தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Tuesday, September 10, 2013

மைத்ரேயி , பெண் வேடமிட்ட பெண் - ஸில்வியா (எம்.டி.முத்துக்குமாரசாமி)


மைத்ரேயி - ஸில்வியா

பொய்சொல்லியாகிய நீ மைத்ரேயியை உன் கட்டுரையில் சாகக்கிடத்தியபோது மழை பிடித்துக்கொண்டது. சித்தப்பிரமையின்பாற்பட்ட அந்த மழை விடாமல் பெய்துகொண்டே இருந்ததை  ஏதேனும் சங்கேத மொழியில் பதிவு செய்ய நீ முடிவு செய்தாய். அரசாங்க அதிகாரிகள், நாய்கள், குடும்பிகள், மந்திரவாதிகள், தேசங்கள், கொரில்லாக்குரங்குகள், பெண்கள், இலக்கிய ஆசிரியர்கள், காமுகர்கள், குற்றவாளிகள், பாம்புகள், தத்துவ அறிஞர்கள், பேய்கள், ஆயுத வியாபாரிகள், அரசியல்வாதிகள், செருப்பு நக்கிகள், உளவியல் அறிஞர்கள், ஆகியோர் விளையாடும் விளையாட்டுக்களைப் பற்றிய கட்டுரை எழுதுமாறு நீ பணிக்கப்பட்டிருந்தாய். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் ஒரே காரணத்தினாலேயே எந்த நேரமும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படலாம் என்ற சமூகச் சூழலில், வரலாற்றின் அவல காலகட்டத்தில், உmdm6 ன் மனநோய் மருத்துவன் அரசாங்க முத்திரை பதித்த பழுப்பு நிற உறையினுள் கட்டுரை எழுதுவதற்கான ஆணையைக்கொண்டு வந்தபோது உன் அறை ஜன்னலில் உட்கார்ந்து மழை வருகிறதா என்று வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்த நீ பயந்து போனாய். உன் நரம்புகளனைத்தும் மின்சாரம் தாக்கியவை போலத் துடிக்க சாவு மின் தூசுகளாய் உன் கண் முன்னால் ஓடி மறைந்தது. காற்றில் முளைத்த பொய்கள் வாழ்வின் ஆதாரங்களாய் உன் நாவைத் தழுவிக்கொண்டன. வார்த்தைகள் வீசி மின் கம்பிக்கூண்டுகளைத் தயாரித்து அதனுள்ளே கவலையின்றி வாழலாம் என்று நீ அந்தக் கணத்தில் அறிந்துகொண்டாய். அதே கணத்தில்தான் மழைக்கான அறிகுறிகளும் தென்படலாயின. நாகமும் கட்டுவிரியனும் விஷம் கக்குவதை மறந்து, வால் நுனிகளில் நின்று, தாபப்பெருமூச்சுக்களுடன் தங்கள் வழவழத்த அடிப்பாகங்கள் தழையத் தழையக் கூடும்போது அப்பாம்புகளின் கண்களில் பட்டுத் தெறித்த  பௌர்ணமி நிலவின் ஒளிக்கிரணங்களாலான உடலோடு முழுப்பெண்ணாய் மைத்ரேயி உன் கண்களின் முன் தோன்றியதும் அக்கணத்தில்தான். உன் கவிதை வரிகளாலான ஏழு பால்வீதிகளுக்கு அப்பால் இருந்து ஒளித்துகளாய் அரை நொடியில் வந்து நீண்ட பொன்னிறக் கூந்தல் காட்டுக்குதிரையின் வெல்வெட்டுத் தினவுடன் திகழ்ந்த பிசிறில்லாத வட்ட வடிவப் பிருஷ்டங்களின் மேலும், பின்னந்தொடைகளின் மேலும் அளைய அளைய, நீல நிற மணற்பரப்பில் அஸ்தமனச் சூரியனை நோக்கி நிர்வாணமாய் சென்றுகொண்டிருந்ததையும் நீ அப்போதுதான் பார்த்தாய். உன் நாபிக்குக் கீழிருந்து தோண்டி எடுத்த எழுத்துக்களை நாவில் கூட்டி “மைத்ரேயீ”, “மைத்ரேயீ” என்று அலறி மயங்கிச் சரிந்தாய். நீ மீண்டும் விழித்தது உன் விளையாட்டு பற்றிய கட்டுரையின் மையப் பகுதியில்தான். அப்போது மைத்ரேயி உன் தாபக் கூச்சலை கேட்டவள் போலவும் கேட்காதவள் போலவும் நின்று, கால்களை அகட்டித் தலையை இடது கால் பெருவிரலை நோக்கிக் கவிழ்த்து கால்களின் இடைவெளியூடே உன்னைப் பார்த்தாள். அஸ்தமனச் சூரிய கிரணங்கள் அவள் யோனியில் பட்டு செந்நிறமாய்ப் பிரகாசித்ததில் அவள் முகம் மறைந்துபோக அவள் முகம் தெரியாத விரகம் தாளமுடியாதவனாய் நாய்களின் விளையாட்டு பற்றிய பகுதியை எழுத ஆரம்பித்தாய். வெறி நாய்களைப் பற்றியும் சொறி நாய்களைப் பற்றியும் விவரித்தபோது உன் மொழி தானாகவே உலகக்கொலை ஆயுத வியாபாரிகளின் உடல்களையும் உருவங்களையும் பற்றி பேச ஆரம்பிக்க அருவெறுப்பு தாளமாட்டாமல் ஆசுவாசம் தேடி, அமைதியையும் அறத்தையும் உலகுக்கு மீண்டும் கொண்டுவரப்போகின்ற மைத்ரேய புத்தனைப் பற்றிச் சிந்தித்தாய். மழைக்கு முந்தைய குளிர்காற்று வீசத் துவங்கும் வரை மைத்ரேய புத்தன் பெண்ணாய் இருக்கக்கூடுமென்ற யூகம் கூட உனக்கு இல்லை. முதலில் மழைக்கு முன் வீசுகின்ற இந்த குளிர் காற்றே உனக்குப் புதிது. நீ பிறந்து வளர்ந்த பிரதேசத்தில் மழை ஏழு கோடி வருடங்களுக்கு ஒரு முறையே பெய்யும். அப்படிப் பெய்வதற்கு முன் பாதிப் புணர்ச்சியில் பிரிக்கப்பட்ட உடல்களாய் பூமி வெக்கையை அள்ளி வீசி மனிதர்களின் மூத்திரத்தைக் கடுக்கச் செய்து வியர்வையாய் வழிவதை அனல் நாக்கினால் நக்கும். பொய்க்கின்ற மழையோ தெருவோரங்களில் காய்ந்து கிடக்கும் மலத்தினை கரைத்து எழுகின்ற நாற்றத்தோடு நாற்றமாய் சுவாசப்பைகளில் நிறைத்துவிடும். போன தடவை உனக்கு மின் அதிர்ச்சி கொடுக்கப்பட்டபோது உன் சொந்த ஊரில் எல்லோரும் மல நாற்றம் அனுபவித்தார்கள்.
இங்கே மழை வித்தியாசமானதுதான். வைத்தியசாலை மனோகரமான இடத்திலமைய வேண்டும் என்பதற்காக இங்கே மைத்திருக்கிறார்கள் போலும். சிறு நீல மலர் ஒன்றைத் தோட்டத்தில் உன்னிப்பாய் நீ பார்த்து நிற்கையில் அதன் நிறம் ஆகாசமாய் வெளியாய் மணலாய் விகசிக்க, குளிர் காற்று முலை முலையாய் வீசியது. கோடிக்கணக்கான பால் ததும்பும் முலைக்காம்புகள் உன் உடல் முழுவதும் ஈரப்பத வெம்மையுடன் உராய நீ மழைக்காக ஆயத்தமானாய். பின்னர் தோட்டத்திலிருந்து உன்னை உள்ளே இழுத்துச் செல்ல உன் எலும்பின் குருத்துக்கள் பொசுங்குமாறு சூடுபோட வேண்டியிருந்தது. ஒரு பெருங்கூட்டமே உன்னை இழுத்துச் சென்று அறையில் அடைத்தது. உன் சதை பொசுங்கிய நாற்றம் விளைவித்த பிரம்மையில் பெய்யாத மழையின் கூரைச் சத்தம் கேட்டு உன் வலது கரத்தில் நரம்பு வெடித்து ரத்தம் வழிந்தது.  உன் வலி ஆற்ற மைத்ரேயி வந்தாள்.  உன் அறையின் கூரை மேல் நோக்கி திறக்க உலோக மத்தளத்தில் வாசிக்கப்பட்ட கொடூர இசையாய்  வார்த்தைகள் உன் கட்டுரையில் கொட்டியதும் அப்போதுதான் போலும். வார்த்தைகளைக் கூட்டுவதற்கும், ஊதிப்பெருக்குவதற்கும், அச்சுக்கோர்ப்பதற்கும், காற்றில் ஓதுவதற்கும், விளையாடுவதற்கும் இவ்வளவு பெரிய தண்டனையைத் தருவார்கள் என்று யாரும் உனக்குச் சொல்லவில்லை. அப்படியே தெரிந்திருந்தாலும் வலியை வார்த்தைகளில் முழுங்குவதைத் தவிர வேறெந்த உபாயமும் உனக்குத் தெரியாதே  தெரியாதே மைத்ரேயி தெரியாதே. ஒழுங்கமைக்கப்பட்ட கட்டுரைக்குள்ளாக ஓடும் ஒழுங்கமைக்க இயலாத வலியின் கவிதைக் கீற்று உன் அந்தரங்கமல்லவா? அதை எப்படி வெளிச் சொல்வாய்? வலி ஆற்ற வந்தவள் இசைச் சொற்களாய் உன் நரம்பு மண்டலம் முழுவதும் வியாபிக்க அவளின் ஒற்றை விரலசைவில் உன் உடல் முழுவதும் அதிர்ந்தது.
உன் சமிக்ஞைகளுள் சிறந்தவற்றை எல்லாம் உன் லிங்க முனையில் கூட்டி ஆறாத தவிப்புடன் காத்து நின்றாய். காத்து நிற்க வைக்கப்பட்டாய். பரிதவிப்பின் வெறி குத்திட்டு நின்ற லிங்க முனையில் கனன்றபோது கோடிக்கணக்கான வார்த்தைகள் தங்களின் வலி விவரிக்க இயலாத நபும்சகம் உணர்ந்து உலகிலுள்ள அத்தனை நூலகங்களிலிருந்தும் வான் நோக்கி கிளம்பி, புவி ஈர்ப்பு மறந்து, தங்களுக்குள் சண்டையிட்டு ரத்த களறியாக்கி, பிரபஞ்சத்தின் இருள் மூலை தேடி இயற்கை எய்தின. கோடிக்கணக்கான மக்களின் நாவசைவுகளுக்கும் அதே கதிதான். மொழிகளற்று விழித்த பொருளுலகு எங்கும் வியாபித்தபோது உனக்கு மிஞ்சியது உன் லிங்க முனை வீர்யம் மட்டுமே. அப்போது இப்போது எப்போது என்ற பேதம் மறந்தாய். எல்லாம் முன் கூட்டியே சங்கல்பித்து ஒரே கணத்தில் சங்கமமாக கணமே யுகமாய் நீளுவதாய் இருந்தது. எல்லாம் அப்படியே இருந்தது எல்லாம் அப்படியே இருந்தது எல்லாம் அப்படியே இருந்தது எல்லாம் அப்படியே இருந்தது எல்லாம் அப்படியே இருந்தது எல்லாம் அப்படியே இருந்தது எல்லாமே அப்படியே இருந்தது எல்லாம் அப்படியே இருந்தது எல்லாம் அப்படியே இருந்தது. என் மொழியை மட்டுமாவது எனக்குக் கொடுத்துவிடேன் என் மொழியை மட்டுமாவது எனக்குக் கொடுத்துவிடேன் என்று அரற்றினாய்.  உயிரின் ஊற்று விறைப்பில் அடங்கி நிற்க முடியாத தாபத்தில் மைத்ரேயியின் யோனிக்கசிவின் மணம் அறைக்காற்றில் பாறாங்கல்லாய் உறைந்து நிற்பதாய் பிரம்மை கொண்டாய். உன் மனத்தின் அந்தகார இருள் சுவாச இழைகளாய் வெளிப்பட்டு கல்லில் பட்டு மோதி கிளப்பிய வெப்பத்தில் அதிகாரிகளின் விரைகள் வெந்து சாம்பலாயின. எஞ்சிய வெப்பம் மேகங்களின் மோதல்களில் மின்னல்களாயிற்று. காலபேதமற்ற சிந்தனையின் துகள்கள் உன்னிலிருந்து சுருள் சுருளாய் சிதைவுற்ற சுருள்களாய் பல திக்குகள் நோக்கியும் வெளிப்பட உன் கட்டுரையில் நீ தடுக்கி விழுந்தாய். சரிதான் சரிதான் உன் கட்டுரையில் நீ தடுக்கி விழுந்தாய். கிடைத்தது வாய்ப்பு என்று உன்னை இழுத்துச் சென்றார்கள் தற்கொலையா கொலையா என்ற சூழலில் கொலையைத் தேர்ந்தெடுக்கக்கூடிய விளையாட்டு வீரன் நீ இல்லையா இல்லையா என்று கேட்டுக்கொண்டே உன்னை இழுத்துச் சென்றார்கள். துன்புறுத்துவதில் இன்பமா துன்புறுவதில் இன்பமா எங்கே சொல் சொல் பார்க்கலாம் என்றார்கள். இரண்டுமற்றது என் மொழி இரண்டுமற்றது என் ஜீவிதம் என்று நீ கதறக் கதற உன்னை இழுத்துச் சென்றார்கள். அவர்களுக்கு பிறரின் மூளை வழி எழுதும் தாந்தரீகம் இயல்பாகக் கைவந்தது. தங்களின் இருள் மயக்கச் சுருள் சிதைவுப் பாதைகளில் சதைத் திசுக்கள் பாகாய் உருகிவழியக் காணாமல் போனவர் பலர் என கலகலத்து தங்களுக்குள் கதை பேசினர். உலகின் நிர்மாணங்களை உருவாக்கியவர்களின் முகங்கள் அவர்களுக்கு இருந்தன. கட்டுரையில் தடுக்கி விழுந்தாயா என்று நகைத்தார்கள். மனித உயிரின் பெருக்கத்தை அறுதி செய்ய வந்த கடைசீக் கொழுந்தா நீ என்று பற்களை நறநறத்தார்கள். பாவாடையைத் தொடைகளுக்கு மேல் ஏற்றிவிட்டுக் கொண்டு ஓடிய கார்மெனிடம் உன் சமிக்ஞைகள் பத்திரமாய் இருப்பதாய் நீ சமாதானமாய் இருந்தாய். யாவரும் சமாதானமாயிருங்கள் என மெல்லிய குரலில் சொல்லிப்பார்த்தாய். கட்டுரையில் நீ சமாளித்து நின்ற வரி உன்னை இந்த மனநோய் மருத்துவமனையில் கண்டது.
இந்த மருத்துவமனையோ, மாற்றங்களற்ற தமிழ்ச் சமூகமோ, நண்பர்களற்ற கொடூரத் தனிமையோ, பாலுறவு மறுக்கப்பட்ட இறுக்கமான சூழ்நிலையோ உன்னைத் தற்கொலைக்கோ கொலைக்கோ தூண்டமுடியாது என்பதில் உறுதியானவனாய் இருந்தாய். உன் உடலின் தளர்ச்சியில் மேற்சொன்னவற்றின் சுவடுகள் பதியவிடாத அறமொழியை கண்டுபிடிப்பாய். அந்த அறியப்படாத மொழித் தளமல்லவா மைத்ரேயி? மொழியுடனும் மொழியற்றும் உள்ள புள்ளியிலிருந்து நீளும் தளத்தில் மொழி பற்றிய மொழி பற்றிய மொழி பற்றிய மொழி பற்றிய மொழி பற்றிய மொழி பற்றிய மொழியில் எழுதப்பட்ட காதல் யதார்த்தத்தின் சிடுக்குகளை உடைக்க எழும்பும் அழகின் உண்மை உயிரை எப்போதும் எப்படியும் காப்பாற்றும். கார்மெனைப் போல தூய்மையற்றவள் மைத்ரேயி என்றார்கள். கார்மெனைப் போல கற்பனையானவள் மைத்ரேயி என்றார்கள். கார்மெனைப் போல மைத்ரேயியையும் நீ கடைசியில் கொல்ல நேரிடும் என்றார்கள். மைத்ரேயி ஒரு அருவமே என்று சூளுரைத்தார்கள்.  அப்போது நீ மைத்ரேயியின் இதழ்களில் உன் நாவினால் துழாவி முத்தமிட்டாய். அவள் உன் நெற்றியில் விழுந்த சுருள் முடிகளை நுனிவிரல்களினால் நீக்கி டான் ஜுவான் டான் ஜுவான் என்று தாபத்துடன் முணு முணுக்க உன் நகம் அவள் நாபியில் மெலிதாகக் கீறியதால் வெறிகொண்டு மேலெழும்பி ஆக்கிரமித்தாள். மொழி பற்றிய மொழி விளையாட்டாய் உன் கட்டுரை இருக்கவே அவர்கள் குழம்பிப்போனார்கள். குறைந்தபட்ச முயற்சியிலேயே பலரின் அஸ்திவாரங்கள் விழுந்துவிடுவதைக் கண்டு நீ நகைத்தாய். மண்ணில் தூறல்கள் விழ ஆரம்பித்தன. பூக்காத மரங்களெல்லாம் காலம் தப்பிப் பூத்தன. மழை மழை மழை என மனம் கெக்கலித்தது. கட்டுரையின் பாதியில், எல்லோரையும் கூட்டிக்கொண்டு வந்து மழை பெய்வதைக் காட்டினாய். கட்டுரை திசை திரும்பிவிட்டதாய் முணுமுணுத்தார்கள். கற்பனைக்கும் யதார்த்தத்திற்குமுள்ள வேறுபாட்டினை நீ மறந்துவிட்டதாய் மனு எழுதி அரசாங்கத்திற்குப் போட்டார்கள். அரசாங்கம் தன் சீடர்களுக்கெல்லாம் தன் மொழியில் ஆணைகள் பிறப்பித்தது. சீடர்கள் அனைவரும் உனக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிக்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் இல்லையென்றால் உன்னைப்போன்ற மனம் பேதலித்த உயிர்களின் பெருக்கத்தை உறுதி செய்து விடுவாயென்றும் உயிர் பெருக்க இயலாத பிற இனத்தவர்களுக்கு அது பெரும் கேடென்றும் கோட்பாடுகள் இயற்றினர். மால்தூசிற்கு சிலைகள் வடிக்க அரசாங்கம் ஆனையிட்டது. அந்த அரசாங்கத்திற்கு வெளி நாடுகளின் பண உதவி ஏராளமாய் கிடைத்தது.  சுவருக்குச் சுவர் ஆபாச முக்கோணங்கள் வரையப்பட்டன. ஏழைகள், குற்றவாளிகள், மனநோயாளிகள் ஆகியோர் இனப்பெருக்கத்திற்கு லாயக்கற்றவர்கள் என அரசாங்கம் அறிவித்தது. அந்நிய செலாவணி பெற வேறு வழியில்லை என தொலைக்காட்சியில் வல்லுநர்கள் வாதிட்டனர். கருத்தடை சாதனங்கள் பற்றிய பாசுரங்கள் இயற்றப்பட்டன.
