தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

நகுலன் கவிதைகள்


nagu8
நகுலன் (இ. மே 172007
சேவ் நகுலன் - பேயோன்
Posted on August 3, 2014
http://www.writerpayon.com/2014/08/03/

நகுலனை விட்டுவிடுங்கள்
அவரெல்லாம் நல்ல கவிஞர்
சிக்கனமாக, அழகாக, மர்மமாக
எழுதுவார் வயதானவர்
உங்களுக்கும் எனக்கும் உண்மையிலேயே
புரிகிறதோ இல்லையோ
தத்துவங்கள் பொதிந்த கவிதைகளவை
புரிந்த வரைகூட
படிக்கும் ஒவ்வொரு கவிதையும்
ஒவ்வொரு வரியும்
சிந்தனைப் போதையேற்றும்
ஆமாம், அவர் தனியாகத்தான் இருந்தார்
தனிமை பற்றி எழுதினார் அழகாக
கருப்புவெள்ளைப் படங்கள் எடுத்து
அவரை அஞ்சலிப் பாப்பாவாக்கி அழகுபார்த்தனர்
நீங்களும் அவர்களில் ஒருவராகாதீர்கள்
நம் சடங்குகளுக்கு அவர் ஆளல்ல
சிலரைப் போலவர் வாட்டசாட்டமாக,
ஐம்பது வயதாக இருந்தால்
இவ்வளவு சீந்துவீர்களா?
இதைக் கடைபிடியுங்களேன்:
நீ ஒருவரை நேசித்தால் அவரை விட்டுவிடு
அவர் உன்னிடம் திரும்பி வந்தால்
அவர் உன்னுடையவர்.
உத்தரவாதமாகச் சொல்கிறேன்
அவர் உங்களிடம் திரும்பி வர மாட்டார்
அவர் அந்த மாதிரி ஆளில்லை
அவர் இன்னும் வாழ வேண்டியிருக்கிறது.
நண்பர்களே, நகுலனை விட்டுவிடுங்கள்
அவருடன் திருமதி சுசீலாவையும்தான்.
நிலைமை கைமீறிப் போய்க்கொண்டிருக்கிறது.
ஆகவே நகுலனை விட்டுவிடுங்கள்
வேறு எவனாவது கிடைக்காமலா போய்விடுவான்
நன்றாகத் தேடிப்பாருங்கள்
ஆனால் நகுலனை விட்டுவிடுங்கள்.
கூடவே திருமதி சுசீலாவையும்.


வா.மு. கோமு
15 hrs ·

Sunday, ‎December ‎20, ‎2015


சுசீலா நகுலனைப் பார்த்துப் போக
அவர் வீட்டின் கதவைத் தட்டினாள்!
உள்ளே வரலாம் யாராகவிருந்தாலும்
என்றே நகுலனும் குரல் கொடுத்தார்.
உள்ளே வந்த சுசீலா நகுலனை அறைகளுக்குள்
தேடினாள்! -நகுலன் வெளியேறிச் சென்று
ஒரு விரற்கடையளவு நேரமிருக்கலாம்
என்றே எண்ணி திரும்பிவிட எத்தணிக்கையில்
வெளியே கதவு தட்டபட்டது மீண்டும்!
உள்ளே யாரு சுசீலாவா? என்று நவீனன்
குரல் கொடுத்தான்!
யார் நவீனனா..? யாரா இருந்தாலும்
உள்ளே வரலாமென நகுலன் குரல்
கொடுத்தார் உள் அறையிலிருந்து!
நிச்சயமாக எந்தக் கதவும்
எந்த சமயத்திலும் யாருக்கும் திறப்பதேயில்லை!


-(புது எழுத்து மனோன்மணிக்கு!)

நகுலனின் உலகம் - 

குருசு.சாக்ரடீஸ்

http://kurususocrates.blogspot.in/2011/08/blog-post_23.html
நகுலனின் உலகம் நான்கு அறைகளுடன் இயங்கிக்கொண்டிருக்கிறது. நேற்று ஒரு கவிதை கதவை திறந்து நகுலனை தேடிக்கொண்டிருந்தபோது அவர் வேறு கதவு வழியே வெளியேறிக்கொண்டிருந்தார். நகுலன் எந்த அறையிலும் இல்லையென்பது கவிதைக்கு ஒருபொழுதும் தெரியபோவதில்லை. நகுலன் அப்பத்தை பிட்டு திராட்சை ரசத்தை பருகத்துவங்கினார் ஆமென்.

நானுமென்னெழுத்தும்   - நகுலன்

கசடதபற மே 1971 - 8வது இதழ்

http://www.navinavirutcham.in/2015/08/1971-8_20.html


 நின் கைவசம்
 என் கைப்பிரதி

 "இதனையெழுது"என்றாய்
 எழுதினேன்.

 "இதனையழி" என்றாய்
 "அழித்தேன்"
 "இதனையிவ் வண்ணமெழுது" என்றாய்
 சொன்னவண்ணமே செய்தேன்.

 இதுவென்னூல்
 இதுவென் பெயர்
 இது வென்னெழுத்து
 விமர்சனமும் விரைவில் வந்தது
 "ஆ என்ன வெழுத்து," என்றாரொருவர்
 "ஆ இதுவன்றோ வெழுத்து" என்றாரொருவர்.

 என்எனழுத்தில் நானில்லை
 என்றாலுமென் பெயருண்டு
 எழுதியெழுதி அழித்தேன்
 அழித்து அழித்து ஆளானேன்.
 விமர்சகரும் சொல்லி விட்டார்
 இல்லா ததையெல்லாம்
 உண்டென்று
 சொல்லி விட்டார்.

