தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Wednesday, April 13, 2016

மஞ்சள் பூ - ஜூலியோ கொர்த்தஸார்

மஞ்சள் பூ - ஜூலியோ கொர்த்தஸார்
• www.tamilarangam.net

தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்

Yellow Flower by Julio Cortazar
தமிழாக்கம் : கால சுப்ரமணியம்

உன்னதம் ஆகஸ்ட் - செப் 2001

நாம் அழிவற்றவர்கள். பரிகாசமாக இது தொனிக்கும் என்பது எனக்குத் தெரியும். எதனால் எனக்குத் தெரியும் என்று சொல்கிறேனென்றால், இங்கே அழியக்கூடியவர்கள் மட்டுமே இருந்து வருவது எனக்குத் தெரிந்ததுதான். ஆனால் இந்த விதிக்கு மாறானவரையும் நான் சந்தித்திருக்கிறேன். ரூகேம்ரோன்னியிலுள்ள ஒரு மதுபானக் கடையில் வைத்து அவர் தனது இந்தக் கதையை எனக்குச் சொன்னார். உண்மையைச் சொல்லுதல் தன்னைத் தொந்தரவு செய்யாத விதத்தில் போதுமான அளவுக்கு அவர் குடித்திருந்தார். அந்த மதுபானக்கடையின் மேற்பார்வையாளர் (அதன் சொந்தக்காரர்) மற்றும் கெளண்டரில் அப்போதிருந்த வாடிக்கையாளர்கள், தங்கள் விழிகளிலிருந்து ஒயின் தெறித்து விழும்படி மிக உரத்துச் சிரித்துக் களித்துக் கொண்டிருந்தனர். எனது முகத்திலிருந்த ஆர்வத்தின் மினுங்கல் ஒன்றை அவர் கண்டிருக்கவேண்டும் - என்னை நோக்கி அவர் சீராக அலைந்து இறங்கினார். குடிப்பதற்கும் சாவகாசமாய்ப் பேசுவதற்குமான ஒரு மூலையில் இருந்த மேஜையில் நாங்கள் ஒருவரை ஒருவர் உபசரித்துக் கொள்வதில் இது முடிந்தது. தான் ஒரு ஒய்வுபெற்ற நகர்புற உத்தியோகஸ்தர் என்றும் அவரது மனைவி அவரை விட்டு நீங்கிவிட்டது எல்லாருக்கும் தெரியும் வகையில் பேரளவுக்கு வழியமைத்தவளாய் கோடைகாலத்துக்காகத் தனது பெற்றோரிடம் திரும்ப போய்விட்டாள் என்றும் அவர் என்னிடம் சொன்னார். குறிப்பிடத் தக்க வகையில் வயதானராகவோ, கண்டிப்பாக அசட்டுத்தனம் நிறைந்தவராகவோ இல்லாமல் ஒரு வித வறண்ட பாவ முகத்துடன் விழுங்குகின்ற கண்களுடன் விசித்திரமானவராக அவர் விளங்கினார். நேர்மையாகச் சொல்லப்போனால், மறப்பதற்காக அவர் குடித்துக் கொண்டிருந்தார். அந்த உண்மையை நாங்கள் ஐந்தாவது கிளாஸ் சிவப்பு மதுவை அருந்தத் தொடங்கும் சமயத்தில் அவர் வெளிப்படுத்தினார். ஆனால் எங்களை போன்ற அந்நிய தேசத்தவர் மட்டும் புலனறியக் கூடிய விதத்தில், பாரிசின் முத்திரையாக விளங்கும் இந்த பாரிஸ் வாசனை அவரிடமிருந்து வீசவில்லை. மேலும் அவரது நகங்கள் நறுவிசாக அவற்றின் அடியில் துளி அழுக்குமில்லாமல் கத்தரிக்கப்பட்டிருந்தன.

