ஏன் சோசலிசம் ! – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளரான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எழுதிய இந்தக் கட்டுரை, அமெரிக்காவில், மன்த்லி ரிவியூ என்ற பத்திரிகையின் முதல் இதழில் (மே 1949) வெளியிடப்பட்டது.
***
பொருளாதார, சமூகப் பிரச்சனைகளில் நிபுணராக இல்லாத ஒருவர் சோசலிசம் குறித்துத் தனது கருத்துக்களை வெளியிடுவது சரிதானா? பல காரணங்களுக்காக அது சரிதான் என்று நான் கருதுகிறேன்.
முதலில், அறிவியல் கண்ணோட்டத்தில் இந்தக் கேள்வியைப் பரிசீலிக்கலாம். முதல் பார்வையில் வானவியலுக்கும் பொருளாதாரவியலுக்கும் அடிப்படையில் முறையியல் வேறுபாடுகள் இல்லாதது போலத் தோன்றலாம். இரண்டு துறைகளிலுமே அறிவியலாளர்கள் தாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நிகழ்வுகள் தொடர்பான விதிகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.
அதன் மூலம் இந்நிகழ்வுகளுக்கிடையேயான உள்உறவுகளை முடிந்த வரைக்கும் புரிந்து கொள்ள முயற்சிக்கின்றனர். ஆனால், உண்மையில் இரண்டு துறைகளுக்கும் இடையே முறையியல் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. தனியாகப் பிரித்து மதிப்பிட முடியாத பல காரணிகள் பொருளாதார நிகழ்வுகளைப் பாதிக்கின்றன என்பதால், பொருளாதாரவியல் துறையில் பொதுவான விதிகளைக் கண்டுபிடிப்பது சிக்கலானதாக உள்ளது.
மேலும், நாகரீகக் காலகட்டம் என்று அழைக்கப்படும் மனிதகுல வரலாற்றில் திரட்டப்பட்டுள்ள அனுபவங்கள் வெறும் பொருளாதாரக் காரணிகளால் மட்டும் பாதிக்கப்பட்டுத் தீர்மானிக்கப்படவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.
உதாரணமாக, வரலாற்றில் தோன்றிய பேரரசுகளில் பெரும்பாலானவை நாடு பிடித்தலை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. வென்றடக்கும் தரப்பினர், வென்றடக்கிய நாட்டில் பொருளாதார ரீதியாகவும், சட்டரீதியாகவும் சலுகை பெற்ற வர்க்கமாகத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டார்கள். நிலவுடைமை ஏகபோகத்தைக் கைப்பற்றிக் கொண்ட அவர்கள், தமது தரப்பிலிருந்தே மத குருக்களை நியமித்துக் கொண்டார்கள். கல்வியைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த இந்த மத குருக்கள், சமூகம் வர்க்க ரீதியாகப் பிரிக்கப்பட்டிருப்பதை ஒரு நிரந்தர அமைப்பாக மாற்றினார்கள். மக்கள் தமது சமூக செயல்பாடுகளில் தம்மை அறியாமலேயே வழிநடத்தப்படும் வகையிலான ஒரு தார்மீகக் கட்டமைப்பை உருவாக்கினார்கள்.
இந்த வரலாற்றுப் பாரம்பரியம் நேற்றோடு முடிந்த போன கதை. இருப்பினும், நாம் இன்னும் தோர்ஸ்டெய்ன் வெப்லன் வேட்டையாடும் கட்டம் ( பார்க்க அடிக்குறிப்பு 1) என்று அழைக்கும் மனிதகுல வளர்ச்சிக் கட்டத்தை எந்த நாட்டிலும் கடந்து விடவில்லை. இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் பொருளாதார நடைமுறைகள் அத்தகைய வேட்டையாடும் கட்டத்தைச் சேர்ந்தவை. இந்த நடைமுறைகளிலிருந்து நாம் வந்தடையக் கூடிய விதிகள் எதிர்காலத்தில் வரப் போகும் புதிய, மேம்பட்ட கட்டங்களுக்கு பொருந்தப் போவதில்லை.
மனிதகுல வளர்ச்சியின் வேட்டையாடும் கட்டத்தைத் தாண்டி முன்னேறிச் செல்வதுதான் சோசலிசத்தின் உண்மையான நோக்கம். எனவே, பொருளாதார அறிவியல் அதன் இன்றைய நிலையில் எதிர்கால சோசலிச சமூகத்தைப் பற்றி விளக்க சாத்தியமற்று உள்ளது.
