https://ia600607.us.archive.org/33/items/orr-10603_Thiripuram/orr-10603_Thiripuram.pdf
திரிபுரம் - கு.அழகிரிசாமி
பஞ்சம் வந்து விட்டது.
பஞ்சம் வந்து விட்டால் என்ன? மக்கள் பட்டினி கிடப்பதோடு மட்டுமல்லாமல், மற்றொரு பரிதாபகரமான காரியத்தையும் செய்வார்கள். அதாவது ஒரு பஞ்சப் பிரதேசத்தை விட்டு அதை விடக் கொடுமையான மற்றொரு பஞ்சப் பிரதேசத்திற்குள் குடிபெயர்ந்து செல்லுவார்கள். பட்டினிப் பட்டாளங்கள் ஏதோ நம்பிக்கையுடன் ஒரு சாலையில் எதிர் எதிர்த் திசையில் பிரயாணம் செய்வது பஞ்சத்தின் கோரமான அலைக்கழிவுகளில் ஒன்று.
கோவில்பட்டிப் பிராந்தியத்திலிருந்து பல ஏழைகள் 'கூடை தலை மேலே குடி வாழ்க்கை கானகத்தில்' என்று குடும்பத்துடன் வடக்கு நோக்கி நடந்தனர். வடக்கே இருந்து அதிசயம் போலே அதே கோவில்பட்டியை நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர், ஆந்திர தேசத்து ஏழைகள் இருவர். அந்த இருவர்தான் நரசம்மாவும், அவளுடைய ஏக புத்திரியும் சுயார்ஜிதச் சொத்துமான வெங்கட்டம்மாவும். நரசம்மாவின் கணவன் பட்டினியினால் செத்தான் என்பது உண்மை; ஆனால் காலராவினால் செத்தான் என்று மானத்துக்கு அஞ்சி நரசம்மா பொய் சொன்னாள். பட்டினி கிடந்து செத்தான் என்று சொல்லுவது அவமானம் அல்லவா?
கணவன் செத்தான். குடும்பத்தின் தாங்க முடியாத ஒரு சுமை குறைந்தது. மனிதப் பிண்டம் எவ்வளவு பெரிய சுமை என்பதை நிறுத்துக் கண்டறியப் பஞ்சப் பிரதேசத்திற்குச் செல்ல வேண்டும். மற்ற இடங்களில் நம் அபிப்பிராயத்தராசு பொய்சொல்லிவிடும். நெடுமூச்சுவிட்டாள் நரசம்மா. அவள் வாழ்க்கையில் பாதி விமோசனம் பிறந்தது - உழைத்துச் சம்பாதிக்கும்தைரியம் கொண்ட தன் கணவனை மணந்தபோது; முழு விமோசனமும் பிறந்தது - அவன் செத்தபோதுதான்.பட்டினியும் நோயும் வாட்டி வதைக்கும் கணவனை, பட்டினி கிடக்கும் மனைவியும் மகளும், கண்ணாரப் பார்த்துக் கொண்டு, எத்தனை நாட்களைத்தான் தள்ள முடியும்? பரஸ்பரம் எதுவும் செய்து சமாளித்துக் கொள்ள முடியாத நரசம்மாவின் குடும்பத்துக்கு, அது எவ்வளவோ பெரிய சுமையாக இருந்தது. பிறருக்குத் தெரியாமல் தனியே பட்டினி கிடந்தால் வேதனையாகத்தான் இருக்கும். பரஸ்பரம் தெரியும்படியாகப் பலர் பட்டினி கிடந்தால் ஒவ்வொருவருக்கும் தாங்க முடியாதபடி அவமானமாக அல்லவா இருக்கிறது!
கடைசியில் அவன் ஒருவழியாகச் செத்தான். நரசம்மா அழுதாள்;வெங்கட்டம்மா பரிதவித்தாள். விரைவில் இருவருக்கும் ஞானோதயம் பிறந்தது. பட்டினி கிடப்பவன் உயிரோடிருக்கும் போது அழுதால் அர்த்தம் உண்டு; செத்த பிறகு அழுவது கேலிக் கூத்தல்லவா? அழுகையை நிறுத்தினார்கள்; செத்தவனை அடக்கம் செய்தார்கள். நரசம்மா விதவைக் கோலம் பூண்டாள். அதாவது கழுத்தில் கிடந்த வெறும் மஞ்சள் கயிற்றை அறுத்துப்போட்டாள். அதில் இருந்த தங்கத் தாலி, கணவன் உயிரோடிருக்கும்போதே அடகு வைக்கப்பட்டு, பிறகு விற்கப்பட்டு, அரிசி புளியாக மாறி விட்டது. ஆகவே, விதவைக் கோலம் பூண்பதில் யாதொரு சிரமமோ, பிரயத்தனமோ அவசியப்படவில்லை.
பரம்பரை பரம்பரையாக மானத்தோடு வாழ்ந்து வந்த குடும்பம்; ஆகவே, வீட்டு வாசலுக்கு அமீனா வந்து நிற்கும் வரையில் காலம் கடத்தாமல், வீட்டைக் கடன்காரர்களுக்கு விட்டு விட்டார்கள்.கூலி வேலைசெய்து பிழைப்பதற்குக்கூட இடமில்லாது போன ஊரை விட்டு, நாற்பத்தைந்து வயது ஸ்திரீயும், பதினேழு வயதுக் கன்னியும் வெளியேறினார்கள். அவர்கள் புறப்பட்ட கதையும், அதிசயம் போலச் சென்னைக்கு வந்து சேர்ந்த கதையும் பெரிய பாரதம்.