 95 எண் பஸ்ஸில் இந்தக் குழந்தையை எவ்வாறு தான் கண்டார் என்பதை அவர் சொன்னார். ஒ. பதிமூன்று வயதுள்ள அவனைப் பார்த்த உடனே, அந்தப் பையன் சரியாகத் தன்னைப் போலவே இருப்பது தெரிந்தது. தன்னை அந்த வயதில் அவர் நினைவு படுத்திக்கொண்டு பார்த்தபோது, அது ஒரு வசிய மந்திரமாக அவரைக் கட்டிப் போட்டது. முகம், கைகள், நெற்றியில் கற்றை மயிர் அலட்சியமாக விழுந்து கிடப்பது, அதிக இடைவெளிவிட்டுக் கண்கள் அமைந்திருப்பது  இவற்றைவிட அதிகமாக அவனது வெட்கம், சிறுகதைப் பத்திரிக்கையில் அவன் மூழ்கியிருந்த தோரணை, தனது தலைமுடியை மீண்டும் பழையபடி ஒதுக்கிவிடும் தலையசைப்பு, அவனது அசைவுகளில் தெரியும் அநாதவரான நிம்மதியற்ற தன்மைகள் எல்லாமே முழுக்கத் தன்னைப் போலவே அந்தப் பையனுக்கு இருப்பதை அவர் கொஞ்சம் கொஞ்சமாகத் தொடர்ந்து பார்த்துத் தெரிந்து கொண்டார். சத்தமிட்டு அவர் சிரித்துவிடக் கூடிய வகையில் அந்தச் சாயல்கள் மிகச்சரியாக இருந்தன. ஆனால் அந்தப்பையன் ரூ டி ரென்னஸில் கீழிறங்கிய போது, மாந்த் பார்நாஸில் அவருக்காகக் காத்திருக்கும் நண்பரை அங்கேயே மறந்துவிட்டு அவரும் இறங்கி விட்டார். அந்தக் குழந்தையுடன் பேசக்கூடிய ஏதாவதொரு வாய்ப்பை உருவாக்கக் கருதி, ஒரு குறிப்பிட்ட தெருவுக்கான வழியை அவர் கேட்டார். ஆச்சரியப்படாமல், ஒரு காலத்தில் அவருக்கச் சொந்தமாயிருந்த அதே குரலில் அவன் பதிலளித்ததைக் கேட்டார். அந்தக் குழந்தையும் அந்தக் தெருவரைக்கும்தான் செல்கிறான் என்பதால் இருவரும் சேர்ந்தே பல கட்டிடங்களைச் சங்கோசத்தோடு நடந்து கடந்தார்கள். அந்த இறுக்கமான தருணத்தில், ஒருவகை அருள் ஆவேசம் அவரை ஆட்கொண்டது. ஒரு விளக்கம் அல்ல அது, ஆனால் விளக்கத்தை ஒதுக்கிவிடக் கூடிய ஒன்று. அதை விளக்க முனையும்போது இப்போது போலவே உளறலாகவும் அசட்டுத்தனமாகவும் ஆகக் கூடியது. 

நீண்ட கதையைச் சுருக்கிச் சொல்லப்போனால் அந்தக் குழந்தை எங்கே வசிக்கிறான் என்பதைக் கண்டு பிடிக்கக்கூடிய வழியை அவர் கண்டடைந்தார். சாரண ஆசிரியராகக் கொஞ்ச காலம் செலவளித்த கெளவரத்தால், கோட்டைகளின் கோட்டையாக விளங்கிய அந்தப் பிரஞ்சு வீட்டுக்குள் நுழையும் அநுமதியையும் பெற்றார். வழக்கத்தை விட வயதானவளாகத் தோன்றிய தாய், ஒய்வுபெற்ற மாமா, இரு பூனைகள் என்று அங்கே சோகத்தின் ஒரு ஒழுங்கைக் கண்டார். அதன்பிறகு ஒன்றும் கஷ்டப்பட வேண்டியிருக்கவில்லை. அவரது சகோதரர் பதினான்கு வயதாகப்போகும் தனது மகனை அவரை நம்பி ஒப்படைத்திருந்ததால், இந்த இரு பையன்களும் நண்பர்களாகிவிட்டனர். லூக்கின் வீட்டுக்கு அவர் ஒவ்வொரு வாரமும் செல்லத் தொடங்கினார். அந்தத் தாய் அவருக்கு சூடுபடுத்திய காப்பியைக் கொடுத்து உபசரிக்க, யுத்தத்தைப் பற்றி, வேலையைப் பற்றி, லூக்கைப் பற்றியும் கூட அவர்கள் பேசிக்கொண்டார்கள். சும்மா ஒரு அருள் வெளிப்பாடு போலத் தொடங்கியது இப்போது வரைகணிதச் சூத்திரம் போல, விதி என்று ஜனங்கள் வழக்கமாக அழைப்பதன் வடிவத்தைக் கொண்டதாக வளர்ந்து விட்டது. இதுபோக அன்றாட வார்த்தைகளில் அதை இப்படிச் சொல்லலாம். லூக் மீண்டும் அவராகினான். அழிவு என்பதே இல்லை. நாம் எல்லோரும் அழிவற்றவர்கள். 