இரண்டாவதாக, சோசலிசம் ஒரு சமூக அறம் சார்ந்த இலக்கை நோக்கிய பயணம். ஆனால், அறிவியல் அத்தகைய இலக்குகளை உருவாக்கித் தர முடியாது என்பதோடு, அறிவியல் மூலம் இலக்குகளை மனிதர்கள் ஏற்றுக் கொள்ளும்படி செய்வதற்கான சாத்தியம் இன்னும் குறைவு. அதிகபட்சமாக, குறிப்பிட்ட இலக்குகளை எட்டுவதற்கான வழிமுறைகளை மட்டுமே அறிவியல் வழங்க முடியும். ஆனால், அத்தகைய இலக்குகளை உயர்ந்த அறநெறி இலட்சியங்களைக் கொண்டிருக்கும் ஆளுமைகள்தான் உருவாக்குகின்றனர். அந்த இலக்குகள் குறைப் பிரசவமாகி விடாமல் உயிர்த் துடிப்போடும், சக்தியோடும் இருக்கும் போது, உணர்ந்தும் உணராமலும் தமது செயல்பாடுகளால் சமூகத்தின் பரிணாம வளர்ச்சியை தீர்மானிக்கும் மனிதர்களால் அவை ஏற்றுக் கொள்ளப்பட்டு முன்னெடுத்து செல்லப்படுகின்றன.
எனவே, மனிதகுலம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆய்வு செய்யும் போது அறிவியலையும் அறிவியல் முறையியலையும் அளவுக்கு மீறி மதிப்பிட்டு விடாமல் கவனமாக இருக்க வேண்டும். சமூகத்தின் கட்டமைப்பைப் பாதிக்கும் கேள்விகள் தொடர்பாக துறை நிபுணர்கள் மட்டும்தான் கருத்துச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்து விடக் கூடாது.
சமீப காலமாக மனித சமூகம் ஒரு நெருக்கடியைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது என்றும் சமூகத்தின் நிலைத்தன்மை மிக மோசமாகச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது என்றும் பல குரல்கள் ஆணித்தரமாக பேசிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய நிலையில் தனிநபர்கள், அவர்கள் சார்ந்திருக்கும் சிறு அல்லது பெரிய குழு தொடர்பாக விட்டேற்றியாக, ஏன் பகை உணர்வோடு இருப்பது ஒரு போக்காக உள்ளது. நான் சொல்வதை விளக்குவதற்கு எனது சொந்த அனுபவம் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன்.
சமீபத்தில் ஒரு புத்திசாலியான, நல்லெண்ணம் படைத்த ஒருவரிடம் இன்னொரு போர் மூண்டு விடும் அபாயத்தை பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அத்தகைய போர் மனிதகுலத்தின் இருத்தலையே கேள்விக்குள்ளாக்கி விடும் என்றும், தேசங்களுக்கு அப்பாற்பட்ட கட்டமைப்பு ஒன்றுதான் அத்தகைய அபாயத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க முடியும் என்றும் எனது கருத்தை தெரிவித்தேன். அதைக் கேட்டவுடன், அவர், மிக அமைதியாக, பதட்டமின்றி, மனித இனம் அழிந்து போவதை ஏன் இவ்வளவு தீவிரமாக எதிர்க்கிறீர்கள்? என்று கேட்டார்.
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு கூட இப்படி ஒரு கருத்தை இவ்வளவு எளிதாக யாரும் சொல்லியிருக்க மாட்டார்கள் என்பது உறுதி. தனக்குள் ஒரு சமநிலையை வந்தடைவதற்குப் போராடித் தோற்று போய், இனிமேலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை முற்றிலும் இழந்து விட்ட ஒரு மனிதரின் கருத்து அது. இன்று பலரையும் பீடித்துள்ள வலிமிகுந்த தனிமையின், ஒதுக்கி வைப்பின் வெளிப்பாடு அது. இதற்கு என்ன காரணம்? இதிலிருந்து விடுபட ஏதாவது வழி இருக்கிறதா?
இப்படிப்பட்ட கேள்விகளை கேட்பது எளிது. ஆனால், குறிப்பிடத்தக்க அளவு உறுதியுடன் அவற்றுக்கு விடை சொல்வது கடினமானது. இருப்பினும், என்னால் முடிந்த அளவு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல நான் முயற்சிக்கிறேன். நமது உணர்ச்சிகளும், தேடல்களும் பல நேரங்களில் முரண்பட்டவையாகவும் தெளிவற்றவையாகவும் இருக்கின்றன என்பதையும், எளிதான, எளிமையான சூத்திரங்களாக அவற்றை வெளிப்படுத்த முடியாது என்பதையும் தெரிந்தே நான் இந்த முயற்சியில் இறங்குகிறேன்.