காமசூத்திரங்களுக்குப் புதிய விளக்கவுரைகள் எழுதப்பட்டு பத்திரிக்கை விளம்பரங்கள் வெளிவந்தன. அரசாங்கத்தோடு ஒத்துழைத்த புரட்சிகரக் குழுக்கள் பிம்பங்களை மணந்து சுய இன்பம் காண்பதே அதீத புரட்சி என்று எடுத்தியபின. வரலாற்றில் ஓரினப்புணர்ச்சியாளர்களும், பிரம்மச்சாரிகளும் மட்டுமே ஆட்சியாளர்களாயும் மதத்தலைவர்களாயும் இருந்து வந்திருக்கிறார்கள் என்ற உண்மையை மறைத்து அவர்கள் சமூகத்தின் விளிம்புகளிலுள்ளோர் எனப் பொய் சொல்ல ஆரம்பித்தனர். இயற்கையை அழித்து மனிதன் பல்கிப் பெருகி வாழ்வதை விட இனவிருத்தி செய்யாமல் மனித இனம் அழிந்து போவது மேல் என்றார்கள். இயற்கையோடும், மனிதன் மனிதனோடும் இணைந்து வாழ வேறு மாற்று வழியே இல்லையா என்று நீ கேட்டபோது வசவுச் சொற்கள் உன்னை நோக்கி வீசப்பட்டன. தூறல் தொடர்ந்து விழுந்துகொண்டிருந்தது. மைத்ரேயியிடம் சேகரமான உன் சமிக்ஞைகள் மகளாய்த் தோற்றம்கொள்ளும் என உறுதியாய் நீ நம்பியிருந்தாய். மகள்! என்ன அழகான வார்த்தை! மைத்ரேயியே குட்டிப் பெண்ணாய் வந்தது போல உன் மகள் தத்தி தத்தி உன்னிடம் ஓடி வருவதைப் போன்ற கனவுகள் உனக்கு ஏராளம். அக்குட்டிப்பெண்ணை அள்ளி எடுத்துத் தோளில் ஏற்றிக்கொண்டு பசுமையான வயல்வெளிகளூடே நடந்து செல்வது போல வந்த கனவை நீ பலமுறை காண விரும்பினாய். ஆனால் அது ஒரே ஒரு முறைதான் வந்தது. மகளே, மக்ளே, மக்களே என்று பல ஏற்ற இறக்கங்களுடன் சத்தமாகச் சொல்லிப் பார்த்தாய். அவளுக்கு எவ்வளவு சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கும் என்று நினைத்து நீ மலைத்துப் போனாய். அவள் நிச்சயமாக பியானோ வாசிப்பாள். சின்னதாக கவுண் அணிந்துகொண்டு கட்டுக்கடங்காத தலை முடி நெற்றியில் விழ விழ உன்னைப் பார்த்து குறும்புத்தனமான புன்னகையுடன் Chopinஐ வாசிக்க நீ சொக்கிப் போனாய். மோளே மோளே மகளே என்ற பின்னணி இசை மனத்தின் அடிநாதமாய் ஒலிக்க, வசவுகள் மறந்து இருந்தபோது உன் கட்டுரை வரிகள் இயல்பான லயத்துடன் ஓடின. விளையாடுவதிலும் ஆனந்தமிருக்கிறது என்று உனக்குள் சொல்லிக்கொண்டாய். கண்ணாடியில்த் தெரியும் பிம்பத்தைத் தந்திரமாக வெற்றிகொள்ளும் வித்தையை உன் மகளுக்கு கற்றுத் தருவதற்கான பாடத்திட்டமொன்றை நீ உருவாக்கினாய். பிம்பங்கள் அனைத்திலிருந்தும் அவளை விடுபடவைக்கப் போகும் அந்தப் பாடத்திட்டம் பல நூறு புத்தகங்களையும் இசைத் தட்டுகளையும் கொண்டதாக இருந்தது. ‘புனித ஜெனெ’யை அதில் சேர்ப்பது குறித்து உன் மனம் ஒரு கணம் ஊசலாடியபோது உன் கட்டுரையில் நீ அடி வாங்கினாய். பலத்த அடி. உன் வார்த்தைகள் உதிர்ந்து விழ ஆரம்பித்தன. மழை வலுத்துப் பெய்தது அப்போதைய நிலையில் உனக்கு எரிச்சலூட்டக்கூடியதாய் இருந்தது. உன் மகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்க நீ யார் என்ற கேள்வியில் நீ உன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாய். சொற்களை பொறுக்கி எடுத்துக் கோர்த்தபோது அவளுக்கு வேண்டியதை அவள் தேர்ந்தெடுத்துக்கொள்வாள் என்று புரிந்தது.
உனக்கும் உன் மகளுக்கும் என்ன உறவு? உனக்கும் யாருக்கும்தான் என்ன உறவு? தளைகளற்ற உறவு என்ற பதச் சேர்க்கையை பரிசோதித்துப் பார்த்தாய். அப்பதச்சேர்க்கையின் உள் முரண் புரிந்த மறு கணமே நீ பிரேதமில்லை என உணர்ந்துகொண்டாய். யாருமே பிரேதமில்லை என்பதும் தெரிய வந்தது. நீ ஒரு அனாதை. எல்லோருமே அனாதைகள். அ-னா-தை. இவ்வுலகம் அனாதைகளின் உலகம். அனாதைத்தன்மையை இயல்பானதாக ஏற்றுக்கொண்டு வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் நாம். அதுவே அறம் வீரம் ஆண்மை பெண்மை. ஹா ஹா முதலாளித்துவத்தின் அடிப்படையை சுலபத்தில் அடைந்துவிட்டாய் நீ. அனாதைத்தனம் உன் ரோமக் கால்களில் விஷ ஊசிகளாய் துளைத்து வெளியே வர என் மகள் எனக்கு வேண்டும் என்று விடாமல் கதறினாய். மைத்ரேயி ‘பிறக்காத குழந்தைக்கு ஒரு கடிதம்’ நாவலை வாசித்துக்கொண்டிருந்தது உனக்குத் தெரியாது ஏனெனில் மைத்ரேயியை நீ சந்தித்து இருநூற்றி பன்னிரெண்டு நாட்கள் ஆறு மணிகள் பதினேழு நிமிடங்கள் இருபத்தியிரண்டு விநாடிகள் ஆகின்றன. இந்த நாட்களில் எண்பத்தெட்டாயிரம் கோடி வார்த்தைகள் ஜீவ மூச்சாய் உன்னிடமிருந்து வெளிப்பட்டன. தனியாய் சாப்பிட்டுத் தனியாய்த் தூங்கி, தனியே நடந்துபோய்த் தனியாய் குடித்து தனியாய் கனவு கண்டு தனியாய் அழுதுத் தனியாய்ப் படித்து தனியாய்  எழுதித் தனியாய் சிரித்து தனியாகத் தன்னை வெறுத்து தனியாய்த் தனியாய் இருந்து தனியாய் சிந்தித்து தனியாய் புத்தி பேதலித்து இருந்த உனக்கு மைத்ரேயிக்கான அவ்வார்த்தை ஜீவ மூச்சன்றி வேறு என்ன? உன் மகள் தமிழிலேயே சிந்தித்துத் தமிழிலேயே இலக்கியம் படைப்பாள் என்று கனவு வந்தது அந்த வார்த்தைக் கூட்டத்தின் லயம் உனக்கு பிடிபட்ட போதுதானே? மைத்ரேயி எங்கே போனாய் நீ? உன் கட்டுரையில் மஞ்சள் மலர்கள் பெரிது பெரிதாய் பூத்த அக்காலத்தில் எங்கே போனாள் மைத்ரேயி? விடாமல்ப் பெய்யும் இந்த மழை நல்லதுக்குப் பெய்கிறதா என்ன? மைத்ரேயி எங்கே போனாய் நீ? என்ன செய்கிறாய்? புத்தி பேதலித்த உன்னை நினைவில் வைத்துக்கொண்டிருக்கிறாளோ என்னவோ? உன் குழந்தையை அவள் சுமப்பாளா என்ன? கருவிலேயே கொன்றுவிட்டாளென்றால்? எங்கோ ஒரு வயலினின் தந்தி ஒன்று நாரசமாய் அறுந்துபோகக் குழந்தை பருவ நினைவு ஒன்று உன்னைத் தொற்றியது. வெயில் கொடூரமாகத் தாக்கிய மதியப் பொழுதொன்றில் அந்த மருத்துவச்சியின் கொல்லை பிண்டங்களால் நாறியபோது அவள் பகவத் கீதை வாசித்திருக்கக் கண்டாய். காலம் காலமாய் கொலை பாதகத்தைத் தூண்டும் போதனை. உயிரழிக்க, உயிரை நசிவுக்குள்ளாக்க, உயிரை அவலத்திற்குள்ளாக்க மதத்தைத் தவிர வேறெதற்கு சக்தி இருக்கிறது? மதத்தை எதிர்த்த உன் நண்பர்களெல்லாம் மதவாதிகளாய் மாறிப்போன அங்கதத்தை என்னவென்று சொல்ல? அப்படி மாறிப்போனபோதுதான் அவர்கள் உன்னைக் காட்டிக்கொடுத்தார்கள். நீ ஒழிக்கப்படவேண்டியவன் என்றார்கள். எல்லாம் இழந்த நிலையில் நீ உடைந்து போனபோது மைத்ரேயி வரவில்லை. சரண் புகுந்தேன் காப்பது உன் தர்மம் என்றாய். மைத்ரேயி வரவில்லை. முன்பு வந்தாளே! எங்கே போனாள் அவள்? சிநேகிதி, குட்டிப்பெண்ணே, எங்கே போனாய் நீ? தொடர்ந்து பெய்யும் மழை எதை உணர்த்துகிறது என்று அறியாமல் போயிற்று. உன் கட்டுரையில் வார்த்தைகள் வெறும் ஓசைகளாக நீ வெறுமையானாய். எதைப்பிடித்துக்கொண்டு தொங்குவாய் இப்போது? அறிகுறிகள் காணும் சக்தியும் உன்னிடமிருந்து இல்லாமல் போயிற்று. மழைக்காலத்தில் பூத்த மாமரம், குலை தள்ள மறுத்த வாழை, இலைகள் உதிர்த்து நின்ற மருதாணி, விரியும்போது இடியோசை எழுப்பிய மல்லிகை, விழுவதற்கு யத்தனித்து அந்தரத்தில் நின்ற பன்னீர்ப்பூக்கள், பிஞ்சிலேயே முற்றிவிட்ட முருங்கை, பூக்காமலேயே காய்த்த கொய்யா என அறிகுறிகள் லயமற்றுக் குதிக்க, அவை வேறெதையும் உணர்த்த மறுத்து அவையாகவே இருக்க உன் சித்தம் முழுமையாகக் கலங்கியது. சொன்னார்களே ஐயா சொன்னார்களே மனித வேட்கைக்கு ஏற்ப இயற்கை தோற்றம் தருமெனச் சொன்னார்களே ஐயா சொன்னார்களே. நம்பிக்கை வைப்பதற்கான ஒரே ஒரு அறிகுறி தா மைத்ரேயி ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு மண்ணே மண்ணு. போடாப் போடா பொக்கே எள்ளுக் காட்டுக்குத் தெக்கே, சிறுமை கண்டு அயராது இரு மனமே அயராதிரு. மோகத்தைக் கொன்று விடு. ஆசையைக்கொன்று விடு. மைத்ரேயியைக் கொன்றுவிடு. எளியவாம் எல்லோருக்கும் கொல்லுதல் அரியவாம் கொல்லாதிருத்தல். கொன்றுவிடு கொலையே முழுமையான ஆக்ரமிப்பு. கொன்றுவிடு. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு. மழை புயலுடன் கலந்த மழையாயிற்று. உன் கட்டுரையில் புதைகுழிகள் தென்படலாயின. கண்கள் வெடித்துச் சிதறிய கதக்களிக் கலைஞனைத் தெரியுமா உனக்கு?
உணர்ச்சியின் உண்மையில் நம்பிக்கை வைத்தோரே கேளுங்கள்: கொலை மறுத்த உணர்ச்சியின் உண்மை தற்கொலை மட்டுமே. அன்பு, தியாகம் என்ற வார்த்தைகளை எழுத்துக்கூட்டி உச்சரித்துப் பார்த்தாய். கொன்றுவிடு மைத்ரேயியைக் கொன்றுவிடு. என்கிருந்து கேட்கிறது இந்த அபத்தக் குரல்? உன் புருவங்களுனூடே கொடூரமான வலி ஒன்று ஓட உன் கண்களின் வெள்ளைப்படலத்தில் செந்நிற நரம்புகள் முடிச்சிட்டுக்கொண்டன. உன் விளையாட்டு பற்றிய கட்டுரையில் விளையாட்டுக்குத் தேவையான அக ஒழுக்கத்தைப் பற்றிச் சிந்திப்பதன் மூலம் உன்னை மீட்டெடுக்க முயற்சி செய்தாய். அப்போது மழை உள்ளே பெய்ததா வெளியே பெய்ததா என்று உனக்கு நினைவில்லை. இறையனார் அகப்பொருளுரை களவு கற்பு எண்ணிம் கைகோள் இரண்டனுள் களவு சிறப்புடைத்து. பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும் நீத்த கன்று உறைதல் அறத்தாறு அன்றே. பூப்பு புறப்பட்ட முந்நாளும் உள்ளிட்ட பன்னிரு நாளும் கூடி உறைய, படுங்குற்றம் என்னோ எனின், பூப்பு புறப்பட்ட ஞான்று நின்ற கரு வயிற்றிலே அழியும்; இரண்டாம் நாளின் நின்ற கரு வயிற்றிலே சாம்; மூன்றாம் நாள் நிற்கும் கருவுக்கு குறு வாழ்க்கைதாம்; வாழினும் திரு நின்றாம்; அதனால் கூடக்கூடாது என்ப. தமிழ் என்பதற்கே அகப்பொருள் என்றுதான் பொருள். இந்நூல் என் நுதலிற்றோ எனின் தமிழ் நுதலிற்று. விளையாட்டின் வகைகள்: விற்பூட்டு, விதலையாப்பு, வாசிநீக்கு, கொண்டு கூட்டு, ஒரு சிறை நிலை, ஆற்றொழுக்கு முதலிய ஐந்து வகையான சூத்திரக்கிடங்கை விளக்க வேண்டுமா என்ன? இவற்றையெல்லாம் எப்படி இழந்தோம்? எப்படி திரும்பப் பெறப்போகிறாய் நீ? இயற்கையே ஒத்துழைப்பு தா. தயவு செய்து பேசு. விடாமல்ப் பெய்யும் இம்மழை எதற்காகப் பெய்கிறது மைத்ரேயி? கருணையுடன் நடந்து கொள். வாழ்தலை மரணத்திலிருந்து தப்புதல் என்றிருக்கும் எங்களுக்கு எங்கள் சந்ததிகளே எதிர்காலம். மரபுக் கடத்தியின் துணுக்கு சமிக்ஞைகளுக்குள் ஒட்டிச் செல்லும் நீ பலகோடி சந்ததிகளுக்கு அப்பால் உயிர்ப்படையலாம். யாரே அறிவர் உன் உயிரின் உணர்ச்சியை? யாரே அறிவர் உன் உணர்ச்சியின் உயிரை? மைத்ரேயி தயவு செய்து உன் கர்ப்பத்தைக் காப்பாற்று. மகளே மகளே மகளே என்று மீண்டும் மீண்டும் அரற்றினாய். மெய் வரு போகம் ஒக்க உடன் உண்ட அரவு பை அல்குலாரே தயவு செய்து கர்ப்பம் தாங்குங்கள். மைத்ரேயி உன் மேனி வெப்பத்தால் படுக்கை தீய்ந்து போன அந்த இரவினை நினைத்துப் பார். காம வேதனை ஆற்றமாட்டாது கண்களிலிருந்து நீர் பெருகி வழிய, வழிந்த கண்ணீர் கொங்கையின் நுனியிடத்திலே சிந்த, உலைக்களத்திலே எழுகிற புகைபோல பெருமூச்சு வீசியதால் வறண்டு போன மிதிலைக் காட்சிப் படல சீதையைப் போல விளங்கினாயே அதே இரவுதான். அந்த இரவின் பதிவு உயிர் தரிக்கின்ற உடலாய் வெளிவருவதிலுள்ள இன்பத்தை நினைத்துப் பார். அடி மைத்ரேயி எங்கே போனாயடி நீ? விழி தீ சிந்த நின்றாய் நீ. உன்னோடு ரமிக்கையில் புது மணமதுவின் தேறலை ரசித்தவள் இப்போது எங்கே போனாள்? தண்டுதலின்றி ஒன்றித் தலைத் தலைச் சிறந்த காதல் உண்டபின் மெலிந்து துயின்ற மைத்ரேயி எங்கே? மழை பிரளய வெள்ளமாய் உருமாறியது. உன் கட்டுரையில் நீ பாடை கட்ட ஆரம்பித்தாய். வேறு வழியில்லை. சாகவும் இயலாமல் வாழவும் இயலாமல் உழல்கின்ற வேதனையில் தொடர்ந்து அவலத்துடன் இருப்பதை விட அவளைக் கொன்று விட்டுக் குற்ற உணர்வில் சாவது மேல். உன் உடலெங்கும் விஷ நகங்கள் முளைக்க ஆரம்பித்தன. அந்த நகங்களைக் கூர்மைப்படுத்த அரசியலைக் கையாண்டாய்.
முகமற்ற நிழலுருவங்கள் அர்த்தம் பெற, உடல் பெற, வேறு வழியின்றி உன்னோடு சேர்ந்து கெக்கலித்தன. மாயைகளை உருவாக்கி அந்தக் கேவல நிழல்களின் இருப்பை நியாயப்படுத்தினாய். மைத்ரேயின்/மரணத்திற்கு/கொலைக்கான முஸ்தீபுகளை நிழல்களின் மூளை வழி விளையாட்டு வினாக்களாய் ஓட விட்டாய். உன் கட்டுரையில் இது நாள் வரை மறைத்து வைத்திருந்த உன் கோரைப் பற்கள் மெதுவாக வெளித் தெரியலாயின. சிதையின் வெளிச்சம் மட்டுமே வெளிச்சமாய் இருக்க முடியும் என்று போதனைகள் செய்தாய். இனி திரும்பவும் பழைய இடத்திற்குப் போக இயலாது என்ற நிலைமையை உனது போதனையின் பதிவுகள் ஏற்படுத்தின. உன் நிழல்கள் உன்னை வென்றனவா நீ அவற்றை வென்றாயா என்பதை எதிர்காலம் அல்லவா சொல்லும்? உன் எதிர்காலம் உன் மகள் மட்டுமே என்று உணர்ந்திருந்தாலும் அந்த உணர்வின் தாக்கத்தைத் தொடர்ந்து தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்தாய். மைத்ரேயி மைத்ரேயி மைத்ரேயி எங்கே போனாய் நீ? உன் உயிரின் கடிகாரம் மைத்ரேயியின் விநாடிகளோடுத் தேங்கிப் போனது போல இருப்பது மாயை மட்டுமே என்றாள் உன் அம்மா. உன் அம்மா! அவள் மட்டும் உனக்குத் தாயன்பு என்றால் என்ன என்பதை சிறிது காட்டியிருந்தாளேயென்றால் நீ இப்படி ஆகியிருக்க மாட்டாயோ என்னவோ. வேறு யாரை குற்றம் சொல்லி என்ன பயன்? உன்னை நீயே குற்றம் சுமத்தி சுய பச்சாதாபத்தில் ஆழ்வதாலும் என்ன பயன்? வருத்தத்துடன் சிதை வெளிச்சத்தைத் தூண்டிவிட்டு, மனக்கருத்தாக இருந்த மைத்ரேயியை வசியம் செய்து உருவமாய் வெளிக்கொணர்ந்தாய்.
சாவுப்படுக்கை தயாராகிவிட்டது என்று அவளிடம் உணர்ச்சியற்ற குரலில் அறிவித்தாய். அவளும் வசியத்திற்கு ஆட்பட்டவளாய்த் தானே சென்று அதில் படுத்துக்கொண்டாள். ஒரே ஒரு முத்தம் தருவாயா என்று ஆதங்கத்துடன் கேட்டாள். இத்தனை நாட்கள் காணாமல் போனபோது நீ இதே போல எத்தனை தடவை கதறியிருப்பாய் என்ற நினைவில் பதிலளிக்க மறுத்தவனாய் திரும்பி நின்று கொண்டாய். ஒரே ஒரு முத்தம் என்றாள் மைத்ரேயி மீண்டும். அதன் பின் கொன்று விடு என்று முணுமுணுத்தாள். மழை யாருக்கும் பயனற்று தொடர்ந்து பெய்தது. உன் கட்டுரைகள் அரசாங்கத்திற்கு ஆதரவானவை என்ற அறிவிப்பு வெளியாகியது. உந்தன் சாவினைப் பற்றி மைத்ரேயி அக்கறை கொள்ளாது காணாமல் போனபோது நீ மட்டும் அவளின் சாவைப் பற்றி கவலைப்படுவதேன்? என்ன ஆயிற்று உன் அக ஒழுக்கம்? எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையிலும், எல்லாவற்றையும் இழந்த நிலையிலும், தாங்க முடியாத அவதிக்குள்ளானபோதிலும், நீ கொல்ல மறுத்தாய். மைத்ரேயி என்று கதறி மைத்ரேயியை சிதையிலிருந்து தூக்கி ஆரத் தழுவி முத்தமிட்டாய். உன் முதுகுத் தண்டில் அவளின் தாப நகங்கள் கீறின. புத்தனே, புத்தனே என்று அரற்றினாள். உண்மை எது பொய் எது என்று அறியா நிலையில் பைத்திய ரேகை முகத்திலோட நகைத்தாய். புதிர்களோடும், அவலங்களோடும், சந்தேகங்களோடும், நம்பிக்கையற்ற தன்மைகளோடும் கொல்ல மறுத்து உயிர்போற்றிய உன் நகைப்பொலி கேட்டு மழை சடாரென்று வெறித்தது. உன் நகைப்பொலியை கட்டுரையில் பிரதி செய்த  தொந்தி பெருத்த சிரிக்கும் மைத்ரேய புத்தர்கள் உருவானார்கள். சிரிக்கும் புத்தர்களின் உருவங்களைக் கண்டு குழந்தைகள் சிரித்தன. உயிரின் நீட்சி சிரித்தது. சிரிக்கும் புத்தர்கள் எல்லா இடங்களிலும் தோற்றம் பெற ஆரம்பித்தனர். மைத்ரேய புத்தா மைத்ரேய புத்தா என்ற குரல்களின் எழுச்சியில் உடல்கள் ஜீவத் துடிப்பின் சௌந்தரியத்தைப் பெற்றன. அந்த சௌந்தரியத்தின் ஒளி வழங்கிய மகிழ்ச்சியில் உன் விளையாட்டு பற்றிய கட்டுரையை இவ்வாறாக முடித்தாய்.
--------------------------------
கல்குதிரை 1989

