தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Tuesday, June 29, 2021

நகுலன் என்றொரு மானிடன் - நாஞ்சில் நாடன்

 

நாகர்கோவில் புத்தகக்கடையொன்றில் 'நினைவுப் பாதை யை பார்த்தபோது முதலில் அதையொரு கணக்குப் பாடப் புத்தகம் என்று தான் நினைத்தேன். வாங்கவில்லை. பம்பாய்த் தமிழ்ச்சங்க நூலகத்தில் 'குருக்ஷேத்திரம் தொகுப்பு படித்த பின்பே 'நகுலன்' என்ற பெயர் அர்த்தமாயிற்று. திருவனந்தபுரத்தில் சுத்த இலக்கியத்தின் ஊற்றுக்கண் நகுலனில் இருந்து பிறப்பெடுப் பதாக எனக்குத் தோன்றியது. அடுத்த முறை பம்பாயில் இருந்து திருவனந்தபுரம் வழியாக நாகர்கோவில் போவதாகத் தீர்மானித் தேன். அப்போது ஜெயந்தி ஜனதா என்ற பெயரில் பம்பாய் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் வாரம் ஒருநாள் வந்து போய்க் கொண்டிருந்தது. நகுலன் முகவரி என்னிடம் இல்லை . ஆனால் மார் இவானியஸ் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக இருக்கிறார் என்ற தகவல் இருந்தது.
மார் இவானியஸ் கல்லூரிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து கேசவதாசபுரம் சந்திப்பு தாண்டி இரண்டு கிலோமீட்டர் போக வேண்டும். கேசவதாசபுரத்தில் இருந்து சற்று நடந்து சிறு குன்றுமேல் ஏறினால் மகாத்மா காந்தி மெமோரியல் கல்லூரி. நாயர் சர்வீஸ் சொசைட்டியின் கல்லூரி, எம்.பி. மன்மதன் என்ற சர்வோதயத் தலைவர் கல்லூரி முதல்வராக இருந்தபோது 1968-70ல் அங்கு நான் எம். எஸ்.சி படித்தேன். மன்னத்து பத்மநாபன் முன்னால் புல் வெளியில் மற்ற சக ஆஸ்டல் மாணவர்களுடன் அமர்ந்து உரையா டியது ஞாபகம் வந்தது. கல்லூரி முகப்பைத் தாண்டி, பருத்திப்பாறை ஜங்ஷன் தாண்டி, மார் இவானியஸ் கல்லூரி முகப்பு. முகப்பு வளைவில் இருந்து முக்கால் கிலோமீட்டர் சாய்வான ஏற்றம். மேட்டில் ஏறி, கேட்டுக் கேட்டு ஆங்கிலத்துறையை அடைந்தபோது, நகுலன் வயிற்றுக் கடுப்பினால் ஓய்வில் இருக்கிறார், வீட்டில் பார்க்கலாம் என்றனர்.
இறங்கும்போது எனது பாண்டித்தமிழன் நடையுடையை வகுப் பறைகளின் பின்புறம் சீட்டாடிக்கொண்டிருந்த மலையாள மாணவர்கள் கேலி செய்தது காதில் விழுந்தது. அந்தக் கேலியும் ஏறுவெயிலும் அவர் வீடு தேடிப்போகும் ஆர்வத்தைக் குறைத்து விட்டன.
ஆ. மாதவனோடு எனக்கு கடிதப் போக்குவரத்தும் நல்ல நட்பும் இருந்தது. அடுத்த ஆண்டில், 1978-ல், ஊர் வந்தபோது, திருவனந்த புரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் ஒரு கலந்துரையாடலை அவர் ஏற்பாடு செய்தார். அங்குதான் பேராசிரியர் ஜேசுதாசன், சண்முக சுப்பையா, காசியப்பன் ஐயப்ப பணிக்கர் ஆகியோருடன் முதன் முறையாக நகுலனை நான் பார்த்தது.
