முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள்-விமலாதித்த மாமல்லன்
வலையேற்றியது: "அழியாச் சுடர்கள்" ராம் | நேரம்: 7:30 AM | வகை: கதைகள்,
விமலாதித்த மாமல்லன்
மாம்பலத்தில் பழைய பேப்பர் மற்றும் முட்டை வியாபாரம் செய்கிற நாடார் எனக்குப் பழக்கம். முட்டைக்கும் பழைய பேப்பருக்கும் அப்படி என்ன விநோதத் தொடர்பென்று இன்றுவரை எவ்வளவு யோசித்துப் பார்த்தும் எனக்குப் பிடிபடவில்லை, முன்னதைப் பின்னதில் பொட்டலம் கட்டலாம் என்பதைத் தவிர. நாடார் எனக்கு நல்ல நண்பர். அவசரப்பட்டு யாரும் அடிக்க வரவேண்டாம். முதல் விஷயம் இந்தக் கதை நாடார் கதை அல்ல. இரண்டாவதாக நாடாரே என நானும் ஐயிரே என அவரும் விளித்து ஜாதீய மற்றும் தேசீய ஒருமைப்பாட்டை மன்றம் கின்றம் வைக்காமல், மிகப் பணிவாக வளர்த்து வருகிறோம். அடி, வேறு இடத்திலிருந்து கிடைக்க வழியுண்டு என்பதென்னவோ நிஜம். வயிற்றிலா இல்லை முகத்திலா என்பதுதான் புதிர்.
கொட்டாவி விடாதீர்கள். கதை சுவாரஸ்யமாய்ப் போகும் என்பதற்கு உத்திரவாதம் அளிக்கிறேன். ஆனால் எப்போது ஆரம்பிக்கும் என்பது மட்டும் நிச்சயமில்லை. அரசாங்க குமாஸ்தா, கதை சொல்லும்போது மட்டும் சட்டெனத் தொடங்கி பட்டென முடிக்க முடியுமா என்ன?
தினசரி முட்டை வாங்கி நாடாருடன் நல்ல பரிச்சயம். உண்மையில் பழைய ஆங்கிலப் பத்திரிக்கைகள் படிப்பதற்காகத்தான் அவருடன் நட்பேற்படுத்திக் கொண்டேன். இதில் என்ன வெட்கம். அமைத்து மூன்று வருஷம் கழித்து சம்பள கமிஷன் முடிவை அறிவித்தது. அறிவித்தும், இன்னும் அமல்படுத்தப் போவது எப்போது என்று பேசியே திருப்திப்பட வேண்டிய நிலையிலிருக்கும் ஜீவனுக்கு, நளினம் நாஸூக்கு எல்லாம் பெரிய வார்த்தைகள்.
போகட்டும். இன்னும் கதை ஆரம்பிக்கவில்லை. கோபப்படாதீர்கள். மேடையை விட்டுக் கீழிறங்கி, பார்வையாளர் பங்கேற்பு என்ற பெயரில் மூஞ்சுக்குக் கைநீட்டி கெட்ட வார்த்தைகளில் திட்டும் நாடகங்கள் அளவிற்கு நவீனமில்லை எனினும் கலைப்படம் போலக் கொஞ்சம் நத்தையடித்தால் தான் நம்மை நவீனமாக ஏற்றுக் கொள்வார்கள். எனவேதான் சாவகாஸமாக உங்களைக் கூட்டி வைத்துக் கதை சொல்கிறேன்.
கதைக்கு முன் சில விஷயங்களைத் தெளிவுபடுத்திவிட வேண்டும். இது என் கதை இல்லை. அதாவது இந்தக் கதையை நான் எழுதவில்லை. எழுதியவர் ஊர் பேர் விலாசம் தெரியாது. இதைச் சொல்வதற்கு முக்கிய காரணம் உண்மையின் திருவுருவமாக இருக்க வேண்டும் என்கிற சத்தியவெறி ஒன்றுமில்லை. வீண் தலைவலியை வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டாமே என்கிற குமாஸ்தாவிய முன்ஜாக்கிரதை உணர்வுதான். மற்றபடி அதிநவீன ஸ்ட்ரக்சுரலிஸ எழுத்தை சிருஷ்டிக்கும் பேராசையெல்லாம் அடியேனுக்கு இல்லை. மேற்படி வார்த்தையைப் ப்ரயோகித்தமைக்கு மட்டும் சிறு விளக்கம். அர்த்தம் தெரிகிறதோ இல்லையோ இப்படியான வடக்கத்தித் திண்பண்டங்களை நினைவுறுத்தும் வார்த்தைகளை உபயோகிக்காவிட்டால் நம்மூர் இலக்கியப் பத்திரிகைகளில் மனுஷனாகக்கூட சீந்தமாட்டார்கள். இங்கும் பிரசுர சாத்தியமற்றுப் போனால், எழுதுவதைப் புட்டத்திலா ஒட்டிக் கொண்டு திரிய முடியும்.
நீங்கள் படிக்க இருக்கிற இந்தக் கதையை, ஒரு இலக்கிய வாசகனாக நான் படித்த அளவில், இவ்வளவு முஸ்தீபுகளுடன் சொல்ல வேண்டிய அளவிற்கு இது ராஜத்துரோகம் ஏதும் செய்துவிடவில்லை என்பதே என் அபிப்ராயம். ஆனால் பிரச்சினை எது? ஒன்று பிரச்சனை அல்லது பிரச்சனை இல்லை என்று நீங்களும் நானும் முடிவு செய்வதா முக்கியம்? மேலும் நமது முடிவுகளுக்கோ அபிப்பிராயங்களுக்கோ அப்படி என்ன பெரிய செலாவணி? மேற்படி விஷயத்தை முடிவு கட்டப் போகிற ஆள் யார்? என்னையும் உங்களையும் போல இருபதாம் தேதியே கடன் கேட்கத் துவங்குகிற குமாஸ்தா இல்லை. என்றாலும் வேறொரு மட்டத்தில் இருக்கிற குமாஸ்தா. உரிமையுடன் பேச்சுவாக்கில் உங்களையும் சேர்த்துக் கொண்டு விட்டேன். வித்தியாசமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இவ்வளவு தூரம் இந்த இருபத்திநாலு காரட் அசல் இலக்கியத்தைத் தேடிப் பிடித்துப் படித்துக் கொண்டிருக்கிறீரே, இதிலிருந்தே தெரியவில்லையா நீரும் நம்மைப் போல என்று. கொஞ்சம் பயம், கொஞ்சம் துணிச்சல், கொஞ்சம் அறிவு, கொஞ்சம் அசடு. துணிந்தவனிடம் பயம், பயந்தவனிடம் துணிச்சல். அறிவாளியிடம் அசடு. அசடுகளிடம் அறிவாளி என்று நமது வர்க்கமே பூவா தலையா கேஸ். நானொன்றும் சிவப்பெல்லாம் இல்லை. தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஒன்றுமில்லை, ரயில் கம்யூனிஸம். போஸ்டர் ஞானம். ஒன்றுக்குப் போனால் சிவப்பாய் வருமோ என்று கலவரப்படும் அளவிற்குப் பொதுக் கழிப்பிடமெல்லாம் சிவப்பு மையால் கிறுக்கியிருக்கிறதே, அதில் பார்த்த வார்த்தைகள்தான். நமது நாடாரின் முட்டை பழைய பேப்பர் போல கழிப்பறைக்கும் கம்யூனிஸத்திற்கும் அப்படி என்ன வினோதத் தொடர்போ? போதாக்குறைக்கு இப்போதெல்லாம் ரெயிலில் வேறு பாட்டுப்பாடி உண்டி குலுக்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்களைப் பார்த்தாலும் நம்மைப் போலத்தான் தெரிகிறது. பேச்சு, பாட்டு, போஸ்டர், சுவர் கிறுக்கல் எல்லாம் ரொம்பத் தீவிரம். இதில் மட்டும். இதற்கு மேல் போனால் பிடித்து உள்ளே தள்ளுவான். அதற்காக மத்தியான சாப்பாட்டை மடியில் இடுக்கிக் கொண்டு லட்சத்தி ஒன்றாய் நெளியவும் முடியாது. நம்மைப் போலத்தான். நான் அசல் இலக்கியகர்த்தா, நீர் அசல் இலக்கிய வாசகர், அவர்கள் அசல் கம்யூனிஸ்ட்டுகள். எல்லாம் ஒரு அடையாளம்தான். எங்கே அடையாளமற்றுப் போய்விடுமோ என்கிற பயத்தின் அடையாளம். போச்சு ரெண்டு தடவைதான் ப்ரயோகிக்க முடிந்தது. மூன்று முறை ஒரே வார்த்தையை ஒரே வாக்கியத்தில் ப்ரயோகிக்க முடிந்திருந்தால் ஏதாவதொரு இலக்கியக் கிழத்திடம் ரெண்டு நல்ல வார்த்தையாவது வாங்கலாம். ஒன்றில்லையென்றால் மற்றது. இது திட்டினால் அது பாராட்டும். அது சீந்தாவிட்டால் இதற்குச் செல்லப் பிள்ளை. இரண்டுக்குமே கணிசமான ஆதரவாளர்கள் உண்டு. ஏதோ வெள்ளையாக உள்விஷயமெல்லாம் உம்மிடம் சொல்லுகிறேன், ஒன்று கிடக்க ஒன்று பண்ணிவிடாதீரும். ஏதோ வாசகர்தானே என்றுதான் வயிற்றெரிச்சலை சொல்லுகிறேன். ஏதும் சொல்வதற்கில்லை. ரெண்டு வருஷம் தீவிர வாசகர். மூன்றாம் வருஷம் தீவிர எழுத்தாளர். நானே அப்படி வந்தவன்தான். ஆபீஸ் பிரமோஷனுக்கு இது எவ்வளவோ தேவலாம்.