http://mdmuthukumaraswamy.blogspot.in/2014/11/blog-post.html


Friday, November 28, 2014


உயிர் விசையெனும் பந்தினைப் போல்



என்னுடைய சிறுகதைகளுக்கு முன்னுரை எழுதுவதைப் போல சிரமமான காரியம் ஒன்றினை நான் எதிர்கொண்டதில்லை. அதற்கு முக்கிய காரணம் நான் என்னுடைய எழுத்துக்கு பொறுப்பற்றவனாக அலட்சியமாக இருந்து வந்திருப்பதுதான் என்று இப்போது தோன்றுகிறது. 1984 ஆம் வருடம் நான் எழுத ஆரம்பித்திலிருந்து 2014 வரை நான் சுமார் இருநூறு சிறுகதைகள் எழுதியிருக்கக்கூடும். அவற்றில் முப்பது சிறுகதைகள் மட்டுமே வெவ்வேறு பத்திரிக்கைகளில் பிரசுரம் கண்டிருக்கின்றன ஆனால் அந்த முப்பது சிறுகதைகளையும் கூட  இந்தத் தொகுப்பிற்காக என்னால் சேகரிக்க முடியவில்லை. விடுபட்டு போன கதைகள், கைப்பிரதியில் தொலைந்து போன கதைகள் ஆகியன மனதினை ஆக்கிரமித்திருக்கும்போது  இந்தத்தொகுதிக்கு என்று என்ன முன்னுரையை எழுதமுடியும்? 

இந்தத் தொகுப்பிலுள்ள  கதைகள் என்னிடத்தில் மீண்டும் எப்படி வந்து சேர்ந்தன என்பதற்கான அடிக்குறிப்புகளை ஆங்காங்கே தந்திருக்கிறேன். பெரும்பாலும் நண்பர்களும் முகம் தெரியாத அந்நியர்களும் என்னிடத்தில் கொண்டிருக்கும் அன்பின் காரணமாகவும் அவர்களுக்கு என்னுடைய கதைகளின் மேல் இருக்கக்கூடிய அதீத பற்றின் காரணமாகவுமே இந்தத் தொகுப்பு சாத்தியப்பட்டிருக்கிறது. அந்த நண்பர்கள் அனைவருக்கும் நான் நன்றியுடையவன் ஆவேன். 
டென்னிசே வில்லியம்ஸின், ‘A street car named desire’ நாடகத்தில் சகோதரியின் கணவனால் கற்பழிக்கப்படும் மைய பெண் கதாபாத்திரம் சொல்லுவாள் “I believed in the kindness of strangers” என்று. அவள்சொல்லும் வாக்கியம்தான் என் வாழ்க்கையையும் எழுத்தையும் பொறுத்தவரை எவ்வளவு உண்மையானதாக இருக்கிறது! 

கடந்த இரண்டு வருடங்களில் நான் எழுதிய பல புதிய சிறுகதைகளையும், குட்டிக்கதைகளையும், நான் பதின்பருவத்தில் எழுதி 'பிரம்மனைத் தேடி' என்ற சிறுகதைத்தொகுப்பாக வந்த கதைகளையும் இந்தத் தொகுப்பில் சேர்த்திருக்கிறேன்.  இந்தக் கதைகள் அனைத்தையும் நான் காலவரிசைப்படி அடுக்கவில்லை. அவை இங்கே எனக்கு மட்டுமே தெரிந்த விளையாட்டுத்தனமான அந்தரங்க வரிசையைக்கொண்டிருக்கின்றன. அந்த வரிசையின் தர்க்கத்தினையே நான் இந்தத் தொகுதிக்கான முன்னுரையாக பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

இருபது வருடங்களுக்கு முன் எழுதிய கதையிலும் இரண்டே மாதங்களுக்கு முன் எழுதிய கதையிலும் சரி தத்துவார்த்தமாக ஒரு தொடர்ச்சியும் உள் தர்க்கமும் இருப்பதை காலவரிசைப்படி அடுக்கப்படாத இந்தக் கதைகள் எனக்கு உணர்த்தின. தமிழ் நாகரீகத்தின் ஏதோ ஒரு அறியப்படாத அழிவு ஒன்றினையும் அதற்கான புலம்பலையும் கேவலாக, அழுகையாக, வெறி கொண்ட நகைப்பாக, தன்னிலையின் சிதறலாக, அதீத வடிவ ஒழுங்காக, முற்றிலும் சிதைந்த வடிவமாக என பல வெளிப்பாடுகளை இக்கதைகள் ஏந்தி அமைதிபெறுகின்றன. கால ஓட்டத்திற்கு ஏற்ப ஒரு பயணம் இக்கதைகளூடே நிகழ்ந்திருக்குமானால் அந்தப் பயணம் ஒரு எளிமையையும், படித்தவுடனேயே தொற்றி அக உலகோடு உரையாடக்கூடிய வசீகரத்தினை நோக்கியதாகவே இருந்திருக்கிறது. கூடவே நடுக்கடலில் கப்பல் மூழ்கிவிடத் தப்பியவனின் அனாதை  அகம் கொள்ளும் பாவனைகளையே என் கதைகள் கொண்டிருக்கின்றன. நானே ஆச்சரியப்படும் விதத்தில் அவற்றில் தனிப்பட்ட புகார்கள் ஏதுமில்லை, வெறுப்பில்லை, சுயசரிதைக்குறிப்புகள் இல்லை. மாறாக இலக்கிய வடிவங்களை அக வடிவங்களாகக் கண்டு அவற்றோடு வாசக மனமாக உருமாறும் யத்தனிப்புகளாக என் கதைகள் வடிவம் பெற்றிருக்கின்றன.

