கேள்விகளும், நேரில் முகத்தைப் பார்த்துக் கேட்பதற்கென்று சிலவும், எங்குமற்ற பார்வையுடன் மேலும் சில கேள்விகளும் அவனிடம் இருந்தன. 

அவருடைய சிறுவயதிலேயே அவரை அறிந்த, அவரால் மிகுந்து நேசிக்கப்பட்ட பெண் நீங்கள் என்று நான் அறிகிறேன். உறவினரும் கூட அல்லவா '

எல்லாவற்றையும். ஆமாம் எல்லாவற்றையுமே. உங்களிடம் அவர் சொல்லியிருக்கவும் கூடும். பியோ அவளையே பார்த்தான். அவள் பியோவைச் சந்தித்த பார்வையுடன் குனிந்தாள். பியோவின் கண்கள் பருமனாக வெளித்துருத்தி மிகத் தீர்க்கமாக இருந்தன. மேஜை நாற்காலி வேலைக்காரன் அல்ல என்ற உண்மையும் கனவும் அமைய இருந்தன. அவை.
எல்லாவற்றிலும் உண்மையாக இருப்பதுதான் இவரின் சிக்கல்1பியோ படுக்கை அறையைப் பார்த்தான். தடுப்புக்களின் வழியாக ஊடுருவி விட்டது போலவும், அடுத்த சொல்லைச் சொல்லுமுன் அதற்குத் தேவையான மூச்சை நந்துவின் அப்பாவிற்கருகில் இருந்து எடுத்துக் கொள்வது போலவும் இழுத்து நெஞ்சை நிரப்பியபடி கூரையைப் பார்த்தான். எழுந்திருந்து ஜன்னல் அருகில் போய் நின்றான். கடைசி மின்சார ரயில் போய் வெகுநேரம் ஆகியிருக்க வேண்டும். 

'நீங்கள் தண்டவாளங்களுக்கு மிக அருகில் இருக்கிறீர்கள். அலுவலகத்தில் தட்டெழுத்துச்சத்தம் போல, எதிர் எதிர் ரயில்களின் சப்தம்வீட்டில் உங்களுடன் இடையறாது கலந்திருக்க வேண்டும். 

சுந்தரி அவன் அருகில் இப்போது வந்திருந்தாள். அவனுடன் நெருக்கமாக நிற்பதற்காகவே இந்த ஜன்னல் பதிக்கப்பட்டதுபோலத் தோன்றியது. 

'உண்மையில் அது ரயில்களின் சத்தமல்ல. பிரயாணங்களின் சத்தம் - பியோ தூரத்தில் பார்த்துக் கொண்டிருந்தான். எதிர்த்த கட்டிடங்களில் ஆண்டெனா வரிசை மட்டும் தெரிந்தது. குளிருக்கு மத்தியில் நகரத்துச் சாக்கடை முழு வீச்சோடு புரண்டு நொதித்து வருவது போல இருந்தது. 

ஆணின் குறுக்கே ஆணும் பெண்ணின் குறுக்கே பெண்ணும், ஆணில் பெண்ணும் பெண்ணில் ஆணும் சதா குறுக்கிட்டு அப்பால் போகிற இந்த வாழ்க்கை என் தாத்தா பி. ஜே. ரோட்ரிக்ஸ் காலத்திலிருந்து அதற்கு முன்பே அப்படித்தானிருக்கிறது. என்பாட்டி ஆமாம் பாட்டி, சதா பாசிங்ஷோ சிகரெட் பிடிப்பாள். பாசிங்ஷோ அட்டைப் பெட்டியில் செய்த பொம்மை நாய்க் குட்டிகள் எங்கள் உறவினர் வீடுகளில் எல்லாம் தொங்கும். தாத்தாவுடன் கிருஷ்ணம்மாப் பாட்டி வீட்டிற்கு நான் போயிருக்கிறேன். அவர்கள் முத்தமிட்டுக் கொண்டது என் நல்ல ஞாபகங்களுள் ஒன்று." 

பியோ இவள் பக்கம் திரும்பினான். 

நீங்கள் தண்டவாளங்களை உற்று அறியுங்கள் அவை குறுக்கிட்டு இயல்பாக அப்பாற் சென்று விடுகின்றன. நான் எதையும் நியாயப் படுத்தவில்லை. அவர் கதை கவிதை எழுதுவதும், நான் வய்ோலின் வாசிப்பதும் உங்கள் நந்து மீன் தொட்டி வளர்ப்பதும் முன் தீர்மானிக்கப்பட்டதா? ஒன்றொன்று நகர்த்தி ஒன்றின் இடம் பிறிதொன்றாகிக் கொண்டிருக்கிறது. அவன் சொன்னதுபோல, குளிப்பதற்கு முந்திய ஆறும், குளித்த பிறகு ஆன ஆறும் ஒன்றல்ல."