ஐயையோ நான் சொல்ல வந்ததை விட்டுவிட்டு என்னவெல்லாமோ சொல்லிக் கொண்டே போகிறேன். என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொண்டே போகிற அளவிற்கு இன்னுமெனக்கு இலக்கிய சர்வீஸ் ஆகவில்லை. வெக்கை, வெத்தில எச்சி என்று எவனும் கேள்வி கேட்க முடியாதபடி எழுதிக் கொண்டே போக எனக்கென்று தனீ வட்டாரமும் இல்லை. அல்லது எழுதப்பட்டதெல்லாம் என்ன விதத்தில் மையப் பொறியுடன் ஆகர்ஷண வீச்சில் தொந்தம் கொண்டுள்ளது என - இட்டுக்கட்டி இண்டர் பிரடேஷனுக்குக் கொஞ்சம் லகுவான தமிழ் - எழுத எனக்கென்று ஆள் சேரும் அளவிற்கு நான் பிஸ்தாவும் இல்லை.
இதெல்லாம் கிடக்கட்டும். ரெண்டு பேர் சொல்லுவான். ரெண்டு பேர் திட்டுவான். கோடி பேருக்குத் தெரியவே தெரியாது. இவர்களையெல்லாம் விட முக்கியமானவர் மேற்படி நபர்தான். பிரசுரமான ஒன்று, அதிலும் குறிப்பாக குமாஸ்தா எழுதிப் பிரசுரமான ஒன்று ராஜநிந்தனையா? இல்லையா? ஜனநாயகத்தில் அங்கீகரிக்கப்பட்ட சுதந்திரத்திற்குள் இது உள்ளதா? இல்லையா? இதைத் தீர்மானிப்பவர் (இதைத் தீர்மானிப்பதே சரியில்லை எனப் பேசுமளவிற்கு புரட்சியாளனில்லை நான்) நிச்சயம் நீதிபதி இல்லை. நீதிபதியாய் இருப்பினும் இலக்கியத்தில் அவருக்கு எவ்வளவு அறிவு உள்ளது என்பது அடுத்த விஷயம். ஆறு லட்சம் பிரதிகள் விற்கும் பத்திரிகையே ஜனநாயக ரீதியில் மக்களின், மக்களால், மக்களுக்கான ரசனை என்று ஆகிவிட்ட நிலையில் மக்களில் ஒருவரான அவரது ரசனை எப்படி வேறாயிருக்க முடியும். எனில் நான் ஏன் வேறாயிருக்கிறேன்? அடையாளம் தேடும் போராட்டத்தின் அடையாளம். அடையாளமற்ற கும்பலில் அடையாளம் தேடுவது அபத்தத்தின் அடையாளம். அபத்தம் எனச் சொல்லி ஒதுங்கி-ஒதுக்கி சும்மா இருந்தால் அடையாளமற்று அழிய வேண்டியதுதான்.
இல்லை. அது முடியாது. என்னை முடிவு கட்ட நீங்கள் யார்? உங்களுக்கு இந்த சூரியனின் கீழ் எவ்வளவு உரிமை உண்டோ அவ்வளவு எனக்கும் உண்டு. எனக்கு அரித்தால் உங்களைச் சொறியும் அநாகரிகவாதியில்லை நான். இத்தினியூண்டு சூழலில் இக்கினியூண்டு பத்திரிக்கையில் நான் எழுதுவது ஒன்றும் செய்துவிடாது என்று உம்மிடம் மன்றாடும்படி என்னை நிர்பந்தித்தால் எப்படி அது என் சுதந்திரம்? பகிரங்கமாகப் பிரசுரமாகி தடை விதிப்பவர் உட்பட யாருமே அறியாமல் இருக்கிறார்கள் என்பதால் இதனை ஜனநாயகத்தின் சுதந்திரம் எனக் கொள்ள இயலுமா? ஜனநாயகத்தில் சுதந்திரம் என்பது எவ்வளவு தூரத்திற்கு? இவ்வளவு தூரம் மட்டும் என நிர்ணயிப்பது நீர் எனில் உமக்கு அதற்கானத் தகுதி என்ன? காரில் போகிற, மாதக் கடைசியில் கைமாற்று வாங்காத குமாஸ்தா என்பது நிச்சயம் அதற்கான தகுதியில்லை.
சரி, இது போகட்டும். ஏ பாவிகளே என்றோ அல்லது உலகத் தொழிலாளர்களே என்றோ எல்லோருக்கும் குரல் கொடுக்க நானொன்றும் பெந்தேகொஸ்தேவா அல்லது கம்யூனிஸ்டோ இல்லை. என் பிரச்சனையெல்லாம் என் சம்மந்தப்பட்டதுதான்.
நான் முன்பே குறிப்பிட்டதைப் போல நான் ஒரு குமாஸ்தா. ஆனால் குமாஸ்தா மட்டுமே அல்ல. அதனால் தான் இவ்வளவு பாடு. ஒழுங்காகக் கல்யாணம் பஜனை கருமாதி என்று மட்டும் இருந்தால் எனதும் உங்களதும் அவர்களதுமான நேரம் வீணாகியிராது. ஏதோ என் அரிப்பு நான் எழுதுகிறேன். உமது அரிப்பு நீர் படிக்கிறீர். இதில் யாரும் யாரையும் நிர்பந்திக்கவில்லை. அதனால் தான் ரொம்ப ஆசுவாசமாக இருக்கிறது. ஒருவிதத்தில் நீரும் நானும் ஒன்றேதான் என்றுகூடச் சொல்லிவிடலாம். ஒருத்தரை ஒருத்தர் முன்பின் முகம் பார்த்ததில்லை என்றாலும் பத்து நிமிஷம் பேசினால் பூர்வாசிரமம் தெரிந்துவிடும். இன்னார் மூலம் இந்தப் பத்திரிகைப் பரிச்சயத்தில் இலக்கியத்திற்கு வந்தீரா அன்னாரை எனக்கு இன்னார் மூலம் கேள்விப் பரிச்சயம் என்று சிதம்பரத்துக் குருக்கள் குடும்ப வழிபோல சுற்றிச் சுற்றி அதே குட்டைதான். இதில் நான் பேசி நீர் கேட்டாலும் நீர் பேசி நான் கேட்டாலும் பெரிய வித்தியாசமொன்றுமில்லை. தன் மகரந்தச்சேர்க்கை. தனக்குத் தானே பேசிக் கொள்வதைப் போலத்தான். தனக்குத் தானே பேசி நொந்து கொள்வதை மனோவியாதியின் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாகச் சொல்வார்கள். அதுவும் ஒரு வகையில் உண்மைதான். கோடிப்பேர் அப்படிப் பேச நாம் ஏன் இப்படிப் பேசுகிறோம். உண்மையில் யார் சரி? இது ரொம்ப சிக்கல். அதுவும் இரவு ஏறிக்கொண்டே போகிற இந்த நேரத்தில் இதற்குள் புகுந்தால் காலையில் அலுவலகத்திற்கு நிச்சயம் தாமதமாகப் போக நேரிடும். காரணம் கேட்டு முறைக்கிற அதிகாரியிடம் கதை எழுதிக் கொண்டிருந்தேன் என்று சொல்ல முடியாது. முஷ்டி மைதுனம் செய்தேன், எனவே காலையில் சீக்கிரம் எழ முடியவில்லை என்கிற காரணத்தைவிட கதை எழுதினேன் என்பது அபத்தமாகப் படும் அவருக்கு. உண்மையில் இரண்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை என்பது என் அனுபவத் தெளிவு.
மேலும் என் எழுத்தை மேற்படி அதிகாரியிடம்தான் முறைப்படி சமர்ப்பிக்க வேண்டும். அவர் அதை அவரது மேலதிகாரிக்கு சமர்ப்பிப்பார். அவர் தீர்மானிப்பார், இது அரசுக்கு எதிரானதா இல்லையா என்று. எந்தக் கடவுள் எதிரிலும் நான் சத்தியம் செய்யத் தயார், ஆறு லட்சத்தில் அவரும் ஒருவர். இது குறித்து எனக்கு வருத்தமில்லை. தன்னிரக்கமில்லை. ஆனால் என் தலைவிதியை நிர்ணயிக்க அவருக்கு என்ன முன்னுரிமை.
ஜனநாயகத்தில் குடிமகனுக்கென்று சில அடிப்படை உரிமைகள் உள்ளன. அதில் ஒன்று கருத்துரிமை. இந்த அளவிற்கு என்று வரையறுக்கப்பட்டதுதான் எனினும் இருக்கிறது என்பது உண்மை. ஆனால் அரசு ஊழியன் அரசை விமர்சித்துப் பேச எழுதக் கூடாது என்கிறது அலுவலக நடைமுறைச் சட்டம். என் பெற்றோருக்குப் பிள்ளை என்பதற்கு அடுத்தபடியாக நான் முதலாவதாக எது? குடிமகனா? குமாஸ்தவா? எந்தக் குடிமகனும் ஜனநாயகத்திற்குக் குந்தகம் விளைவிக்காத மத, ஜாதீய உணர்வுகள் மற்றும் வன்முறையைத் தூண்டாத எந்த அரசியல் கட்சியிலும் அங்கம் வகிக்கலாம். அரசை விமர்சித்துப் பேச எழுத செய்யலாம். எனில் குமாஸ்தா முதலில் குடிமகன் தானே. அவனுக்கு எப்படி இந்த உரிமை மறுக்கப்படலாம்?