வெள்ளை இரட்டை வேட்டி, வெள்ளை முழுக்கைச் சட்டை, இடது கையில் கொழுவிய நீண்ட குடை, வெற்றிலை பாக்குப் புகையிலை ஒதுக்கிய கன்னம், கண்ணாடிக்குள் மினுங்கும் சிறிய கண்கள், நீண்ட நாட்கள் சூரிய வெளிச்சம் படாமல் இருந்தது போன்ற வெளிறல், மெலிவு...
அதன்பிறகு ஆண்டுக்கு குறைந்தது ஒருமுறையாவது சந்தித்து வருகிறேன். திருவனந்தபுரத்தில் எனக்கு கல்யாணமானது இன்னும் தோதாகிப் போய்விட்டது.
கவடியார் மெயின்ரோட்டில் இருந்து பங்களாக்கள் நிறைந்த கால்ஃப் லிங்க்ஸ் ரோட்டில் ஒரு கிலோமீட்டர் நடக்க வேண்டும் நகுலனின் பர்ணசாலையை அடைய. ஒடு வேய்ந்த பழைய பெரிய வீடு, வாசலில் பெரிய முற்றம். அவர் வீட்டில் இல்லாவிட்டால் முன்கதவில் ஒரு எட்டணாப் பூட்டு தொங்கிக்கொண்டிருக்கும். வீட்டில் இருந்தால் முன் வராந்தாவில் ஏறி "சார்... சார்...." என்று இரண்டுமுறை கூப்பிட்டால் வருவார்.
நேரம் காலமின்றி பல் தேய்த்துக்கொண்டு, சில சமயம் சோப்பு நுரைத்த ஷேவிங் ஆயத்தங்களுடன், சில சமயம் வெற்றிலை குதப்பிக்கொண்டு... அரையில் ஒரு வெளிறிய சாரம் இருக்கும். மார்பில் பூணூலைப் நான் பார்த்ததே இல்லை. பின்பு, 'பார்ப்பன அராஜகவாதி' என்று அவரைப் பற்றி சிலர் எழுதியதைப் படிக்க மிகுந்த வருத்தமாக இருக்கும்.
சற்றே சாய்வான பிரம்பு நாற்காலியை வெளி வராந்தாவில் கொண்டு வந்து போடுவார்.

'ஒரு கட்டு வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு புகையிலை
வாய் கழுவ நீர்
ஃப்ளாஸ்க் நிறைய ஐஸ்
ஒரு புட்டி பிராந்தி
வத்திப்பெட்டி
சிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு ' -
என்று சொல்வது போல,

என்னுடைய ஆரம்ப கால எழுத்துக்களில் கலையம்சம் குறைவு என்றும் பிரச்சார நெடி அதிகம் என்றும் சொன்னார்.
'மாமிசப் படைப்பு' நாவலில் கரையான் திட்டில் ஒரு புற்றும் புற்று உடைந்து தெரிந்த அம்மன் சிலையும் சிலைமேல் படமெடுத்த பாம்பும் மஞ்சள் வெயிலும் என்றெல்லாம் எழுதியது அறிந்து செய்ததா என்று கேட்டார் ஒரு முறை. இல்லையென்றேன். மடமட வென உள்ளே போய் புத்தக அம்பாரங்களிடையே 'மாமிசப் படைப்பை' நொடிக்குள் தேடி எடுத்து, விரலால் பக்கம் தேர்ந்து, "இதுல ஒரு அபூர்வமான ambiquity இருக்கு" என்றார். எனக்கு சத்தியமாய் ஒன்றும் விளங்கவில்லை.