பியோசொல்லச்சொல்லச்சுந்தரிக்குத்துக்கமாக இருந்தது. அவர் வேலையை விட்டிருக்க வேண்டாம். அவரின் ஆயிரத்து முந்நூறு ரூபாய் எனக்கு மிகப் பெரிய தொகை. மேலப்பாவூர் வடக்குக் கிராமத்துக்கும் இந்த அபார்ட்மெண்ட்ஸ் இரண்டாவது தளத்திற்கும் உள்ளதுரம் நிஜமாகவே எனக்குத்தான் தெரியும்.' 

வாழ்க்கை தூரம் சார்ந்தது. உயரம் சார்ந்தது என்பதை விட ஆழம்சார்ந்தது அல்லவா சுந்தரி- பியோ முதல் முறையாகப் பெயர் சொல்லும் போது இயல்பாக இருந்தது. ஜன்னலின் வெளிவிளிம்பில் இருக்கிற பூச்செடி ஒன்றின் பூவை வருடுவதற்குக் குனிந்த போதும், வயிறு எக்கி அதைத் தொட முயன்றபோதும் கனத்த கால்சராய் அணிந்த அவன் பின்னுடம்பு தன்மேல் அழுத்துவது பிடித்திருந்தது. 

சுந்தரி இன்றைக்கும் அந்த ஜன்னலருகே செல்லலாம்தான். பியோ இரண்டாம், முதல், கீழ்த்தளங்களில் இறங்கி ஒடுவது இந்த ஜன்னல் வழியாகத் தெரியாது ஹவுஸ்கோட்டை அணிந்து கொண்டே பரபரப்பாக பால்கனிக்கு ஓடிவந்த போது, பியோவுடன் இருக்கும் போதெல்லாம் அடிக்கிற வாடை இப்போதும் அடித்தது. ஏதோ பக்கத்துக் கட்டிடத்தில் வெள்ளையடிப்பது போன்ற பதநீரும் சுண்ணாம்பும் கலந்த அந்த வாடையை இந்த பால்கனி எப்போதும் தன்னுடன் வைத்திருப்பது போலிருந்தது. பூந்தொட்டிகளும் பூந்தொட்டிகளிலிருந்து வழிந்த மண் கரைசலுமாக இருக்கிற இந்த இடத்தில் பியோவுடன் படுத்திருந்தபோதுதான் முதல் முதல் சுந்தரிக்கு அந்த வாசம் பிடிபட்டது. 

மழை வினோதமான கூச்சலுடன் அடித்தது. திரைப் படங்களில் வருவது போல ஒரு காட்சியாக அது பால்கனியில் நின்று கொண்டிருந்த சுந்தரி மீது வாரிஅடித்தது. அந்தவாசனை நிரந்தரமாகக் கரைந்துவிடும் போலவும், பியோ இனி வரவே மாட்டான் என்றும் தோன்றியது. அபார்ட்மெண்ட்ஸின் இடதுபக்கமிருந்த படிக்கட்டு வழியாக இறங்கி ஒடித் திரும்பும்போது 'பியோ என்று ஓங்கிக் கூப்பிட்டாள். இங்கிருந்து கேட்கும்தான், கேட்காமல் சப்தத்தை மழை பொத்துகிறதோ என்னவோ. அம்பு போலக் குறுக்காக நிறுத்தப்பட்ட ஒரு சிவப்புக் காரைத் தாண்டி அவன் வாசல் கதவு நோக்கி ஓடிக் கொண்டிருந்தான். இரண்டு அகலமான கேட்களையும் திறந்து கொண்டு அவன் தனியாக இந்த இரவில் ஒடுவதைப் பார்க்கப் பெருந்துக்கம் அவளுக்குள் பெயர்ந்தது. 

இந்த உயரங்களில் அவள் அடைந்தது ஒன்றுமில்லை என்பது போல் பூந்தொட்டிகளின் இலைகளில் மழை விழுந்து சடசடத்துக் கொண்டிருந்தது. பியோ சப்-வே பக்கம் ஒடிக்கொண்டிருந்தான்.
ஆட்டோக்கள் ரயில்வே ஸ்டேஷன் பக்கம் நிற்கலாம். சுந்தரி குனிந்து கொண்டே இருந்தாள். 

காது கேட்காத தூரத்திற்கு அவன் போய்விட்ட பிறகும் நடைபாதையில் சிமெண்ட் பலகைகள் திறந்திருக்கும், ஜாக்கிரதை' என்று கத்தினாள். 