முதலில் நான் எது? குடிமகனா? குமாஸ்தாவா? எழுத்தாளனா? மூன்றாவதை என்னைத் தவிர யாரும் அங்கீகரிப்பதில்லை. முதலாவது எழுபது கோடிப் பேருக்குமானது. அவரவர் தாய்க்கு அவரவர் பிள்ளை என்பதைப் போல நன்மை தீமையற்ற லாப நஷ்டமற்ற சத்தியம். நடுவில் உள்ளதுதான் மிக முக்கியம். உண்மையில் என்னை இதுவாக அங்கீகரித்திருப்பதால்தான் மாதத்தின் கடைசீ நாளில் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டி சில நூறுகளைக் கண்ணால் பார்க்க முடிகிறது. மேலும் பூர்வ ஜென்ம வாசனைகூட இல்லாதவனெல்லாம் சொந்தம் எனச் சொல்லிக் கொண்டு, மூலைகளில் மஞ்சள் தடவிய ஒன்றும் புரியாத ஒன்பது கட்டம் கிழித்த பழுப்புத்தாளுடன் வந்து நிற்கிறார்கள். ஆக அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கான அடிப்படை இதுதான் என்றான பின் இதுதானே நான். எனவே மேற்கொண்டு கேள்வி ஏதும் கேட்காமல் ஒப்புக் கொள்கிறேன். முதலில் நான் குமாஸ்தாதான். எக்காரணம் தொட்டும் எதற்காகவும் யாருக்காகவும் எந்த வம்பிலும் மாட்டிக் கொள்ளவிரும்பாத, அரசுக்கு விசுவாசமாக ஊழியம் செய்து நல்ல முன்னுதாரணப் பிரஜையாக இருப்பேன் என உறுதி கூறி கீழ்க் கண்ட கதையைப் படிக்கத் தருகிறேன். திரும்பவும் ஒருமுறை இருந்த இருக்கிற இருக்கப்போகிற அரசு அதிகாரிகளுக்கு மிக்க பணிவன்புடன் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புவதெல்லாம், கீழ்க்கண்ட கதையை நான் எழுதவில்லை என்பது முக்காலும் சத்தியம் என்பதைத்தான்.
II
நாடார் கடையின் பழைய குப்பையில் அகஸ்மாத்தாய் கிடைத்த, அட்டை கிழிந்த கோடு போட்ட நோட்புக்கில், கீழ்க்கண்ட கதை எழுதப்பட்டு உள்ளது. செகாவின் ஆரம்பக் காலக் கதைகளைப் போன்ற படோடோபமற்ற எளிமையும் நேரடித் தன்மையுமே இந்தக் கதையில் என்னை வசீகரித்தவை. மேற்கொண்டு கதையைப் பற்றி எதுவும் சொல்லவேண்டாம் என்று நினைக்கிறேன். என் அபிப்ராயம் வாசகர் மனதில் சாதக, பாதக சாய்வுகளை ஏற்படுத்திவிடுமோ என்றும் அஞ்சுகிறேன். வெளியுலகின் பார்வைக்கு இதை முன்வைப்பதோடு என் எல்லை முடிவு பெறுகிறது. இந்த காரியத்திற்கு பெரிய முக்கியத்துவமோ அல்லது நிர்பந்தமோ ஏதுமில்லை. தான் பொருட்படுத்தும் ஒரு விஷயத்தை இன்னொரு ஜீவனுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று மனுஷனுக்கு இயல்பாகவே எழும் உந்துதல்தான் இது.
கதை நல்ல தெளிவான கையெழுத்தில் அடித்தல் திருத்தலின்றி எழுதப்பட்டுள்ளது. முதல் கையெழுத்துப் படியிலிருந்து ஆசிரியரால் பிரதியெடுத்து எழுதப் பட்டிருக்க வேண்டும் என்பது என் யூகம். கதை, தலைப்பென்று ஏதுமின்றி மொட்டையாகத் தொடங்குகிறது. எனினும் இடது பக்கத்தில் புறாக்கள், முடவன், முடவன் வளர்த்த புறாக்கள், முடவர்கள், வெண்புறா, சமாதானப் புறா, உலக சமாதானத் திருவிழா போன்ற வார்த்தைகளும் வார்த்தைச் சேர்க்கைகளும் எழுதி எழுதி அடிக்கப்பட்டு உள்ளன. முதல் கைப்பிரதிக்குப் பின் நகலெடுத்து முடித்த பின்பும்கூட ஆசிரியரால் தலைப்பு பற்றிய ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை என்பது என் அனுமானம். இது ஒரு குறையோ அல்லது வியப்பிற்குரிய விஷயமோ கூட இல்லை. இதை விட மிகச் சிறந்த கதைகளைப் படைத்த மேதைகள்கூட பல சமயங்களில் தலைப்பிற்குத் திணறி இருக்கிறார்கள். கதையை நிறையமுறை படித்தவன் என்பதாலும், இன்னும் சற்று முயன்றிருந்தால் மேற்படித் தலைப்பை ஆசிரியரே வந்தடைந்திருக்கக் கூடும் என்று எனக்குத் தோன்றுவதாலும், சற்று உரிமையுடன் அவரது தலைப்பிற்கான ’’முயற்சி’’களிலிருந்தே தேர்ந்தெடுத்து இந்த தலைப்பை நான் கொடுத்திருக்கிறேன். பொறாமை கொள்ளச் செய்யுமளவிற்கு ஆசிரியரின் கையெழுத்து மிக அழகாக உள்ளது. எழுத்துக்கள் நகர்ப்பிரயாணிகள் போல ஒன்றோடொன்று ஈஷிக் கொள்ளாமலும் அதே சமயம் மனஸ்தாபத்திலிருக்கும் தம்பதிகள் போல விலகி நடக்காமலும் நாஸூக்காக நிற்கின்றன. புள்ளிகள் ஒன்றாயிருப்பினும் சரி முற்றாயிருப்பினும் சரி அழகாக சுழிக்கப்பட்டுள்ளன. வாக்கியங்கள் கோட்டில் இல்லாமல் அரை மி.மீ இடைவெளியில் கோட்டின் மேல் எழுதப்பட்டு இருப்பதால் தண்டவாளத்தில் நிற்கிற ரயில் வண்டித் தொடரெனத் தோற்றமளிக்கின்றன. கதை முடிந்ததும் மிகக் கிறுக்கலான கோணல்மாணலான கையெழுத்தில் விபத்திற்குள்ளாகித் தடம் புரண்ட ரயிலென சில பக்கங்கள் எழுதப்பட்டுள்ளன. மிகுந்த சிரமத்திற்குட்பட்டே இந்தப் பின் பகுதியை படிக்க முடிந்தது. அதைவிட மிகச் சிரமப்பட்டே நகலெடுக்க முடிந்தது. இப்பகுதியும் எனக்குப் பிடித்தே உள்ளது, ஓரளவே புரிந்தது என்ற போதிலும். பிண்ணனி புகை மூட்டமாய் இருப்பதாலேயே துல்லியமாகப் புரியவில்லை என நினைக்கிறேன். கதை முழுக்கவும் பட்டையடிக்கிற கருப்பு மை பேனாவில் எழுதப்பட்டுள்ளது. பேனாத் தீற்றலின் விளிம்புகள் சற்றே பழுப்பேறி எழுதப்பட்ட காலத்தின் பழைமையைச் சொல்கின்றன. மேலும் நீல பால்-பாய்ண்ட் பேனாவில் எழுதப்பட்டுள்ள ’பிற்சேர்க்கையும்’ இதை ஊர்ஜிதப்படுத்துகிறது. கதையிலும் சரி ’’பிற்சேர்க்கை’’யிலும் சரி என் கையெழுத்தில் நான் பிரதியெடுத்தேன் என்பதைத் தவிர எந்த ஒரு வார்த்தையையும் நானாக சேர்க்கவோ அல்லது நீக்கவோ இல்லை என்பதை இங்கு தெரிவித்துக் கொள்ள விழைகிறேன்.
என்னென்னவெல்லாமோ பேசி வம்பளந்து உங்களைப் படுத்திவிட்டமைக்கு மனமாற மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் இவ்வளவு பேசிவிட்டமையால் கதையைப் பற்றி எதிர்பார்ப்போ அல்லது எரிச்சலோ உங்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடும், எனில் என் முயற்சியும் உழைப்பும் வியர்த்தம். எனவே படிப்பதை இங்கு நிறுத்திவிட்டு ஒரு காபி குடியுங்கள் அல்லது ஒரு சிகரெட் பிடியுங்கள். மனம் சமநிலைக்கு வந்தபின் சாவகாஸமாகப் படியுங்கள்.
III
“ஆகாயம் வெளிர் நீலத்தில் அழகாக ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. வெண்மேகத் திட்டுகள் மெல்ல ஊர்ந்து கொண்டிருக்கின்றன. சூரியன் வெம்மையற்று ஒளிர்கிறான். காற்று மெல்ல வீசி மெய்மறக்க வைக்கிறது. தொலைதூர மலைச்சரிவில் கிளம்பிய புகை சைத்ரீகளின் கிறங்கிய தீற்றலென எழுந்து தேவதையின் ஆடையென வெளியில் கரைகிறது. இந்த ரம்மியத்தை விரும்பாதவர் எவரும் உண்டா? இந்த சௌந்தர்யம் யாருக்கானது? நாம் இந்த பூமிக்கு வருமுன்னும் இந்த எல்லையற்ற அமைதியும் அழகும் இருந்தன. நாம் போனபின்னும் இவை இருக்கும். அமைதியும் அழகும் இரட்டைக் குழந்தைகள் போல. நம் மூதாதையரிடமிருந்து பெற்று பின்வரும் சந்ததிக்கு பாரம்பரியமாகக் கையளித்து வருகின்றோம். காலமற்று எல்லையற்று பரந்த இந்த எழிலுக்கு நாம் சொந்தமா? இல்லை நமக்கு இது சொந்தமா? முடிவற்று நீண்டு கிடக்கும் பாதை வழிப்போக்கனுக்கு எப்படிச் சொந்தம்? நாம் எவ்வளவு தூரம் இதை நமக்குத் தக்கபடி மாற்றியிருக்கிறோம். இது கோபித்துக் கொண்டதில்லை. எவ்வளவுதான் மாற்றங்களுக்குட்பட்டாலும் கடவுள் போல முழுமையுடன், துளியும் பின்னப்படாமல் நிற்கிறது. இந்த முழுமையை சிதைக்க நமக்கென்ன உரிமை...”