"எல்லோரும் அழிவற்றவர்கள், பெரியவரே, ஒருவராலும் இதை நிரூபிக்க முடிந்ததில்லை. ஆனால் அது எனக்கு ஒரு 95 எண் பஸ்ஸில் நிகழ்ந்தது. இந்த இயக்கவியலில் சில சிறிய ஒழுங்கின்மைகள் இருக்கலாம். - எளிதில் முறியக்கூடியதும் காலத்தின் பின்னோக்கிய இரட்டித்த வேகமுடையதுமாக - அதாவது, ஒன்றின் மேலொன்றானதாக, மறு உருச்சேர்க்கை அவதாரமாக, தொடர்ச்சித் தன்மைக்குப் பதிலாகச் சமாந்தரத் தன்மையுடையதாக அவை இருக்கலாம். நான் இறப்பதற்கு முன்பாக லூக் பிறந்திருக்கவே கூடாது. இன்னொரு வகையில் பார்த்தால், நான். அந்த நகர்ப்புற பஸ்ஸில் அவனைச் சந்தித்த அதிசய விபத்தைப் பற்றிப் பொருட்படுத்தத் தேவையேயில்லை. இது வார்த்தைகள் தேவையற்ற ஒரு வகை முழுமுற்றான தீர்மானகரம் என்பதை நான் முன்னதாகவே உங்களுக்குச் சொல்லியிருப்பதாகவே நினைக்கிறேன். அது அப்படித்தான், அத்தோடு அது முடிந்துவிட்டது. ஆனால் சந்தேகங்கள் பிறகுதான் கிளம்புகின்றன. ஏனென்றால் இந்த வகை விஷயத்தில், ஒன்று, நீங்கள் ஒரு சித்த பிரமை உள்ளவர் என்றோ அல்லது, மயக்க மருந்து உட்கொள்ள ஆரம்பித்து விட்டீர்கள் என்றோதான்நினைப்பீர்கள். சந்தேகங்களைப் பொறுத்தவரை நீங்கள் ஒவ்வொன்றாக அவற்றைக் கொன்று தள்ளுங்கள். நீங்கள் பைத்தியமல்ல என்பதற்கான சான்றுகள் வரத் தொடங்கும். சமயாசமயங்களில் நான் இதுபற்றிச் சில விஷயங்களைச் சொல்லும்போது, சரிதான், இப்போது உங்களிடம் சொல்லுவதைப் போன்று கூறும்போது, அந்த போதை மீறியவர்கள் உரத்துச் சிரிக்கத்தான் செய்வார்கள். லூக், இன்னொரு காலத்துக்கான நான் அல்ல, அவன் என்னைப்போலவே ஆகப்போகிறான், உங்களிடம் பேசிக் கொண்டிருக்கும் இந்தத் துக்கம் பீடித்த நாய்க்குப் பிறந்தவனைப் போலவே ஆகப்போகிறான். விளையாடும்போது நீங்கள் அவனைப் பார்த்திருக்க வேண்டும், சும்மா கவனித்திருந்தாலே போதும், அவன் எப்போதுமே கீழே விழுந்தெழுந்து தன்னைக் காயப்படுத்திக் கொண்டு, கால் சுளுக்கிக் கொண்டோ, அல்லது காறை எலும்புகளை முறித்துக் கொண்டோ, அவமான உணர்ச்சியால் முகம் சிவக்க, முனகலை வெளிக்காட்டிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். பயங்கரமாக வெட்கப்பட்டல்லாமல் அவனால் எதையும் கேட்க முடியாது. இதற்கு மறுதலையாக, அவனது தாய் உங்களிடம் எதைப் பற்றியும் பேசுவாள், அந்தக் குழந்தை அங்கே அவமானத்துடன் நெளிந்து கொண்டு நின்றிருக்க, எல்லாவற்றையும், மிக ஆச்சரியகரமானவற்றை, அந்தரங்கமானவற்றை, தனிப்பட்டவற்றை.... அவனது பால் பற்களைப் பற்றிய துணுக்குக் கதைகளை, எட்டு வயதில் இருந்தபோது அவன் வரைந்த படங்களை, நோய்களை.....பேசுவாள். அவள் பேசுவதில் விருப்பமுடையவள். அந்த நல்ல பெண்மணி எதையும் சந்தேகிக்கவேயில்லை - அது உறுதியாகத் தெரியும். மாமா என்னுடன் செஸ் விளையாடினார். நான் குடும்பத்தில் ஒருவனாகி மாசக் கடைசியைக் கடத்த அவர்களுக்கு பணம் கூட கடன் கொடுத்தேன். இல்லை, லூக்கின் சரிதம் பற்றி அறிவது - சம்பாஷனைகளின்போது அவனது மூத்தோரின் ஆவலைத் துண்டும் கேள்விகளுக்கு நகர்த்திச் செல்வது எளிதாகவே இருந்தது. மாமாவின் கீல்வாதம், அரசியல், சுமை தூக்குவோரின் பணத்தாசை, உங்களுக்கே தெரியும். இவை போன்ற சம்பாஷணைகள். எனவே பிஷப் எனது ராஜாவுக்கு செக் சொல்வதற்கிடையிலும், கறி விலை பற்றிய தீவிர விவாதத்தின்போதும் லூக்கின் குழந்தைப் பருவம் பற்றி நான் அறிந்தவை அவனுக்குச் சான்றுகளாகக் குவிந்து மறுக்க முடியாத ஆதாரங்களாக மாறின. ஆனால் நீங்கள் என்னை நன்றாக புரிந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறேன் - இதற்கிடையில் நாம் இன்னொரு கிளாஸ் குடிப்போம். லூக்கேதான் நான். நான் குழந்தையாக எப்படி இருந்தேனோ அதுபோல. ஆனால் மிகச்சரியான பிரதியாக நான் அவனைக் கருதவில்லை - ஒப்புமைகள் காட்டும் விஷயத்துக்கு மேல் போகவேண்டும், புரிகிறதா? நான் ஏழு வயது இருக்கும்போது எனது மணிக்கட்டு பிசகிவிட்டது, லூக்குக்கு அது காறை எலும்பு. ஒன்பதில் எனக்கு ஜெர்மன் தட்டம்மை, அவனுக்கோ செங்காய்ச்சல். தட்டம்மை போக இருவாரங்களாயிற்று, லூக் ஐந்து நாட்களில் குணமடைந்தான். நல்லது, உங்களுக்கே தெரியும், விஞ்ஞானத்தின் முன்னடி வைப்புகள் பற்றி - முழு விஷயமும் திரும்ப நிகழ்ந்தது. எனவே ஒரு விதத்தில் சரியாகக் குறிக்கக் கூடிய வேறொரு உதாரணத்தைப் பார்ப்போம். அந்த மூலையில் உள்ள பேக்கரிக் கடைக்காரன் நெப்போலியனின் மறுபிறவி. அவனுக்கு அது தெரியாது என்பதால் விதிமுறை மாறவில்லை. நான் சொல்வது என்னவென்றால், அவனால் ஒரு நகர பஸ்ஸில் உண்மையான நபரைச் சந்திக்க முடிந்ததில்லை. ஆனால் அந்த வகையிலோ, வேறு வகையிலோ அவன் உண்மையை உணர்ந்திருப்பானேயானால், அவன் ஒரு மறுநிகழ்வு என்பதை அவன் புரிந்துகொள்ள முடிந்திருந்தால், நெப்போலியனை இப்போதும் திரும்ப நிகழ்த்துதலானது, தட்டுக்கழுவுபவனாயிருப்பதிலிருந்து மாந்த் பார்நாஸில் அமைந்த கெளரவமான ஒரு பேக்கரியின் சொந்தக்காரனாக நகர்ச்சி பெற்றிருத்தல், கார்ஸிகாவிலிருந்து பிரான்ஸின் அரியணைக்குத் தாவிய அதே திட்டவரைதான் என்பதும், அவனது வாழ்க்கைக் கதையினுள் அவனால் போதுமான ஜாக்கிரதையுடன் தோண்டி எடுக்க முடிந்தால், எகிப்திய படையெடுப்பு, அயல்நாட்டுத் துதரகம், ஆஸ்டர்லிட்ஜ் ஆகியவற்றைத் தொடர்பு படுத்தக்கூடிய தருணங்களையும் அவனால் கண்டுபிடிக்க முடியும். மேலும் அவனது பேக்கரிக்கு இன்னும் வருடங்களில் ஏதோ நிகழ உள்ளது என்பதையும் கூட அவனால் கணிக்கமுடியும். செயின்ட் ஹெலனாவில் இறுதி பெறுவதாக இருப்பது, சொல்லப்போனால் ஓர் ஆறாவது தளத்திலுள்ள ஏதாவது ஒர் அலங்கரிப்பட்ட அறையில் நடைபோடுவதாக இருக்கலாம். மாபெரும் தோல்வி அது இல்லையா? தனிமை என்ற நீரால் சூழப்பட்டு, இன்னும் கூட அந்த பேக்கரியினால் கர்வம் உடையவனாய், பருந்துகளின் பறத்தலை ஒத்து அவன் நடைபோடலாம் - புரிந்துகொண்டீர்களா?" 

