தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Wednesday, February 11, 2015

சில்வியா - அசோகமித்திரன்

சில்வியா - அசோகமித்திரன் (1991 - கல்கி இதழில் வெளி வந்தது)



சில்வியாவால் எனக்குச் சங்கடம் நேரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நேர்ந்துவிட்டது. இருநாட்களாவது வெளியே தலையைக் காட்ட முடியாதபடி.

சில்வியா மாரிஸ், டெரன்ஸ் சகோதரர்களின் அக்கா. நான் மாரிஸ், டெரன்ஸ் என்று வரிசையில் சொல்லாமல் டெரன்ஸ், மாரிஸ் என்றுதான் கூறவேண்டும். டெரன்ஸ்தான் பெரியவன். அவனுக்கும் மாரிஸுக்கும் இடையில் ஒரு சகோதரி. அவள் பெயர் நான்ஸி. 

மாரிஸ்தான் எனக்கு முதலில் சிநேகிதன் ஆனான். முதலில் அவனுக்கு ஓர் அண்ணன் உண்டு என்று எனக்குத் தெரியாது. திடீரென்று எங்கள் விளையாட்டு கோஷ்டியில் ஒரு முரட்டுப்பையன் வந்து அதிகாரம் செய்துகொண்டிருந்தான். அவனாகப் பந்தை வீசி எறிந்து விட்டு, என்னை “எடுத்து வா” என்றான். “ஜா ஜா சாலே,” என்றேன். தமிழில் சொல்வதானால், “போடா போடா மச்சானே,” இந்த ‘மச்சானே’ எப்போதும் அன்பைத் தெரிவிப்பதில்லை. எங்கள் ஊரில் அதை வசவாகத்தான் பயன்படுத்துவோம். முரட்டுப் பையன் என்னை அடிக்க வந்தான். நான் அவனுடைய இரு மணிக்கட்டுகளையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன்.

துவந்த யுத்தத்தில் எதிராளியின் இரும ணிக்கட்டுகளையும் கெட்டியாகப் பிடித்துக் கொள்வதற்கு விசேஷமான இடம் இருக்கவேண்டும். நான் ஒருவனுக்கு ஒருவன் என்று சண்டை போட்ட போதெல்லாம் இந்த மணிக்கட்டுப் பிடி மிகவும் உதவி யிருக்கிறது. எதிராளி அடிக்க முடியாதபடி திமிருவான். அதற்குள் எப்படியும் ஐந்தாறு பேர் குழுமிச் சண்டையைக் கலைத்து விடுவார்கள். எதிராளி பெரியவனாக இருந்தால்கூட அவன் எதிர்க்கமாட்டான் என்ற காரணத்தாலேயே அவனுடைய தன்னம்பிக்கை சிறிது தளர்ந்துவிடும். தன்னம்பிக்கை தளர்ந்தவனால் மீண்டும் பெரிதாகச் சண்டைக்கு வரமுடியாது.

இந்த முரட்டுப் பையன் விஷயத்திலும் மணிக்கட்டுப்பிடி என்னைக் கைவிடவில்லை. அந்த சண்டைக்குப் பிறகுதான் அவன் மாரிஸுடைய அண்ணன் என்று தெரிந்துகொண்டேன். பெயர் டெரன்ஸ். அன்றைக்குப் பிறகு எப்போது நானும் மாரிஸும் பேச முற்பட்டாலும் டெரன்ஸும் உடனே வந்துவிடுவான். நாங்கள் இருவரும் ஆல மரத்திலேறி விழுதுகளில் டார்ஜான் விளையாட்டு விளையாடினால் அவனும் ஆட வருவேன் என்பான். எனக்கு அவன் மரத்தின் மீது ஏற ஆரம்பிக்கும்போதே பயமாக இருக்கும். நிச்சயம் கீழே விழப் போகிறான் என்று பயந்து கொண்டிருப்பேன். அதன்படியே முதல் முறையாக விழுதைப் பிடித்து ஆடுகையிலே விழுந்து தொலைத்தான்.கரகரப்பான தொண்டையோடு எப்போதும் குறைப்பட்டுக்கொண்டேயிருப்பான். எதைச் செய்தாலும் முரட்டுத்தனம் தெரிய இருக்கும். எனக்கு இதெல்லாம் கூடப் பொறுத்துக்கொள்ள முடிந்தது. ஒன்றை மட்டும் முடியவில்லை. அது அவன் முகம். அவன் கன்னங்களில் பிசுபிசு என்று மயிர் முளைத்திருந்தது. ஓரிரண்டு முளைத்து, அதில் ஸ்பிரிங் போலச் சுருண்டிருந்தது. எனக்கு டெரன்ஸைப் பிடிக்கவே இல்லை.