நிறைய விஷயங்கள் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறேன். ஷேக்ஸ்பியருக்கும் பெர்னாட்ஷாவுக்கும் உள்ள வேறுபாடுகள் பற்றி ஒருநாள் நீண்ட நேரம் சொன்னார். சர்ரியலிசம், எக்ஸிஸ்டென்சியலிசம், ஸ்ட்ரக்சுரலிசம் என்று எனக்கு என்னவென்று புரிந்திராத விஷயங்கள் பற்றி மூன்றுமணி நேரம் சொன்னார் ஒருமுறை. பேசிய
பிறகும் பெரிதாக ஒன்றும் புரிந்துவிடவில்லை .
இடாலோ சுவோ, குஸ்தாவ் ஃப்ளாபர்ட் போன்ற ஆசிரியர்களை எனக்கு அறிமுகப்படுத்தியது அவர்தான். புத்தகங்கள் இரவல் தருவார். மறக்காமல் கேட்டு வாங்கிக்கொள்வார். இருந்தும் பல அபூர்வமான புத்தகங்களை நிறையப்பேர் தள்ளிக்கொண்டு போய் விட்டனர் என்பார்.
பம்பாயில் இருக்கும் அவர் சகோதரி வீட்டுக்கு அவர் வந்திருந்தபோது இரண்டு நாட்கள் வடாலா பாஞ்ச் கார்டன் புல்வெளிகளில் நானும் ஞான. ராஜசேகரனும் அவருடன் நீண்ட நேரம் நவீன நாடகங்கள் பற்றி உரையாடினோம். வீட்டிலிருந்து வெளியே அழைத்துப் போகும்போது அவர் சகோதரி வாங்கிக் கொண்ட ஒரு வாக்குறுதி, நகுலனை பத்திரமாய் திரும்ப வீட்டில்
சேர்த்துவிட வேண்டும் என்பது. அந்த எச்சரிக்கை எனக்கு நகுலனைப் பற்றிய ஒரு பக்கத்தை திறந்து காட்டியது.
பக்கத்து பங்களாவில் இருக்கும் அவர் தம்பி, இரண்டு வீட்டுக்கும் பொதுவான கேட்டை மாலை ஐந்து மணிக்கெல்லாம் பூட்டிவிடுவார். இரவு ஏழுமணிக்கு மேல் திரும்பும்போது ''சுவரேறிக் குதித்துத்தான் போகவேண்டும், பரவாயில்லையா' 'என்று கூறிச் சிரிப்பார். இலக்கிய விஷயங்கள் மட்டுமின்றி சொந்த விஷயங்கள் பற்றியும் பேசுவார்.
புரிந்தும் புரியாமலும் அவருடைய நினைவுப் பாதை, நவீனன் டயரி, இவர்கள், நாய்கள், சில அத்தியாயங்கள், மூன்று, ஐந்து, கோட் ஸ்டாண்ட் , கவிதைகள், சுருதி, A Tamil Writer's Journal, Non-Being எல்லாம் படித்தேன்.
பாத் ரூமில் இருந்த பாம்பு பற்றி ஒரு கவிதை. அது பாம்பு வருகிற பாத் ரூம்தான். அடுத்தமுறை போயிருந்தபோது நான் பாத்ரூம் போனபோது, "பாம்பிருக்கும்... பாத்து'' என்றார். ''பாம்பு பாத் ரூமிலா... நம்ம மனசிலா?'' என்றேன். சற்று நேரம் திகைத்தாற் போல நின்றுவிட்டு, “இது நேக்குத் தோணல்லியே...'' என்றார்.
எனது எந்தப் புத்தகத்தையும் அச்சாவதற்கு முன் பிற படைப்பாளி அல்லது விமர்சகர்களிடம் கொடுத்துக் கருத்துக்கள் கேட்டவ னில்லை. மிதவை' நாவலைப்பற்றி எனக்கு சற்று சஞ்சலம் இருந்தது. அவரிடம் படிக்கக் கொடுத்தேன். வாங்கி வைத்துவிட்டு மறுதாள் அது பற்றிப் பேசலாம் என்றார்.