இலக்கிய வடிவங்கள் பற்றிய கதைகள் (மெடாஃபிக்‌ஷன்) என்று என்னுடைய கதைகளுக்கு பல சக எழுத்தாளர்களும் விமர்சகர்களும் பல முறை பெயரிட்டிருக்கிறார்கள். 'மைத்ரேயி' கதை கட்டுரை வடிவத்தினையும், 'மர்ம நாவல்' நாவலையும், 'நாடகத்திற்கான குறிப்புகள்' நாடகத்தினையும் 'தமிழ் மற மகளிர்க்கு அசரீரீ சொன்ன புராணக்கதை' விமர்சனத்தையும் தன் மையக்கருப்பொருளாகக் கொள்வதும் இதே போல பல கதைகளும் இலக்கிய வடிவங்களுக்கு நேரடியான அல்லது மறைமுகமான சுட்டுதலைக் கொண்டிருக்கின்றன என்பதினால் என் கதைகளை மெடாஃபிக்‌ஷன் (metafiction) என்று அழைப்பது பொருத்தமானதுதான். ஆனால் அவை இலக்கிய வடிவங்கள் பற்றி மட்டும் பேசுவதில்லை.  எழுத்தாளனாக என் அக்கறை வடிவங்களைப் பற்றியது மட்டுமல்ல. என் அக்கறைகளை நேர்கோடற்ற முறையில் சொல்வது என் கதைகளை வாசக அனுபவத்திற்கு அணுக்கமானதாக மாற்றக்கூடும். 

1984 ஆம் ஆண்டில் நான் கல்லூரி மாணவனாக எழுதத்தொடங்கியபோது தமிழகத்தின் கல்லூரி வளாகங்கள் மிகவும் அரசியல் எழுச்சி பெற்ற வளாகங்களாக இருந்தன. எழுபதுகளின் இறுதியில்  இந்தியாவில் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலை பிரகடனத்தை அடுத்து வன் அடக்குமுறைகளிலிருந்து மீண்டு வந்த நினைவுகள் கல்லூரி வளாகங்களை நிறைத்திருந்தன; ஈழத்தமிழ் போராட்டம் 1983இல் தமிழகமெங்கும் மிகப் பெரிய மாண்வர் எழுச்சிகளை ஏற்படுத்தியிருந்தது. இருத்தலியல் தத்துவங்களை குறிப்பாக சார்த்தரையும், காம்யூவையும், சிமோன் தி பூவாவையும் ஆங்கில இலக்கிய முதுகலை மாணவர்களாகிய நாங்கள் கற்பதும் விவாதிப்பதுமாய் இருந்தோம். தேசத்தின் சரித்திரத்திற்கும் தனி மனித வாழ்வுக்கும் உள்ள உறவுகள் எங்களுடைய விவாத பொருளாய் இருந்தது. ரமேஷ் குமார், செந்தில்குமார், ஃபிரான்சிஸ் மனோகர் ஆகிய நண்பர்கள் நடத்திய கல்லூரி வளாக இலக்கிய பத்திரிக்கையான ‘ராகம்’ இதழின் ஆசிரியர் குழுவில் நானும் சேர்ந்துகொண்டேன். மாதம் ஒரு முறை வந்த ‘ராகம்’ இதழில் ஸில்வியா என்ற புனைபெயரில் சிறுகதைகளும் என் இயற்பெயரில் கட்டுரைகள் எழுதினேன்; பல முக்கிய மொழிபெயர்ப்புகளும் செய்தேன். 

ஸில்வியா ப்ளாத்தின் கவிதைகளின் மேலும் அவருடைய தற்கொலையின் மீதும் பதின்பருவத்தின் கற்பனா வாத ஈடுபாட்டின் காரணமாகவே நான் என் புனைபெயரை ஸில்வியா என்று தேர்ந்தெடுத்துக்கொண்டேன். ஆனால் கடந்த சில பல வருடங்களில் ஸில்வியா என்ற பெயர் துரதிருஷ்டத்தின் குறியீடு என்ற எண்ணம் என்னிடத்தில் முழுமையாக பதிந்துவிட நான் அப்பெயரை துறந்துவிட்டேன். ஆனால் கதைகளைத் துறக்க மனம் வரவில்லை. இது ஏன் என்று  யோசித்துப் பார்க்கும்போது நான் பரந்து பட்ட தேசமொன்றின் பிரக்ஞையின் அக வரலாற்று தருணங்களையே கதைகளாக்கியுள்ளேன் என் தனிப்பட்ட சுய சரிதையின் எந்தச்சுவடும் அந்த கதைகளில் இல்லை என்பது எனக்கு திட்டவட்டமாகத் தெரியவந்தது. ‘ராகம்’ இதழில் ஸில்வியாக எழுதிய முதல் கதையான ‘ஸ்வப்ன ஸ்னேகிதா’ வின் நாயகி இந்தியா சுதந்திரம் பெற்ற நாளன்று வயதுக்கு வருகிறாள்; மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நாளன்று அவள் தேர்ந்தெடுக்காத கணவனுடன் அவளுக்கு முதலிரவு நடக்கிறது. அவள் தான் விரும்பிய காதலனுடன் வாழ நினைத்தது கனவெனவே ஆகிட்டதை அசை போடுகிறாள்.  நனவோடை உத்தியில் இந்தக் கதையை எழுதியபோது நான் என்னுடைய ஆங்கில இலக்கிய முதுகலை ஆய்வேட்டிற்காக ஜேம்ஸ் ஜாய்ஸின் நாவலான ‘யுலிசஸை’ பற்றி வாசித்துக்கொண்டிருந்தது தற்செயலான தொடர்பாக இப்போது தோன்றவில்லை. “Why do Molly Bloom menstruate in the last chapter of James Joyce’s ‘Ulysses’ ?” என்ற என் ஆய்வேடு பெண்ணுடல்கள்  பரந்து பட்ட தேச சரித்திரத்தோடு தொடர்புடையவை என்று விவரித்தது என்று சொல்லவும் வேண்டுமோ? ‘ராகம்’ இதழ் இரண்டோ மூன்றோ வெளிவந்தபோது கவிஞர் ஆத்மாநாமின் தற்கொலை செய்தி என்னை மிகவும் நிலைகுலையச் செய்வதாக இருந்தது. ‘பிரம்மனைத் தேடி’ சிறுகதையில் நாயகனின் பெயரினை ஆத்மாநாமின் இயற்பெயரான மதுசூதனன் என்று வைத்தேன். கதையில் அதி நுண்ணுணர்வு வாய்ந்த மதுசூதனன் தன் அம்மாவின் ஒரு சொல் பொறுக்கமுடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான். தாயன்பு, பெண்களின் பெருங் கருணை ஆகியன என் கதைகளில் தொடர்ந்து வருகின்றன. 2013 ஆம் ஆண்டு எழுதிய ‘மீனாள் அழுகிறாள், ரகு நந்த’ கதையில் பதின்பருவ சிறுமி தன்னுடைய ஏழ்மை காரணமாக சுரண்டப்படும் நிலையில் இருந்தாலும் தாய்பாலால் முலை விம்மும் கருணையை வெளிப்படுத்துகிறாள்.   

தமிழ்ச் சமூகத்தின் வரலாற்று நெருக்கடிகளினால் சுய உடல் அழிவிற்கும் சுய அக அழிவிற்கும் ஆளாகும் நபர்களின் குறிப்பாக பெண்களின் அல்லது பெண் அக உலகங்களைக்கொண்ட ஆணுடல்களின் கதைகளையே நான் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறேன்.  கணவன்- மனைவி உறவின் பொய்மையில் அந்நியமாகிப் போன மனைவியின் மன ஓட்டத்தினை ‘பாறைகள்’ கதையில் வாசிக்கிறோமென்றால் முற்றிலுமாக சிதைந்து விட்ட சுயத்தின் சித்தரிப்புகள் ‘செப்பிடு வித்தை’ மற்றும் ‘மர்ம நாவல்’ ஆகிய கதைகளில் வாசிக்கக்கிடைக்கின்றன. ‘மர்ம நாவல்' சிறுகதையில் வந்த கதாபாத்திரமான மு சமீபத்திய வருடங்களில் என் குட்டிக்கதைகளில் மீண்டும் வருபவனாகிவிட்டான். அவனுக்கு காஃப்காவின் ‘கே’ கதாபாத்திரத்தின் சாயலும் முல்லா நஸ்ருதீனின் சாயலும்  காலப்போக்கில் சேர்ந்துகொண்டன. 

‘மர்ம நாவல்’ சிறுகதையில் போர்ஹெஸின் பாதிப்பில் உருவான விளையாட்டுத்தனமான பட்டியலும், அந்த பட்டியல் கேள்விக்குள்ளாக்குகின்ற epistemology-யும் சுயத்தின் அழிவினால் உண்டாகிற nihilismமும்   ஒரு புனைவு வடிவத்தினை ஏற்படுத்திக்கொடுக்கின்றன. அந்த புனைவு வடிவத்தில் நான் முழுமையாகச் சிக்கிகொண்டிருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த புனைவு வடிவத்திலிருந்து முட்டி மோதி வெளியே வர நான் செய்திருக்கும் பிரயத்தனங்கள்தான் என்னுடைய இதர கதைகள் என்று நான் ஒரளவு தீர்மானமாகவே சொல்லமுடியும். ‘மர்ம நாவல்’ சிறுகதை ‘பிற’ என்ற ஒற்றைச் சொல்லில் முடிவது இத்தகைய இதர யத்தனங்களை சுட்டுவதற்கே. 

சூன்யவாதம் உருவாக்கும் வெறுமையிலிருந்து தப்பிப்பதற்கு இரு வழிகள்: ஒன்று நீட்ஷேவிய அதி மனிதனாகுதல். ‘ஒரு துண்டு வானம்’ கதையில் வரும் நீட்ஷேவிய அதி மனித நாயகன் அரசியல் சிறைக்கைதியாக இருக்கிறான். அவன் அடைக்கப்பட்டிருக்கும் சிறைச்சாலை  தனது வெற்றியை சதா நிரூபித்துக்கொண்டிருக்க வேண்டிய நிர்ப்பந்தத்திலிருக்கக்கூடிய ஒரு கார்ப்பரேட் நிறுவனம். சிறைச்சாலை கார்ப்பரேட்டின் பங்குகள் சந்தையில் சரிந்துகொண்டிருக்கின்றன. கதையின்  நாயகனை மனமுறிவுக்கும், உடல் தோல்விக்கும் உள்ளாக்குவதன் மூலம் சிறைச்சாலை தன்னை வெற்றிகரமான நிறுவனமாக விளம்பரப்படுத்துகிறது. நீட்ஷேவிய அதி மனிதனுக்கே இந்த கதி என்றால் மற்றவர்கள் என்ன ஆவார்கள்? சூன்யவாதம் உருவாக்கும் வெறுமையிலிருந்து தப்பிப்பதற்கான இரண்டாம் வழி காருண்யம்.

காருண்யத்தின் மொத்த சொந்தக்காரர்களாக என்னுடைய புனைவுலகில் பெண்களே இருக்கிறார்கள். அவர்களாலே நாம் வாழும் பிரபஞ்சம் உணர்ச்சிகரமான ஒருமையைப்  பெறுகிறது. பெண்களே இப்பிரபஞ்சத்தின் மூல உயிர்சக்தியின் அடிப்படை விசையாக இருக்கிறார்கள்.  பேரழிவிற்குப் பின்னரும்  இனங்களைக் காப்பவர்களாகவும் கைவிடப்பட்ட ஆத்மாக்களை கரை சேர்ப்பவர்களாகவும் பெண்களே இருக்கிறார்கள். பெண்களே நாம் வாழும் பிரபஞ்சத்தின் ரகசியங்களும் காரணங்களும் ஆவர்.   ‘மைத்ரேயி’ கதை இப்படி பெண்ணை உடலாகவும் பெண்மையை பிரபஞ்சமாகவும் கொண்டாடுகிறது. ஆகவேதான் ‘மைத்ரேயி’ இந்தத் தொகுப்பின் முதல் கதை.  தொகுப்பின் முதன்மைக் கதையும்கூட.

‘மைத்ரேயி’ கதை எனக்கு வேறு பல வகைகளிலும் முக்கியமானது. முழுக்க முழுக்க முன்னிலை கதை சொல்லலாக எழுதப்பட்ட கதை அது. நானல்ல, பிறன்மையே, நீயே, முக்கியம் என்ற விழுமியத்தைக் கட்டமைக்கும் கதை.  உயிர் சக்தியினை சத்துவ சக்தியாய் பார்க்கும் பார்வை என்னிடத்தில் தோற்றம் கொண்ட கதையாக ‘மைத்ரேயினை’ வாசிக்க வேண்டும். எந்த நிலையிலும் உயிரழிவினை மறுத்தல் அதன் முக்கிய அம்சங்களுள் ஒன்று. தத்துவ அறிஞர் ஹென்றி பெர்க்சனின் élan vital (இலான் விடால்) என்ற உயிர் சக்தியை பற்றிய கருத்தாக்கம் என்னுடைய மைய சிந்தனை இழைகளுள் ஒன்றாக எப்பவுமே இருந்து வந்திருக்கிறது. ‘மர்ம நாவல்’ கதையின் cheerful nihilism (சியர்ஃபுல் நிஹிலிசம்) என்னால் உயிர் சக்தியின் மேல் வைக்கப்பட்ட நம்பிக்கையினாலேயே, அதை பெண்மையின் வடிவமாக கொண்டாடுவதன் மூலமே, அதை பிரபஞ்சத்தின் உணர்ச்சிகர வியாபகமாக விரிப்பதன் மூலமே கடந்து செல்ல முடிந்திருக்கிறது. உயிர் சக்தியின் இயக்கத்தினை எழுதி எழுதி தீராது எனக்கு. ‘பெண் வேடமிட்ட பெண்’ கதை ‘மைத்ரேயி’ கதையில் தோற்றம் கண்ட கரு வேறு வகை பரிமாணம் பெறுவதற்கு நல்ல உதாரணம். 

உயிர்சக்தி பற்றிய எனது மைய கவனம் எனது தேடலை இந்திய தாந்தரீக மரபுகளை நோக்கி திருப்பியதை பதிவு செய்த கதை ‘பெண் வேடமிட்ட பெண்’. தாந்தரீக மரபுகளைப் பற்றி மேலும் மேலும் கற்க அவை என்னுடைய கதைகளில் தன்னியல்பாக உருவாகி வந்திருக்கும் கருத்துக்களோடு மிகவும் ஒத்துப்போவதாக நான் நினைக்க ஆரம்பித்தேன். பெண்ணுடல், இயற்கை, கால மாற்றம். பருவங்கள் ஆகியவற்றுக்குள்ள  தொடர்பு உயிர் சக்தியின் இயக்கத்திற்கு வழிவகை செய்யக்கூடியதாகவும் அதற்கு எதிரானவை ஆதரவானவை என என் புனைவுலகு பலவற்றையும் நனவற்று வகுத்துவைத்திருக்கிறது. உயிர் சக்தியின் இயக்கத்திற்கு எதிரானவற்றை பகடிக்கும்  கேலிக்கும் என் கதைகள் உள்ளாக்குகின்றன. எது எதிரானது எது ஆதரவானது என்பது என் புனைவின் தர்க்கங்கள் சார்ந்தவை மட்டுமே. ‘பெண் வேடமிட்ட பெண்’ தாந்தரீகத்தினையும் புரட்சிகர அரசியலையும் உயிர்சக்தியின் இயக்கத்திற்கு ஆதரவான ஒரே செயலின் இரு பக்கங்கள் என்று புனைவின் வழி நிறுவுகிறது. அந்த புனைவு கனவு, பிரம்மை, யதார்த்தம் ஆகியவற்றுக்குள் உள்ள வேறுபாடுகளை அழிக்கிறது; இந்த வேறுபாடுகள் இல்லாத உலகு எனக்கு அதன் பிறகு எழுதப்பட்ட கதைகளில் இயல்பானதாகிவிட்டது. ‘தமிழ் மற மகளிர்க்கு அசரீரீ சொன்ன புராணக் கதை’யோ   ஆண் வம்சாவழி மரபு, பெண் வம்சாவழி மரபு என்ற வேடிக்கை பிரிவுகளை உண்டாக்கி ஆண், பெண், இனம், மரபு ஆகியனவற்றை absolute categories ஆகக் கொண்டு உருவாக்கப்படும் சொல்லாடல்களை மேலோட்டமான வாசிப்பிற்கு புலனாகாதவாறு பகடி செய்கிறது. ஆம், தூய, நிலையான சாதி, மதம், தேசம் உள்ளிட்ட வகைமைப்படுத்துதல்கள் வன்முறையானவை எனவே பகடியால் தகர்க்கப்பட வேண்டியவை. காதலுக்கு எதிராக, கலப்புத் திருமணத்திற்கு எதிராக அறிக்கை விட்ட அரசியல்வாதியை கிண்டல் செய்கிறது ‘சில்வியா எழுதாத கதை அல்லது மு என்ற இராமதாசு’. தனித்தமிழில் எழுதப்பட்ட இந்தக் கதை தூய வகைமைப்படுத்துதலை மொழியில் அடையாளம் காணுகிறது. ‘நுனி’ என்ற அறிவியல் புனைகதையோ நம்முடைய ‘அறிவியல் சிந்தனைகள்’ எப்படிப்பட்ட புராணக்கதையாடல்களுக்குள் சிக்கியிருக்கின்றன என பால்வீதிகளூடே நடக்கும் கதையை வைத்து சொல்கிறது.