நல்லது, நான் இதைச் சரியாகவே எடுத்துக்கொண்டேன் என்றாலும், நாம் எல்லோரும் குழந்தைப் பருவத்து நோய்களை அந்தந்தக் காலங்களில் பெற்றுவிடுகிறோம் என்றும், கால்பந்து விளையாடும் போது, ஏறக்குறைய நாம் எல்லோருமே எதையாவது முறித்துக் கொள்கிறோம் என்றும் எண்ணினேன்.

"வழக்கமான, யதேச்சையாய் ஒத்துப்போகும் சம்பவங்களை வெளிப்படையாகத் தெரிவதைத் தவிர வேறு எவற்றையும் நான் இங்கு குறிப்பிடவில்லை என்று எனக்குத் தெரியும். உதாரணமாக, லூக் என்னைப் போலவே இருப்பதுகூட பெரிதாக முக்கியத்துவமுடையதல்ல - அந்த பஸ்ஸில் நிகழ்ந்த அற்புத வெளிப்பாட்டை நீங்கள் உள்வாங்கிக்கொள்ள கூடியவராய் இருந்தாலும் கூட - உண்மையில் எது கணக்கில் வைக்கக் கூடியதோ அது - நிகழ்ச்சிகளின் தொடர் வரிசை, பாத்திர வார்ப்பு, பொருத்தமான ஞாபகங்கள், குழந்தைப் பருவ புராணிகங்கள் என்று பலவும் தொடர்பு கொள்வதால் - அதை விளக்குவது கடினமாகவே உள்ளது. அந்தச் சமயத்தில், அதாவது நான் லூக்கின் வயசில் இருந்த போது, விட்டுவிட்டு அடிக்கடி வரக்கூடிய நோய்களின் துவக்கத்தால், நான் மிக மோசமான காலகட்டத்தைக் கடத்த வேண்டியிருந்தது. வியாதிலிருந்து தேறி வரும் ஒரு காலத்தில், சரியாக அதன் மத்தியில், சில நண்பர்களுடன் விளையாடியதில் என் கை உடைந்து விட்டது. அது சரியானவுடன், பள்ளியில் என்னோடு நெருக்கமாயிருந்த சிநேகிதனின் சகோதிரியுடன் நான் காதலில் விழுந்தேன். கடவுளே, அது வலி நிறைந்தது. ஒரு பெண்ணின் கண்களை நீங்கள் ஏறெடுத்துப் பார்த்தால் போதும், உடனே அவள் உங்களைக் கேலி செய்ய ஆரம்பித்து விடுவாள். லூக்கும் நோயில் விழுந்து, அதிலிருந்து அவன் நலமடையத் தொடங்கியபோது அவர்கள் அவனை ஒரு சர்க்கஸுக்கு இட்டுச் செல்ல, அங்கே மலிவுவிலைத் திறந்த இருக்கைகள் நோக்கிக் கீழிறங்கும் போது அவன் தடுக்கிவிழந்து, விலா எலும்பு விலகிவிட்டது. அதற்குச் சற்றே அடுத்து ஒருநாள் பிற்பகல், தனது கைகளில் ஒரு சிறிய நீல நிறக் கர்சீப்பைப் பிசைந்து கொண்டு, ஜன்னலருகில் நின்று அவன் அழுது கொண்டிருப்பதைத் தற்செயலாக அவனது தாயார் பார்த்து விட்டாள். அந்தக் கர்சீப்பை அதற்குமுன் அவள் பார்த்ததேயில்லை."