அவர்கள் வந்த சமயத்தில் சென்னையில் ஸ்திரீகள் இரண்டு வகையான வாழ்க்கையைத்தான் கௌரவமாக நடத்த முடியும் போல இருந்தது. ஒன்று, சீமாட்டியாக இருக்கலாம்; அல்லது கக்கூஸ் சுத்தம் செய்யும் குப்பைக்காரியாக இருக்கலாம். இந்த அபலைகளுக்கு இந்த இரண்டும் ஒத்து வரவில்லை. அவர்கள் சென்னைக்கு வந்த புதிதில் அவர்கள் செவிக்கு எட்டிய தகவல் கக்கூஸ் சுத்தம் செய்யும் வேலைக்கு ஆட்கள் தேவை என்பது தான். ஏனென்றால் அப்போது தோட்டிகளின் வேலை நிறுத்தம் நடந்து வந்தது. வேலைக்கு வராத தோட்டிகளுக்குப் பிரதியாக ஆட்கள் தேவை இருந்தது. ஆனால், தாயும் மகளும் இந்த வேலை செய்ய இஷ்டப்படவில்லை. பிறந்த ஜாதி, வாழ்ந்த அந்தஸ்து எல்லாம் நினைவுக்கு வந்து விட்டன.
சீமாட்டியாகவோ குப்பைக்காரியாகவோ இல்லாமல், நடுத்தரப் பிழைப்புப் பிழைக்க இருவருக்கும் வசதிகிடைக்கவில்லை. ஊர் ஊராக அலைந்தது போலவே, தெருத்தெருவாக அலைந்தார் கள். ஜீவனாம்சத்துக்கு ஒரு தொழிலும் கிடைக்கவில்லை. யாரிடத்திலும் போய்ப் பேசுவதற்குக்கூட இயலாது போய்விட்டது, இந்த ஆந்திரப் பெண்களுக்கு சென்னைப் பட்டணம் எங்களுக்குத் தான் என்று தெலுங்கர்கள் தம் மகாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றி விட்டால், சென்னைவாசிகளுக்குத் தெலுங்கு புரிந்துவிட வேண்டுமென்று கட்டாயம் இல்லையே! அறியாத ஊர், அறியாத பாஷை, இன்னும் அறியாத பல விஷயங்கள் இந்த லட்சணத்தில் காட்சியளிக்கும் சென்னையில் ஏதோ இரண்டொரு தினங்கள் இருந்தார்கள், தாயும் மகளும்.
வெங்கட்டம்மாவின் தண்ணீர் கண்டறியாத புடவை புழுங்கி நாறியது. படுக்கை, போர்வை, புடவை இத்தனையுமாக இருந்து உதவிய அந்தக் கந்தல் துணியை இடுப்பில் சுற்றிக் கொள்வது முள்வேலியை எடுத்துச் சுற்றிக் கொள்வது போல இருந்தது. அழுக்கும் சீலைப் பேனும் நிறைந்த அந்தப் புடவை வெங்கட்டம் மாவின் உயிரோடு போட்டி போட்டிக்கொண்டு ஒவ்வொரு நாளும் அந்திம காலத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. பதினேழு வயதுப் பெண் இந்தக் கந்தல் துணியோடு தெரு வழியே நடமாடினாள். மற்றவர்களுடைய வறுமையின் அஸ்திவாரத்தில் சுகபோகம் துய்க்கும் இந்த உலகத்தில், ஒரு பெண்ணின் கந்தல் துணியைப் பார்த்து இரக்கப்படுகிறவர்கள் அபூர்வம். கந்தலின் வழியாக வெங்கட்டம்மாவின் சரீரக் கட்டைத்தான் கடைக் கண் போட்டு எட்டிப் பார்த்தது மனித சமூகம். நரசம்மா பார்த்தாள். தான் 'கிழவி யானதால் எப்படியும் அலையலாம். தான் கந்தல் துணியைக் கட்டிக் கொண்டாலும், ஊரார் தன்னைக் கூர்ந்து பார்க்க மாட்டார்கள் என்ற நினைப்புடன், தன்னுடைய புடவையை வெங்கட்டம் மாவுக்குக் கொடுத்து விட்டு, அவளுடைய கந்தலை, தான் வாங்கிச் சுற்றிக்கொண்டாள். இந்த மன ஆறுதலுடன் அன்றையப் பொழுது அஸ்தமித்தது. மறுநாள் சென்னையைவிட்டுப் புறப்படச் சித்தமாகி விட்ட னர்.
மறுநாள் பொழுது விடிந்ததும், வாழ்க்கையிலேயே முதல் முதலாகப் பிச்சை எடுத்துச் சாப்பிட்டதும், சந்தர்ப்ப வசமாக எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனைச் சாயங்காலத்துக்குள்ளாகக் கண்டு பிடித்ததும், அசாதாரணமான துணிச்சலுடன் டிக்கெட் வாங்காமல் ரயில் ஏறியதும், முதல் நாள் அவர்கள் படுக்கும்போது கற்பனை பண்ணிப் பார்க்காத காரியங்கள். டிக்கெட் பரிசோதகர் வந்து எட்டிப் பார்க்காமல் இருந்தவரையில் அதாவது விருதுநகர் ஸ்டேஷன் வரையில், நரசம்மாவும் மகளும் மனக் கலவரத்துட னாவது பிரயாணம் செய்ய முடிந்தது. விருதுநகரில் கலவரம் ஓய்ந்தது. டிக்கெட் பரிசோதகர் வந்து இருவரையும் கீழே இறக்கி விட்டார். மற்றப்படி அவர் பேசிய பேச்சுக்கள் - அவை தெலுங்கு நாட்டுக்காரிகளான இருவருக்கும் புரியவில்லை. அம்மட்டிற்கு க்ஷேமமாகப் போய்விட்டது.