 மாமுனி பரமஹம்ஸன்
 அவன் மாபெரும் சீடன்
 சொன்னான்
 "மாயை யென்பது
 மன்பதையனுபவம்"
 மாயையென்னெழுத்து
 மாமாயை
 என் வாழ்வு
 என்றாலுமென்ன
 இது வென்னூல்
 இது வென்பெயர்
 இது வென்னெழுத்து.


கொல்லிப்பாவை 2
வலையேற்றியது: "அழியாச் சுடர்கள்" ராம் | நேரம்: 12:28 PM | 
நகுலன்

clip_image002
அகலிகை நகைக்க
அருந்ததியும் நின்றிகழ
வருமீரசை ஒருசொல்
நின்நாமம் செய்ய;

வில்லெடுத்து நாண் வளைத்துக்
குறிவீழ்த்தும் முன் கருத்துந்த
கண்ணூடு கண் வளைந்து
உள்ளம் புணர்ந்து உடல் தழுவத்துடித்து
அன்று நின்ற அச்சீதையும்
நின்செயல் கண்டு நெடிது நிற்பாள்.

நின்நாமம் கேட்டு
மாரனும் கை சோர்வான்.
அவன் உயிரனைய ரதிஅவளும்
நின்ற திசயிப்பாள்;

வில்லென உடலும் வளைய
விண்ணென்று நாணையொத்து உள்ளமும்
நெறித்து நிற்க
கண்ணெடுத்து உள்ளம் வளைத்துக்
குறிவீழ்த்த முடியாது நிற்கும் நின்செயல் கண்டு
விண்ணவரும் எட்டிநின்று
எள்ளி நகைப்பர்.

மெய்யின் இருளகல
உயிரின் கள்வரை
விண்ணவர் கோனும்
சேவலெனக் கூவியழைக்க
காவல்நீத்து கடிது சென்று
ஒரு கணம் அமுதம் பருகி
மறுகணம் கல்லென உருவெடுத்த
அகலிகையும் தீதிலள் என்று
கூறியவனும் அறம் வகுத்த அண்ணலே காண்.
ஆனால்
ஆசையகற்றி
வெறுங்கல்லென வறிது நிற்கும்
நின்செயல் புரிவதுமில்லை.

நீதான்
கல்லிலடித்த சிலையாக
கனவில் வடித்த ஓவியமாக
சதையும் குருதியும் சமைத்துயிர்த்த
உயிர்குடிக்க இதழ்துடிக்கும் பாவையாக
வாரி அணைக்க வந்த மரணமாய்
நெடிது நின்றாய்.

ஆனாலும்
அலையாது குலையாது
அலைதள்ளும் நின்குலவும்
வடிவழகு கண்டு
அல்குதலே அதன் வாழ்வெனக் கண்டு
அதனைப் புல்குதலே வாழ்வென வேண்டி
‘சில்’லென்று நின்றேன் நின்முன்.கொல்லிப்பாவை 3 - நகுலன்

கடல் முனையில் கல்லுருப்பெற்று
கானகத்தில் சிலையாகி
ஆசை தூக்கத் துறக்கத் துறந்து
தெரு நடுவில் தேவன் இணையடி
தன்னறல் கூந்தலால் வருடி
ஏக பத்தினி மிதிலை தேவியாகித் தீக்குளித்து
ஐவர் வரித்த அருங்கனியாகிச்
சபை நடுவில் துயரெய்தி
வீடுவிட்டு வெளிவந்து
கூடுவிட்டு கூடு புகுந்து
கட்டுண்டு கூட்டுண்டு
மகப்பெற்றுச் சகத்தில் வாழ்ந்து
அம்முறையும் தவிர்த்து
வறிது வாடி தனி நொந்து
பலபெற்று நீ என்னருகமர
மறுத்ததும் என்கொல் என்னுள்ளங்
கவர் பிராட்டியே நீ ?

கொல்லிப்பாவை 1 - நகுலன்

திரௌபதி அவள்
வந்து போகும் அருச்சுனன் நான்
வில்லெடுத்துக் கணைபூட்டி
நாண் வளைத்துக் குறிவீழ்த்திச்
சௌரியம் காட்டிச் சமர் செய்து
காதல் பெற்றான் ஒருவன்.
ஆனால்
வந்து போகும் அருச்சுனன் நான்
நாக்கடித்து
வாய்ப்பறை கொட்டி
வேதாந்த கயிறு திரித்து
அவள் உருகக் கண்டு
உள்ளம் குலைந்து
உரம் வேண்டி
வந்து போகும் அருச்சுனன் நான்.

.

திரௌபதி அவள்;
நெற்றித் திலகமும்
நெறிமிக்க வாழ்வும்
கைத்திறனும் கலைப்பொலிவும்
மிக விளங்க,
நேர் நோக்கும் நிமிர்நடையும்
பொலிவூட்டக்
கல்வி கற்றுத் தொழில் புரிந்து
காரியத் திறனும் கருத்துறுதியும்
பூண்ட
இந்நங்கை நல்லாள் அருச்சுனன் தன்
அவ நம்பிக்கை உருவறிவாளா ?
அன்று
சுற்றத்தார் முகம் நோக்கி
களம் தனில் கை சோர்ந்தான்.
அதன் முன்னர்
விதிமுன் தலை வணங்கி
உருமாறி பேடியானான் அவன்.
என்றாலும்
கண்ணன் கை கொடுக்க
உள்நின்ற சௌகரியம் எடுத்துதவ
முன்னோக்கித் தருக்குடன் திரிந்தான் அவன்.
.

திரௌபதி அவள் ;
தூய்மையின் ஊற்று.
பலர் கண்டும் உருவ அமைதி பெற்று
பேடியெனச் செயலிழந்து
தன்னைக் கண்டு மயங்கித் திரிவோனை
“வாழ்க்கைப் பாடி வீடு சென்று
வாகை சூடி வா
காத்திருப்பேன்” என
மௌனத்தில் ஞானம் பேசி
முறுவல் பூத்துக் கற்பின் வைரப்படை
தாங்கி நிற்கும் கொல்லிப் பாவை அவள்.