ஒரு மனிதர் ஒரே நேரத்தில் தனித்த பிறவியாகவும், சமூகப் பிறவியாகவும் இருக்கிறார். தனித்த பிறவியாக தனது வாழ்வையும், தனக்கு மிகவும் நெருக்கமானவர்களின் வாழ்வையும் பாதுகாத்துக் கொள்ளவும், தனது தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளவும், தனது உள்ளார்ந்த திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் முயற்சிக்கிறார். சமூகப் பிறவியாக, தனது சக மனிதர்களின் அங்கீகாரத்தையும், அன்பையும் பெற முயற்சிக்கிறார்; அவர்களது மகிழ்ச்சிகளில் பங்கெடுக்க விளைகிறார்; அவர்களது துயரங்களுக்கு ஆறுதல் சொல்கிறார்; அவர்களது வாழ்க்கை நிலையை மேம்படுத்த முயற்சிக்கிறார்.
பல்வகைப்பட்ட, பல நேரங்களில் ஒன்றோடொன்று முரண்படும் இத்தகைய முயற்சிகள்தான் ஒரு மனிதரின் தனிச்சிறப்பான தன்மையைத் தீர்மானிக்கின்றன. ஒரு மனிதரின் வாழ்வில் அவற்றின் குறிப்பிட்ட சேர்க்கை, அவர் தனது உள்மன சமநிலையைப் பராமரித்து சமூகத்தின் நலனுக்கு பங்களிக்க முடியுமா என்பதைத் தீர்மானிக்கின்றது.
இந்த இரண்டு உந்துதல்களின் ஒப்பீட்டு வலிமைகள் மரபு வழியில் தீர்மானிக்கப்படுவதற்கான சாத்தியம் இருந்தாலும், ஆனால், இறுதியாக வெளிப்படும் ஒரு மனிதரின் ஆளுமை அவர் வளர்ந்த சூழலாலும், வளர்ந்த சமூகத்தின் கட்டமைப்பாலும், அச்சமூகத்தின் பாரம்பரியங்களாலும், குறிப்பிட்ட வகையிலான நடத்தைகள் பற்றிய அச்சமூகத்தின் மதிப்பீடுகளாலும் தீர்மானிக்கப்படுகிறது.
ஒரு தனி மனிதரைப் பொருத்தவரை “சமூகம்” என்ற கருத்தாக்கம், சமகால மனிதர்களுடனும், முந்தைய தலைமுறை மனிதர்களுடனும் அவருக்கு இருக்கும் நேரடி, மறைமுக உறவுகளின் தொகுப்பைக் குறிக்கிறது. ஒரு தனிமனிதர் தானாகவே சிந்திக்கவும், உணரவும், முயற்சிக்கவும், வேலை செய்யவும் முடிகிறது; ஆனால், உடல்ரீதியாகவும், அறிவு ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் சமூகத்தை அவர் பெருமளவு சார்ந்திருப்பதால், சமூகம் என்ற சட்டகத்துக்கு வெளியில் ஒரு மனிதரைப் பற்றிச் சிந்திப்பதோ, புரிந்து கொள்வதோ, சாத்தியமற்றதாகிறது.
“சமூகம்” தான் மனிதருக்கு உணவு, உடைகள், வீடு போன்ற அத்தியாவசிய தேவைகளையும், வேலை செய்வதற்கான கருவிகளையும், மொழியையும் சிந்தனை வடிவங்களையும் சிந்தனையின் பெரும்பகுதி உள்ளடக்கத்தையும் வழங்குகிறது. “சமூகம்” என்ற சிறு சொல்லின் பின் மறைந்திருக்கும் கடந்த காலத்தையும், சமகாலத்தையும் சேர்ந்த கோடிக்கணக்கான மனிதர்களின் உழைப்பின் மூலமும், சாதனைகளின் மூலமும்தான் ஒரு மனிதரது வாழ்க்கை சாத்தியமாக்கப்படுகிறது.
