தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Tuesday, August 02, 2011

கோப்பம்மாள், மதினிமார்கள் கதை - கோணங்கி

கோப்பம்மாள் - கோணங்கி
அஞ்சாம் வகுப்பு கோப்பம்மாளுக்கு பச்சைக்கலர் பாவாடைதான் இருக்கிறது. பாவாடை தான் பச்சை என்றால் பெயரைக் கூட பச்சையென்று கூப்பிட்டார்கள். 'பள்ளிக்கூடம் வரும் போது தம்பிய தூக்கிட்டு வராதே...' என்று அஞ்சாப்பு வாத்தியார் சொன்னார். பிள்ளை தூக்கப் போட்டுருவாக சார். எங்கைய்யா பள்ளிக்கூடத்துக்கு வுடரது சார் என்றாள்.
கோப்பாம்மாவுக்கு பள்ளியை விட்டு வெளியேறினால் அனேக வேலைகள் இருந்தன. ஊர்க்கஞ்சி எடுக்க போகணும். அதற்கெல்லாம் எப்பொழுதோ பழகிவிட்டாள். வீடுவீடாய் போய் விழுந்த உருப்படிகளை எடுத்து பொதியில் சேர்த்தாள்.konangi
வீட்டில் கழுதைகள் நிற்காது. ஒவ்வொரு கழுதையும் ஒவ்வொரு திக்கில் நிற்கும். அவற்றை வீடு சேர்க்க வேண்டும். குட்டிக் கழுதை தரியில் நிற்காது. குட்டிக் கழுதை அவளைக் கண்டு ஓடும். மேட்டு நிலத்தில் நின்று பார்க்கும். கிட்டவராது. கன்னுக்குட்டி என்று பெயர் வைத்திருந்தாள், குட்டி கழுதைக்கு. உன் அம்மா வீட்டுக்கு வந்துவிட்டது, ஓடையில் நிக்காதே... என்று செல்லம் கொஞ்சினாள். கோப்பம்மாள் கன்னுக்குட்டியிடம் போய் நின்றாள். சின்ன மூஞ்சில் அழகு வடிந்தது. திடீரென்று ஒடியது. அவளும் விரட்டினாள். வண்ணாக்குடியில் உள்ள கழுதை மேல் எல்லாம் அதிசயங்கள் இருந்தன. குட்டிக் கழுதை துள்ளியது.

வண்ணாப்புள்ளை பள்ளிக்கூடம் போவது வண்ணாத்திக்குப் பெருமை. பள்ளிக்கூடம் போனால் தம்பி அழுவான். குரங்குகுட்டி மாதிரி சவளைப்பிள்ளை அது. அண்டி தள்ளி வீசும். அவன்கிட்டத்தில் யாரும் ஒட்டவில்லை. தம்பி ஆயிருந்து விடுவான், பள்ளிக்கூடத்தில். முகம் சுழித்து வகுப்பறையே ஒடியது.

வண்ணாத்தியை அடிப்பதை என்று நிறுத்துகிறோமோ அன்றே உலகம் பாழ் என்ற பிரம்புக் கொள்கை வைத்திருந்தார், அஞ்சாப்பு வாத்தியார். வகுப்பறையைக் கழுவிவிட்டு சுத்தம் செய்யும்படி கட்டளையிட்டார். கோப்பம்மாள் அழுது கொண்டே சுத்தம் செய்தாள். எல்லாப் பிள்ளைகள் மூஞ்சிலும் சுழிப்பு இருந்தது. அவளுக்கு அவமானமாய் போய்விட்டது.

கோப்பம்மாளைக் கண்டு முகம் சுழிக்காதவர் ஒருசிலர் இல்லாமலில்லை. வண்ணாத்திப்பூச்சி என்பான் மாரியப்பன். மாரியப்பனின் மண்டை முன்னும் பின்னும் சப்பளிந்து இருந்தது. பிளசர் மண்டை என்றார்கள் அவனை. கிள்ளி வைப்பான் பிள்ளைகளை. பிளசர் மண்டையில் வாத்தியாரின் குட்டுகள் விழும்.

அவன் பள்ளிக்கூடம் வரும் போது ஊதா சட்டை போட்டு வந்தான். ஊதா பிளசர் என்றார்கள் அவனை. ஒருவர் மாற்றி ஒருவர் பட்டங்கள் கொடுத்தது பற்றிப் பெரியவர்கள் கவனிப்பதில்லை.

மாரியப்பன் வீட்டுக்கு அழுக்கு எடுக்கப் போனாள் கோப்பம்மாள். ஊதாச் சட்டைகள் 3 இருந்தன மாரியப்பனுக்கு. என்றோ செத்துப் போன அய்யாவின் சட்டைகளே அவை. மாரியப்பன் அய்யா விறகு வெட்டி. ஊதாசட்டையும் பெல்ட்டும் போட்டிருந்தார். அய்யா இருக்கும் போதே அவன் வீட்டில் 3 சட்டைகள் இருந்தன. டவுசர் மட்டும் போட்டிருந்தான் மாரியப்பன். அவனுக்கு ஊதா சட்டைகளை விட்டுவிட்டு அய்யா மண்ணுக்குள் போய்விட்டார்.