.

திரௌபதி அவள்
வந்து போகும் அருச்சுனன் நான்.

         - எழுத்து, ஏப்ரல் 1961.


கொல்லிப்பாவை - 5   -  நகுலன்

நீ
என் வாழ்வைக்
கனவாக்கி விட்டாய்;
“கனவு
நினைவின் நிழல்”;
மனதை வசீகரிக்கும்
இதன்
“விருட்டென்ற நடை கண்டு
என் மனம் மிரள்கிறது”
தேதி 20
அதற்குள் பை,
ஓட்டை
நினைவு
பிய்த்துப் பிடுங்குகிறது.
பகல்
குற்றுயிராகிக் கிடக்கும்
அந்திப் பொழுது;
ஜுரவேகத்தில்
பிரக்ஞை தடுமாறுகிறது
பிராந்தி கௌவிப் பிடிக்கும் நேரம்
வரும்
மண்டைக் கனம்
மனம்
அட்டையாகச்
சுற்றிச் சுருண்டு
அசைவற்றுக் கிடக்கும்
முடக்கு வாதம்
நொண்டிப் போச்சு.
புலன்கள் மரத்துக்
கட்டையாகப் போகின்றன.
துயில் சுருட்டும் கண்கள்.
உள்ளிருக்கும் இருட்டில்
நிழல் போன்ற
நினைவின் நச்சரிப்பு;
தெருவில் காலிப்பையன்கள்
யாரையோ பார்த்துச் சிரிக்கிறார்கள்.
ஏன் ?
யாரைப் பார்த்து ?
ஒரு டயரிக் குறிப்பு.
எங்கும்
“வெளிப்பூச்சின்
ஏகாதி பத்தியம்”
பூச்சுக் கலைந்து விட்டால்
சூன்யம் பல்லிளிக்கிறது.
திரும்பிப் பார்க்காத
உன்னைப் பின்பற்றி
வாழ்க்கையைக்
கனவாக்கி விட்டேன்.
நினைவின் ஸ்பரிசம்
சுளீ ரென்று தைக்கிறது.
நீ என்னதான்
என் எனக்கு
உள்ளத்தைக் கவர்ந்தாலும்
“உன் தத்ரூப பிரதிபலிப்பு
ஆக
அப்பா அம்மா
சொன்னதைக் கேட்கும்
நல்ல பிள்ளையா என்ன நான் ? ”
என்ற
வினாவின் கொக்கி உருவைக்
கண்டதும்
இந்த நிகழும் நிமிஷங் கூட
தெருவின் காலிப் பையன்கள்
போல்
சீட்டியடித்துச் சிரிக்கிறது;
எல்லாம்
உடைந்த
கண்ணாடிச் சில்லின்
ஒளி வீச்சு

-எழுத்து, ஜனவரி 66

எல்லாம் என்பதுபற்றி ஒரு கவிதை - நகுலன்

வந்தது Zack
எப்போதும் போல்
துயிலிலிருந்த எழுந்தது போன்ற
ஒரு சோர்வு
அவன் முகத்தில்
எப்போதும் அப்படித்தான்
தோல் பையைத் திறந்து
குப்பியை எடுத்ததும்
நான் உள் சென்று
ஐஸ் கொண்டு
வந்ததும்
சரியாகவே இருந்தது
அவன்
ஓவியங்களை நான்
பார்த்திருக்கிறேன்
அவைகளும்
ஒரு குழம்பும் மயக்க நிலையைத்
தான் தெரிவித்தன
வண்ணக் கீறல்கள்
இருட் பிழம்புகள்
தாரளமாகவே
இருவரும் குடித்துவிட்டு
அடிமட்டத்தை
அணுகிகொண்டிருந்தோம்
அப்போது
அவன் சொன்னதும் அதை
நான் கேட்டதும்
இன்னும் என் பிரக்ஞையில்
சுழன்றுகொண்டிருக்கிறது
“எல்லாமே
வெகு எளிமையாகத்தான்
இருக்கிறது
ஆனால்
“எல்லாம்” என்பதுதான்
என்ன என்று தெரியவில்லை”
இதைச் சொல்லிவிட்டு
அவன் சென்றுவிட்டான்.

ஒரு கவிதை - நகுலன்

சின்னஞ்சிறு
சிட்டொன்று
சென்று திரிந்து
‘விர்’ரென்று பறந்து வந்து
அது திரிந்து பறந்ததும்
வந்து இருந்ததும்
மனதில் மறைய
இலையசையும்
கிளையொன்றில்
வந்து அமரக்கண்டு வியப்பெயதி
கண் தவற
கருத்து உயர
கண்டு நின்ற
என்னைக் கண்டு
“ இதுவா கவிதை ?
கவிதை இதுவா ? ”
என்று சிரித்தது
ஒரு பூதம்.

-ஞானரதம், 1972


வழக்கம்போல்

வழக்கம் போல் வெளி வாசல்
திண்ணையில் சூரல் நாற்காலியில்
உட்கார்ந்திருக்கின்றான்.
   அந்தி மயங்கும் வேளை--_ -
அதற்கு முன்: ஒளியும் நிழலும்
பக்கத்தில் பக்கத்தில் காணும்
போது அவனை ஒரு விசித்திர
உணர்ச்சி சூழ்கிறது, வெயிலில்
மண்சுவரில் இலை, நிழல்களைக்
காணும் பொழுது கலையின்
வசீகர_சக்தி அவனை ஆட்கொள்
கிறது.
      வெயில் மறைகிறது.
நிழல் மெல்ல மெல்ல இல்லாமல்
ஆகும் நேரம் நெருங்குகிறது.
இலைகளும் மரங்களும்
மங்கலாக மயங்கிக் கிடக்கும்
தோற்றம். தென்னை மரத்தின்
உச்சியில் ஒரு ஒற்றைக்
காகம் மெல்லக் கா கா என்று
குரல் கொடுக்கிறது. கையெழுத்து
மறையும் வேளை என்று
சொல்கிறார்கள். பிரமலிபியும்
என்று கூடச் சொல்லத் தோன்
றுகிறது. 'பட்'டென்று நிழல்கூட
இல்லாமல் போகிறது. இருள்
எங்கும் 'கப்'பென்று பரவுகிறது.
மரம், தந்திக்கம்பம், வீடு -
எல்லாமே மறைகின்றன.
எங்கும் 'திட்டு' 'திட்டாக'
இருள் மாத்திரம் எஞ்சி நிற்கிறது.தன் மிதப்பு


