தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Wednesday, October 26, 2022

நாஞ்சில் நாடன் : சதுரங்க குதிரை

 https://nanjilnadan.com/2012/01/11

 “நான் அப்படியெல்லாம் நினைக்கலய்யா... தப்பா எடுத்துக்கிடாதேயும்”.
"தப்பென்னய்யா தப்பு? இல்லேன்னா நீ என்னத்துக்கு அவசரப் படணும்? எனக்குப் புரிஞ்சு போச்சு... நீயும் எல்லாரையும் போல நினைச்சுப்போட்டே...''
“அப்படி எல்லாம் இல்ல, ராவ்..."
“சரி, போகட்டும் விடு... இது என்ன இப்ப? நூறு பாத்தாச்சு... இதொண்ணும் எனக்குப் புதுசில்லே போ.... ஏதோ நம்ம முக விசேஷம். பாக்கறவங்களுக்கு அப்படித் தோணுது. யாராவது ஸ்நேகமாப் பேசினா நானும் சகஜமாப் பழகிடறேன். பெறகு இந்த மாதிரி அவஸ்தை ..."
நாராயணனுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது, அநாவசியமாக ஓர் நட்பைக் காயப்படுத்தி விட்டோம் என்று. நெடுநேரம்
தூங்காமல் புரண்டு கொண்டிருந்தான். அதிகாலை இரண்டே கால் மணியின் நிசப்தம் சூழ்ந்த இரவு. பவழ மல்லிகை மடல் விரிந்து காற்றில் கரைந்து கொண்டிருந்ததை நாசி உணர்ந்தது.
அதிகாலை ஐந்தரை மணிக்கு ராவ் மூக்கை இறுகப் பிடித்த போது திடுக்கிட்டு விழித்தான். சற்று நேரம் ஒன்றும் புரியவில்லை .
"என்ன திருதிருன்னு முழிக்கறே? எந்திரிச்சு பல்லு தேச்சுக்கிட்டு வா.... டிகாக்ஷன் ஆயிரும் இப்ப...''
ஏதோ காரணத்துக்காக அன்று விடுமுறை இருந்தது. குளித்து விட்டு வரும் போது கள்ளத் தொண்டையில் பாடிக் கொண்டு பூஜை முடித்து விட்டு வெளியே வந்தார். ராவுக்கு நன்றாக பாட வரும். முறையாகப் பயின்ற சங்கீதம். மேடையேறிக் கச்சேரி செய்ய வேண்டும் என்பது அவர் நீண்ட நாளைய ஆசை.
துவைத்த பனியன், ஜட்டியைக் காயப்போட்டு விட்டு வந்து உட்கார்ந்த போது டைம்ஸ் ஆஃப் இந்தியாவைத் தூக்கிப் போட்டார். மணி எட்டரை ஆகியிருந்தது. சற்று உள்வாங்கிய காலனி. ஆகையால் அதிக அரவமில்லை . 'கேலா வாலா' சத்தம் சற்றுத் தூரத்தில் கேட்டது.
காலிங் பெல் சத்தம். ராவ் துள்ளி எழுந்து போனார். சர்வ இயல்புடன் ஒரு பெண் நுழைந்து வந்தாள். இருபத்து மூன்று இருபத்து நாலு வயசிருக்கும். காலையில் குளித்த துலக்கமும் திருத்தமும். தோலின் சிவப்பும் முகத்தின் களையும் ராவின் குடும்பத்துக்குக் கடவுள் செய்த நன்றிக் கடன் போலும். இயல்பான கவர்ச்சியின் கூறுகள்....
ராவ் சொன்னார் - “ஃபிரண்டு... நாராயணன்... என்னய்யா அப்படிப் பார்க்கறீர்? என் அக்கா பொண்ணு தாரா... எல்.ஐ.சி-யிலே இருக்கறா...''
உள்ளே போன தாராவின் பின்னாலேயே ராவ் போனார். உள்ளே பேச்சுக் குரல் கேட்டது.
“அப்பா சொன்னா, ராத்திரி ரொம்ப நேரம் விளக்கு எரிஞ்சுக்கிட்டு இருந்ததுன்னு...''
“பேசிக்கிட்டு இருந்தோம். ஒரு வாய் காபி சாப்பிடறயா?”