 சமூகவியல், வரலாறு, இலக்கிய விமர்சனம் அல்லது தத்துவம் போல தோற்றம் அளிக்கும் வகையில் எழுதப்பட்ட பத்திகளால் நிரம்பியிருக்கிறது ‘தமிழ் மற மகளிர்க்கு அசரீரீ சொன்ன புராணக்கதை’. இவை அனைத்தும் அபத்தங்கள் என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். காஃப்காவும் பெக்கெட்டும் சாதாரண தினசரி நிகழ்வுகளில் அபத்தத்தை உணர கற்றுத்தந்தார்கள் என்றால் என் கதைகள் தூய்மையான வகையினங்களை உருவாக்குவதிலுள்ள metaphysical absurdity ஐ கவனப்படுத்த முயல்கின்றன.

அண்மை காலத்தில் எழுதப்பட்ட என்னுடைய கதைகளில் மிருகங்களும் பிற உயிரினங்களும் அதிகமும் நடமாடுகின்றன. “மதுக்கூடத்தில் ஒரு கண்ணாடி’ கதையில் குரங்குகள், ‘மீனாள் அழுகிறாள், ரகுநந்த’ கதையில் ஆமைகள், ‘இரவு மணி: 11:59 கதையில் ஆக்டோபஸ், ‘நாங்கள் கோபியை மிரட்டினோம்’ கதையில் பன்றிகள்  என்று பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.  மிருகங்களின் தீடீர் வருகை எதற்கு என் கதைகளில் என்று எனக்கு மனதிலாகவில்லை. ‘மதுக்கூடத்தில் ஒரு கண்ணாடி’ கதையில் ஒரு வாசகம் வரும்: “கண்ணாடிகளின் மேற்புறங்கள் கள்ளமற்றவை அல்ல அவை ஆழ்பிரதிகள் இருப்பதான மாயைகளை உண்டாக்குகின்றன. ஆழ்பிரதிகள் எவற்றுக்குமே இல்லை எல்லாமே மேற்புறங்கள்தான்”. ஒரு வேளை இந்த வாசகம் உண்மைதான் போலும். அதே நேரத்தில் ‘ஒரு துண்டு வானம்’ கதையில் வரும் “இவ்வுலகும் உயிரும் அழகியல் நிகழ்வாக அன்றி வேறு எதுவாகவும் ஜீவித நியாயம் பெறுவதில்லை” என்ற வாசகமும் உண்மைதானே?

சூன்யவாதத்திலிருந்து முழுமையாக விடுபட்டு மனிதர்களின் மேல் மிகவும் நம்பிக்கை கொண்டவனாக நான் மாறிவிட்டேன் என்பதினையே குறுங்கதை வடிவங்களில் எனக்குள்ள ஆர்வம் சொல்கிறது. குறுங்கதைகள், டிவிட்டர் கதைகள், ஃபேஸ்புக் கதைகள் என்று எழுதிப்பார்ப்பது மிகக்குறைவான வார்த்தைகளிலேயே நாம் நினைப்பதை சக மனிதனுக்கு உணர்ர்த்திவிட முடியாதா என்ற ஆதங்கத்தினால்தான். குறு வடிவங்களிலும் நான் நகைத்துக்கொண்டே இருக்கிறேன் என்பதும் உண்மை.

கைக்குழந்தையாக இருந்தபோது என் அம்மா என்னை “Brow binkey, eye winkey, nose noppy, cheek cherry, mouth merry’ என்று ஒவ்வொரு அவயங்களாகத் தொட்டு கொஞ்சுவார்களாம். அப்போதெல்லாம் நான் பெரிதாக சத்தமிட்டு சிரிப்பேனாம். கைக்குழந்தை இப்படி சத்தம்போட்டு சிரிக்குமா என்று என் அம்மாவுக்கு ஆச்சரியமாக இருக்குமாம். அந்த கொஞ்சலின் குதூகலத்தையே கதைகளின் வழி நான் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். அதுவே இக்கதைகளின் பின்னணியில் உள்ள உயிர்விசை.

இந்த முன்னுரையை வாசிக்காமலும் நீங்கள் நேரடியாக கதைகளை வாசித்து உங்கள் விருப்பம் போல முடிவுகளுக்கு வரலாம்

என் கதைகளை மிகவும் அக்கறை எடுத்து பதிப்பிக்கும் ‘அடையாளம்’ பதிப்பகத்திற்கும் நண்பர் சாதிக்கிற்கும் அவருடைய பதிப்பு குழுவினருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


---------------------------------------------------------------------------------------------------------
"மைத்ரேயி மற்றும் பல கதைகள்' எனும் தலைப்பில் அடையாளம் பதிப்பக வெளியீடாக இந்த வருடம் வெளியாக இருக்கும் என் சிறுகதைத் தொகுதிக்கு எழுதிய முன்னுரை.









Tuesday, January 1, 2013


பெண் வேடமிட்ட பெண் | சிறுகதை


போகத்தின் வழி திசைகளை காலங்களாகவும் ஆசைகளை நிலப்பகுதிகளாகவும் மாற்றி அமைக்கின்ற பெண் வேடமிட்ட பெண்ணிடம் சிக்கி போகம் துய்த்து மனப்பிறழ்வடைந்த அரசியல் செயல்வீரனாகிய என் நண்பனின் கதை இது. என் நண்பன் சொல்லக் கேட்டவற்றையும், அவனது டைரிக்குறிப்புகளையும், என் சொந்த அனுபவத்தையும் இணைத்து இக்கதையை உருவாக்கியிருக்கிறேன். இக் கதையை வாசிப்பவர்கள் சித்தப்பிரமையடையக் கூடுமென்று முதலிலேயே எச்சரிக்கப்படுகிறார்கள். மேலும் இக்கதையில் விவரிக்கப்படும் போகதந்திரமுறைகள் முழுக்க முழுக்க புனைவுகளே ஆகும் என்றும் அறிவிக்கிறேன். கதையை வாசித்து முடித்தபின் இப்பகுதியை மீண்டுமொருமுறை வாசிக்கவும். அடையாளப்படுத்துதல்கள் அவசியமில்லையென்றாலும் கதையின் வசதிக்காக என் நண்பனின் பெயரை ஜெயராஜ் என்றும் பெண் வேடமிட்ட பெண்ணின் பெயரை ஹம்ஸேஸ்வரி என்றும் என் பெயரைச் சந்திரன் என்றும் குறிக்கிறேன்.

ஹம்ஸேஸ்வரி! வணங்குகிறேன். பெண்களின் பெண்ணே! பேரழகின் இருப்பிடமே! வசீகரத்தின் வசீகரமே! இக்கதையை வெளிச்சொல்வதற்காக என்னை ஏதும் செய்துவிடாதே. ரகசியங்களைக் காப்பாற்றும் சக்தியற்ற பலவீனன் நானென்றாலும் லௌகீக வாழ்க்கையை விரும்புபவன். லௌகீகத்திற்குத் தேவையான அறிவை ஜெயராஜிடமிருந்து பறித்தது போல என்னிடமிருந்தும் பறித்துவிடாதே. ஹம்ஸேஸ்வரி!

ஹம்ஸேஸ்வரி ஹம்ஸேஸ்வரி ஹம்ஸேஸ்வரி ஹம்ஸேஸ்வரி இல்லை என்னை நீ கைவிடமாட்டாய். எதிர்காலமாயும் எனவே சாவாகவும் இறந்தகாலமாயும் எனவே மரபாகவும் விளங்கும் மேற்கிலிருந்து ஆமாம் மேற்குத் திசையிலிருந்து உன் வெப்ப மூச்சுடன் கூடிய மந்திரக்குரல் ஒலிக்கிறது.

பூமியைத் தீண்டு. பூமியைத் தீண்டு. பூமிமைய காமாக்னியைத் தீண்டு. பூமியின் ஸ்பர்ஸம் எந்தனுடல் ஸ்பர்ஸம். வா. தீண்டு. தொடு. இப்போதே. இங்கேயே.வா.தீண்டு. சந்திரா உன் குளிர்ந்த ஓளிக்கிரணங்களால் என்னைத் தழுவு. வா. உன் விரல்களின் வெம்மைக்காக என் இடை குறுகுறுத்து துவள்கிறது. தீண்டு. தொடு. இப்போதே இங்கேயே.

எழுதிக்கொண்டிருந்த சந்திரன் கதையை நிறுத்திவிட்டு வெளியே பார்த்தான். ஆமாம் பெண் வேடமிட்ட பெண் பூமிதான் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். வெளியே தோட்டத்தில் தூபமாய் பனிமூட்டம் இறங்கிக்கொண்டிருந்தது. மேற்புறத்தில் மட்டும் ஈரம் படிந்து உள்ளே வெப்பமான புழுதியை மறைத்து வைத்திருந்ததால் எழுந்த மண்வாசனை பெண்ணின் நறுமணமென பவளமல்லி மரத்தினைச் சூழந்திருந்தது. மேகங்களிடமிருந்து அப்போதுதான் வெளிப்பட்ட நிலவின் ஒளியில் தூரத்தில் தெரிந்த மேற்குத் தொடர்ச்சி மலைகள் ஆசையின் மடிப்புகளென கோடிக்கணக்கான பெண்களின் தாப இடுப்புகளென மடிந்து மடிந்து நீண்டு கிடந்தது. மேகங்களின் வெப்பப் பெருமூச்சுக்களோடு சந்திரன் மலைஇடுப்புகளைத் தழுவ விரைந்தோடிக்கொண்டிருந்தான்.

பூமியின் வசியம், பெண்ணின் வசியம். வசிய கோபத்தில் அவள் உள் நடுங்கிச் சீறியபோது சந்திரனைத் தழுவ ஆவேசமாய் எழுந்தவைதானே மேற்குத் தொடர்ச்சி மலைகள். அப்போது தாபத்தின் கம்பளமென பூத்துக் கிடந்தது காடு. கிரணங்களால் மட்டுமே தழுவ முடிந்த நிலையில், பௌதீக நெருக்கத்திற்கான வசியத்திலிருந்து விடுபடமுடியாமல், கடலலைகளையும், மலையுச்சிகளையும் அல்லி மலர்களையும் பேதலித்த மனித மனங்களையும் பௌர்ணமியண்று ஆர்ப்பரிக்கச் செய்கிறான் சந்திரன். ஜெயராஜுக்கு சித்தப்பிரமை கண்டபோது பேதலித்த அவன் மன அலைகளின் வழி சந்திரன் பௌர்ணமியன்று தாபத்தில் உளறினான். கேள்! பூமியின் இதயத் துடிப்பைக் கேள். அவள் என்னைக் காதலிக்கிறாளா என்று கேட்டுச் சொல். ஒவ்வொரு உயிரின் இடமூச்சின் வழியும் நான் அனுப்பும் காதல் சங்கேதங்களை அவள் காது கொடுத்து கேட்டாளா என அறிந்து சொல். காதலினால் உருகி உருகி அழிந்து மரித்துப்போய் வசியத்தினால் மீண்டும் உயிர்பெற்று வளர்ந்து வளர்ந்து வரும் என் அவலத்தை அவள் அறிவாளா? கேள் நன்றாகக் கேள்.

ஜெயராஜ் பெண்களின் பின்னந்தொடைகளைப் போல சூடாயிருந்த மலைமேட்டில் காதை வைத்துக் கேட்டான். பூமியின் துடிப்பு அவனுக்கு நன்றாகக் கேட்டது. சந்தோஷத்தை விகார இளிப்பில் காட்டியபடி, காதை மலைமேட்டில் அழுத்தி, மண்டியிட்டு படுத்துக் கிடந்தவனுக்கு கொலுசு சப்தம் கேட்க ஆரம்பித்தது. இதயத்துடிப்புகளை காலில் கட்டியல்லவா பெண்கள் நடக்கிறார்கள் என்றபடி நிமிர்ந்தவனின் முன்னே காலில் கொலுசுகளுடன் ஹம்ஸேஸ்வரி நின்றிருந்தாள். ஹம்ஸேஸ்வரி!

ஜெயராஜ் தன்னிடம் கூறியவற்றை மனத்திற்குள் அசைபோட்டபடி நடந்த சந்திரன் மீண்டும் உட்கார்ந்து அனைத்தையும் எழுதலானான்.

பூமி ஸ்பர்ஸம். போக தந்திரத்தின் முதல் நிலை. அதை ஜெயராஜ் மலையுச்சியில் கண்டுபிடித்தபோது அவன் அரசியல் காரணங்களுக்காகத் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தான். அப்போது அவன் இந்திய நனவிலி ஜாதிய நனவிலி என்று நமபினான். பிரச்சாரம் செய்தான். இனவெறியின் உச்சகட்ட கூக்குரல் அது என்று அப்போது அவன் அறிந்திருக்கவில்லை. ஹம்ஸேஸ்வரி என்ற வசியக்காரி, மோகினி, பழங்குடிப்பெண்தான் பூமிதான் இயற்கைதான் எனவே பெண்மைதான் இந்திய நனவிலி என்பதை ஜெயராஜுக்கு உணர்த்தினாள். புணர்ச்சியின் எல்லையின்மையை இயற்கையாய் அவள் விரித்துக்காட்டியபோது இனங்களின் குறுகிய எல்லைகளைத் தாண்டி ஓடும் பெண்மையின் ரகசிய சங்கேதங்களை அவன் புரிந்து கொண்டான். பெண்மையின் ஜீவத் துடிப்பான ரகசிய சங்கேதங்களை அப்போது கலகலத்து குதூகலித்துக் கடத்தியது காடு. மலையுச்சியில் அமைந்திருந்த காடு. பெண்ணே நனவிலி நனவிலியே மொழி என்ற சிறிய கலாபூர்வமான உண்மை தனக்கு புத்தி பேதலிக்கும் நாள் வரை தெரியவில்லையே என்று ஜெயராஜ் பின்னால் பலமுறைத் தன்னைத்தானே நொந்துகொண்டான். அறிவுக்கு அப்பாற்பட்டதை அறிவு வழி காண முயன்றதும் சில்லறை அரசியலில் லாபம் காண முயன்றதுமே தன்னுடைய மிகப் பெரிய சறுக்கலகள் என்றுணர்ந்து கேவிக் கேவி அழுத ஜெயராஜ் ஹம்ஸேஸ்வரியின் போக தந்திரங்களுக்குட்பட்டு புத்தி பேதலிக்க மனமுவந்து சம்மதித்தான் என்று நம்ப இடமிருக்கிறது.

பூமியின் ஸ்பர்ஸத்தால் இவ்வாறு ஸ்மரணை பெர்ற ஜெயராஜுக்கு தெற்கின் வலி நிரம்பிய சமகாலத்திய அறிவற்ற வாதம் புரிய ஆரம்பித்தது. போக தந்திரத்தின் அடுத்த நிலையான கீர்த்தனைக்கு ஹம்ஸேஸ்வரி அவனை ஆட்படுத்தினாள். கனமான கறுத்த மேகத்தின் வயிற்றில் நிறைந்துள்ள மழைத்துளிகளை ஒன்றாய்த் திரட்டிக்கொண்டு திடீரென கிளம்பி வரும் புயலானது எவ்வாறு நீல நிறமுள்ள கடலை ஒரு கலக்கு கலக்கி அகாதமான அதன் அடிப்பாகத்திலிருந்து சிறிதும் தங்கு தடையின்றி ஒன்றையொன்று மோதி அடித்து வரும் மலை போன்ற திரைகளை எழுப்பி அந்தக் கடலையே ஒரே கலக்காய் கலக்கி விடுகிறதோ அவ்வாறே ஹம்ஸேஸ்வரி ஜெயராஜை ஆட்கொண்டாள். மூடிய அவள் இமைகளில் முத்தமிட்ட ஜெயராஜின் உடல்வெளி பாலைவனமாய் விரிவடைய, ஈரப்பதம் நிரம்பிய மணற் புயலாய் அவள் அவனுள் சுழன்றாடினாள். காற்றையே தங்களைச் சுற்றிய திரையாகக் கொண்டு மிருதுவான இன்பக்கடலில் ஆவேசமாய் அவர்கள் ஆழ்ந்திருக்கையில் தாளவொண்ணா தாபத்தை கமகமவென்ற சுகந்ததுடன் கீர்த்தனைகளாக இசைத்தது காற்று.

பாடு. பெண்மையின் புகழைப் பாடு.ஆராதனை செய். கற்பூரம் நாறுமோ, கமலப் பூ நாறுமோ, உந்தன் திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ ஹம்ஸேஸ்வரி ஹம்ஸே ஹம்ஸே
 கொஞ்சு திகட்டத் திகட்டக் கொஞ்சு. கொஞ்சுதல் பிறாண்டலாக, நகக்கீறல் தாபமாக, தாபம் சங்கமமாகட்டும். கொஞ்சு கீர்த்தனைகளால் கொஞ்சு. இனிய சொற்களால் கொஞ்சு. ஹம்ஸே ஹம்ஸே என்று பிதற்று. உன் மார்பின் அடியாழத்திலிருந்து புறப்படும் இனிய சொற்கள் தாமாகவே மலர்ந்த புஷ்பங்களாய் சொரிந்து மிருதுவான கம்பளத்தை உருவாக்கட்டும் கீர்த்த்னையின் இனிய செந்தழல் பாலைவனம் முழுக்க குங்குமப்பூக்களால் நிறைக்கட்டும். கற்றாழைகளும் மலரட்டும். ஈச்சம் மரங்கள் ஜீவசக்தியை தங்கள் கனிகளின் வழி பரப்பட்டும். ஹம்ஸே ஹம்ஸே எனப் பிதற்றி பெண்மையைப் போற்று. பெண்மையைப் போற்றுதும் பெண்மையைப் போற்றுதும்- கனிந்த காதல், இன்னுரையாடி அன்பு புகட்டல், புன் முறுவலுடன் ஆசை தெரிவித்தல், நயந்து மயக்கல், காமத் தீயை அணையாது காத்தல், நயம்படவுரைத்து தன்வசமாக்கல், பெருமூச்செறிந்து மிக்க வலிவுடன் அணைத்துப் பிணித்தல், வாய் திறவாமல் மௌனமாகவிருந்து மனக்கருத்துரைத்தல் கண்களை சிமிட்டி காதலையூட்டல் என கீர்த்தனைகள் விரியட்டும். காதலனாகி பெண்மையைப் போற்று. துதிபாடு. பெண்மையை வணங்கு. ஹம்ஸே ஹம்ஸே ஹம்ஸேஸ்வரி ஹம்- என்பது அகத்தையும், அகம் இயற்கையின் வழி தன்னைத் தானே பொருளாகப் பார்த்துக்கொள்வதையும் குறிக்கட்டும். ஸே என்பது இப்பிரபஞ்சத்தில் இயக்கத்திலிருக்கும் சக்தியைக் குறிக்கட்டும். இரண்டின் இணைவான ஹம்ஸே மனிதப் பிரக்ஞையின் உச்சபட்ச சாத்தியப்பாடான ஹம்ஸாத்மனைக் காணட்டும். ஹம்ஸாத்மன் அகமும் புறமும் இணைந்த தன்னிலையாக எட்டு இதழ்களையுடைய தாமரையாய் மலரட்டும்.  ஹம்ஸே ஹம்ஸே ஹம்ஸே ஹம்ஸே ஹம்ஸே ஹம்ஸே ஹம்ஸே ஹம்ஸே

காற்றின் கீர்த்தனையில் சொக்கிக்கிடந்த ஜெயராஜை நினைத்துக் கதையை எழுதிக்கொண்டிருந்த சந்திரனுக்கே பொறாமையாக இருந்தது. பொறாமையை மறைத்துக் கொண்டு சந்திரன் தொடர்ந்து எழுதலானான்.

காற்றின் கீர்த்தனையில் சிக்கிய ஜெயராஜ் சாமியாரென்றும் சித்தரென்றும் வைத்தியரென்றும் பழங்குடிகளால் அழைக்கப்பெற்று மரியாதையுடன் நடத்தப்பட்டான். மத்திய அரசாங்கத்தால் பழங்குடியினரின் மருத்துவராக நியமிக்கப்பட்ட நான் என்னிடம் சிகிக்சைக்கு ஆட்களே வராத நிலையில் காரணமென்னவென்று அறிய முற்பட்டேன். அரசாங்க சம்பளத்தை வாங்கிக்கொண்டு வேலையேயில்லாமல் மலைப்பகுதியில் ஜாலியாக சுற்றி வருவது எனக்கு உகந்ததாக இருந்தாலும் மருத்துவக் கல்லூரியில் படித்ததெல்லாம் மறந்துவிடும் நிலை ஏற்பட்டதால் மக்கள் என்னிடம் ஏன் வரவில்லை என அறிவதில் ஆர்வம் அதிகமாகியது. வைத்தியராகக் கருதப்பட்ட ஜெயராஜிடம் மக்கள் செல்வதைக் கண்டு நான் பேசாமல் கதை கவிதை எழுதி பொழுதைக் கழித்தேன். ஆனால் ஜெயராஜே கடுமையான ஜுரத்தில் பாதிக்கப்பட்டபோது வேறு வழியில்லாமல் பழங்குடியினர் அவனை என்னிடத்தில் கொண்டு வந்தனர். காற்றின் கீர்த்தனையிலிருந்து விடுபட இயலாதவாறு சிக்கியிருந்த ஜெயராஜ் அப்போதும் ஹம்ஸே ஹம்ஸே என்று அரற்றிகொண்டிருந்தான். பௌர்ணமிக்குள் குணமாகிவிடவேண்டும் என்றும் பிதற்றினான். அவனை குணமாக்கிவிடுவதாக ஆசுவாசப்படுத்திய நான் அவனுடைய முழுக்கதையும் கேட்டேன்.

அப்போதுதான் அவன் தன்னுடைய அரசியல் ஈடுபாடு, தலைமறைவு வாழ்க்கை, ஹம்ஸேஸ்வரியை சந்தித்தது, போக தந்திரங்களின் இரண்டாம் நிலையில் இருப்பது ஆகியவற்றை என்னிடம் கூறினான். ஹம்ஸேஸ்வரியினால் மிகவும் ஈர்க்கப்பட்ட நான் அவள் யார் என்பதை அறிவதில் மிகுந்த ஆர்வம் காட்டினேன். ஆனால் எல்லாவற்றையும் என்னோடு பகிர்ந்துகொண்ட ஜெயராஜோ அவள் யார் என்று மட்டும் எனக்குச் சொல்லவேயில்லை. ஹம்ஸேஸ்வரி என்ற பெயரில் பழங்குடிப்பெண் யாருமில்லை என்பதைக் கண்டறிந்தேன். இருந்தபோதிலும் எனக்கு எல்லா பழங்குடிப் பெண்களுமே ஹம்ஸேஸ்வரியாகத் தோன்றினர். விடுமுறை நாட்களில் சமவெளிக்கும் நகரங்களுக்கும் சென்று வந்தபோது அங்கேயுள்ள பெண்களும் ஹம்ஸேஸ்வரிகளாகத் தோன்றினர். மொத்தத்தில் உலகிலுள்ள அத்தனைப் பெண்களின் மேலும் மோகங்கொண்டவனானேன். 

ஹம்ஸே ஹம்ஸே என்று ஜெயராஜோடு சேர்ந்து நானும் மனத்திற்குள் பிதற்றலானேன். எங்கே ஜெயராஜைக் குணப்படுத்திவிட்டால் ஹம்ஸேஸ்வரியை எனக்கு அடையாளம் காட்டாமல் போய்விடுவானோ என்ற எண்ணத்தில் அவனைக் குணப்படுத்துவதைத் தொடர்ந்து தள்ளிப் போட்டு வந்தேன். அவனோ இதையெல்லாம் பொருட்படுத்தக்கூடிய நிலையில் இல்லை. தொடர்ந்து நனவுக்கும் நனவற்ற நிலைக்குமிடையே பயணம் செய்தபடி, பிதற்றியபடி கிடந்தான். 

பௌர்ணமியும் நெருங்கிக்கொண்டிருந்தது. போக தந்திரத்தின் மூன்றாம் நிலை அன்று வெளிப்படுமென்று உறுதியாக நான் நம்பினேன்.

ஜெயராஜிடம் தொடர்ந்து மூன்றாம் நிலை என்னவென்று கேட்டு நச்சரித்துக்கொண்டிருந்தேன். போக தந்திரங்களை எந்தக் காலத்திலும் எந்த ரூபத்திலும் வெளிச் சொல்ல மாட்டேனென்று சத்தியம் செயது கொடுத்தபின் மூன்றாம் நிலை கேளிக்கை, கேலி, லீலை, விளையாட்டு, நடனம், கொண்டாட்டம் என்றுரைத்தான். உதய காலத்தில் கிழக்கு நோக்கிச் செல்லவேண்டுமென்றும் அவன் சொன்னான். சூரியோதயமா, சந்திரோதயமா என்று அவன் குறிப்பிடவில்லையெனினும் சூரியோதயம் என்று நான் புரிந்துகொண்டேன். உதயகால கிழக்கில் இருக்கிறது என் லட்சிய நாடு என்றும் அவன் குறிப்பிட்டான். தன் அரசியல் கொள்கைகளையும் esoteric தாந்தரீகத்தையும் அவன் இணைப்பது பொருத்தமானதாகவோ அர்த்தமுள்ளதாகவோ எனக்குப்படவில்லை என்றாலும் காம வேட்கையால் உந்தப்பட்ட நான் அதைப் பற்றி அதிகம் கவலைப்படாதிருந்தேன். 

பௌர்ணமியன்று அதிகாலை மூன்று மணிக்கு அலாரம் வைத்து முழித்தேன். ஜெயராஜ் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தான். அவனை எழுப்பாமல் மெதுவாகக் கிளம்பி கிழக்கு நோக்கி நடக்க ஆரம்பித்தேன். கும்மிருட்டு. அன்று பகல் கழிந்தால் இரவில் பௌர்ணமி என்றாலும் கருமேகங்கள் பல வானில் அடர்ந்திருந்தபடியால் நிலவொளி தரையிறங்கவில்லை. காரிருளில் நடக்க மனம் சம்மதிக்கவில்லை. மீண்டும் அறைக்குத் திரும்பி உதயத்தின் பட்சி ஜாலங்களுக்காகக் காத்திருந்தேன். ஜெயராஜ் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான். என் மனதை ஏதோ இனம் தெரியாத பயம் பீடித்துக்கொண்டது. நான்கு விஷயங்களை நான் அடியோடு அழித்தால்தான் என்னால் ஹம்ஸேஸ்வரியை காண இயலும் என ஜெயராஜ் காய்ச்சலில் உளறியது எனக்கு நினைவுக்கு வந்தது. நான்கு விஷயங்களையும் பேப்பரில் எழுதினேன்: 1 பயம் 2 தெளிவு 3 அதிகாரம் 4 சோம்பல்

பயமிருந்தால் எதையுமே அறிய முடியாது. பயம் ஒழித்து அறிந்தபின் கிடைக்கும் தெளிவோ அறிவு முழுமையடைந்துவிட்டது என்ற மாயையைத் தோற்றுவிக்கக்கூடியது. முழுமையடையாத அறிவினால் கிடைக்கும் அதிகாரம் என்றுமே என்னுடையதல்ல. முழுமையான அறிவினைப் பெற ஒரு கணம் நான் சோம்பினாலும் நான் என்றுமே வெற்றி பெற மாட்டேன். ஜெயராஜின் வார்த்தைகளுக்கு ஏற்ற தர்க்கத்தை நான் எப்படியாவது உருவாக்கிவிடுகிறேன். உதாரணமாக தெளிவு என்பதை அறிவுக்குத் தடையாக யாரும் கருத மாட்டார்கள் ஆனால் என்னால் அதற்கேற்ற தர்க்கத்தை உண்டாக்க முடிந்திருக்கிறது. இவ்வாறு யோசித்து யோசித்தே பொழுதைக் கழித்தேன். கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் இப்படி தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடைப்பட்ட நிலையில் கழித்தபின் சிந்தனையற்ற ஒரு கணத்தில் கிழக்கு நோக்கி ஓடினேன். ஹம்ஸே எங்கிருக்கிறாய் நீ?

பட்சிகள் விழித்துக்கொண்டிருந்தன. அவைகளின் பலவித ஒலிகள் என் கண் முன்னே அலை அலைகளாய் எழும்ப அவற்றின் திடத்தன்மையைக் கிழித்துக்கொண்டு ஓடினேன்.  

எப்படி அந்த உயரமான மலைமேட்டினை அடைந்தேன் என்று நினைவில்லை. மூச்சு வாங்கியது. அந்த முகட்டிலிருந்து சடாரென்று கீழிறங்கியது அதலபாதாளம். மலைசசரிவு கடற்கரையைத் தொட மலையிலிருந்து வீழ்ந்த அருவி கடலைத் தொட என விநோத உறவில் சமைந்திருந்தது அந்தக் காட்சி. 

நான் ஓடி வந்த வேகத்தில் மலைச்சரிவில் விழுந்திருக்கக்கூடுமென்ற சாத்தியம் சட்டென்று உறைத்ததில் அறிவு சூன்யமாக திகைத்த அக்கணத்தில் சூர்யா கடலிலிருந்து உதயமானாள். 

பளபளத்து ஜொலிக்கும் செந்நிற முகம் மோகமே உருவாக கடலில் எழ அவளின் கூந்தல் ஆகாய வீதியாய் விரிந்து கிடந்தது. உதயரேகைகளை மின் வெட்டிய கடலே முலைகளாக காடு அவளின் இடுப்பாயிருந்தது. அவள் முலையிலிருந்து பீறிட்டு மலைமேல் பாயும் பாலேயென தோற்றம் கொண்டது அருவி. அகண்டு விரிந்த அவள் கால்களின் திரிகோண வடிவே மலை முகடாகவும் சரிவாகவும் விகசிக்க அவளுடைய முழங்கால் முட்டியில் நிற்பதேயான பிரேமையை நானடைந்தேன். கலகலவென நகைத்தபடி சூர்யா சிந்திய ரச்மிகளும் ஒளிக்கிரணங்களும் என் வல மூச்சினை கட்டி இழுத்து ஆகர்ஷிக்க அதை யோனியின் ஆகர்ஷணமாய் உணர்ந்த நான் ஹம்ஸே என்று கதறியபடி மலைச்சரிவேயென விரிந்த அவள் தொடையிடுக்கில் வீழ்ந்தேன். 

எத்தனை நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்தேன் என்று நினைவில்லை. ஆனால் நினைவு திரும்பியபோது கடைசியாக நிகழ்ந்ததனைத்தும் துல்லியமாகக் கண் முன்னே காட்சியாயிற்று. கை, கால், தலை எல்லாம் மாவுக் கட்டு போட்டிருந்தது. பெரும் உயரத்திலிருந்தல்லவா விழுந்திருக்கிறேன்! உயிர் பிழைத்ததே அதிசயமாகத்தானிருக்க வேண்டும். டாக்டர் வந்து பரிசோதித்துவிட்டு எலும்பு முறிவு ஏதுமில்லை என்றாலும் உள்காயங்களைத் தவிர்ப்பதற்காகக் கட்டு போட்டிருப்பதாகச் சொன்னார். ஊரிலிருக்கும் அம்மா, அப்பாவிற்கு செய்தி அனுப்பியிருப்பதாகவும் சொன்னார்.