அதிபர் நிறையப் பேசுவார். இல்லை, எழுதியதை சங்கீதம் ததும்ப முன்னும் பின்னும் நகர்ந்து, தேர்ந்த நர்த்தகியின் இதமான அசைவுகளுடன் பேசிக் கொண்டு போகப் போகிறார். இதுவரை ஒரு பக்கம்தானே முடிந்துள்ளது, இன்னும் முப்பத்தி சொச்சம் பக்கங்கள் உள்ளன. கவிதையை நழுவவிடுவதற்காக விசனப்பட வேண்டாம். அடுத்து என்னென்ன வரும் என்று இப்போதே சொல்லிவிட முடியும். பத்து பக்கம் வரை கவித்துவ சகோதரத்துவ மனிதாபிமானம்; அடுத்த பத்து பக்கம் அதிகார ஆசை, வெறி, ஆயுதக் குவிப்பு; அடுத்த பத்து அணுப் பிரளயம். முதல் பத்தின் குளுமைக்கு நேரெதிர் வார்த்தைகளில் உலக முடிவென பீதியுறும்படி வல்லினங்களின் அபரிமிதப் பிரயோகம். முடிவுறும் பக்கங்களில் பழையபடி நதி, கடல், குழந்தைகள் எனக் கேட்கிற கண்கள் குளமாக, பேச்சு முடிவுறும்.
சும்மாவா என்ன, கலைஞர்களும் அதிகாரிகளும் அடங்கிய ஒரு குழுவே தயாரித்த பேச்சல்லவா. அணிசேரா நாடுகளின் அணித் தலைவர் பேச்சென்றால் அதற்கொரு முக்கியத்துவமில்லையா என்ன. இதே விழா பிற நாடுகளிலும் ஆண்டுக்கொரு தடவை முறை வைத்து நடத்தப் படுகிறதுதானே. இரண்டு கூட்டம் கேட்டால் மூன்றாவதில் கொட்டாவி விட்டபடி நீங்களே ஒப்பிக்கத் தொடங்கி விடுவீர்கள். இதைவிட சுவாரஸ்யமான விஷயத்திற்குப் போகலாம். எப்போதும் மேடை அல்ல மேடையின் பின்புறமே சுவாரஸ்யமும் உயிர்ப்பும் மிக்கது.
அணு ஆயுதப் போர் தளவாடக் குவிப்பை எதிர்க்கும் கூட்டணி நாடுகளின், உலக சமாதான தினத்தின், அதிபரின் இறுதி உரையின் தொடக்கத்தைத்தான் நீங்கள் கேட்டுக் கிறங்கிக் கொண்டிருந்தீர்கள். பேச்சு முடிவுறும் தருணத்தில் தவறாது கேட்கலாம். இடைப்பட்ட நேரத்தில் கொஞ்சம் பின்னணி விவகாரங்களைக் கவனிக்கலாம்.
அதிபர் தொடர்பான விழாக்கள் அனைத்தையும் நடத்த வேண்டிய நேரடிப் பொறுப்பு எப்போதும் தலைமைச் செயலரை சார்ந்தது. குறிப்பாக இந்த விழாவிற்கு அவர் பட்டபாடு அற்ப சொற்பமில்ல. வெளிநாட்டு அதிபர்கள் பிரமுகர்கள் என்று வரவேற்று அவரவர் அந்தஸ்திற்கேற்ற நட்சத்திர விடுதிகளில் தங்க வைப்பது முதல் நெடுஞ்சாலை வளைவுகள், கட்டவுட்டுகள் சரிவர கட்டப்பட்டுள்ளனவா என்று பார்வையிடுவது வரை அனைத்துப் பொறுப்புகளும் அவர் தலையில்தான். சிங்கத்திடம் சேவகம் என்பதென்ன சாமான்யமா? சிரிக்கிற வரை க்ஷேமம். சினந்தால் கிழிந்தது சீட்டு. குடியரசென்றாலும் அதிகாரம் அதிகாரம்தானே.
அதிபரின் அதிகார மண்டலத்தில் வேறு துணை கிரகங்களின் சுழற்சியும் அனுமதிக்கப்பட்டதுதானே. வேறொன்றுமில்லை, பிரபஞ்ச ஒத்திசைவுதான். தலைமைச் செயலரும் அதிபர்தான். தமக்கான பிரத்தியேக மண்டலத்தில் தாமும் ஒரு அதிபர். அதைச் சுற்றியும் சில துக்கடா கிரகங்கள் சுற்றுமல்லவா. அதில் ஒன்றுதான் நாம் பார்க்க இருக்கிற பள்ளி ஆசிரியர். இவர் வெகு சாதாரண அரசுப் பள்ளி ஆசிரியர் தான். செயலரின் பிள்ளைகளுக்கொன்றும் இவர் ஆசிரியர் இல்லை. நம் வீட்டுப் பிள்ளைகளா என்ன அரசுப் பள்ளியில் படிக்க. அதி உயர் கல்வியை அயல்மொழியில் புகட்டும் பள்ளிகளில்தான் அவை படிக்கின்றன. எனினும் கடைசிப் பையனுக்கு விளையாட்டு காட்டுகிறேன் பேர்வழி என்ற ரீதியில் செயலர் வீட்டில் நிரந்தர உறவை சாமர்த்தியமாக ஸ்தாபித்துவிட்டார் நமது ஆசிரியர். அவர் இந்த வீட்டிற்குள் நுழைந்ததே சுவாரஸ்யமான நிகழ்ச்சிதான்.
செயலர் வீட்டு அம்மாளுக்கு பூ என்றால் கொள்ளை ஆசை. நம் வீட்டுப் பெண்கள்கூட பூப்பைத்தியங்கள் தானே. பூவை விரும்பாவிட்டால் பெண்மையற்றுப் போய்விடுமா என்கிற அளவிற்கு பூவைக் கண்டதும் லஜ்ஜையற்று வெளிப்படையாக ஆவல் காட்டாத பெண்களும் உண்டா? ஒண்டுக் குடித்தன ஒட்டு சன்னலிலும் பட்ரோஜாக்கள் தகர டப்பாவில் வளர்க்கப்படுவதில்லையா? அம்மாளுக்கு ஆசை மட்டுமில்லை பவிசும் உண்டு. கேட்க வேண்டுமா. பங்களாவெல்லாம் சுற்றிச் சுற்றி பூச்செடிகள். ரோஜா மட்டும் இருபது வகை உண்டு. இன்னும் கிடைக்குமா ஏதும் புதிய வகை என்றுதான் போகிற வருகிற பேர்வழிகளையெல்லாம் கேட்டு வைப்பாள். வண்ணான் உட்பட யாரையும் விட்டதிலை. நாள் முழுக்க செடிகளருகில் நின்றபடி மொட்டு விட்டதா பூ அவிழ்ந்ததா என்று பார்த்தே வாழ்ந்து கொண்டிருந்தாள்.
இப்படித்தான் ஒருநாள் செடிக்கருகில் நின்று சௌந்தர்ய சோதனையில் ஆழ்ந்திருக்கையில்தான் நம் ஆசிரியர் கேட்டருகில் தயங்கி நின்றார்.
ஆசிரியர் அதே வட்டாரத்தின் ஏழ்மைப் பகுதியில் வசித்து வந்தார். பொதுவாகவே பங்களாக்கள் நிறைந்த வட்டாரங்களின் எல்லைப் பகுதிகள் கீழ்த்தட்டு வர்க்கத்திற்கு. அவர் வசிப்பதென்னவோ எட்டடிக் குச்சில்தான் என்றாலும் இருப்பது இந்த ’ஏரியாவில்’ என்பதில் ஒரு அலாதி திருப்தி. கடன் வாங்கிக் கட்டிய வீட்டில் மூன்று குடித்தனம் வைத்து, முந்நூற்று சொச்சம் வாடகை வீட்டில் வாழ்ந்துவரும் வங்கி குமாஸ்தாவின் வீட்டுக் கடனடைத்தது, பன்னிரெண்டாண்டில் அதை அவருக்கே சொந்தமாக்க, மாதந்தோறும் கப்பம் கட்டி வரும் மூன்று குறுநில மன்னர்களில் ஒருவர் நமது திரு.ஆசிரியர். தமது சக ஆசிரியர்களில் இந்த ஏரியாவில் வசிக்கிற ஒரே நபர் தாம்தான் என்பதில் அவருக்குப் பிடிபடாத பெருமை. அது மட்டுமல்ல, இந்த வட்டாரத்துப் பெரிய மனிதர்கள் பிரமுகர்கள் எல்லாரையும் அவருக்குத் தெரியும். அதாவது அவர் அப்படிச் சொல்லிக் கொள்வார். பெரிய மனிதர்களைத் தெரிவது அப்படியொன்றும் பெரிய காரியமில்லை தானே. ஒரு தெரு வழியே நடந்து போகக் காலிருந்தால் போதும். எந்தப் பிரமுகர் எந்த பங்களாவில் வசிக்கிறார் என்று எல்லா பங்களா சுவர்களும் பளிங்குக்கல் முகத்தால் சொல்லத்தானே செய்கின்றன. அந்த வட்டாரத்துப் பிரமுகர்களின் அன்றாட நடவடிக்கை பழக்க வழக்கம் என மிக சுவாரஸ்யமாக ஜோடித்து மதிய உணவு வேளையில், வகுப்பில்லாத சமயங்களில் எல்லாம் ஆட்களைப் பிடித்து வைத்து அளந்து கொண்டு இருப்பார். சிறந்த கதாசிரியனையும் மிஞ்சுகிற அளவிற்கு பிரமுகர்களின் குணாதிசயங்கள், பிரத்யேகத் தகவல் குறிப்புகளுடன் சொல்லிக் கொண்டே போவார்.
