தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Monday, December 28, 2020

விசாரணை - காஃப்கா ;; முதல் அத்தியாயம் :: ஏ.வி. தனுஷ்கோடி

 விசாரணை - காஃப்கா ;; முதல் அத்தியாயம் கைது - திருமதி க்ரூபாஹுடனும் பிறகு மிஸ் ப்யூர்ஸ்ட்ன ருடனும் சம்பாஷணை 

யாரோ ஒருவர் யோசப் க.வைப்பற்றி வேண்டுமென்றே அவதூறாகச் சொல்லியிருக்க வேண்டும். ஏனென்றால் எந்த ஒரு தவறும் செய்யாதபோது, ஒருநாள் காலை திடீரென்று அவன் கைது செய்யப்பட்டான். அவன் வசிக்கும் அறையை அவனுக்கு வாடகைக்கு விட்டிருந்த திருமதி க்ரூபாஹின் சமையற்காரி ஒவ்வொரு நாளும் காலை சுமார் எட்டு மணிக்கு அவனுக்கு உணவு கொண்டு வருவாள். அன்று அவள் வரவில்லை . அப்படி ஒருபோதும் நடந்ததில்லை . க. சிறிது நேரம் காத்திருந்தான். எதிரே வசித்துவந்த முதியவள் வழக்கத்துக்கு மாறாக ஆவலுடன் தன்னையே கவனித்துக்கொண்டிருப்பதைப் படுக்கையில் இருந்தபடியே பார்த்தான். பிறகு ஓர் அந்நிய உணர்வுடன் பசியும் சேர்ந்து கொள்ள அவன் அழைப்பு மணியை அடித்தான். உடனே கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. இதுவரை அவன் ஒருபோதும் பார்த்திராத ஒருவன் உள்ளே நுழைந்தான். சிறிது ஒல்லியாக இருந்தாலும் அவனுக்கு, நல்ல கட்டான உடலமைப்பு. மிகக் கச்சிதமாகத் தைக்கப்பட்ட கறுப்பு நிற உடையை அணிந்திருந்தான். பயணியின் உடை போல் எல்லா வகையான மடிப்புகளும் பைகளும் பக்கிள்களும் பட்டன்களும், கூட ஒரு பெல்ட்டும் வைத்துத் தைக்கப்பட்டிருந்த காரணத்தினால், அது எந்த வகையில் பயன்படும் என்பது தெளிவாக இல்லா விட்டாலும், பார்ப்பதற்கு ஏதோ ஒரு குறிப்பிட்ட வகையில் பயன்படும் என்று பட்டது. "யார் நீங்கள்" என்று கேட்டவாறே க. தன் படுக்கையில் பாதி நிமிர்ந்து உட்கார்ந்தான். ஆனால் வந்தவன், தான் அந்த அறைக்குள் வந்தது அனைவரும் அறிந்த மிகச் சாதாரணமான விஷயம் போல், க. கேட்ட கேள்வியை அலட்சியப்படுத்திவிட்டுத் தன் போக்கில் "நீங்கள் அழைப்புமணியை அடித்தீர்களா” என்று மட்டும் கேட்டான். அதற்கு க. "அன்னாதானே காலை உணவு கொண்டுவர வேண்டும்” என்றான். வந்தவனை மௌனமாகக் கூர்மையாகக் கவனித்தும், சிந்தனையில் ஆழ்ந்தும், அவன் யாராக இருக்க முடியும் என்பதை முதலில் நிர்ணயிக்க முயன்றான். ஆனால் வந்தவன், க. தன்னை வெகுநேரம் கவனிக்கவிடாமல், கதவின் பக்கம் திரும்பி, அதைத் திறந்து, கதவை ஒட்டி நின்றுகொண்டிருந்த யாரோ ஒருவனிடம் "அவர் தனக்குக் காலை உணவு அன்னாதானே கொண்டுவர வேண்டும் என்று கேட்கிறார்" என்றான். அவன் கூறியதைத் தொடர்ந்து அடுத்த அறையில் மெல்லிய சிரிப்பொலி கேட்டது. ஒலியை வைத்துப் பல பேர் சேர்ந்து சிரித்தார்களா என்பதை நிச்சயிக்க முடிய வில்லை. வந்த அந்நியன், தனக்கு ஏற்கனவே தெரிந்ததைவிட மேலும் அதிகம் தெரிந்து கொள்வதற்கு ஏதும் இல்லையென்றாலும், அறிவிக்கும் தொனியில் க.விடம் சொன்னான், "அது முடியாத காரியம்." "இது என்ன வேடிக்கை" என்று சொல்லிவிட்டு க. தன் படுக்கையை விட்டுக் குதித்தெழுந்து வேகமாகக் கால்சட்டையை அணிந்து கொண்டான். "அடுத்த அறையில் யார்தான் இருக்கிறார்கள் என்பதையும், இந்தத் தொல்லைக்கு திருமதி க்ரூபாஹ் என்ன சொல்லப்போகிறாள் என்பதையும் பார்த்துவிடுகிறேன்” என்றான். தான் அதைச் சொல்லியிருக்கக் கூடாது என்பதையும், அப்படிச் சொல்லியதால் வந்தவனுக்குத் தன்னைக் கண்காணிக்கும் அதிகாரம் ஓரளவுக்கு இருக்கிறது என்று ஒப்புக்கொள்வது போலிருந்தது என்பதையும் உடனே அவன் உணர்ந்தான். ஆனால் அது