தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Saturday, December 27, 2014

தேன் மாம்பழம் – வைக்கம் முகம்மது பஷீர், மதிலுகள் - ஈகரை தமிழ் களஞ்சியம்

தேன் மாம்பழம் – பஷீர்


- வைக்கம் முகம்மது பஷீர்
தமிழில்: சுகுமாரன்
‘நீங்கள் கேள்விப்பட்டது எதுவும் சரியல்ல. நான் எந்த மரத்தையும் ஆராதிப்பதில்லை. எந்தப் படைப்பையும். ஆனால் இந்தத் தேன்மாவுடன் எனக்குப் பிரத்தியேக அன்பு உண்டு. என்னுடைய மனைவி அஸ்மாவுக்கும் அன்பு உண்டு. மிக மகத்தான ஒரு செய்கையின் அடையாளம் இந்தத் தேன்மா. அதை நான் விளக்கமாகச் சொல்கிறேன்’
   நாங்கள் அந்த மாமரத்தடியில்தான் இருந்தோம். மரத்தில் ஏராளமான மாங்காய்கள் இருந்தன. மாமரத்தின் அடியில் அகலமான Basheerவட்டத்தில் வெள்ளை மணல் பரப்பியிருந்தது. அதைச் சுற்றி இரண்டு வரிசை செங்கல் கட்டு வைத்து அதற்குள் வட்டமாக ரோஜாச் செடிகள் நடப்பட்டிருந்தன. பல நிறங்களிலுள்ள ஏராளமான பூக்கள். அவர் பெயர் ரஷீத். மனைவி மகனுடன் பக்கத்திலிருக்கிற வீட்டில் வசிக்கிறார். கணவனும் மனைவியும் பக்கத்திலிருக்கும் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள். அவருடைய மனைவி மாம்பழத்தைச் சீவித் துண்டாக்கித் தட்டில் போட்டு, பதினாறு வயது மகன்  கையில் கொடுத்துவிட்டிருந்தார். நாங்கள் அதைத் தின்றோம். தேன்போலத் தித்திப்பு.
"மாம்பழம் எப்படி?"
"தேன் மாம்பழந்தான்"
"இதை நாம் தின்ன முடிவதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது"
"இந்த மாமரத்தை நட்டது யார்?"
"நானும் அஸ்மாவும் சேர்ந்துதான் இதை இங்கே நட்டோம். மாமரம் பற்றிய விவரங்களை நான் சொல்லுகிறேன். நிறையப் பேரிடம் இதைச் சொல்லியிருக்கிறேன். கேட்டவர்கள் சம்பவங்களையெல்லாம் மறந்துவிட்டு விருட்ச ஆராதனை ஆக்கிவிட்டார்கள். இதில் ஒரு ஆராதனையுமில்லை. மகத்தான ஒரு செய்கையின் நினைவு மட்டுமே. என்னுடைய தம்பி போலீஸ் இன்ஸ்பெக்டர். இங்கேயிருந்து எழுபத்தைந்து மைல் தூரத்திலிருக்கிற ஒரு பட்டணத்தில் அன்றைக்கு வேலை செய்துகொண்டிருந்தான். நான் தம்பியைப் பார்க்கப் போயிருந்தேன். அவன் கூடத் தங்கியிருந்தேன். பெரிய பட்டணமில்லை. இருந்தாலும் சும்மா சுற்றிப் பார்க்கப் போனேன். நல்ல வேனிற் காலம். சுடு காற்று வீசிக்கொண்டிருந்தது. தண்ணீருக்குத் தட்டுப்பாடாக இருந்தது. நான் அப்படி நடந்துகொண்டிருந்தபோது, இடை வழியில் மரத்தின் நிழலில் ஒரு கிழவர் சோர்ந்து கிடப்பதைப் பார்த்தேன். தாடியும் முடியும் நீளமாக வளர்ந்திருந்தன. எண்பது வயது இருக்குமென்று பட்டது. ரொம்பவே சோர்ந்து சாகிற நிலைமை. என்னைப் பார்த்ததும் ‘அல்ஹம் துலில்லா, மக்களே, தண்ணீர்’ என்றார்.
நான் பக்கத்தில் தென்பட்ட வீட்டுக்குப்போய் வராந்தாவில் உட்கார்ந்து பத்திரிகை படித்துக்கொண்டிருந்த இளம் பெண்ணிடம் தண்ணீர் வேண்டுமென்று கேட்டேன். அழகான அந்த இளம் பெண் உள்ளே போய்ச் செம்பில் தண்ணீர் கொண்டு வந்தாள். நான் அதை வாங்கிக்கொண்டு நடந்ததும் செம்பையும் ஏன் எடுத்துக்கொண்டு போகிறேன் என்று கேட்டாள். வழியில் ஒரு ஆள் விழுந்து கிடக்கிறார். அவருக்குக் குடிக்கத்தான் என்றேன். இளம்பெண்ணும் என்னுடன் வந்தாள். தண்ணீரைக் கிழவருக்குக் கொடுத்தேன். கிழவர் மெதுவாக எழுந்து உட்கார்ந்தார். பிறகு அற்புதகரமான ஒரு செயலைச் செய்தார். செம்புத் தண்ணீருடன் எழுந்து பாதையோரத்தில் வாடித் துவண்டு நின்ற மாங்கன்றுக்கு அடியில் பாதித் தண்ணீரை பிஸ்மி சொல்லி ஊற்றினார். மாம்பழம் தின்ற ஏதோ வழிப் போக்கன் வீசியெறிந்த கொட்டை. அது துளிர்த்திருந்தது. வேர்கள் மண்ணுக்கு மேலாக இருந்தன. கிழவர் மர நிழலில் வந்து உட்கார்ந்து மிச்சமிருந்த தண்ணீரை பிஸ்மி சொல்லிக் குடித்தார்.. ‘அல்ஹம் துலில்லா’ என்று இறைவனைத் துதித்துவிட்டுச் சொன்னார்: ‘என் பெயர் யூசுப் சித்திக். வயசு எண்பது தாண்டிவிட்டது. சொந்தக்காரர்கள் யாருமில்லை. பக்கீராக உலகம் சுற்றிக்கொண்டிருந்தேன். நான் சாகப்போகிறேன். உங்கள் இரண்டு பேரின் பெயர்கள் என்ன?’
நான் சொன்னேன்: ‘என் பெயர் ரஷீத். பள்ளி ஆசிரியர்’. இளம் பெண் சொன்னாள்: ‘என் பெயர் அஸ்மா. பள்ளி ஆசிரியை’. ‘நம் எல்லாரையும் அல்லாஹ் ஆசீர்வதிப்பாராக’ என்று சொல்லிவிட்டுக் கிழவர் படுத்தார். எங்கள் கண்ணெதிரில் யூசுப் சித்திக் இறந்து போனார். அஸ்மாவை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு நான் போய்த் தம்பியிடம் விவரம் சொன்னேன். ஒரு வேனைக் கொண்டுவந்தோம். சடலத்தை மசூதிக்குக் கொண்டுபோய்க் குளிப்பாட்டினோம். புதுக்கோடியில் மூடி கபரடக்கம் செய்தோம். கிழவரின் பையில் ஆறு ரூபாய் இருந்தது.
நானும் அஸ்மாவும் அதன்கூட ஐந்தைந்து ரூபாய் போட்டு மிட்டாய் வாங்கினோம். பள்ளிக் குழந்தைகளுக்குக் கொடுப்பதற்காக மிட்டாயை அஸ்மாவிடம் ஒப்படைத்தேன். பிற்பாடு அஸ்மாவைத் திருமணம் செய்துகொண்டேன். அஸ்மா மாஞ்செடிக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தாள். இந்த வீட்டைக் கட்டிக் குடிவருவதற்கு முன்பு அந்த மாஞ்செடியை வேர் அறுபடாமல் பறித்து ஒரு கோணித் துண்டில் மண்ணைப் போட்டு நானும் அஸ்மாவும் நீரூற்றினோம். இரண்டு மூன்று நாள்கள் மாங்கன்று அஸ்மாவின் படுக்கையறை மூலையில் சாய்ந்து நின்றிருந்தது. அதை இங்கே கொண்டுவந்து நானும் அஸ்மாவும் சேர்ந்து குழிதோண்டிக் காய்ந்த சாணமும் சாம்பலும் போட்டு நட்டுவைத்துத் தண்ணீர் விட்டோம். புதிய இலைகள் துளிர்த்து ஜோரானதும் எலும்புத் தூளும் பசுந்தழை உரமும் போட்டோம். அப்படியாக அந்த மாமரம் இப்படி ஆனது.
‘மனோகரமான சம்பவம். சாவதற்குமுன் பேச முடியாத ஒரு மாங்கன்றுக்கு அந்தக் கிழவர் தண்ணீர் விட்டார். நான் இதை ஞாபகத்தில் வைத்திருப்பேன்.’ நான் விடைபெற்றுக்கொண்டு நடந்தபோது பின்னாலிருந்து அழைப்பு. நான் திரும்பினேன்.
ரஷீதின் மகன் ஒரு காகிதத்தில் பொட்டலத்தில் கட்டிய நான்கு மாம்பழங்களைக் கொடுத்துவிட்டுச் சொன்னான்: ‘ பெண்டாட்டி பிள்ளைகளுக்குக் கொடுக்கச் சொன்னார்கள்’
‘மோன், படிக்கிறாயா?’
‘காலேஜில் படிக்கிறேன்’
‘பேரென்ன?’
‘யூசுப் சித்திக்’
‘யூசுப் சித்திக்?’
‘ஆமாம். யூசுப் சித்திக்’
****
நன்றி : காலச்சுவடு