ஒருவராவது சாத்தானின் வக்கீலாக இருக்கவேண்டும் என்று நினைத்து, அந்தக் குழந்தைக் காதல் என்பது, சிராய்ப்புகள், எலும்பு முறிவுகள், ப்ளு யூரிஸி போன்றவற்றுக்குப் பின் தவிர்க்க முடியாமல் தொடர்ந்து வரும் ஒரு நிலை என்று நான் குறிப்பிட்டு வைத்தேன். ஆனால் அந்த ஆகாய விமானம் பற்றி விஷயம் ஒரு மாறுபட்ட காரியம்தான் என்பதை நான் ஒத்துக் கொண்டேன். பிறந்த நாளுக்காக அவன் பெற்ற ரப்பர் பட்டையினால் இயங்கும் புரப்பெலர் கொண்ட ஆகாய விமானம்.

"அதை அவன் பெற்ற போது, நான் பதினான்கு வயதாயிருந்தபோது என் தாயார் எனக்குக் கொடுத்த பரிசான ஏரக்டர் செட் பற்றியும் அதற்கு என்ன நேர்ந்தது என்பதும் நினைவுக்கு வந்தது. கோடைகாலப் புயல் வீசத் தயாராகி, இடியானது-முழங்கத்-தொடங்கியதை முன்னதாகக் கேட்கத் கூடியதாயிருக்கும் எதார்த்தத்தையும் மீறி, நான் வெளியே தோட்டத்தில் இருந்தபோது அது நிகழ்ந்தது. வீதியை நோக்கிய கேட்டருகில் மரக்குடிசையின் கீழுள்ள மேஜையின் மேல், பளுவைத் துக்கப் பயன்படும் டெரிக்கைச் சேர்த்து வைத்து அப்போதுதான் நான் விளையாடத் தொடங்கியிருந்தேன். வீட்டிலிருந்து யாரோ கூப்பிடவே, நான் ஒரு நிமிடம் உள்ளே போய்வர வேண்டிவந்தது. நான் திரும்பி வந்த போது, பெட்டியும் எரக்டர் செட்டும் காணாமல் போய், கேட் பரக்கத் திறந்து கிடந்தது. அலறியடித்துக் கொண்டு அசட்டுத் துணிச்சலுடன் வெளியே வீதிக்கு பாய்ந்து ஓடினேன். அங்கே ஒருவரும் தென்படவில்லை. அந்தச் சமயத்தில் வீதிக்கு மறுபுறமிருந்த வீட்டை மின்னலின் வீச்சொன்று தாக்கியது. இவையெல்லாம் ஒரு கணத்துள் சட்டென்று நிகழ்ந்துவிட்டன. லூக் இந்த விமானத்தைப் பெற்றபோது, இதையெல்லாம் நான் நினைத்துக்கொண்டேன். எனது எரக்டர் செட்டை நான் எப்படிக் கண்களால் விழுங்கினேனோ அதே சந்தோஷத்தோடு அவனும் அதைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். அவனது தாயார் எனக்கு ஒரு கப் காப்பி கொண்டு வந்தாள். அந்தக் கூச்சலை நாங்கள் கேட்டபோது, வாடிக்கையாகிப் போன வார்த்தைகளை நாங்கள் பரிமாறிக்கொண்டு நின்றிருந்தோம். லூக் ஜன்னலை நோக்கி, அதற்கு வெளியே குதித்து விடுபவன் போல ஓடினான். அவனது முகம் வெளுத்து, கண்கள் பெருகி வழிய, அந்த விமானம் அதன் விசை உந்தலில் செல்லவேண்டிய திசைமாறி வளைந்து போய், கொஞ்சமாகத் திறந்திருந்த ஜன்னலின் சிறிய இடைவெளி வழியே சரியாகப் புகுந்து போய்விட்டது என்று வாய்குளறலாகச் சொல்லவே அவனால் முடிந்தது. அதை நாம் மீண்டும் கண்டுபிடிக்கவே முடியாது, நாம் மீண்டும் அதைச் கண்டுபிடிக்கவே முடியாது என்று அவன் திரும்பத் திரும்பப் புலம்பினான். கீழ்த்தளத்திலிருந்து ஒரு கூச்சலை நாங்கள் கேட்டபோதும், அவனது மாமா ஓடிவந்து வீதிக்கு மறுபுறம் உள்ள வீடு தீப்பிடித்துவிட்ட செய்திச் சொன்னபோதும் அவன் தேம்பிக் கொண்டிருந்தேன். இப்போது புரிகிறதா? சரி, இன்னொரு கிளாஸ் குடித்தால் நான்றாக இருக்கும்."