அந்தக் கணத்தில் அவனுக்கு ஒரு முக்கியமான விஷயமாகப் படவில்லை. இருந்தாலும் வந்தவன் அப்படித்தான் புரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பது "நீங்கள் இங்கேயே இருப்பது நல்லது” என்று அவன் கூறி யதிலிருந்து தெரிந்தது. "நீங்கள் யாரென்று சொல்லாதவரை நான் இங்கே இருக்கப்போவதுமில்லை, நீங்கள் சொல்வதைக்  கேட்கப்போவதுமில்லை." "நான் உங்கள் நன்மைக்காகத்தான் சொன்னேன்” என்று அந்த அந்நியன் சொல்லிவிட்டு, தானாகவே கதவைத் திறந்தான். தான் நினைத்ததைவிட மெதுவாகவே அடுத்த அறையில் க. நுழைந்தபோது அது முந்தைய நாள் மாலை எப்படி இருந்ததோ ஏறக்குறைய அப்படியே இருப்பதாக முதல் பார்வைக்குப் பட்டது. அது திருமதி க்ரூபாஹின் வரவேற்பறை. மேஜை, நாற்காலி போன்ற மரச்சாமான்கள், அவைமேல் போட்டிருக்கும் துணி, பீங்கான் பாத்திரங்கள், புகைப்படங்கள் அத்தனையும் சாதாரணமாக அடைத்திருக்கும் அந்த அறையில் இன்று சற்று அதிகமாக இடம் இருந்தது போல் தோன்றியது. ஆனால் அது உடனே புலப்படவில்லை . காரணம், முக்கியமான மாறுதல் ஒன்று நிகழ்ந்திருந்தது; அங்கே திறந்திருந்த ஜன்னல் அருகே ஒருவன் ஒரு புத்தகத்துடன் உட்கார்ந்திருந்தான். அவன் நிமிர்ந்து பார்த்தான். "நீங்கள் உங்கள் அறையிலல்லவா இருக்க வேண்டும்? ஃப்ரன்ஸ் உங்களுக்குச் சொல்லவில்லை?" "ஆமாம், ஆனால் இதற்கு என்ன அர்த்தம்?" என்று க. கேட்டு விட்டுப் புதிதாகச் சந்தித்தவனிடமிருந்து, கதவின் அருகிலேயே நின்றுகொண்டிருந்த ஃப்ரன்ஸ் என்றழைக்கப்பட்டவனிடம் பார்வையைத் திருப்பி, பிறகு உட்கார்ந்திருப்பவனை மீண்டும் பார்த்தான். முதியவர்களுக்கே உரித்தான ஆவலுடன், இங்கு நடக்கப்போகும் எல்லாவற்றையும் பார்ப்பதற்காக எதிரே இருந்த ஜன்னல் அருகே வந்திருந்த அந்தக் கிழவியை, திறந்திருந்த ஜன்னல் வழியே மீண்டும் பார்க்க முடிந்தது. "நான் திருமதி க்ரூபாஹிடம்..." என்று சொல்லிக்கொண்டே, க. அவனிடமிருந்து மிகவும் தள்ளி நின்றிருந்த அந்த இருவரிடமிருந்து தன்னைப் பிய்த்துக்கொண்டு போவது போல் நகர்ந்து அங்கிருந்து செல்ல முனைந்தான். "கூடாது!" என்று ஜன்னல் அருகே இருந்தவன் சொல்லியவாறு, புத்தகத்தை அருகிலிருந்த சிறிய மேஜைமீது எறிந்துவிட்டு எழுந்து நின்றான். "நீங்கள் இங்கிருந்து போகக்கூடாது, நீங்கள் கைது செய்யப்பட்டிருக்கிறீர்கள்.” “அப்படித்தான் தோன்றுகிறது" என்றான் க. பிறகு, "எதற்காக?" என்று கேட்டான். அதை உங்களுக்குச் சொல்வதற்காக எங்களை வைத்திருக்க வில்லை. உங்கள் அறைக்குப் போய்க் காத்திருங்கள். எடுக்க வேண்டிய நட வடிக்கைகள் ஆரம்பித்துவிட்டதால், உரிய நேரம் வரும்போது எல்லாவற் றையும் தெரிந்துகொள்வீர்கள். உங்களோடு இப்படி நட்புமுறையில் பேசுவது, எனக்கு இடப்பட்டப் பணியை நான் மீறுவதாகும். ஆனால் ஃப்ரன்ஸைத் தவிர யாரும் இதைக் கேட்டுக்கொண்டிருக்கவில்லை என்று நினைக்கிறேன். அவனே எல்லா விதிமுறைகளுக்கும் மாறாகத்தான் உங்களுடன் நட்பு முறையில் நடந்துகொள்கிறான். உங்களைக் கண்காணிப்பவர்களைத் தேர்ந்தெடுத்ததில் உங்களுக்கிருந்த அதிர்ஷ்டம் போல் உங்களுக்கு அதிர்ஷ்டம் மேலும் இருந்தால், நீங்கள் நல்லதையே எதிர்பார்க்கலாம்" என்றான். க. உட்கார விரும்பினான், ஆனால் ஜன்னல் அருகில் இருக்கும் நாற்காலியைத் தவிர வேறு உட்கார வசதி அந்த அறையில் எங்குமே இல்லாமல் இருந்ததை இப்போதுதான் கவனித்தான். அவன் சொல்வது எவ்வளவு உண்மை என்பதை நீங்கள் போகப் போகத் தெரிந்து கொள்வீர்கள்" என்று ஃப்ரன்ஸ் சொல்லிவிட்டு, அவனும் மற்றவனும் ஒரே சமயத்தில் க.