ஜென்ம தினம்-வைக்கம் முகம்மது பஷீர்

வைக்கம் முகம்மது பஷீர்
தமிழில்: குளச்சல் மு. யூசுப்
மகர1 மாதம் 8ஆம் தேதி. இன்று எனது பிறந்த நாள். வழக்கத்துக்கு மாறாக அதிகாலையிலேயே எழுந்து, குளிப்பது போன்ற காலைக் கடன்களை முடித்தேன். இன்று அணிவதற்காகவென்று ஒதுக்கிவைத்திருந்த வெள்ளைக் கதர்ச் சட்டையையும்  வெள்ளைக் கதர் வேட்டியையும் வெள்ளை கேன்வாஸ் ஷ¨வையும் அணிந்து எனது அறையில் சாய்வு நாற்காலியில் கொந்தளிக்கும் மனதுடன் மல்லாந்து படுத்திருந்தேன். என்னை அதிகாலையிலேயே பார்த்தது, பக்கத்தில் ஆடம்பரமாக வாழ்ந்துகொண்டிருக்கும் பி.ஏ. மாணவனாகிய மாத்யூவுக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. அவன் புன்சிரிப்புடன் எனக்குக் காலை வணக்கம் தெரிவித்தான்.
"ஹலோ, குட்மார்னிங்."bashher--8
நான் சொன்னேன்:
"எஸ். குட்மார்னிங்."
மாத்யூ கேட்டான்:
"என்னா, இன்னைக்கு என்ன விசேஷம், காலையிலேயே? எங்கியாவது போகப்போறீங்களா?"
"சே . . . அதெல்லாம் ஒண்ணுமில்லெ." நான் சொன்னேன், "இன்னைக்கு என்னோட பிறந்த நாள்."
"யுவர் பர்த் டே?"
"எஸ்."
"ஓ . . . ஐ விஷ் யூ மெனி ஹாப்பி ரிட்டன்ஸ் ஆஃப் த டே."
"தாங்க் யூ."
மாத்யூ கையிலிருந்த பிரஷைக் கடித்துப் பிடித்தபடி குளியலறைக்குள் சென்றான். கட்டடத்திற்குள், ஆங்காங்கே கூச்சல்கள், ஆரவாரம், இடையிடையே சிருங்காரப் பாடல்கள். மாணவர்களும் குமாஸ்தாக்களும்தான். யாருக்கும் எந்த அல்லல்களுமில்லை. உல்லாசமான வாழ்க்கை. நான் ஒரு சிங்கிள் சாயா குடிக்க என்ன வழியென்று யோசித்துக்கொண்டிருந்தேன். மத்தியானச் சாப்பாட்டுக்கான மார்க்கம் உறுதிசெய்யப்பட்டுவிட்டது. நேற்று பஜார் வழியாகப் போகும்போது ஹமீது என்னை இன்று சாப்பிட வரச்சொல்லி அழைத்திருந்தான். இந்த ஆள், சிறு தோதுவிலான ஒரு கவிஞரும் பெரிய பணக்காரனுமாவார். இருந்தாலும் மத்தியானம்வரை சாயா குடிக்காமலிருக்க முடியாது. சூடான ஒரு சாயாவுக்கு என்ன வழி? மாத்யூவின் வயதான வேலைக்காரன் சாயா போடும் பணியில் சிரமத்துடன் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் விஷயத்தை நான் என் அறையிலிருந்தே கிரகித்தேன். அதற்கான காரணம், நான் தங்கியிருந்த அறை மாத்யூவின் சமையலறையின் ஸ்டோர் ரூம்தான். மாதம் ஒன்றுக்கு எட்டணா2 வாடகைக்குக் கட்டட உரிமையாளர் எனக்குத் தந்திருந்தார். அந்தக் கட்டடத்தின் மிகவும் மோசமானதும் சின்ன அறையும் இதுதான். இதற்குள், என் சாய்வு நாற்காலி, மேஜை, செல்ஃப், படுக்கை – இவ்வளவையும் வைத்தது போக சுவாசம் விடுவதற்கும் இடமில்லை. பெரிய மதில் கட்டினுள்ளிருக்கும் இந்த மூன்று கட்டடங்களின் மாடியிலும் கீழேயும் உள்ள எல்லா அறைகளிலும் மாணவர்களும் குமாஸ்தாக்களும்தான் தங்கியிருந்தார்கள். கட்டடத்தின் உரிமையாளருக்குக் கொஞ்சமும் பிடிக்காத ஒரேயரு நபர், நான் மட்டும்தான். என்னுடனான இந்த விருப்பமின்மைக்கு ஒரே ஒரு காரணம், நான் சரியான வாடகை கொடுப்பதில்லை, அவ்வளவுதான். என்னைப் பிடிக்காத வேறு இரண்டு பிரிவினரும் இங்கே இருக்கிறார்கள், ஓட்டல்காரனும் அரசாங்கமும். ஓட்டல்காரனுக்கு நான் கொஞ்சம் பணம் கொடுக்க வேண்டியதிருக்கிறது. அரசாங்கத்திற்கு அப்படியான பாக்கி எதுவுமில்லை. இருந்தாலும் என்னைப் பிடிக்கவே பிடிக்காது. அப்படி உணவு, உறைவிடம், தேசம் . . . மூன்றிலும் பிரச்சினைகள் இருந்தன. அடுத்த பிரச்சினைகள்: என் உடைகள், ஷ¨, விளக்கு. (விஷயங்களை எல்லாம் எழுதுவதற்கு முன் ஒன்றை மட்டும் தெளிவுபடுத்த வேண்டியதிருக்கிறது. இப்போது நடுஜாமம் கடந்துவிட்டது. காகிதத்தையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு அறையிலிருந்து வெளியே வந்து நீண்ட நேரமாக இந்த நகரத்திலேயே சுற்றித் திரிந்துகொண்டிருக்கிறேன். வேறு விசேஷமான எந்தக் காரணமோ, நோக்கமோ இல்லை. இந்த ஒரு நாளைய நாட்குறிப்பை ஆரம்பம் முதல் இறுதிவரை எழுத வேண்டும். சுமாரான அளவில் ஒரு சிறுகதைக்கான வாய்ப்புகள் இதில் உண்டு. ஆனால், என் அறையிலிருக்கும் விளக்கில் எண்ணெய் இல்லை. நிறைய எழுத வேண்டியதுமிருக்கிறது. ஆகவே தூக்கப் பாயிலிருந்து எழுந்துவந்து இந்த நதியோரத்தின் விளக்குத் தூணில் சாய்ந்தமர்ந்து சம்பவங்களின் சூடு ஆறிப்போவதற்குள் எழுதத் தொடங்கினேன்.) சூல் கொண்ட கார்மேகங்கள் போல், இந்நாளில் சம்பவங்கள் எல்லாம் என் அக மனத்தை வெடிக்கச் செய்துவிடுவதுபோல் நெருக்கியடித்து நிற்கின்றன. பெரிய அளவில் ஒன்றுமில்லைதான். ஆனால், இன்று எனது பிறந்த நாள். நான் சொந்த ஊரிலிருந்து நீண்ட தூரத்தில், அன்னிய தேசத்திலிருக்கிறேன். கையில் காசில்லை. கடன் கிடைப்பதற்கான வழிகளுமில்லை. உடுத்திருப்பதும் மற்றுள்ளவைகளுமெல்லாம் நண்பர்களுடையவை. எனக்கானவை என்று சொல்லிக்கொள்ள எதுவுமில்லை. இந்த நிலைமையிலான ஒரு பிறந்த நாள் மீண்டும் மீண்டும் வரவேண்டுமென்று மாத்யூ வாழ்த்தியபோது என் மனதிற்குள் ஏதோ ஒரு அகக்குருத்து வலித்தது.
நினைத்துப் பார்த்தேன்.
மணி ஏழு: நான் சாய்வு நாற்காலியில் படுத்தபடியே நினைத்துக்கொண்டேன். இந்த ஒரு நாளையாவது களங்கமேதுமில்லாமல் பாதுகாக்க வேண்டும். யாரிடமிருந்தும் இன்று கடன் வாங்கக் கூடாது. எந்தப் பிரச்சினைக்கும் இன்று இடந்தரக் கூடாது. இன்றைய தினம் மங்களகரமாகவே முடிய வேண்டும். கடந்து போன நாட்களின் கறுப்பும் வெள்ளையுமான சங்கிலித் தொடர் களில் இருக்கும் அந்தப் பல நூறு நான்களாக இருக்கக் கூடாது, இன்றைய தினத்தின் நான். இன்று எனக்கு என்ன வயது? சென்ற வருடத்தைவிட ஒரு வயது அதிகமாகி இருக்கிறது. சென்ற வருடத்தில் . . .? இருபத்தாறு. இல்லை முப்பத்தி இரண்டு, ஒருவேளை நாற்பத்தி ஏழோ?
என் மனதில் தாங்க முடியாத வேதனை. எழுந்து சென்று முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்துப் பார்த்தேன். மோசமில்லை. சுமாரான, பரவாயில்லாத முகம். நல்ல அகன்ற முழுமையான நெற்றி. அசைவற்ற கண்கள். வளைந்த, வாள் போன்ற மெல்லிய மீசை. மொத்தத்தில் குறை சொல்ல முடியாது – என்றெல்லாம் யோசித்துக்கொண்டே நிற்கும்போது ஒரு காட்சி கண்ணில் பட்டது. மனதில் கடினமான வலியேற்பட்டது. ஒரு நரைமுடி. என் காதின் மேல் பாகத்தில் கறுத்த முடிகளினூடே ஒரு வெளுத்த அடையாளம். நான் மிகுந்த சிரமத்துடன் அதைப் பிடுங்கியெறிந்தேன். பிறகு தலையைத் தடவிக்கொண்டிருந்தேன். பின்புறம் நல்ல பளபளப்பு. கசண்டி4தான். தடவிக்கொண்டிருக்கும்போது தலை வலிப்பதுபோன்ற சிறு உணர்வு ஏற்பட்டது. சூடு சாயா குடிக்காததால் இருக்குமோ?
மணி ஒன்பது: என்னைக் கண்டதுமே ஓட்டல்காரன் முகத்தைக் கறுவிக்கொண்டு உள்ளே போய்விட்டான். சாயா போடும் அந்த அழுக்குப் பிடித்த பையன் பாக்கியைக் கேட்டான்.
நான் சொன்னேன்:
"சரி . . . அதெ நாளைக்குத் தந்திடுறேன்."
அவனுக்கு நம்பிக்கை வரவில்லை.
"நேற்றைக்கும் இதத்தானே சொன்னீங்க."
"நான் இன்னைக்குக் கெடெச் சுடும்னு நெனச்சிருந்தேன்."
"பழைய பாக்கியெத் தராம உங்களுக்கு சாயா கொடுக்க வேண்டாம்னு மொதலாளி சொல்லிட்டார்."
"செரி."
மணி பத்து: காய்ந்து சுருங்கிப்போய்விட்டேன். வாயில் உமிழ் நீர் சுரக்கவில்லை. மத்தியான நேரத்தின் கடும் வெப்பம். சோர்வின் பெரும் பாரம் என்மீது கவியத் தொடங்கிவிட்டது. அப்போது புதிய மிதியடி விற்பதற்காக வெளுத்து, மெலிந்த எட்டும் பத்தும் வயதுள்ள இரண்டு கிறிஸ்தவப் பையன்மார் என் அறை வாசலுக்கு வந்தார்கள். நான் இரண்டு மிதியடிகள் வாங்க வேண்டுமாம். ஜோடி ஒன்றுக்கு மூன்று அணாதான் விலையாம். மூன்று அணா.
"வேணாம், குழந்தைகளே."
"சாரைப்போல உள்ளவங்க வாங்கலேன்னா வேற யார் சார் வாங்குவாங்க?"
"எனக்கு வேணாம், குழந்தைகளே . . . எங்கிட்டே காசு இல்லெ."
"செரி." நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய சிறு முகங்கள். எதையும் உட்புகுந்து அறிந்துகொள்ளவியலாத சுத்த இதயங்கள். இந்த வேஷமும் சாய்வு நாற்காலியில் கிடக்கும் இந்தத் தோரணையும். நான் ஒரு சாராம் . . .! சாய்வு நாற்காலியும் சட்டையும் வேட்டியும் ஷ¨வும். எதுவும் என்னுடையதல்ல குழந்தைகளே. எனக்கென்று இந்த உலகத்தில் சொந்தமாக எதுவுமே இல்லை. வெறும் நிர்வாணமான இந்த நான்கூட என்னுடையதுதானா? பாரதத்தின் ஒவ்வொரு நகரங்களிலும் எத்தனையெத்தனை ஆண்டு காலங்கள் சுற்றித் திரிந்து ஏதேதோ ஜாதி மக்களுடன் எங்கெங்கெல்லாமோ தங்கியிருக்கிறேன். யாருடைய ஆகாரங்கள் எல்லாம் சேர்ந்தது இந்த நான். எனது இரத்தமும் எனது மாமிசமும் எனது எலும்பும் இந்த பாரதத்திற்குரியது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலும் கராச்சி4 முதல் கல்கத்தா வரையிலும் – அப்படி பாரதத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். பெண்களும் ஆண்களுமான அந்த அத்தனை நண்பர்களையும் நான் இன்று நினைவுகூர்கிறேன். நினைவு . . . ஒவ்வொருவரையும் தழுவியபடியே என் அன்பு அப்படியே வியாபித்துப் பறக்கட்டும். பாரதத்தைக் கடந்தும் . . . உலகைக் கடந்தும் . . . சுகந்தம் வீசும் வெண்நிலவுபோல் . . . அன்பு, என்னையறிந்து அன்பு காட்டுபவர்கள் யாராவது இருக்கிறார்களா? அறிதல், எனக்குத் தோன்றுவது . . . ரகசியங்களின். . . அந்தத் திரையை விலக்குவதுதான். குறைகளையும் பலவீனங்களையும் களைந்து பார்த்தால் என்ன மிச்சமிருக்கப் போகிறது? வசீகரமான ஏதாவது ஒன்று மனிதனுக்குத் தேவைப்படுகிறது. அன்புகாட்டவும் அன்புகாட்டப்படவும். ஹோ . . . காலந்தான் எத்தனை துரிதமாக இயங்குகிறது. தகப்பனின் சுட்டு விரலை இறுகப் பற்றிக் கொஞ்சி விளையாடித் திரிந்த நான் "உம்மா பசிக்குது" என்று தாயின் உடுமுண்டின் தலைப்பை இழுத்துக் கேட்ட நான், இன்று? ஹோ, காலத்தின் உக்கிரமான பாய்ச்சல். சித்தாந்தங்களின் எத்தனையெத்தனை வெடிகுண்டுகள் என் அகத்தளங்களில் விழுந்து வெடித்துச் சிதறியிருக்கின்றன. பயங்கரமான போர்க்களமாக இருந்தது என் மனது. இன்று நான் யார்? புரட்சிக்காரன், ராஜத் துரோகி, இறை எதிரி, கம்யூனிஸ்ட் – மற்றும் என்னவெல்லாமோ. உண்மையில் இதில் ஏதாவது ஒன்றா நான்? ஹ§ம். என்னென்ன மனச் சஞ்சலங்கள். தெய்வமே? மூளைக்குள் சுள்சுள்ளென்று குத்துகிறது. சாயா குடிக்காததாலிருக்குமோ? தலை நேராக நிற்கவில்லை. போய், சாப்பிட்டுவிட வேண்டியதுதான். இந்தத் தலைவேதனையுடன் ஒரு மைல் தூரம் நடக்க வேண்டும். இருந்தாலும் வயிறு நிறையச் சாப்பிடலாமல்லவா?
மணி பதினொன்று: ஹமீது கடையில் இல்லை. வீட்டிலிருப்பாரோ? என்னையும் அவர் கூடவே அழைத்துச் சென்றிருக்க வேண்டும். அதுதான் முறை. ஒருவேளை, மறந்து போயிருக்கலாம். வீட்டுக்கே போய்விடலாமா? சரி.
மணி பதினொன்றரை: ஹமீதின் மாடி வீட்டின் கீழ் இரும்புக் கதவு அடைக்கப்பட்டிருந்தது. நான் அதைத் தட்டினேன்.
"மிஸ்டர் ஹமீது."
பதில் இல்லை.
"மிஸ்டர் ஹமீ. . .து."
மிகுந்த கோபத்துடனிருந்த ஒரு பெண்ணின் உரத்த குரல் மட்டும்.
"இங்கெ இல்லை."
"எங்கே போயிருக்காரு?"
மௌனம். நான் திரும்பவும் கதவைத் தட்டினேன். மனம் மிகுந்த சோர்வடைந்தது. திரும்பி நடக்கப் போகும்போது பக்கத்தில் யாரோ வருவது போன்ற காலடிச் சத்தம். கூடவே வளை கிலுக்கமும். வாசல் கதவு இலேசாகத் திறந்தது – ஒரு இளவயதுப் பெண்.
நான் கேட்டேன்: "ஹமீது எங்கே போயிருக்காரு?"
"அவசரமா ஒரு எடத்துக்கு." மிகுந்த பொறுமையுடன்தான் பதில்.
"எப்போ வருவாரு?"
"சாயுங்காலத்துக்குப் பிறகு ஆயிடும்."
சாயுங்காலத்துப் பிறகு?
"வந்தா நான் வந்து தேடுனதாகச் சொல்லுங்க."
"நீங்க யாரு?"
நான் யார்?
"நான் . . . ஓ . . . யாருமில்லெ. எதுவும் சொல்ல வேண்டாம்."
நான் திரும்பி நடந்தேன். அனல் தகிக்கும், கால் புதையும் வெள்ளை மணல் பரப்பு. அதைத் தாண்டினால் கண்ணாடிச் சில்லுபோல் பளபளக்கும் கால்வாய். கண்களும் மூளையும் இருண்டு போயின. மிகுந்த மன அங்கலாய்ப்பு. எலும்புகள் சூடேறிக்கொண்டிருந்தன. தாகம், பசி, ஆவேசம். உலகத்தையே விழுங்கிவைக்கும் ஆவேசம். கிடைப்பதற்கான வழியில்லையென்பதுதான் ஆவேசம் அதிகரிப்பதற்கான காரணம். கிடைப்பதற்கான உத்தரவாதமேதுமற்ற நிலையில் எண்ணற்ற பகல் இரவுகள் என் முன். நான் தளர்ந்து விழுந்துவிடுவேனா? தளர்ந்து போய்விடக் கூடாது. நடக்க வேண்டும் . . . நடக்க வேண்டும்.
மணி பன்னிரண்டரை: பரிச்சயமானவர்கள் அனைவரும் பார்த்ததாகவே காட்டிக்கொள்ளாமல் கடந்து போய்க்கொண்டிருந்தார்கள். "தோழர்களே, இன்று எனது பிறந்த நாள். எனக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டுப் போங்கள்" என்று என் மனம் உச்சரித்தது. நிழல் தடங்கள் என்னைத் தாண்டிப் போய்க்கொண்டிருந்தன. நண்பர்கள் ஏன் என்னைக் கண்டு பேசாமல் போகிறார்கள்? அது சரி!
என் பின்னால் ஒரு சி.ஐ.டி.
மணி ஒன்று: ஒரு காலத்தில் பத்திரிகை அதிபரும் இப்போது வியாபாரியாகவுமிருக்கும் மி.பியைப் பார்க்கச் சென்றேன். கண்பார்வை தெளிவுடன் இல்லை. பதற்றமாக இருந்தது.
பி, கேட்டார். "புரட்சிகளெல்லாம் எந்த இடம்வரை வந்திருக்கு?"
நான் சொன்னேன்: "பக்கத்துலெ வந்துட்டு."
"ம்ஹ§ம்! எங்கிருந்து வாறீங்க? பார்த்தே கொஞ்ச காலம் ஆயிட்டுதே?"
"ஹா . . ."
"அப்புறம், என்ன விசேஷம்?"
"சே . . . ஒண்ணுமில்லெ. சும்மா."
நான் அவரது பக்கத்திலிருந்த செயரில் அமர்ந்தேன். எனது கட்டுரைகளில் பலவற்றை நான் அவரது பெயரில் எழுதிப் பிரசுரம் செய்திருந்தேன். பண்டைப் பெருமை பேசுவதற்காக அவர் அந்தப் பழைய பத்திரிகைகளை அட்டையிட்டுவைத்திருந்தார். நான் அதையெடுத்துத் தலைச்சுற்றலோடு அப்படியே பார்த்துக் கொண்டிருந்தேன். "எனக்குச் சூடா ஒரு சாயா வேணும். நான் ரொம்பத் தளந்து போயிருக்கேன்" என்று என் மனம் வேகமாகச் சொல்லிக்கொண்டிருந்தது. பி, ஏன் என்னிடம் எதுவுமே கேட்காமலிருக்கிறார்? நான் சோர்ந்து போயிருப்பதை அவர் கவனிக்கவில்லையா? அவர் கல்லாப் பெட்டியின் பக்கத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார். நான் மௌனமாகத் தெருவைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். துண்டு தோசைக்காக இரண்டு தெருக்குழந்தைகள் சண்டையிடுகிறார்கள். "ஒரு சூடு சாயா." நான் கேட்கவில்லை. என் சர்வ நாடிகளும் இரந்துகொண்டிருந்தன. பி, பெட்டியைத் திறந்து நோட்டுகளின், சில்லறைகளினிடையிலிருந்து ஒரு அணாவை எடுத்து ஒரு பையனிடம் கொடுத்தார்.
"சாயா கொண்டு வாடா."
பையன் ஓடிச் சென்றான். என் மனம் குளிர்ந்தது. எவ்வளவு நல்ல மனிதன் . . . பையன் கொண்டுவந்த சாயாவை பி. வாங்கிவிட்டு என்னைப் பார்த்துத் திரும்பினார்.
"உங்களுக்குச் சாயா வேணுமா?"
நான் சொன்னேன், "வேண்டாம்."
ஷ¨வின் லேசை இறுக்குவது போன்ற பாவனையுடன் குனிந்து கொண்டேன். முகத்தை அவர் பார்த்துவிடக் கூடாது. என் மன விகாரத்தை அது காட்டிக் கொடுத்துவிடக் கூடும்.
பி, வருத்தத்துடன் சொன்னார், "உங்களோட புத்தகங்கள் எதையும் எனக்குத் தரலியே?"
நான் சொன்னேன்: "தர்றேன்."
"அதெப் பற்றியதான பத்திரிகை விமர்சனங்கள் எல்லாத்தையும் நான் வாசிப்பதுண்டு."
நான் சொன்னேன்: "நல்ல விஷயம்."
சொல்லிவிட்டுக் கொஞ்சம் சிரித்துவிட முயற்சி செய்தேன். மனத்தில் பிரகாசம் வற்றிப்போன முகம், எப்படிச் சிரிக்கும்?
நான் விடைபெற்றுத் தெருவிலிறங்கி நடந்தேன்.
என் பின்னால் அந்த சி.ஐ.டி.
மணி இரண்டு: நான் தளர்ந்து, மிகவும் சோர்ந்துபோய் அறையில் நாற்காலியில் சாய்ந்து கிடந்தேன். நல்ல ஆடைகள் உடுத்தி, வாசனைத் திரவியம் பூசிய ஏதோ ஒரு பெண் எனது அறை வாசலில் வந்தாள். எங்கோ தொலைதூரத்திலுள்ளவள். தண்ணீர் பிரளயத்தால் நாடே அழிந்துபோய்விட்டது; ஏதாவது உதவிசெய்ய வேண்டும். மெல்லிய புன்சிரிப்புடன் அவள் என்னைப் பார்த்தாள். மார்பகங்களை வாசல் கதவின் சட்டத்தில் இறுக அமர்த்தியபடியே பார்த்தாள். என் மனதிற்குள்ளிருந்து சூடான விகாரம் எழுந்தது. அது படர்ந்து நாடி நரம்புகளெங்கும் பரவியது. என் இதயம் அடித்துக் கொள்வது எனக்குக் கேட்பதுபோல் தோன்றியது. பயங்கரமும் சிக்கலும் மிகுந்தது அந்த நிமிடம்.
"சகோதரி, எங்கிட்டே எதுவுமே இல்லை. நீங்க வேறெ எங்கயாவது போய்க் கேளுங்க – எங்கிட்டே எதுவுமே இல்லை."
"எதுவுமே இல்லியா?"
"இல்லே."
அதன் பிறகும் அவள் போகாமல் நின்றாள். நான் சத்தமாகச் சொன்னேன்.
"போயிரு, ஒண்ணுமில்லே."
"சரி." அவள் வருத்தத்தோடு குலுங்கி அசைந்து நடந்து போனாள். அப்போதும் அவளிடமிருந்து பரிமள வாசம் வந்துகொண்டிருந்தது.
மணி மூன்று: யாரிடமிருந்தாவது கடன் வாங்கினால் என்ன? பயங்கரமான சோர்வு. மிகவும் இயலாத ஒரு கட்டம். யாரிடம் கேட்பது? பல பெயர்கள் நினைவுக்கு வந்தன. ஆனால், கடன் வாங்குவது நட்பின் அந்தஸ்தைக் குறையச் செய்கிற ஒரு ஏற்பாடு. செத்துவிடலாமா என்று யோசனை செய்தேன். எப்படியான சாவாக இருக்க வேண்டும்?
மணி மூன்றரை: நாக்கு உள்ளே இழுத்துக் கொண்டிருந்தது. கொஞ்சமும் முடியவில்லை. குளிர்ந்த நீரில் அப்படியே மூழ்கிக் கிடந்தால். உடல் முழுவதையும் கொஞ்சம் குளிரவைத்தால். அப்படியே படுத்திருக்கும்போது சில பத்திரிகை அதிபர்களின் கடிதங்கள் வந்தன. கதைகளை உடனே அனுப்பிவைக்க வேண்டும். திருப்பியனுப்பும் வசதியுடன். கடிதங்களை அப்படியே போட்டுவிட்டு நான் இயலாமல் படுத்திருந்தேன். வங்கிக் குமாஸ்தா கிருஷ்ணபிள்ளையின் வேலைக்காரப் பையன் ஒரு தீக்குச்சிக் கேட்டு வந்தான். அவனிடம் சொல்லி ஒரு தம்ளர் தண்ணீர் கொண்டுவரச்செய்து குடித்தேன்.
"சாருக்கு உடம்புக்குச் சொகமில்லையா?" பதினொரு வயதான அந்தப் பையனுக்குச் சோர்வுக்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
நான் சொன்னேன், "சுகக்கேடு எதுவுமில்லை."
"பெறகு . . .? சார், சாப்பிடலியா?"
"இல்லெ ."
"அய்யோ, ஏன் சாப்பிடலெ?"
அந்தச் சிறுமுகமும் கறுத்த கண்களும் உடுத்திருக்கும் கரிபுரண்ட ஒரு துண்டும்.
அவன் அதிர்ச்சியுடன் நின்றுகொண்டிருந்தான்.
நான் கண்களை மூடிக்கொண்டேன்.
அவன் மெதுவாகக் கூப்பிட்டான்.
"சாரே."
"உம்?"
நான் கண்களைத் திறந்தேன்.
அவன் சொன்னான்: "எங்கிட்டே ரெண்டணா இருக்கு."
"செரி?"
"நான் அடுத்த மாசம் வீட்டுக்குப் போவும்போது சார் தந்தாப் போதும்."
என் மனம் வெதும்பியது. அல்லாஹ§ . . .
"கொண்டு வா."
முழுசாக இதைக் காதில் வாங்குவதற்கு முன் அவன் ஓடினான்.
அப்போது, தோழர் கங்காதரன் வந்தார். வெள்ளைக் கதர் வேட்டி, வெள்ளைக் கதர் ஜிப்பா, அதன்மீது நீளச் சால்வை போர்த்தியிருந்தார். . . கறுத்து, நீண்ட முகமும் விஷய பாவமுள்ள பார்வையும்.
சாய்வு நாற்காலியில் நான் மிடுக்காகப் படுத்திருப்பதைக் கண்டதும் அந்தத் தலைவன் கேட்டான்: "நீ ஒரு பெரிய பூர்ஷ§வா ஆயிட்டே போலிருக்கு?"