விருதுநகரில் வேலை கிடைக்காவிட்டாலும் பிச்சை கிடைத்தது. ஆனால், பிச்சை எடுத்துப் பிழைக்கவேண்டும் என்று இவர்கள் புறப்படவில்லை. வேலை தேடிப் புறப்பட்டவர்கள் அல்லவா? ஆகவே,இன்னும் தெற்கே நோக்கிப்புறப்பட்டனர். தென் கோடியில் ஏதோ குபேரப்பட்டணம் இருப்பதாக அவர்களுடைய நினைப்பு. கோவில்பட்டிப் பிராந்தியத்தில் பஞ்ச நிலை என்ற செய்தியை அரைகுறையாகத் தெரிந்து கொள்ளக் கூட அவர் களுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. பத்திரிகை படிப்பவர் களுக்குக் கூட பாலஸ்தீன விவகாரம் தெரியுமே அல்லாமல், தாய் நாட்டில் பஞ்சம் என்ற விவரம் தெரியாதபோது. படிப்பு வாசனையற்றவர்களுக்கு எப்படித் தெரியும்?
சாலையின் வழியாக நடையைக் கட்டினார்கள். எதிரே நடந்து வரக் கூடிய மற்றொரு பட்டாளத்தையும் சந்தித்தார்கள். இந்த இரண்டு கோஷ்டியினருடைய பிரயாண லட்சியம் என்னவென்று, இரண்டு கோஷ்டியினருக்குமே தெரியாது. பரஸ்பரம் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளவில்லை. நடப்பவர்கள் தெற்கே போனார்கள்.
சாத்தூர்......
நரசம்மாவும் வெங்கட்டம்மாவும் இந்த ஊருக்கு வரும்போது பிற்பகல் இரண்டு மணி. வெயில் முதுகைச் சுட்டது. ஊரைச் சுற்றிலும் பயிர் பச்சையற்ற கரிசல் நிலத்தில் அனல் அலை அடித்துக் கொண்டிருந்தது. சப்பாத்தியும், பனை மரங்களும் கூட வாடித் துவளும்படியாக நீர்ச்சாரம் அற்றுப் போன கரிசல் பூமியில் கால் ஊன்றி நடப்பது நரக வேதனையாக இருந்தது. வயிற்றிலோ அதைவிட வெப்பம்; தீயாகச் சுட்டது பசி. நெஞ்சோ என்றோ எரிந்து சாம்பலாகி விட்டது.
பார் விருதுநகரும் சென்னையும், அவர்கள் பயந்து ஒதுக்கி விட்டுப் புறப்பட்ட அவர்களுடைய சொந்த ஊரும் சொர்க்கங்களாக மாறியது, அவர்கள் சாத்தூரைப் பார்த்த பிறகுதான். சாத்தூரில் பிச்சை போடுவார் இல்லை. குடிப்பதற்குத் தண்ணீர் எங்கே கிடைக்கும் என்று கூடத் தெரியவில்லை . தெருவிலே கிடந்த புழு அரித்த ஒரு சொத்தை வெள்ளரிக்காயை நரசம்மா கையில் எடுத்தாள்; அரை குறையாகக் கடிக்கப்பட்டிருந்த அந்த வெள்ளரிக்காயில் ஒட்டிய புழுதியை ஊதினாள். தின்போமா என்ற நினைப்பு கட்டுப்பாட்டை மீறி விட்டது. ஆனால், வெங்கட்டம்மாவின் கண்முன்பாக அதைத் தின்ன நரசம்மாவுக்கு வெட்கமாக இருந்தது. ஆகவே எடுத்த வெள்ளரிக்காயைத் தூர எறிந்து விட நினைத்தாள். அப்படி யானால், அதை ஏன் எடுத்தோம் என்ற காரணத்தைச் சொல்ல வேண்டுமே என்று தோன்றியது, நரசம்மாவுக்கு. ஆகவே, “இது என்ன காய் என்று தெரியவில்லையே!” என்று வெங்கட்டம்மா விடம் கேட்டாள். வெங்கட்டம்மாவுக்குக் கோபம் வந்து விட்டது. வயிற்றுப்பசிபிடுங்கித்தின்னும்போது, அம்மா விளையாடுகிறாளே என்று நினைத்தாள் அந்த அப்பாவிப் பெண்.
“சீ, சும்மா இரு,” என்று அம்மா மீது எரிந்து விழுந்தாள். எச்சில் வெள்ளரிக்காயைத் தின்பதைவிட வெங்கட்டம்மாவின் சுடு சொற்களைக் கேட்க மிகவும் அவமானமாக இருந்தது. தன்னுடைய அவமானத்தை மறைக்க ஒரு காரணத்தைச் சிருஷ்டித்துச் சொல்லும்போது, அதை உண்மை என்று உலகம் ஏற்றுக் கொண்டுவிட்டால் நிம்மதியாகப் போய்விடும். அந்தக் காரணத்தைப் பொய் என்று சொன்னாலும், அல்லது அதைக் காது கொடுத்துக் கேட்காவிட்டாலும் அவமானம்தான் கண் பலனாக இருக்கும்.