வை நோக்கிச் சென்றார்கள். குறிப்பாக, இரண்டாமவன் க. வைவிட மிகவும் உயரமாக இருந்தான்; பேசும்போது அடிக்கடி அவன் க.வின் தோளில் தட்டினான். இருவரும் அவனுடைய இரவு உடையை ஆராய்ந்து விட்டு, இனிமேல் இதைவிட மிகவும் மோசமான சட்டையை அவன் அணிய வேண்டியிருக்கும் என்றார்கள். மேலும், அவனுடைய மற்ற உடைகளைப் போல் இந்தச் சட்டையையும் அவர்கள் பாதுகாத்துவருவார்கள் என்றும், பிறகு அவனுடைய விஷயம் சாதகமாக முடியும் போது அவனிடம் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள் என்றும் கூறினார்கள். "டிப்போவில் கொடுத்துவைப்பதை விட எங்களிடம் இவற்றைக் கொடுத்துவைப்பது மேல்" என்றார்கள் "ஏனென்றால், டிப்போவில் அடிக்கடி பித்தலாட்டம் நடக்கிறது என்பது மட்டு மில்லாமல், ஒரு குறிப்பிட்ட காலம் கழித்து அங்கிருக்கும் சாமான்களை, அவற்றுக்குரியவர்களின் விசாரணை முடிந்துவிட்டதா இல்லையா என்றுகூடப் பார்க்காமல் அவர்கள் விற்றுவிடுகிறார்கள். இது போன்ற வழக்குகள் எல்லாம், குறிப்பாக சமீப காலமாக, எவ்வளவு இழுத்துக்கொண்டே போகின்றன தெரியுமா! எப்படியிருந்தாலும் கடைசியில் உங்களுக்கு டிப்போவிலிருந்து சாமான்கள் விற்ற பணம் வந்து சேர்ந்துவிடும். ஆனால், முதலில் அந்தத் தொகையே மிகவும் குறைவாக இருக்கும்; ஏனென்றால், சாமான்களின் விலையை நிர்ணயிப்பது. மற்றவர்கள் அவற்றுக்குத் தரத் தயாராக இருக்கும் உச்சவிலை அல்ல, ஆனால் உச்ச லஞ்சத்தொகைதான். எங்கள் அனுபவத்தில் நாங்கள் அறிந்தது என்னவென்றால், ஒவ்வொரு கை மாறும்போதும் உங்களுக்குக் கிடைக்கும் தொகை ஒவ்வொரு வருஷமும் குறைந்து கொண்டே போகும் என்பதுதான்." க. இந்தச் சொற்பொழிவைக் கேட்கவே இல்லை. அவனது உடமைகள் மேல் அவனுக்கு இன்னும் உரிமை இருக்கலாம். இருந்தாலும் அதை அவன் அவ்வளவு முக்கியமான விஷயமாகக் கருதவில்லை. தன்னுடைய நிலைமையைப்பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்வது அதைவிட அவனுக்கு முக்கியமாக இருந்தது. அவர்கள் மத்தியில் அவனால் அதைப்பற்றிச் சிந்திக்கக்கூட முடியவில்லை. இரண்டாவது காவலாளியின் வயிறு - அவர்கள் காவலாளிகளாகத்தான் இருக்க வேண்டும் - அவன்மீது அவ்வப்போது அதிகாரம் கலந்த நட்பு முறையில் இடித்துக்கொண்டிருந்தது. அந்தப் பருமனான உடலுக்குச் சிறிதும் சிறிதும் பொருத்தமில்லாத, உலர்ந்துபோய், எலும்புகள் துருத்திக்கொண்டிருக்கிற, கடுமையான தோற்றத்துடன் கூடிய, பக்கவாட்டில் கோணலாக வளைந்து போன மூக்குடன் காணப்பட்ட மற்ற காவலாளியுடன் தன்னுடைய தலைக்கு மேல் பார்வைகளைப் பரிமாறிக்கொள்கிற முகத்தை க. நிமிர்ந்து பார்த்தான். அவர்கள் எத்தகைய மனிதர்கள்? எதைப்பற்றிப் பேசினார்கள்? எந்தத் துறை யைச் சேர்ந்தவர்கள்? க. இன்னும் ஒரு ஜனநாயக ஆட்சியில்தானே வாழ்கிறான். எங்கும் அமைதி நிலவுகிறது. எல்லாச் சட்டங்களும் நேர்மையாகத்தான் இருக்கின்றன. இருந்தும் அவனுடைய அறையில் அவனைத் திடீரென்று கைது செய்ய யாருக்கு இவ்வளவு தைரியம் வந்தது? முடிந்தவரை எல்லா வற்றையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் தன்மையும், கடுந்துன்பத்தையும் அது வந்த பிறகே கடுந்துன்பமென்று ஒப்புக்கொள்ளும் தன்மையும், எவ்வளவு அச்சுறுத்தினாலும், எதிர்காலத்துக்கு வேண்டிய ஆயத்தங்கள் செய்யாமலிருக்கும் இயல்பும் உடையவன் அவன். ஆனால் இந்த இயல்பு  அவனுக்குச் சரியானதாகப் படவில்லை ; இது முழுவதையும் ஒரு வேடிக்கை என்று எடுத்துக்கொள்ளலாம். இந்தத் தரக்குறைவான விளையாட்டை, அவனுக்குத் தெரியாத