மறுநாள் காசியபனைப் பார்க்கப் போயிருந்தேன், வடமொழியும் தத்துவமும் நன்கு பயின்றவர் என்பதால் எனக்கு அவர்மீது மரியாதை உண்டு. அவரும் நகுலனைப் பார்த்து நாளாயிற்று நானும் வருகிறேன்
என்றார்.
காசியபனும் நகுலனும் நல்ல நண்பர்கள். நகுலனை விட அவர் மூத்தவர். நான் காசியபனுடன் வந்ததை நகுலன் அன்று விரும்ப வில்லை . 'மிதவை' பற்றி நாளை பேசலாம் என்றார். காசியபன் சொன்னார், கையெழுத்துப் பிரதியை அன்று கொண்டு போய்ப் படித்துவிட்டு, மறுநாள் மூவருமாகப் பேசலாம் என்று. நகுலன் சொன்னார், “'நீங்க பிறகு தனியா பேசிக்கிடுங்கோ ...' என்று . காசியபனுக்கு அன்று அவர் பிரதியைக் கொடுக்கவில்லை.
மறுநாளும் போயிருந்தேன், தனியாக. "நேத்து ரொம்ப ஓவரா சத்தம் போட்டுட்டேனா?" "கொஞ்சம் ஓவர்தான்."
''ஸிஸ்டர் இன் லா சொன்னா... ரோட்ல போனவாள்ளாம். திரும்பிப் பாத்துட்டுப் போனாள்னு சத்தம் போட்டா..."
எனக்கு அதொன்றும் ஆச்சரியமாகப் படவில்லை. மூர்க்கமாக நகுலன் காசியபனை ஒரு புள்ளியில் மறுத்துக்கொண்டிருந்தபோது, போதை மிகுந்து அவர் உறங்கிக்கொண்டிருந்தது ஞாபகம் வந்தது.
கையெழுத்துப் பிரதியில் நான் நாவலை முடித்திருந்த பத்துப் பக்கங்களுக்கு முன்னால் பென்சிலால் அடிக்கோடு போட்டிருந்தார்.
"நாவல் இங்க முடிஞ்சுட்டுது."
அவர் விளக்கமாகச் சொன்னது ஏற்றுக்கொள்ளும்படியாக இருந்தது.
"மீதியுள்ள பத்து பக்கங்களை என்ன செய்வது?'' ''அதை என்ன வேணும்னாலும் செய்துக்கிடுங்கோ. நாவல் இங்க முடிஞ்சுட்டது...''
அந்த இடத்தில் நாவலை முடித்துத்தான் அச்சுக்கு அனுப்பினேன். நாவல் பற்றிய அவர் அபிப்பிராயம் மிகுந்த தெம்பூட்டுவதாக இருந்தது.
எனக்குத் தகவல் இன்றி ஒரு நாவலுக்கு முன்னுரை வந்ததைத் தவிர, எனது எந்த நாவலுக்கும் யாரிடமும் முன்னுரை கேட்டதில்லை. 'மிதவை'க்கு ஒரு முன்னுரை எழுதுகிறீர்களா என்று கேட்டேன். வேண்டாம், பிறகு எங்காவது விமர்சனம் எழுதுகிறேன் என்றார். பின்பு அவர் எழுதிய கட்டுரை அரையும் குறையுமாகச் சிதைக்கப்பட்டு ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸில் வந்தது.
ஆறேழு மாதங்களுக்குப்பிறகு மீண்டும் திருவனந்தபுரம் போயிருந்தபோது அவர் வீட்டுக்குப் போனேன். அவர் இடது கையில் பெருவிரலில் புண்ணாகி இருந்தது. ''இது என்னது?'' என்றேன்.
பெருவிரல் நகத்தைக் கொஞ்சநேரம் பார்த்துக்கொண்டிருந்தார்.
