ஒரு குறிப்பு
வாசிப்பு என்பது இயந்திரகதியில் நிகழும் செயல் அல்ல. மாறாக மனஒழுங்கை வலுயுறுத்தும். படைப்புச் செயலில் பங்குகொள்ளும் ஒரு செயல், வாசகனின் கவனத்தையும் அக்கறையையும் கோரும் போதுதான் ஒரு படைப்பு தன் முழு வீச்சையும் புலப்படுத்துகிறது. பெரும்பாலோருக்கு வாசிப்பு எளிதில் நிகழும், முயற்சி தேவைப்படாத ஒரு பழக்கமாக இருந்துவருகிறது. வாசகனின் முயற்சியை வேண்டும். அதன்மூலம் வாசகனின் அகவிஸ்தரிப்பைச் சாத்தியமாக்கும். வாழ்க்கைக்கும் இலக்கியத்துக்குமிடையே உள்ள உறவைத் தெளிவாக எடுத்துக்காட்டும் மொழிபெயர்ப்புகள் தமிழில் அவசியம் என்ற வகையில்தான் விசாரணை' தமிழாக்கம் முக்கியத்துவம் பெறுகிறது. மொழி பெயர்ப்புகள் அவை வந்து சேரும் மொழியில் புதிய சாத்தியக்கூறுகளைச் சுட்டிக்காட்டக்கூடியவை. புது வெற்றிகளுக்கு வழி வகுக்கக்கூடியவை, என்ற வகையிலும் 'விசாரணை' முக்கியத்துவம் பெறுகிறது.
'விசாரணை' நேர்கோட்டில் செல்லும் கதை அல்ல. எளிதான விவரணை முறையில் எழுதப்பட்ட கதையும் அல்ல. மொழியும் மிகவும் வித்தியாசமானது. காஃப்காவின் தீவிரம் அவருடைய நடையை நிர்ணயிக்கிறது. ஒரு நிலைமையின் பல்வேறு புள்ளிகளை ஒரே நேரத்தில் அவர் மனம் பதிவு செய்கிறது. இதனால் முற்றுப்புள்ளிகள் அழிகின்றன. ஒரு ஆவேச மனத்தின் பெருக்காய் அவர் வாக்கியங்கள் தொடருகின்றன. பத்திகள் இறுக்கமாக, மூச்சுவிட இடமில்லாமல், நீண்டு, நெருக்குகின்றன. இவையெல்லாம் வெறும் உத்திகள் அல்ல. ஆக, காஃப்காவைத் தமிழில் கொண்டுவரும் போது நாம் உள்ளடக்கத்தை மட்டும் கொண்டுவருவதில் பொருளில்லை. அவர் மொழியும் தமிழில் வரக்கூடிய மொழிதான். சற்றுக் கடினமாக இருக்கலாம். ஆனால் தமிழின் தனித்தன்மை கெடாமல், அதை மீறாமல் காஃப்காவின் மொழியைத் தமிழில் கொண்டு வரும் போது தமிழ் மொழியும் விரிவடைகிறது. இந்த அடிப்படைதான் 'விசாரணை' மொழிபெயர்ப்பில் க்ரியா மேற்கொண்டுள்ள பெரும் உழைப்பை அர்த்தமுள்ளதாக்குகிறது.
1985 இல் துவங்கிய மொழி பெயர்ப்பின் முதல் வரைவு 1987 இல் முழுமை அடைந்தது. தொடர்ந்து, சிட்டத்தட்டத் தலைக்குச் சுமார் 400 மணிநேரம் என்ற அளவில் ஏ.வி. தனுஷ்கோடியும், ஜி. கிருஷ்ணமூர்த்தியும், நானும் அதை மூலத்துடன் ஒப்பிட்டுத் திருத்தங்கள் செய்தோம். அதைத் தொடர்ந்து 1987க்கும் 1992 மார்ச் மாதத்துக்கும் இடையே ஜி. கிருஷ்ணமூர்த்தியும், கே. நாராயணனும், நானும் விட்டு விட்டுப் பல நூறு மணிநேரம் செலவழித்திருக்கிறோம். அதே போல் வண்ணநிலவன். ஏ. சீனிவாசன். நிஜந்தன் ஆகியோரும் வெவ்வேறு கட்டங்களில் மொழிபெயர்ப்பு செம்மைப்பட உதவியிருக்கிறார்கள். இவர்கள் அனைவருடைய ஒத்துழைப்புக்கும் க்ரியா நன்றி செலுத்துகிறது. கையெழுத்துப் பிரதி தயாரிக்கும் செலவை ஜெர்மனியிலுள்ள InterNatianes அமைப்பு எந்த முன் வந்திருக்கிறது. இந்த உதவிக்கு Inter Nationes அமைப்புக்கும். அதைச் சாத்திய மாக்சிய சென்னை மாக்ஸ் முல்லர் பவனுக்கும் எங்கள் நன்றி.
எஸ். ராமகிருஷ்ணன்