ஏதோ ஒரு காரணத்தால் - ஒருவேளை இன்று அவனுடைய முப்பதாவது பிறந்தநாள் என்பதாலோ என்னவோ - அவனுடன் வங்கியில் வேலை செய்யும் சகாக்கள் ஏற்பாடு செய்திருக்கலாம். அப்படி நடக்க ஏது இருக்கிறது. ஒருவேளை அவன் எப்படியாவது அந்தக் காவலாளிகளின் முன் வாய் விட்டுச் சிரித்துவிட்டால், அவர்களும் சேர்ந்து சிரித்துவிடலாம். அவர்கள் கீழ்மட்டத்தில் இருக்கும் அரசாங்க ஊழியர்களாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால், அவர்கள் அரசாங்க ஊழியர்களைப் போல்தான் தோற்றமளித்தார்கள். இருந்தாலும் காவலாளி ஃப்ரன்ஸை முதல்முறையாகப் பார்த்தபோது, இந்தக் காவலாளியிடம் இன்னும் ஒருவேளை தனக்கிருக்கும் மிகச் சிறிய அனுகூலத்தையும் கை நழுவவிடக்கூடாது என்று தோன்றிய எண்ணத்தை, இப்பொழுது மீண்டும் உறுதிசெய்து கொண்டான். ஒரு விளையாட்டு என்று புரிந்து கொள்ளத் தனக்குத் தெரியவில்லை என்று பிறகு பிறர் சொல்வார்களானால் அதில் ஆபத்து ஏதும் அதிகம் இல்லை என்று க.வுக்குத் தெரியும். எனினும், அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ளும் சுபாவம் அவனுக்குச் சாதாரணமாக இல்லைதான். என்றாலும், சில சமயங்களில் - அவை மிகச் சாதாரணமானவையே என்றாலும் அவன் தன் நண்பர்களின் இயல்புக்கு மாறாக, ஏற்படக்கூடிய விளைவுகளைத் தெரிந்திருந்தபோதும் அதுபற்றிச் சிறிதும் கவலைப்படாமல், முன்னெச்சரிக்கையின்றி நடந்து கொண்டு, அதனால் ஏற்பட்ட விளைவினால் தண்டனை அனுபவித்ததை நினைவுகூர்ந்தான். இம் முறையாவது அது போல் மீண்டும் நடக்கக்கூடாது. இது ஒருவகை விளையாட்டாக இருக்குமானால், அவனும் அதில் பங்கெடுத்துக்கொள்ள விரும்பினான். இன்னும் அவன் சுதந்திரமாகத்தான் இருந்தான். "ஒரு நிமிஷம்..." என்று கூறி விட்டு, இரண்டு காவலாளிகளுக்கிடையே நுழைந்து அவசரமாகத் தன் அறைக்குச் சென்றான். "புத்திசாலியாகத்தான் தோன்றுகிறான்" என்று அவனுக்குப் பின்னால் அவர்கள் கூறியது அவன் காதில் விழுந்தது. தன் அறையில், தன் மேஜையின் அறைகளை எல்லாம் இழுத்துப்போட்டான். அவற்றில் எல்லாப் பொருள்களும் மிகவும் ஒழுங்காக இருந்தன. ஆனால் அவன் தேடிய அவனுடைய அடையாள அட்டையை மட்டும் அவனுக்கிருந்த படபடப்பில் உடனே கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியில் அவனுடைய சைக்கிள் லைசென்ஸ் கிடைத்தது. அதை எடுத்துக்கொண்டு, உடனே காவலாளிகளிடம் செல்ல நினைத்தான். ஆனால், அவனுக்கு அது மிகவும் உபயோகமற்றதாகப்பட்டது. அதனால் அவனுடைய பிறப்புச் சான்றிதழ் கிடைக்கும் வரை 

பக்கத்து அறைக்கு அவன் வந்த அதே நேரத்தில் எதிரில் இருந்த கதவைத் திறந்து, திருமதி க்ரூபாஹ் அந்த அறையினுள் வர எத்தனித்துக்கொண்டிருந்தாள். அவளை ஒரே வினாடிதான் பார்க்க முடிந்தது. ஏனென்றால், அவள் க.வை அடையாளம் கண்டுகொண்ட உடனேயே வெளிப்படையாகவே சங்கடமுற்று, தன்னை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டு கதவுக்குப்பின் வேகமாகச் சென்று மறைந்து, மிகவும் ஜாக்கிரதையாகக் கதவை மூடினாள். பரவாயில்லை. உள்ளே வாருங்கள்" என்று க. அந்தக் கணத்திலேயே சொல்லியிருக்க முடியும். ஆனால், காகிதங்களுடன் அவன் அந்த அறையின் நடுவில் நின்றபடி, எதிரில் மீண்டும் திறக்கப்படாமல் இருந்த கதவைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, காவலாளிகளின் அழைப்பைக் கேட்டுத் திடுக்கிட்டான். திறந்த ஜன்னலின் பக்கத்தில் மேஜையின் அருகே உட்கார்ந்து கொண்டு, அவர்கள் அவனுடைய காலையுணவைச் சாப்பிட்டுக்கொண்டிருப்பதை