யார் தலையையோ சீவுகிற
மாதிரி அவன் பென்சிலை
சீவிக் கொண்டிருந்தான்.
அவனைப் போல் பென்சிலும்
பேசாமல் இருந்தது - அது
கூடத் தவறு, அந்த நிலையில்
அவன் தன் கழுத்தை
இன்னும் இவனுக்குச்
சௌகரியமாகச் சாய்த்துக்
கொடுத்திருப்பான் - இந்த
நிலைமையையும் தன்னு
டைய வெளித் தெரியாத
ஆற்றலால் சமாளிக்க
முடியுமென்ற தன் மிதப்பில்.


ஸ்டேஷன்

ரயிலை விட்டிறங்கியதும்
ஸ்டேஷனில் யாருமில்லை
   அப்பொழுதுதான்
அவன் கவனித்தான்
ரயிலிலும் யாருமில்லை
          என்பதை;
ஸ்டேஷன் இருந்தது,
                என்பதை
“அது ஸ்டேஷன் இல்லை”
என்று நம்புவதிலிருந்தும்
அவனால் அவனை
   விடுவித்துக்கொள்ள
   முடியவில்லை
   ஏனென்றால்
ஸ்டேஷன் இருந்தது,
* * *
வேறொரு நண்பனைப் பார்க்கச்
   சென்றான்
இப்பொழுதெல்லாம் இது ஒரு
   பழக்கமாகி விட்டது
போன இடத்தில் அவன்
வெளியே போய்விட்டான்
என்றார்கள்
“என்னைப் போலவா?” என்று
கேட்கச் சென்றவன்
அதை அடக்கிக் கொண்டு திரும்பிப் பார்த்ததும்
உடல் அவனைக் கேட்டது
“கஷ்டமாக இருக்கிறது
இல்லையா?”
   என்று.

கடைசிக்கவிதை
யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்து கொண்டிருக்கிறது?
   எல்லாம்.

Thanks to
http://jyovramsundar.blogspot.com/2009/06/blog-post_26.html 

நகுலன் கவிதைகள் :

எல்லைகள்

அவன் எல்லைகளைக் கடந்து கொண்டி
ருந்தான். ஒரு காலைப் பின் வைத்து
ஒரு காலை முன் வைத்து நகர்வதில்
தான் நடை சாத்தியமாகிறது. இரு
காலையும் ஒரு சேர வைத்து நடந்தால்
தடாலென்று விழத்தான் வேண்டும்.
எல்லை தாண்டாமல் நின்றால் ”அவன்
அதுவாகும் விந்தை.” நெளிந்து
நெளிந்து தன் வளையமாகத் தன்
னையே சுற்றிக் கொண்டு கடைசியில்
தலையும் வாலும் ஒன்று சேர
வெறும் சுன்னமாகச் சுருண்டு
கிடக்கும் நிலை

அவன் எல்லைகளைக் கடந்து
கொண்டிருந்தான். ஒன்றிலும்
நிச்சயமில்லாத மனிதர்கள், அல்குலின்
அசைவுகள், “சுபாவஹத்தியை”
விழையும் மனதின் பரபரப்பைத்
தூண்டிவிடும் ஸ்தாபனங்கள்
சில்லறை சில்லறையாகத் தன்
னை இழப்பதால் வந்து சேரும்
காப்புகள். காலக்கறையான்
தின்று கொண்டிருக்கும் மேதை
களின் சிற்ப - சிதிலங்கள், இறந்த
வர்களின் சாந்நித்தியம் இருப்ப
வர்களின் மிரட்டல் - இவை
யெல்லாம் பின்தங்க அவன்
எல்லைகளைக் கடந்து கொண்
டிருந்தான்

அவன் பயணம் இன்னும்
தொடர்ந்து கொண்டுதான்
இருந்தது. நடுவில் யாரோ
ஒருவன் அவனை நோக்கி
“நீங்கள்?” என்று உசாவ
அவனுக்கு அவன் பெயர்
கூட மறந்துவிட்டது.

அலைகள்

நேற்று ஒரு கனவு
முதல் பேற்றில்
சுசீலாவின்
கர்ப்பம் அலசிவிட்டதாக.
இந்த மனதை
வைத்துக் கொண்டு
ஒன்றும் செய்ய முடியாது.

வண்ணாத்திப் பூச்சிகள்

உண்ணூனிப் பிள்ளைக்குக் கண்வலி.
கேசவ மாதவன் ஊரில் இல்லை. சிவனைப்
பற்றித் தகவல் கிடைக்கவில்லை. நவீனன்
விருப்பப்படி அவன் இறந்த பிறகு அவன்
பிரேதத்தை அவன் உற்ற நண்பர்கள்
நீளமாக ஒரு குழி வெட்டி அவனை
அதில் தலைகீழாக நிறுத்தி வைத்து
அடக்கம் செய்துவிட்டார்கள். எங்கும்
அமைதி சூழ்ந்திருக்கிறது. வெயிலில்
வண்ணாத்திப் பூச்சிகள் பறந்து
கொண்டிருக்கின்றன.