"இருட்டிப் போச்சுண்ணா நகத்திலே ஆனந்த விகடன் தாத்தா உக்காந்து பேச ஆரம்பிச்சுடறார்.. கொஞ்சநாளா நடந்துண்டிருக்கு.... சொப்பனமாண்ணு ஒரு சம்சயம்... ஒரு நாள் கையிலே சிகரெட் இருந்தது... சிகரெட் முனையால சுட்டுப் பாத்தேன். அடுத்தநாள் பொக்களம், பெரிசா... ஹாஹ்ஹாஹ்ஹா ..."
அவர் நிறையக் குடித்து வருவதாக அப்போது கேள்விப்பட்டிருந் தேன். அவர் தாயார் காலமாகிய பிறகு குடும்பத்தில் வழக்கு, வியாச்சியம். The Bull என்ற ஆங்கிலக் கவிதையை நினைவூட்டியது
அவர் இருப்பு. ஒரு கவளம் தயிர் சாதத்துக்காக கவடியாரில் இருந்து வழுதக்காடு வரைசைக்கிளை உருட்டிக்கொண்டு நடந்து திரும்புகை யில் மிகவும் நொந்து போய்ச் சொன்னார். என்னிடம் யாரோ சொல்லி பிருந்தனர், அவர் சமீபத்தில் தற்கொலை செய்துகொள்ள முனைந் தார் என்று. அது பற்றி அவரிடம் நான் கேட்க விரும்பவில்லை .
பஸ்ஸில் ஏறி டிக்கட் வாங்கப் பயப்படுகிற மனிதர் வக்கீல் வீட்டுக்கும் கோர்ட்டுக்கும் அலைவதைக் கற்பனையிலும் காணச் சகிக்கவில்லை .
பம்பாயில் இருந்த அவர் சகோதரி 'துரை' மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தவர். ஊருக்குப் போகுமுன் அவரைக் காணப் போவேன். நகுலனைப் பற்றிப் பேசும்போதெல்லாம் அவர் கண்கள் கசிவதைக் கவனித்திருக்கிறேன். ஒரு திருவோணத்தை ஒட்டி நான் ஊருக்குப் புறப்பட்டபோது, என்னிடம் கொஞ்சம் பணம் தந்து, 'துரை'க்கு ஒரு வேட்டி வாங்கித் தரச் சொன்னார். நான் வேட்டி வாங்காமலேயே அவரைப் பார்க்கப் போனேன். கண்ணைச் சிமிட்டிக்கொண்டே , ''வேட்டி வாங்கிக் கொடுத்தாச்சுண்ணு சொல்லீருங்கோ... அந்தப் பணத்திலே ஒரு பாட்டில் வாங்கி டறேன்...'' என்றார்.
அவர் குடிப்பதைக் காண வயிற்றெரிச்சலாக இருக்கும். ஒரு எவர்சில்வர் டம்ளரில் பாதிக்கும் அதிகமாக ஊற்றி, கொஞ்சம் போலத் தண்ணீர் சேர்த்து, 'மடக் மடக்' கென்று குடிப்பார், பானகம் போல.
நானும் இருபதாண்டு காலமாகக் குடிப்பவன்தான். நிதானமாக, 'செவ்வி தலைப்படும் சிலர்' போல. கல்யாணமான புதிதில், முட்டாள்தனமாக மனைவிக்கு ஒரு வாக்குறுதி கொடுத்தேன் - திருவனந்தபுரத்திலும் நாகர்கோவிலிலும் வைத்துக் குடிப்பதில்லை
என்று. எனவே போதை இல்லாமல் நகுலன் போதைக்குள்ளாவதைக் கவனித்து வந்திருக்கிறேன். அந்த உடம்புக்கு அந்த தாங்கும் சக்தி அபாரமானது. ஒருபோதும் வார்த்தை குழறி, நிதானமிழந்து, தெளிவற்று நான் பார்த்ததில்லை. போதையில் இருந்தால் விஷயங்கள் மேலும் கனமாவதையும் துலக்கம் பெறுவதையும் கண்டிருக்கிறேன். ஆனால் நூல் தடம் பிடித்துப் போவதைப்போல கவனம் வேண்டும். சற்றுப் பிசகிப்போனால் பேசுவது கண்ணி விட்டுப் போகும்.