“நான் கலந்துக்கறேன், மாமா... அம்மா கேக்கச் சொன்னா, காத்தால சாப்பிட வருவியான்னு... அவரையும் அழைச்சுண்டுவா..."
"வேணாம். அவன் சங்கோஜப் படுவான். நானே சமச்சுக்கறேன்..."
“நானே சமச்சு வச்சிரவா... லீவுதானே... அம்மாட்ட சொல்லீட்டு வந்திடறேன்...”
“என்னமோ செய்” என்று கூறிக்கொண்டு, ராவ் வெளியில் வந்தார்.
"பயப்படாதே, நாராயணா... தாரா நன்னாச் சமப்பா...''
ஒரு குடும்பத்தினருக்குள் இருந்த நேசமும் நெருக்கமும் சந்தோஷம் தருவதாக இருந்தது. குடும்பத்தின் முறுக்கமான கட்டு இந்த அனுசரணைதான் போலும். ராவின் இன்னொரு அக்காள் மகள் ஒரு கிறிஸ்துவனைப் பதிவுத் திருமணம் செய்து கொண்டதாகச் சொன்னது ஞாபகம் வந்தது. அதனுடனேயே ஒரு அல்பமான எண்ணம் துளிர் விட்டு, கொடி வீசிப் படர்ந்து, மொட்டரும்பி மலர்ந்து மணம் பரப்பி -
ராவ் துரத்தித் துரத்தி அடிப்பார் என்று நினைக்கையில் சிரிப்பு வந்தது.
புல் வெளியில் அமர்ந்திருந்த போது, திடீரெனக் கேட்டான், நாராயணன் -
“உங்க மருமக தாரா இப்ப எங்க இருக்கா?”
“என்னய்யா திடீர்னு தாரா ஞாபகம்? இப்ப பெரிய பூசணிக்காய் மாதிரி பெருத்துப் போயிட்டா... பாத்தா அடையாளம் தெரியாது. யூட்ரஸ் வேற எடுத்தாச்சு... பதினெட்டு வயசிலே அவளுக்கு ஒரு பொண்ணு இருக்க... பார்க்கத் தாராவை விட லட்சணம் போ... கட்டிக்கிறியா?"
ராவ் நுட்பமான ஒரு நரம்பைச் சுண்டியது போல... அலையலையாகச் சிரிப்பும் தோல்வியும் கலந்து முடைந்து பின்னியது போல ஒரு வெளிப்பாடு... சன்னமான ஒரு வேதனை...
ராவ் மறுநாளும் வந்திருந்தார். சினிமா பார்த்து விட்டுப் போரிவிலிக்குப் புறப்படுகையில் சொன்னார். “நாளைக்கு வர மாட்டேன்.... இனி சனிக்கிழமை பார்ப்போம்...."
சர்ச் கேட் ஸ்டேஷனில் போரிவிலி வண்டி பிடித்து, நாராயணன் மாட்டுங்கா ரோடில் இறங்கிக் கொண்டான். இனி சனிக்கிழமை வரை காத்திருக்க வேண்டும்.
ராவிடம் முதுமை ரேகை போட ஆரம்பித்து விட்டது. எதிலும் ஒரு சுவாரசியமின்மை . ஓய்வு பெற்ற பின் என்ன செய்வதென்ற திகைப்பு தலைகாட்ட ஆரம்பித்திருந்தது. காலையில் எழுந்து, குளித்து பூஜை செய்து, பேப்பர் படித்து, உண்டு, உறங்கி, கோயிலுக்குப் போய், டி.வி.யில் ஆங்கிலச் செய்தி
கேட்டு .... |
ஓய்வு நாளைத் திட்டமிடாத இந்திய நகர வாழ்க்கை . அறுபது முடிந்த சில மாதங்களில் மடிந்து போவது நல்லது போலும். மீதி வாழும் ஆண்டுகள் சோற்றுக்குச் செலவும் பூமிக்குப் பாரமும்தான்.