இப்போது கவனித்தான். "ஏன் அவள் உள்ளே வரவில்லை?" என்று கேட்டான். "அவள் வரக்கூடாது” என்று உயரமாக இருந்த காவலாளி கூறினான். "நீங்கள் கைது செய்யப்பட்டிருக்கிறீர்களே!" "எப்படி நீங்கள் என்னைக் கைது செய்திருக்க முடியும்? அதுவும் இந்த வகையில்?" "சரிதான், மறுபடியும் ஆரம்பித்துவிட்டீர்களா" என்று காவலாளி கூறிவிட்டு, ஒரு ரொட்டித் துண்டைத் தேன் ஜாடியில் தோய்த்தான். இது போன்ற கேள்விகளுக்கு நாங்கள் பதில் சொல்வதில்லை” "நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்? என்றான் க. “இதோ என்னுடைய அடையாள அட்டை, இப்போது உங்கள் அடையாள அட்டைகளைக் காட்டுங்கள், குறிப்பாகக் கைதுவாரண்டைக் காட்டுங்கள். "கடவுளே!" என்றான் காவலாளி. "நீங்கள் இருக்கும் நிலைமையில் எங்களுக்குப் பணிந்து போகாமல், உங்களுக்குத் தெரிந்தவர்கள் எல்லோரையும் விட உங்களுக்கு மிக உதவியாக இருக்கும் எங்களைச் சீண்டிப்பார்க்க வேண்டுமென்று நீங்கள் முடிவு செய்துவிட்டதைப் போல் தோன்றுகிறது. நான் சொல்வது உண்மைதான், நீங்கள் நம்பத்தான் வேண்டும்” என்ற ஃப்ரன்ஸ் தன் கையிலிருந்த காப்பிக் கோப்பையை வாய்க்குக் கொண்டுபோகாமல், க.வை வெகுநேரம் அர்த்தமுள்ளதைப் போல, ஆனால் புரிந்துகொள்ள முடியாத பார்வையுடன், உற்றுப்பார்த்தான். க. தன்னை அறியாமல், ஃப்ரன்ஸுடன் கண்களினாலேயே பேச ஆரம்பித்தான்; ஆனால் உடனே தன் அடையாள அட்டையின்மீது அடித்துச் சொன்னான். “இதோ என்னுடைய அடையாள அட்டை.” "அதைப் பற்றி எங்களுக்கென்ன?" என்று உயரமான காவலாளி இடைமறித்துக் கத்தினான். "ஒரு குழந்தையைப் போல நீங்கள் எரிச்சலூட்டுகிறீர்கள், என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? இப்படி, காவலாளிகளான எங்களிடம் அடையாள அட்டையைப்பற்றியும் கைதுவாரண்ட்பற்றியும், விவாதம் செய்வதால் உங் களுடைய பாழாய்ப்போன வழக்கைச் சீக்கிரமாக முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று நினைக்கிறீர்களா? ஒரு நாளைக்குப் பத்து மணிநேரம் உங்களைக் காவல் காத்து அதற்கான சம்பளத்தைப் பெறுவதைத் தவிர, உங்களுடைய அடையாள அட்டைகள் பற்றியும், உங்கள் விஷயத்தைப்பற்றியும் ஒன்றும் புரியாத, ஒன்றிலும் சம்பந்தப்படாத கீழ் மட்டத்திலிருக்கும் ஊழியர்கள் நாங்கள்; நாங்கள் அவ்வளவுதான்; இருந்தாலும் எங்களை நியமித்துள்ள பெரும் அதிகாரம் இது போன்று கைது செய்வதற்கான கட்டளை பிறப்பிக்கும் முன்பு, கைது செய்யும் காரணத்தையும் கைது செய்யப்படும் நபரைப்பற்றியும் மிகவும் தெளிவாகத் தெரிந்துகொண்டிருக்கும் என்று அறிந்து கொள்ளும் சக்தி எங்களுக்கு இருக்கிறது. இதில் தவறு ஏதும் ஏற்பட்டுவிடவில்லை. கீழ்மட்டத்தில் உள்ள அதிகாரம்பற்றித்தான் எனக்குத் தெரியும். எனக்குத் தெரிந்தவரை எங்களை நியமித்துள்ள அதிகாரம் நீங்கள் நினைப்பது போல் மக்களிடையே ஏதோ ஒரு குற்றத்தைத் தேடி அலைவதில்லை. ஆனால் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளது போல், குற்றங்களினால் அது ஈர்க்கப்பட்டு, காவலாளிகளான எங்களை அனுப்ப வேண்டியிருக்கிறது. இதுதான் சட்டம். இதில் தவறு எங்கே இருக்க முடியும்?” “இந்தச் சட்டம் எனக்குத் தெரியாது” என்றான் க. "அதனால் அந்த அளவுக்கு உங்களுக்குத்தான் கஷ்டம்” என்றான் காவலாளி. "இது உங்கள் கற்பனையில் மட்டும்தான் இருக்கிறது” என்றான் க., எப்படியாவது காவலாளிகளின் எண்ணங்களில் நுழைந்து அவர்களைத் தனக்குச் சாதகமாகத் திருப்பிவிடவோ அவர்களது எண்ணங்களை ஆக்கிரமித்துக்கொள்ளவோ அவன் நினைத்தான். ஆனால், அதை மறுத்து, அந்தக் காவலாளி கூறினான். "அதை நீங்கள் உணரும் காலம் வரும்." ஃப்ரன்ஸ் தலையிட்டுக் கூறினான். "இதோ பார் வில்லெம், அந்தச் சட்டம் தனக்குத் தெரியாது என்று அவர் ஒப்புக் கொள்கிறார்; அதே சமயம், தான் குற்றமற்றவர் என்றும் அவர் கூறுகிறார்." "நீ சொல்வது சரிதான். ஆனால், எதையுமே நம்மால் அவருக்குப் புரியவைக்க முடியவில்லை" என்றான் மற்றவன். க. மேற்கொண்டு பதில் சொல்லவில்லை இந்த மட்டமான ஜந்துக்களின் - அவர்களே தாங்கள் அப்படித்தான் என்று ஒப்புக்கொள்கிறார்கள் - உளறல்களைக் கேட்டுத் தான் இன்னும் குழப்ப மடைய வேண்டுமா என்று அவன் யோசித்தான். இவர்கள் பேசும் விஷயங்கள் பற்றி இவர்களுக்கே ஒன்றும் புரியவில்லை. இவர்கள் இவ்வளவு முட்டாள்களாக இருப்பதால்தான் இவ்வளவு தீர்மானமாகவும் இருக்கிறார்கள். இவர்களிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்பதைவிட எனக்குச் சமமானவர்களுடன் ஒருசில வார்த்தைகள் பேசுவது எல்லாவற்றையும் தெள்ளத் தெளிவாக்கிவிடும். அவன் அந்த அறையில் காலியாக இருந்த இடத்தில் சில முறை மேலும் கீழும் நடந்தான். எதிரே, அந்தக் கிழவியைப் பார்த்தான்; அவள் தன்னைவிட இன்னும் வயதான ஒரு தொண்டு கிழவனை இழுத்துக்கொண்டு வந்து, ஜன்னலருகே அணைத்தவாறு நின்றிருந்தாள். க. எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். "உங்களுடைய மேற்பார்வையாளனிடம் என்னை அழைத்துப் போங்கள் " என்றான். "அவர் விரும்பினால்தான்; அதற்கு முன்பு அல்ல" என்றான், வில்லெம் என்று அழைக்கப்பட்ட காவலாளி. "இப்போது நான் உங்களுக்குக் கூறும் ஆலோசனை" அவன் மேலும் தொடர்ந்தான், "நீங்கள் உங்கள் அறைக்குச் சென்று, அடுத்தபடியாக உங்களை என்ன செய்ய வேண்டுமென்று முடிவெடுக்கும் வரை, அமைதியாகக் காத்திருங்கள் உங்களுக்கு நாங்கள் கூறுவது என்னவென்றால், பயனற்ற எண்ணங்களால் மனதை அலட்டிக்கொள்ளாமல் உங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் இன்னும் பெரிய கஷ்டங்களைச் சமாளிக்க வேண்டியிருக்கும். நாங்கள் உங்களை எவ்வளவு நல்ல முறையில் நடத்தினோமோ அதற்கேற்றவாறு நீங்கள் எங்களை நடத்தவில்லை. நாங்கள் யாராக இருந்தாலும் உங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இப்போது, சுதந்திர மனிதர்களாகவாவது இருக்கிறோம் என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்கள். இந்த வித்தியாசம் ஒன்றும் அவ்வளவு அற்பமானதல்ல. இருந்தாலும், உங்களிடம் பணம் இருந்தால் எதிரிலிருக்கும் சிற்றுண்டிச்சாலையிலிருந்து உங்களுக்குச் சிற்றுண்டி வாங்கிவரத் தயாராக இருக்கிறோம்." | 

இப்படி அவர்கள் உதவியாயிருக்க முன்வந்ததற்கு க. பதில் சொல்லாமல், சிறிது நேரம் மௌனமாக நின்றிருந்தான். ஒருவேளை அவன் அடுத்த அறையின் தவையோ, அல்லது முன் அறையின் கதவையோ திறந்தாலும், அவர்கள் இருவருக்கும் அவனைத் தடுக்கும் துணிவு இல்லாமலிருக்கலாம். இது போல் ஏதாவது ஒரு எல்லைக்கு இந்த விஷயத்தை எடுத்துச் சென்றால்தான், இதற் கெல்லாம் ஒரு எளிய முடிவு கிடைக்கும் போலிருக்கிறது. அல்லது, ஒருவேளை அவர்கள் அவனைப் பிடித்துக் கீழே வீழ்த்தி விடலாம். அப்போது அவன் இதுவரை ஒருவகையில் தக்கவைத்துக்கொண்டிருந்த தன்னுடைய மேலான நிலையை இழந்துவிடுவான். நிகழ்ச்சிகள் தம் போக்கில் கொண்டுவரும் முடிவின் நிச்சயத்தன்மையைத் தேர்ந்து, தன்னிடமிருந்தோ மற்றவர்களிடமிருந்தோ மேலும் ஒரு வார்த்தையும் வெளிவர இடந்தராமல் தன் அறைக்குத் திரும்பினான். 