“ஒரே நாளில் இப்படி டாக்டரும் பேஷண்டும் ஓடிப்போய் மலை முகட்டிலிருந்து கீழே குதிப்பார்களா? நல்ல வேடிக்கை”  டாக்டர் என்னுடைய விபத்து பற்றி விசாரிக்க வந்திருந்த போலீஸ்காரரிடம் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போதுதான் எனக்கு ஜெயராஜுக்கும் நேர்ந்த விபத்து தெரிய வந்தது. 

எனக்கு பக்கத்து கட்டிலிலேதான் அவனும் உடல் முழுக்க கட்டோடு கிடந்திருக்கிறான். எனக்கு நினைவு வந்தபோதுதான் அவனுக்கும் நினைவு வந்திருக்க வேண்டும். 

எனக்கு அவனைப் பார்த்தும் அவனுக்கு என்னைப் பார்த்தும் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. 

“பௌர்ணமியன்று சூரியோதயம் காணப் புறப்பட்ட முட்டாள் நீ” என்றான் அவன்.

“பௌர்ணமியன்று சந்திரோதயம் கண்டதன் விளைவு ஒன்றும் என் அனுபவத்திலிருந்து மாறுபடவில்லையே” என்றேன் நான். இருவருக்கும் சிரிப்பு  தாளவில்லை. பக்கத்து பக்கத்து கட்டில்களில் மாவுக்கட்டுகளோடு படுத்துக்கொண்டு சிரித்துக்கொண்டிருப்பதைப் பார்த்த போலீஸ்காரருக்கு ஒன்றுமே புரியவில்லை. எங்களிருவருக்குமிடையில் சண்டையையும் சதியையும் எதிர்பார்த்து வந்த அவருக்கு நிலவின் முகத்தோடு கூடிய ஹம்ஸேயைப் பற்றி அவனும், சூரிய முகத்தோடு கூடிய ஹம்ஸேயைப் பற்றி நானும் பேசிக்கொண்டிருந்தது அபத்தமாயிருந்திருக்க வேண்டும். ஆஸ்பத்திரி வராந்தாவில் தொப்பியைக் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு வழுக்கைத் தலையை தடவியபடி அவர் சிகரெட் பிடித்துக்கொண்டிருக்கும் காட்சியை நானும் ஜெயராஜும் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தோம். 

“புரட்சியாளர்களுக்கு மட்டும் இப்படி ஒரு ரகசிய பரிபாஷை கிடைத்திருக்குமானால் …” என்று பெருமூச்சுவிட்டான் ஜெயராஜ்.  நான் அதை ரசிக்கவில்லையென்றாலும் ரகசிய பரிபாஷை எனபதே போகதந்திரத்தின் அடுத்த நிலை என்பதை உணர்ந்து கொண்டேன்.

கிட்டத்தட்ட ஒரு மாத காலம் நாங்கள் ஆஸ்பத்திரியில் கழித்தோம். என் வாழ்நாளிலேயே மறக்க முடியாத ஆனந்த நாட்கள் அவைதாம். எங்களிருவருக்கும் நினைவு தப்பி தப்பி மீண்டு வந்துகொண்டிருந்தது. நினைவு வந்தபோதெல்லாம் நாங்கள் நடந்ததை நினைத்து நினைத்து சிரித்தோம். ஒரே பெண்ணைக் காதலித்து ஏமாந்த இரு நண்பர்களின் அரட்டை போல எங்களின் பேச்சு மற்றவர்களுக்கு அர்த்தமாகியிருக்கக்கூடும். சில நாட்கள் கழிந்தபின் ஜெயராஜுக்கு நினைவு தப்பும்போது நான் நனவுடனிருப்பதும் அவன் நனவுடனிருக்கும்போது எனக்கு நினைவு தப்புவதும் நிகழ ஆரம்பித்தது. இருவரும் நனவுடன் இருக்கும் அபூர்வ தருணங்களில் மயக்கமாக இருக்கும்போது கூட இருவர் முகத்திலும் புன்முறுவல் மாறவில்லை என்று ஒருவருக்கொருவர் கூறிக்கொண்டோம். 

இன்னும் கேளிக்கை நிலையிலேயே இருக்கிறோம் என்பதும் அறிவு வழி கேளிக்கையை அணுகியதாலேயே கேலிக்குள்ளானோம் என்றும் எங்களுக்குத் தெரியவந்தது.

ஊரிலிருந்து என்னைப் பார்க்க வந்திருந்த என் இலக்கிய நண்பன் மூலமாக ஹம்ஸேஸ்வரிக்கென்று வங்காளத்தில் கோயிலொன்று இருப்பதாக அறிந்தேன். அந்தக் கோயில் தாந்தரீக முறைகளின்படி சுழற்பாதைகளால் அமைக்கப்பட்டதென்றும் அபூர்வமான கட்டிடக்கலை என்றும் என் நண்பன் தெரிவித்தான். ஜெயராஜிடம் இதைக்கூறியபோது மேற்கு வங்காளத்தில் மட்டுமல்ல கேரளாவிலும் ஆந்திராவிலும் கூட மனித மனங்களின் உள் அறைகளில் ஹம்ஸேஸ்வரியின் கோவில்கள் உள்ளன என்றான். 

எனக்கு அவன் சொன்னது உடனடியாகப் புரியவில்லை. இரண்டு மூன்று நாட்கள் கழித்து புரிந்தபோது “ நீ ஏன் போக தந்திரங்களும் புரட்சியும், Marxism and Mysticism என்றெல்லாம் புத்தகங்கள் எழுதக்கூடாது?” என்றேன்.

என் கேலியை அவன் சுத்தமாக ரசிக்கவில்லை என்பதை அவன் முகமே வெளிக்காட்டியது. அந்த தருணத்தோடு அவன் என்னிடம் பேசுவதை அடியோடு நிறுத்திவிட்டான். ஆரம்பத்தில் இது எனக்கு மிகுந்த வருத்தத்தை தந்தாலும் அவன் முகத்தைத் திருப்பிக்கொண்டு போனபோது சரிதான் போடா என்று இருந்துவிட்டேன். 

இனிய போதை நிரம்பிய ஆஸ்பத்திரி நாட்கள் இப்படித் திரும்பும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. ஆனாலும் எனக்கு போகதந்திரங்களின் மூலம் அடையக்கூடிய ஹம்ஸேஸ்வரியின் மேல் மோகம் தீர்ந்தபாடில்லை. ஜெயராஜோ என்னிடம் பேசுவதில்லை. அவனுக்குத்தான் போக தந்திரத்தின் நிலைகள் தெரியும் என்ன செய்வது?

ஒரு நாள் ஜெயராஜ் நினைவு தப்பி தூங்கிக் கிடந்தபோது அவன் டைரியை எடுத்து ஆராய்ந்தேன். அதில் போக தந்திர நிலைகள் அனைத்தும் தேதிவாரியாகக் குறிப்பிடப்பட்டிருந்தன. தந்திர நிலைகளோடு அந்தந்த தேதிகளில் நடந்த சம்பவங்களைப் பின் வருமாறு தொடர்புபடுத்தினேன்.

போக தந்திரங்கள்:

  1. பூமி ஸ்பர்ஸம்/ஸ்மரணை பெறுதல்/ உள்ளார்ந்த அழைப்பு: ஜெயராஜ் பூமியின் இதயத் துடிப்பைக் கேட்டது
  2. கீர்த்தனை- பெண்மையின் புகழ்பாடுதல் - காற்றின் கீர்த்தனையில் ஜெயராஜ் சொக்கிக் கிடந்தது
  3. கேளிக்கை- நான் சூரியோதயத்தையும், ஜெயராஜ் சந்திரோதயத்தையும் கண்டது- ஆஸ்பத்திரி வாசம்
  4. விசேஷ அலங்காரம்- ஆஸ்பத்திரியில் மாவுக்கட்டுகளுடன் கிடந்த காட்சி
  5. ரகசிய பரிபாஷை- ஜெயராஜ் புரட்சி பற்றி பேசியதை நான் போகமெனவும் நான் போகம் பற்றி பேசியதை ஜெயராஜ் புரட்சியெனவும் புரிந்துகொண்டது
  6. சங்கல்பம்- எங்களுடைய குறிக்கோளை அடைவதில் இருவருமே தீவிரமாக இருப்பது
  7. பொறுமையும், கடின உழைப்பும்- காலம்தான் பதில் சொல்ல வேண்டும்
  8. சங்கமம்- எப்போது? எங்கே? எப்படி? யாரே அறிவர்?


ஜெயராஜுக்கு நான் அவனுடைய டைரியைத் திருடியது தெரிந்திருக்காது என்றே நம்பினேன். இதற்கிடையில் நாங்கள் முற்றாக குணமாகிவிட்டோம். இரொண்டொரு நாளில் ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டிற்குப் போகலாம் என்ற நிலையில் ஜெயராஜ் காணாமல் போனான். எங்களுடைய விபத்தைப் பற்றி விசாரிக்க வந்த போலீஸ்காரர் ஜெயராஜின் கடந்த காலத்தை கண்டுபிடித்துவிட்டதால் மீண்டும் அவன் தலைமறைவாகிவிட்டான் என்று நம்ப அல்லது யூகிக்க இடமிருக்கிறது. நல்ல வேளையாக போலீஸ்காரர் என்னை ஏதும் கேட்கவில்லை. கேட்டாலும் எனக்கு என்ன தெரியும்?

ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டிற்குத் திரும்பிய பின் ஏதாவது நிலையை செயல்படுத்த வேண்டி ஏராளமாகப் படித்தேன். அல்டோஸ் ஹக்ஸ்லி, தாமஸ் டிக்வென்ஸி, டோல்கியென், கார்லோஸ் கேஸ்டனெடா, டிமோதி லியரி, ஜான் லில்லி, ஆலென் கின்ஸ்பெர்க், வில்லியம் பர்ரோஸ், உம்பர்டோ ஈக்கோ என்று படித்துத் தள்ளினேன். என்னால் எந்த முடிவுக்கும் வர இயலவில்லை. எதைத் தேடுகிறேன் என்றும் புரியவில்லை. பெண் வேடமிட்ட பெண்; புரியாத சங்கேதம். ஜெயராஜ் இந்நேரம்  மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாவோ என்று படித்துக்கொண்டிருக்கக்கூடும் என்றும் நினைத்தேன். எல்லாமே வீண் என்று தோன்ற ஆரம்பித்தது. இரவு நீண்ட நேரம் படித்துவிட்டு அன்று படித்துக்கொண்டிருந்த “The Tibetan book of the dead” என்ற புத்தகத்தைத் தலைக்கடியில் வைத்து தூங்கியபோது அந்த தெளிவற்ற கனவைக் கண்டேன். 

உடல் வெளியையே கோவிலாய் சமைத்த ஹம்ஸேஸ்வரி கோவிலினுள் நின்று கொண்டிருக்கிறேன். ஆறு சக்கரங்களீன் வழி வேப்பமரத்தாலான மூலஸ்தானம் நோக்கி ஏணிகள் இடப்பட்டுள்ளன. குழப்பமான சுழற்பாதைகளில் திகைத்து திகைத்து நகர்கிறேன். சந்திர ஒளி இடது நாடியாகவும் சூரிய ஒளி வலது நாடியாகவும் என்னுள் துடிக்கிறது. இடா, பிங்களா, சூஷும்னா, வஜ்ரக்ஷா, சித்ரீனீ என்று வழிகள் பெயரிடப்பட்டிருக்கின்றன. அகஸ்மாத்தாய் சுழலும் என் வழியில் திடீரென ஹம்ஸேஸ்வரி நிற்கிறாள். பழங்குடி பெண்ணே போல. மின்னும் கறுப்பு உடலுடன். காந்த சக்தி மிக்க கண்களூடன். வலது கை அபயம் அபயம் என. இடது கையில் சங்குடன், மூன்றாவது கையில் வெள்ளை மனிதத் தலையை பிடித்தபடி. நான்காவது கையில் வாளினை ஏந்தியபடி ஹம்ஸேஸ்வரி நிற்கிறாள். ஹம்ஸே ஹம்ஸே என்று நான் அரற்ற முழிப்பு தட்டிவிட்டது. எழுந்து உட்கார்ந்து இக்கதையை எழுத ஆரம்பித்தேன். இக்கதையை ஜெயராஜ் சொல்லியிருந்தால் பாரததேவிதான் ஹம்ஸேஸ்வரி என முற்றிலும் வேறு கோணத்திலிருந்து சொல்லியிருப்பான் என்று பட்டது. ஆனால் அவன் கதையையும் இதற்குள் வாசிக்க முடியும் என்றே நம்புகிறேன். நீங்கள் ஆணாயிருந்து இக்கதையை வாசித்தால் இக்கதைப் பனுவலே ஹம்ஸேஸ்வரியாகவும் நான் கதை சொல்லியாகவும் நீங்கள் ஜெயராஜாகவும் உணர்வீர்கள்.

நீங்கள் பெண்ணாயிருந்து இக்கதையை வாசித்தால் இக்கதைப் பனுவலே ஜெயராஜாகவும் நீங்கள் ஹம்ஸேஸ்வரியாகவும் நான் கதை சொல்லியாகவும் உணர்வீர்கள். 

வேறு சிலர் வேறு விதமாக உணர்ந்தால் கதையின் ஆரம்பப் பீடிகையை தயவு செய்து மீண்டும் வாசிக்கவும். தயவுசெய்து.


-----------------------------------------------------------------------

குறிப்பு: 1991இல் நான் ஸில்வியா என்ற புனைபெயரில் எழுதிய இக்கதை எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன் ஆசிரியராகச் செயல்பட்டு பதிப்பித்த “உன்னதம்” இலக்கிய சிற்றிதழில் 1994இல் பிரசுரமாகியது. இக்கதையை, இங்கே மீள் பிரசுரம் செய்யும் பொருட்டு, எனக்கு அனுப்பித் தந்த நண்பர் கௌதம சித்தார்த்தனுக்கு என் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.



Sunday, June 7, 2015


அழிப்பாக்கத்தின் மறு ஒப்பனை ‘பெண் வேடமிட்ட பெண்’ - எஸ். சண்முகம் | நன்றி கோணங்கியின் 'கல்குதிரை' 25 ஆவது இதழ் 2015





அழிப்பாக்கத்தின் மறு ஒப்பனை ‘பெண் வேடமிட்ட பெண்’ - எஸ். சண்முகம்

1


    மொழியுள் உறையும் புனைவை கதைசொல்லி இடம்மாற்றி முன்னும் பின்னுமாக நகர்த்தி சுயபிரக்ஞையின் எல்லையில் வாசகனை நிற்க வைத்து கண்களுக்கு அப்பால் உள்ள கதையுலகை காட்சிப்படுத்தும் கதைகள்தான் அபூர்வமானவை. எழுதப்படும் கதையில் மற்றொரு கதையின் சுவட்டை அழிப்பாக்கம் செய்வதும், அழிப்பாக்கத்திலிருந்து மீளுரு கொள்ளும் எழுதப்படும் கதையின் கதையாடல் எம்.டி.முத்துக்குமாரசாமியின் ‘பெண் வேடமிட்ட பெண்’. தன்னுணர்வின் எல்லைகளை யத்தனிப்பின்றி கடப்பதும், மீண்டும் அதிலேயே உழல்வதும் மொழிப்பித்தத்தின் பாதப்பதிவுகளாய் நீள்கிறது எம்டிஎம்மின் கதையாடல். பிரதியின் மூன்று மொழிவெளிகள் -ஹம்ஸேஸ்வரி, ஜெயராஜ், கதைசொல்லி- இவைகளிடையே நிகழ்ந்து கலைந்த கதையாடல்களை மறுபடியும் சீட்டுக்கட்டை கலைத்து மீள்பரப்பில் ஏற்படும் புதிய வகைமாதிரிகளின் எண்ணற்றதன்மையில் புனைவு விரிகிறது. இம்மூன்று பிரதியின்மொழிநிலைகள் ஒன்றையொன்று அடுத்ததின் வெளியை மீறியும் பகிர்ந்தும் சொல்லும் பரஸ்பரத்தில் கதையாகித் திளைக்கிறது ‘பெண் வேடமிட்ட பெண்’.