இந்த விதத்தில் பார்த்தால் நமது தலைமைச் செயலரை அவர் துணைச் செயலராய் இருந்த காலத்திலிருந்தே நமது ஆசிரியருக்குத் தெரியும். நேரடியாகப் பேசியதில்லை அவ்வளவுதான். பள்ளி விட்டபின் காலாற நடந்து வருகையில் எல்லா பிரமுக பங்களாக்கள் முன்னாலும் சற்றுத் தயங்கி நின்று நடக்கிற பழக்கம் காலப் போக்கில் அவரிடம் படிந்துவிட்டது. அது போன்ற ஒரு முகூர்த்தத்தில்தான் திருமதி.தலைமைச் செயலர் தற்செயலாக இவரைப் பார்த்து என்ன என்று கேட்டது.
ஆயுள் முழுக்க ஒற்றைக்கால் தவம் புரிந்த பக்தன் காத்துக் காத்து இனி வரப் போவதில்லை எனத் தீர்மானிக்கிற கட்டத்தில் கடவுள் பிரத்தியட்சமானால் எப்படித் திணறிப் போவானோ அப்படித்தான் பிரமித்துப் போனார் ஆசிரியர். எனினும் நொடியில் சுதாரித்துக் கொண்டார். வார்த்தைகளில் மேக மண்டலத்தைப் பிடிக்கறவருக்குப் பேசவா சொல்லித்தர வேண்டும். தருணம் கூடாதா என்று கண்ட கனவின் படலம் மெல்ல நிஜமாகிப் படியும் சமயத்தில் என்ன பேசி என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் மூளை யந்திரம் நொடியில் அனுமானித்து உறவை ஸ்தாபிக்கக் காரியத்தில் இறக்கிற்று.
அவ்வளவுதான். அன்றுமுதல் ஒரு வார காலம் விடியற்காலை தோறும் பூக்களாகவே கனவு வந்தது. எல்லாம் வினோத ரோஜாக்கள். விஞ்ஞான சாத்தியங்களுக்கு அப்பாற்பட்ட வண்ணக் கலவைகளில் எல்லாம் ரோஜா மலர்ந்தது. எதிர்ப்படும் மனிதரெல்லாம் நவீன ரோஜா வகை ஒன்றை மறைத்து வைத்துக் கொண்டு கடந்து செல்வதான பிரமையுடன் கனவு ததும்பும் பார்வை அலைய மிதந்தபடி நடந்தார். இருபத்தியொன்றாவது வகை ரோஜா ஒன்று உலகத்தில் கிடையாதா என்ன என்ற தைரியத்தில்தான் கொஞ்சம் கவித்துவமாக அம்மையாரிடம் தனக்குத் தெரிந்த ஒரு வீட்டில் இருக்கிறதென வருணித்து விட்டார். கவிதையில் கொடுத்த ரோஜாவை இப்போது தரையில் கையளித்தாக வேண்டும். அதுவேதான் என்று இல்லை. கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் பரவாயில்லை. அந்த வீட்டில் இல்லாத ஒன்றாக இருந்தால் போதும். கிடைத்ததைக் கொடுக்கையில் வார்த்தையால் தான் சொன்ன ரோஜாவாக மாற்றிவிடலாம்.
வாசகர்களே! அந்த ரோஜாவிற்காக அவர் அலைந்த அலைச்சலை சொல்லத் தொடங்கினால், கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போய்விடும். அதிபரின் பேச்சு முடிந்து பந்தல் தோரணமெல்லாம் கழற்றப்பட்டு விடும். எனவே அவர் பட்டபாடு சுவாரஸ்யமானதே என்ற போதிலும் அதை சொல்லாமல் விடுவதற்காக உங்களிடம் மன்னிப்புக் கோரி மேற்கொண்டு தொடர உரிமையுடன் அனுமதியும் எடுத்துக் கொள்கிறேன்.
ஆகக் கடைசியில் ஒரு ரோஜா செடியை (பார்வைக்கு ரோஜா போன்ற தோற்றத்தில் சொற்பமும் வாசனையற்ற வினோத வண்ணப் பூக்களைக் கொண்டிருந்தது அது) ஒரு வழியாகக் கொண்டு சேர்த்தார். அது முதல் மாலை வேளைகளில் அவரை அந்த வீட்டில் பார்ப்பது சகஜமாகிவிட்டது. சம்பளமில்லாத வேலைக்காரன் வலிய வந்தால் யார் தான் வேண்டாம் என்பார்கள்.
இப்போது நடந்து கொண்டிருக்கிறதே அந்த விழாவிற்கு இரண்டு நாள் முன்னால் அதாவது முந்தின தினத்திற்கு முன்நாள் பம்பரச் சுழற்சிக்கிடையில் சற்றே ஓய்வெடுக்க வீட்டிற்கு வந்த சமயத்தில் ஆசிரியரைப் பார்த்தார் தலைமைச் செயலர். பார்த்துக் கொள்ளலாம் எனத் தள்ளிப் போட்ட விஷயம் நினைவிற்கு வந்தது. விழாவில் அதிபரும் பிரமுகர்களும் பறக்கவிட நல்ல தூய வெண்மையில் பத்துப் பதினைந்து புறாக்கள் தேவை என்கிற விஷயத்தைத் தெரிவித்தார். தங்களுக்குத் தேவை என்றால் கிடைக்காத ஒன்றும் உலகத்தில் உண்டா என்கிற விதமாகச் செயலரைக் குளிர வைத்துவிட்டு வெளியில் கிளம்பியவருக்கு மணியாக ஆக உடம்பில் உஷ்ணமேறத் தொடங்கிற்று.
ரோஜா விவகாரமில்லை இது. கிடைத்தால் லாபம் இல்லையெனில் பரவாயில்லை என்பதற்கு. முதல் நாள் கழிந்ததும் கிட்டத்தட்ட ஜன்னிகாணும் அளவிற்குப் பதட்டமாக இருந்தார். உலகின் சமாதானம் அவர் தோள்களை அழுத்தத் தொடங்கிற்று. உலகின் மிக முக்கிய விழாவின் மிகப் பிரதான அம்சம் தன் முன்னால் நிற்கிறது என்பதனால் உண்டாகும் தனது முக்கியத்துவம் கருதி மகிழ வேண்டிய தருணத்தில், அதற்கு முற்றிலும் மாறாகக் கலவரத்தில் அமிழத் தொடங்கிய சமயத்தில்தான் அதிர்ஷ்ட்டம் மாணவனாக இவ்வளவு காலமும் தனக்கெதிரில் இரண்டடி தூரத்தில் உட்கார்ந்திருப்பது தெரிய வந்தது. வெட்கமாக இருந்தது. பித்துப் பிடித்தவன் போல கோயில், கோபுரம், மசூதி, மார்க்கெட் என்று சுற்றித் திரிந்த காட்சியை நினைத்துப் பார்க்கக் கொஞ்சம் வெட்கமாகத்தான் இருந்தது.
பையனை அழைத்துக் கொண்டு அவன் வீட்டிற்கருகில் இருந்த கூரைக் கொட்டகைக்குச் சென்றார். அதை வீடென்று சொல்ல இயலாது. எனினும் அதைச் சுற்றியும் முட்கிளைகள் வேலிகட்டி நின்றன. இற்றுக் கிடந்த மூங்கில்படல் கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனார். வேலி மூலையில் சில கோழிகள் மேய்ந்தபடி இருந்தன. வலதுபுறம், மழையில் நனைந்து வெயிலில் காய்ந்த சின்ன பெட்டிக்கடையின் வடிவில் நின்றிருந்ததுதான் பையன் சொன்ன புறாக்கள் அடையும் கூண்டெனக் கண்டுகொண்டார். கூரைக் கொட்டகை தவிர அங்கிருந்தது அது மட்டும்தான். அதற்கு சற்றுத் தள்ளி கொஞ்சம் நெல் பரப்பப்பட்டு கருப்புத்துணி சுற்றிய கழியொன்று காவல் காத்துக் கிடந்தது. பையன் குரல் கொடுத்ததும் கைகளில் ஊஞ்சலாடி ஒரு உருவம் எட்டிப் பார்த்தது.
சுருக்கமாக விஷயத்தைக் கூறினார் ஆசிரியர். கொஞ்சம் அரண்டவனாகக் காணப்பட்டான் அந்த ஆள். உடனடியாக மறுத்தான். ஆசிரியர் குரலில் சூடேறக் கண்டதும் சற்றுப் பணிவாகத் தன் நிலையைச் சொல்லத் தொடங்கினான். பார்வைக்கே தெரிகிற ஊனத்தைச் சொல்லி இரக்கத்தைத் தேட வேண்டாம் என்கிற விதமாய்ப் பேசினார் ஆசிரியர். கொடுக்க மறுக்கிற பட்சத்தில் எப்படி எடுத்துக் கொள்வதென்பது தனக்குத் தெரியாத விஷயமல்லவென்றும் தனது கோபம் அவனை எப்படியெல்லாம் பாதிக்கக் கூடுமென்றும் விளக்கினார். தலைமைச் செயலர் வீட்டில் பார்க்கிற ஆளில்லை. இது வேறு என்று எண்ணும்படியாக இருந்தது அவர் பேச்சும் தொனியும். அப்படியொரு பூஞ்சை உடலுக்கு எப்படி வந்தது மிடுக்கும் துடுக்கும். போலீஸ் என்கிற கடைசி அஸ்திரப் பிரயோகம் முடவனை அழத் தொடங்கும் நிலைக்குத் தள்ளிற்று. வேறுவழி ஏதுமில்லை என்ற பின் தன் ஜீவன ரகஸியத்தை அம்பலத்தில் அவிழ்த்துக் கெஞ்சினான். சாலையோர விபத்திற்குப் பின் எதேச்சையாகத் தனக்குக் கிடைத்த ஜோடிக் குஞ்சுகள் பல்கி, தனக்கு இன்று சோறிடும் ரகஸியத்தைச் சொன்னான் முடவன்.