எனவே, சமூகத்தின் மீது தனிநபரின் சார்பு இயற்கை யதார்த்தமாக உள்ளது. எப்படி எறும்புகளையும், தேனீக்களையும் அவற்றின் சமூகத்திலிருந்து பிரிக்க முடியாதோ அது போல மனிதருக்கும் சமூகம் ஒரு பிரிக்க முடியாத அம்சமாக உள்ளது. எறும்புகளின், தேனீக்களின் வாழ்க்கையின் சின்னஞ்சிறு விபரங்கள் கூட, மாற்ற முடியாத, பாரம்பரியமாக பெறப்பட்ட உள்ளுணர்வுகளால் தீர்மானிக்கப்படுகின்றன. ஆனால், மனிதர்களின் சமூக வடிவமைப்புகளும், அவர்களுக்கிடையேயான உறவுகளும் மாறக் கூடியவையாகவும், மாற்றத்துக்குட்பட்டவையாகவும் உள்ளன.
மனிதர்களின் நினைவுத் திறன், புதிய சேர்க்கைகளை படைக்கும் திறன், மொழி வழி தகவல் பரிமாற்றம் ஆகியவை உயிரியல் அவசியங்களால் கட்டுப்படுத்தப்படாத முன்னேற்றங்களைச் சாத்தியமாக்கியிருக்கின்றன. அந்த முன்னேற்றங்கள் பாரம்பரியங்கள், நிறுவனங்கள், அமைப்புகள் போன்றவற்றிலும் இலக்கியத்திலும், அறிவியல், தொழில்நுட்ப சாதனைகளிலும், கலைப்படைப்புகளிலும் வெளிப்படுகின்றன. ஒரு மனிதர் குறிப்பிட்ட வகையில் தனது சொந்த நடத்தையைக் கட்டுப்படுத்த முடிவதையும், அவரது உணர்வுபூர்வமான சிந்தனையும், விருப்பங்களும் அதில் பங்களிப்பு செய்வதையும் இது விளக்குகிறது.
ஒரு மனிதர் பிறக்கும்போதே மரபுரீதியாக ஒரு உடற்கட்டமைப்பைப் பெறுகிறார். மனித இனத்தின் இயல்பான இயற்கை உந்துதல்கள் உள்ளிட்ட அந்தக் கட்டமைப்பு நிலையானது, மாற்ற முடியாதது என்றே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு மேல், தன் வாழ்நாள் முழுவதும், தகவல் தொடர்பு மூலமும் பிற வகை தாக்கங்களின் மூலமும் சமூகத்திலிருந்து ஒரு கலாச்சார கட்டமைப்பை அவர் வரித்துக் கொள்கிறார். காலப்போக்கில் மாற்றப்படக்கூடிய இந்தக் கலாச்சார கட்டமைப்புதான் ஒரு தனிநபருக்கும் சமூகத்துக்கும் இடையேயான உறவை முதன்மையாகத் தீர்மானிக்கிறது.
மானுடவியலின் புராதன சமூகங்கள் பற்றிய ஒப்பீட்டு ஆய்வுகள் மூலம் நிலவும் கலாச்சார வடிவங்களைப் பொறுத்தும் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் அமைப்புகளின் தன்மையைப் பொறுத்தும் மனிதர்களின் சமூக நடத்தை பெருமளவு வேறுபடலாம் என்று தெரிய வருகிறது. மனித குலத்தின் நிலையை மேம்படுத்த முயற்சித்துக் கொண்டிருப்பவர்கள் இதில்தான் நம்பிக்கைவைக்க வேண்டும். உயிரியல் கட்டமைப்பின் காரணமாக ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்வதோ, குரூரமான, சுயமாகச் சுமத்தப்பட்டுக் கொண்ட விதியின் தயவில் வாழ்வதோ மனித குலத்தின் விதி இல்லை.
மனித வாழ்க்கையை அதிகபட்ச நிறைவளிக்கக் கூடியதாக மாற்றுவதற்கு சமூகத்தின் கட்டமைப்பையும், மனிதரின் கலாச்சார கண்ணோட்டத்தையும் எப்படி மாற்ற வேண்டும்? சில நிலைமைகள் நம்மால் மாற்றியமைக்கப்பட முடியாதவை என்ற உண்மையை நாம் எப்போதும் மனதில் வைத்திருக்க வேண்டும். முன்பு குறிப்பிட்டது போல மனிதரின் உயிரியல் இயல்புகள் நமது நடைமுறையை பொறுத்தவரை மாற்றப்பட முடியாதவை.