Adrian Moore's 'Erasure'


    கதையின் வடிவத்தை எழுதி அதற்குள்ளிருக்கும் எதிர் வடிவத்தை கதையாடல்களில் சொல்லிச்செல்வது நவீனத்துவம் பிறழும், நவீனத்துவத்துக்குப் பிந்தைய பொருண்மையைப் பிரதிப்படுத்தும் இக்கதையில் நிகழ்கிறது. கதையாடலின் மொழி வேடத்தில் கதை என்ற வகையைச் சார்ந்த அம்சம் தன்னையிழந்த சொல்லுதல்களாக சேகரமாகின்றன. மூன்று புள்ளிகளிலிருந்து சுழித்து, வெளிப்படும் கதையாடல் வெவ்வேறு பிரதியின் சகநிகழ்வுகளாக கதையுறுகிறது. மூன்று கதைகளின் மூன்று எதிரெதிர் புள்ளிகளின் மறுசொல்லல் ‘பெண் வேடமிட்ட பெண்’ணின் கதைமொழி. மூன்று வட்டங்கள் முக்கோண நிலைப்புள்ளிகளில் தன்னை மற்றமையோடு புணரும் மொழிவெளியை கதையாடலாக்கும் வினோத விளையாட்டு எம்.டி.எம்மின் புனைவு. தனக்குத்தானே சொல்லிக்கொள்ளும் கதையை நமக்குச் சொல்கிறது இவரின் கதையாடல். 





2


    ஒரு நிகழ்வை முன்னிறுத்தி முன்நிகழ்வாகப் பார்த்தல் கதையின் நுட்பம். எழுதும் கதியில் எழுதப்படும் பிரதியியல் குறி தன் முன்னே வார்த்தையாகி நிற்பதை பன்மைப்படுத்துதல் எனலாம்.
“சந்தோஷத்தை விகார இளிப்பில் காட்டியபடி, காதை மலைமேட்டில் அழுத்தி, மண்டியிட்டு படுத்துக்கிடந்தவனுக்கு கொலுசுச்சத்தம் கேட்க ஆரம்பித்தது. இதயத் துடிப்பை காலில் கட்டியல்லவா பெண்கள் நடக்கிறார்கள் என்றபடி நிமிர்ந்தவனின் முன்னே காலில் கொலுசுகளுடன் ஹம்ஸேஸ்வரி நின்றிருந்தாள், ஹம்ஸேஸ்வரி”

    இந்தக்குறிப்பில் வெளிப்படும் ஹம்ஸேஸ்வரியின் உடலியத்தின் நிலையின்மையைச் சொல்லும் மாற்றுக் கதையாடலை இதன்மேல் அடுக்கிச் செல்வதைப் பாருங்கள்.

    “எழுதிக்கொண்டிருந்த சந்திரன் கதையை நிறுத்திவிட்டு வெளியே பார்த்தான். ஆமாம் பெண் வேடமிட்ட பெண்’ பூமிதானென்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். கதைப்பிரதி எழுதும் தருணத்தில் அசட்டையாக நிகழும் பார்த்தலில் கதையே பூமியுருவாக தோற்றம் கொள்ளுதல் பிறரின் வார்த்தையில் பொருளடைதல் கதைசொல்லியின் பாதத்தில் உண்டாகிறது. அப்படியெனில் கதைசொல்லியின் இடையீட்டுப் பார்த்தலில் மொழி ஸ்தூலம் பெறுகிறது. கதைசொல்லியின் இப்பார்த்தல்போல்தான் கதைப்பிரதியின் வாசகனின் வாசிப்புக்கிடையே நிகழ்ந்துவிடும் பார்த்தல். அதன் மூலம் கதை பொருள்பெறுகிறது. இது ஒவ்வொரு அநித்திய கணத்தில் நிகழ்கிறது.

    “என்னை நீ கைவிடமாட்டாய், எதிர்காலமாய் எனவே சாவாகவும் இறந்தகாலமாக எனவே மதமாகவும் விளங்கும் மேற்குதிசையிலிருந்து உன் வெப்ப மூச்சுடன் கூடிய மந்திரக்குரல் ஒலிக்கிறது.”

    மந்திரக்குரலின் மொழி லயத்தில் ஹம்ஸேஸ்வரி பிரதிக்குள் மிதக்கிறாள். இப்படி பிடிபடும் ஹம்ஸேச்வரியின் என்ற ‘குறி’யின் உடலியம் - புறவயம் எப்படி சுட்டப்படுகிறது கதையின் போக்கில்….

    “ஹம்ஸே ஹம்ஸே ஹம்ஸேஸ்வரி ஹம் என்பது அகத்தையும், அகம் இயற்கையின்வழி தன்னைதானே பொருளாக பார்த்துக்கொள்வதையும் குறிக்கட்டௌம். ஸே என்பது இப்படி பிரபஞ்சத்தில் இயக்கத்திலிருக்கும் சக்தியை குறிக்கட்டும்…..
ஹம்ஸாத்மன் அகமும் புறமும் இணைந்த தன்னிலையாக எட்டு இதழ்களுடைய தாமரையாக மலரட்டும். ஹம்ஸே ஹம்ஸே ஹம்ஸே ஹம்ஸே ஹம்ஸே ஹம்ஸே ஹம்ஸே”

    எம்.டி.எம்மின் கதையில் வரும் ஹம்ஸேஸ்வரி என்ற குறியின் பிரதியியல் வடிவத்தின் வரைபடும் மேரற்காட்டப்பட்ட பத்தியின் வரிகள் குறி அகமாகவும் சுயம்பார்த்தல் -பிரபஞ்ச சக்தியை குறித்தல்- இயற்கையின் பெரு விஸ்தீரணத்தில் மீண்டு மனமாதல் ஆகியவற்றை சுட்டுகின்றன இந்தப் பிரதியில் காணப்படும் குறியின் கதையாடலில் அகம் இயற்கை பொருளின் மீதேற்றப்பெறும் அபூர்வ மீள்வாகிறது. 


3


    மொழியால் பீடிக்கப்ப்பட்ட மற்றமையின் ‘குறி’ ஜெயராஜ். திக்கின்றி அலையும் ஒரு பருண்மையின் அகம் இவன். தன்னைத்தாண்டிய ஒன்றைத் துரத்திக்கொண்டே செல்லும் இவனது தடம் வடிவமற்றது. காற்றில் பதியும் ஒலியின் படிவமாக கதையுள் திரிகிறான் ஜெயராஜ். ஹம்ஸேயை யார் என அறியும் ஆகர்ஷத்தோடு கதையாடலை நகர்த்துபவன். “அறிவுக்கு அப்பாற்பட்டதை அறிவு வழி காண முயன்றதும்’ என்ற தன்னிலையை சுழற்றி வீசி திரிபவனான இவனது பைத்தியம் கதையின் ஓரங்களை தீர்மானிக்கிறது. வழமையான சட்டகங்களில் பிடிபடாதவை இவனது மொழி அலைவில் சிக்குகின்றன. தனது உள்ளுருவின் புறவய பிடித்தலாக ஹம்ஸேயை எழுதுகிறான்.

    “ஹம்ஸே என்ற பெயரில் பழங்குடிப்பெண் யாருமில்லை என்பதைக் கண்டறிந்தேன். இருந்தபோதிலும் எனக்கு எல்லா பழங்குடிப்பெண்களுமே ஹம்ஸேஸ்வரியாகத் தோன்றினர். விடுமுறை நாட்களில் சமவெளிக்கும் நகரங்களுக்கும் சென்று வந்தபோது அங்கேயுள்ள பெண்களும் ஹம்ஸேஸ்வரிகளாகத் தோன்றினர். மொத்தத்தில் உலகிலுள்ள அத்தனை பெண்களின் மீதும் மோகம் கொண்டவனானேன்”

    உலகின் அத்தனை மற்றமையரும் தனது பிரதிபலித்தலில் காணும் ஜெயராஜ் நிலப்பரப்புகளில் இடையே உள்ள வடிவ வேறுபாடுகளை கடந்து செல்கிறான். சமவெளிக்கும் நகரங்களுக்கும் மலைகளுக்கும் மாறி மாறி பிராயணப்பட்ட பிறகு மற்றமையின் உருக்கவில் ஒருமையுறும் குறியாக ஹம்ஸேஸ்வரியைக் காண்கிறான். அந்தத் தோற்ற பிறழ்ச்சியில் பயப்பட்டு ஜெயராஜ் ‘தான்’ என்ற நிலையை கட்டமைத்துக்கொள்கிறான். தனது பிரமையின் மன அலைகளில் தழைத்து வரும் ஒலி பிம்பமாக ஹ்மஸேயை உச்சாடனம் செய்து அதன் மிகையில் கரைந்து தன்னிலை அழிப்பாக்கத்தை பிரதியுள் செய்கிறான். இங்கு கதைசொல்லி யாரென்ற கேள்விக்கு இவனோ என்ற சந்தேகம் மேலெழுகிறது. ஆயினும் நகைமுரணை தலைகீழாக்கும் பிரதியியல் தந்திரம் இவனுடையதல்ல. கதைசொல்லியின் கதையாடலில் வரும்…

    “பௌர்ணமியன்று சூரியோதயம் காணப் புறப்பட்ட முட்டாள் நீ என்றாள் அவள்”
    இங்கே கதைசொல்லி அல்லாத ஒருவனான் ஜெயராஜின் நகைமுரண் தலைகீழாகிறது பாருங்கள். பௌர்ணமி அன்று சூரியனைப் பார்க்க கிளம்பியவன் பர்றிய மற்றொரு கதையாடல்…

    “பௌர்ணமிக்குள் குணமாகிவிட வேண்டும் என்றும் பிதற்றினான். அவனை குணமாக்கிவிடுவதாக ஆசுவாசப்படுத்திய நான் அவனுடைய முழுக்கதையையும் நான் கேட்டேன்” என்பதில் ஜெயராஜின் கதையைக் கேட்கும் மற்றொரு குரல் எது என கேள்வி நீள்கிறது. கதைசொல்லியை கதைகேட்போனாக தலைகீழாக்குதல் எம்.டி,எம்மால் நிகழ்த்தப்படுகிறது. கதைகேட்கும் கதைசொல்லியை வாசிக்கும் நாம் வாசகர்களா அல்லது கதைசொல்லியின் மற்றவைகளா?

4


    பிரதியின் நினைவிலியின் நிலவறையிலிருந்து தோன்றும் மென்னொளிக்கீற்று போல கதையாடல் ஆங்காங்கே குறியீட்டின் திசையைக் காட்டிச்செல்கிறது. நினைவின் பக்கங்களில் பல்கிப்பெருகும் ரேகையாய் ஹம்ஸேயின் பிரதி நுண்மையடைகிறது.. ஜெயராஜின் நோக்கமற்ற பிரயாணம் மெல்ல காரணத்தை அழித்த வெலியில் நுழைகிறது. மறதியின் தொடர்பற்ற நினைவுறுத்தல் போல கதையாடல் மொழியில் தட்டுப்படுகிறது. மற்றமையின் சொரூபம் இதுதான் என்று அறிந்திட முடியாத நுனியில்தான் வாசகன் தோன்றுகிறான். அப்படியெனில் கதைசொல்லியின் மற்றமை வாசகன். வாசகனின் மற்றமை கதைசொல்லி. ஒருவர் மாறி ஒருவராக கண்ணாடி முன் சொல்லிக்கொள்ளும் ஆடியில் மிதக்கும் பிம்பம்தான் இந்தக் கதைப்பிரதி. நம்மால் யூகிக்க இயலாதவைகள் இங்கு நிகழ்கின்றன. ஒரு பிம்பம் தன் நில எல்லைகளைத் தாண்டி வேற்று நிலப்பிரப்பில் வடிவம் பெர்றிருத்தல் ‘கதையின் யூகம்’ பிரதிப்படும் புள்ளி.

    “ஊரிலிருந்து என்னைப் பார்க வந்திருந்த என் இலக்கிய நண்பன் மூலமாக ஹம்சேச்வரிக்கென்று வங்காளத்தில் கோவில் ஒன்ரு இருப்பதாக அறிந்தேன். அந்தக் கோவில் தாந்த்ரீக முறைகளின்படி சுழல்பாதைகளால் அமைக்கப்பட்டதென்றும் அபூர்வமானக் கட்டிடக்கலையென்றும் என் நண்பன் தெரிவித்தான். ஜெயராஜிடம் இதைக் கூறியபோது மேற்கு வங்காளத்தில் மட்டுமல்ல கேரளாவிலும் ஆந்திராவிலும் கூட மனித மனங்களின் உள் அறைகளில் ஹம்ஸேஸ்வரியின் கோவில்கள் உள்ளன என்றான்”

    இங்கு மனித மனங்களின் உள் ளறைகளில் ஹம்ஸேஸ்வரிக்கு கோவில்கள் உள்ளன என்று சொல்கிறது கதையாடல். பருண்மையான குறிப்பீடாய் அனைத்து மலைகளிலும் இருக்கும் ஜெயராஜின் ஹம்ஸே குறிப்பீட்டு பன்மை. இதை கதைசொல்லி பெண் வேடமிட்ட பெண் புரியாத சங்கேதம் என்கிறான்.  கதைக்குள்ளிருந்து காணாமல் போகும் ஜெயராஜின் மறைவிலிருந்து மீண்டும் ஒரு கதை கிளைக்கிறது. குணமாகிவிட்ட ஜெயராஜ் மறைவதில் அவிழ்கிறது பெண் வேடமிட்ட பெண்ணின் சங்கேதம். மனவெளியின் கூக்குரலின் ஓசையின் லயத்தில் கதையின் அகஸ்மாத்து சுழற்சியில் திடீரென்று நிற்கும் ஹம்ஸேஸ்வரியால் மனங்களின் உள் அறைகளிலிருந்து ஒரு எதிர் நிலை பிரதி கட்டமைகிறது.

    “உடல் வெளியே கோவிலாய் சமைந்த ஹம்ஸேஸ்வரி கோவிலுள் நின்றுகொண்டிருக்கிறேன். ஏழு சக்கரங்களின் வழி வேப்பமரத்தாலான மூலஸ்தானம் நோக்கி ஏணிகள் இடப்பட்டுள்ளன. குழப்பமான சுழல் பாதைகளில் திகைத்து திகைத்து நிற்கிறேன். சக்கரப்பாதைகளில் சந்திர ஒளி இடது நாடியாகவும் சூரிய ஒளி வலது நாடியாகவும் என்னுள் துடிக்கிறது. இடா, பிங்களா, சூஷ்மணா, வஜ்ரஷா, சித்திரினீ என்று வழிகள் பெயரிடப்பட்டிருக்கின்றன. அகஸ்மாத்தாய் சுழலும் என் வழியில் திடீரென ஹம்ஸேஸ்வரி நிற்கிறாள்”
“நீங்கள் ஆணாயிருந்து இக்கதையை வாசித்தால் இக்கதைப் பனுவலே ஹம்ஸேஸ்வரியாகவும் நான் கதை சொல்லியாகவும் நீங்கள் ஜெயராஜாகவும் உணர்வீர்கள்.
நீங்கள் பெண்ணாயிருந்து இக்கதையை வாசித்தல் இக்கதைப் பனுவலே ஜெயராஜாகவும் நீங்கள் ஹம்ஸேஸ்வரியாகவும் நான் கதைசொல்லியாகவும் உணர்வீர்கள்.
வேறு சிலர் வேறு விதமாக உணர்ந்தால் கதையின் ஆரம்பப்பீடிகையை தயவுசெய்து மீண்டும் வாசிக்கவும். தயவுசெய்து. “

    சுய பிரக்ஞையுள்ள எழுத்தின் வாசிப்புக்கான பிரயத்தனத்தில் புனைவு எழுகிறது. மூன்று நிலைகளிலிருந்து பிரதி மொழிப்படுகிறது. ஒவ்வொன்றின் வாசிப்பு சுழற்சியில் மற்றமைகளின் பன்மைகள் வெளிப்படுகின்றன. தன்மை மங்கி வாசித்தலில் கரைகிறது. மற்றமையின் உடலியல் பிரதியாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது எம்.டி.எம்மின் பிரதி.