எனக்கு லாராவையும் பிடிக்கக்கூடாது. டெரன்ஸ் ஜாடை அவளிடம் நிறையவே இருந்தது. எப்போதும் அழுக்கு கவுனை மாட்டிக்கொண்டிருப்பாள். எங்களோடு அவளும் மரமேற வந்து விடுவாள். கிரிக்கெட், பம்பரம், கில்லி தாண்டுதல் எல்லா ஆட்டத்திலும் சேர்த்துக்கொள் என்று கழுத்தறுப்பாள்.

டெரன்ஸ் போல அவளுக்கும் கன்னத்தில் காதோரமாக மயிர் முளைத்திருந்தது. ஆண்,பெண் யாராயிருந்திருந்தாலும் பேசும் போது நிமிடத்திற்கு ஒரு முறை ‘நோ மேன், வாட் மேன், கோ மேன், கெட் அவுட் மேன்’ என்று ‘மேன்’ போட்டு பேசுவாள். அவள் கண்களில் எல்லாமே ‘மேன்’தான். இன்று நினைத்துப் பார்க்கும் போது மனித இனத்தின் ஆதாரப்பிணியின் நிவர்த்திக்கு அவள் ஒரு சூத்திரம் வைத்திருந்தாளோ என்று தோன்றுகிறது. எங்கள் கோஷ்டியில் அவள் விளையாட வருவாள் என்றாலும் நான் அவள் ஒருத்தி இருக்கிறாள் என்பதையே அங்கீகாரிக்காதபடியாதபடிதான் இருந்தேன். ஆனால் ஒருநாள் பாலு சகோதரர்கள் என்னை ‘குல்சித்’ செய்துவிட்டார்கள். தனியாக நிற்பவனிடம் பேச வருவது போல இருவர் வருவார்கள். ஒருவன் ஏதோ கேட்க, இன்னொருவன் தனியாக நிற்பவனின் பின்புறம் சென்று அவனறியாதபடி பச்சைக்குதிரைக்குக் உட்காருவதுபோலக் குனிந்து கொள்வான். இப்போது பேச வந்தவன் நின்றவனைப் பிடித்துத் தள்ள, அவன் பச்சைக்குதிரை மீது தடுக்கி அலங்கோலமாக விழுவான்.இதை நான் நூற்றுக்கணக்கில் பார்த்திருக்கிறேன். இன்று நினைக்கும்போது இந்த குல்சித் ஆட்டத்தால் எத்தனை பேருடைய மண்டை, கை, கால் உடைந்திருக்கவேண்டும் என்று நடுங்க வைக்கிறது. ஆனால் எனக்குத் தெரிந்து பையன்கள் யாரும் பெரிதாக அடிப்பட்டுக்கொள்ளவில்லை. இன்னொன்று, இந்த குல்சித்தினால் பெரிய சண்டை ஏதும் ஏற்பட்டதில்லை. ஆனால் அந்த அனுபவத்திற்குப் பிறகு எல்லோரும் சுவரோரமாகவே இருப்பார்கள். அல்லது மரத்தில் முதுகைச் சாய்த்துக்கொண்டு நிற்பார்கள். அதாவது புறமுதுகு காட்டாதபடி இருக்கவேண்டும்.

நான் அலங்கோலமாகக் கீழே விழுந்தபோது லாரா அருகில் இருந்தாள். நான் இன்னும் எழுந்திருக்காதபோதே அவள் பாலுவின் அண்ணனைப் பளார் என்று அறை விட்டாள். அவன் அவள் தலை மயிரைப் பிடித்து இழுத்தான். அவள் ஓங்கி அவன் தலையில் குட்டு வைத்தாள். அதே நேரத்தில் காலால் அவன் வயிற்றில் உதைத்தாள். இதற்குப் பிறகு எனக்கு லாராவைப் பிடிக்காது என்று நினைப்பதுகூட விசுவாசத் துரோகம். ஆனால் நானும் பாலு சகோதரர்களும் ஜன்ம விரோதிகளாகி விட்டோம்.