அவன் தன் படுக்கையில் விழுந்தான். பிறகு காலை உணவுக்காக, பேசினுக்குப் பக்கத்திலிருந்த மேசைமீது முதல் நாள் மாலை வைத்த அழகான ஆப்பிளை எடுத்தான். இப்போது அதுதான் அவனுடைய காலை உணவு. எப்படியிருந்தாலும் அவன் அதை வாய் நிறையக் கடித்தபோதே, எதிரில் இருந்த அசுத்தமான சிற்றுண்டிச்சாலையிலிருந்து காவலாளிகளின் தயவில் கொண்டு வந்திருக்கக்கூடிய காலை உணவைவிட இது மேலானது என்பது நிச்சயமாகத் தெரிந்தது. இப்போது தான் மிகவும் தெம்பாகவும், நம்பிக்கையுடனும் இருப்பதை உணர்ந்தான். வங்கிக்கு இன்று காலை வேலைக்குப் போக முடியாதுதான். இருந்தாலும் வங்கியில் அவன் மற்றவர்களைவிட உயர்பதவி வகித்ததால் அவன் போகாததை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள். அவன் உண்மையான காரணத்தைத் தெரிவிக்க வேண்டுமா? அப்படிச் செய்ய அவன் எண்ணினான். அவனை அவர்கள் நம்பாவிட்டால்? இந்த விஷயத்தில் நம்புவது கஷ்டந்தான். திருமதி க்ரூபாஹை சாட்சியாகக் கொண்டுவரலாம் அல்லது எதிரே இருக்கும் ஜன்னலுக்கு இப்போதுவந்து கொண்டிருக்கும் அந்த இரண்டு கிழங்களையும் சாட்சியாகக் கொண்டுவரலாம். காவலாளிகள் அவனை இந்த அறைக்கு விரட்டி, தனியாக இருக்கும்படி விட்டிருப்பதில், அவன் தற்கொலை செய்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் நிறைய இருந்தன என்பது, குறைந்த பட்சம் காவலாளிகளின் நோக்கிலிருந்து பார்க்கும்போது, அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதே சமயத்தில் அப்படிச் செய்து கொள்ளத் தனக்கு என்ன காரணம் இருக்கக்கூடும் என்று அவன் தன் நோக்கிலிருந்து தானே கேட்டுக் கொண்டான். அவர்கள் இருவரும் அடுத்த அறையில் இருந்து கொண்டு அவனுடைய காலை உணவைப் பறித்துக்கொண்டுவிட்டார்கள் என்பதனாலா? தற்கொலை செய்து கொண்டிருந்தால் அது அர்த்தமற்றதாக இருந்திருக்கும். அப்படிச் செய்து கொள்ள அவன் நினைத்திருந்தாலும் தற்கொலை அர்த்த மற்றது என்பதால் அப்படிச் செய்யும் நிலையில் அவன் இருந்திருக்கமாட்டான். காவலாளிகளின் குறுகிய அறிவு அவ்வளவு வெளிப்படையாகத் தெரியாமலிருந்திருந்தால் அவர்களும், தற்கொலை அர்த்தமற்றது என்ற அதே திடமான நம்பிக்கையினால், அவனைத் தனியாக இருக்க விடுவதில் பாதகம் ஒன்றுமில்லை என்று எண்ணினார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். சுவரில் பதித்திருந்த பீரோவை நோக்கி அவன் சென்றதையும், அதில் அவன் பத்திரப் படுத்தி வைத்திருந்த உயர்தர பிராந்தியை எடுத்து, காலை உணவுக்குப் பதிலாக ஒரு டம்ளரைக் காலி செய்ததையும், பிறகு இரண்டாவது டம்ளரை தைரியம் வரவழைத்துக்கொள்வதற்காகக் குடித்ததையும், கடைசி டம்ளரை - உண்மையில் அப்படி வேண்டியிருக்காது என்றாலும் - ஒருவேளை தேவையிருந்தால் ஒரு முன்னேற்பாடாக எதற்கும் இருக்கட்டுமே என்று முடித்ததையும், அவர்கள் வேண்டுமென்றால் பார்த்துக்கொள்ளட்டும். அப்போது அடுத்த அறையிலிருந்து அவனை அழைத்த அழைப்பு, அவன் பற்கள் கண்ணாடி டம்ளரில் இடித்துக்கொள்ளும் அளவுக்கு அவனைத் திடுக்கிடவைத்தது. "மேற்பார்வையாளர் உங்களைக் கூப்பிடுகிறார்!? என்று கேட்டது. அவனைத் திடுக்கிட வைத்தது இந்தக் குறுகிய, வெடுக்கென்ற ராணுவக் கத்தல்தான் - காவலாளி ஃப்ரன்ஸால் அப்படிக் கத்த முடியும் என்று அவன் எண்ணவேயில்லை. அந்தக் கட்டளை என்னவோ அவனுக்கு மிகவும் உகந்ததாகவே இருந்தது. "இவ்வளவு நேரம் ஆயிற்றா?" என்று பதிலுக்குக் கத்திவிட்டு, பீரோவைச் சாத்திவிட்டு உடனே அடுத்த அறைக்கு விரைந்தான். அங்கே அந்த இரண்டு காவலாளிகளும் நின்றுகொண்டு சர்வசாதாரணமான விஷயம் போல் அவனை மறுபடியும் அவன் அறைக்குத் துரத்தினர். "நீங்கள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?" என்று கத்தினார்கள். "சட்டை மட்டும் போட்டுக்கொண்டு மேற்பார்வையாளரின் முன் சென்றால், உங்களுடன்கூட எங்களையும் சேர்த்து அடித்து நொறுக்கிவிடுவார்." "நாசமாய்ப் போக, விடுங்கள் என்னை !” என்று க. கத்தினான். ....................