எனக்குத் தலைச்சுற்றல் இருந்துகொண்டிருந்தாலும் சிரிப்பு வந்தது. தலைவனின் உடைகளின் உரிமையாளர்யாராக இருக்குமென்ற யோசனை என்னுள் உதித்தது. எனக்குப் பரிச்சயமுள்ள ஒவ்வொரு அரசியல்வாதிகளின் உருவமும் என் கற்பனையில் ஓடியது. இழப்பதற்கு என்ன இருக்கிறது?
கங்காதரன் கேட்டான்: "நீ எதுக்குச் சிரிக்கிறே?"
நான் சொன்னேன்: "ஒண்ணுமில்லை மக்களே, நம்ம இந்த வேஷங்களை நினைச்சதும் சிரிப்பு வந்தது."
"உன் பரிகாசத்தை விட்டுட்டு விஷயத்தைக் கேளு. பெரிய பிரச்சினை நடந்துட்டிருக்கு. லத்தி சார்ஜும் டீயர்கேசும் துப்பாக்கிச் சூடும் நடக்கும் போலிருக்கு. பத்து மூவாயிரம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்காங்க. ஒண்ணரை வாரமாக அவங்க பட்டினி கிடக்கிறாங்க. பெரிய கலவரம் ஏற்படலாம். மனுசன் பட்டினி கிடந்தா என்ன நடக்கும்?"
"இந்த விவரங்கள் எதையும் நான் பத்திரிகைகள்லே வாசிக்கலியே?"
"பத்திரிகைகள்லே போடக் கூடாதுன்னு எச்சரிக்கை விடப்பட்டிருக்கு."
"அது செரி. நான் இப்போ என்ன செய்யணும்?"
"அவங்க பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்திருக்காங்க. நான்தான் தலைமை. நான் அங்கே போய்ச் சேர, படகுக் கூலி ஓரணா வேணும். அப்புறம், இன்னைக்கு நான் எதுவும் சாப்பிடவுமில்லை. நீயும் கூட்டத்துக்கு வா."
"மக்களே, எல்லாமே செரிதான். ஆனா, எங்கிட்டெ காசெதுவும் இல்லே. கொஞ்ச நாளாயிட்டுது, நானும் ஏதாவது சாப்பிட்டு. நேரம் வெளுத்த பெறகு இதுவரை நானும் ஒண்ணுமே சாப்பிடல்லை. போதாத குறைக்கு இன்னைக்கு என்னோட பிறந்த நாள் வேறே."
"பிறந்த நாளா? நமக்கெல்லாம் ஏது பிறந்த நாள்?"
"பிரபஞ்சத்திலெ உள்ள எல்லாவற்றுக்குமே பிறந்த நாள்னு ஒண்ணு இருக்கு."
அப்படியாக, பேச்சு பல திசைகளிலும் சென்றது. கங்காதரன் தொழிலாளர்களைப் பற்றியும் அரசியல்வாதிகளைப் பற்றியும் அரசாங்கத்தைப் பற்றியும் பேசினான். நான் வாழ்க்கையைப் பற்றியும் பத்திரிகை அதிபர்களைப் பற்றியும் இலக்கியவாதிகளைப் பற்றியும் பேசினேன். அதற்கிடையில் பையன் வந்தான். அவனிடமிருந்து நான் ஒரு அணாவை வாங்கினேன். பாக்கி ஒரு அணாவுக்குச் சாயாவும் பீடியும் தோசையும் கொண்டு வரச் சொன்னேன். சாயா காலணா. தோசை அரையணா. பீடி காலணா.
தோசையை பார்சல் செய்திருந்த அமெரிக்கப் பத்திரிகைக் காகிதத்துண்டில் ஒரு படமிருந்தது. அது என்னை ரொம்பவும் கவர்ந்தது. நானும் கங்காதரனும் தோசை தின்றோம். ஒவ்வொரு தம்ளர் தண்ணீரும் குடித்துவிட்டுக் கூடவே ஆளுக்குக் கொஞ்சம் சாயா. பிறகு ஒரு பீடியைப் பற்றவைத்துப் புகை விட்டபடியே கங்காதரனிடம் ஒரு அணாவைக் கொடுத்தேன். போகும்போது கங்காதரன் விளையாட்டாகக் கேட்டான்: "இன்னைக்கு உன் பிறந்த நாளில்லியா? நீ இந்த உலகத்துக்கு ஏதாவது செய்தி சொல்ல விரும்புறியா?"
நான் சொன்னேன்: "ஆமா, மக்களே. புரட்சி சம்பந்தமான ஒரு செய்தி."
"சொல்லு, கேட்போம்."
"புரட்சியின் அக்னி ஜுவாலைகள் படர்ந்து உலகெங்கும் கொளுந்துவிட்டெரியட்டும். இன்றைய சமூக அமைப்புகள் அனைத்துமே எரிந்து சாம்பலாகி, பூரணமான மகிழ்ச்சியும் அழகும் சமத்துவமும் நிரம்பிய புது உலகம் அமையட்டும்."
"பேஷ். நான் இன்னைக்கு இதைத் தொழிலாளர் கூட்டத்திலெ சொல்லிர்றேன்." என்று சொல்லிவிட்டுக் கங்காதரன் வேகமாக இறங்கிச் சென்றான். நான் ஒவ்வொரு அரசியல்வாதிகளைப் பற்றியும் ஒவ்வொரு எழுத்தாளர்களைப் பற்றியும் எல்லா வகையான ஆண் பெண்களைப் பற்றியும் சிந்திக்கத் தொடங்கினேன். இவர்களெல்லாம் எப்படி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்? தோசை பொதிந்துவந்த அந்தக் காகிதத் துண்டைப் படுத்திருந்தபடியே எடுத்தேன். அப்போது வாசலைக் கடந்து, முகத்தை இறுக்கிப் பிடித்து, வீட்டின் உரிமையாளர் வருவதைக் கண்டேன். இவரிடம் இன்று என்ன பதில் சொல்லலாம் என்று நினைத்தவாறே காகிதத்தைப் பார்த்தேன். வானத்தை முத்தமிட்டு நிற்கும் உயர்ந்த மணிக்கூண்டுகள் நிறைந்த பெரு நகரம். அதன் நடுவே, தலை உயர்த்தி நிற்கும் ஒரு மனிதன். இரும்புச் சங்கிலிகளால் அவன் வரிந்து கட்டப்பட்டுப் பூமியோடு பிணைக்கப்பட்டிருந்தான். ஆனாலும், அவனது பார்வை சங்கிலியிலோ பூமியிலோ அல்ல. தொலைவில், பிரபஞ்சங்களுக்குமப்பால், முடிவற்ற நெடுந்தொலைவில், ஒளிக்கதிர் விதைக்கும் மாபெரும் ஒளியான அந்தக் குவிமையத்தில். அவனது கால்களின் அருகில் ஒரு திறந்த புத்தகமிருந்தது. அதன் இரண்டு பக்கங்களிலுமாக அந்த மனிதனுடையது மட்டுமல்ல, எல்லா மனிதர்களுடையதுமான வரலாறு. அதாவது: ‘விலங்குகளால் மண்ணோடு சேர்த்துப் பிணைக்கப்பட்டி ருந்தாலும் அவன் காண்பது, காலங்களைக் கடந்த, அதி மனோகரமான மற்றொரு நாளை.’
"நாளை . . . அது எங்கே இருக்கிறது?"
"என்னா, மிஸ்டர்?" வீட்டுக்காரரின் எகத்தாளமான கேள்வி. "இன்னைக்காவது தந்துருவீங்களா?"
நான் சொன்னேன், "பணமெதுவும் கையிலெ வந்து சேரல்லெ. அடுத்த ஒண்ணுரெண்டு நாள்லெ தந்திடறேன்." ஆனால், இனி அவர் தவணையை ஏற்றுக் கொள்வதுபோல் தெரியவில்லை.
"இப்படியெல்லாம் எதுக்கு வாழணும்?" அவரது கேள்வி. நியாயமான விஷயம். இப்படியெல்லாம் எதுக்கு வாழணும்? நான் இந்தக் கட்டடத்தில் வந்து மூன்று வருடம் ஆகப் போகிறது. மூணு சமையலறைகளை நான்தான் சரியாக்கிக் கொடுத்தேன். அதற்கு இப்போது நல்ல வாடகை கிடைக்கிறது. இந்த நான்காவது ஸ்டோர் ரூமையும் மனிதன் வாழ்வதுபோல் நான் ஆக்கிக் கொடுத்த பிறகு அதிக வாடகைக்கு இதை எடுக்க வேறு ஆள் இருக்கிறதாம். அந்த வாடகையை நானே தந்து விடுகிறேன் என்று ஒத்துக்கொண்டாலும் போதாது – காலிசெய்து கொடுத்துவிட வேண்டுமாம்.
இல்லெ. முடியாது. காலிசெய்ய விருப்பமில்லெ. என்னவேணா செய்துக்கிடுங்க.
மணி நான்கு: எனக்கு இந்த ஊரே அலுத்துப்போய்விட்டது. என்னைக் கவர்வதற்கான எதுவுமே இந்த நகரில் இல்லை. தினமும் சஞ்சரிக்கும் ரோடுகள். நித்தமும் பார்க்கும் கடைகளும் முகங்களும். பார்த்தவைகளையே பார்க்க வேண்டும். கேட்டதையே கேட்க வேண்டும். பயங்கரமான மன அலுப்பு . . . எதுவுமே எழுதவும் தோன்றவில்லை. இல்லையென்றாலும் எழுதுவதற்குத் தான் என்ன இருக்கிறது?
மணி ஆறு: மகிழ்ச்சியான மாலைப் பொழுது. கடல் விழுங்கிக்கொண்டிருக்கும், வட்ட வடிவமாக ஜொலிக்கும், இரத்த நிற அஸ்தமன சூரியன். பொன்னிற மேகங்கள் நிறைந்த மேற்கு அடிவானம். கரை காண முடியாத பெருங்கடல். அருகே, சிற்றலைகளைப் பரப்பும் கால்வாயின் ஓரத்தில் கரைபுரண்டோடியது மகிழ்ச்சி. ஆடையலங்காரங்களுடன் சிகரெட் புகைத்தபடி சஞ்சரிக்கும் இளைஞர்கள். துடிக்கும் கண்களுடன் வண்ணச் சேலைகளைக் காற்றில் அலையவிட்டுப் புன்னகை தூவும் முகங்களுடன் உலாவும் இளம் பெண்கள். காதல் நாடகங்களின் பின்னணிக் காட்சிபோல், மனதைக் குளிர்விக்கும் பூங்காவனத்தில் வானொலிப் பாடல்களும், இடையே மலர்களைத் தழுவி வாசனைகளுடன் கடந்து செல்லும் இளங் காற்றும் . . . ஆனால், நான் தளர்ந்து விழுந்துவிடுவேன் போலிருக்கிறது.
மணி ஏழு: ஒரு போலீஸ்காரர் நான் தங்கியிருந்த இடத்திற்கு வந்து இன்றும் என்னைக் கூட்டிக்கொண்டு போனார். கண்களைக் கூச வைக்கும் பெட்ரோமாக்ஸ் விளக்கினெதிரில் என்னை உட்காரவைத்தார். கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போது என் முகத்தில் தென்படும் பாவமாற்றங்களை நுட்பமாகக் கவனித்தவாறே கைகளைப் பின்புறமாகக் கட்டிக்கொண்டு போலீஸ் டெபுடி கமிஷனர் அங்குமிங்குமாக உலாத்திக் கொண்டிருந்தார். அவரது பார்வை, எப்போதுமே என் முகத்தில்தான் படிந்திருந்தது. என்ன ஒரு பாவனை! எவ்வளவு கம்பீரம்! நான் ஏதோ ஒரு பெரிய குற்றம் செய்துவிட்டுத் தலைமறைவாகிவிட்டதுபோல். ஒரு மணிநேரக் கேள்விக்கணைகள். என்னுடைய நண்பர்கள் யார், யார்? எங்கிருந்தெல்லாம் எனக்குக் கடிதங்கள் வருகின்றன? அரசாங்கத்தைக் கவிழ்க்க நினைக்கும் ரகசிய இயக்கத்தின் உறுப்பினன்தானே நீ? புதிதாக இப்போது என்னென்ன எழுதிக்கொண்டிருக்கிறாய்? எல்லாவற்றிற்கும் உண்மையான பதிலைத்தான் சொல்ல வேண்டும். அப்புறம் . . .
"உங்களை இங்கிருந்து நாடு கடத்த என்னாலெ முடியுங்கிறது உங்களுக்குத் தெரியும்தானே?"
"தெரியும். நான் எந்த ஆதரவுமில்லாதவன். ஒரு சாதாரண போலீஸ்காரர் நெனைச்சாகூட என்னெ அரெஸ்ட் செய்து லாக்கப்பிலே போட்டு . . ."
மணி ஏழரை: நான் அறைக்குத் திரும்பிவந்து இருட்டில் அமர்ந்திருந்தேன். நன்றாக வேர்த்தது. இன்று என் பிறந்த நாள். நான் தங்குமிடத்தில் வெளிச்சமில்லை. மண்ணெண்ணெய்க்கு என்ன வழி? பசியடங்க ஏதாவது சாப்பிடவும் வேண்டும். ஆண்டவா, யார் தருவார்கள்? யாரிடமும் கடன் கேட்கவும் மனமில்லை. மாத்யூவிடம் கேட்டுப் பார்ப்போமா? வேண்டாம். அடுத்த கட்டடத்தில் வசிக்கும் கண்ணாடிபோட்ட அந்த மாணவனிடம் ஒரு ரூபாய் கேட்டுப் பார்ப்போம். அவன் ஒரு பெரிய வியாதிக்கு நிறையப் பணத்தை ஊசிக்கும் மருந்துக்குமென்று செலவு செய்துகொண்டிருந்தான். கடைசியில் எனது நாலணா மருந்தில் அது குணமாகிவிட்டது. அதற்கான பிரதிபலனாக என்னை ஒரு தடவை சினிமாப் பார்க்கக் கூட்டிக்கொண்டு போனான். அவனிடம் போய் ஒரு ரூபாய் கேட்டால் தராமலிருப்பானா?
மணி எட்டேமுக்கால்: வழியில் மாத்யூ எங்கே என்று விசாரித்தேன். அவன் சினிமா பார்க்கப் போயிருக்கிறானாம். பேச்சுச் சத்தமும் உரத்த சிரிப்பும் கேட்டுக் கொண்டிருந்த அடுத்த கட்டடத்தின் மேல்மாடிக்குச் சென்றேன். புகைந்துகொண்டிருக்கும் சிகரெட்டின் வாசம். மேஜையின் மீது எரியும் சரராந்தலின் ஒளிபட்டுப் பிரகாசிக்கும் பற்கள், ரிஸ்ட் வாட்சுகள், தங்கப் பொத்தான்கள்.
இயலாமையின் பிரதிபிம்பமான நான் செயரில் அமர்ந்தேன். அவர்கள் பேச்சைத் தொடர்ந்தார்கள். அரசியல் விஷயங்கள், சினிமா, கல்லூரி மாணவிகளின் உடல் வர்ணனைகள், தினமும் இரண்டு முறை சேலை மாற்றும் மாணவிகளின் பெயர்கள் . . . இப்படிப் பல விஷயங்கள் . . . எல்லாவற்றிலும் நான் என் கருத்துகளைச் சொன்னேன். இடையே துண்டுக் காகிதத்தில் ஒரு குறிப்பெழுதினேன். ‘ஒரு ரூபாய் வேண்டும். மிக அவசியமான ஒரு தேவை. இரண்டு மூன்று நாளில் திருப்பித் தந்துவிடுகிறேன்.’
அப்போது கண்ணாடிக்காரன் சிரித்தான்.
"என்னா, ஏதாவது சிறுகதைக்கு பிளாட் எழுதுறீங்களா?"
நான் சொன்னேன்.
"இல்லை."
அதைத் தொடர்ந்து விஷயம் சிறுகதை இலக்கியத்திற்கு வந்தது.
அழகாகயிருந்த அரும்பு மீசைக்காரன் குறைபட்டுக் கொண்டான்;
"நம்ம மொழியிலெ நல்ல சிறுகதைகள் ஒண்ணுமே இல்லை."
தாய்மொழியிலும் தாய்நாட்டிலும் நல்லதாக என்ன இருக்கப்போகிறது. நல்ல ஆண்களும் பெண்களும்கூடக் கடலுக்கப்பால்தான்.
நான் கேட்டேன்:
"யாருடைய சிறுகதைகளையெல்லாம் வாசிச்சிருக்கிறீங்க?"
"ரொம்ப ஒண்ணும் வாசிச்சதில்லெ. முதல் விஷயம், தாய்மொழியில் ஏதாவது வாசிக்கிறதுகூட ஒரு அந்தஸ்து குறைஞ்ச விஷயம்தான்."
நான் நமது சில சிறுகதை ஆசிரியர்களின் பெயர்களைச் சொன்னேன். இவர்களில் பெரும்பாலானவர்களின் பெயர்களைக்கூட இவர்கள் கேள்விப்பட்டிருக்கவில்லை.
நான் சொன்னேன்:
"ஆங்கிலத்துலெ மட்டுமல்ல, உலகிலுள்ள எல்லா மொழிச் சிறுகதைகளோடும் போட்டிபோடத் தகுந்த சிறுகதைகள் நம்ம மொழியில் இன்னைக்கு உண்டு. நீங்க ஏன் அதையெல்லாம் வாசிக்கிறதில்லெ?"
சிலவற்றை அவர்கள் வாசித்திருக் கிறார்களாம். அதில் பெருமளவும் வறுமையைப் பற்றிய கதைகள் தானாம். எதுக்கு அதையெல்லாம் எழுத வேண்டும்?
நான் எதுவும் பேசவில்லை.
"உங்களோட கதைகளையெல்லாம் வாசிச்சுப் பார்த்தா . . ." தங்கக் கண்ணாடிக்காரன் அறுதியாகச் சொன்னான்: "இந்த உலகத்துலெ என்னமோ ஒரு கோளாறு இருக்குறதெப்போலெ தோணும்."
உலகத்தில் என்ன கோளாறு? அப்பா அம்மாக்கள் கஷ்டப்பட்டு மாதந்தோறும் பணம் அனுப்பிவைக்கிறார்கள். அதைச் செலவுசெய்து கல்வி பயிலுகிறார்கள். சிகரெட், சாயா, காஃபி, ஐஸ்கிரீம், சினிமா, குட்டிக்கூரா பவுடர், வாஷ்லின், ஸ்பிரே, விலையுயர்ந்த ஆடைகள், உயர்தர உணவு வகைகள், மது வகைகள், போதை மருந்து, சிபிலிஸ், கொனேரியா – அப்படிப்போகிறது, கோளாறு இல்லாமல். எதிர்கால யோக்கியர்கள், நாட்டை ஆள வேண்டியவர்கள், சட்டத்தை அமல்படுத்த வேண்டியவர்கள், அறிவுஜீவிகள், பண்பாட்டுக் காவலர்கள், மதத்தலைவர்கள், அரசியல் தலைவர்கள் . . . சித்தாந்தவாதிகள் . . .! உலகத்தில் என்னதான் கோளாறு?
எனக்குப் பயங்கரமாக ஒரு சொற்பொழிவாற்ற வேண்டும்போல் தோன்றியது.
"இன்றைய உலகம் . . ." நான் தொடங்கினேன். அப்போது கீழேயிருந்து தளர்ந்து போன ஒரு சிறு குரல்:
"மிதியடி வேணுமா, மிதியடி?"
"கொண்டுவா" சிரித்தவாறே உத்தரவிட்டான், கண்ணாடிக்காரன். அப்படியாக விஷயம் மாறியது. மேலே ஏறிவந்தவர்கள் காலையில் பார்த்த அதே பிஞ்சு முகங்கள் தான். அவர்கள் மூச்சுவாங்கிக் கொண்டிருந்தார்கள். கண்களை வெறித்தபடி, முகங்கள் வாடித்தளர்ந்து, உதடுகள் வறண்டுபோயிருந்தன. அதில் பெரிய பையன் சொன்னான்:
"சார்மார்களுக்கு வேணும்னா ரெண்டரை அணா."
காலையில் மூன்று அணாவாக இருந்த மிதியடி.
"ரெண்டரை அணாவா?" தங்கக் கண்ணாடிக்காரன் மிதியடியைச் சந்தேகத்துடன் திருப்பித் திருப்பிப் பார்த்தான்.
"இது, கருஈட்டி இல்லியேடா?"
"கருஈட்டிதான் சார்."
"உங்க வீடு எங்கெ குழந்தைகளே?" என் கேள்விக்குப் பெரியவன் பதில் சொன்னான்.
"இங்கிருந்து மூணு மைல் தூரத்துலே உள்ள ஒரு இடம்."
"ரெண்டணா." தங்கக் கண்ணாடிக்காரன் கேட்டான்.
"ரெண்டே காலணா குடுங்க சார்."
"வேண்டாம்."
"ஓ . . ."
அவர்கள் வருத்தத்துடன் படியிறங்கினார்கள். தங்கக் கண்ணாடிக்காரன் திரும்ப அழைத்தான்.
"கொண்டு வாடா."
அவர்கள் திரும்பவும் வந்தார்கள். நல்லதாகப் பார்த்து ஒரு ஜோடி மிதியடியைத் தேர்ந்தெடுத்துவிட்டு ஒரு பத்து ருபாய் நோட்டை நீட்டினான். அந்தக் குழந்தைகளிடம் ஒரு நயா பைசாகூட இல்லை. அவர்கள் இதுவரை எதுவுமே விற்கவில்லை. நேரம் விடிந்தது முதல் அலைந்து திரிகிறார்கள். மூன்று மைல் தொலைவில், ஏதோ ஒரு குடிசையில், அடுப்பில் சூடாறிக் கிடக்கும் தண்ணீருடன் தமது குழந்தைகள் வருவதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பெற்றோர்களின் காட்சி என் மனத்தில் ஓடியது.
தங்கக் கண்ணாடிக்காரன் எங்கிருந்தோ தேடியெடுத்து இரண்டணா கொடுத்தான்.
"காலணா, சார்?"
"இவ்வளவுதான் இருக்கு. இல்லேண்ணா இன்னா மிதியடி."
குழந்தைகள் பரஸ்பரம் பார்த்தபின் துட்டை வாங்கிவிட்டுப் பேசாமல் இறங்கிப் போனார்கள். மின்சாரக் கம்பத்தின் கீழ், ரோட்டில் அவர்கள் போவதைப் பார்த்துவிட்டு வந்த தங்கக் கண்ணாடிக்காரன் சிரித்தான்.
"நான் ஒரு வேலை காட்டியிருக்கேன். அதுலெ ஒண்ணு செல்லாத ஒரணாத்துட்டும்."
"ஹ . . . ஹ . . . ஹா . . ." அனைவரும் சிரித்தார்கள். நான் நினைத்துக்கொண்டேன். மாணவர்கள் அல்லவா? சொல்வதற்கு என்ன இருக்கிறது? வறுமையும் கஷ்டங்களும் என்னவென்று இன்னும் அறியவில்லை. நான் எழுதிவைத்திருந்த குறிப்பை மற்றவர்கள் பார்க்காமல் தங்கக் கண்ணாடிக்காரனிடம் கொடுத்தேன். அவன் அதை வாசிக்கும்போது என் கற்பனை ஓட்டலில் பதிந்திருந்தது. ஆவி பறக்கும் சோற்றின் எதிரில் நான் அமர்ந்திருப்பது போன்றெல்லாம். ஆனால், குறிப்பை வாசித்துப் பார்த்துவிட்டுத் தங்கக் கண்ணாடிக்காரன் அனைவரும் கேட்கும்படியாகச் சொன்னான்;
"சாரி, சேஞ்ச் ஒண்ணுமில்லெ."
இதைக் கேட்டதுமே என் உடலிலிருந்து சூடான ஆவி பரந்தது. வேர்வையைத் துடைத்துவிட்டு நான் கீழே இறங்கி அறைக்கு நடந்தேன்.
மணி ஒன்பது: நான் பாயை விரித்துப் படுத்துக்கொண்டேன். ஆனால், இமைகள் மூட மறுத்தன. தலை, பாரமாக இருந்தது. இருந்தாலும் படுத்தே கிடந்தேன். உலகில் வாழும் கதியற்றவர்களைப் பற்றி நான் நினைத்தேனா. . . எங்கெங்கெல்லாம் எத்தனையெத்தனை கோடி ஆண் பெண்கள் இந்த அழகான பூலோகத்தில் பட்டினி கிடக்கிறார்கள. அதில் நானும் ஒருவன். எனக்கு மட்டும் என்ன விசேஷ அம்சம்? நானும் ஒரு ஏழை அவ்வளவுதான். இப்படி நினைத்துக் கொண்டே படுத்திருக்கும்போது – எனது வாயில் நீரூறியது. மாத்யூவின் சமையலறையில் கடுகு தாளிக்கும் சத்தம் . . . வெந்த சாதத்தின் வாசமும்.
மணி ஒன்பதரை: நான் மெதுவாக வெளியில் வந்தேன். இதயம் வெடித்துவிடுவதுபோல் . . . யாராவது பார்த்துவிட்டால். . . ? எனக்கு வேர்த்துக் கொட்டியது. . . வந்து முற்றத்தில் காத்து நின்றேன். அதிர்ஷ்டம், முதியவர் விளக்கையெடுத்துக்கொண்டு குடத்துடன் வெளியில் வந்து, சமையலறைக் கதவை மெதுவாக அடைத்துவிட்டுக் குழாயடிக்குச் சென்றார். குறைந்தது பத்து நிமிடமாவது பிடிக்கும், திரும்பிவர. சத்தமில்லாமல் படபடக்கும் இதயத்துடன் மெதுவாகக் கதவைத் திறந்து சமையலறைக்குள் நுழைந்தேன்.
மணி பத்து: நிறைந்த வயிறுமாகத் திருப்தியுடன் வேர்த்துக் குளித்து வெளியே வந்தேன். முதியவர் திரும்பியதும் நான் குழாயடிக்குச் சென்று தண்ணீர் குடித்து, கைகால் முகம் அலம்பிவிட்டுத் திரும்ப என் அறைக்குள் வந்து ஒரு பீடியைப் பற்றவைத்து இழுத்தேன். முழுதிருப்தி. சுகமாக இருந்தது. இருந்தாலும் ஏதோ ஒரு மனப்பதற்றம். உடல் சோர்வுமிருந்தது. படுத்துக் கொண்டேன். தூக்கம் வருவதற்கு முன் சிறிது யோசனையிலாழ்ந்தேன். பெரியவருக்குத் தெரிந்திருக்குமோ? அப்படியென்றால் மாத்யூவும் அறிந்துவிடுவான். மற்ற மாணவர்களும் குமாஸ்தாக்களும் அறிந்துகொள்வார்கள். அவமானமாகப் போய்விடும். எதுவானாலும் சரி, வருவது வரட்டும். பிறந்த நாளும் அதுவுமாக, சுகமாகத் தூங்கலாம். எல்லோருடையவும் எல்லாப் பிறந்த நாட்களும். . . மனிதன் . . . பாவப்பட்ட உயிர். நான் அப்படியே தூக்கத்திலாழ்ந்துகொண்டிருந்தேன். . . அப்போது என் அறைக்குப் பக்கத்தில் யாரோ வருகிறார்கள்.
"ஹலோ மிஸ்டர்." மாத்யூவின் குரல். எனக்கு வேர்க்கத் தொடங்கியது. தூக்கம் கடல் கடந்தது. சாப்பிட்டதனைத்தும் ஜீரணமாயின. எனக்குப் புரிந்துவிட்டது. மாத்யூ அறிந்துவிட்டான். பெரியவர் கண்டுபிடித்துவிட்டார் போலிருக்கிறது. நான் கதவைத் திறந்தேன். இருளின் இதயத்திலிருந்து வருவதுபோல் சக்திவாய்ந்த வெளிச்சத்தின் நீள ஈட்டிபோல் ஒரு டார்ச் வெளிச்சம். நான் அதனுள். மாத்யூ என்ன கேட்கப் போகிறான்? பதற்றத்தால் என் இதயம் துண்டு துண்டுகளாக உடைந்து சிதறிவிடும் போலிருந்தது.
மாத்யூ சொன்னான்,
"ஐ ஸே . . சினிமாவுக்குப்போயிருந்தோம். விக்டர் ஹ்யூகோவின் ‘பாவங்கள்.’ நீங்க பார்க்க வேண்டிய ஒரு ஃபர்ஸ்ட்கிளாஸ் ஃபிலிம்."
"ஓஹோ. . ."
"நீங்க சாப்டீங்களா? எனக்குப் பசிக்கலெ. சோறு வேஸ்டாயிடும். வந்து சாப்பிடுங்களேன். வர்ற வழியிலெ நாங்க ‘மாடர்ன் ஹோட்டல்’லெ ஏறினோம்."
"தாங்க்ஸ். நான் சாப்பிட்டாச்சு."
"அப்படியா? சரி தூங்குங்க, குட்நைட்."
"எஸ். குட் நை . . ."
(1945)
******