மேலும், கடந்த சில நூற்றாண்டுகளில் தொழில்நுட்பங்களும், மக்கள் தொகை பெருக்கமும் உருவாக்கியுள்ள நிலைமைகளை இல்லாமல் செய்து விட முடியாது. மக்களின் தொடர்ந்த இருத்தலுக்கு இன்றியமையாத பொருட்களுடன் கூடிய, ஒப்பீட்டளவில் மக்கள்நெருக்கம் அதிகமான பகுதிகளுக்கு, பெருமளவு உழைப்புப் பிரிவினையுடன் கூடிய மையப்படுத்தப்பட்ட உற்பத்திப் பொறியமைவு இன்றியமையாதது. தனிநபர்களும், ஒப்பீட்டளவில் சிறு குழுக்களும் தமது தேவைகளைத் தாமே நிறைவு செய்து கொள்ளும் வாழ்க்கை நினைத்துப் பார்க்கும் போது சொர்க்கமாக இனித்தாலும், அது இனிமேல் திரும்பி வரப் போவதில்லை. மாறாக, இப்போது மனிதகுலம் இந்த பூமிக் கோளம் தழுவிய உற்பத்தி, நுகர்வு சமூகமாக உள்ளது என்று சொல்வது மிகையாகாது.
நமது காலத்தின் நெருக்கடியின் சாராம்சம் என்ன என்று சுருக்கமாக சுட்டிக் காட்ட வேண்டிய கட்டத்துக்கு நான் வந்திருக்கிறேன். தனிமனிதர் சமூகத்துடன் கொண்டிருக்கும் உறவைப் பற்றியது அது. சமூகத்தின் மீது தனது சார்பை மனிதர் முன்னெப்போதையும் விட அதிகமாக உணர்ந்திருக்கிறார். ஆனால், இந்தச் சார்பை ஒரு நேர்மறையான சொத்தாக உணராமல், ஒரு உயிரோட்டமான பிணைப்பாக உணராமல், தன்னைப் பாதுகாக்கும் சக்தியாக உணராமல், தனது இயற்கை உரிமைகளுக்கும், தனது பொருளாதார இருத்தலுக்கும் அச்சுறுத்தலாக அவர் பார்க்கிறார்.
மேலும், சமூகத்தில் அவர் வைக்கப்பட்டிருக்கும் இடம், அவரது உயிரியல் கட்டமைப்பில் உள்ளார்ந்து இருக்கும் தான் என்ற தன் முனைப்பு போக்கைத் தீவிரப்படுத்துகிறது. இயல்பாகவே பலவீனமாக இருக்கும் சமூக போக்குகளை, மேலும் மேலும் பலவீனப்படுத்துகிறது. சமூகத்தின் ஒவ்வொரு நிலையில் இருக்கும் மனிதர்களும் இந்தச் சீரழிவு நிகழ்முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமது சொந்த அகந்தையில் சிறை பிடிக்கப்பட்டுள்ள அவர்கள் பாதுகாப்பற்றும், தனிமையாகவும் உணர்கிறார்கள்; ஒரு வகை அப்பாவித்தனமான, எளிமையான, பகட்டற்ற வாழ்வின் மகிழ்ச்சியை இழக்கிறார்கள். சமூகத்துக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்வதன் மூலமாகவே குறுகிய, அபாயங்கள் நிரம்பிய தனது வாழ்க்கையின் உண்மையான பொருளை ஒரு மனிதர் கண்டு கொள்ள முடியும்.
இன்று நிலவும் முதலாளித்துவ சமூகத்தின் பொருளாதார அராஜகம்தான் தீங்குகளின் உண்மையான மூலம் என்பது எனது கருத்து. பெரும் எண்ணிக்கையிலான உற்பத்தியாளர்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் அவர்களது உழைப்பின் பலன்களை பறித்துக் கொள்ள தொடர்ந்து முயற்சிப்பதை நாம் காண்கிறோம். அவ்வாறு பறித்துக் கொள்வது வன்முறையின் மூலம் நடக்கவில்லை, சட்டரீதியாக நிறுவப்பட்ட விதிகளைக் கவனமாகக் கடைப்பிடிப்பதன் மூலமே நடக்கிறது. இதைப் பற்றி பேசும் போது, உற்பத்தி சாதனங்கள் – அதாவது, நுகர்வு பொருட்களையும், கூடுதல் எந்திர சாதனங்களையும் உற்பத்தி செய்வதற்கான ஒட்டு மொத்த உற்பத்தித் திறன் – சட்டப்படியாகவும், நடைமுறையிலும் தனியார் சொத்தாக உள்ளன என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.