நரசம்மாவுக்கு மிகவும் வெட்கமாக இருந்தது; மகள் மீது கோபமும் வந்தது; பசிக் கொடுமையால் உலகத்தின் மீதேற்படும் கசப்புமுழுவதும் வெங்கட்டம்மாவின் மீது பாய்ந்தது.யாரையாவது ஒருவரை வெறுத்துச் சபிப்பது அந்த நிலையில் ஒரு பெரிய ஆறுதலாக இருந்தது. தான் அனுபவிக்கும் கொடுமைக்காகப் பழி வாங்க, நரசம்மாவுக்குக் கிடைத்த ஜீவன், பாவம், அவள் மகளேதான். மகளைக் கண்டபடி திட்டினாள். மகள் பிறந்த பிறகுதான் வீட்டில் துரதிர்ஷ்டமும் தரித்திரமும் தாண்டவமாடிய தாகவும் இப்போது இப்படி அலைக்கழிய நேரிட்டதாகவும் வசை கூறினாள். கடைசியில் அழுதாள். கையில் இருந்த வெள்ளரிக் காயைப் பார்த்ததும், அவளுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அதை அப்படியே தெருவில் வீசி எறிந்தாள். இருவரும் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டனர். ஊருக்குத் தென்புறம் இருக்கும் ஆற்றங்கரையில் ஒரு வண்டி நின்றது. அதன் கீழாக நிழலுக்கு ஒதுங்கினர்.
ஆற்றிலே தண்ணீர் இல்லை. சில இடங்களில் மணலில் ஆழமாகக் குழி தோண்டி, அதிலிருந்து ஊறும் தண்ணீரை ஹோட்டலில் வேலை செய்யும் பையன்கள் வாளியில் மொண்டு கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பக்கத்தில் ஓர் ஒற்றை மாட்டு வண்டி இருந்தது. அதிலுள்ள ஒரு பீப்பாயில் வாளியில் மொண்ட 62
தண்ணீரை ஊற்றி நிரப்பிக் கொண்டிருந்தார்கள். ஒரே ஓட்டமாக ஒடி,அந்தப்பையன்களிடம் கேட்டு, ஒரு வாளியில் தண்ணீர் வாங்கி இருவரும் குடித்தார்கள்.
பசியினால் காய்ந்து போன வயிற்றில் தண்ணீர் பட்டதும் வயிறு தகித்தது; 'சுள்' என்று நோவெடுத்தது. வெங்கட்டம்மா இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்து அமுக்கிக் கொண்டு நெளிந்தாள். 'அம்மா' என்று இரண்டொரு தடவை முனகினாள்.
அப்படியே சுடுமணலில் உட்கார்ந்து விட்டாள்.
நரசம்மா பயந்து போய்விட்டாள். மகளை ஆதரவோடு அணைத்துப் பிடித்துக் கொண்டு, “என்ன, என்ன செய்கிறது, வெங்கட்டம்மா?” என்று தெலுங்கில் கேட்டாள். ஹோட்டல் பையன்களுக்கு இந்தத் தெலுங்கு வார்த்தைகள் அரை குறையாகப் புரிந்தன. ஆகவே, அவர்களில் ஒருவன் தெலுங்கிலேயே, அவர்களுக்கு எந்த ஊர், என்ன சமாச்சாரம் என்று விசாரித்தான். ஆனால், இந்தத் தெலுங்கும் ஆந்திரவாசிகளுக்கு அரை குறையாகத் தான் புரிந்தது. நரசம்மா வெட்கம் இல்லாமல், “பசி தாங்காமல் இவள் துடிக்கிறாள்!” என்று சொல்லி விட்டாள்.
பையன்கள் பார்த்தார்கள். தாயாருக்குப் பசி என்றாலும் பேசாமல் போய் விடலாம்; பதினேழு வயதுக் கன்னிப் பெண்ணுக்குப் பசி என்றால், அதைக்கேட்டு விட்டுப் பேசாமல் போக, அவர்களுக்கு மனம் வரவில்லை. அடுத்த தடவை தண்ணீர் எடுக்க வரும்போது சாப்பாடு தருவதாக எல்லாப் பையன்களும் ஏகோபித்துச் சொன்னார்கள்.
நரசம்மாவுக்கு உயிர் வந்தது; கைத் தாங்கலாக மகளை அழைத்துக் கொண்டு, அந்த வண்டியின் நிழலுக்குப் பழையபடியும் வந்தாள். மகள் பேசாமல் மணலில் படுத்து விட்டாள்.
63
ஹோட்டல்காரப் பையன்கள் - உண்மையில் நல்ல வாலிபம் வந்த இளைஞர்கள் - விறுவிறு என்று வண்டியை ஓட்டிக்கொண்டு போனார்கள்.