பகலில் கூண்டைத் திறந்து விடுவான். புறாக்கள் பறந்து அக்கம்பக்கத்து வயல்களில் மேய்ந்து மாலையில் கூடடையும். திரும்பிய பறவைகளுக்கு உணவிற்குப் பதிலாக உப்புத் தண்ணீர் வைப்பான். கரிப்பில் அடக்கிவைத்த நெல்மணிகளைக் கக்கிவிடும். காலையில் உலர வைத்தால் கஞ்சிக்காகும்.
ஆசிரியரே கொஞ்சம் அசந்து போனார். மனித மூளை காரியார்த்தமானது. கவிதைக்கான தருணங்கள் மிகவும் குறைவு. விஷயத்தைத் திருப்பினார் ஆசிரியர். இவ்வளவு பழகிய புறாக்கள் எப்படியும் அவனை வந்தடையும்தானே? எங்கு விட்டால் என்ன? முடவன் குழப்பத்துடன் தன் சங்கடத்தைத் தெரிவித்தான். நின்றவரை நெடுஞ்சுவர் என்பதாக ஒவ்வொரு மாலையும் புறாக்கள் திரும்புகின்றன என்ற அளவில்தான் தன் ஜீவிதம் ஓடுகிற தென்றும், ஒவ்வொரு மாலையும் அவை திரும்பும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை என்றும், திரும்பும் என்ற நம்பிக்கையால்தான் தான் வாழ்ந்து வருவதாகவும் அவன் தெரிவித்தான். புத்தம் புது இடத்திலிருந்து பறக்கத் தொடங்கினால் குழப்பமின்றித் தமது கூட்டை வந்தடையுமா என்பது சந்தேகமில்லையா என்று மன்றாடி மறுத்தான்.
திருடி உண்ட பிழைப்பில் கொண்டதுவரை லாபம் தான். அவனாக ஒப்படைக்கிற பட்சத்தில் புறாக்களின் ரகஸியத்தைத் தாம் அம்பலப்படுத்துவதில்லை என்றும், இல்லையெனில் அபகரிப்படுமென்றும் கூறி, மாலையில் போலீஸ் ஜீப்பில் தாம் வருவதாகத் தெரிவித்துக் கிளம்பினார் ஆசிரியர்.
”அணுகுண்டுப் புகைக் குடையின் நிரந்தரக் கலவரத்தில் நாம் வாழ நேர்ந்த அவலமென்ன? பிள்ளைப் பருவக் கதைகளில் ஏழு கடல் தாண்டு ஏழு மலை தாண்டி பாழடைந்த குகையில் நாகம் காக்கும் தங்கப் பேழையில் சிறைப்பட்டிருக்கும் கிளியில் இருக்கிறது மந்திரவாதியின் உயிர் என்று பாட்டி சொல்லக் கேட்டிருக்கிறோமே. அதுபோல் அதற்கு நேரெதிர் அர்த்தத்ததில், பூமியின் இந்தக் கோடியில் எங்கோ இருக்கிற பள்ளத்தாக்கின் நதியோரம் வளர்ந்த செடியின் பூவை முத்தமிட்டு மகிழும் ஒன்றுமறியாதச் சிறுமியின் உயிர், பூமி உருண்டையின் அந்தக் கோடியில் இருக்கும், கனவிலும் முகமறியாத, நகங்கள் நாஸூக்காக வெட்டப்பட்ட மனித யந்திரக் கனவானின் விரலழுத்தும் விசையில் இருக்கிறது. என்ன அபத்தம். எங்கு நாம் போய்க் கொண்டு இருக்கிறோம். கனவிலும் பிடிபடாத பயங்கரம் நம்மை நிரந்தரமாகக் கவிந்துள்ளது. எனவே தான் அணுசக்தியை ஆக்க வேலைகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்பதில் நாம் இவ்வளவு தீவிரமாகவும் உறுதியுடனும் இருக்கிறோம். இப்போதிருக்கும் அணு ஆயுதங்கள் மூலம் இந்த பூகோள உருண்டையை நானூறு முறை அழிக்க இயலும். ஏன் இன்னும் போட்டியிட்டு தயாரிப்பில் முனைப்பாயிருக்கிறார்கள். போதாக் குறைக்கு அமைதி விழையும் நம் அணிக்கு ஆதரவு கூடி வருவதை சகிக்க முடியாத சிலர், நாங்கள் அணுகுண்டு வைத்திருக்கிறோம் என்கிற பொய்யைப் பிரசாரம் செய்து வருகிறார்கள். உண்மையில் அவர்களே தயாரிப்பு வேலையில் அந்நிய உதவியுடன் ரகஸியமாக ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதற்கான தஸ்தாவேஜுகள் எம்வசம் உள்ளன. அதை மறைக்குமுகமாகவே நம் மேல் வீண் புரளி கிளப்பப்படுகிறது. இந்த அழிவு சக்திகளை எதிர்த்துப் போராட வேண்டியது ஒவ்வொரு உலகப் பிரஜையின் கடமையும் ஆகும் என்று கூறி, அமைதியை விழைவது நாமே என்பதற்கு அடையாளமாக இந்த வெண்புறாவைப் பறக்கவிடுகிறேன்.”
பலத்த குதூகல ஆரவாரங்களுக்கிடையில் படபடத்த சிறகுகளுடன் புறாக்கள் மிரண்டு பறந்து உயர எழுந்தன. வெளிர் நீல ஆகாயத்தில் அவற்றின் அழகை ரசித்த பிரமுகர்களும் ஜனத்திரளும் சில நிமிடங்களுக்குப் பின் தத்தம் காரியம் பார்க்கக் கலையத் தொடங்கின.
புறாக்கள் உயர்ந்தும் தாழ்ந்தும் குழப்பத்துடன் பறந்து கொண்டிருந்தன.
முடவன் சாணி மெழுகிய உயரமற்ற தன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து, நெற்றியில் வலது கையை மறைப்பு கொடுத்து கண்களை இடுக்கியபடி அண்ணாந்து பார்த்துக்கொண்டு இருந்தான்.
ஆகாயம் வெளிர் நீலமாக இருந்தது.
IV
இந்தக் கதையை எழுதி எத்தனையோ ஆண்டுகளாகி விட்டன. இப்படி ஒன்றை எழுதினேன் என்பதை என்னாலேயேகூட நம்ப முடியவில்லை. எப்போது எழுதினேன் என்பதுகூட நினைவில்லை. நிச்சயம் நான் எழுத்தாளனில்லை. சில துண்டுப் பிரசுரங்களும் சில பெட்டிச் செய்திகளும் என்னை எழுத்தாளன் என்று ஆக்கிவிடாது என்கிற விஷயம் புரிகிற அளவுக்கு நானும் கொஞ்சம் படித்திருக்கிறேன்.
சத்தியம் என்று கொண்டிருந்த தத்துவத்தை விட்டு விலகி வெகுகாலமாயிற்று. மாபெரும் மாற்றம் ஒன்று நிகழப் போகிறது என நான் கண்டிருந்த கனவும், அதற்கு என் பங்கென என்னையே தந்தாக வேண்டும் என்கிற வேட்கையும், அதன் பொருட்டு முழு மூச்சுடன் என்னை இணைத்துக் கொண்டு செயல்பட்ட இயக்கமும் இன்று இல்லை.
உண்மையில் பார்க்கப் போனால், பத்து வருடம் முன்னால் நான் என்கிற வார்த்தையை இவ்வளவு தூரம் உபயோகித்திருப்பேனோ என்பது கூட சந்தேகம். என் கனவும் நம்பிக்கையும் தகர்ந்தன. ஏன் எப்படி என்றெல்லாம் பேச விருப்பமில்லை. இது யாரைக் குறித்த பயமும் இல்லை. அதேபோல் என்னைக் குறித்தும் எவருக்கும் தேவையில்லை. பழைய இடத்தையும் ஆட்களையும் விட்டு எப்போதோ விலகியாயிற்று. இன்று இங்கே ஒரு குடிகாரன் என்பதற்குமேல் என்னைப் பற்றி எவருக்கும் எதுவும் தெரியாது. தேவையும் இல்லை.
யோசித்துப் பார்த்தால் மனிதன் எதையேனும் ஒன்றைப் பற்றிக் கொண்டுதான் வாழ முடியும் போல் தோன்றுகிறது. இல்லையேல் காணாமல் போய்விடுவான். பின்நாட்களில் விலகி தனித்து பற்றுக்கோடாய் எதுவுமற்றுப் போனதாலேயே நான் சீரழிந்து போனேன் எனத் தோன்றுகிறது.
மனிதனுக்கு மிக அத்தியாவசியமான தேவைகளில் ஒன்று நம்பிக்கை. கடவுள் அல்லது லட்சியம். முன்னதில் நம்பிக்கையற்றவன் பின்னதை மிகத் தீவிரமாய் நம்புகிறான். எதையேனும் ஒன்றை நம்புவதால்தான் வாழ்க்கை அர்த்தமுள்ளதாய்த் தோன்றுகிறது.
வாழ்க்கை அதனளவில் தண்ணீர் போல. சுவை மணம், குணம், வடிவம் அற்றது. அதற்கு ஜீவனையும் அர்த்தத்தையும் நாம்தான் கொடுக்கிறோம். அர்த்தமேற்றும் போதே எதிர்பார்க்கவும் செய்கிறோம். இது தவிர்க்கவியலாத பின்விளைவுதான். பெற்றெடுக்கும் போதே ஒரு தாய் தன் குழந்தையிடம் என்னென்ன எதிர்பார்ப்புகளையும் கனவுகளையும் வளர்த்துக் கொள்கிறாள். பின்னால் அற்ப சொற்பத்திலிருந்து மிகப்பெரும் விஷயம் வரை எவ்வளவு ஏமாறுகிறாள்.
கனவும் எதிர்ப்பார்ப்பும் தான் வாழ்க்கையை வாழச் சகிக்கிறதாகவே ஆக்குகின்றன. இது சத்தியம். இல்லையெனில் வெறும் தின்று கழித்த நாட்கள் என்றல்லவா ஆகிவிடும். கனவு ததும்பக் குழந்தையைக் கொஞ்சும் தாயிடம், ஏமாறப் போகிறாய் என்பது குரூரம். எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்தான் வாழ்க்கை.