விளக்குவதற்கு எளிமையாக இருக்கும் வகையில் பின்வரும் விவாதத்தில், உற்பத்தி சாதனங்களின் உடைமையில் பங்கு இல்லாத அனைவரையும் தொழிலாளர்கள் என்று நான் குறிப்பிடுகிறேன். அந்தச் சொல் வழக்கமாக இந்தப் பொருளில் பயன்படுத்தப்படுவதில்லை.
உற்பத்திச் சாதனங்களைச் சொந்தமாக வைத்திருப்பவர், தொழிலாளரின் உழைப்புச் சக்தியை வாங்கும் நிலையில் இருக்கிறார். உழைப்புச் சாதனங்களைப் பயன்படுத்தி தொழிலாளர் உற்பத்தி செய்யும் புதிய பொருட்கள் முதலாளியின் சொத்தாக மாறி விடுகின்றன. இந்த நிகழ்முறையின் சாராம்சமான விஷயம் என்னவென்றால் தொழிலாளர் உற்பத்தி செய்வதற்கும், அவர் பெறும் ஊதியத்துக்கும் இடையேயான உறவுதான். இரண்டுமே உண்மையான மதிப்பின் அலகுகளில் அளவிடப்படுகின்றன.
உழைப்பு ஒப்பந்தம், சுதந்திரமானதாக இருந்தாலும் தொழிலாளருக்குக் கிடைக்கும் வருமானம் அவர் உற்பத்தி செய்யும் பொருட்களின் உண்மை மதிப்பால் தீர்மானிக்கப்படுவதில்லை; மாறாக, அவரது குறைந்தபட்ச தேவைகளாலும், முதலாளிகளின் உழைப்பு சக்திக்கான தேவையை நிறைவு செய்ய போட்டி போடும் தொழிலாளர்களின் எண்ணிக்கையாலும் தீர்மானிக்கப்படுகின்றது. கோட்பாட்டில்கூடத் தொழிலாளருக்கான ஊதியம், அவர் உற்பத்தி செய்யப்படும் பொருளின் மதிப்பால் தீர்மானிக்கப்படுவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தனியார் மூலதனம் ஒரு சிலரிடம் குவியும் போக்கு காணப்படுகிறது. ஒரு பக்கம் முதலாளிகளுக்கிடையேயான போட்டி, இன்னொரு பக்கம் தொழில்நுட்ப முன்னேற்றமும், அதிகரிக்கும் உழைப்புப் பிரிவினையும் சிறு உற்பத்திக் கூடங்களை அழித்து விட்டுப் பெரும் தொழிற்சாலைகள் உருவாவதை ஊக்குவிப்பது இதற்குக் காரணமாகின்றன. இந்த வளர்ச்சிகளின் விளைவாக ஜனநாயகரீதியில் அமைப்பாக்கப்பட்ட அரசியல் சமூகத்தால்கூடக் கட்டுப்படுத்த முடியாத தனியார் மூலதன சிறு கும்பலின் சர்வாதிகாரம் தோன்றுகிறது.
சட்டமியற்றும் அவைகளின் உறுப்பினர்கள் அரசியல் கட்சிகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்; தனியார் முதலாளிகள் அவர்களுக்குப் பெருமளவு நிதி உதவி அளித்து அவர்கள் மீது தாக்கம் செலுத்துகின்றனர்; இதன் மூலம் அனைத்து நடைமுறை விஷயங்களைப் பொருத்தவரையில் வாக்காளர்களைச் சட்டமியற்றும் அவையிலிருந்து பிரித்து வைத்து விடுகின்றனர். இதன் விளைவு என்னவென்றால், மக்களின் பிரதிநிதிகள், மக்கள் தொகையின் நலிவுற்ற பிரிவினரின் நலன்களைப் போதுமான அளவு பாதுகாப்பதில்லை.
மேலும், தனியார் முதலாளிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் தகவல் தொடர்பின் முக்கியமான ஊடகங்களான பத்திரிகைகள், வானொலி, கல்வி போன்றவற்றைக் கட்டுப்படுத்துகின்றனர். எனவே, ஒரு தனிப்பட்ட குடிமகன் புறநிலையைச் சரியாக புரிந்து கொண்டு முடிவு எடுப்பதும் தனது அரசியல் உரிமைகளை அறிவுபூர்வமாகப் பயன்படுத்துவதும் பெரும்பாலான நேரங்களில் மிகக் கடினமாகவோ, அல்லது சாத்தியமற்றதாகவோ உள்ளது.