மதிலுக்குப் பின்னால் நாராயணி நிற்கிறாள்

தர்மினி
https://thoomai.wordpress.com/2010/12/21/மதிலுக்குப்-பின்னால்-நார/

வாசிப்பு திறக்காத பல கதவுகளைத் திறந்து விடுகின்றது. புத்துயிர்ப்புத் தருணங்களை நல்ல புத்தகங்கள் ஒவ்வொரு தடவையும் தந்து கொண்டிருக்கின்றன. மனிதர்களுடனான உரையாடல் என்பது வேறுலகு  போலப் பிரமையைச் சில புத்தகங்கள் ஏற்படுத்தி விடுகின்றன. மீளவும் ஓடிப் புதைந்து விடும் தலையுடன் இருக்கத் தோன்றும். வாழ்வின் ஏக்கங்கள்,புறக்கணிப்பு,தனிமை எல்லாம் புதியதொரு புத்தகத்தில் சற்றே தீர்ந்துவிடும்.
அப்போதெல்லாம் நான் தனித்து விடப்பட்டவளாகவே உணர்ந்தேன்.பொழுதைப் போக்குவதற்கு தென்னைகளைச் சுற்றியும் மாமரங்களின் கீழுமாக உலாத்திக் கொண்டிருப்பேன்.அயலில் எவருடைய வீட்டுக்கும் போகவோ நினைத்தபடி ஊரைச் சுற்றிவரவோ வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள். காரணம் பொம்பிளைப்பிள்ளை.ஆகவே கையில் கிடைக்கும் சீனிச்சரை, தேயிலைச்சரைக்  கடதாசிகளெல்லாம் ஏதாவது கதையொன்றைச் சொல்லாதாவென்று வரிவரியாகப் படித்துக் கொண்டிருப்பேன். மௌனமாக இருந்து இருந்து மற்றவர்களுடன் பேசுவதே பெரும் மிரட்சியாக இருக்கும்.நான் மௌனமாக்கப்பட்டவளாயிருந்தேன்.  பயமில்லாமல் எல்லோரோடும் பழகுவதற்கு விருப்பமாக இருக்கும்.ஆனால் அது ஒரு பயங்கரமான செயலைப் போல வெருட்சி மிதமிஞ்சியிருந்தது .ஆதலால் மௌனமாக உரையாடும் எழுத்துகள் எனக்கு நெருக்கமாகின. இன்னும் இன்னும் ஒதுங்கியவளாகப் புத்தகங்களுடன் மட்டும் பேசத் தொடங்கினேன்.
ஊரில் இருந்த அந்தச் சிறு நூலகம் அற்புதங்களையெல்லாம் கொண்ட அரண்மனையைப் போலத் தெரிந்தது.