ராவின் சோர்வும் தனது சோர்வும் ஒன்றுதான் எனப்பட்டது. இதில் குடும்பம், பிள்ளை குட்டிகள். பொறுப்புக்களின் பங்கு என்ன? நாளடைவில் இது இன்னும் சீரழிந்து போகும். இன்னும் பதினைந்து ஆண்டுகள் பொறுத்து வரும் தனது வாழ்நாளைப் பற்றி யோசித்துப் பார்த்தான். ஒன்று, அதற்குள்ளாகவே தற்கொலை செய்து முடிந்து போயிருக்கலாம். அல்லது ஏதாவது ஒரு கோயில் திண்ணையில் சிறியதோர் பையைத் தலைக்கு வைத்து உறங்கிக் கொண்டிருக்கலாம். காவியும் தாடியும் ஒரு பாதுகாப்பான, தோட்டா துளைக்காத உள் அங்கி, சக மனிதனின் துன்பத்துக் கெல்லாம் நான் காரணம் இல்லை, எனக்குப் பொறுப்புக் கிடையாது, என் மீது குற்றம் சுமத்துவதோ, தூக்கில் ஏற்றுவதோ நடவாத காரியம்... என்னை விட்டுவிடு... சத்து, சித்து, ஆனந்தம்.
சனிக்கிழமை ராவ் கேட்டார். “எவ்வளவு ரொக்கம் வச்சிருக்கே?" திடீரென்று எதற்குக் கேட்கிறார் என்று புரியவில்லை. “எவ்வளவு வேணும்?"
"அட கைமாத்துக் கேக்கல்லய்யா! எவ்வளவு வச்சிருக்கேன்னு சொல்லு...''
“எதுக்கு? சொல்லும்...'' “சொல்லுய்யான்னா! ரொம்ப பிகு பண்றீரே....”
“கேஷா அதிகம் இருக்காது. பிக்ஸட் டெப்பாசிட்லே எம்பதினாயிரம் இருக்கு... ஷேர்லே சமார் எழுபதினாயிரம்
இன்வெஸ்ட்மென்ட் இருக்கும். இப்ப அதுக்கு மார்க்கெட் வேல்யூ ரெண்டரை அல்லது ரெண்டே முக்கால் பக்கம் இருக்கும்...''
"அப்ப மூணுக்குக் குறையாம எடுக்கலாம் இல்லியா?" - "ஆமா ..."
* என் போரிவிலி ஃப்ளாட்டை டிஸ்போஸ் பண்ணப் போறேன்..."
“பண்ணீ ட்டு ...'' “கல்கத்தாவிலே செட்டில் ஆகப் போறேன்..." *ஏன்? இது கெடந்துட்டுப் போகுது!”
“என்ன பிரயோஜனம்? எவ்வளவு நாளா பூட்டிப் போட்டு வைக்கறது? வெளீல விசாரிச்சேன். ஒரு பார்ட்டி மூணுக்குக் கேக்கறா... எனக்கு உன் ஞாபகம் வந்தது...''
"எனக்கு என்னத்துக்கு இப்பப் போயி வீடும் இன்னொண்ணும்..."
“ஏன்? மசானக் குழியிலே 'போய் உக்கார வயசாயாச்சா?".
“அதுக்கில்ல.... சாமியாருக்கு யானை பரிசு கொடுத்தது போல...”
“நடந்து போறதுக்குப் பதில் யானை மேல போறது. என்ன கெட்டுப் போச்சுங்கறேன்..."
“கொஞ்ச நாள்தானே.... இப்படியே ஒட்டீரலாம்னு..."
“எப்படி வேணும்னாலும் ஓட்டு. அதுக்கு சொந்தமா வீடு இருக்கப்படாதுன்னு இருக்கா... வேணும்னா கூட ரெண்டு பேயிங் கெஸ்ட் வச்சுக்கோ... ஊர்லே யாராம் ஒரு வயசான பொம்பளையைக் கொணாந்து சமச்சுப் போடச் சொல்லு...''
ராவ் இவ்வளவு தீர்மானமாக யோசித்து வைத்திருப்பார் என்று எண்ண ஆச்சரியமாக இருந்தது.
“இந்தா பாரு... கூடுதலா யோசிக்காதே... மூணு லெட்சம் ரெடி பண்ணு... டாக்குமென்டேஷன் கொஞ்சம் செலவாகும். எழுதிப் போட்டுட்டுப் போறேன்'.
"கொஞ்சம் யோசிக்கட்டும்..."
“ஒரு மண்ணாங்கட்டியும் யோசிக்கவேண்டாம். பணத்தை ரெடி பண்ணு ..."