மூலதனத்தில் தனியுடைமை என்ற அடிப்படையிலான பொருளாதாரத்தில் நிலவும் நிலைமை இரண்டு முக்கிய கோட்பாடுகளை கொண்டிருக்கிறது : முதலில், உற்பத்திச் சாதனங்கள் (மூலதனம்) தனியாருக்குச் சொந்தமாக உள்ளன. அவற்றின் உடைமையாளர்கள் தம் விருப்பப்படி அவற்றைப் பயன்படுத்துகின்றனர். இரண்டாவதாக, உழைப்பு ஒப்பந்தம் சுதந்திரமானதாக உள்ளது.
இந்த வகையில் தூய்மையான முதலாளித்துவ சமூகம் என்ற ஒன்று நிச்சயமாக இல்லைதான். குறிப்பாக, தொழிலாளர்கள் நீண்ட, கடுமையான அரசியல் போராட்டங்களின் மூலம் குறிப்பிட்ட வகை தொழிலாளர்களுக்குச் “சுதந்திர உழைப்பு ஒப்பந்தத்தின்” மேம்பட்ட வடிவத்தைப் பெறுவதில் வெற்றியடைந்திருக்கிறார்கள். ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இன்றைய பொருளாதாரம், “தூய்மை”யான முதலாளித்துவத்திலிருந்து பெருமளவு வேறுபடவில்லை என்று தெரிகிறது.
“உற்பத்தி இலாபத்துக்காகச் செய்யப்படுகிறது. பயன்பாட்டுக்காக இல்லை. “வேலை செய்ய திறமையும் விருப்பமும் உடைய எல்லோருக்கும் வேலை கிடைப்பதற்கு எந்த வழிவகையும் இல்லை; வேலை இல்லாதவர்களின் படை ஒன்று எப்போதுமே இருக்கிறது.
“எப்போது வேலை போகுமோ என்ற பயத்தில்தான் தொழிலாளர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.”
வேலையில்லாதவர்களும் குறைவான சம்பளம் பெறும் தொழிலாளர்களும் இலாபகரமான சந்தையாக அமைவதில்லை என்பதால் நுகர்வு பொருட்களின் உற்பத்தி மட்டுப்படுத்தப்படுகிறது; அதன் விளைவாக பெருமளவு சிரமங்கள் ஏற்படுகின்றன. தொழில்நுட்ப முன்னேற்றம், அனைவரது வேலைச் சுமையையும் குறைப்பதற்கு மாறாக, கூடுதல் வேலை இழப்பை உருவாக்குகிறது.
இலாப நோக்கமும், முதலாளிகளுக்கிடையேயான போட்டியும், மூலதனத்தை ஒன்று குவிப்பதிலும் பயன்படுத்துவதிலும் நிலையற்ற தன்மைக்குக் காரணமாக உள்ளது. இது கடும் பொருளாதார மந்தங்களுக்கு இட்டுச் செல்கிறது. கட்டற்ற போட்டி பெருமளவு உழைப்பை வீணாக்குவதற்கும் மேலே குறிப்பிட்ட தனிநபர்களின் சமூக உணர்வை முடக்கிப் போடுவதற்கும் இட்டுச் செல்கிறது.
தனிநபர்களை முடக்கிப் போடுவது, முதலாளித்துவத்தின் மிக மோசமான தீங்கு என்று நான் கருதுகிறேன். தமது எதிர்கால வாழ்க்கைப் பணிக்குத் தயாராகும் மாணவர்கள், பொருள் ஈட்டுவதில் அடையும் வெற்றியை வியந்து வழிபடும் மனோபாவத்தின் அடிப்படையிலான, ஒரு அதீதமான போட்டி மனப்பான்மைக்குப் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.
இந்த சாகடிக்கும் தீங்குகளை ஒழித்துக் கட்டுவதற்கு ஒரே வழிதான் உள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன். சமூக இலக்குகளை நோக்கியதான கல்வி முறையுடன் கூடிய ஒரு சோசலிச பொருளாதாரத்தை கட்டியமைப்பதுதான் அந்த வழி. அத்தகைய ஒரு பொருளாதாரத்தில் உற்பத்தி சாதனங்கள் சமூகத்துக்கு சொந்தமாக்கப்பட்டு, திட்டமிட்ட முறையில் பயன்படுத்தப்படுகின்றன.