அவருடைய இளைய சகோதரர் ஒருவர் ஓய்வு பெற்று அவருடன் தாமசிக்க வந்தார். புத்தகக் காட்டினுள் குழி பறித்து முயல்போல வாழ்ந்து கொண்டிருந்தவர் மூச்சு முட்டி விரைவில் செத்துப் போவார்
என்று அச்சப்பட்டேன். நகுலனது புறச்சூழலை சற்று நவீனப்படுத்தி விட்டு அவர்கள் மாறிப்போய்விட்டனர். அவர் மீண்டும் சுதந்திர உணர்வு பெற்றிருந்தபோது 'வாக்கு மூலம்' நாவலை கையெழுத்துப் பிரதியில் படித்தேன். ஒரு மனிதன் இன்பகரமான விதத்தில் தற்கொலை செய்துகொள்ள வழிவகை வேண்டும் என்பது பற்றிய நாவல் அது. நான் நகுலனைப் புரிந்து கொண்டவன் என்றபடியால் அந்த நாவல் எனக்கு மேலும் பிடித்திருந்தது.
மிக அந்தரங்கமான விஷயங்கள் பற்றிச் சொல்லி இருக்கிறார். பல இலக்கியவாதிகள் அற்பர்களாக அவரிடம் நடந்து கொண்ட விதங்கள் பற்றிச் சொன்னார். அவரைப் பயன்படுத்திக்கொண்டு பிறகு துஷ்பிரச்சாரம் செய்தவர் நிறையப்பேருண்டு.
மூலஸ்தானத்தின் அருகில் சந்தித்தவரை மூலவராக நினைத்து . எவ்வளவு ஏமாற்றங்கள்!'
இலக்கியத்தில் பல்வேறு துறைகள் இருப்பது போல, அவற்றுள் பல பிரிவுகளும் இருக்கும். அடிப்படை வண்ணங்கள் ஏழே ஆனாலும் ஒன்றுடன் இன்னொன்று சேர்ந்தும் பிரிந்தும் சாதிக்கும் வண்ணங்கள் அநேகம். கவிதைகளிலும் சிறுகதைகளிலும் நாவல் களிலும் அவர் கையாண்ட வண்ணங்கள் அபூர்வமானவை. நமக்குப் பிடித்ததை அனுபவிக்கலாம். பிடிக்காமற் போவது நம் குற்றமல்ல; அவர் குற்றமுமல்ல. ஆனால் பிடிக்காத வண்ணங்கள் வண்ணங்களே அல்ல என்பது அராஜகம். நகுலனைப் பற்றி சில 'இலக்கிய அபிப் பிராயங்கள்'- அவர் ஒரு அசடு, பைத்தியம், மனநோயாளி, பார்ப் பனக் கொடுக்கு, குடிகாரர், போர் வாளால் சவரம் செய்கிறவர்... என்பன. நமது மன ஆரோக்கியத்துக்கு எடுத்துக்காட்டுகள் போல. 'நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை !'