அப்படியொரு நாளில் தான் ‘மஞ்சரி’ என்ற மொழிபெயர்ப்புக் கதைகளைக் கொண்ட  சஞ்சிகை வீட்டிற்கு வந்தது. நான் அதைத் திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருந்தேன்.வேறுவேறு  கதைக்களம். வித்தியாசமான மனிதர்கள் என்னுடன் பேசினார்கள்.அதிலொரு கதை தான் ‘மதிலுகள்’.அக்கதையின் நாயகியான நாராயணியை “நாராயணி ….நாராயணி…” என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தேன்.வைக்கம் முகமதுபஷீர் என்ற எழுத்தாளரை அதற்கு முன்பு நான் கேள்விப்பட்டதில்லை. மதிலுகளும் நாராயணியும் தான் அவரை எனக்கு அறிமுகப்படுத்தியதாகச் சொல்லலாம். அவை காட்சி காட்சியாகக் கதை விரிந்து போகும் எழுத்துகள். நாராயணியைச் சந்திக்காத அந்த நாயகனை, எப்போதுமே என்னால் பார்க்க முடியாத என் நாயகனைப் போலவே நினைந்து வேதனையுறுவேன். அந்த நாராயணியைப் போலவே வீடென்ற சிறையில், வேலிகளான மதில்களின் பின்னால் ஒரு கைதியாக என்னை நினைத்து நானும் விம்மிக் கொண்டிருந்தேன். வைக்கம் முகமது பஷீரின் மதிலுகள் கதையைப் படித் தால், நாராயணி… நாராயணி…என்று உங்கள் காதுகளிலும் அக்குரல் ஒலிக்கும்.
பஷீர் என்ற சிறைக் கைதி. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராகச் செயலாற்றியதால் கொடுக்கப்பட்ட தண்டனையுடன் புதிய சிறைச்சாலையொன்று மாற்றப்பட்டு வருகிறான்.சிறைக் கண்காணிப்பார்களுடன் நட்பாகி ஓரளவு சலுகைகளைப் பெற்று டீ,பீடி ,தோட்டம் அமைப்பது என்று சில ஆறுதல்களுடன் வாழுகிறான் பஷீர்.உயரிய மதிலுக்கு மேலால் தெரியும் நகரின் வாழ்க்கை வேதனையை எழுப்பும்.அவனுடன் இருந்த அரசியற் கைதிகள் விடுதலையாகும் போது பஷீர் மட்டும் தனித்து விடப்படுகிறார்.தப்பித்துப் பொகும் வழிகளைத் தேடும் மனிதனாக சுதந்திரத்திற்காக அவாவுகிறது மனசு.தப்பிக்கத் திட்டமிட்ட போது தான் தற்செயலாக மதிலுக்கு மறுபுறம் இருக்கும் பெண்கள் சிறைச்சாலையிலிருந்து ஒரு பெண்ணின் குரல் இவனுடன் உரையாடுகிறது.
ஒரேயொரு ரோஜாச் செடியைத் தருவீர்களா என்று பேச்சு ஆரம்பிக்கிறது.தனித்த அவர்களுக்கிடையில் நேசம் பூக்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்குமான ஈர்ப்பொன்று மதிற்கற்களை மீறிக் கசிகிறது. மதிலுக்கு மேலாகக் கம்பு தெரியும் போதெல்லாம் தான் காத்திருப்பதாக எண்ணி வர வேண்டும் என்கிறாள் நாராயணி.அக்கதையில் வரும் இப்பகுதியைப் பாருங்கள்.
-அறைக்குத் திரும்பினான். அன்றுதான் அறை மிகவும் குப்பையாக இருப்பதை உணர்ந்தான். எல்லாம் சரிசெய்து வைத்தான். உலகம் திடீரென்று அழகாக மாறிவிட்டதைப் போல இருந்தது. தொடர்ந்துவந்த பகல் பொழுதுகளில் அவன் மதிலைப் பார்த்தவண்ணமே அமர்ந்திருந்தான். ஒரு நாள் அந்த திவ்யக்காட்சி அவனுக்குத் தெரிந்தது. மதில்மேல் ஒரு கம்பு தலையைச் சிலுப்பிக் கொண்டு நின்றது. பஷீர் பாய்ந்து சென்றான்.-
இடையில் வார்டன் வந்து விட்டதால் கம்பைக் கண்டவுடன் போக முடியாமல் தவிக்கிறான் பஷீர்.தொடர்ந்த வசனங்கள்…..
“பிறகென்ன.. எத்தனை நேரம் உங்களுக்காக காத்திருப்பது இந்தக் கம்பைக் கையில் பிடித்துக் கொண்டு… கைகளே கடுப்பெடுக்கத் தொடங்கிவிட்டன!!”
“நான் வேண்டுமானால் கையைத் தடவிக் கொடுக்கட்டுமா?”
” எங்கே தடவிக்கொடுங்கள் பார்ப்போம்” என்று தன் கையை மதில்சுவரின் மீது வைக்கிறாள். பஷீர் மதிலின் மறுபுறம் சுவரைத் தடவிக் கொடுக்க கண்களில் நீர் பெருகுகிறது.
பல மாதங்களாக மதிலூடாக உரையாடல் தொடர்கிறது. இப்போது தப்பித்துப்போகவோ சிறையைவிட்டு வெளியேறவோ அவனுக்குப் பிடிக்கவில்லை.அச்சிறையே இனிமையான தருணங்களைத் தந்து கொண்டிருந்தது.  எப்படியாவது இருவரும் சந்திக்கத் திட்டமிடுகிறார்கள். வியாழக்கிழமை ஆஸ்பத்திரியில் சந்திக்க ஆளுக்காள் அடையாளத்தையும் சொல்லிக் கொண்டனர்.அந்த வியாழனில் அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக விடுதலை என்று சொல்லப்படுகிறது. இப்போது விரும்பாத பொழுதில் விடுதலை என்று வெளியேற வேண்டியதாகிறது.
அறை இழுத்துப் பூட்டப்பட்டது. மதிலுக்குப் பின் கம்பு உயர்ந்தவண்ணமே இருந்தது. கனத்த இதயத்துடன் தனது பன்னீர்த்தோட்டத்தின் மத்தியில் நின்றான். அதில் ஒரு ரோஜாவைக் கிள்ளி கையில் வைத்துக் கொண்டான். கண்களில் நீர் மல்கியது. சிறையின் பெரிய இரும்புக் கதவுகள் பயங்கரமான சப்ததத்துடன் பஷீரின் முதுகுக்குப் பின்னால் சாத்தியது…என்று கதை முடிகிறது.
பொதுவாகப் பஷீரின் ஏமாற்றமும் விரும்பி வேண்டாத விடுதலையுமே கதையின் மிச்சமாக மனதில் நிற்பதாகச் சொல்வார்கள்.ஆனால் எனக்கு நாராயணியின் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் தான் கதையை முடிக்கவிடாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கச் செய்கிறது.மதில்களுக்குப் பின்னிருந்து அக்கைகள் கம்பை உயர்த்திக் கொண்டேயிருக்கின்றன.


மதிலுகள் - ஈகரை தமிழ் களஞ்சியம்

www.eegarai.net/t38898-topic


நீண்ட இடைவேளைக்கு பிறகு நான் படித்து விழி கசிந்த நாவல். இதோ உங்களுக்காக எனக்கு தெரிதவாறு பகிர்ந்துக்கொள்கிறேன். பிழை இருப்பின் மன்னிக்கவும்.
கதையின் கரு விரும்பியது விரும்பிய நேரத்தில் கிடைக்காமல் போவது என்பதுதான். பஷீர் கதை சொல்லியாக இருக்கிறார். எழுது நடை இயல்பாக இருப்பது அழகு. உணர்ச்சியான அழகான கவிதையாக மதில்கள் என்ற குறுநாவல் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.இலக்கியவாதியான பஷீர் புரட்சிகரமான பத்திரிகையில் எழுதியதால் சிறை செல்கிறார். மதிலுக்கு அப்பாலுள்ள பெண் கைதியின் மீது காதல் கொள்கிறார். அவளும் இவரைப் பார்க்காமலே காதல் கொள்கிறாள். இருவருக்கும் இடையிலிருக்கும் மதில் அவர்களுடைய காதலுக்கு சாட்சியாக இருக்கிறது. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள அம்மதிலே தடையாகவும் இருக்கிறது.

முகம் காணாமலே பழகும் நாராயணி, பஷீர், அவர்களின் கலந்துரையாடல்கள், வேதனைகள், பலாமரம், அணில், பஷீர்- நாராயணி இருவருக்கும் இடையே உருவான காதல். இருவர் முதன் முதலாக சந்திக்க திட்டமிடும்போது அந்த சந்திப்பு நிகழ்வதற்கான சாத்தியம் திடீரென்று இல்லதொழிக்கப்படுவதுடன் வைக்கம் முகமது பஷீரின் மதில்கள் குறுநாவல் முடிவடைகின்றது. இந்தக் கதையில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பஷீர், நாராயணியை சந்திப்பதற்காக திட்டமிட்டிருந்த நாளில் சிறையை விட்டு விடுதலை செய்யப்படுகிறார். அன்போடு நாராயணிக்காக பறித்த ஒற்றை ரோஜாவோடு சிறையில் இருந்து வெளியில் வருவதும். ஏக்கத்தோடு சிறையை அவர் நோக்குவதொடு கதை முடிகிறது. பஷீர் சொல்வார்,
“வை ஷூட் ஐ பி ஃப்ரீ?... ஹூ வாண்ட்ஸ் ஃப்ரீடம்?... . ( Why Should I be free? Who wants freedom?? ) இது தான் வாழ்க்கை


ஏதாவது ஒன்றை நாம் அதிகம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்போது, எதிர்பார்த்தது நிகழாமல், அதைவிட முக்கியமான ஏதாவது ஒன்று நாம் எதிர்பாராமலேயே கிடைத்துவிடும். ஆனால் நம் மனம் அப்போது நாம் எதிர்பார்த்த்து கிடைக்கவில்லையே என்று அதிகம் கவலைப்படும். இதுதான் வாழ்க்கை. இது தான் இங்கே நடக்கிறது. இந்நாவலில் பஷீர், நாராயணியின் முதல் உரையாடலும், முதல் உரையாடலிலேயே காதல் பூப்பதும் ஓர் அழகான கவிதை. நாராயணிக்காக ரோஜா செடி எடுப்பது, அதில் உள்ள ஒவ்வொரு இலையிலும், ஒவ்வொரு மலரிலும் முத்தமிடுவது. நாராயணி என்ன செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு "இல்லை நான்.. . ரோஜாச்செடிக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தேன்... ஒவ்வொரு மலரிலும்....ஒவ்வொரு இலையிலும்... மொக்கிலும்". என்று அவர் பதில் தந்ததற்கு அந்த தலைவி வெட்கப்பட்டு அமைதியாவது என்னே அழகு!!

கம்பு மதிலின் மேல் தெரியும் ஒவ்வொரு கணமும், நான் உன்னோடு இருக்கிறேன் என்று காதலோடு பஷீர் கூறும் பொழுது ஓர் வகை அன்பால் நாராயணி அழுவது அதை அவர் சமாதானப்படுத்துவது அடடா....... என்னே அருமையான நிகழ்வு. அவள் நினைவால் பஷீர் மதிலை தழுவுவது அருமையான கவிதை. இப்படியே பல பகல் பொழுதுகள் போகிறது. திண்பண்டங்கள் - கேழ்வரகு, மீன், முட்டை என்று எல்லாமே கம்பின் வழியாக நாராயணி கொடுத்து விடுகிறாள். பஷீரும் தன்னிடமுள்ள ஊறுகாயை கொடுத்து, எல்லோருக்கும் கொடுக்கும்படியாகச் சொல்கிறாள். "எல்லோருக்கும் கொடுக்கிறேன்... ஆனால் நீங்கள் காதலிப்பது என்னை மட்டும் தானே” என குழந்தைத்தனமாக நாராயணி சொல்வது என்னே அருமை. அதே கணம் பஷீர் நினைவால் இவள் வளர்க்கும் ரோஜாச்செடி நன்றாக வளர்ந்துக்கொண்டு இருக்கிறது ஒரு புறம்.

மாதங்கள் கரைகிறது. பகல் பொழுதுகள் மதிலைப் பார்த்தவண்ணமும், இரவுகள் ஒருவரை ஒருவர் நினைத்த வண்ணமும் கடக்கிறது.ஒரு நாள், நாராயணி 'எத்தனை நாள் நாம் இப்படியே பேசிக்கொண்டிருப்பது... எத்தனை இரவுகள் தான் நான் அழுது தீர்ப்பது... உங்களை எப்படிக் காண்பது' என்று கேட்கிறாள். அப்போது தான் பஷீர் தன்னை ஆஸ்பத்திரியில் பார்க்கலாம் என்று சொன்னான். இன்று திங்கட்கிழமை, வரும் வியாழக்கிழமை பதினோரு மணிக்கு ஆஸ்பத்திரிக்கு வருவேன் என்று சொன்னாள் நாராயணி. 'எப்படி'...என்றதற்கு 'அதை நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று கூறிவிட்டாள். புறப்படும்போது மீண்டும் சொல்லிச் சென்றாள், "மறந்துவிடாதீர்கள்...வியாழக்கிழமை...பதினோரு மணி.." அவள் சென்ற பின்னும் கூட வெகுநேரம் மதிலோரமாகவேஅவள் நினைவால் நின்றிருந்து விட்டுப் போனார் பஷீர்.புதன் கிழமையும் இருவரும் பேசிக் கொண்டார்கள். ஒருவருக்கொருவர் தான் எப்படியிருப்போம் என்று சொல்லிக் கொண்டார்கள். "தனது வலது கன்னத்தில் ஒரு மச்சம் இருக்கும்" என்று அவள் சொல்லி வைத்திருந்தாள்.பஷீர் சொல்கிறார், “நான் தனியாகத்தான் வருவேன். என் தலையில் தொப்பி இருக்காது. தலை முழுவதும் வழுக்கைதான். கையில் ரோஜாப்பூ ஒன்று வைத்திருப்பேன்”.

நீண்ட நாள் காத்துக் கொண்டிருந்த அந்த தினம் வந்தது. பஷீர் மற்றும் நாராயணிக்கு அது ஒரு திருவிழா நாள் போலவே இருந்தது. மரங்கள் மீது தாவி விளையாடி, அணில்களோடும் ,மரங்களோடும் பேசி சிரித்து மகிழ்ந்தார். ஒரு ரோஜா பூவைப் பறித்துக் கொண்டு மணி பத்து இருக்கும்போதே ஆஸ்பத்திரியருகே அருகே சென்று நின்றுக் கொண்டார். அப்பொழுது ஜெயிலர் வந்து " பஷீர் நீங்கள் தங்களின் வேஷ்டியையும் ஜிப்பாவையும் அணிந்து கொண்டு வாருங்கள் என்று அவரின் உடைகளைத் தந்தார். அப்பொழுது மதிலுக்கு மேல் கம்பு உயர்ந்தது. அவரும் அணிந்துக் கொண்டு வந்தார். உடனே ஜெயிலர், "நீண்ட நாளாக நிலுவையில் இருந்த உங்களது விடுதலை ஆர்டர் வந்துவிட்டது" என்றார். இதைக் கேட்டு பஷீர் நடுங்கினார், அவரின் கண்கள் இருண்டுவிட்டன. காது குப்பென்று அடைத்துவிட்டது. பைத்தியம் பிடிப்பது போலாகிவிட்டது. உதடுகள் ஊமையாயின. “வை ஷூட் ஐ பி ஃப்ரீ?... ஹூ வாண்ட்ஸ் ஃப்ரீடம்? ( ஏன் என்னை விடுதலை செய்கிறீர்கள் ? யாருக்கு வேண்டும் சுதந்திரம்? ) ( Why Should I be free? Who wants freedom?? ) என்றார். அதற்கு ஜெயிலர், இனி நீங்கள் இங்கு இருக்க அனுமதி இல்லை வெளியேறுங்கள் உடனே என்றார். மதிலுக்குப் பின் கம்பு உயர்ந்தவண்ணமே இருந்தது. ஒரு ரோஜாவைக் கிள்ளி கையில் வைத்துக் கொண்டார் . கண்களில் நீர் பெருக்கெடுத்தது. சிறையின் பெரிய இரும்புக் கதவுகள் ஒரு பயங்கர ஒலியுடன் பஷீரின் முதுகுக்குப் பின்னால் சாத்தியது. ஒற்றை ரோஜாவோடு சிறையை கணத்த இதயத்தோடு பார்க்கிறார். இவ்வாறு நிறைவடைகிறது இந்த நாவல்.
நாவலை படிக்கும் ஒவ்வொரு உள்ளங்களிலும் பெருக்கெடுத்த வேதனை கண்ணீரால் வெளிப்படும் என்று சொன்னால், அதை யாராலும் மறுக்க முடியாது.

இன்றளவும், பஷீர் என்ன ஆனார்? நாராயணி என்ன ஆனாள்? சந்தித்தார்களா? என்ன ஆனது இறுதியில் ? என்று முடிவில்லா பலக் கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருக்கிறது இந்த நாவல்.


பழைய ஒரு சிறிய காதல் கதை – பஷீர்

https://azhiyasudargal.wordpress.com/2010/02/14/பழைய-ஒரு-சிறிய-காதல்-கதை-ப/
வைக்கம் முஹம்மது பஷீர்
தமிழில் சுரா
காதல்வயப்பட்டிருந்த கால  கட்டத்தில், முன்பு யுகங்களுக்கு முன்னால் என்பதைப் போல நடைபெற்ற… பழைய ஒரு சிறிய காதல் கதையைக் கூறப் போகிறேன். காதலுக்குள் எப்போதும் காமமும் இருக்குமல்லவா? அப்போது மிகவும் இளம் வயது. கோபம், தைரியம்… இளமையின் உஷ்ணத் தில் நான் இருந்தேன். கேள்வி கேட்பதற்கு யாருமில்லை. தாவிக் குதிப்பது… இதயம் காட்டும் வழியில் பயணிப்பது… தெளிவற்ற வசீகரமான காலகட்டமே, உனக்கு வணக்கம்!