சமூகத்தின் தேவைகளுக்கேற்ப உற்பத்தியை முறைப்படுத்திக் கொள்ளும் ஒரு திட்டமிட்ட பொருளாதாரம், வேலை செய்ய திறன் உடைய அனைவருக்கும் வேலையைப் பகிர்ந்து கொடுத்து, ஒவ்வொரு ஆண், பெண், குழந்தைக்கும் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும். ஒரு மனிதருக்கு வழங்கப்படும் கல்வி, அவரது உள்ளார்ந்த திறமைகளை வளர்ப்பதோடு, சக மனிதர்கள் மீதான பொறுப்புணர்வையும் வளர்க்கும். இப்போதைய சமூகத்தில் ஊக்குவிக்கப்படும் அதிகாரத்தையும் வெற்றியையும் வழிபடுவதற்கு மாற்றாக அது இருக்கும்.
இருப்பினும் திட்டமிட்ட பொருளாதாரம் மட்டுமே சோசலிசம் ஆகி விடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு திட்டமிட்ட பொருளாதார அமைப்போடு தனிநபரை முழுமையாக அடிமைப்படுத்துவது இணைந்திருக்கலாம். உண்மையான சோசலிசத்தைச் சாதிப்பற்கு மிகக் கடினமான சில சமூக-பொருளாதார பிரச்சனைகளுக்கு விடை தேட வேண்டியிருக்கிறது; அனைத்தும் தழுவிய அரசியல் பொருளாதார அதிகாரத்தின் மையப்படுத்தலை அமல்படுத்தும் போதே அதிகார வர்க்கம் சர்வாதிகாரம் படைத்ததாகவும், அனைத்துக்கும் மேலே தன்னை நிறுத்திக் கொள்வதாகவும் மாறுவதை எப்படித் தடுப்பது? தனிமனிதரின் உரிமைகளை எப்படிப் பாதுகாப்பது, அதன் மூலம் அதிகார வர்க்கத்தின் அதிகாரத்துக்கு ஒரு ஜனநாயக எதிர்சக்தியை உருவாக்குவதை எப்படி உறுதி செய்வது?
மாறிச் செல்லும் கட்டத்தில் இருக்கும் நமது காலத்தில் (1949-ல் எழுதியது) சோசலிசத்தின் நோக்கங்கள் குறித்தும் அது சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் தெளிவு ஏற்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இந்தப் பிரச்சனைகள் குறித்த சுதந்திரமான, தடையற்ற விவாதங்கள் முடக்கப்பட்ட இப்போதைய நிலைமைகளில்,(பார்க்க அடிக்குறிப்பு 2) இந்த பத்திரிகையை (monthly review) தொடங்குவது மிக முக்கியமான பொதுச் சேவை என்று நான் கருதுகிறேன்.
மொழியாக்கம்: அப்துல்
– புதிய ஜனநாயகம், நவம்பர் 2017.
அடிக்குறிப்புகள்:
1. மிருகங்களை வேட்டையாடுவதைப் போல பிற இனங்களைச் சேர்ந்த மனிதர்களையும் வேட்டையாடுகின்ற ஒரு வர்க்கம், தன்னைத்தானே சமூகத்தின் காவலனாக நியமித்துக்
கொண்டு, சமூகத்தின் உழைப்பைச் சுரண்டி உல்லாசமாக வாழ்வதை வெப்லன் குறிக்கிறார். ஐன்ஸ்டைன் முதலாளித்துவத்தை அந்த வர்க்கத்துடன் ஒப்பிடுகிறார்.
2. இரண்டாம் உலகப்போருக்குப் பின் சோசலிச ரசியாவின் செல்வாக்கு உலகெங்கும் அதிகரித்திருந்த சூழலில், சோசலிசக் கருத்தை ஆதரித்தவர்கள் அனைவரையும் அமெரிக்காவின் எதிரிகள், ரசிய உளவாளிகள் என்று முத்திரை குத்தி ஒடுக்கியது அமெரிக்க அரசு. 1947-56 காலகட்டத்தில் தலைவிரித்தாடிய மெக்கார்த்தியிசம் என்றழைக்கப்பட்ட இந்த அடக்குமுறையில் சாப்லின், ஐன்ஸ்டைன் உள்ளிட்ட பலரும் குறிவைத்து மிரட்டப்பட்ட சூழலை அவர் குறிப்பிடுகிறார். இந்த அடக்குமுறைக்குப் பணிய மறுத்தார் ஐன்ஸ்டைன்.