நாங்கள் இருந்த லான்சர் பாரக்ஸ் பிரதேசத்தைச் சுற்றி இருந்த மதில் சுவர் வெளியுலகின் ஆக்ரமிப்பைத் தடுத்ததா என்று உறுதியுடன் கூற முடியாது.. ஆனால் நாங்கள் அதன் மீது ஏறி உட்கார்ந்துகொண்டு சாலையை வேடிக்கைப் பார்க்க சௌகரியமாக இருந்தது. நானும் மாரிஸும் ங்கள் வாழ்க்கையில் நாங்கள் சந்தித்த அதிபலசாலிகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். எங்கள் பள்ளி டிரில் மாஸ்டர் பற்றிச் சொன்னேன். மாரிஸ் ஒரு இஞ்ஞின் டிரைவர் பற்றிச் சொன்னான். நானும் அந்த மனிதரைப் பார்த்திருக்கிறேன். அவரும் சட்டைக்காரர்தான். அவரால் ஒரு ரில் இஞ்ஞினைத் தள்ளி நகர்த்த முடியும் ன்றான். எங்கள் டிரில் மாஸ்டரால் அந்த இஞ்ஞினை நிறுத்திவிட முடியும் என்று நான் சொன்னேன். அந்த நேரத்தில் அவனுடைய வீட்டிலிருந்து நிறையக்கரகோஷம், சிரிப்பொலி எல்லாம் கேட்டது. நானும் அவனுடன் சென்றேன்.

அவன் அந்த வீட்டின் முன் அறையில் மாரிஸுடைய அப்பா அம்மாவுடன் மூத்த பெண் சில்வியாவும், சற்றுத்தள்ளி ஓர் ஓரத்தில் லாராவும் இருந்தார்கள். சுவரோரமாகப் போடப்பட்ட சோபாவில் மூன்று வெள்ளைக்கார சோல்ஜர்கள் தங்களைத் திணித்துக்கொண்டு அசடு வழிந்து கொண்டிருந்தார்கள். இடது கோடியில் இருந்த சோல்ஜர் முகத்தில் சற்று விசேசமாகச் சொட்டிக் கொண்டிருந்தது. விஷயம் இதுதான்:அவன் சில்வியாவை மணந்துகொள்ள அவளின் பெற்றோரான மன்னாஸ் தம்பதிகளை அனுமதி கேட்டிருந்தான். அனுமதி கொடுக்கப்பபட்டு விட்டது. அதற்குத்தான் கரகோஷமும் சிரிப்பும்.

நானும் மாரிஸும் வெளியே வந்தபோது லாராவும் எங்களுடன் வந்தாள். “உனக்குப் பிடிக்கிறதா?” என்று மாரிஸ் என்னைக் கேட்டான்.

“யாரை?”

“அந்த டாமியை.” பிரிட்டிஷ் படை வீரர்களை டாமிகள் என்றும் அழைப்பதுண்டு.

“எனக்குத் தெரியவில்லை. மூன்று பேர் இருந்தார்களே?”

“அந்தக் கோடியில் இருந்தவன்.”

“எனக்கு எல்லாரும் ஒரே மாதிரி இருந்தார்கள்.”

மாரிஸ் என் தலையைத் தட்டினான். லாரா அவனை ஒரு குத்து விட்டாள்.

நாங்கள் மூவரும் வெளிமதில் சுவர் மீது ஏறி உட்கார்ந்து கொண்டோம். வெகு நேரம் பேசாமல் சாலையைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தோம். மாரிஸ்தான் முதலில் பேசினான். “உனக்கு லாரென்ஸைத் தெரியுமில்லையா?” என்று கேட்டான். லாரென்ஸ்தான் அவன் கூறிய பலசாலி இஞ்ஞின் டிரைவர்.

“தெரியும்”

“அவன் சில்வியாவைக் கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன் என்றான். எங்கள் அம்மாதான் கூடாது என்று சொல்லிவிட்டாள்.”

“எனக்கும் லாரென்ஸ் அங்கிளைப் பிடிக்காது,” என்று லாரா சொன்னாள்.

“நீ வாயை மூடு.”

“நீ வாயை மூடு.”

நான் நடுவில் உட்கார்ந்திருந்தேன். அவர்கள் அடித்துக் கொள்வதாயிருந்தால் முதலில் நான்தான் கீழே விழுந்துவிட வேண்டியிருக்கும். “நீங்கள் ஜாதகம் பார்த்தீர்களா?” என்று கேட்டேன்.