குட்டினோவைக் கேட்டான். அவன் மிகுந்த உற்சாகமாக இருந்தான். பணம் பத்தவில்லை என்றால், தானும் கொஞ்சம் தருவதாகச் சொன்னான். அடுத்த வாரம் மும்முரமாக வேலை நடந்தது.
ராவ் சொன்னார் - “இன்னா பாரும், மொத்தப் பணமும் தயாராகலைன்னா அதுக்காக உசிரை விடணும்னு இல்லே. ரெடியானதைக் குடு. மீதியைப் பொறவு டி.டி. வாங்கி அனுப்பு....''
ராகவேந்திரராவ் பார்த்த நல்ல நாளில் பத்திரம் பதிவாகியது. அன்று நாராயணன் விடுமுறை எடுத்தான். அந்த முறையும் ராவ் கல்கத்தா மெயிலில் ஊருக்குப் புறப்பட்ட போது ஸ்டேஷன் போயிருந்தான். ரயில் கிளம்பிக் கையசைக்கையில் கண்கள் பொங்குவது போலிருந்தது.
அந்த மாத வாடகையைக் கொடுத்து விட்டு, அறையைக் காலி செய்து, போரிவிலி ஃப்ளாட்டுக்கு வந்தான். சொந்தச் சாமான்களை இரண்டு நடையாக லோகல் ரயிலிலேயே கொண்டு வந்து சேர்த்தான். வீட்டைத் தூத்து வாரித் துப்புரவு செய்து, துடைத்துக் கழுவ ஒரு நாளாயிற்று. இரண்டு சீலிங் ஃபேன்கள். ட்யூப் லைட்டுகள் எதுவும் வேண்டாம் என்று சொல்லி விட்டார் ராவ். ஐந்நூறு சதுர அடிகள் கொண்ட ஒன் ரூம் கிச்சன் வீடு சாமான்கள் எதுவுமின்றி 'ஹோ' எனக் கிடந்தது.
நாடக ரிஹர்சல் நடத்தத் தோதான இடம். ஒரு காலத்தில் 'ஆதே அதுரே' யும், 'ஏவம் இந்திரஜித்'தும் 'ஜுலுஸ் 'ம் பார்த்த மோகத்தில், தமிழில் நவீன நாடகங்கள் நடத்த அலைந்து திரிந்தது ஞாபகம் வந்தது. திரைக்குப் பின்னாலான வேலைகள் பல நாராயணன் மேற்பார்வையில். ரிஹர்சல் நடத்த இடம் கேட்டு அலைந்ததில் தமிழ் சங்கத் தலைவர் அனுமதி மறுத்து விட்டார். அவர் எழுதி இயக்கும் 'பாசச் சுவர்' நாடக ரிஹர்சல் அங்கு நடக்கப் போவதாகச் சொன்னார். இரவு ஏழு மணிக்கு மேல் ஆந்திர மகாசபாவில் இடம் தந்தார்கள். ஸ்டேட் பேங்க் ஆபீசர்ஸ் மெஸ்ஸில் கேட்டரிங் ஆபீசராக இருந்த கணேஷ் ஒவ்வொரு நாளும் சிற்றுண்டிக்காக நாற்பது வடை அல்லது போண்டா அல்லது சமோசா மடக்கிக் கொண்டு வருவார். இந்தியன்
ஏர்ஃபோர்சில் கிளார்க்காக இருந்த தாணப்பன் ஜெராக்ஸ் வேலை எல்லாம் இலவசமாகச் செய்து கொடுத்தார்.
நட்பு கொடி கட்டிப் பறந்த காலம். நேரம் போனது தெரியாது. இரவு பன்னிரண்டரை மணிக்கு மேல் மாட்டுங்கா போஸ்ட் ஆபீசின் முன்புறம் சாலையோர இட்லிக் கடையின் முன்னால் பெஞ்சில் அமர்ந்து ஊத்தப்பம் தின்றது. இரண்டாவது ஆட்டம் சினிமா முடிந்து பாவ்பாஜி, வடாபாவ், பாவ் புர்ஜி தின்று தண்ணீர் குடித்து விட்டு மேலும் இரண்டு கிலோ மீட்டர் நடந்த நாட்கள்.
இப்போது யாரை எங்கு போய்த் தேடுவது? ராவ் நிறையப் புத்திமதிகள் சொல்லிவிட்டுப் போனார்.