வாழ்க்கை இனிமையானதாய், உடல் மனக் கஷ்டங்களற்றதாய், பிரச்சனைகளற்றதாய், சுபிட்சமானதாய் இருக்க வேண்டும் என்பது ஒரு அடிவான லட்சியம். இதில் எவ்வளவுக்கெவ்வளவு தீவிரமாக எதிர்பார்க்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு, பலமாக அடி விழும். ஆனாலும் மனிதர்கள் அர்த்தப்படுத்திக் கொண்டு வாழவே செய்கிறார்கள். என்னைப் போல சிந்திச் சீரழிவதில்லை.
முன்பு நானிருந்த பேட்டையில் ஒரு கிழவி இட்டலிக்கடை வைத்திருந்தாள். கடை என்பது ஒரு பேச்சுக்குத்தான். இரண்டு அடுப்புகள் ஒரு தகரத் தடுப்பு எப்படிக் கடையாகும். தெருவோர முக்கில் கடை பரப்புவாள். ரிக்ஷாக்காரர்கள்தான் நிரந்தர வாடிக்கையாளர்கள். ஐம்பது அறுபது இட்டலிகள் விற்றுக்கிடைக்கிற ஐந்தாறு இட்டலிகளில் அவள் வாழ்ந்தாள். பராமரிப்புச் செலவை மிஞ்சி ஒன்றும் பெரிதாக நிற்காது என்பது தெரியாமலொன்றும் அவள் எண்பதாவது வயதை நோக்கிப் போய்க் கொண்டு இருக்கவில்லை. அடுப்பைத் தவிர எதுவும் எவருமில்லை. எனினும் வாழ்க்கை அப்படியொன்றும் அர்த்தமற்றும் போய்விடவில்லையே அவளுக்கு. அவளைப் பார்த்து நிறைய சமயங்களில் பொறாமைப் பட்டிருக்கிறேன். எந்த எதிர்பார்ப்புமின்றி, எந்தப் புகாருமின்றி, தனக்கும் சமூகத்திற்கும் அர்த்தமுள்ள பயனுள்ள ஒரு ஜீவனாய் எப்படி வாழ முடிந்தது அவளால்? நிச்சயம் ஒரு காலத்தில் அவளும் ஒரு மரமாய் இருந்திருப்பாள். அவளைச் சுற்றிய உறவுகள் மனிதர்கள் அனைத்தும் விலகி அவளே வாடி சருகாகி நிற்கிற இந்த நிலையை அடைந்த மாற்றம் எளிதாய் நிகழ்ந்திருக்குமா என்ன? அவள் பட்டிருக்கக் கூடிய துயரங்களை ஒப்பிட்டால் நான் இவ்வளவு சீரழிந்திருக்க நியாயமில்லை என்றே சொல்லலாம். அவளது சிரிப்பை என்னென்பது. நன்கு பழுத்து வெடித்தக் கருப்பு கிரிணிப்பழம் போன்ற பொக்கை வெள்ளைச் சிரிப்பு. சாமியார்களால் தான் அப்படியொரு சிரிப்பு சிரிக்க இயலும்.
இவ்வளவுதான். இதுதான் என் வாழ்க்கை. இனி இதிலிருந்து வேறு எதற்கும் என்னால் திரும்ப இயலாது. போதை ஒன்றைத் தவிர எதுவும் உயிரில்லை என்றாகி விட்டது. அதற்காக எப்படி எப்படியெல்லாம் உரு மாறியாகி விட்டது. இனி எனக்கு உட்பட எவருக்கும் நான் உபயோகப்படக்கூடும் என்பதற்கான சாத்தியக் கூறுகள் கூட முற்றாக அழிந்துவிட்டன.
இந்தக் கதை, நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. என்ன அபத்தம். இந்தக் கதை இன்று எனக்கு என்ன அர்த்தத்தைக் கொடுக்கிறது ஒன்றுமில்லை. ஆனால் எழுதிய காலகட்டத்தில் இப்படியா இருந்தது, அல்லது இருந்தேன். காலம் என்னவிதமாகவெல்லாம் குரங்காட்டம் ஆட வைக்கிறது.
இதை, இப்போதிருக்கிற எந்த முற்போக்குப் பத்திரிக்கைக்கு அனுப்பினாலும் பிரசுரமாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை. ரோசில் தொடங்கி ரத்தச் சிவப்புவரை எதிலும். ஆனால் இதிலெனக்குத் திருப்தி இல்லை. ஜனநாயகத்தைக் கிழித்துக் கிழித்துத் தோரணம் கட்டி அலுத்துவிட்டது. மேலும் பரவலாகவே, கொச்சையான அர்த்தத்தில்தான் என்றாலும், நமது சமூகத்தின் அரசியலில் போலித்தனங்கள் பேசப்படுகிற நிலையில் இன்று இது ஒன்றும் பெரிய புரட்சிகரம் இல்லை. இன்று யார் வேண்டுமானாலும் சுலபமாக முற்போக்காகிவிடலாமே.
இந்தக் கதை எழுதப்பட்ட காலத்தில் இதைப் பிரசுரிக்கும் துணிச்சல் எவருக்கும் இருந்ததில்லை என்பதென்னவோ உண்மை. மனிதனுக்கு மிக நெருக்கடியான தருணங்கள்தான் உண்மையில் அவன் யார் என்பதை அடையாளம் காட்டுகின்றன. அவன் தன்னை எதுவாக பாவித்துள்ளானோ அதுவாக அவன் உண்மையிலேயே இருக்கிறானா என்பதை அவனுக்கே காட்டும் அக்கினிக் கண்ணாடியே நெருக்கடி. ஒப்புக் கொள்கிறேன். அதிலொருவனில்லை நான். பிரத்யட்சத் தீயிலிருந்து முகம் திருப்பிக் கொண்டேன். எனினும் வெம்மை என் முகத்தையும் தீய்த்தது. அதில்தான் முகத்தை இழந்து இந்த நிலையில் நிற்கிறேன். ஒன்று மட்டும் சத்தியம். நான் எவருக்கும் துரோகம் இழைக்கவில்லை. மாறாக துரோகத்துப் பலியாகப் பார்த்து அதிருஷ்டவசமாகத் தப்பினேன். முகத்தைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு வரையறை ஏதும் இல்லையா? தோலுக்கு ஈடு நம்பியவன் உயிரா? தத்துவங்கள் எதற்குத்தான் துணை புரிவதில்லை? இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்துப் பின் நிமிரும் எனில் அது என்ன தத்துவம்? நானொன்றும் பெரிய பண்டிதனில்லை. தவறு தத்துவத்தில் இல்லை நடைமுறையில் எனலாம். இருக்கலாம். ஆனால் நடைமுறையை சதுரங்கக் காயென மாற்றி வைத்துக் கொண்டே போக என் மனசாட்சிக்குத் திராணி இல்லை.
மனிதனின் முகங்கள் இயல்புகள் நாம் அறியாதவை. அறிவேன் என எவனும் சொல்வானாகில் அவனே அறியாவதன். ஒரு நாய் இப்படி இப்படிப் போகும் என்று சொல்லிவிடுவது சுலபம். ஒரு மனிதனை இவன் இப்படித்தான் என்று அனுமானிக்க இயலாது என்பது என் அனுபவ உண்மை. மனிதனைப் பற்றிய மகத்துவக் கனவுகள் எரிந்து கருக அக்கினிக் கண்ணாடிதான் வேண்டும் என்றில்லை. உங்கள் முதுகிற்குப் பின்னால் அவன் இப்படித்தான் இருக்கிறான் என்று சொல்லக்கூட எந்த சாத்தியமும் இல்லை. நேற்றுவரை, ஏன் இந்த க்ஷணம் வரை, இப்படி இருக்கிறான் என்பதால் நாளையும் இப்படி நடப்பான் என்று உறுதி சொல்ல எந்த சாத்தியமும் இல்லை. நாளைய தினம், இன்று போலவே இல்லாது போகும் பட்சத்தில்.
இல்லை. இந்த விஷயங்களை எவரிடமும் பேசியதில்லை நான் இன்றுவரை. காரணம், பிரயோஜனம் ஒன்றுமில்லை, கைப்புதான் மிஞ்சும். சாப்பிடவே உணவில்லாதவனுக்குக் குமட்டல் தேவைதானா?
ஒன்று கேட்கிறேன். இது ஒன்றும் அமர சிருஷ்டி இல்லைதான். எனினும் இந்தக் கதையை எந்த கம்யூனிஸ்ட் நாட்டிலும் பிரசுரிக்க இயலுமா? நாம் இன்று வாழும் சமூகத்தையும் அரசையும் கிழித்துத் தோரணம் கட்டலாம். அழிந்து நசிந்து கொண்டிருக்கிற எதார்த்தத்தை எடுத்துக் காட்டி எள்ளி நகைத்து இடிமுழக்கமிடலாம். ஆனால் அதோடு நின்றுவிடுவதில்லையே சரித்திரம். நாம் நம்பிய விரும்பிய அமைப்புகள் நாடுகள் ஒவ்வொன்றும் என்ன ஆயின? எங்கு நிகழ்ந்தது கோளாறு? தத்துவத்தில் இல்லை நடைமுறையில். விஞ்ஞான ரீதியில் பார்த்தாலும் ஏற்க முடியவில்லையே. எல்லா இடத்திலும் நடைமுறையில் தோல்வியுறும் எனில் கோளாறு எங்கே? ஆனாலும் வைத்துக் கும்பிட சிவலிங்கமா அது? நாடகம் படிப்பதற்கு அல்ல, நடிப்பதற்கு. நடிக்க முற்பட்டால் தோல்வியுறும் எனில், அது எவ்வளவுதான் உயர்ந்ததெனினும் வேறு ஏதோ அன்றி நிச்சயம் நாடகம் இல்லை.