இருவரும் விழித்தார்கள். மாரிஸ் கேட்டான், “என்ன?”

“ஜாதகம்” 

“அப்படி என்றால்?”

“சூரியன், சந்திரன் எல்லாம் உங்களுக்கு எங்கே எப்படி இருக்கிறது என்று காட்டும் ஓர் அட்டவணை.”

“எல்லோருக்கும் ஒரே சூரியன் ஒரே சந்திரன் தானே?”

“ஆமாம்.”

“அப்புறம்?”

எனக்கு பதில் தோன்றவில்லை. சற்றுப் பொறுத்து, “எங்கள் வீட்டிலெல்லாம் கல்யாணம் என்றால் ஜாதகம்தான் முதலில் பார்ப்பார்கள்.”

“எங்களுக்கு எல்லாம் பர்த் சர்டிபிகேட் கூடக் கிடையாது. எனக்குப் பதினைந்து வயதா, பதினாறு வயதா என்று தெரியாது. யாருக்குமே தெரியாது.”

“இன்றைக்கு சில்வியா ரொம்பச் சந்தோஷமாக இருந்த மாதிரி எனக்குத் தோன்றிற்று.”

“அந்த முட்டாள் பெண் அந்த டாமி கொண்டு தருகிற சோப்பு, சாகலெட்டைப் பார்த்து மயங்கியிருக்கிறாள்.”

“ஜார்ஜ் இரண்டு டின் குடிகூரா பவுடர் கொண்டு வந்தான். எனக்கும் ஒன்று கொடுத்தான்,” என்றாள் லாரா.

“அப்போது நீயும் அவனைக் கல்யாணம் செய்து கொள்.”

“ஏன் முடியாது?”

“வாயை மூடு.”

“நீ வாயை மூடு!”

நான் மரியாதையாகக் கீழேகுதித்து விட்டேன். இனியும் இரண்டுபேருக்கும் சண்டையைத் தடுக்க முடியாது.

எனக்கும் ஏனோ ஜார்ஜ் விஷயம் அவ்வளவு பிடிக்கவில்லை. அந்த ஜார்ஜ் பக்கத்தில் சில்வியா ஒரு சின்னக் குழந்தை போல இருந்தாள். ஜார்ஜ் குழந்தைகளைத் தூக்கிப் போகிறவன் போலத் தோற்றமளித்தான். நாங்கள் பகல் ஆட்டம் பார்த்த சினிமாப் படத்திற்கு சில்வியாவை மாலை ஆட்டத்துக்கு அழைத்துப் போனான். அவனால் சனி,ஞாயிறு இரு தினங்கள்தான் எங்கள் லான்சர் பாரெக்ஸுக்கு வர முடியும். ஒருநாள் லாரா, மாரிஸ் எல்லாரையும் அவன் சினிமாவுக்கு அழைத்துப் போன போது, நானும் கூடப் போயிருக்கிறேன். சினிமாக் கொட்டகையில் படை வீரர்களுக்கு அரைக் கட்டணம் தான். சினிமாக் கொட்டகைக்கு நடந்துதான் திரும்பி வர வேண்டும். அந்த ஜார்ஜ் எதைச் சொன்னாலும் அவனே சிரித்துக் கொள்வான். அவன் என்ன சொல்கிறான் என்று எனக்குச் சுத்தமாகப் புரியாது. என்னுடன் இருப்பவர்களுக்கும், அப்படித்தான் என்று எனக்குச் சந்தேகம்.

டிசம்பர் மாதத்தில் சில்வியாவின் அம்மா என்னிடம் ஒரு நல்ல தையல்காரன் வேண்டும் என்று சொல்ல, நான் நரசிம்மராவை அவர்கள் வீட்டுக்கு அழைத்துப் போனேன். டிசம்பர்-31ம் தேதி இரவு ஜார்ஜ் சில்வியாவை ஒரு பெரிய நடன விருந்துக்கு அழைத்துப் போகப் போகிறான். அதற்காகத்தான் விசேஷ உடை.

கிருஸ்மஸ் நாளன்று என்னை டெரன்ஸ், லாரா, மாரிஸ் அனைவரும் அழைத்தபோதும் நான் அவர்கள் வீட்டில் ஒரு நிமிஷத்துக்கு பேல் இருக்கவில்லை. ஜார்ஜ் இருந்தான். கண்பட்டு விடும்படி சில்வியா சந்தோஷம் பொங்க ஜ்வலித்துக்கொண்டிருந்தாள்.