சுருதி

ஒரு கட்டு
வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு
புகையிலை
வாய் கழுவ நீர்
ஃப்ளாஸ்க்
நிறைய ஐஸ்
ஒரு புட்டிப்
பிராந்தி
வத்திப்பெட்டி / ஸிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு


சந்தை

செத்த வீட்டில்
துக்கம் விசாரிக்கச்
சென்று திரும்பியவர்
சொன்னார்
“செத்த வீடாகத்
தெரியவில்லை
ஒரே சந்தை இரைச்சல்”


வரையறை

தலையும் வாலும்
இல்லாத பிழைப்பு
என்று
சொல்லிச் சிரித்தார்
சச்சிதானந்தம் பிள்ளை
கேட்டு நின்றவனுக்கு
ஒன்றும் புரியவில்லை


இவைகள் (2)

இந்திர கோபம்
இது ஒரு பூச்சியின் பெயர்
உக்கிரப் பெருவழுதி
இது ஒரு அரசன் பெயர்
யோக நித்திரை
இது ஒரு தத்துவச் சரடு


கனல் (2)

ஒரு
வரிப்புலி
கனல்
உமிழும்
அதன் கண்கள்
என்
உன்மத்த வேகம்


வேறு

உலகச் சந்தையில்
ஒரு மனிதன் போனால்
இன்னொருவன்
உனக்கென்று
ஒரு லாப நஷ்டக்
கணக்கிருந்தால்
விஷயம் வேறு

நான்

வழக்கம்போல்
என் அறையில்
நான் என்னுடன்
இருந்தேன்
கதவு தட்டுகிற மாதிரி
கேட்டது
''யார்''
என்று கேட்டேன்
''நான் தான்
சுசீலா
கதவைத் திற "என்றாள்
எந்த சமயத்தில்
எந்தக் கதவு
திறக்கும் என்று
யார்தான்
சொல்ல முடியும்?
 


நான்(2)


நேற்றுப்
பிற்பகல்
4:30சுசீலா வந்திருந்தாள்
கறுப்புப் புள்ளிகள்
தாங்கிய
சிவப்புப் புடவை
வெள்ளை ரவிக்கை
அதேவிந்தைப் புன்முறுவல்
உன் கண்காண
வந்திருக்கிறேன்போதுமா
என்று சொல்லிவிட்டுச் சென்றாள்
என் கண் முன்
நீல வெள்ளை
வளையங்கள்
மிதந்தன.நான் (2)

நேற்றுப்
பிற்பகல்
4.30
சுசீலா
வந்திருந்தாள்
கறுப்புப்
புள்ளிகள்
தாங்கிய
சிவப்புப் புடவை
வெள்ளை ரவிக்கை
அதே
விந்தை புன்முறுவல்
உன் கண் காண
வந்திருக்கிறேன்
போதுமா
என்று சொல்லி
விட்டுச் சென்றாள்
என் கண் முன்
நீல வெள்ளை
வளையங்கள்
மிதந்தன


கோட் ஸ்டாண்ட் கவிதைகள் - நகுலன்
http://naveenakavithai.blogspot.in/2012/09/blog-post_8914.html

1.
அலுப்பு
            அவனுக்கு
            வாழ்க்கை அலுத்துவிட்டது
            அவன் 59 வயதில்
            அப்படியா என்று
            கேட்காதீர்கள்.
மறுபடியும் அறைக்குள் செல்கிறான்
            இப்பொழுது இங்கு
                           யாருமில்லை
            அவன் கூட
            அவள்
யார் என்று கேட்காதீர்கள்
உங்கள் துருவிப் பார்க்கும்
கண்களுக்குச் சற்று ஓய்வு
கொடுங்கள்
உங்களுக்கு இதைப் பற்றி
எல்லாம் ஒன்றும் தெரியாது
அக்கறையுமில்லை.
கை எழுதி அலுத்து விட்டது.
கண் பார்த்து
மூளை சிந்தித்து
மனம் அதையும்  இதையும்
            நினைத்து நினைத்து
தேகத்தையே உரித்து
கோட்  ஸ்டான்டில்
தொங்கவிடுகிறான்
அவனை
அது பரிதாபமாகப் பார்க்கிறது.
“நீ என்னை இப்படித்
தூக்கி எறியலாமா?
என்று.
அவன் சொல்கிறான்:
“இல்லை நீ அங்கேயே
தொங்கிக் கொண்டிரு;
உன்னைப் பிடித்துக் கொண்டு
நான் தொங்குவதை விட
நீ தனியாகத் தொங்கிக்
கொண்டிருப்பதுதான்
ரண்டு பேருக்கும் நல்லது
என்று,
சொல்லி விட்டு
அறைக்கதவைச் சாத்திவிட்டு
வெளியே செல்கிறான்.2.


அவனும் அவன்
சிநேகிதனும்
சண்டைப் போட்டுக் கொண்டு
சமாதானமும்
அடைந்துவிட்டார்கள்.
அவன் இவன் வார்த்தைகளைப்
பொறுக்கமுடியாமல்
கையிலிருந்த புஸ்தகத்தை
நேர் பகுதியாக நாலைந்து
தடவை
கிழித்து எறிந்தான்.
கோட்  ஸ்டான்டில்
தொங்கிக் கொண்டிருந்த
உடலைப் போல்
அந்தப் புஸ்தகம் அவனைக்
கேட்டது.
“நீங்கள் இருவரும் படித்தவர்
கள் இல்லையா?
உங்களுக்குள் சண்டை
ஏற்பட்டால்
ஏன்,
நண்பா, என்னைக் கிழித்து
எறிய வேண்டும்?” 
சொன்னான்
“படித்தவன்
என்றதால்
என்னைக் கிழித்து எறிவதற்குப்
பதில்
உன்னைக் கிழித்தெறிந்தான்
மேஜையில் கிடந்த
புத்தகம்
அவர்களை என்னவோ
மாதிரிப்
பார்த்துக் கொண்டிருந்தது.