இதன்பிறகு நான் ஒன்றும் பேசாமிலிருந்ததால், அந்த மனிதர் தொடர்ந்தார். லுக்கைப் பற்றி, லூக்கின் விதியைப் பற்றி அவர் பிரத்யேகமாகச் சிந்திக்கத் தொடங்கினார். நல்ல விதமாக அவனது எதிர்காலம் அமையும் என்று, அவனது வாழ்வின் பாதை' என்று அவள் குறிப்பிட்டச் சொல்லிவந்த, தொழிற்கல்விப் பள்ளிக்கு அவனை அனுப்ப அவனது தாயார் முடிவு செய்தாள். ஆனால் பாதை முன்னதாகவே திறந்திருந்தது. அவர் மட்டுமே, தனது வாய்திறந்து பேசமுடியாத நிலையில், பேசினால் அவரைப் பைத்தியம் என்று அவர்கள் நினைத்து, ஒட்டுமொத்தமாக லுக்கிடமிருந்து பிரித்துவைத்து விடுவார்கள் என்பதால், தாயாரிடமும் மாமாவிட்மும் எதனாலும் எந்தவிதத்திலும் ஒருவித உபயோகமும் இல்லை என்றும், எதை அவர்கள் செய்ய முடிந்தாலும் முடிவு அதேவிதமாகத்தான் இருக்கும் என்றும் சொல்ல முடிந்திருந்தாலும் - அவமதிப்பு, சவத்தனமான அன்றாடக் காரியக்கிரமம், மாறுதலற்றுச் சலிப்பூட்டும் வருடங்கள், ஆடைகளையும் ஆன்மாவையும் தொடந்து கரண்டித் துப்பக்கூடிய விபரீதமான நாசங்கள், மனக்கசப்பின் தனிமையில் அடைக்கலம் கொள்ளல், சில உள்ளுர் பிஸ்ரோக்களில். என்று அதேவிதமாகத்தான் வாழ்க்கை இருந்திருக்கும். ஆனால் லுக்கின் தலைவிதி அவ்வளவு மோசமாய்ப் போய்விடவில்லை, அவனுக்கு வாய்த்த நேரத்தில் அவன் செத்துப் போனான் என்பதுதான் இதில் மோசமானது. இன்னொரு மனிதன், லூக்கின் வகைமாதிரியையும் தனது சொந்த வகைமாதிரியையும் தான் சாகும் வரை திரும்ப வாழ்ந்து தீர்க்க, இன்னொரு மனிதன் இந்தச் சக்கர வட்டத்துள் தன் முறைக்காக நுழைவான். ஏறக்குறைய இதற்குள் லூக் அவருக்கு முக்கியமில்லாதவனாய் ஆகிவிட்டான். இரவுகளில் அவரது துக்கமின்மை வியாதியானது, அந்த மற்றொரு லுக்குக்கும் அப்பால், ராபர்ட் அல்லது கிளாட் அல்லது மைக்கேல் என்றவித பெயர்களாயிருக்கப் போகிற மற்றவர்களை, முடிவிலியின் நீட்டிப்புக் கோட்பாட்டை இதையெல்லாம் அறியாமலேயே, தமது சக்தியினதும் தேர்ந்தெடுப்பினதும் சுதந்திரத்தில் உறுதிப்பெற்ற, அப்பாவிகளின் முடிவற்ற வரிசை, இந்த வகைமாதிரியைத் திரும்ப நிகழ்த்துவதை வரைபடமிட்டுக்கொண்டிருந்தது. அந்த மனிதர் தனது பியரின்மேல் அழுது கொண்டிருந்தார். இந்த விஷயத்தில் அது ஒயினாக மட்டுமே இருந்தது, இதற்காக என்ன செய்ய முடியும், ஒன்றுமே இல்லை.

 "அவர்கள் புரிந்து கொள்வதில் மிக முட்டாள்களாயிருந்ததால், சில மாதங்களுக்குப்பின் லூக் இறந்தபோது, நான் இதையெல்லாம் அவர்களுக்கு சொன்னதற்கு இப்போது அவர்கள் என்னைப் பார்த்து சிரிக்கிறார்கள். ஆம், என்னை இப்போது அந்தமாதிரி பார்க்கத் தொடங்கிவிடாதீர்கள். அவன் ஒருசில மாதங்களுக்குப்பின் இறந்தான். ஒருவகை மார்ச்சளி நோயான பிராங்கைடிஸ் மாதிரிதான் அது தொடங்கியது - அதே வயதில் எனக்குக் கல்லீரல் வீக்கத்தொற்று வந்து வாய்த்தது போலவே, என்னை அவர்கள் மருத்துவ மனையில் வைத்தார்கள். ஆனால் லுக்கின் தாயார், அவனை தனது பாதுகாப்பில் வீட்டிலேயே தானே பராமரிப்பதாக வற்புறுத்தி வைத்துக்கொண்டாள். ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் அங்கு சென்றேன். சில சமயங்களில் எனது சகோதரனின் மகனையும் லுக்குடன் விளையாடுவதற்காகக் கூட்டிச்சென்றேன். அந்த வீட்டில் போதுமான அளவு சோகம் நிறைந்திருந்ததால் எனது வருகைகள், லூக்குக்குத் துணை, ஹெர்ரிங் மீன் வற்றல் பொட்டலம் அல்லது டமாஸ்கஸ் டார்ட் என்று எல்லாமே ஆறுதலளிப்பதாய்த்தானிருந்தன. எனக்கு ஒரு மருந்துக் கடையில் தனிப்பட்ட தள்ளுபடியுடன் கொடுப்பார்கள் என்று குறிப்பிட்டுச் சொன்னதன் பிறகு, மருந்துகளை வாங்கும் பொறுப்பையும் நான் பெற்றுக்கொண்டேன். லூக்கின் நர்ஸ் போன்று என்னை அவர்கள் அனுமதிக்கும்படி வியூகம் வளைக்க முடிந்தது.