- பிற்பகல் மூன்று மணிக்கு ஹோட்டல் பையன்கள் கொடுத்த பழைய இட்டிலிகள் ஐந்தாறையும், இரண்டொரு பஜ்ஜிகளையும் சாப்பிட்டார்கள். ஆனால் சூரியாஸ்தமனத்தின் போது பழைய படியும் பசி எடுத்தது. இனி யார் இந்த மாதிரி இருக்குமிடம் தேடிப் பசிக்கு அன்னம் கொண்டு வருவார்கள்? தவிரவும் இரவில் தங்குவதற்கும் இடம் வேண்டும். இந்தக் கவலைகள் வந்து பற்றின. வெங்கட்டம்மா பழையபடியும் மணலில் படுத்து விட்டாள். நரசம்மா உட்கார்ந்து கொண்டிருந்தாள். யாதொரு கவலையும் இல்லாமல் மகள் படுத்து விட்டதைக் கண்டு அவளுக்குக் கோபம் வந்தது. ஆனாலும் ஒன்றும் சொல்லவில்லை. அருமை பெருமை யாக வளர்த்த தன் ஒற்றைக்கொரு மகளை அன்று அனாவசியமாகக் கடிந்து கோபித்துக் கொண்டதை நினைத்துச் சஞ்சலப்பட்டது. இரண்டு கைகளாலும் உழைத்து ஜீவித்தது போய், இப்போது பிச்சை எடுத்தும் சாப்பிட்டாய் விட்டது. ஏனென்று கேட்பாரில்லாமல், ஊர் மந்தையில் மணலில்வந்து அனாதைகளாகக் கிடக்கிறார்கள். கணவன்பட்டினி கிடந்து செத்தான் என்று சொல்ல நாணி, காலராவினால் செத்தான் என்று பொய் சொல்லி, மானத்தைப் பேணிய நரசம்மா, நடுத் தெருவில் கையை நீட்டி யாசகம் வாங்கி விட்டாள்.பட்டணத்திலாவது தோட்டி வேலை கிடைக்கும் என்று சொன்னார்கள். சாத்தூரில் அந்த வேலை கிடைப்பதாகப் பிரஸ்தாபம் கூடக் கிடையாது. வயிற்றுப் பசி அதிகமாக அதிகமாக, 'பட்டணத்தில் தோட்டி வேலையாவது செய்தோமா? அனாவசிய மாக இவ்வளவு தூரம் வந்து விட்டோமே!' என்று தோன்றியது, நரசம்மாவுக்கு இந்த நினைப்பைத்தொடர்ந்து கண்ணீரும் வந்தது. கண்ணீர் பொங்கும் விழிகளால் மகளை ஏறிட்டுப் பார்த்தாள். 64
வெங்கட்டம்மா நிம்மதியாக மணலில் படுத்து உறங்கிக்கொண்டிருந் தாள்.அலைந்து அலைந்து அலுத்துப் போன சரீரம் தன்னை மறந்து ஓய்வெடுத்தது. வாயிலிருந்து எச்சில் ஒழுகி மணலை நனைத்தது. அவ்வளவு தன்னை மறந்த தூக்கம்.
மகள் தூங்குவதை நரசம்மா பார்த்தாள். அவ்வளவுதான், அரவமில்லாமல் எழுந்தாள். அவளைக் கொலை செய்யப் போவதானால், எவ்வளவு நிசப்தமும் ஜாக்கிரதையும் அவசியமோ, அவ்வளவு நிசப்தத்துடனும் ஜாக்கிரதையுடனும் எழுந்து சுற்று முற்றும் பார்த்தாள். மனிதப் பூண்டே தென்படவில்லை. அந்தி மயங்கி இருட்டத்தொடங்கி விட்டது. தூரத்தே ஊருக்குள் ஏற்படும் சந்தடிதான் கேட்டதே ஒழிய, பக்கத்தில் யாதொரு சப்தமும் நடமாட்டமும் இல்லை. கலைந்து விலகிக் கிடந்த வெங்கட்டம் மாவின் புடவையைக்கூட எடுத்துச் சரியாகப் போட நரசம்மாவுக்கு மனம் துணியவில்லை. அப்படிச்செய்தால் வெங்கட்டம்மா எழுந்து விடலாம் என்ற பயம். ஆகவே, ஒன்றும் செய்யாமல் பொத்திப்
பொத்தி நடந்து ஆற்றங்கரையை விட்டு ஊருக்குள் பிரவேசித்தாள். அக்கம் பக்கம் பார்க்காமல், யாரோ அறிந்தவர்களின் வீட்டை நோக்கி அவசர வேலையாகச் செல்லுவதைப் போல, அவ்வளவு வேகமாகச் சென்றாள். பழையபடியும் அந்தச் சொத்தை வெள்ளரிக்காய் கிடந்த இடத்துக்கே வந்து சேர்ந்தாள். வெள்ளரிக் காய் அங்குதான் கிடந்தது. ஆனால், இப்போது ஒரு வித்தியாசம் என்னவென்றால், யாரோ ஒருவரின் காலால் மிதிபட்டு, ஓர் ஓரத்தில் நசுங்கிப் போயிருந்தது. அதை எடுத்தாள். பக்கத்தில் யாரும் நிற்பார்களோ என்று வெட்கப் படவில்லை. அவள் இப்போது வெட்கப்படுவது வெங்கட்டம்மாவின் முன்னிலையில்தானே ஒழிய, உலகத்தின் முன்னிலையில் அல்ல; மனித லக்ஷணமே தன்னுடைய மகளின் உருவத்தில்தான் நரசம்மாவுக்குக் காட்சியளித்தது.
* 65
வெள்ளரிக்காயை ஊதினாள்; கடைசியில் தின்றே விட்டாள். ஒரு மட்டும் அவளுக்கு நிம்மதி பிறந்தது. ஏதோ இனி யுகக் கணக்கில் பசியில்லாமல் இருக்கலாம் போல அவளுக்குத் தோன்றியது. சந்தோஷத்துடன் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டாள்.