பசித்துப் பசித்து அப்படியே வாழ்வது… எல்லா வகைப்பட்ட பசியும்… எல்லா வகைப்பட்ட தாகமும்… அவை இல்லாமல் போவதற்கு ஒரு வழியும் இல்லை. யார் மீதோ எதன் மீதோ கோபம் இருந்தது. பயங்கரமான கோபம். எனினும், ஆசையின் அழகான பாதையில் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. எல்லாம் சரியாகும்… சரி செய்வேன். சூடான குருதியில் கழுவி பிரபஞ்சங்களை முழுமையாகப் புதுமையாக்கு வேன். புரட்சிவாதி… கொல்வதற்குத் தயங்காத பயங்கரவாத இயக்கத் தின் தலைவன்… கத்தியையும் ரிவால்வரையும் கையில் வைத்துக் கொண்டு நடந்து திரிந்த பயங்கர பயங்கரமான காலகட்டமே, உனக்கு வணக்கம்!
பேனாவின் முனையிலிருந்து அன்று நெருப்பு மழை பெய்து கொண்டிருந்தது. சூறாவளி வீசிக் கொண்டிருந்தது. வாழ்க்கையின் இலக்கு சம்ஹாரம் செய்வதாக இருந்தது. இந்த லட்சியத்துடன் ஒன்று சேர்ந்த முந்நூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருந்தனர். அன்று எங்களுக்கு ஒரு பத்திரிகை யும்… நான்தான் பத்திரிகையின் ஆசிரியர்.
நெருப்புப் பெட்டியைப் போன்று இருந்த சிறிய ஒரு அறைதான் பத்திரிகை அலுவலகம்.
தங்கியிருந்ததும் அங்கேதான். இரவும் பகலும் சிந்தனைதான். எழுத்துதான். இரவும் பகலும் கலந்துரையாடல்கள்… இரவும் பகலும் செயல்பாடுகள்…
என்னுடைய வார்த்தைதான் வேத வார்த்தை… நான் மிகவும் நல்ல மனிதன். மறுக்க முடியாத தலைவன். எனினும், இதயத்திற்குப் பெரிய எரிச்சல். ஒரு அழுகை. சிறிய அளவில் கவலையும் இருந்தது.
பயங்கரவாத செயல்களுக்கு இவை எதுவும் பொருத்தமானவை அல்ல. எனினும், கவலைகள் நிறைந்த பாடல்களைப் பாட வேண்டும் என்று தோன்றும்.
இரண்டு வகைப்பட்ட உணர்ச் சிகள் மனதில். இரண்டும் போராடிக் கொண்டிருக்கின்றன. மொத்தத் தில்- ஒரு மூச்சு அடைப்பதைப் போல.
இப்படித் தோன்றும்போது முற்றத்திற்கு வருவேன். சுவரின் அருகில் சென்று பரந்து கிடக்கும் உலகத்தையே பார்ப்பேன். அப்ப டிப் பார்த்துக் கொண்டு நிற்கும் போது ஒருநாள் அழகான தோற்றத் தைக் கொண்ட ஒரு இளம் பெண் ணைப் பார்த்தேன். அழகான இளம் பெண்… பெண்ணரசி!
முதல் பார்வை…
பிறகு காதல் வலையில் சிக்கு வதற்கு அதிக நிமிடங்கள் தேவைப் படவில்லை. அழகு தேவதையே, தேவீ, உன்னை நான் வழிபடுகி றேன்- மகாமாயே!
இப்படிப் பாடலைப் பாடிய வாறு நான் அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். வழிபாடுதான்… வழிபாடு!
இந்த விஷயங்கள் எதுவும் அவளுக்குத் தெரியாது. அவள் என்னைப் பார்க்கவே இல்லை.
நான் அவளைப் பார்த்ததே ஒரு எதிர்பாராத சம்பவம்தான். ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியைப் பார்த் தேன். அவளைப் பார்த்துவிட்டேன்!
உடனடியாக அந்த இடம் புண்ணிய இடமாக மாறிவிட்டது. நான் நின்று கொண்டிருந்த இடமா? ஹோ! அவளை நின்று கொண்டே பார்த்த இடம் அல்லவா? புண்ணிய பூமியின் பகுதி!
180px-VaikomMuhammadBasheerமுழங்கைகள் இரண்டையும் கற்சுவரில் வைத்து, கை விரல்களை தலையின் இரண்டு பக்கங்களிலும் வைத்துக் கொண்டு கிழக்குத் திசையை நோக்கிப் பார்த்துக் கொண்டு நான் நின்றிருந்தேன். சுவரின் அந்தப் பக்கத்தில் வாழை கள் நிறைந்த ஒரு தோட்டம். தோட்டத்தின் எல்லையில் காம்பவுண்ட் சுவர். அதைத் தாண்டி தெற்கு வடக்காக பொதுச்சாலை… சாலையின் அருகில் இரண்டடுக்கு வீடுகள்.
என்னுடைய இடப் பக்கத்தில் கிழக்கு மேற்காக நகரத்தை இரண்டாகப் பிரித்துக் கொண்டு ஓடும் அசுத்தமான ஒரு பெரிய வாய்க்கால். வாய்க்காலின் இரு பக்கங்களிலும் உயர்ந்த கற்சுவர்கள். அந்தக் கரையில் உள்ள கற்சுவரைக் கட்டும் காலத்தில் சுவர் இருந்த வழியில் ஒரு தென்னை மரம் நின்றிருந்தது. தென்னை மரத்து டன் சேர்த்து இருக்கிற மாதிரி சுவரைக் கட்டி விட்டார்கள். காலம் சிறிது கடந்து சென்றதும், அந்த தென்னை மரத்தை வெட்டி னார்கள். அதைத் தொடர்ந்து அந்த வெள்ளை நிறச் சுவரில் ஒரு வெற்றிடம் எஞ்சியது.
அந்த வெற்றிடம் என்று கூறப் படும் இடைவெளி வழியாகத்தான் நான் அவளைப் பார்ப்பேன். சதைப் பிடிப்புடன் பருமனாக இருக்கும் வெளுத்த அழகி… ப்ரேஸியருக்குள் அழுத்தப்பட்டு இருக்கும் கனமான மார்பகங்கள் திரண்டு திரண்டு உந்திக் கொண்டு நின்று கொண்டிருக்கின்றன- உடலை ஒட்டிக் கொண்டிருக்கும் வெள்ளை ரவிக்கைக்குள். மெல்லிய ரவிக்கை யின் வழியாக அனைத்தும் நன்றா கத் தெரியும். கூந்தலை அவிழ்த்துத் தோளில் விரித்துப் போட்டுக் கொண்டு அவள் கனவு காண்கிறாள்!
தெய்வமே!
அவளுடைய இனிய கனவு என்னவாக இருக்கும்? என்னைப் பார்க்கவில்லையா? சொர்க்கத்தின் அழகியே, ஏன் இங்கு பார்க்காமல் இருக்கிறாய்?
நான் நின்று இருமினேன். ஒன்றல்ல, பத்தல்ல- இருமல்; இருமல்களின் சிறிய சிறிய மேக கர்ஜனைகள்!
அனைத்தும் வீணாகிவிட்டது. அந்த கனவுப் பேரழகி கேட்க வில்லை. ஏன் கேட்கவில்லை?
அதற்குப் பிறகு அங்கு இருமல் தான் வாழ்க்கை. இருமல்களின் பரவலான போராட்டம்! அந்த புண்ணிய இடத்திற்குச் சென்று நிற்பது, கருத்த இடைவெளி வழியாகப் பார்ப்பது… அவள் அங்கு எங்காவது இருப்பாளா? திடீரென்று பார்த்தால், உடனடியாக இரும வேண்டும்! முறையாக இருமுவதற் காக ஏராளமான இருமல்களை ஸ்டாக் பண்ணி வைத்துக் கொண்டு காத்து நின்றிருந்தேன். சில நேரங் களில் மின்னலைப் போல பார்ப் பேன். அரை டஜன் இருமல்களை ஒவ்வொன்றாக குறுகிய கால அளவில் வெளியே விடுவேன்! ஒரு பயனும் இல்லை. இருமலைக் கேட்கவும் இல்லை. பார்க்கவும் இல்லை. மரணத்தைத் தழுவி விட்டால் என்ன?
இப்படியே கவலை நிறைந்த ஒன்று, ஒன்றரை மாதம் கடந்து சென்றது. அதற்குள் அந்த வீட்டின், அதன் மேற்குப் பக்கத்தில் இருந்த வீட்டின் வரலாறுகளை நான் தெரிந்து கொண்டேன். குறிப்பிட் டுக் கூறும்படி எதுவும் இல்லை. மானத்துடன் இருக்கும் மானிடர் களின் வீடுகள்.
நான் வழிபடும் தெய்வம் ஒரு வேலைக்காரி. சர்வன்ட்!
அதனாலென்ன? காதலுக்கு ஓலைக் குடிசை என்றும் அரண் மனை என்றும் உள்ள பெரிய வித்தியாசங்கள் ஏதாவது இருக்கிறதா என்ன? காதல் நிரந்தரமானது. புனிதமானது.
ஆனால், அவள் என்னைப் பார்க்கவில்லை. அவளுடைய மன உலகத்தில் நான் தோன்றவே யில்லை.
ஏராளமான இருமல்களின் ஸ்டாக்குடன் நான் நின்று கொண்டிருந்தேன். இறுதியில் நான் முழுமையான ஏமாற்றத் திற்குள்ளானேன். என்னுடைய இருமல்கள் அனைத்தும் இறந்து விட்டன. என்னுடைய உலகம் இருண்டது. இறந்துவிட்டால் என்ன?
ஆச்சரியம்! அவள் என்னைப் பார்த்துவிட்டாள்…! அமிர்த கிரணங்களைப் பரப்பியவாறு உயர்ந்து கொண்டிருக்கும் குளிர் நிலவு என்னைப் பார்த்தது. நான் பார்த்தேன். அவள் பார்த்தாள். நான் பார்த்தேன். அவள் புன்னகைத்தாள். என்னால் புன்னகைக்க முடியவில்லை. புன்னகை என்பது ஒரு பலவீனம் அல்லவா? எனினும், எனக்குள் புதிய ஒரு உற்சாகம் பிறந்தது. இதோ எனக்கு ஒரு புதையல் கிடைத்திருக்கிறது! இறுதியில் என்னுடைய மோகினி மறைந்து போய் விட்டாள். நான் சூனியமாக ஆனேன்.
கவலை நீங்கியது. செயல்களில் அதிகமான உற்சாகம் புரண்டு கொண்டிருந்தது. வாழ்க்கை அழகானதாகத் தோன்றியது.
தினமும் நாங்கள் பார்ப்போம். அவள் புன்னகைப்பாள். நானும் சற்று புன்னகைக்கக் கற்றுக் கொண்டேன்.
காதல் வயப்பட்ட நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. கவித் துவமான நாட்கள்.
அப்படி நாட்கள் போய்க் கொண்டிருந்தபோது ஒரு மாலை நேரம் வந்தது. வானத்திலிருந்து பன்னீர் தெளிப்பதைப் போல கொஞ்சம் மழை பெய்தது. சான்டோ பனியனும் அரை கால் சட்டையும் அணிந்து நான் அந்த கறுத்த இடைவெளிக்கு நேராக வாய்க்காலின் இந்தக் கரையில் நின்று கொண்டிருந்தேன். இடுப் பில் உறை இல்லாத கத்தி இருந்தது. ஒரு தீவிர செயல்கள் செய்பவனிடம் எப்போதும் பயங்கரமான ஆயுதம் இருக்க வேண்டும் அல்லவா?
நான் காதல் தேவதையை எதிர் பார்த்து எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தேன். லாட்ஜுக்கு வருபவர்களும் லாட்ஜில் இருந்து செல்பவர்களும் என்னைப் பார்த் தார்கள். யாராவது வரும்போது “ஒன்றுக்கு’ போவதைப் போல நான் கீழே உட்காருவேன். அப்படி உட்கார்ந்தும் நின்றும் நேரம் சிறிது கழிந்தது. திடீரென்று கறுத்த இடைவெளி வெள்ளை யால், அழகாக நிறைந்தது.
நான் முற்றிலும் சூடாகி விட்டேன். இதயம் தாங்க முடியாத அளவிற்கு… ஓ! வாயில் நீர் வற்றி விட்டது. அப்போது வசீகரமான, இனிய ஒரு குரல்!
“”ஏன் மழையில நனைஞ்சுகிட்டு இருக்கே?”
“”சும்மா…”
உணர்ச்சிமயமான நிமிடங்கள் நகர்கின்றன. எதைப் பற்றியும் அறியாமல் மனிதர்கள் மின்சார வெளிச்சத்தில் மூழ்கி சாலையின் வழியாகப் போய்க் கொண்டிருக் கிறார்கள். நாற்றமெடுக்கும் வாய்க் காலில் எங்கோ ஒரு தவளையை தண்ணீர் பாம்போ சாரைப் பாம்போ வேறு ஏதோ பாம்போ பிடித்திருக்கிறது. தவளை தாங்க முடியாமல் மரண வேதனையுடன் கத்துகிறது. இருட்டிற்கு அடர்த்தி அதிகமாகிக் கொண்டு வருகிறது. காட்சிகள் மறைந்து கொண்டிருக் கின்றன. அவள் கேட்டாள்:
“”போயாச்சா?”
“”இல்லை. நான் அங்கே வரட்டுமா?”
“”எதற்கு?”
“”சும்மா!”
“”வேண்டாம்!”
“”வேணும். நான் வருவேன்!”
“”நாய் இருக்கு!”
“”பரவாயில்லை!”
“”அவர்கள் இந்தப் பக்கம் சாப்பிடுவதற்கு இப்போ வருவார் கள்!”
“”பரவாயில்லை. நான் வருவேன்!”
“”அய்யோ… வேண்டாம்!”
நிறைந்து நின்றிருந்த வெள்ளை நிறம் போய்விட்டது. இடைவெளி முழுமையாகக் கறுத்தது.
நான் சுவரில் ஏறி உட்கார்ந்தேன். வெளிச்சம் வாய்க்காலில் விழுந்து கொண்டிருந்தது- சுவரின் மேற் பகுதியிலும். நான் வாய்க்காலில் மெதுவாக இறங்கலாம் என்று பார்த்தேன். கால்கள் எட்டவில்லை. கால்களை நீட்டி, கைப்பிடியை விட்டேன். ப்ளும்… முழங்கால் வரை சேறு. இடுப்பு வரை நீர். காட்டுச் செடிகளின் முட்களும் புட்டித் துண்டுகளும் இருக்கின்றன என்று தோன்றுகிறது. பாதங்களில் கற்களை வைத்து கட்டிவிட்டிருப்ப தைப் போல கனமாக இருக்க, நான் முன்னோக்கி நகர்ந்தேன். வாய்க்காலின் நடுப்பகுதியை அடைந்தேன். வெளிச்சத்தில் நான் நன்கு தெரிய நின்றிருந்தேன். புரட்சிவாதி…! ஒரு அடிகூட முன்னால் வைக்க முடியவில்லை. சேற்றில் சிக்கி நின்றிருக்கிறேன். ஆட்கள் பார்ப்பார்கள்! முன் னோக்கி நகர வேண்டுமே! நான் முன்னோக்கி நகர்ந்தேன். நகர்ந்து நகர்ந்து வாய்க்காலின் அந்தக் கரையை அடைந்தேன். நான் மேலே பார்த்தேன். அதிர்ச்சி யடைந்து விட்டேன்!
நீர்ப்பரப்பிலிருந்து வானம் வரைக்கும் என்பதைப் போல சுவர் உயரமாக இருந்தது. என்ன செய்வது? எப்படி ஏறுவது? திரும்பிப் போவது என்றால்…? ச்சே… ஏறிவிட வேண்டும்! கை எட்டாத உயரத்தில் சுவரில் ஒரு சிறிய ஆலஞ்செடி வளர்ந்து நின்றிருந்தது.
அந்த ஆலஞ்செடியை நான் பாய்ந்து பிடித்தேன். பிறகு நான் தெரிந்து கொண்டது- நான் சுவரின் மேற்பகுதியில் இருக்கிறேன் என்ற விஷயம்தான்.
“ஹவ்’ என்று அவள் உண்டாக் கிய ஆச்சரியக் குரல் கேட்டது.
ஆனால், அதற்குப் பிறகும் தூரம் இருந்தது. கீழே குதிக்க முடியாது. தூரத்தில் மேற்குப் பக்கத்தில் இருந்த வீட்டின் அரைச் சுவர் இருந்தது. அது சிறியதாக இருந்தது. பூனையைப் போல சுவரின் வழியாக நான் நடந்தேன். மேற்கு வீட்டின் காலி இடத்தில் இறங்கினேன். அங்கு ஒரு தொழுவம் இருந்தது. அது வளைந்து போகும் போது “கிருகிரா’ என்று இலைகள் சத்தம் உண்டாக்கின. இருட்டில் கால்களை எச்சரிக்கையாக வைத்து… வைத்து… மிகவும் மெதுவாக வைத்து… அரைச்சுவரின் அருகில் சென்றேன்.
அவள் மெதுவாக அந்தப் பக்கம் வந்தாள்.
நான் இரண்டு கைகளையும் நீட்டி அவளின் தோளைப் பற்றி இழுத்தேன். மேலே ஏற்றியபோது கல்லின் ஏதோ முனை பட்டு அவளு டைய ரவிக்கை “பர்ர்ர்’ என்று கிழிந் தது. வெள்ளை நிற மார்பகங்கள்.
தொடர்ந்து என்னுடைய காதலின் கன்னத்தில் இரண்டு பலமான, மிகவும் பலமான அடிகள் கிடைத்தன!
எப்படி என்றால்… “”அய்யோ!… அவர்கள் எல்லாரும் இப்போ சாப்பிடுவதற்காக இந்தப் பக்கம் வருவார்கள். போ!” என்று கூறிய போது, மோசமான கெட்ட நாற்றம் கொண்ட ஒரு காற்று அவளுடைய வாயிலிருந்து என்னுடைய முகத் தில் வந்து பட்டது. என்னுடைய தலை மரத்துப் போனதைப் போல ஆனது.
நான் சற்று விலகி நின்றேன். கொஞ்சம் சிறு சிறு குச்சிகள் ஒடிந்தன. ஒரு நாய் குரைத்தது.
“”போ…” என்று கூறி அவள் அங்கிருந்து சென்றாள்.
பிறகு நாய்கள் குரைக்கும் சத்தம்தான். இந்த அளவிற்கு அதிகமான நாய்களா?
நான் மிகவும் மெதுவாக நடந்து சிறிய சுவரில் ஏறினேன். அங்கிருந்து பெரிய சுவரில். அப்ப டியே சற்று முன்னோக்கி நகர்ந் தேன். அப்போது அந்த சுவரும் கீழே இருந்த முற்றமும் வெளிச்சத் தில் மூழ்கியது.
வாழையின் ஒரு இலை நுனி மட்டுமே எனக்கு இருந்த ஒரே மறைப்பு. காற்று வீசும்போது இலை அகலும். நான் வெளிச்சத்தில் நன்றாகத் தெரிவேன்!
அந்தச் சமயத்தில் என்னுடைய சில நண்பர்கள் என்னுடைய அறைக்கு அருகில் போவதைப் பார்த்தேன். அவர்களுக்கு என்னைப் பார்ப்பதற்கு எந்தவொரு சிரமமும் இருக்காது. ஆனால், அவர்கள் பார்க்கவில்லை. என்னை எப்படி சந்தேகப்படுவார்கள்?
என்னவோ பேசிக் கொண்டு இரண்டு மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும்! அவர்களில் வயது குறைவான ஆள்- இளைஞன்- முற்றத்திற்கு வந்து நான் அமர்ந் திருந்த பக்கமாக வந்தான். என்னைப் பிடிப்பதற்காக வருகிறான். பார்த்துவிடுவான். அவமானம்!
“நீ அங்கு இருட்டில் என்னடா செய்றே?’ என்று கேட்டவாறு என்னைப் பிடிப்பான்.
ஆட்கள் கூடுவார்கள். “ஓ… இது நம்முடைய அந்த நெருப்புப் பொறி பத்திரிகையின் ஆசிரியராச்சே! தலைவர்!’ ஆட்கள் கூடுவார்கள்.
தெய்வமே! என்னை இதில் இருந்து ஒரு தடவை காப்பாற்றி விடு! இனிமேல் நான் எந்தவொரு தவறையும் செய்ய மாட்டேன். சத்தியமா… அவன் என்னை பார்த்துவிடக்கூடாது!
நான் கத்தியைக் கையில் எடுத் தேன். அவன் கண்டுபிடித்து விட்டால்… கத்தியைப் பயன்படுத்தி என்னுடைய கழுத்தை அறுக்க வேண்டும்! தெய்வமே! அவனு டைய கண்களின் பார்க்கும் சக்தியை சிறிது நேரத்திற்கு இல்லாமல் செய்!’
கடவுளே!… என்னுடைய நண்பர்கள் என் பெயரைக் கூறி சத்தம் போட்டு அழைக்கிறார்கள். தலைவரைத் தேடுகிறார்கள்! தெய்வமே! என்னை அவமானப் படுத்தி விடாதே.
அவன் எந்தப் பக்கமும் பார்க்காமல் எனக்கு மிகவும் அருகில் வாழை மரத்திற்குக் கீழே வந்து சிறுநீர் கழித்துவிட்டு எழுந்து போனான்.
எனக்கு மிகவும் களைப்பாக இருந்தது. எனக்குள் என்னவோ இல்லாமல் போயிருக்கிறது.
அதற்குப் பிறகு நடந்தது எதுவும் சரியாக ஞாபகத்தில் இல்லை. யாரும் எதையும் தெரிந்து கொள்ள வில்லை. வாய்க்காலுக்குள் குதித்த தையும், உடலெங்கும் கிழித்து ரத்தம் வந்ததையும், சேற்றில் புதைந்ததையும், சுவரில் ஏறி அறை யின் அருகில் சென்று என்னுடைய நண்பர்களுக்கு முன்னால் நின்றதையும் தெளிவில்லாமல் நினைத் துப் பார்க்கிறேன்.
அவர்கள் பதைபதைப்பு அடைந்து என்னைப் பார்த்தார்கள். காதல் சம்பந்தப்பட்ட ஒரு சாகசப் பயணம் முடிந்து வந்திருக்கிறேன் என்பதை அவர்கள் நினைக்க வில்லை. தலைவர் ஏதோ மிகவும் உயர்ந்த செயலைச் செய்துவிட்டு வந்திருக்கிறார் என்பது அவர் களின் நினைப்பு. கடவுளே!
நான் சோப்பு போட்டு நன்றா கக் குளித்துவிட்டு அறைக்கு வந்து ஆடைகளை மாற்றி, தலையை வாரி முடித்து நாற்காலியில் போய் உட்கார்ந்தேன். நடந்த சம்பவங்கள் முழுவதையும் சிஷ்யர்களிடம் சொன்னேன்.
இறுதியில் அவர்கள் கூறினார் கள்:
“”இப்போதே நாம் இந்த இடத்தை மாற்ற வேண்டும்!”
மாறினோம். கனமான இதயத் துடன் இரவின் அமைதியான சூழ்நிலையில் காதல் நகரத்தில் இருந்து நாங்கள் கவலையுடன் விடை பெற்றோம். அந்த வகை யில்… அந்த வகையில்… அவமானத் தின் காயத்தை உண்டாக்காமல் கடந்து சென்ற- காதல் நிறைந்த- தாகம் கொண்ட- மிக உயர்ந்த- கவலை நிறைந்த கால கட்டமே, உனக்கு வணக்கம்!
மங்களம்.

வைக்கம் முகமது பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும், இளம் பருவத்துத்தோழியும்.