குறிப்பு - க்ரியா எஸ். ராமகிருஷ்ணன் ---- விசாரணை - காஃப்கா

 ஒரு குறிப்பு 

வாசிப்பு என்பது இயந்திரகதியில் நிகழும் செயல் அல்ல. மாறாக மனஒழுங்கை வலுயுறுத்தும். படைப்புச் செயலில் பங்குகொள்ளும் ஒரு செயல், வாசகனின் கவனத்தையும் அக்கறையையும் கோரும் போதுதான் ஒரு படைப்பு தன் முழு வீச்சையும் புலப்படுத்துகிறது. பெரும்பாலோருக்கு வாசிப்பு எளிதில் நிகழும், முயற்சி தேவைப்படாத ஒரு பழக்கமாக இருந்துவருகிறது. வாசகனின் முயற்சியை வேண்டும். அதன்மூலம் வாசகனின் அகவிஸ்தரிப்பைச் சாத்தியமாக்கும். வாழ்க்கைக்கும் இலக்கியத்துக்குமிடையே உள்ள உறவைத் தெளிவாக எடுத்துக்காட்டும் மொழிபெயர்ப்புகள் தமிழில் அவசியம் என்ற வகையில்தான் விசாரணை' தமிழாக்கம் முக்கியத்துவம் பெறுகிறது. மொழி பெயர்ப்புகள் அவை வந்து சேரும் மொழியில் புதிய சாத்தியக்கூறுகளைச் சுட்டிக்காட்டக்கூடியவை. புது வெற்றிகளுக்கு வழி வகுக்கக்கூடியவை, என்ற வகையிலும் 'விசாரணை' முக்கியத்துவம் பெறுகிறது. 

'விசாரணை' நேர்கோட்டில் செல்லும் கதை அல்ல. எளிதான விவரணை முறையில் எழுதப்பட்ட கதையும் அல்ல. மொழியும் மிகவும் வித்தியாசமானது. காஃப்காவின் தீவிரம் அவருடைய நடையை நிர்ணயிக்கிறது. ஒரு நிலைமையின் பல்வேறு புள்ளிகளை ஒரே நேரத்தில் அவர் மனம் பதிவு செய்கிறது. இதனால் முற்றுப்புள்ளிகள் அழிகின்றன. ஒரு ஆவேச மனத்தின் பெருக்காய் அவர் வாக்கியங்கள் தொடருகின்றன. பத்திகள் இறுக்கமாக, மூச்சுவிட இடமில்லாமல், நீண்டு, நெருக்குகின்றன. இவையெல்லாம் வெறும் உத்திகள் அல்ல. ஆக, காஃப்காவைத் தமிழில் கொண்டுவரும் போது நாம் உள்ளடக்கத்தை மட்டும் கொண்டுவருவதில் பொருளில்லை. அவர் மொழியும் தமிழில் வரக்கூடிய மொழிதான். சற்றுக் கடினமாக இருக்கலாம். ஆனால் தமிழின் தனித்தன்மை கெடாமல், அதை மீறாமல் காஃப்காவின் மொழியைத் தமிழில் கொண்டு வரும் போது தமிழ் மொழியும் விரிவடைகிறது. இந்த அடிப்படைதான் 'விசாரணை' மொழிபெயர்ப்பில் க்ரியா மேற்கொண்டுள்ள பெரும் உழைப்பை அர்த்தமுள்ளதாக்குகிறது. 

1985 இல் துவங்கிய மொழி பெயர்ப்பின் முதல் வரைவு 1987 இல் முழுமை அடைந்தது. தொடர்ந்து, சிட்டத்தட்டத் தலைக்குச் சுமார் 400 மணிநேரம் என்ற அளவில் ஏ.வி. தனுஷ்கோடியும், ஜி. கிருஷ்ணமூர்த்தியும், நானும் அதை மூலத்துடன் ஒப்பிட்டுத் திருத்தங்கள் செய்தோம். அதைத் தொடர்ந்து 1987க்கும் 1992 மார்ச் மாதத்துக்கும் இடையே ஜி. கிருஷ்ணமூர்த்தியும், கே. நாராயணனும், நானும் விட்டு விட்டுப் பல நூறு மணிநேரம் செலவழித்திருக்கிறோம். அதே போல் வண்ணநிலவன். ஏ. சீனிவாசன். நிஜந்தன் ஆகியோரும் வெவ்வேறு கட்டங்களில் மொழிபெயர்ப்பு செம்மைப்பட உதவியிருக்கிறார்கள். இவர்கள் அனைவருடைய ஒத்துழைப்புக்கும் க்ரியா நன்றி செலுத்துகிறது. கையெழுத்துப் பிரதி தயாரிக்கும் செலவை ஜெர்மனியிலுள்ள InterNatianes அமைப்பு எந்த முன் வந்திருக்கிறது. இந்த உதவிக்கு Inter Nationes அமைப்புக்கும். அதைச் சாத்திய மாக்சிய சென்னை மாக்ஸ் முல்லர் பவனுக்கும் எங்கள் நன்றி. 

எஸ். ராமகிருஷ்ணன்