வாழ்க்கையின் 'எதார்த்த நிலையை ஏறக்குறைய எட்டிப் பிடித்தாய் விட்டது. பழைய கற்பனைகள், பழைய மயக்கங்கள், பழைய திருப்திகள், பழைய மான அவமானங்கள் எல்லாம் நொறுங்கிச் சிதறி விட்டன. ஆனால் பழைய கட்டுகளை அறுத் தாலும் புது உலகத்தில் அடி எடுத்து வைக்க நரசம்மாவுக்கு இன்னும் சக்தி வரவில்லை. நிரந்தரமாகத் தெருப் பொறுக்கியோ, எச்சிலையை வழித்தோ, பிச்சை எடுத்தோ சாப்பிடலாம் என்ற தீர்மானத்துக்கு அவள் வந்துவிட முடியவில்லை. இரண்டும் கெட்டுத்திரிசங்கு நிலையில் தவித்த அவளுக்குத் தன்னை வாட்டிய மான அவமானத்தைக் கொன்று தனக்கென்று சொந்தமாக ஒரு மான அவமானத்தை, ஒரு மரபை, ஓர் ஒழுங்கை ஏற்படுத்திக் கொள்ள ஆற்றல் பிறக்கவில்லை. அந்த நிலையைப் பெற ஏதேனும் ஒரு பற்றுக்கோடு, ஒரு கொழுகொம்பு, ஓர் ஆதரவு கிடைக்காதா என்று அவள் உள்ளம் மறுகியது. ஆனால், தன் உள்ளம் ஏன் மறுகுகிறது என்ற ரகசியம் நரசம்மாவுக்குத் தெரியவில்லை . பேசாமல் ஆற்றங்கரையை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தாள்.
அங்கே இருந்த ஒரு பெரிய ஹோட்டலைக் கடந்து சில அடிதூரம் வந்திருப்பாள். அவளைத் தொடர்ந்து ஒரு இளைஞன் வந்தான். மிகவும் வேகமாக வந்தான். பின்னும் இரண்டு கஜ தூரம்கூட நரசம்மா போயிருக்க மாட்டாள்; அதற்குள்ளாக அவளை முந்தி விட்டான் இளைஞன். இரவு நேரமானதால் விளக்கு வெளிச்சம் இருந்தும், அந்த இளைஞனையார் என்று அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை,"மத்தியானம் பலகாரம் கொண்டு
66
வந்து கொடுத்தது நான்தான்!” என்று தெரிவித்து விட்டு,“இராத்திரி என்ன சாப்பிடப் போகிறீர்கள்? எங்கே படுத்துத் தூங்குவீர்கள்?" என்றும் அவன் கேட்டான் அது நரசம்மாவுக்குத்தான் தெரியுமா?
தெருவிலே சினிமாவுக்குப் போகிறவர்கள், கடைகளுக்குச் சாமான் வாங்கப் போகிறவர்கள், நடுநடுவே பிரயாணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்கள், அத்துடன் சைக்கிள் மணி, பத்திரிகை விற்பவனின்குரல், ஹோட்டல்களில் போட்டி போட்டுக்கொண்டு அசுரத்தனமாகக் கத்தும் ரேடியோக்கள்-இந்த ஜன நெருக்கத் தினிடையில், இந்தச் சந்தடியினிடையில், இரண்டு மனிதக் குரல்கள்
அந்தரங்கமாகப் பேரம் பேசிக்கொண்டிருந்தன.
பாதி தூரம் கடந்தாய்விட்டது.பிறகுதான் அவள் இணங்கினாள். மறுநாள் விடிந்ததும் நரசம்மாவின் கையில் பத்து ரூபாய் இருக்கும்; ஒரு பழைய புடவையும் அதிகப்படியாக இருக்கும்; இன்று இரவு ஜாகைக்கு ஓர் அறையும் கிடைக்கும்.....வாலிபன் திரும்பிப் போய் விட்டான்.
வெங்கட்டம்மா அப்போதும் தூங்கிக் கொண்டுதான் இருந்தாள். வந்து நரசம்மா எழுப்பினாள். “எழுந்திரு, அங்கே ஓரிடத்தில் சாப்பாடு போடுகிறார்கள்!” என்று சொன்னாள். சிறிது நேரத்தில் வெங்கட்டம்மாவும் எழுந்தாள். சாப்பாடு வேண்டாம், இன்னும் கொஞ்சம் தூங்கினால் நல்லது என்றுதான் அப்போது அவளுக்குத் தோன்றியது. அடித்துப் போட்டது மாதிரி உடம்பு வலித்தது. ஆனால் தாயாருடன் சாப்பாட்டுக்கே கிளம்பி விட்டாள். இவர்கள் புறப்பட்ட இரண் டொரு நிமிஷங்களுக்குள்ளாக அதே வாலிபன் வந்தான். அவனுக்கு இப்போதே வெங்கட்டம்மாவின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போக ஆசை. ஆனாலும் தெரு வழியாக அப்படிப் போவது எப்படி என்ற பயம். அவன்
* 67
முன்னும் பின்னும் தெரிந்தவனைப் போல நரசம்மாவிடம் பேசியதைக் கண்டு வெங்கட்டம்மாவுக்கு ஒரே வியப்பு; அதைவிடப் பெரிய வியப்பு, அவன் தன் கையால் ஏதோ ஒன்றை நரசம்மாவிடம் கொடுத்ததும், நரசம்மா பத்திரமாக வாங்கிக்கொண்டதும். ஒன்றும் புரியவில்லை .