Non-Being என்ற அவருடைய கவிதைத் தொகுப்பொன்று ஆங்கிலத்தில் வெளியாகி இருந்தது. நான் அவரை சந்தித்த சந்தர்ப்பத்தில் அவரிடம் பிரதிகள் இல்லை. தபாலில் அனுப்பு கிறேன் என்றார். இரண்டு மாதங்கள் காத்திருந்தேன். பிரதி வர வில்லை. மறந்திருப்பார் போலும் என்றெண்ணி மறுமுறை சென்னை வந்தபோது க்ரியா-வில் ஒரு பிரதி வாங்கிய கையோடு அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன் - நான் வாங்கியாயிற்று, அனுப்ப வேண்டாம் என்று. 'நானே அனுப்புவதாகத்தான் இருந்தேன். நீங்கள் வாங்கி இருக்கவேண்டாம். என்றாலும் சந்தோஷம், புத்தகத்தின் மொத்த விற்பனை ஐந்திலிருந்து ஆறாக உயர்ந்துள்ளது' என்று பதில் எழுதினார். வேறொரு சந்தர்ப்பத்தில் அவர் எனக்கு எழுதிய
கடிதத்தில், 'என் புத்தகங்கள் விற்பனை ஆவதில்லை என்பதாலும் என்னால் எழுதுவதை நிறுத்த முடியவில்லை என்ற பலவீனத் தாலும்' என்று குறிப்பிட்டிருந்தார். நமது இலக்கியச் சூழலை நினைத்து எனக்கு சிரிப்பு வந்தது. சிரிப்பின் ஊடேயே ஆழ்ந்த வருத் தமும் ஏற்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் மறுபடியும் போயிருந்தேன். எல்லாத் தமிழ் எழுத்தாளர்களையும் அநேகமாக மோசமான வெளிச்சத்தில் வர்ணித்த தமிழ் நாவலொன்றைப் படித்தாயா என்று கேட்டார்.
''ரொம்பக் கூச்சப்பட்டுக்கிட்டு மாதவ அண்ணாச்சி இரவல் தந்தாரு..."
''நன்னாருக்கா....'' ''எனக்கு அது பற்றிப் பேசப் பிடிக்கல்ல...” 'ஏன்? ஏன்? A foreign writer says, 'If you hate some one, you cannot under stand him' அப்டீண்ணு ... இதுல என்ன இருக்கு?''
எனக்கு நீண்ட நாட்களாக அது மனதில் கனன்றுகொண்டே இருந்தது. ஆம், வெறுப்பென்பது புரிதலுக்குத் தடையான விஷயம் தான்.
1992 - ன்கோடை விடுமுறையில் போயிருந்தேன். வந்து நேரமாகி விட்டதால் புறப்பட யத்தனித்தேன். கூடவே எழுந்தார் நகுலன்.
மழை லேசாகத் தூறிக்கொண்டிருந்தது. மேற்கில் சாயும் சூரியனின் வீர்யமற்ற கதிர்கள் முற்றத்துப் புல்தளத்தில் மினுங்கின. வாசலில் முன்னாலிருந்த துளசிமாடத்தில் போஷாக்கற்ற சிறு துளசி காற்றில் சிலிர்த்தது. வலக்கோடி இடப்பக்கம் இடிந்து கிடந்த காம்ப வுண்டு மண்சுவர் அருகில் நின்ற பவழமல்லிக் கிளையில் குயிலொன்று தாவியது.
''குயில் இருக்கு" என்றேன், ''குயில் தானா? நன்னாத் தெரியுமா? ரெண்டு மூணு நாளா வந்திண்டிருக்கு... கூட்டிண்டு போறதுக்குத்தான் வந்திண்டிருக்கு...
ஹாஹ்ஹாஹ்ஹா ....''
"கூட்டிக்கிட்டு போறதுக்கில்லை; உங்களைக் கண்காணிக்க...''
"போய் லட்டர் போடுங்கோ ... அடுத்த முறை வாறபோது இருக்கனோ இல்லியோ... வயசாயிண்டிருக்கே..."
அப்போது எழுபதைத் தாண்டிக்கொண்டிருந்தார். அவருடைய வரிகள் ஞாபகம் வந்தன.
The count down has began
he is quiet'

அவர் அம்மா பற்றி எழுதிய கவிதை ஒன்றும் ஞாபகம் வந்தது.
"The umbilical cord
has to be severed
twice
First
you cut it
Next
you burn it to
ashes
SWAHA'.

ஆனால் முனிவர்களுக்குச் சாவில்லை என்றே தோன்றுகிறது.
'ஆல்'. 1993