“ஒரு கட்டில் வாங்கு... டேபிள், செயர் வாங்கு... கேஸுக்கு அப்ளை செய்... ஒரு குக்கர், சில பாத்திரங்கள் வாங்கு. சாயங்காலம் ஒரு வேளை சமச்சுச் சாப்பிடு... சிஸ்டர் வீட்ல சொல்லீட்டுப் போறேன், ஏதோம் உதவி வேணும்னா சங்கோஜப் படாமக் கேட்டுக்கோ ..."
வீட்டுச் சாவி தருகிற அன்று, ராவ், அவர் அக்கா வீட்டுக்குக் கூட்டிப்போய் மேலும் சில பரிந்துரைகள் செய்தார். ஒரு சாவியைக் கழற்றி, ராவின் அக்கா வீட்டில் கொடுத்தான் நாராயணன்.
“இது பேருக்குத்தான் என் வீடு... பசங்களுக்குப் படிக்க படுக்க, எதுக்கானாலும் நீங்க யூஸ் பண்ணிக்கிடுங்கோ... நான் காலம்பற போனா ராத்திரி படுக்கத்தான் வருவேன்”.
ராவிடம் சொன்னான் - - “இது என்னைக்கு ஆனாலும் உம்ம வீடுதான். எப்பத் திரும்ப வேணும்னாலும் சொல்லுங்கோ..."
“போமய்யா... நீர் பெரிசாத் தத்துவம் பேசாண்டாம்”.
மாட்டுங்காவில் இருந்து வந்த பிறகு, சிறிது சிரமமாக இருந்தது. ஒரு பிரம்மசாரிக்கு மாட்டுங்கா போலத் தோதான இடம் கிடையாது. இது முற்றிலும் தனியான ரெசிடென்ஷியல் காலனி. காலையில் சாயா குடிக்க அரை கிலோ மீட்டர் போக வேண்டும். அங்கு போல, நாற்சந்தியில் நின்று கொண்டே சில மணி நேரம் கொல்ல முடியாது.
இரவு பத்து மணிக்கு மேல், போர்வை ஒன்றை விரித்துப் படுத்த போது, வாழ்க்கை சிமெண்ட் தரை போலத் தட்டையாக, கடினமாக, செயற்கைக் குளிர்ச்சியுடன் இருப்பதாகப் பட்டது. ஒருவேளை ராவின் சில யோசனைகள் நேரம் கொல்ல ஏதுவாக இருக்கக்கூடும்.
ராவின் அக்கா வீட்டில் உபயோகம் அற்றுக் கிடந்த ஸ்டவ் ஒன்று தந்தார்கள். அவர்கள் ரேஷன் கார்டில் மண்ணெண்ணெய் வாங்கிக் கொள்ளச் சொன்னார்கள்.
காலையில் ஆங்கிலத் தினசரியுடன் இப்போது கறுப்புக் காப்பி சுவையாக இருந்தது.
ஊருக்கு எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். பம்பாயில் சொந்தமாக வீடு வாங்கி விட்டான் என்று பெரிய மாமா ஒருவேளை பெருமைப் படலாம். கல்யாணி கட்டாயம் சந்தோஷப் படுவாள். பிள்ளைகளுக்கு விடுமுறை விடும்போது பம்பாய்க்கு வரச் சொல்லலாம். தங்குவதற்கு இடமுண்டு என்ற உறுதியுண்டு இப்போது.
கல்யாணி எழுதிய கடிதத்துக்கு தான் இன்னும் பதில் எழுதவில்லை என்பது ஞாபகம் வந்தது.
என்ன எழுதுவது என்று தெரியவில்லை . என்ன எழுதுவது என்று தெரியவில்லை என்பதன் அர்த்தம் என்ன? வேண்டாம் என்று எழுதத் துணிவில்லை என்பதுதானே! வேண்டாம் என்று எழுதத் துணிவில்லை என்றால், மனம் வேண்டும் என்ற திசையில் யோசிக்கிறது என்பதுதானே! முடிவெடுக்கத் தைரியம் போதவில்லை , கூச்சம் கொள்கிறது என்பதுதானே!... மனம் சலனம் கொள்கிறது என்பதுதானே! குழப்பம் அதிகரிக்கும் போலத் தோன்றியது நாராயணனுக்கு.