“என்னம்மா?” என்று கேட்டாள் வெங்கட்டம்மா
“ஒன்றுமில்லை ."
“என்ன ஒன்றுமில்லை? கையிலே என்னது?"
“ரூபாய்."
"ரூபாய்?"
"ஆமாம்.''
புரியாத வெங்கட்டம்மாவுக்கு விஷயத்தை விளக்குவதற்கு அது இடமில்லை. பேசாமல் அவளை அழைத்துக் கொண்டு மட்டும் போனாள். வாலிபன் சுபாவமாகத் தெருவோடு செல்லுகிறவனைப் போல, இவர்களுக்கு முன்பாக நடந்து சென்று கொண்டிருந்தான். இவர்களை அவன் எங்கோ அழைத்துக் கொண்டு போனான். ஒரே இருட்டாக இருந்த ஒரு சந்தின் வழியாகச் சென்று ஓர் இருட்டறையில் கொண்டு போய் இருவரையும் உட்கார வைத்தான். இரவு பத்து மணிக்கு மேல், ஹோட்டல் அடைத்த பிறகு, வருவதாக நரசம்மாவிடம் சொல்லி விட்டுப் போய்விட்டான்.
கொஞ்சம் கொஞ்சமாக விஷயத்தை விளக்கினாள் நரசம்மா. பத்து ரூபாய், ஒரு பழைய புடவை-இந்தச் சம்பத்து சாமான்யத்தில் கிடைக்குமா? இதைச் சம்பாதிக்க உலகத்தில் ஒவ்வொருவர் படும் கஷ்டங்கள் எத்தனை? ஆனால் இவ்வளவு சுலபமாக இரண்டு 68
வாலிபர்களிடம் ஒரு நாள் இரவுப் பொழுதுக்குள்ளாக இந்தப் பணத்தை வாங்கி விட முடியும் என்றால் அது எப்படிப்பட்ட
அதிர்ஷ்டம்? நரசம்மா தன் மகளிடம் ஒன்றா சொன்னாள்?
வெங்கட்டம்மா அழுது அழுது தொண்டை கட்டி விட்டது. வெளியே எழுந்து ஓடமுயன்றாள். ஆனால் தாய்ராக்ஷஸ பலத்தோடு கையைப்பற்றி வீட்டுக்குள் இழுத்துப் போட்டுக்கதவைத் தாழிட்டு விட்டாள்.
“மானம் போகுதடி! அழாதே! யாரும் கேட்டால் நம் கதி என்ன? கூட்டம் கூடி விட்டால் எப்படிப் பதில் சொல்லப் போகிறோம்? கிடைத்த பணத்தில் மண்ணைப் போட்டு விடாதே!” என்று காதோடு காதாகச் சொன்னாள். ஆனால் வெங்கட்டம்மா பழையபடியும் கதவைத் திறந்து கொண்டு ஓடவே முயற்சி செய்தாள்.
நரசம்மாவுக்குக் கோபம் வந்து விட்டது. பத்ரகாளி போல எழுந்தாள். வெங்கட்டம்மாவைக்கொன்றுவிடவேண்டும் என்றே தீர்மானித்து விட்டாள்.
“சண்டாளி! கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் செய்து விடுவாய் போலிருக்கிறதே! உன்னைக் கொன்றால்தான் எனக்கு மனசு ஆறும்!” என்று குரல்வளையைப் பிடித்து விட்டாள்.
வெங்கட்டம்மா அசுரத்தனமாகத் தாயின் கையைக் கிள்ளினாள். கிள்ளியதில் ரத்தமும் வந்து விட்டது. ஓங்கி அவள் முகத்தில் குத்தினாள். தலையை இங்கும் அங்கும் ஆட்டி நரசம்மாவின் கைப்பிடியிலிருந்து தப்பிக்க முயன்றாள். அது முடியவில்லை. அடக்க முடியாத கோபத்துடன் தாயின் மூக்கில் ஓங்கிக் குத்தினாள். அவளும் தன் கைப்பிடியை விட்டாள்; தொப்பென்று கீழே விழுந்தாள். அவள் மூக்கில் ரத்தம் ஒழுகியது. ஆனால் அது இருட்டில் இருவருக்குமே தெரியவில்லை. நரசம்மா
ஒன்றும் பேசவில்லை. குப்புறப்படுத்து விட்டாள்.வெங்கட்டம்மா நூறு தடவை 'அம்மா! அம்மா!' என்று அழைத்துப் பார்த்தாள். பதில் இல்லை. ஆனால் நரசம்மா பெருமூச்சு விடுவது தெளிவாகக் கேட்டது. பிறகு, தாயாரை இப்படிக் கொடுமைப் படுத்தியதை நினைத்து அழுதாள் வெங்கட்டம்மா.
"அம்மா! பத்து ரூபாய்க்குக் குறையாமல் கிடைக்குமா?" என்று அழுது கொண்டே கேட்டாள். படுத்துக் கிடந்த நரசம்மா எழுந்து மகளின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதாள்; இருவரும் அழுதார்கள். அழுகை ஒலி தெருவுக்குக் கேட்காதவாறு அவ்வளவு ரகசியமாக அழுதார்கள்.