மனசாட்சியைத் தொட்டு, அறிவை புத்திசாலித்தனத்தைத் தூர எறிந்துவிட்டு, ஒரு ரிக்ஷாக்காரனின் எளிய யதார்த்தப் பார்வையில் இந்தக் கேள்வியை எனக்கு நானே கேட்டுக் கொள்கிறேன். இங்கிருக்கும் சுதந்திரம் பொய். ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இதை அம்பலத்தில் போட்டு சூறை உடைப்பதில் ஆவேசம் கொள்ளும் ஒருவன், எதற்காக எந்த சமூக அமைப்பிற்காக இதைச் செய்கிறானோ, அந்த அமைப்பில் இதே போல் நிர்தாட்சண்யமாக விமர்சிக்க இயலுமா? எட்டுபேர் கொண்ட இயக்கத்திலேயே எதிர் கருத்து சந்தேகத்துடன் பார்க்கப்படும் நிலையில், கோடி ஜனங்களுக்கான அமைப்பின் அதிகாரம், கேள்விகளை நிர்சிந்தையாக வரவேற்குமா? இல்லை என்பதுதான் இன்று வரையிலான யதார்த்தம். சமூகம் மக்கள் சுபீட்சம் இவற்றினடியில் உண்மையில் மறைந்திருந்து இயக்கும் சக்திதான் என்ன? அதிகாரம்.
சிதிலக் கோட்டையை இடித்துத் தரைமட்டமாக்கி விட்டுக் கட்டுகிற எஃகுக் கோட்டையில் சிறு சாளரம் கூட இருக்காதெனில், என்ன மூச்சுத் திணறி பாதுகாப்பான கௌரவப் பிணமாக வாழவா?
முறிந்து விழுந்தபின் சுதாரித்து சிந்தித்த எண்ணங்கள் தான் இவை. இல்லையென்று சொல்லவில்லை. என் வீழ்ச்சியை நியாயப்படுத்திக் கொள்ளவும் இவற்றை நான் முன்வைக்கவில்லை. எங்கு போய் யாரிடம் எதை நிரூபித்து என்ன ஆக வேண்டும் எனக்கு? எழுதித் தீர்த்ததெல்லாம் ஏதோ அசட்டு வேகத்தில். இந்தக் கேள்விகளை எவரிடமும் தலைதூக்கிக் கேட்கத் தேவையான சாதாரண மனுஷ கௌரவம்கூட இன்று எனக்கு இல்லை. பிணம் தர்கித்து என்ன பிரயோஜனம்?
எனக்கு இன்னும் பிடிபடாத ஆச்சரியம் இதை நான் எப்படி எழுதிக் கொண்டு இருக்கிறேன் என்பதுதான். என்னால் எதுவுமே செய்ய இயலாது. ஒருவன் பிச்சை எடுக்கிற நிலைக்கு மட்டும் போகவே கூடாது. போனவன் திரும்ப எழுந்து மனுஷனாக நடமாடுவதென்பது சாத்தியமே இல்லை. போதையின் நிர்பந்தம் சில சமயங்களிலும் என்னை அதுவாகவும் அடித்திருக்கிறது. என்றாலும் இதை எழுதிக் கொண்டு இருக்கிறேன். சுயசரிதம் எழுதும் நோக்கமெல்லாம் துப்புரவாக எனக்கு இல்லை. வெட்கமில்லை காரணம். என்னைப் பற்றி மனுஷன் என்கிற மரியாதை எனக்கே இல்லாதபோது நானெப்படி இன்னொருவனெதிரில் நிற்க முடியும்? குடிப்பதற்காகப் போடும் வேஷம், பேச்சு, கோமாளித்தனம் எல்லாம் குடிக்கிற ஒரே நோக்கத்திற்காகத்தான். அதற்காகத் தவிர வேறு எதற்காகவும் எதுவும் செய்ய முடியாது.
எனினும் நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். எழுத்திற்குத் தேவை அடிப்படை ஒழுங்கு. ஏன் வாழ்க்கைக்கும்தான். ஒழுங்கற்றவர்கள் கூட உள்ளூர ஏதோ ஒரு ஒழுங்கில் இருக்கவே செய்கிறார்கள். ஏன் விலங்குகள் தாவரம், கடல், சூரியன் என பிரபஞ்சம் அனைத்தும் ஒருவித ஒழுங்கில்தான் இயங்குகிறது. ஒன்றுக்கொன்று முரண்பட்டதான தோற்றம் காட்டும் ஒழுங்கு.
ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது. நானெப்படி இவ்வளவு எழுதினேன் என்று. அதுவும் ஒரே மூச்சில். முந்தின பத்தி வரை எழுதியதும், எழுதியதைத் திரும்ப படித்துப் பார்த்தேன். ஆரம்பப் பகுதிகளில் இருந்த பழக்கமின்மையின் தடுமாற்றம்கூட அடுத்த பக்கங்களில் விலகி ஓரளவு சீருக்கு வந்துவிட்டது. விஷயம் கூட ஓரிரண்டு இடம் தவிர ஓரளவிற்கு சீராகவே வந்திருக்கிறது. இட்டலிக்காரக் கிழவி பற்றிய பத்தி ஒட்டு மொத்தத்தில் ரொம்ப சரியாகவே உட்கார்ந்திருக்கிறது. என்னால் நம்பவே முடியவில்லை. எழுதிய வார்த்தைகளை எண்ணிப் பார்க்க வேண்டும் போல சிறுபிள்ளைத் தனமான குதூகலம் உண்டாகிறது. அம்மாடியோ ஆயிரத்தி நூற்றி சொச்சம் வார்த்தைகள். நான், நான் எழுதியிருக்கிறேன். சுயநினைவு தவறிய முழு போதையில் இல்லை எனினும் இறங்கு முகத்தில்தான் இதை எழுதத் தொடங்கினேன். ஆயிரத்துக்கு மேற்பட்ட வார்த்தைகளை எழுதி இருக்கிறேன். என்னைத் தவிர வேறு யாராலும் இப்போதைய என் மனநிலையைப் புரிந்து கொள்ள முடியாது. ஆயிரம் வார்த்தைகள். முற்றாக அழிந்தவனுக்கு ஆயிரம் வார்த்தைகள் எழுதுவதென்பது சாமான்ய விஷயமில்லை. கடந்த எட்டு வருட காலத்தில் இவ்வளவு நேரம் ஒரு இடத்தில் உட்கார்ந்து காரியம் என்று ஒன்றைச் சீராகச் செய்ய முடியாமலே வாழ்ந்தவனுக்குதான் புரிபடும் இதன் முக்கியத்துவம். என்னைத் தவிர அப்படி ஒரு மனிதன் இருக்கக்கூடும் என்பதை எவ்வளவுதான் தாராளமாகக் கற்பனை செய்தாலும் என்னால் நம்பமுடியவில்லை.
மனிதனின் அனைத்து விஷயங்களும் அவனுக்குள்தான் புதையுண்டிருக்கின்றன. பள்ளத்தாக்குகளும் சிகரங்களும். ஆனால் ஒரு தருணத்தில் ஏதாவதொன்றில்தான் அவன் இருக்கிறான். அது மட்டுமேதான் தான் எனவும் அவன் நினைக்கிறான். மூர்க்கமாக நம்புகிறான். இந்த விதத்தில் இவனை மறுபக்க அறிவற்ற கற்பனைக் குருடன் என்றே சொல்லத் தோன்றுகிறது. பிரபஞ்சம் பல்வேறு சாத்தியங்களுடன் இயங்கிக் கொண்டு இருக்கிறது. அதன் சின்னஞ்சிறு துணுக்குதான் மனிதன். அவனுக்குள்ளும் ஒரு பிரபஞ்சம் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது, பல்வேறு சாத்தியங்களுடன் என்கிற சூட்சமம் அவனுக்கு ஏன் புலப்படாமலே இருக்கிறது? ஒன்றும் பெரிய தத்துவ தரிசனமல்ல. மேம்பாலம் ஏற்றமா? இறக்கமா? மையத்தைத் தொடும் வரை ஏற்றம்தான். ஆனால் பாலத்தை ஏற்றமாக மட்டுமே கண்டு சலிப்பதென்ன?
பார்க்கப் போனால் எல்லாம் ஒரு விதத்தில் தற்செயல் நிகழ்வுகள்தான், கருத்தரிப்பு போல. பத்து லட்சத்தில் ஒன்று என்கிற சாத்தியம்தான் மனிதன் என்கிற விஞ்ஞான உண்மையைக் கண்டுபிடித்த மனிதன் உணர்வதே இல்லை.
ஏன், இதையே எடுத்துக் கொள்ளலாம். இந்த மூன்றாந்தர லாட்ஜின் மாடிப்படியின் கீழ், ஒண்டக் கிடைத்த இடத்தின் முடுக்கிலிருக்கிற என் தகரப் பெட்டியில், சில்லறை ஏதும் இருக்குமா எனக் குடையத் தொடங்கி, குப்பையைக் கிளறி அடியில் விரித்திருக்கும் மக்கல் செய்தித்தாளைத் தூக்கிப் பார்க்கப் போக, இந்த நோட்புக்கும் அதிலிருந்த கதையும் கிடைக்க, படிக்கத் தொடங்கியவன், மூன்றுமுறைக்கும் மேலாகப் படித்தபின், கையில் கிடைத்த ரீஃபிலில் இதை எழுதத் தொடங்கினேன் என்பதை, இப்போது இதை எழுதிக் கொண்டிருக்கையிலும் கூட என்னாலேயே நம்ப முடியவில்லையே.
(செப்டம்பர் 1986)
விமலாதித்த மாமல்லன் கதைகள் (உயிர்மை பதிப்பகம் வெளியீடு) இணையத்தில் வாங்க இங்கே செல்லவும்: உயிர்மை பதிப்பகம் , கிழக்கு