இந்த மாதிரி விஷயத்தில் இது எப்படி இருக்குமென்று நீங்களே கற்பனை செய்துகொள்ளலாம் - ஒரு டாக்டர் உள்ளே வந்து எந்தத் தனித்த அக்கறையுமில்லாமல் வெளியேறும் ஒரு இடத்தில் - நோயை அறிந்த முதல் முறையிலிருந்து இறுதி நோய்க்குறிகள் எந்த விதத்தில் பொருந்தியிருக்கின்றன என்பதில் யாரும் பெரிதாக அக்கறை எடுத்துக்கொள்ளாத நிலையில்... எதற்காக என்னை நீங்கள் அப்படி பார்க்கிறீர்கள், நான் எதாவது தவறாகச் சொல்லி விட்டேனா?" 

இல்லையில்லை. அவர் ஒயினில் தகுந்த அளவு மூழ்கிக்கிடந்தாலும் எதையும் தவறுதலாகச் சொல்லி விடவில்லை. மாறாக, 95 எண் பஸ்ஸில் தொடங்கிய அற்புதம், அமைதியாகச் செத்துக் கொண்டிருக்கும் ஒரு குழந்தையின் படுக்கை அருகில் முடிந்ததை, ஏதாவது வேண்டாத பயங்கரத்தை கற்பனை செய்யாமல், போதுமான அளவு கற்பனை செய்யமுடிந்த யாருக்கும், அந்த அப்பாவி லூக்கின் மரணம் அதை உறுதி செய்வதாகவே தோன்றும். தவறாக ஏதும் அவர் சொல்லிவிடவில்லை என்று நான் அவரை அமைதிப்படுத்தினேன். மீண்டும் கதையைத் தொடர்வதற்கு முன், மந்திரத்தால் கட்டுண்டவர் போல ஆகாயத்தைப் பார்த்தபடி இருந்துவிட்டு பின் கூறத்தொடங்கினார். 

"ரொம்பச் சரி, நீங்கள் எப்படி நினைத்தாலும் சரி. உண்மை என்னவெனில், இறுதிச் சடங்கையடுத்த சில வாரங்களில் சந்தோஷம் என்ற விதமான ஒன்று என்னைக் கடந்து போயிருப்பதை முதன் முறையாக நான் உணர்ந்தேன் என்பதுதான். நான் இன்னும் அவ்வப்போது ஏதாவது ஒரு முறை லூக்கின் தாயாரைப் போய் பார்த்து வந்தேன், தின்பண்டப் பொட்டலத்தையும் கூட எடுத்துச் சென்றேன். ஆனால் அவளும் சரி, அந்த வீட்டார் எவரும் சரி, எனக்கு இப்போது எந்த அர்த்தத்தையும் தரவில்லை. அழியக்கூடிய முதல் மனிதனாக, நிச்சயத்தின் அற்புதம் என்ற நீரால் சூழப்பட்டவனாக எனது வாழ்க்கை தொடர்ந்து இற்றுவிழக்கூடியது என்ற உணர்வுடன், நாளுக்குநாள், ஒயினுக்கு ஒயின், இறுதியாக ஏதாவது ஒரு இடத்திலோ மற்றொன்றிலோ, ஒரு சமயத்திலோ மறு சமயத்திலோ அது முடிந்து விடும் என்ற உணர்வுடன், யாரோ பெயர் தெரியாது இறந்துபோன மனிதனின் தலைவிதியின் இறுதி முடிவு வரை திரும்பத் திரும்பச் சென்று, என்னைத்தவிர யாருக்குமே என்று அல்லது யார் என்று தெரியாமல், உண்மையில் நான் செத்துப்போகவே வாழ்ந்துகொண்டிருக்க முட்டாள் தனமான வாழ்வைத் திரும்பத் திரும்ப நிகழ்த்தும் முட்டாள்த்தனத்தின் சக்கரவட்டத்துள் இறங்கிவிட எந்த லூக்காலும் முடியாது என்பது போன்றவற்றால் சூழப்பட்டவனாக நான் இருந்தேன்." 