ச இரவு பத்து மணிக்கு மேல் வருவதாகச் சொன்னவன் பத்து மணிக்கு முன்பாகவே வந்து விட்டான். அவன் நரசம்மாவிடம்
பேசிக் கொண்டபடியே தன் கூட்டாளியையும் அழைத்துக் கொண்டு வந்தான்.
திடீரென்று, “பசியாக இருக்கிறது!” என்று சொன்னாள் வெங்கட்டம்மா. தாயாரும்,"ஆம், பசிக்கு ஏதாவது முதலில் வாங்கி வாருங்கள்!” என்றாள். ஒருவன் மனமில்லாமல் போனான். போய்ச் சினிமா கொட்டகையை அடுத்திருந்த ஒரு கடையில் கொஞ்சம்
பலகாரம் வாங்கிக்கொண்டு வந்தான்.
பலகாரத்தைத் தாயும் மகளும் சாப்பிட்டார்கள்; சாப்பிட்ட பிறகு தாகத்திற்குத் தண்ணீர் இல்லை. அந்த நேரத்திற்குப் பிறகு தண்ணீர் கிடைத்தாலும், தண்ணீர் கொண்டு வரப் பாத்திரத்திற்கு எங்கே போவது? அதனால் தண்ணீர் விவகாரத்தைக் கைவிட வேண்டியதாயிற்று.
ஜன்னல் இல்லாத ஒரே இருட்டறை. இருட்டுதான் அந்தரங்கச் சூழலை உண்டாக்கிக்கொடுத்தது. 70
த தாயின் சம்மதம் பெற்று, தாயின் கண் முன்பாகவே, பசியின் காரணமாக, ஒரு கன்னிப் பெண் தன் கற்பை விற்கும் கோர நாடகம், அந்த இரவில், அந்தப் பரிதாபகரமான இரவில் நடந்தேறியது.
சூரியோதயத்துக்கு முன்பே அறையைக் காலி செய்துவிட்டுத் தாயும் மகளும் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து விட்டார்கள். அங்கே வந்து ஏதோ பலகாரத்தை வாங்கிச் சாப்பிட்டு விட்டு இருவரும் படுத்தார்கள். நரசம்மா பத்து மணிக்கெல்லாம் எழுந்து விட்டாள். வெங்கட்டம்மா பிற்பகல் இரண்டு மணிக்குத்தான் எழுந்தாள். தூங்கியதனால் உடம்புக்குக் கொஞ்சம் சுளுவாக இருந்தது. பழையபடியும் பலகாரம் வாங்கிச் சாப்பிடப் போனார்கள். அம்மா பத்து ரூபாய் நோட்டை எடுத்து, அதைப் பழையபடியும் மடியில் வைத்து விட்டு, ஒரு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக் கொடுத்து, கடையில் பலகாரம் வாங்கினாள். இதைப் பார்த்தாள் வெங்கட்டம்மா.பத்து ரூபாய் நோட்டும் சில்லரையும்.--நேற்று இதே நேரத்தில், கையில் தம்பிடி இல்லாமல், பட்டினி கிடந்ததற்கும், இப்போது பத்து ரூபாயும் சில்லரையும் இருப்பதற்கும் உள்ள வித்தியாசத்தைக் கண்டதும், வெங்கட்டம்மாவினால் நிலை கொள்ள முடியவில்லை. அம்மா கடையை விட்டு அப்பால் நகர்ந்ததும், அம்மாவிடமிருந்து அவ்வளவு பணத்தையும் வாங்கினாள். வலது கையிலிருந்து இடது கையில் பணத்தைப் போட்டாள். இடது கையிலிருந்து வலது கையில் போட்டாள். வியந்து வியந்து பார்த்த வண்ணம் பணத்தைக் கையில் போட்டுக் குலுக்கினாள். எவ்வளவு எளிதாக இவ்வளவு பெரிய தொகை கிடைத்து விட்டது என்பதை நினைக்கும்போது, அவளால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. உரக்கச் சிரித்தாள். விட்டு விட்டுப் பலமுறை சிரித்துவிட்டாள். அந்தச் சிரிப்பு எதற்கு என்று அவளுக்கே புரியவில்லை. பாண்டியனிடம் சிவபிரான் வாங்கிய பொற் பிரம்படியைப் போல், அவள் சிரித்த சிரிப்பு எங்கெல்லாம்
71
பிரதி பலிக்க இருந்ததோ, அவளுக்கே தெரியாது. அவள் மனிதன் காட்டிய ஒழுக்கத்தை நோக்கிச் சிரித்தாள்; ஒழுக்கக் கேட்டை நோக்கிச் சிரித்தாள். நாகரிகத்தையும் அநாகரிகத்தையும் பார்த்துச் சிரித்தாள். பணக்காரர்களை, ஏழைகளை, ஆண்களை, பெண் களை, பஞ்சத்தை இப்படி எத்தனையோ அடங்கிய உலகத்தையே நோக்கிச் சிரித்தாள். இது நரசம்மாவுக்குத் தெரியுமோ என்னவோ?
சிவன் சிரித்துத் திரிபுரத்தை எரித்தான்; இவள் சிரிப்பு என்ன செய்யப்போகிறதோ? அதை இப்போது யார்தான் அறிவார்கள்? அந்தக் காலத்துப்புத்திமான்களும் கூட ஏழை அழுத கண்ணீருக்குத் தான் வாளை உபமானமாகச் சொன்னார்களே ஒழிய, ஏழைசிரித்த சிரிப்பைப் பற்றிப் பிரஸ்தாபிக்கவில்லையே!