அதற்கடுத்த நாள் என்னால் எளிதாக நழுவி விட முடியவில்லை. சில்வியா ஒரு கிராமபோன் தட்டைஒலிக்க வைத்து ‘பால்’ நடனம் பழகிக் கொண்டிருந்தாள். ஒத்திகைக்கு அவள் அம்மாதான் அவளுக்குக் கிடைத்தாள். அம்மாவால் இரண்டு அடி ஒழுங்காக எடுத்து வைக்க முடியாது. என்னைப் பார்த்தவுடன் இருவரும் ஒத்திகையை நிறுத்தினார்கள். மாரிஸினுடைய அம்மா என்னைத் தரதரவென்று இழுத்து சில்வியா முன்பு நிறுத்தினாள். என்னுடைய இடது கையை சில்வியாவின் வலது கையோடு இணைத்தாள். சில்வியாவின் இடது கையை என் தோளின் மீது வத்து என் வலது கையால் சில்வியாவை அணைக்கச் செய்தாள். கிராமபோன் பாட்டைத் தொடங்கினாள். நானும் சில்வியாவும் எங்களுக்குச் சாத்தியமான ‘பால்’ நடனம் ஆடினோம். ஜார்ஜ் கொண்டு வந்திருந்த பவுடர் நிஜமாகவே மிகவும் நன்றாகவே இருந்தது. நாங்கள் ஆடுவதை அந்த பாலு பார்த்திருக்கிறான். அடுத்த நாளே எங்கள் மதில் சுவரில் ஆங்கிலம், தமிழ்,உருதுவில் சில்வியா-சந்துரு என்று கரியால் பெரிதாக எழுதப்பட்டிருந்தது. ஒவ்வொரு மொழியிலும் ஏதாவது ஒரு எழுத்தாவது தவறாக எழுதப்பட்டிருந்தது.

நான்தான் வெட்கப்பட்டேனே தவிர யாருமே இதை சட்டை செய்யவில்லை. யாருக்கும் தெரியாதபடி இரவில் அழித்துவிடப்பார்த்தேன். அடுத்த நாள் சுவரில் அந்த இடம் பளிச்சென்று இருந்தது. பாலு எழுதியதும் ஒரு சேதமுமில்லாமல் இருந்தது.

அந்த நடன விருந்துக்குப் போய் வந்த பிறகு அவள் மிக நன்றாக ஆடியதாகவும் அதற்கு என்னுடன் அவள் பழகிக் கொண்ட ஒத்திகைதான் காரணம் என்றும் சில்வியா சொன்னாள். சுவரில் பாலுதான் எழுதியிருநான் என்று தெரிந்தும் ஏன் லாரா அவனை உதைக்கப் போகவில்லை என்று எனக்கு உறுத்திக் கொண்டிருந்தது. சில்வியா என்னுடன் பேசும்போது கவனித்தேன். லாராவின் மிகம் ஆத்திரம் பொங்க இருந்தது.

எல்லாம் ஆறே மாதத்தில் மாறி விட்டது. யுத்தம் முடிந்து ஜார்ஜ் இங்கிலாந்து சென்றுவிட்டான். அவன் திரும்பி வரப்போகிறான் என்றுதான் எல்லாரும் காத்திருந்தார்கள். டெரன்ஸும் மாரிஸும் அவர்கள் வயதைக் கூட்டிச் சொல்லி ரயில்வே இன்ஜின் கிளீனர் வேலைக்குச் சேர்ந்துவிட்டார்கள். லாரா ஒய்.எம்.சி.ஏ. யில் டைப்பிஸ்டு பயிற்சிக்குப் போனாள். சில்வியா வீட்டிலேயே காத்திருந்தாள். நாம் ஏதோ கண்ணகி, மாதவி, கோப்பெருந்தேவி எனகிறோம். திரும்பி வராத அந்த பிரிட்டிஷ் சோல்ஜரை நினைத்து ஏங்கி ஏங்கி இரண்டாண்டுக்குள் டி.பி. வந்து செத்துப்போனாள்.

-1991




நன்றி : குழந்தைகள் - அசோகமித்திரன் (கவிதா வெளியீடு.)






தட்டச்சு ; ரா ரா கு