3.

அன்றிரவு அவன்
ஒரு கனாக் கண்டான்
வெகு நேரம்
கோட்  ஸ்டான்டில் தொங்கிக்
கொண்டிருக்கும் உடலையே
பார்த்துக் கொண்டு நின்றான்
அதைக் கழற்றிக்
கோட்  ஸ்டான்டில்
தொங்கவிட்டு விட்டான்
என்பது என்னவோ சரி.
ஆனால்
அவன் இப்பொழுதெல்லாம்
காணாமல் போன
தன் நிழலையே
தேடிக்கொண்டிருக்கின்றான்
நிழல்கள் மாத்திரம்
எங்குமே இருப்பதில்லை;
இங்கு கூட என்று இல்லை;
அங்கும்4.


வேறொரு நண்பனைப் பார்க்கச்
      சென்றான்
இப்பொழுதெல்லாம் இது ஒரு
      பழக்கமாகிவிட்டது
போன இடத்தில் அவன்
வெளியே போய்விட்டான்
என்றார்கள்
“என்னைப் போலவா?” என்று
கேட்கச் சென்றவன்
அதை அடக்கிக் கொண்டு
திரும்பிப் பார்த்ததும்
உடல் அவனைக் கேட்டது
“கஷ்டமாக இருக்கிறது
இல்லையா?
      என்று.5.


வெளி வாசல் திண்ணையில்
அவன்
ஒரு சூரல் நாற்காலி
அருகில்
ஒரு சூரல் வட்ட மேஜை
அதன் மீது
புஸ்தகம் நோட் புஸ்தகம்
பேனா, பாட், அகராதி
வெற்றிலை, பாக்கு புகையிலை
சுண்ணாம்பு வகையறாக்கள்
எதிரில் சிமிண்ட் திட்டையில்
ஒரு செம்புத் தண்ணீர்
கண் எதிரில்
வெளி முற்றம்
மரம் செடி கொடி
மெல்ல வந்து பறந்து
செல்லும் பறவைகள்
எல்லாமே மங்கலாகத்
தான் தெரிந்தன
வாய் வெற்றிலை பாக்குக்குப்
பரபரத்தது
கண் தெளிவான பார்வைக்கு
மனம் மெல்லத் துடித்துக்
கொண்டிருந்தது
துடிப்பின் கதி அதிகரிக்க....
அப்பொழுது தான்
ஏதாவது செய்ய முடியும்
ஆனால் ஒன்றும் செய்யமுடியவில்லை
பின்னால் அடுத்த அறையி
      லிருந்து
ஒரு குரல் ஒலித்தது
என்னைத் தூக்கி எறிந்து விட்டாய்
இப்பொழுது
தெரிகிறதா?
என்று.

6.

வெளி வாசல் திண்ணையில்
சூரல் நாற்காலியில்
உட்கார்ந்திருந்தான்
இருட்டிக் கொண்டு வருகிறது
மங்கல் வெளிச்சத்தில்
எதிரில் இருக்கும்
அரளிச் செடியில்
இந்த அரை இருட்டிலும்
மஞ்சள் மஞ்சளாகப் பூக்கள்
தெரிகின்றன
தெருவில்
போகும் உருவங்கள் தெரியாவிட்டாலும்
குரல்கள் ஒலிக்கின்றன
இதிலும் ஒரு நிம்மதி
முழு இருட்டில் இருக்கப் பயம்
மீண்டும் அடுத்த அறைக்குள்
செல்ல ஒரு பரபரப்பு
எலெக்ட்ரிக் லைட்
மேஜை  நாற்காலி
புஸ்தகங்கள்
அம்மா அப்பா சகோதரி
குப்பிகள்
வெற்றிலைப் பாக்கு வகையறாக்கள்
ரேடியோ
இப்படியாக
கோட்-ஸ்டான்ட் கேட்கிறது?
“இப்பொழுது தெரிகிறதா?7.


நள்ளிரவில்
தனியாக
சூரல் நாற்காலியில்
உட்கார்ந்து கொண்டு
எழுதிக் கொண்டிருக்கின்
                  றான்
அருகில்
தரையில்
ஒரு பாம்பு
சுருண்டு கிடக்கிறது
காலம் கண்ணாடியாகக் கரைகிறது
ஒரு நதியாக ஒரு ஜலப்ரள
      யமாகச்
சுழித்துச் செல்லுகிறது
விறைத்த கண்களுடன்
அதன் மீது செத்த மீன்கள்
      மிதந்து செல்கின்றன
எழுந்து கோட்-ஸ்டான்டில்
தொங்கிக் கொண்டிருந்த
சவுக்கத்தை எடுத்து
ஒரே தெப்பமாக
நனைந்த
தலையைத் துடைத்துக்
            கொள்கிறான்8.

அம்மாவுக்கு
      எண்பது வயதாகிவிட்டது
கண் சரியாகத் தெரிவதில்லை
ஆனால் அவன் சென்றால்
      இன்னும் அருகில் வந்து
      உட்காரக் கூப்பிடுகிறாள்
அருகில் சென்று உட்கார்கிறான்
அவன் முகத்தைக் கையை
      கழுத்தைத் தடவித்
தடவி அவன் உருக்கண்டு
உவகையுறுகிறாள்
மறுபடியும் அந்தக் குரல்
      ஒலிக்கிறது
“நண்பா, அவள்
எந்தச் சுவரில்
எந்தச் சித்திரத்தைத்
தேடுகிறாள்?9.