:http://www.jeyamohan.in/191#.VqYeJZp97Z4
வைக்கம் முகமது பஷீரின் ஒரு கதாபாத்திரம் குழந்தையாக இருக்கும்போது பள்ளியில் ஆசிரியர் கேட்கிறார் “ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் என்ன வரும்டா?” குழந்தை தன் ஊரில் குன்றுமேலேறி நின்று இரு ஆறுகள் இணைவதைப் பார்த்த ஞாபகத்தில், “இன்னொரு பெரிய ஒன்று’ என்று பதில் கூறுகிறது. அடிவிழுகிறது. எவ்வளவு சொல்லியும் குழந்தைக்குப் புரியவில்லை. இரண்டும் இணையாமலிருக்கும் போதுதான் இரண்டு. இணைந்துவிட்டால் எப்போதும் மிஞ்சுவது ஒன்றுதானே?
முதிர்ந்து பழுத்தபிறகு பஷீர் எழுதிய கதையில் ஒரு கதாபாத்திரம் அறிகிறது `நான் நீ என்ற இரட்டை நிலையிலிருந்து நீ மட்டும் எஞ்சுவதே மரணம்’. அவரது படைப்பிலக்கியத்தின் தொடக்கமும் முடிவும் இவ்விரு அறிதல்களில் உள்ளது. இவ்விரு அறிதல்களும் வேறுவேறு அல்ல. பஷீரின் உலகம் குழந்தைக் கண்களால் அறியபடும் வாழ்க்கைத் தரிசனங்களினால் ஆனது. பஷீர் தன் கடைசிநாள் வரை அந்த குழந்தைவிழிகளை தக்கவைத்துக் கொண்டார். ஆகவே வேடிக்கையும் வியப்பும் மட்டும் கொண்டதாக முற்றிலும் இனியதாக இருந்தது அவருடைய உலகம்.
பஷீரின் இலக்கிய உலகம் முற்றிலும் அவரை மையமாக்கி இயங்குவது. பஷீர் தான் நேரடியாகவும் வேறு பெயரிலும் அவருடைய படைப்புலகு முழுக்க நிரம்பியிருக்கிறார். மலையாள மொழியைக் கற்கத் தொடங்கும் வாசகன் முதலில் வாசிக்கக்கூடிய எழுத்து பஷீருடையது. மிகமிக எளிமையான நடை. அவருடைய மிக நீளமான நாவல்கூட அதிகபட்சம் 80 பக்கம் நீளம் உடையதுதான். மலையாளப் புத்திலக்கியத்தின் முழுமையை அறிந்த பிறகு ஒரு வாசகன் இறுதியில் பஷீரிடம் திரும்பிவந்து அவரே அதன் உச்சகட்ட சாதனை என்பதை அறிய நேரும். பஷீரில் தொடங்கி பஷீரில் முடியும் இந்தப் பயணம் போன்ற ஒன்றை பிறமொழி இலக்கியங்களில் அடையமுடியாது. இதுவே பஷீரின் சிறப்பம்சமாகும்.
கோட்டயம் அருகே தலையோலப் பறம்பு என்ற ஊரில் பிறந்த வைக்கம் முகமது பஷீர் வசதியான மரவியாபாரியின் மகன். வாப்பாவின் வியாபாரம் நொடித்து பரம ஏழையாக ஆகிறது குடும்பம். கோழிக்கோட்டுக்கு வரும் காந்தியை பார்க்கச் செல்கிறார் பள்ளி மாணவனாகிய பஷீர். நகரும் ரயிலுடன் ஓடி காந்தியின் கரத்தை பாய்ந்து தொட்டுவிடுகிறார். அந்த தொடுகை அவரை மாற்றுகிறது.அந்தக்கையை தூக்கியபடி வந்து அம்மாவிடம் ”உம்மா நான் காந்தியை தொட்டேன்!”என்று கூவுகிறார். உம்மாவுக்கு பயம். ‘தலை தெறித்த’ பையன் புதிதாக என்ன வம்பை தொட்டுவிட்டு வந்திருக்கிறானோ என்று.
பஷீர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு தீவிரவாத அமைப்புகளை உருவாக்கினார். சிறை சென்றார். சூ·பி துறவியாக பிரிவுபடாத இந்தியாவில் அலைந்து திரிந்தார். பின்பு எழுத ஆரம்பித்தார். இறுதிவரை ஆழமான இஸ்லாமிய சூ·பி நம்பிக்கையும் காந்தியப் பற்றும் அவரிடம் இருந்தது. அவர் தேசப்பிரிவினை கடைசிக்காலம் வரை ஏற்கவேயில்லை
பஷீரின் எழுத்தை வெறும் சுவாரஸியத்திற்காக, நகைச்சுவைக்காக படிக்கலாம். [ஆரம்ப காலங்களில் பஷீர் தன் நூல்களை தானே சுமந்து சந்தைகளில் விற்பதுண்டு. தன் நூல்களை சிறியதாக எழுதுவதன் காரணத்தையும் அவரே சொல்லியிருக்கிறார். பேருந்து காக்குமிடத்தில் நூலை விற்றுவிட்டு அதை வாங்கியவன் வாசித்து முடிக்கும்வரை அருகேயே நின்று அவனிடம் பேசி அதை மீண்டும் அன்பளிப்பாக பெற்றுக்கொள்ளுதல். ஒரு நூலை குறைந்தது நான்குதடவை விற்றால்தான் வாழமுடியும்! ] ஆனால் கூர்ந்த இலக்கிய வாசகனின் பார்வையில் உள்வாசல்கள் திறக்க விரிவடைந்தபடியே செல்லும் உலகம் அது. திறனாய்வுகளின் மூலம் புதிய புதிய இலக்கிய முறைகளில் பஷீர் மலையாளத்தில் இன்று மீண்டும் மீண்டும் கண்டுபிடிக்கப்படுகிறார். எ.இ. ஆஷர் அவர்களின் மொழிபெயர்ப்பில் (My grandpa had an elephant and other stories.) ஆங்கிலத்தில் வெளிவந்து பரவலான கவனத்தையும் ஈர்த்துள்ளது பஷீரின் படைப்புலகம்.
பஷீரின் இரண்டு சிறு நாவல்களின் மொழிபெயர்ப்பு ஒரு நூலாக தமிழில் குமாரி சி.எஸ். விஜயம் மொழிபெயர்ப்பில் தேசிய புத்தக நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. பஷீரை மொழிபெயர்ப்பது பெரிய சவால். கெ. விஜயம் மொழிபெயர்ப்பில் குறிப்பிடும்படியான வெற்றி பெறவில்லை என்றே கூறவேண்டும். பஷீர் கதை எழுதுபவரல்ல; அவர் கதை சொல்லி, அவ்வகையில் அவர் இ. ராஜ நாராயணனைப் போன்றவர். அவருடைய மொழியில் கோழிக்கோட்டுப் பகுதி முஸ்லீம் உரையாடல் மொழியின் அழகுகள் மிகுதி. குழந்தைகளின் மழலைப் பேச்சையும் பல்வேறுவிதமான கொச்சைகளையும் உபயோகிப்பதில் அவரது ரசனை வியப்பிற்குரியது.
வாசலில் வந்து நிற்கும் ஊதல் இசைக்கும் பக்கிரியைப்பார்த்துவிட்டு ஒருவயது ஷாஹினா வீட்டுக்குள் ஓடிவந்து கூவுகிறது ”பீப்ளி பீச்சண மிஸ்கீன்!” [பீப்பி ஊதும் சாமியார்] இதில் உள்ள சொற்கள் குழந்தையே உருவாக்கிக் கொண்டவை. இதில் குழந்தையின் கீச்சுக்குரலும் உள்ளது. இதை எப்படி தமிழாக்கம் செய்வது? ‘நான் பைசாவ எடுக்கலை இக்கா” என்று ஹனீபா சொல்ல கூடவே அப்பாவுக்கு நிரந்தர ‘கண்ணால் கண்ட சாட்சி ‘யான அபிபுல்லாவும் சொல்கிறான் ‘த்தா பறேணது பி ண்டு ‘ [அப்பா சொல்வதை அபி கண்டேன்] குழந்தைகளின் உலகில் பஷீர் குழந்தையாக சகஜமாக இறங்கிச்செல்கிறார். என் வாசிப்பில் உலக இலக்கியத்தில் மிகச்சிறந்த குழந்தையுலகை பஷீர் படைப்புகளில்தான் கண்டிருக்கிறேன். சகஜமான, நளினமான அவருடைய கதை கூறலை மொழிபெயர்க்கும்போது எப்போதுமே சற்று செயற்கைத்தன்மை வந்து விடுகிறது. இம்மொழிபெயர்ப்பிலும் அது உள்ளது.
இருப்பினும் இவ்விரு நாவல்களின் வழியாக பஷீரின் உலகு குறித்து ஒரு நுட்பமான புரிதல் வாசகனில் ஏற்பட முடியும். `இளம் பருவத்துத் தோழி’ ஒரு எளிய காதல் கதை. கதாநாயகன், பஷீர் போன்ற, மஜித். கதாநாயகி சுஹாரா. அவர்களுடைய காதல் பிள்ளைப்பிராயத்தின் தூய்மையில் பிறந்து மலர்ந்தது. வாழ்வின் கொடுந்துயரங்களினால் நசுக்கி அழிக்கப்பட்டது. இவ்வெளிய கதை ஒருவேளை இன்றைய வாசகனுக்கு உவப்பின்றிப் போகலாம். ஆனால் கதை நகர்வினூடாக பற்பல நுண்ணியத் தருணங்கள் நிகழ்கின்றன.
ஓர் உதாரணம். நொடித்துப் போன தந்தை மகன் வெற்றிகரமான வியாபாரியாக வேண்டும் என்று விரும்பும்போது மஜீத் வாழ்வில் தோல்வியுற்று அலைந்து திரும்பி வந்து ரோஜாத் தோட்டம் அமைக்கிறான். அது அவனுடைய ஆத்மாவின், நுண்ணுனர்வுகளின் மலரல். அதை தனக்கெதிரான ஒரு கேலியாகவே அவர் தந்தையால் பார்க்க முடிகிறது. ‘ நீ என்ன சம்பாதித்தாய்?’ என்கிறார் அவர். மஜீத் சம்பாதித்தது வானம் போல விரியும் பூக்களை மட்டுமே. அபத்தமாக உலகில் மலர்ந்து நிற்கும் அழகுகளை.
மஜீத் வெகுகாலம் கழித்து வந்து பார்க்கும்போது நோயுற்று மறையும் சுஹாரா சொல்ல வந்து சொல்லாமல் உதட்டில் உறையவிட்டுப் போன ஒன்று – அது என்ன எனும் வினாவுடன் முடிகிறது இந்நாவல். மலையாள விமரிசகர் ஒருவர் எழுதினார்; `குமாரன் ஆசானின் அமரகாவியம் `உதிர்ந்த மலரி’ல் உதிர்ந்து விழுந்த மலர் கண்டு கவிஞன் மனம் விரிகிறது. உயிரின் நிலைமையில் தொடங்கி பிரபஞ்சத்தின் நித்தியத்துவம்வரை அது தொட்டுச் செல்கிறது. ஒவ்வொரு உதிர்ந்த மலரிலும் பிரபஞ்ச இயக்கத்தின் மாபெரும் ரகசியம் பொதிந்துள்ளது. சுஹரா ஓர் உதிர்ந்த மலர்.’
`பாத்துமாவின் ஆடு’ உற்சாகமான ஒரு குடும்பசித்திரம். மனநிலை பிறழ்ந்து, சிகிச்சைக்குப்பிறகு, ஓய்வெடுக்கும் பொருட்டு தன் குடும்ப வீட்டுக்கு வந்து தங்குகிறார் பஷீர். அங்கு அவருடைய உம்மா, தம்பி ஹனீபா, அவர் மனைவி, தங்கை, அவள் கணவன் இவர்களுடைய குழந்தைகள் மற்றும் உம்மாவின் வளர்ப்புக் கோழிகள் உள்ளனர். பக்கத்தில் தங்கை பாத்துமாவும் அவள் குழந்தைகளும் கணவனும் அவளுடைய செல்ல ஆடும் வசிக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணாதிசயம். ஒவ்வொருவரும் ஒருவரையருவர் சார்ந்திருக்கிறார்கள். ஏமாற்றுகிறார்கள். ஏமாறுகிறார்கள். அன்பு செலுத்துகிறார்கள். இந்த குடும்ப நாடகத்தை அற்புதமான நகைச்சுவையுடன் கூறுகிறார் பஷீர். இந்நாடகத்தில் மையக்கதாபாத்திரம் பாத்துமாவின் ஆடுதான்.
பஷீரின் படைப்பியக்கத்தின் சிறப்பான இடங்கள் குழந்தைகளையும் மிருகங்களையும் அவர் காட்டுமிடங்கள்தான். இந்நாவல் அதற்கு சிறந்த உதாரணம். விமரிசகர் கல்பற்றா நாராயணன் எழுதுகிறார் “அபாரமான பசியுள்ளது பாத்துமாவின் ஆடு. பசியில் அதற்கு ருசி வளர்கிறது. எல்லா இலையும் தித்திக்கும் பெருங்காடு அதன்முன் விரிந்து நிற்கிறது. பலா இலை, சாம்ப மரச்சருகுகள், பஷீரின் புத்தகங்கள், அபியின் சட்டை எல்லாமே அதற்கு இனிய உணவுதான்” [ ஏதிலையும் மதுரிக்குந்ந காடுகளில்] அந்த அற்புதமான ஆடு வேறு ஏதுமல்ல, பஷீரின் கனிந்த ஆன்மாதான். மானுடம் மீதான அளவிறந்த அன்பே பஷீரின் தரிசனம். மனிதனின் குரூரத்தை, சுயநலத்தை, அற்பத்தனத்தை அது முடிவின்றி மன்னிக்கிறது. உளம் திறந்து நேசிக்கிறது. அந்தப் பிரியத்தின் ஒளியில் குரூரமான வாழ்வுநாடகம் இனிய நகைச்சுவை அரங்காக மாறிவிடுகிறது. பஷீரின் மொத்த படைப்புலகிலும் தீமையின் துளிகூட இல்லை. கசப்போ கோபமோ எங்கும் இல்லை. தேவர்களின் பார்வையில் மானுட வாழ்வு இப்படித்தான் இருக்கும் போலும்.
ஆனால் இந்த அன்பும் கனிவும் மனித வாழ்க்கையின் குரூரங்களைக் காணாத மழுங்கிய தன்மையின் விளைவா? சுய ஏமாற்றா? இல்லை. பஷீர் அளவுக்கு மானுடக்குரூரத்தைக் கண்டவர் குறைவே. அவருடைய ‘சப்தங்கள்’ போன்ற ஆக்கங்கள் குரூரத்தையே சித்தரிக்கின்றன. அதிலிருந்து தாண்டிவந்து அனைத்தையும் எல்லையில்லாது மன்னிக்கும் மார்போடணைத்து நேசிக்கும் மனவிரிவை அவர் அடைந்தார். பாத்தும்மாவின் ஆடு நாவலில் கூட பஷீரின் குடும்பம் எப்படி இருக்கிறது? அவர் நோயுற்று [எனக்கு நல்ல சுகமில்லை. கொஞ்சம் பைத்தியம். வேறொன்றுமில்லை] வந்து தங்கியிருக்க அவரது மொத்த குடும்பமே அவரைத்தேடிவந்து காசு கேட்டுக் கொண்டிருக்கிறது. ‘இத்தா பெரிய எழுத்தாளர். புத்தகமெல்லாம் அச்சிட்டு விற்கிறார். அப்படியானால் பூத்த பணம் கைவசமிருக்கும். பிள்ளையா குட்டியா, கொடுத்தால் என்ன?’ என்பது அவர்களின் நினைப்பு.
எந்தக் கதாபாத்திரமும் பஷீரைக் காணும்போது பேச்சின் முடிவில் ‘ இத்தா எனக்கு ஒரு அம்பது ரூபா தா’ என்றுதான் சொல்கிறார்கள். அம்மா சொல்கிறாள் ” நீ எனக்கு ஒரு அம்பது ரூபா கொடு. பாத்தும்மா அறிய வேண்டாம். அபுபக்கர் அறியவேண்டாம். ஹனீபா அறியவேண்டாம்…” கொடுத்த பணம் சுடச்சுட பாத்துமாவால் கண்டுபிடிக்கப்பட்டு கொள்முதல் பண்ணப்பட்டுவிடும். இந்த அம்மாதான் தலைமறைவாக திரியும் மகன் பசித்து வருவான் என சோறு வைத்துக் கொண்டு ஒருநாள் தவறாமல் வருடக்கணக்காக இரவெல்லாம் காத்திருந்தவள்!
மைத்துனன் ஹனீபா மைத்துனர்களுக்கே உரிய மனோபாவத்தின்படி பஷீருக்கு உரிய எல்லா பொருளும் தனக்கு உரியதே என எண்ணுகிறான். கேட்டால் மொத்தமாக ஒரே பதிலைச் சொல்கிறான் ”என்னை உங்களுக்கு வேண்டாமென்றால் நான் பட்டாளத்துக்கு போறேன். இந்திய அரசாங்கத்துக்கு என்னோட தேவை இருக்கு” அவன் மனைவி சொல்கிறாள் ”நானும் பட்டாளத்துக்குபோய் கஞ்சி காய்ச்சிக் கொடுக்கிறேன்.” அபியும் ஆமோதித்துச் சொல்கிறான் ”அபியும் பட்டாளத்துக்கு போரேன்!”
பாத்துமா மொத்தமாகவே பிறந்த வீட்டை சுரண்டிக் கொண்டிருக்கிறாள். ஆடு காலையிலேயே இங்கே வந்துவிடும். கஞ்சித்தண்ணி, உதிரும் இலைகள் ,சப்தங்கள் புத்தகத்தின் பிரதிகள் முதலியவற்றை தின்னும். பால் கறக்க பாத்துமா கூட்டிப்போய்விடுவாள். அதைறைங்கேயே ரகசியமாகக் மடக்கி கறந்து குழந்தைகளுக்கு பால்காப்பி போடப்படுகிறது. பாத்தும்மா கண்ணிருடன் சொல்கிறாள். ”இந்த அநியாயம் உண்டா? இப்படி சொந்த ஆட்டிலேயே திருடுவார்களா?” அதன் பின் குழந்தைகல் நேரடியாகவே ஆட்டுபபல் அருந்துகின்றன. பாத்தும்மா அண்ணாவை கூட்டிக் கொண்டுபோய் சாப்பாடு போடுவது கூட காசுக்காகவே. இந்த மொத்த சுயநலப்போராட்ட்டத்தையும் நன் பிரியம் மூலம் ஒரு வேடிக்கை நாடகமாக மாற்றிக் கொள்கிறார் பஷீர்.
மார்போடு அணைக்கத் துடிக்கும் கரங்களுடன் பார்க்கும் பார்வையில் சித்தரிக்கப்பட்டவை பஷீரின் குழந்தைகள். அவர்களுடைய மன இயக்கங்களை பஷீர் சித்திரிக்கும் விதமே அலாதி. வீட்டின் குழந்தைகளை பட்டாளமாகக் கூட்டிக்கொண்டு பஷீர் குளிக்கச்செல்கிறார். எல்லாருமே முழு நிர்வாணம். ஆற்றில் குளித்து முடித்து கரையில் நிற்கும் போது அபிக்கு வெட்கம். ” பெரிய வாப்பா எனக்கு வேட்டி வேணும்” ஏன்? காரணம் அபியின் சமவயது குழந்தை இடுப்பில் துணி அணிந்து சற்று தள்ளி நிற்கிறது. பஷீர் ஒரு துண்டை அவனுக்கு உடுக்க வைக்கிறார். உடனே மற்ற குழந்தைகளுக்கும் வெட்கம் பிடுங்கித் தின்கிறது. ஒவ்வொன்றுக்காக துண்டு பனியன் என உடுக்க வைத்தால் கடைசியில் எஞ்சுவது பஷீருக்கு இடுப்பிலிருப்பது மட்டுமே
ஆனால் தூய்மை நிரம்பிய குட்டி தேவதைகளாக குழந்தைகளை பஷீர் காட்டவில்லை என்பது மிக முக்கியமான விஷயம். குழந்தைகள் மனிதகுலத்தின் தீமைகளும் பாவங்களும், பாவனைகளும் விதை நிலையில் உறங்கும் நிலங்களாகவே அவர் படைப்புலகில் வருகிறார்கள். நுணுக்கமாக பெரியவர்களின் இருட்டுக்களை அவர்கள் பிரதியெடுக்கிறார்கள். அபி ஹனீ·பாவின் நடமாடும் சாட்சியாக ஆக்கப்பட்டிருக்கிறான். இயற்கையான மிருக இயல்புகளை செய்முறைகளாக மாற்றிக் கொள்ள பயிற்சி எடுக்கிறார்கள் குழந்தைகள்.
உண்மையில் பஷீரின் குழந்தைகளைக் கூர்ந்து பார்க்கும்போது அவர் மனித குலம் மீது கொண்டிருந்த கணிப்பு என்ன என்ற வினா எழுந்து நம்மை துணுக்குற வைக்கக்கூடும். மனிதனின் அடிப்படையான இருண்மை குறித்து இந்த அளவுக்குப் புரிதல் கொண்ட ஒரு படைப்பாளியை ஐம்பதுகளின் நவீனத்துவர்களிலேயே தேட முடியும். ஆனால் இந்த தரிசனத்திலிருந்து இருண்மை நிரம்பிய பார்வைக்கு பதிலாக பிரகாசம் கொப்பளிக்கும் இனிய நோக்கு ஒன்று பிறந்து வருவதன் ரசவாதமே படைப்பிலக்கியச் செயல்பாட்டின் நீங்காத மர்மம்.
‘பாத்தும்மாவின் ஆடி’ல் கதை என ஏதுமில்லை. பஷீரின் குடும்ப அனுபவங்கள் தன்னிலையாகச் சொல்லப்படுகின்றன. உறவுகள் வழியாக பஷீர் அவரை அலைக்கழித்த தரிசனங்களின் பைத்தியவெளியில் இருந்து மீண்டு வருகிறார். உறவுகளை பஷீர் ஒரு மனிதனை அணைத்துப் புகலிடம் கொடுக்கும் மரநிழலாக காண்கிறார் என இந்நாவல் காட்டுகிறது. மனிதன் தனியாக இருக்க முடியாதவன் என, பிரியததை கொண்டும் கொடுத்தும்தான் அவனால் வழ்ழ முடியும் என. இதுதான் பஷீரின் வாழ்க்கை நோக்கா?
பஷீரின் படைப்புலகு குறித்து அப்படி எளிதான முடிவுகளுக்கு வந்து விடமுடியாது. அவர் வாழ்வை நேசித்தாரா என்றுகூட திட்டவட்டமாக கூறிவிட முடியாது. ஒருவேளை ஒரு மேற்கத்தியமனம் பஷீரை நெருங்கவே முடியாது போகக்கூடும். ஏனெனில் பஷீர் சூ·பிமரபில் வந்தவர். சூனியப் பெருவெளியின் தரிசனத்தை சில தருணங்களிலேனும் அறிந்தவர். பாலைவனவெளியில் தகதகத்துச் சுழலும் மாபெரும் நிலவைக் கண்டு, “அல்லா! உனது மகத்துவம் என்னை கூச வைக்கிறது. அதை தாங்கும் சக்தி எனக்கில்லை” என்று கூவியபடி கதையன்றில் நகரின் சந்துகளுக்குள் ஓடுகிறார் பஷீர்.
ஆம், வெறுமையில் மகத்துவத்தையும் மகத்துவத்தில் வெறுமையையும் கண்டு தெளிந்த சூபிதரிசனத்தின் பின்னணியில்தான் பஷீரை புரிந்து கொள்ளமுடியும். எந்த நவீனப் படைப்பாளியையும் விட பஷீருடன் ஒப்பிடத்தக்கவர்கள் குணங்குடி மஸ்தான் சாகிப் முதலிய சூ·பி துறவியர்தாம். ஆன்மிகம் உயரிய அங்கதத்தைச் சந்திக்கும் இடம் இதில் முக்கியமானதாகும். பஷீரின் சிரிப்பு ஆயிரம் வருடங்களாக கீழை ஞனமரபில் இருந்து வரும் சிரிப்பு. ஜென் கதைகளிலும் சித்தர் பாடல்களிலும் மீண்டும் மீண்டும் தென்படுவது அது. அற்பத்தனத்திலும் குரூரத்திலும் அகங்காரத்திலும் மூழ்கிய மானுடத்தைக் கண்டு பிரியத்துடன் புன்னகைத்துச் சென்ற சூபி பஷீர்.
[பாத்தும்மாவுடைய ஆடும் இளம் பருவத்துத்தோழியும் : வைக்கம் முகமது பஷீர். தமிழாக்கம் குமாரி கெ.விஜயம். நேஷனல் புக் டிரஸ்ட்