கீழே எங்கேயும் தண்ணிர் பெருகி ஓடிக்கொண்டிருந்தது. பள்ளத்தையும் சாய்வையும் நோக்கி அனைத்தும் சுழித்திறங்கிக் கொண்டிருந்தன. ரயில்வே ஸ்டேசன் பக்கமிருந்து வெற்றிலைச் சாறும், குஷ்டரோகிகளின் சீழும், பொம்மை செய்கிறவர்கள் கூடாரத்திலிருந்து வெள்ளைக் களிமண்ணும் கலந்து புரண்டுகொண்டு வருகின்றன. கார்ப்பரேஷன் பொதுக் கழிப்பிடத்திலிருந்தும் நடைபாதையிலிருந்தும் மலமும் நீரும் கலந்து, போக்குவரத்தற்ற பாதைகளில் சிந்தின எண்ணெயைப் பூசிக்கொண்டு ஒரு குழம்பு போல இறங்குகின்றன. பாலிதீன் ஜவ்வுத் தாள்களும் பைகளும் மிக மிகப்பெரிய கிழிந்த பாய்மரங்கள் போல அல்லாடிக் கொண்டிருக் கின்றன. முட்டை ஒடுகளும், பறவைச் சிறகுகளும் தண்ணீர்ச் சுழிப்பால் எறியப்பட்டுத் துடிக்கின்றன. கிழட்டுப் பிணமொன்று சாக்கடை ஒரமாகத் தடுக்கித் தடுக்கிச் சறுகிக் கொண்டே வருகிறது. கசம் போல ஒரு புள்ளிக்கு வந்து அனைத்தும் மத்து போலக் கடையப் பட்டுச் சுரங்கப் பாதைக்குள்ளும் பாலத்துக்கு அடியிலும் சாடுகின்றன.

“பியோ, உன்னிடம் நந்து அப்பாஇன்றுகாலை அலுவலகத்துக்குப் போகும்போது விழுந்து கிடந்தார் என்று சொன்னதுதான் தவறா? வர்ஷா உன்னிடம் சொன்ன பிறகே நான் சொன்னேன் என்பதுதான் உன் குற்றச்சாட்டா. ஒவ்வொரு முறையும் இப்படி ஏதாவது எனக்கேன் நிகழ்ந்துவிடுகிறது. பியோஉன்னுடன் மூன்று முறை நான் சந்தோஷமாக இருந்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் நீ சண்டைபோட்டுக் கொண்டுதானே ஒடிப்போகிறாய். எனக்கு ஏன் இப்படி எல்லாம் தப்புத்தப்பாக நிகழ்கின்றன. மிகச் சரியாக நிகழ்கிறது என்று நான் நினைக்கிறவினாடியே மிகத்தப்பாகிவிடுவது துர்ப்பாக்கியம் அல்லவா. உன்னிடம் வர்ஷா பழகிவிட்டாள். நந்துவின் மீன்கள் கூட நீ உட்கார்ந்ததும் உன்பக்கம் திரும்பி நீந்த ஆரம்பித்துவிட்டன. உன் வயலின் பெட்டியை வாங்கிக் கொள்வதற்காக என்றே அந்த நான்காவது நாற்காலியை ஒழித்து வைத்திருக்கிறேன். உன் இசையில் சிலிர்த்த தொட்டிச் செடிகள் இதோ. கடைசியில் நானும் உன் சிநேகிதியல்லவாபியோ. நந்து, நந்து அப்பா, வர்ஷா நான் இருக்க, நீ இசைத்த வயலின் இசை என்மார்புக் காம்பில் விம்மிக் கொண்டிருப்பது நீ அறிந்த ஒன்றுதானே.

சுந்தரி ஈரம் சொட்டச் சொட்ட பால்கனியில் நின்று கொண்டிருந்தாள். சற்று வெறித்து மறுபடியும் மழை அடித்து வீசத் தொடங்கியது. தண்டவாளங்கள் மினுங்கிக் குறுக்கிட்டு அப்பாற்சென்று தொலைந்து போய்க் கொண்டிருந்தன. பாலத்துக்கு அடியில் இருந்து ஊர்ந்து சுரங்கப்பாதைப் பக்கம் நகர்ந்து ஒரு சிறு வண்டு போல அந்த சைக்கிள்ரிக்ஷா, இந்த அபார்ட்மெண்ட் வாசலில் நின்றது. சைக்கிள் ரிக்ஷா ஒட்டுகிறவர் இறங்கி இரண்டு கதவுகளையும் அகலத் திறக்கிற குறைந்த நேரத்தில், விசிறி அலசுகிற ஈரத்துக்குள் அந்த ரிக்ஷா மட்டும் நிற்பது மேலிருந்து பார்க்கும் போது அபூர்வம் அடைந்தது. சுந்தரி பால்கனி விளிம்பை இறுகப் பற்றிக்கொண்டு குனிந்தாள். மறுபடியும் ஏறி மிதித்து வர அருகில் அருகில் அந்த ரிக்ஷா நகர்ந்தது. சமீபம் வந்து கொண்டிருந்தது.