அன்று அவனுக்கு
ஒன்றுமே புரியவில்லை
வெளி வாசலிலா
அல்லது உள் அறையிலா
பகலா இரவா
நேற்றா இன்றா
வீடா கல்லூரியா
அம்மா அவனைத் தொட்டுத்
      தொட்டு
உணர்ந்தது போல
அவனுக்கும் தன்னைத்
தொட்டுத் தொட்டுத்
      தன்னையே உணர
வேண்டுமென்ற
ஒரு கட்டுக் கடங்காத
      ஆவல்
ஆனால் முடியவில்லை
அறை முழுதும் ஒரு
      லேசான நெடி;
எங்கிருந்து?
தரையில்
பேகான் தின்றுவிட்டுச்
செத்துக் கிடக்கும் கரப்புகள்
தரையில்
ஏதோ ஒரு ஜந்து
விரைந்து செல்லும்
      சப்தம்
எல்லாம் ஒரே இருட்டாக
      இருந்தது
அவனுக்கு இப்பொழுதும்
கோட்-ஸ்டான்ட்
ஞாபகம் வந்தது
ஆனால் அவன் அது
      இருக்கும்
பக்கம் கூடத் திரும்பிப் பார்க்கவில்லை.


10.


அந்த அறையில் அவன்
      இல்லை
கோட்-ஸ்டான்ட் இருந்தது
அங்கு நால்வர் இருந்தனர்
அவர்கள்
புது-க்-கவிதையைப் பற்றி
அ-நாவலைப் பற்றி
அதைப் பற்றி
இதைப் பற்றி
புதிய முயற்சிகள் பற்றி
இப்படியாக இப்படியாக
என்னவெல்லாமோ
எதைப் பற்றியெல்லாமோ
எப்படியெல்லாமோ
பேசிக் கொண்டிருந்தார்கள்
கோட்-ஸ்டான்ட்
அவர்களைப் பார்த்துக்
கொண்டிருந்தது

நினைவு ஊர்ந்து
செல்கிறது
பார்க்கப் பயமாக
இருக்கிறது
பார்க்காமல் இருக்கவும்
முடியவில்லை
நகுலன்

இரண்டு மூன்று வரிக் கவிதைகள் :

உன்னையன்றி
உனக்கு வேறு யாருண்டு?
அதுவும் உன் கைப்பாவை

என்னைப் பார்க்க வந்தவர்
தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்


கடைசியாக....

மூலஸ்தானத்தின் அருகில் சந்தித்தவரை
மூலவராக நினைத்து
எவ்வளவு ஏமாற்றங்கள்


29.3.16நகுலன் கவிதைகளை வாசிக்கலாமா?

அழகியசிங்கர்


எந்தச் சிறு பத்திரிகை ஆகட்டும் நகுலன் கவிதை இல்லாமல் இருக்காது. நகுலன் ஏற்கனவே கவிதைகளை எழுதி வைத்திருப்பார். சிறுபததிரிகைக்காரர்கள் எல்லோரும் அவர்களுடைய சிறுபத்திரிகைகளை நகுலனுக்கு அனுப்பாமல் இருக்கமாட்டார்.  பின் அவர் எழுதிய கவிதைகளை பத்திரிகைக்கு அனுப்புவார்.  கூடவே தபால் தலைகளையும் சேர்த்து அனுப்புவார்.  ஒரு வார்த்தை எழுதுவார்.  கவிதைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால் தயவுவெய்து திருப்பி அனுப்பி விடுங்கள் என்று.  யாரும் அவர் கவிதைகளை திருப்பி அனுப்ப மாட்டார்கள்.  விருட்சம் இதழிற்கு ஒரு முறை அவர் எழுதிய கவிதையைப் பிரசுரம் செய்தேன்.  உடனே ஒரு படிம கவிதை எழுதுபவர் என்னிடம் சண்டைக்கே வந்து விட்டார்.  பின் அவர் எழுதிய அதிரடி கவிதையில் என்னையும் நகுலனையும் திட்டி ஒரு கவிதை எழுதி விட்டார்.  

மீட்சி 27 ல் வந்த ஐந்து கவிதைகள் என்ற நகுலன் கவிதைகளை நாங்கள் நடேசன் பூங்காவில் வாசித்தோம்.  அவற்றைக் கேட்கும்போது ஒரே சிரிப்பு. இதோ இங்கேயும் அவற்றை உங்களுக்கு படிக்க அளிக்கிறேன்.  நீங்களும் சிரிப்பீர்கள்.

ஐந்து கவிதைகள் 

'நகுலன்'
வால்ட் விட்மன் :
அவன் "ஆத்ம ஸ்துதி"
என்ற கவிதைத் தொடரின்
கடைசி வரி
எங்கேயோ
நான் உனக்காகக்
காத்துக்  கொண்டிருக்கிறேன்                     ******

வந்தவன் கேட்டான்
"என்னைத் தெரியுமா?"
"தெரியவில்லையே"
என்றேன்.
"உன்னைத் தெரியுமா?"
என்று கேட்டான்
"தெரியவில்லையே"
என்றேன்.
"பின் என்னதான் தெரியும்?"
என்றான்
உன்னையும் என்னையும் தவிர
வேறு எல்லாம் தெரியும்
என்றேன். *********


அவன்
செத்துச் சில்லிட்டு
நாட்கள்
கடந்து விட்டாலும்
ஒருவரும்
ஒருவரிடமிருந்தும்
ஒன்றும்
தெரிந்து கொள்வதில்லை
என்ற நிலையில்

அவன் சாவு
இன்றும் இவனை
என்னவோ செய்கிறது.
*********

இந்த
ஊரில்
எல்லாமே
தலைகீழாகத்
தொங்குகிறது
மனித உடல்களில்
வீடுகள்
முளைத்திருக்கின்றன
இவர்களில் பலர்
எப்பொழுதுமே
சிடுசிடுத்த
முகங்களுடனேயே
காணப்படுகிறார்கள்
எங்கேயோ
யாரோ போவது
மாதிரி தோன்றுகிறது
உற்றுப் பார்த்தால்
யாருமில்லை ******