பஷீர் : மொழியின் புன்னகை


எம்.ஏ.ரஹ்மான் தயாரித்த ‘பஷீர் த மான்’ ஆவணப்படம் பார்த்துவிட்டு இறங்கிய ரசிகர்களில் ஒருவரிடம் ‘படம் எப்படி?”என்று கேட்கப்பட்டபோது ”நல்ல படம். ஆனால் ஹீரோ சரியில்லை. மோகன்லால் நடித்திருக்கலாம்.”
[ஒன்று]
நூற்றாண்டு காணும் எந்த ஓர் எழுத்தாளனும் வேறுவழியில்லாமல் தொன்மமாக ஆகிவிட்டிருப்பான். பஷீரைப்பொறுத்தவரை அவர் வாழும்போதே அப்படி ஆகிவிட்டவர். அதற்கு அகக் காரணம் என்பது பஷீரின் ஆக்கங்களே. அவை முழுக்க முழுக்க அவரது குரலில் ஒலிப்பவை. பஷீரின் எப்போதைக்கும் உரிய பேசுபொருள் அவரேதான். ‘வினீதனாய சரித்ரகாரன்’ [பணிவுள்ள வரலாற்றாசிரியன்] எல்லாக் கதைகளிலும் தன் இளம்புன்னகையுடன் வந்து நின்று பேச ஆரம்பிக்கிறான்.” அன்று காலை சூரியன் கிழக்கு வானத்தில் வந்து நின்று கீழே ஸ்தலத்தை நோக்கினான். வேறுவிசேஷம் ஒன்றுமில்லை. எல்லாம் வழக்கம்போல” [ஸ்தலத்தே பிரதான திவ்யன்] என்று கதையைச் சொல்ல ஆரம்பிப்பவனே அவன்தான். பஷீர் எழுத்தாளரே அல்ல, கதைசொல்லி. பஷீரின் குரலில் அல்லாமல் அவரது கதைகளை நாம் நினைவுகூரவேகூட முடிவதில்லை. வாசகன் பஷீரைத் தொடர்ந்து பார்த்தபடியே இருக்கிறான். பஷீர் திருடனாக, நாடோடியாக, சமையற்காரராக, கைஜோசியக்கரராக மாறுவேடமிட்டு அவன் முன் வந்துகொண்டே இருக்கிறார். மெல்லமெல்ல அவன் நெஞ்சில் ஒரு படிமமாக ஆகி நாள்செல்லச் செல்லத் தொன்ம வடிவம் ஆகிறார்.
பஷீரின் இந்த தொன்மத்தன்மையை கண்டுபிடித்த வணிகர் என டொமினிக் சாக்கோ கிழக்கேமுறியைச் சொல்ல வேண்டும். கேரள இலக்கியச் சூழலில் எழுபதுகளில் பஷீர் கிட்டத்தட்ட மறைந்தே போயிருந்த ஒரு காலகட்டம் இருந்தது என்று சொன்னால் இன்று மலையாளிகளே நம்ப மாட்டார்கள். எழுபதுகளில் கேரளத்தில் இடதுசாரி தீவிரவாதம் இலக்கியத்தை மூழ்கடித்தது. அதன் வீழ்ச்சி உடனடியாக இருத்தலிய அலையை உருவாக்கியது. இந்த மனநிலைகள் பஷீரைப் பொருட்படுத்துவன அல்ல. இவை அரசியலை மையமாக்கியவை. பஷீர் ஓர் ‘அரசியலற்ற’ பிராந்தியத்தில் நின்று எழுதிக் கொண்டிருந்தார். தன் அலைச்சலையும் குடும்பச் சூழல்களையும் வைத்து எளிய நகைச்சுவைக் கதைகளை எழுதும் ஒரு பழைய எழுத்தாளராக பஷீர் நோக்கப்பட்டார். தகழி ஓரளவுக்கு இக்காலகட்டத்திலும் கவனிக்கப்பட்டமைக்கு அவரது இடதுசாரித்தனம் காரணம். பி.கேசவதேவ் மேடை மேடையாகப் போய் கர்ஜனை செய்து தன் மீது மேலோட்டமான கவனத்தை ஈர்த்தார். உறூப் [பி.சி.குட்டிகிருஷ்ணன்] காரூர் நீலகண்டபிள்ளை ஆகியோர் மறக்கப்பட்டனர். பஷீர் பொருட்படுத்தப்படவில்லை.
இக்காலகட்டத்தில்தான் சாகித்ய பிரவர்த்தக சஹஹரண சங்கம் [இலக்கியவாதிகள் கூட்டுறவு சங்கம்] என்ற மாபெரும் பிரசுர நிறுவனம் அதன் தூண்களில் ஒருவராக இருந்த டி.சி.கிழக்கேமுறியை வெளியேற்றியது. அவர் டி.சி புக்ஸ் என்ற இந்திய மொழிகளில் இன்று மிகப்பெரிய பிரசுர நிறுவனமாக விளங்கும் அமைப்பைத் தொடங்கினார். பஷீரின் நூல்களை வெளியிட ஆரம்பித்தார். பஷீரின் நூல்களை ஒருரூபாய் விலையில் சிறுசிறு பிரசுரங்களாக வெளியிட்டார் டி.சி. இவற்றை கேரளம் முழுக்க வழக்கத்துக்கு மாறான கடைகளில் வைத்து விற்றார்.இந்நூல்களில் பஷீர் குறித்த  அறிமுகக் குறிப்பு விரிவாகவே இருக்கும்– இன்றுவரை கிட்டத்தட்ட அதே வரிகள் அவரது நூலறிமுகங்களில் தொடர்கின்றன. பஷீரின் நாடோடி + புரட்சிக்காரன் +சூஃபி படிமத்தை இவை கட்டமைத்தன. அவர் செய்த பதினாறுக்கும் மேற்பட்ட தொழில்கள் அவற்றில் பட்டியலிடப்பட்டிருக்கும். அன்றைய இருத்தலியல் அலை, இலக்கியம் வாசித்துப் பழகிய மேநிலைக்குழுவுக்கு உரியதாகவே இருந்தது. மயக்கிய கப்பையை சாளைமீன் சேர்த்துக் குழைத்து உண்ணும் சாதாரண மக்களுக்கு ஏது இருத்தலியம்? பஷீர் டி.சி கிழக்கேமுறி வழியாக அம்மக்களை நேரடியாகச் சென்று சேர்ந்தார். அவர்களை சிரிகக் வைத்தார். அவரது அழியாத இலக்கிய இடம் இவ்வறாக உருவானதேயாகும்.
பஷீரைப் புரிந்துகொள்ள அக்கால நவீனத்துவ திறனாய்வாளர்களால் இயலவில்லை என்பதை இப்போது வாசிக்கும்போது தெரிந்துகொள்ள முடிகிறது. கேரள வாசகர்களில் மிகப்பெரும்பான்மையினர் நுண்ணிய இலக்கிய ஆக்கங்களை உள்வாங்கும் திறனற்றவர்கள் என்பதே என் அவதானிப்பாகும். பல்வேறு அரசியலியக்கங்களால் இலக்கியக் களத்தில் கொண்டுவந்து கொட்டப்படும் பெரும்தொகையினர் இவர்கள். அதிகமாகப் பேசப்படுவதை வாசிப்பார்கள், மேலே தட்டுப்படும் கருத்துக்களை எடுத்துக் கொள்வார்கள். ஆகவே கேரள இலக்கிய விவாதங்களில் இலக்கியத்தின் மேல்தளத்து அரசியலே எப்போதும் இலக்கியம் என்ற தோரணையில் பேசப்படுகிறது. சீரிய இலக்கிய வாசகர்கள் தமிழகத்தின் அளவே இருப்பார்கள். அவர்களை இந்த லட்சக்கணக்கான பேர் கொண்ட திரை முற்றிலும் மறைத்துவிடுகிறது.
ஆகவே இயல்பாகப் பொதுவாசகர்கள் பஷீரைப் புரிந்து கொண்டார்கள், கொள்கிறார்கள் என நான் எண்ணவில்லை. பஷீரை அவர்கள் புரிந்துகொண்டிருந்தார்கள் என்றால் பஷீருக்கு சமானமான உலகத்தில் இயங்கிய காரூர் நீலகண்டபிள்ளை, பட்டத்துவிளை கருணாகரன், விகேஎன் போன்றவர்கள் மேல் அதேயளவுக்கு ஆழ்ந்த கவனம் இருந்திருக்கும், அப்படி இல்லை. பஷீர் கேரளம் முழுக்க எளிய வாசகர் நடுவே ஆழமான நேரடிப்பாதிப்பைச் செலுத்த ஆரம்பித்த பின்னரே இந்தப் பெரும்பான்மையினரான அரசியல் வாசகர்கள் அவரை அணுகினர். அவரது ‘சூஃபி’ படிமத்தைத் தாங்களும் ஏற்றுக்கொண்டு பேச ஆரம்பித்தனர். பஷீர் கேரளத்தின் நவீன இலக்கியத் தொன்மம் ஆக மாறியது இவ்வாறுதான்.
எண்பதுகளின் தொடக்கத்தில் இந்தத் தொன்ம மயமாதல் அதன் முழுவீச்சில் நடந்த காலகட்டத்தில்தான் நான் கேரளத்தில் இருந்தேன். தொடர்ச்சியான பத்திரிகைக் கட்டுரைகள் மூலமே இது நிகழ்ந்தது. பஷீரின் போப்பூரில் உள்ள வீடு, மங்கோஸ்டைன் மரம், சாய்வுநாற்காலி, கட்டன் சாயா, பீடி, மூக்குக் கண்ணாடி என வர்ணனைசெய்யும் கட்டுரைகள் மாதத்துக்கு மூன்று வீதம் வெளியிடப்பட்டன. இக்காலகட்டத்தில் பஷீர் அவரது முதுமையை எய்தி கால இட போதத்தை இழந்து கோர்வையில்லாமல் பேசுபவராக ஆனார். அதை ஞானமொழிகளாக ஆக்கும் கற்பனை வளம் இதழாளருக்கு இருந்தது. இத்தகைய கட்டுரைகளைப்பற்றி அப்போதே பலரும் கிண்டல்செய்து எழுதியிருக்கிறார்கள். கட்டுரையாளர் கோழிக்கோட்டில் இருந்து கிளம்பும்போதே தொடங்கிவிடும் கட்டுரைகள் விரிவான வர்ணனைக்குப்பின் பஷீர் சொல்லும் உதிரி வரிகளுக்குத் தத்துவ அர்த்தம் அளித்துக் கற்பனாவாதச் சொற்களில் முடியும். ‘போப்பூர் சுல்தான்’ ‘மலையாளத்தின்றெ சூஃபி’ ‘ போன்ற சொல்லாட்சிகள் உருவாகி சலித்து ஒருகட்டத்தில் எம்.கங்காதரன் போன்ற திறனாய்வாளர்கள் இச்சொற்களை மலையாளத்தில் தடைசெய்யவேண்டும் என்று சொல்லும் அளவுக்குச் சென்றது
இதேயளவுக்கு ஓவியர் நம்பூதிரி வரைந்த பஷீரைப்பற்றிய கோட்டோவியங்களும் பங்களிப்பாற்றின. அவை பஷீர் ஒருவரல்ல ஏராளமான ஆளுமைகளின் தொகை என்ற சித்திரத்தை உருவாக்கி இன்றுவரை நிலைநிறுத்தியிருக்கின்றன. எம்.ஏ.ரஹ்மான் தயாரித்த ‘பஷீர் த மான்’ ஆவணப்படத்துக்காக வரையப்பட்டவை இவை.
பஷீர் மலையாள இலக்கியத்தின் வாழும் தொன்மமாக ஆனபின்னர் அதிலிருந்து அவரது கதைகளுக்குள் சென்று அர்த்தம் கொள்ளும் போக்கு வாசகர்கள் நடுவே உருவாயிற்று. பஷீரின் கதாபாத்திரங்களை தேடி நிருபர்கள் காமிராக்களுடன் சென்றார்கள். பாத்துமாவிடமே அவரது ஆட்டைப்பற்றிக் கேட்டுக் கட்டுரைகள் எழுதினார்கள். மெல்ல மெல்ல நாம் இன்று காணும் ‘மூலவிக்ரஹ’த் தன்மை பஷீருக்கு உருவாயிற்று. இப்போது நூற்றாண்டுக் கொண்டாட்டங்களில் அது உச்சமடைந்திருக்கிறது. பஷீரைக் கொண்டாட அவரைப் படிக்கவே வேண்டியதில்லை என்கிற அளவுக்கு.
இது பஷீரை அணுகுவதற்கு மிகப் பெரிய தடைகளை உருவாக்கும் அம்சம் என்று சொல்ல வேண்டியதில்லை. சென்ற காலங்களில் பஷீர் பற்றி உற்சாகமாகப் பேசிய பல மலையாள வாசகர்களிடம் விவாதித்திருக்கிறேன். பஷீரின் ஒரு சொல்லாட்சியைக்கூட அவர்களால் நினைவுகூர்ந்து சொல்ல முடியவில்லை. அவர்கள் அத்தனைபேருமே அவர் சூஃபி என்றும், சிரிக்கும் கலகக்காரர் என்றும் சொன்னார்கள். அந்த முடிவுக்கு எப்படி வந்துசேர்ந்தீர்கள் என்று கேட்டபோது பஷீரின் கதைகளுக்கு உருவக வாசிப்பு கொடுத்து, கோட்பாட்டு விளக்கம் அளிக்கத் தொடங்கினார்கள். அதைவிட பஷீர் நூல்கள் மேல் சாணியடிக்கலாம். அவர்கள் எவருமே பஷீரை அறிந்தவர்களல்ல என்றே எண்ணுகிறேன்.
இன்றைய மலையாளப் பொதுவாசகன் படைப்பில் அரசியல் நம்பிக்கைகள் மற்றும் கோட்பாடுகளை மட்டுமே எடுக்கத்தெரிந்தவன். அவனால் பஷீரை அணுகவே முடியாது. அவன் பஷீர் பற்றி வைக்கும் விளக்கங்களையே வாசிக்கிறான். அதனால்தான் பஷீர் பற்றிக் கடந்த இருபதாண்டுகளில் ஒரு புதிய வாசிப்புக் கூட மலையாளத்தில் நிகழவில்லை– ஒரே விதிவிலக்கு கல்பற்றா நாராயணன் எழுதிய ”ஏதிலையும் மதுரிக்குந்ந காடுகளில்…” என்ற கட்டுரை. அது பஷீரை ஒரு நடையியலாளராக [Stylist] மட்டுமே அணுகி அவரது சொல்விளையாட்டுகளை நோக்கி நம்மைக் கொண்டுசெல்கிறது
[இரண்டு]
பஷீரின் கதைகள் வலுவான மையக்கரு கொண்டவை அல்ல. திட்டவட்டமான கதைக்கட்டுமானம் உடையவும் அல்ல. ஆழமுள்ள கதைமாந்தரும் அவர்கள் சுமக்கும் மதிப்பீடுகளும் அம்மதிப்பீடுகள் மோதும் நாடகீயத் தருணங்களும் அவற்றில் இல்லை. புனைவுத்தருணங்கள் கவித்துவ தரிசனத்தின் ஒளியுடனோ தத்துவ தரிசனத்தின் உக்கிரம் கொண்டோ வெளிப்படுவதில்லை. நாம் எந்த அம்சங்களினால் தல்ஸ்தோயை, தஸ்தயேவ்ஸ்கியை, மாப்பஸானை, தாமஸ் மன்னை இலக்கிய மேதை என்கிறோமோ அந்தக் கூறுகளை பஷீரில் காண முடியாது. பஷீரில் என்ன இருக்கிறது, வெறும் சுயபுராணமும் அசட்டு நகைச்சுவையும் எட்டாம்கிளாஸ் தரத்து மலையாளமும்தானே என ஒரு விமரிசனக்குரல் எழுந்தது மலையாளத்தில் [‘உப்பூப்பான்றே குழியான’கள் என்ற நூல். கெ.ரகுநாதன்] வழக்கமான ஒருவாசகன் பஷீரைப் பார்த்தால் என்ன கிடைக்குமோ அதுதான் அந்நூலாசிரியருக்கும் கிடைத்தது. அவருக்குப் பொருட்படுத்தும்படியான ஒரு பதில் அங்கே சொல்லப்படவில்லை.
பஷீரின் ஆக்கங்கள் அவற்றின் மொழிநடையால் மட்டுமே பேரிலக்கியங்களாக ஆகின்றன. தன் நாற்பதுவயது வரை ‘அனல் கக்கும்’ இலக்கியங்களையே எழுதிவந்ததாகவும் ஒரு கட்டத்தில் அவற்றையெல்லாம் துணிந்து கொளுத்திவிட்டு இன்றைய நடைக்கு வந்ததாகவும் பஷீர் எழுதியிருக்கிறார். பஷீரின் தலைக்கு பிரிட்டிஷ் அரசு விலைவைத்த, திருவிதாங்கூர் அரசு அவரை சிறையில் அடைத்த எழுத்துக்கள் எதுவுமே இன்று கிடைப்பதில்லை. பஷீர் பஷீராக ஆனபிறகுள்ள எழுத்துக்களே இன்று கிடைக்கின்றன.
பஷீரின் முந்தைய காலகட்டத்தின் எச்சம் என்று ‘சப்தங்கள்’ குறுநாவலைச் சொல்லலாம். அது ஒருவகையில் எதிர்ப்பு ஓங்கிய ஆக்கம். அனல் இருக்கிறது. இன்றைய வாசிப்பில் அது பலவீனமான ஒரு பஷீர் படைப்பாகவே தெரிகிறது. அதில் உள்ள அமைப்புக்கு எதிரான அராஜக நோக்கு மட்டுமே இன்றைய பஷீரில் ஒட்டும்.
பஷீரின் ஆக்கங்களில் இன்று நமக்கு கிடைக்கும் குறிப்பிடத்தக்க ஆரம்பகால புனைகதை என்பது ‘பால்யகால சகி ‘ தான். இது மிக எளிமையான ஒரு காதல் கதை. எளிய நேரடியான மொழியில் சொல்லப்பட்டிருக்கிறது. பஷீர் இரண்டு விஷயங்களை முற்றாகத் தவிர்த்திருக்கிறார். ஒன்று சூழல் விவரணை. அக்கால எழுத்துக்களில் இது மிக அதிகம். மஜீதின் வீடும் குடும்பமும் சரி சுஹராவின் குடும்பமும் சரி எளிய வேகமான கோட்டுச்சித்திரங்கள் போலத்தான் நமக்கு அறிமுகமாகின்றன. அதேபோல மன உணர்வுகளை விரிவாகச் சொல்வதையும் பஷீர் தவிர்த்துவிடுகிறார். பிற்பாடு பஷீரில் உருவாகி வந்த நுண்ணிய மொழிநிகழ்வுகள் எதுவுமே இந்நாவலில் இல்லை. ஆகவே இந்நாவல் இன்றைய வாசிப்புக்கு ஒரு கதைச்சுருக்கம் போலவே உள்ளது.
ஆயினும் இதை இன்றும் முக்கியமான ஆக்கமாக நிலைநாட்டும் அம்சம் இதில் மிக இயல்பாக உருவாகிவந்திருக்கும் படிமத்தன்மை. இந்த எளிய காதல்கதையை நெஞ்சுருக்கும் கவிதையாக ஆக்குவது இந்த அம்சமே. வாழ்க்கையைத் தேடி வீடுவிட்டிறங்கித் தோற்றுத் திரும்பிவந்து மஜீத் நட்டுவளர்க்கும் ரோஜாத்தோட்டம் ஓர் உதாரணம். சுஹரா ஏதோ சொல்ல வந்து சொல்லாமலேயே இறக்கிறாள். ‘அவள் சொல்லவந்தது என்ன?’ என்ற வினாவுடன் நாவல் முடியும்போது அந்தக் கடைசிச்சொல் ஒரு பெரும் படிமமாக ஆகிவிடுகிறது.
பஷீரின் நடை இதில் உருவாகவில்லை என்று சொன்னேன், ஆனால் உருவாக ஆரம்பித்துவிட்டிருந்தது என அதில் மஜீத்-சுஹரா உரையாடல்கள் காட்டுகின்றன. மெல்லிய புன்னகையுடன் மட்டுமே மீண்டும் மீண்டும் வாசிக்கத்தக்க உரையாடல். உலகமே தெரியாத முஸ்லீம் பெண்ணின் குழந்தைத்தனமான மனம். அந்தக் கள்ளமின்மையில் தன் இளமையைக் கண்டுகொள்ளும் இளைஞன். அவர்களின் உள்ளங்கள் மாறிமாறிப் புன்னகைகளைப் பரிமாறிக் கொள்வது அந்த உரையாடல்களில் தெரிகிறது. அதுதான் பஷீர். அங்கிருந்து முளைத்துத்தான் அவர் கிளைவிரித்தார்.
பிற்கால பஷீரின் கதைகளில் எப்போதுமே அந்தப் புன்னகை இருந்துகொண்டிருக்கிறது. மஜீத்,சுஹரா போன்ற கதாபாத்திரங்களை நாம் பிற்பாடு பஷீரின் ஆக்கங்களில் காண முடிவதில்லை. நாம் காண்பது நகைச்சித்திரங்களையே [Caricature]. மண்டன் முத்தபா, பொன்குரிசு தோமா, ஒற்றைக்கண் போக்கர், ஆனவாரி ராமன்நாயர், சாத்தங்கேரி மனைக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு,சைனபா, எட்டுகாலி மம்மூஞ்ஸ் போன்று எல்லாக் கதாபாத்திரங்களும் பஷீரின் புன்னகையால் கோணலாக்கப்பட்டுள்ளார்கள். மஜீத் வாழ்ந்த நிலம் அதேபோலத் திரிபு கொண்டு ‘ஸ்தலம்’ ஆக மாறிவிட்டிருக்கிறது. அதன்பின் இந்த ஸ்தலத்தில் துயரமே இல்லை. சிக்கல்களும் மோதல்களும்கூட இல்லை. கொண்டாட்டம் மட்டுமே உள்ளது.
உலகமெங்கும் நகைச்சித்திரங்களை உருவாக்குபவர்கள் அவற்றை விமரிசனம் கலந்து கேலிச்சித்திரங்களாக [Cartoon] ஆக்குவதே வழக்கம். பஷீர் அதிலிருந்து முற்றாக வேறுபடுகிறார். பஷீரில் கேலியே இல்லை. காரணம் அவர் எதையுமே விமரிசனம் செய்வதில்லை. பஷீர் நாம் நம்மைச்சுற்றிக் காணும் எதிர்மறைக் கூறுகள் ஏதுமில்லாத ஓர் உலகத்தை உருவாக்கி நம் முன் காட்டுகிறார், அவவ்ளவுதான். அது அவரது சிரிப்பு மூலம் நிகழ்கிறது. அந்தச் சிரிப்பு பஷீரின் மொழியிலேயே உள்ளது. பஷீரின் கலையின் சாரம் அதுவே.
கேலி இல்லாததனால் சம்ஸ்கிருதத்தில் பிரஹஸனம் என்று சொல்லப்படும் கேலிக்கூத்துத்தன்மையும் பஷீரின் கதைகளில் இல்லை. எந்த விஷயமும் தரம் தாழ்த்தப்படுவதில்லை, திரிக்கப்படுவதில்லை. ஏன் ஒன்றுக்குக் கீழ் ஒன்றாக வைக்கப்படுவதுமில்லை. நகைச்சுவையாக எழுதிய அத்தனை பிற எழுத்தாளர்களிடமிருந்தும்  பஷீர் மாறுபடுவது இங்கேதான்.
ஓர் உதாரணம் மூலம் சொல்லலாம். ‘முச்சீட்டுகளிக்காரன்றே மகள்’. மகாபுத்திமானும் சந்தையையே தன் வாயடி கையடியால் அமுக்கி வைத்திருப்பவனுமாகிய மூன்று சீட்டு ஆட்டக்காரன் ஒற்றைக்கண் போக்கரின் மகள் சைனபா. அவளும் ‘சில்லறைக்காரி’ அல்ல. ஆற்றுக்கு மறுபக்கம் சந்தைக்குக் கொண்டுபோக வைத்திருக்கும் வாழைக்குலைகளில் சிலவற்றை அவ்வப்போது தூண்டில் மூலம் தன்னை நோக்கி நீந்திவரச்செய்யும் கலை தெரிந்தவள்தான். மண்டன் முத்தபாவுக்கு ஒன்றும் தெரியாது, திக்குவதைத்தவிர.
ஆனால் மண்டன் முத்தபா மீசையில் மணிகட்டிய கிண்ணன்கள் தோற்கும் மூன்றுசீட்டு ஆட்டத்தை ஆட போக்கர் முன் சென்று நெளிந்து நிற்கிறான். ஆட்டம் நடக்கிறது. மண்டனுக்குத் தொடர் வெற்றி. பந்தயப்பொருளான சைனபாவை அவன் மணக்கிறான். போக்கருக்கு உலகப்போக்கே புரியவில்லை. அல்லாவுக்கு என்ன ஆயிற்று? குழம்பிப்போய்விட்டாரா என்ன? ஆனால் உண்மையில் அல்லாவின் நியதிப்படியே எல்லாம் நடக்கிறது. மகாபுத்திசாலியின் மகள் மடையனைக் காதலித்துத்தானே ஆகவேண்டும்? சைனபா சீட்டுகளில் போட்ட ரகசிய முத்திரைதான் போக்கரை மண்டனாக்கி விட்டது.
என்றும் எப்போதும் மண்ணில் நிகழும் அந்த மூன்றுசீட்டு ஆட்டத்தைத்தான் பஷீரும் சொல்கிறார். ஆனால் சொல்லும் விதத்தில் அது வலியில்லாத விளையாட்டாக ஆகிவிடுகிறது. ”கர்த்தாவாய ஏசுகிறிஸ்து செத்தது மரச்சிலுவையில். பின்னே எதுக்கு சர்ச்சுக்கு பொன் சிலுவை?” என்ற பொன்குரிசு தோமாவின் தரிசனம் அந்த விளையாட்டின் உச்சமாகத் திரண்டு வருகிறது.
ஜெ.சைதன்யா கதை சொல்லுவாள். ”..அப்றமா அந்த திவிடன் மாமா திவிடிக்கிட்டு ஓடினாங்களாம். அப்போ போலீஸ் மாமா தொப்பி போட்டுக்கிட்டு வேகமா அவங்களை தொரத்தினாங்களாம். போலீஸ் மாமா டேய் நில்லுடா திவிடான்னு சத்தம் போட்டாங்களாம்… திவிடன்மாமா நிக்க மாட்டேன் நீ என்னைய அடிப்பேன்னு சொல்லிட்டே ஓடினாங்களாம்…” போலீசும் திருடனும் மாமாக்களாக மாறி உற்சாகமாகத் தங்கள் கடமைகளைச் செய்யும் ஜெ.சைதன்யாவின் உலகில் வன்முறைக்கு இடமில்லை. எல்லாமே விளையாட்டுகள் மட்டுமே.
பஷீரின் உலகமும் அத்தகையதே. சொல்லவரும் கதைகளை எல்லாம் குழந்தையின் கண்களால் பார்க்க ஆரம்பித்துவிடுகிறார் பஷீர். அவ்வகையில் நோக்கும் வாசகர் பஷீருடன் ஒப்பிடத்தக்க படைப்பாளி லூயிஸ் கரோல் மட்டுமே என உணரலாம். பஷீரின் கதையில் கதையை சொல்வதும் சரி, கதைநாயகனும் சரி பஷீர்தான்– குழந்தை அல்ல. ஆனால் சொல்லும் விதமும் சொல்லும் கோணமும் ஆலீஸுக்கு சமானமாகவே உள்ளன. பஷீரின் மொழியாட்டம் கூடப் பலவகையிலும் லூயிஸ் கரோலுடன் ஒப்பிடத்தக்கது. ஆம், பஷீர் தன்னை ஒரு குழந்தையாக ஆக்கிக் கொண்டு தன் புனைவுலகை உருவாக்கியிருக்கிறார்.
லூயிஸ் கரோலின் தரிசனங்கள் அவரது மொழிவிளையாட்டிலேயே வெளிப்படுகின்றன. எது உண்மை என்று கேட்டால் யார் முக்கியம் என்று பதில் சொல்லும் பூசணிக்காய் போல. பஷீரும் அப்படித்தான். அவரது உரையாடல்வரிகளின் வழியாக அவரது தரிசனங்களின் உலகை எளிதாகச் சென்றுசேரலாம். அது ஒரு தனி பயணம்.
மூன்று
”ஆனைத்தூவல் ஒரு திருட்டின் கதை! கொலைக்கொம்பனாகிய ஒரு ஆனை! மிதித்து அரைத்தும் குத்தியும் அவன் ஒன்றிரண்டு யானைக்காரர்களைக் கொன்றிருக்கிறான். அவனுடைய வாலில் உள்ள ஒரு தூவலைத் திருட வேண்டும். திருடுவது என்று சொன்னால் யாருமே பார்க்கக் கூடாது. யானைக்காரர்களும் வாப்பாவும் உம்மாவும் யாரும்… ஆசாமி நானேதான். ஒரு ஆனை அல்ல. மூன்று. இரண்டு பிடியும் ஒரு கொம்பனும். அந்தக் கொம்பனின் வாலில் உள்ள முடிதான் தேவைப்படுகிறது. என்னுடைய சொந்தத் தேவைக்காக அல்ல. ராதாமணிக்காக….” என்று தொடங்குகிறது பஷீரின் ‘ஆனப்பூட’ என்ற கதை. யானையின் வால்மயிரை யானையில் தூவல் என்று எண்ணிக் கொண்ட பஷீரின் இளமைப்பருவம். புத்தகத்தில் வைக்கும் மயில்தூவலைப் போன்றுதானே யானை முடியும் இருக்கிறது? அப்படிச் சொல்லி பள்ளிவட்டாரத்தில் ஆனப்பூட என்று புகழ் அடைந்த கதாநாயகன் கதை சொல்ல ஆரம்பிக்கிறான்.
ஆனப்பூட ஒரு குழந்தைக்கதை அல்ல. ஆனால் அதன் மொழி அப்படியே ஒரு குழந்தைக்கதைக்குரியது என வாசகர் காணலாம். ஒரு எட்டுவயதுப்பையன் உற்சாகமும் களங்கமின்மையும் கலக்க, சவடாலடிக்கும் தோரணையிலேயே மொத்தக் கதையும் அமைந்துள்ளது. இந்த பாணி அக்கதைக்கு அலாதியான உற்சாகத்தை அளித்துவிடுகிறது. தம்பி அப்துல்காதர் பாயில் படுத்து மூத்திரம் பெய்கிறான். ஆகவே அண்ணா பஷீர் யானைக்கு அடியில் நுழைந்துசென்றாக வேண்டும். அப்துல் காதர்தான் ஒருகால் பலவீனமான ‘சட்டுகாலன்’ ஆயிற்றே. சண்டைகளில் நல்ல காலை ஊன்றி மெல்லிய காலை அந்தரத்தில் சுழற்றி அவன் அடிக்கும் அடிகளையும் பஷீர் வாங்கிக் கொண்டாக வேண்டும். ஒரே ஒருமுறை ஊன்றிய காலில் ஒரு அடி அடித்து அவனை விழவைத்தபோது பஷீருக்குத்தான் அடி கிடைத்தது. இந்தக் கொடுமைகளுக்கு காரணபூதமாக இருப்பவள் சமையற்காரி நாணி. அவளுடைய முலையை சிறுவயதில் பஷீர் குடித்தான் என்பதனால் அவள் அவனைப்பற்றி  என்ன சொன்னாலும் அது உண்மையே. அவளது மகன் நத்து தாமுவை பஷீர் கல்லால் அடித்தால் அதற்கும் அடி — கல் கூடையிலேயே பட்டது என்றாலும்.
இந்தக் கொடுமைகளை தீரமாக எதிர்கொண்டு, தோழி ராதாமணிக்காக உயிரைப்பணயம் வைத்து ஆற்றுவெள்ளத்தில் மூழ்கிச்சென்று  கொம்பன் யானையின் வாலைக்கடித்து அதை அலறவைத்தான் பஷீர். ஒரே களேபரம். கடைசியில்தேடினால் பஷீரைக் காணவில்லை.கடைசியில் வீடு திரும்புகிறான். ”உம்மா என் வேட்டி போச்சு.” ”எல்லாருக்கும்தான் வேட்டி போச்சு” என்றாள் உம்மா. குற்ற உணர்வு தாளாமல் வாப்பாவிடம் ஒரு ஒப்புதல் ”வாப்பா நான் ஆனையைக் கடிச்சேன்!” ”என்னது, நீ கொம்பனைக் கடிச்சியா?” அன்பின் சிரிப்பில் முடியும் இந்தக்கதை ஒரு தேர்ந்த வாசகனில் பலவிதமான நுண் அதிர்வுகளை உருவாக்கக் கூடியது. ஆனால் கதையை ஒரு நல்ல குழந்தைக்கதை என்றும் சொல்லிவிடலாம்
பின்னர் கதாநாயகன் குழந்தையாக இல்லாத கதையிலும் குழந்தைநோக்கு இயல்பாக வந்துசேர்கிறது. ”மந்திரச் சரடு வருவது அப்துல் அஸீஸின் வழுக்கைத் தலையில் ஒரு மாம்பழம் ப்டுக்கென்று விழுந்த நாளில்தான்.”[மந்திரச்சரடு] மாம்பழத்தை அது மண்ணில் விழுவதற்கு முன்னரே அப்துல் அஸீஸ் போய் பிடித்தாகவேண்டும். இல்லாவிட்டால் அதை கான் எடுத்துத் தின்றுவிடுவான். அவனுக்கு மாம்பழம் பலாப்பழம் எல்லாமேபிடிக்கும். கான் ஒரு ஆண்நாய்.”கானை பூட்டியிட்டால் பிறகு செவிதலை கேட்க முடியாது. அய்யோ பொத்தோ என்று கதறல். ஆகவே பூட்டுவதில்லை. கான் இளம்சிவப்பு நிறத்தில் பெரிய வட்டங்கள் கொண்ட வெளுத்த சுந்தரன். அவன் ஒரு காதல்தோல்வியின் துயரத்தில் இருக்கிறான்…”
ஆகவே ஹிந்து ஸ்திரீகளை விரும்பிக் கடிக்கும் பழக்கம் கானுக்கு இருக்கிறது. மாளு என்ற ஹிந்து நாயுடன் முஹபத் ஆகி அது மதவேற்றுமையால் கைகூடாமல்போன வெறி. வேறுவழியில்லாமல் அஸீஸ் ஒரு மந்திரச் சரடை வாங்கி கானின் கழுத்தில் கட்டுகிறார். கழுத்தில் சரடு கட்டப்பட்டதும் கான் ஆளே மாறி முஸ்லீம் ஸ்திரீகளைக் கடிக்க ஆரம்பிக்கிறான். ”உம்முசுல்மயின் உம்மா கொண்டாட்டமாக நடந்து வரும்போது கான் பாய்ந்து காலில் ஒரு கடி வைத்தான். நியாயமான கடி! உம்முசுல்மாவின் உம்மா ”றப்பே  -ன்னே கொந்நே ஓடிவாயோ…” என்று பெரியவாயில் கதறினாள். அப்துல் அஸிஸ¤ம் ஓடிப்போனார். கழுத்தில் மந்திரச்சரடு கட்டி கான் ஸிம்ப்ளனாக நின்று கொண்டிருந்தான்…”
பஷீரின் நடையில் வரும் இந்த வாய்மொழி வேடிக்கைகளைக் கவனிக்க வெண்டும். மாம்பழம் ‘ப்டுக்கேந்நு’ விழுகிறது. உம்மா ‘ஆஹோஷமாக’ வருகிறாள். கான் ‘ஸிம்ப்ளனாக’ நிற்கிறான். இவ்வாறுதான் பஷீரின் நடை உருவாகி வருகிறது. அது நம்மையும் ஒரு குழந்தையாக எண்ணி நம்முடன் கொஞ்சி சிரித்துப் பேச முற்படுகிறது.  ‘செவிதலை கேட்கில்ல’ என்ற நாட்டுப்புற சொல்லாட்சியை சாதாரணமாக பஷீர் சொல்லிச் செல்கிறார். பஷீரின் ஆகச்சிறந்த படைப்பான ‘பாத்தும்மாவின் ஆடு’ இந்த அம்சங்கள் மட்டும் அடங்கிய முழுமையான ஆக்கம். அதில் வேறு ஒன்றுமே இல்லை! பஷீரின் இந்த அம்சத்தை மொழியாக்கம் செய்வது மிக மிகக் கஷ்டமான காரியம். ஆனால் இதுதான் பஷீர்.
ஒரு சிறிய நிகழ்ச்சியை உதாரணமாகச் சொல்லலாம். பஷீர் மனைவி குழந்தைகளுடன் பஸ் ஏறிக் கோழிக்கோட்டுக்குச் செல்கிறார். வீட்டிலிருந்தே குடும்பத்தலைவனின் அலம்பல்கள் ஆரம்பம். பொருட்களை எடுப்பது, உடைமாற்றுவது எல்லாவற்றைப்பற்றியும் உரத்த குரல் கட்டளைகள். அறிவுரைகள். குழந்தைகளுக்கு அதட்டல்கள். பஸ் ஏறியதுமே ”·பாபி மேலே கம்பியைக் கெட்டியாக பிடித்துக் கொள். மக்குமாதிரி ஆடி விழுந்து வைக்கக் கூடாது…” சொல்லி முடிப்பதற்குள் ‘ப்படே’ என்று விழும் ஒலி. விழுந்தது பஷீர்தான்.[மாந்திரிகபூச்ச.]
எளிமையான இந்த நகைச்சுவைக்கு ஓர் இலக்கியப் படைப்பில் என்ன இடம்? பஷீர் சொல்வது குழந்தைகளுக்கான கதை என்ற பாவனையில். அங்கே ஒரு ‘பெரிய ஆள்’ நிலைதடுமாறி விழுவதைப்போல உற்சாகமான விஷயம் வேறு ஏதுமில்லை. முதிர்ந்தவர்களின் உலகம், கட்டளையிடும் உலகம், குப்புற விழுந்து கிடக்கிறது. அதன் பிறகுதான் கதையே ஆரம்பம். இந்த ‘குப்புறச்சரித்தல்’ பஷீரின் எல்லா கதைகளிலும் உண்டு. நாய்க்கு ‘கான்’ என்று பெயர் வைத்த பிரக்ஞை அதுதான். எது வெளியே மிக முக்கியமோ அது உள்ளே கவிழ்க்கப்பட்டிருக்கும். ‘ஆனைவாரி’ என்றால் யானைமீதுள்ள அம்பாரி என்று பொருள் கொள்பவர்கள் பெரியவர்கள். பஷீரின் சிறியவர்களின் உலகில் ராமன் நாயர் காட்டுக்குப் போய்க் குவிந்துகிடக்கும் சாணி என்று தூங்கும் யானையை மண்வெட்டியால் வாரப்போய் அந்த பட்டம் பெறுகிறார்.
தன்னைத் திருடன் என்று முத்திரைகுத்தும் ‘ஸ்தலத்துக்கு’ எதிராக ஒரு நாசகார ஆயுதத்துடன் பொன்குரிசு தோமா வந்து சேர்கிறான். சொறியன்புழு! அதை வீசிவிடுவான். சொறிந்து சொறிந்து சாகவேண்டியதுதான்! ஸ்தலத்தின் சட்டம் ஒழுங்கு சீர் குலைகிறது. ஆனவாரி ராமன்நாயர் பீதியுடன் சொன்னார், ”ச்ச்சொறியன்புழு!” மண்டன் முத்தபா சொன்னான், ”ஜ்ஜ் -ஜ்ஜ் -ஜ்ஜொறியன்புடு!” சாத்தங்கேரி மனைக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு அவரது ராஜதந்திர மூளையை முழுக்கப் பயன்படுத்தி உழைக்கும் வர்க்கத்தை அணிவகுக்கச்செய்து போலீஸ் நிலையம் நோக்கி ஒர் ஊர்வலத்தை நடத்துகிறார்- அதே வேகத்தில் திரும்பிவருவதற்காக.
பஷீரின் உலகில் அணுகுண்டுகூட ‘ஜ்ஜொறியன்புடு’ ஆகிவிடுகிறது. பொதுவாகக் கேரள வாசகர்களுக்குத் தெரியும், சாத்தங்கேரி மனைக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு இ.எம்.எஸ் தான் என. ஆனவாரி ராமன்நாயர் ஆர்.எஸ்.பி தலைவர் சி.என்.ஸ்ரீகண்டன்நாயர் என்பார்கள். பிரம்மசாரியான ஆனவாரிக்குப் பெண்களைப் பிடிக்காது. ஆகவே ஆற்றில் நிறுத்தப்பட்டிருக்கும் பெண்யானை மீது மண்கட்டிகளை விட்டெறிந்து தன் ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டு இன்பக்கிளர்ச்சியும் அடைகிறார். இவ்வாறு நுண்ணிய நகலி உருவங்களைப் படைத்தபோதும்கூட பஷீர் அவர்களின் அரசியல், கருத்தியல் எதையும் அவற்றை வைத்துக் கொண்டு கிண்டலோ விமரிசனமோ செய்யவில்லை. அவரது குழந்தைக்கு அதெல்லாம் பெரிதாகப் படவும் இல்லை. அந்தப் பெரியவர்கள் கால்தடுமாறி ‘ப்படே’ என்று விழும் தருணங்களில் கெக்கலி கொட்டிச் சிரிப்பது மட்டுமே அதன் நோக்கமாக இருக்கிறது
‘சீரியஸ்நெஸ்’ கால்தடுமாறி விழுந்து கிடக்கும் குழந்தை உலகில் வைத்துச் சொல்லப்படும் கதைகள் இவை. பஷீரின் மொழி கொள்ளும் எல்லா நெளிவுகளும் சுளிவுகளும் இதற்காகவே. சாதிமதம் எல்லாமே விழுந்துவிழுந்து சிரிப்பதற்குரியவை. ஏன், அங்கே அல்லாவே கூட ஒரு மாபெரும் வேடிக்கைதான். சொல்லிய விஷயத்தின் வழியாக பஷீர் சூஃபி ஆகவில்லை, சொல்லும் நடை வழியாகவே அவர் சூஃபி.
[நான்கு]
நாடோடியான பஷீருக்கு இந்தியப் பிரிவினை பிடிக்கவில்லை. ஊருக்குத்திரும்பிப் புத்தகக் கடைவைக்கிறார். மூளை குழம்பி அப்படிச் செய்யவில்லை, அப்படிச் செய்ததனால்தான் மூளை குழம்புகிறது. கையில் கத்தியுடன் ”அவன் பல பேர்களில் வருவான்! விடமாட்டேன்” என்று உறுமி நிற்கிறார். எம்.டி.வாசுதேவன் நாயரைப் பார்த்து ”அவன் எம்.டி வாசுதேவன்நாயரின் வடிவிலும் வருவான்!” என்கிறார். உஸ்தாதை ஒருவழியாகக் கையைக் காலைக் கட்டித் தூக்கி எடுத்துக் கொண்டுபோய் ஆயுர்வேத சிகிழ்ச்சைக்கு ஆளாக்குகிறார்கள். அதில் முக்கிய அம்சமே கண்களில் அஞ்சனம் எழுதுவதுதான். நாழி குருமிளகை சுக்கில் அரைத்து மையாக்கிக் கண்களில் பூசுவதுபோல் இருக்கும். அதை மூக்கில் ஏற்றும் நஸ்ய சிகிழ்ச்சையும் உண்டு. உஸ்தாத் தெளிவாகப் பேசுகிறார், சிரித்து அருகே அமரும்படி உபசரிக்கிறார். வலிய கைகளில் ஆள் அகப்பட்டதுமே பிடித்து அஞ்சனம் பூசி நஸ்யம் ஏற்றிவிடுகிறார். உலகமே மூளை குழம்பி இருக்கும்போது அப்படிச் செய்வது அவரது கடமை.
வேறுவழியில்லாமல் அவரை நூலன்வாசு அல்லது கடாரி வாசு என்ற எம்.டி.வாசுதேவன்நாயர், என்.பி.முகம்மது என்கிற மம்மு, எஸ்.கெ.பொற்றெகாட், நடிகர் சத்யன் ஆகியோர் அடங்கிய கும்பல் வலுக்கட்டாயமாக நிக்காஹ¤க்கு ஆளாக்குகிறது. துணிந்த மனதுக்குப் பெயர் ·பாபி. பார்கவி நிலையம் படத்துக்குக் கிடைத்த சன்மானத்தில் ஒரு காட்டுத்தோட்டம் போப்பூர் கடற்கரையருகே வாங்கப்பட்டு பஷீர் அங்கே சுல்தானாக ஆட்சிப்பொறுப்பை ஏற்கிறார். ஸாஹினா பிறந்து பஷீர் அவளுடைய ஒன்றுக்கும் உதவாத மொட்டைத்தலை ‘ற்றாற்றா’ ஆக மாறுகிறார். மங்கோஸ்டைன் மரம் நடப்படுகிறது. அதன் கீழே சாய்வுநாற்காலி போடபப்ட்டு பாதுஷா பீடிக்கட்டு கடும் சாயாவுடன் வந்து அமர்கிறார்.
பஷீரின் புனைவுலகின் சிறந்த படைப்புகளில் பெரும்பாலானவை இக்காலகட்டத்துக்குப் பின் எழுதப்பட்டவை என்பதைக் கவனிக்கலாம். பாத்துமாவின் ஆடு கூட இக்காலத்து சிருஷ்டியே. ‘விஸ்வவிக்யாதமாய மூக்கு’, ‘ன்றுப்பாப்பக்கொரானேண்டார்ந்நு’ முதலிய கதைகள் எழுதிய போது பஷீரில் இருந்த சிறு அளவு உலக விமரிசனம்கூட இப்போது இல்லாமலாகிறது. இந்த உலகம் சிரிப்பதற்கன்றி வேறெதற்கும் பயன்படாதது என்று பஷீரின் மொழியில் துயிலெழுந்த அக்குழந்தை கண்டடைந்தது. ”ற்றாற்றா, தா பீப்ளி பீச்ண மிஸ்கீன்!” என்று தனிமொழி பேசும் ஸாஹினா பஷீரில் செலுத்திய பாதிப்பு மிக அபூர்வமானது என இப்போது படுகிறது. அவளுடைய கண்கள் வழியாக பஷீர் உலகைப் பார்க்கக் கற்றுக் கொண்டார். அவளது மொழியின் வழியாக ஒரு புதிய மலையாளத்தை எழுதிப்பழகினார்.
குழந்தைக் கண்களால் தலைகீழாக்கப்பட்ட பஷீரின் உலகில் பெரிய விஷயங்களும் பெரியமனிதர்களும் வேடிக்கை வடிவங்களாக இருக்கிறார்கள். சுதந்திரப்போராட்டத் தியாகி என்பதற்காக மத்திய அரசு அளித்த தாமிர பட்டயம் காயப்போட்ட நெல்லைக் கொத்தவரும் காகத்தை எறியப் பயன்படுத்தப்படுகிறது. வீட்டுக்கு வரும் சகலமான நாயர்மாரும் அவர்களின் ஸ்திரீரத்தினங்களும் கிண்டல்செய்யப்படுகிறார்கள். அதேசமயம் ஆடு மையக்கதாபாத்திரமாகி மொத்த உலகமே அதைச்சுற்றி நடைபெறுகிறது. பஷீர் எழுந்ததுமே கோழி அவரது சுல்தான்பீடத்தில் எறி அமர்ந்து ஒருகண்ணை மட்டும் திறந்து என்ன என்று பார்க்கிறது.
பஷீரின் ஆக்கங்கள் இப்போது ‘கிளாஸிக்’ ஆக மாற்றப்பட்டு விட்டமையால் அவை தடவித்தடவி விடப்படுகின்றன. உக்கிரமான பெண்ணியர் ஒருவர் அவரைப் போட்டுக் குடைந்து எடுக்கும் நாள் தொலைவில் இல்லை. அவரது புனைவுலகில் பெண்கள் எப்போதுமே பிரியத்துக்குரிய குசும்பினிகள் மட்டுமே. ‘பூவன்பழம்’ உதாரணம். அடிதடி நிபுணரான உஸ்தாத் அவர்கள் பரம ஸ்டைலாகக் குடையுடன் வரும் டீச்சர் மீது மையல் கொள்கிறார். ‘உன்னை எனக்கு பெருத்து இஷ்டம்’ என்று காதலை தெரிவிக்கிறார். ‘அதற்கு?”என்று ஸ்டைலான பதில் வருகிறது.
எப்படியோ திருமணம். நாள்தோறும் முதலிரவு. உஸ்தாத் புதையல் காத்த பூதமாக இருக்கிறார். ஒருநாள் இரவில் பீபிக்குப் பூவன்பழம் வேண்டுமென்று ஆசை ஏற்படுகிறது. ஊரடங்கிய நேரம். மழை. ஆற்றில் வெள்ளம். உஸ்தாத் மனம்தளராமல் ஏழுமலை ஏழுகடல் தாண்டிச்சென்றாலும் பூவன்பழம் இல்லை. ஆகவே திராட்சை வாங்கித் திரும்ப வருகிறார். அதை பீபி தூக்கி வீசி எறிந்து விட்டு விசும்பி விசும்பி அழுகிறாள்.உஸ்தாத் ஒரு சிறிய குச்சியைஎடுத்து பீபியின் அழகிய தொடையில் அடிக்கிறார். திராட்சையைச் சுட்டிக்காட்டி  ”இது என்ன?” .நாலைந்து அடிகளுக்குப் பின்னர் பீபிக்குக் காரியம் பிடி கிடைக்கிறது. கண்ணீருடன் ”பூவம் பழம்!” என்கிறாள். இருவரும் தொண்ணூறு வயது வரை சந்தோஷமாக வாழ்ந்தார்கள்.சுபம் மங்களம்.
இந்தக்கதையைக் கதையாகச் சொல்லப்போனால் மிகமிக ஆணாதிக்க நோக்குள்ள ஒரு கதை என்றே படும். உண்மையில் பல பஷீர் கதைகள் இப்படிப்பட்டவையே.ஆனால் பஷீரின் புன்னகையின் ஒளிமிக்க நடை இதன் தொனியையே மாற்றிவிடுகிறது. ஆதிக்கத்தின் கதை என்ற தளத்திலிருந்து தூக்கி காதலின், காமத்தின் விளையாட்டைப்பற்றியதாக ஆக்குகிறது. பிரபஞ்சம் முழுக்க நிறைந்திருக்கும அலகிலா நடனம் ஒன்றின் ஒரு தருணமாக ஆக்கிவிடுகிறது.
பஷீரின் பெரும்படைப்புகள் என்று இப்போது ஒரு விமரிசகன் சொல்லத்தக்கவை ‘பாத்துமாவின் ஆடு’, ‘ஸ்தலத்தே பிரதான திவ்யன்’ , ‘மாந்த்ரிக பூச்ச’ ‘ஆனவாரியும் பொன்குரிசும்’ ‘முச்சீட்டுகளிக்காரன்றே மகள்’ ‘ஸிங்கிடிமுங்கன்’ போன்றவை. இவையனைத்துக்குமே ஒரு பொதுத்தன்மை உண்டு என்று காணலாம். இவற்றுக்கு எந்தவிதமான மையமும் அர்த்தமும் இல்லை. கதை என்ற ஒன்று இல்லை. இருந்தாலும் அதைச் சொல்லப்போனால் நான்குவயதுக்குக் கீழே உள்ள குழந்தைகள் மட்டுமே ரசிக்கும். வடிவமே இல்லை. பஷீர் அவருக்குத் தோதுபட்ட விஷயங்களை தோதுபட்ட மொழியில் சொல்லிச் செல்கிறார். விமரிசனம் , மையக்கரு எதையுமே தேட முடியாது.
இருந்தே ஆகவேண்டுமென்றால் எல்லாக் கதைகளிலும் முடிவில் பஷீர் எழுதிவைத்திருக்கும் ‘சுபம்’ ‘சுபமஸ்து’ போன்ற வார்த்தைகளையும் ”நாயர் ஸ்திரீகளும் நஸ்ராணி ஸ்த்ரீகளும் மாப்பிள ஸ்த்ரீகளும் சகல குசும்பு குன்னாய்மைகளுடனும் நீணாள் வாழட்டே” என்பதுபோன்ற வரிகளையும்தான் சொல்லவேண்டும். அதிலும் பாத்தும்மாவின் ஆடு முழுக்க முழுக்க ‘அர்த்தமில்லாத’ கதை. அதில் ஒன்றுமே நடக்கவில்லை. அதைப்பற்றி என்ன சொன்னாலும் அது தவறு. அதில் குடும்ப உறவுகளின் மகத்துவம் பற்றி சொல்லியிருக்கிறார் பஷீர் என எங்கோ படித்தேன்.அப்படியா? ”பாத்துமா அறிய வேண்டாம். அப்துல் காதர் அறிய வேண்டாம். ஹனீஃபாஅறிய வேண்டாம். அபி அறிய வேண்டாம். நீ எனக்கு ஒரு அம்பது ரூபா தா” என்று ஓயாமல் பிடுங்கும் அம்மா வாழும் வீடுதான் குடும்பமா?
குடும்ப சுயநலங்களின் மையமாக அவ்வீட்டை பஷீர் காட்டுகிறார் என்றும் ஒருவரி வாசித்திருக்கிறேன். முட்டாள்தனம். அந்தவீடு முழுக்க நிறைந்திருப்பது உற்சாகமும் அன்பும்தான். ஆட்டின் மடியும் பஷீரின் பையும் கனத்திருப்பது அவ்வீட்டின் குற்றமா என்ன? அகப்பட்டவர்கள் கறக்க வேண்டியதுதானே? உண்மையில் அவ்வீட்டைப்பற்றி எதையுமே பஷீர் சொல்லவில்லை. எதைப்பற்றியும் பஷீர் சொல்லவில்லை. அவர் வெறுமே வேடிக்கை பார்க்கிறார். இந்திய இலக்கியங்களில் ‘சும்மா’ எழுதப்பட்ட ஒரே படைப்பு இதுதான். ஆகவேதான் இது என்றும் ஒளிமங்காத ஒரு பேரிலக்கியம்.
[ஐந்து]
ஆழ்பிரதியே இல்லாத விசித்திரமான பேரிலக்கியம் பஷீர் எழுதியது. உய்த்துணர, சிந்திக்க, குறியீடுகளாக விரிய எந்த வாய்ப்பும் இல்லாத உலகம் அது. நம் முன் கிடப்பது பண்பாடு தலைகீழாகப் பிரதிபலித்து நெளியும் ஒரு மொழிவெளி. விளையாடும் அர்த்தங்களின் நுண்பரப்பு. இந்த எளிய உலகம் ஆழ்ந்த அர்த்தங்களைத் தேடப்புகுந்தவனுக்கு புரியாத மந்திரப்புதிர்களாகத் தோன்றி மயக்கக்கூடும். சட்டையைக் கழற்றிவிட்டுக் காட்டாற்றில் குதிப்பவனைப்போல இறங்குபவனை சிரித்தபடி குளிர அணைத்துக் கொள்ளும்.
பஷீரின் மொழி மிகமிகத் தெளிந்த நீரோட்டம். அதற்கு அடித்தளம் இல்லை. ஏனெனில் அடித்தளமே மேல்தளமாகத்தெரிகிறது. பஷீரில் அறிய ஏதுமில்லை. அவரது மொழியுடன் சற்றாவது இணையும்போது நமது மொழி நம்மை விட்டு நீங்கும் ‘…ம்ணி பல்ய ஒந்நின்’ மொழிக்குள் நாம் நுழைவோம். அதுவே பஷீரின் புனைவுகள் அளிக்கும் அனுபவம்
பஷீரைப்பற்றிய ஆவணப்படம் பார்த்துவிட்டு அந்த வரியைச் சொன்னவர் யாராக இருந்தாலும் அவர் பஷீரின் நல்ல வாசகர்.