ஒவ்வொரு வாகனமும் ஒவ்வொரு விதமாக இறங்கிக் கொள்ள அனுமதிக்கிறது. பியோ தன் தோளில் நந்துவின் அப்பாவைச் சாத்தியிருப்பது தெரிந்தது. அது திருப்பத்தில் திரும்பிப் படிக்கட்டு அருகில் வருவதற்குள் சுந்தரி கடைசித் தளத்தில் இறங்கிக் கொண்டிருந்தாள். ஒரு மடங்கலில் இன்னும் ஐந்தாறு படிகள்.

பியோவின் தோளில் நந்து அப்பா சாய்ந்து கொண்டு படிகளில் ஏறுவது அவரின் தோளில் பியோ சாய்ந்து கொண்டு ஏறுவது போலிருந்தது.

'வயலின் பெட்டி, பியோ? - மேலிருந்து சுந்தரி கேட்கும்போது, நந்து அப்பா கையைத் ,க்கினார்.

பெட்டியும் சற்று நனைந்திருந்தது.

காலச்சுவடு - ஆண்டுமலர் 1991
--------------------------------------------------------------------------------------------------------------
 http://selvanayaki.blogspot.in/2006_08_01_archive.html

 "அன்புமிக்க ஆன்ந்தன்,

வணக்கம்.

உங்களுடைய கடிதமும் சிருஷ்டியும்.

அடுத்த சிருஷ்டிக்கு என்னுடைய கவிதைகள் சில இத்துடன் அனுப்பியிருக்கிறேன். அக்டோபருக்கும், டிசம்பருக்கும் மத்தியில் நிறையக் கவிதைகள் எழுதினேன். 'மூன்றாவது" என்று மானசீகத் தலைப்பிட்டுவைத்திருக்கிற அந்த நாற்பது பக்கங்களை எங்கோ வைத்துவிட்டு அதை எழுதிய முதல் படிவத்திலிருந்து இதைப் பிரதி செய்து அனுப்புகிறேன். அப்போதுதான் ஈன்ற பசுங்கன்றுக்குட்டியைவிட மூன்றுநாள் சீம்பால் குடித்துத் துள்ளுகிற கன்றுக்குட்டி அழகாக இருக்கும். நக்கி நக்கிச் சுத்தம் பண்ணுகிற தாய்ப் பசுவைப் போல மனம் எத்தனையோ முறை ஈன்று புறந்தந்துகொண்டே இருக்கிறது.

'குளிப்பதற்கு முந்திய ஆறு' எழுதியதற்காக இப்போதுகூடச் சந்தோஷப்படுகிறேன். உங்கள் கண்முன் தாண்டுகிற உயரம் உயரமல்ல. உங்கள்

கண்முன் செதுக்குகிற சிற்பம் சிற்பமல்ல. உங்கள் செவிகளை நிறைப்பது மட்டும் இசைமையின் உச்சமல்ல. நான் வரந்த ஓவியத்தையும் தாண்டி ஒன்றை வரையவே ஒவ்வொருமுறையும் பிரஷ்ஷை எடுக்கிறேன். என் இம்சையைத் தாங்கமுடியாது திரச்சீலைகள் விம்முவதை நான் மட்டுமே அறிவேன். நான் அறியாத வசீகரங்களை, என் விரல்களுக்கு அப்பாற்பட்டு திரைச்சீலை எனக்குத் தரமுயல்கிற நேரங்களும் எனக்குண்டு. 


வாசிக்கிறவனை வீணை மீட்டத் துவங்குகிற நேரம் அபூர்வமானது. இசையின் கொடுமுடிகளைத் தொடப் பிரயாசைப்பட்டு அடையும்போது இசையே இன்னும் சில சிகரங்களுக்குப் பாடகனை நகர்த்தும்.

இந்த வாழ்வின், இந்த மனிதர்களின் மத்தியில் ஒரு அந்தரத்தராசு சதா தொங்கிக்கொண்டிருக்கிறது. இதில் ஆணும் பெண்ணும் துல்லியப்பட்டுச் சமஎடையில் நில்லாமல், தாழ்ந்தும் உயர்ந்தும் சீசா விளையாடிக்கொண்டிருக்கிரார்கள். இந்தச் சமன் புரிந்துவிட்டால் வாழ்வு ரம்மியமானது. இந்த ரம்மியமான இடத்தைச் சிறிதாவது எழுதிப்பார்க்க வேண்டும்.

குளிப்பதற்கு முந்திய ஆறும் குளித்த பிறகான ஆறும் மட்டும் வேறுவேறு அல்ல. நீங்கள் பார்க்கிற ஆறும், நான் பார்க்கிற ஆறுமே வேறுவேறு.

எல்லோர்க்கும் அன்புடன், கல்யாணி சி. "