எனவே அது முடிந்துவிட்டதாகத் தோன்றவில்லை. நாங்களிருந்த பிஸ்ட்ரோவும் அந்த மலிவு விலை ஒயினும், உடம்பிலில்லாத ஜூர வேகத்தில் மினுங்கிய அந்தக் கண்களும் அதை உறுதிப்படுத்தின. எது எப்படியானாலும் அவர் மேலும் சில மாதங்களை வாழ்ந்தார். அவரது வாழ்வின் அன்றாட அற்பத்தின் ஒவ்வொரு தருணத்தையும் சுவைத்தபடி, அவரது திருமண முறிவை, அவரது ஐம்பது வருடங்களின் அழிவை, அழிவின் அந்நியமான உறுதிப்பாட்டை அனுபவித்தபடி வாழ்ந்தார். ஒரு நாள் பிற்பகல் லக்ஸம்பர்க் தோட்டத்தைக் கடந்து செல்லும்போது, ஒரு மலரை அவர் பார்த்தார். 

"மலர்ப்படுகையின் ஒரு பக்கத்தில் அது இருந்தது. வெறும் சாதாரண ஒரு மஞ்சள் பூ சிகரெட் பற்றவைக்க நான் நின்றபோது, எனது பார்வையில் இடற, நான் அதைப் பார்க்க வேண்டியதாயிற்று. சின்னதாயிருந்தாலும் அந்தப் பூவும் என்னை நோக்கிக் கொண்டிருந்தது. உங்களுக்கே தெரியும், இந்த விதமான தகவல் பரிமாற்றம், எப்போதாவது ஒரு முறை. நான் என்ன பேசிக் கொண்டிருக்கிறேன் என்ற எனக்கு தெரிகிறது. ஒவ்வொருவரும் அழகு என்று அவர்கள் அழைப்பதை அதில் உணரலாம். அது அப்படித்தானிருந்தது, அந்தப் பூ அழகாயிருந்தது, அது மிகவும் நேர்த்தியான ஒரு பூ நான் சபிக்கப்பட்டவன், ஒரு நாள் நான் என்றைக்குமாகச் சாகப்போகிறேன். அந்தப் பூ வசீகரமாக இருந்தது. மனிதர்களுக்கு எதிர்காலத்திலும் பூக்கள் எப்போதும் இருக்கும். சடாரென்று நான் இன்மையை அறிந்தேன். இன்மைத்துவத்தைத்தான் நான் சொல்கிறேன்; இன்மை - அது சாந்தம் என்று நினைத்தேன். அது சங்கிலியின் இறுதிக்கண்ணி. நான் செத்துவிடப் போகிறேன், லூக் முன்பே இறந்துபோயாகிவிட்டது, ஒருவருக்கும் மீண்டும் எங்களுக்குப் போன்று இந்தப் பூ இருக்கப் போவதில்லை. பற்றவைத்த தீக்குச்சி என் விரல்களைத் தீய்த்தது. வலித்தது. அடுத்த திருப்பத்தில் , சென்றுகொண்டிருந்த பஸ்ஸில் தாவி ஏறினேன். அது எங்கே போகிறது என்பது முக்கியமில்லை, அது எங்கேயாவது போகட்டும். நான் முட்டாள்தனமாகச் சுற்றிலும் பார்த்தேன். எல்லாவற்றையும் பார்த்தேன், வீதியில் நீங்கள் பார்க்கக்கூடிய ஒவ்வொன்றையும் பஸ்ஸிலிருந்த ஒவ்வொருவரையும் பார்த்தேன், எனக்கு எதுவும் தெரியவில்லை. வழியின் முடிவை அடைந்ததும் நான் இறங்கி, புறநகர்ப்புறங்களுக்குப் போகும் இன்னொரு பஸ்ஸில் ஏறிக்கொண்டேன். பிற்பகல் முழுதும், இரவு கவியும் வரை நான் பஸ்களில் ஏறி இறங்கினேன். அந்தப் பூவை, லூக்கை, நினைத்துக் கொண்டிருந்தேன். லூக்கைப் போல் தோற்றம் தரக்கூடிய யாராவது ஒருவரை அந்தப் பயணிகள் மத்தியில் தேடிக் கொண்டிருந்தேன். என்னையோ, லூக்கையே போன்று தோன்றக் கூடிய யாரோ ஒருவரை, மீண்டும் நானாக மாறக்கூடிய ஒருவரை, நான்தானது என்று பார்த்தவுடனே நான் தெரிந்து கொள்ளக் கூடிய ஒருவரை, தேடிக்கொண்டிருந்தேன். நான்தான் என்று தெரிந்ததும் பிறகு அவனைப் போக விடுவேன். எதையும் சொல்லாமல் கீழிறங்கிக்கொண்டு, அவன் தொடர்ந்து செல்ல ஒரு விதப் பாதுகாப்பை அளித்து, அவனது அசட்டு முட்டாள்தன வாழ்வை வாழ்ந்து தீர்க்கும்வரை, அவனது சபல சித்த குறைபட்ட வாழ்வு தீரும்வரை, இன்னொரு சபலசித்த குறைபட்ட வாழ்க்கையை வாழ்ந்து தீர்க்கும் வரை, இன்னொரு..." 

நான் பில்லுக்கான பணத்தைக் கொடுத்தேன்.

Yellow Flower by Julio Cortazar