சென்ற இடத்தில்
தெரியாமல்
"ராயல்டி"
என்று
கேட்டு விட்டேன்
அவருக்குப்
பிரமாதமாகக்
கோபம் வந்துவிட்டது
"போட்டது
கை நஷ்டம்
ராயல்டி வேறு"
என்று
உரக்கக் கத்தினார்
நான் பேசாமல்
திரும்பி விட்டேன்

அறையில்
சுசீலா
உட்கார்ந்திருந்தாள்
நடந்ததைச்
சொன்னேன்
"உனக்கு உன் வழியில்
எழுதத்தான் தெரியும்"
"பின்ý"
"வாசகர்கள்
எதை வாசிக்கிறார்களோ
அதை
அவர் விற்கிறார்
அவர்கள் வாசிப்பது போல்
இவர் விற்பது போல்
நீ எழுத வேண்டும்"

நான் பேசவில்லை
மீண்டும்
சொன்னாள்
உனக்குச் சாகத்தான்
தெரியும்
நீ என்ன சொல்வாய்
என்று எனக்குத் தெரியும்
நீ எப்பொழுதும்
இப்படிச்
செத்துக் கொண்டிருக்க வேண்டும்
என்பதுதான்
என் விருப்பமும்
என்றாள்

பிறகு
அவள்
ஜோல்னாப் பையைத்
திறந்து
இந்தா
வாங்கிக் கொள்
உனக்கு
என்றுதான்
கொண்டு வந்திருக்கிறேன்
என்று
ஒரு குப்பி கான்யாக்கும்
ஒரு பாக்கெட்
'ஸலம் ஸீகரெட்டும்
கொடுத்துவிட்டு
அடுத்த சனிக்கிழமை
மறுபடியும் வருகிறேன்
என்று
சொல்லிச்சென்றாள்

எனக்குள்
அவர் கோபம் அவருக்கு
சுசீலா
இருக்கின்ற வரையில்
எதுவும் சரியாகிவிடும்
என்று
என்னை நானே
சமாளித்துக் கொண்டேன்.

நகுலன் கவிதைகள் - விகடன் (Nagulan Kavithaigal)

‘‘நான் இறந்த பிறகு எனக்கு அஞ்சலிக் கூட்டங்கள் நடத்த வேண்டாம். ஏனென்றால், என்னால் வர முடியாது!’’
தன்னைப் பார்க்க வரும் இலக்கிய நண்பர்கள் விடைபெறும் போது, அவர்களிடம் நகுலன் கடைசியாக வைக்கும் வேண்டு கோள் இதுதான். தமிழ் இலக்கியப் பரப்பில் குறிப்பிடத்தக்க எழுத்தாளரான இவர் தற்போது திருவனந்தபுரத்தில், தனிமையில் வசிக்கிறார்.
தமிழில் யாரையும் பின்பற்றிப் போகாத, தனிப்பட்ட ஆளுமையும் மெளனத்தில் எரியும் மகத்தான மொழியும் நகுலனுடையவை. பனிக்குடம் உடைபடுவதைப் போல, உயிர் விடைபெறு வதைப் போல இயல்பும் புதிருமாக எழுகிற எழுத்து இவரது தனிப்பாணி. தற்போது எழுதுவதை முற்றிலும் நிறுத்திவிட்டார். நினைவின் நிழல் படியும் அந்தியின் சாய்வு நாற்காலியில் அமர்ந்து சிரித்துக்கொண்டு இருக்கும் நகுலனுக்கு இப்போது வயது 87.
நகுலனின் நிரம்பிய முதுமையை, குழந்தையைப் போல் இருக்கும் உடல்வாகை புகைப்படக் கலைஞர் ஆர்.ஆர்.சீனிவாசன் எடுத்த படங்களுடன், நகுலனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளது காவ்யா பதிப்பகம்.

எந்தப் புத்தகத்தைப்
படித்தாலும்
நமக்குள் இருப்பதுதான்
புஸ்தகத்தில்
எழுதியிருக்கிறது;
அதை மீறி ஒன்றுமில்லை!

இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்.
இல்லாமல்
போகிறோம்!

என்னைப் பார்க்க வந்தவர்
தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்!

மிகவும் நாணயமான மனிதர்
நாணயம் என்றால் அவருக்கு உயிர்!

வேளைக்குத் தகுந்த
வேஷம்
ஆளுக்கேற்ற
அபிநயம்
இதுதான்
வாழ்வென்றால்
சாவதே சாலச் சிறப்பு!
எனக்கு
யாருமில்லை
நான்
கூட!

யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்துகொண்டிருக்கிறது?
எல்லாம்!

நீயிருக்க
நானிருக்க
நேற்று
இன்று
நாளை
என்ற நிலை
ஒன்றும் இல்லை
ஒன்றுமே இல்லை!

உன்னையன்றி
உனக்கு வேறு யாருண்டு?

ஆர்ப்பரிக்கும் கடல்
அதன் அடித்தளம்
மெளனம்; மகா மெளனம்!

முக்கோணம்
முடிவில்
ஒரு ஊசி முனை ஞானம்!

வந்தவன் கேட்டான்
‘‘என்னைத் தெரியுமா?’’
‘‘தெரியவில்லையே’’
என்றேன்.
‘‘உன்னைத் தெரியுமா?’’
என்று கேட்டான்.
‘‘தெரியவில்லையே’’
என்றேன்.
‘‘பின் என்னதான் தெரியும்’’
என்றான்.
‘‘உன்னையும் என்னையும் தவிர
வேறு எல்லாம் தெரியும்’’
என்றேன்!
எழுத்தாளனுக்கும்
வாசகனுக்கும்
நடுவில்
வார்த்தைகள்
நி
ற்
கி
ன்

ன!http://www.vikatan.com/av/2007/jan/03012007/av0901.asp