மாரியப்பனின் பஞ்சர் ஒட்டிய டவுசர்கள் நிறமிழந்துவிட்டன. பையில் வெல்லக்கட்டி போட்டு வைப்பதால் எலிகள் கொரித்தன. மாரியப்பன் வீட்டில் வட்டு திருடி வெல்லக்கட்டி தான் வாங்குவான். அடே மாரியப்பா வெல்லக்கட்டி திங்காதேடா. பல் சொத்தையாகிவிடும் என்றாள் அம்மா. இன்னிமே திங்க மாட்டம்மா என்றான் சமத்து.

டெயிலர் பொன்னுசாமி மாமா அவன் டவுசருக்கும் சட்டைக்கும் கலர்கலர் பீஸ்களில் தபால் பெட்டிகளை இணைத்தார். ஓசியில் அவனுக்கு மணிப்பர்ஸ் செய்து கொடுத்தார். பள்ளிக் கூடத்திலேயே மாரியப்பனிடம் தான் குட்டி மணிப்பர்ஸ் இருந்தது. அமுக்கு பட்டன் வைத்த மணிப்பர்சு. மணிப்பர்சுக்குள் ரூவா தாள்கள் வைத்திருந்தான். 

நோட்டுப் புத்தகத்தில் நடு நடுவில் ரூவா படம் போட்டான். அதை பிளேடால் வெட்டி ரூவா சேர்த்தான். எல்லா பிள்ளைகளும் பார்க்கும் சமயத்தில், போஸ்ட் பாக்ஸை திறந்து குட்டி மணிப்பர்ஸை எடுத்தான். தலைகள் தொங்கின. டேய்டேய்... எனக்குடா, எனக்குடா என்று பிள்ளைகள் கைநீட்டி சூழ்ந்தன.

ஒவ்வொருவருக்கும் ரூவா தாள் கொடுத்துப் பெருமை பட்டான். அப்போது மாரியப்பன் கண்கள் சாகஸம் புரிந்தன. பெரிய சீமான் மாதிரி பென்சிலை வைத்து சீரேட் குடித்தான். வண்ணாத்திப்பூச்சி இந்தப்பக்கம் வரமாட்டாள். தம்பியோடு பலகையில் ஒதுங்கி நின்றாள். மாரியப்பன் யாருக்கும் தெரியாமல் அவளுக்கு மட்டும் ரூவா நோட்டு கொடுத்தான். அவளும் சுற்றி நோட்டம் பார்த்துவிட்டு வாங்கிக் கொண்டாள்.

அஞ்சாப்பு வாத்தியார் பிரம்பு, புஸ்தகத்துடன் வேட்டியைப் பிடித்தபடி உள்ளே நுழைந்தார். வகுப்பறையில் நடப்பதைப் பார்த்த மாத்திரம் தெரிந்து விடும் அவருக்கு. பள்ளிக்கூடத்தில் மிஷின் வைத்திருந்தார். அந்த மிஷின் டிராயருக்குள் வைத்திருந்தார். யார் யார் என்ன சேட்டை செய்தார்களோ அதையெல்லாம் பதிந்து விடும். வாத்தியார் வரவும் சொல்லிக் கொடுத்துவிடும்.
வந்ததும், வாரத்தில் முதல் நாள் சீருடை அணியாதவர்களைப் பள்ளியை விட்டு விரட்டினார். சார்... சார்.. மாரியப்பன் டவுசர் போடலை சார்... என்றான் கெசவால் ராமசாமி. வாத்தியார் மாரியப்பனை பிரம்புடன் அணைத்துக் கேட்டார். சார்... சார்... டவுசர் போட்டிருக்கேன் சார் என்றான். வேதக்கோயில் பாதிரியார் மாதிரி கால்களை மூடிய ஊதா சட்டையைப் பிடித்துக் கொண்டான். யாரும் சட்டையை தூக்கிவிடுவார்கள் என்று பயந்து நடுங்கினான்.

உடனே பிரம்பு சட்டம் அமலானது. மாரியப்பனை வகுப்பறையை விட்டு விரட்டினார். மேலும் சீருடை இல்லாத கோப்பம்மாவுடன் பிரம்பு பேசியது. மாரியப்பனும் வண்ணாத்திபூச்சியும் வகுப்பறையிலிருந்து வெளியேறினார்கள். பள்ளிக்கூடத்துக்கு வெளியில் வெயில். பூட்டிக்கிடந்த வீடுகளைக் கடந்து போனார்கள். தெருமுனையில் வகுப்பறைச் சத்தம் கேட்டது. அவர்கள் மனபோக்கின் சுதந்திரத்தைப் போல் வெயிலும் மாறியது. கோப்பம்மாள் இடுப்பில் தம்பி இருந்தான். தெருக்கடைசியில் விளையாட்டுப் பள்ளிக்கூடம் இருந்தது. நிழல் விளையாட்டு. அங்கு தான் ஒன்னாப்பு கோபால் வாத்தியார் இருந்தார்.

அஞ்சாப்பு பிள்ளைகளுக்கு நிழல் விளையாட்டு கிடைக்காது. அஞ்சாப்பு வாத்தியார் ஆங்கிலம், தமிழ்ப்பாடம், கணக்கு அறிவியல் என்ற தான் பாடங்கள் நடத்துவார். அஞ்சாப்பு வாத்தியார் விளையாட்டின் எதிரி. அவரோடு பெற்றோர்களும் குதியாளம் போடுவதை எதிர்த்து வந்தார்கள்.
எல்லோரும் கோபால் வாத்தியாரிடம் நிழல் விளையாட்டு கற்றுக் கொண்டவர்கள் தான். கோப்பம்மாளும் விளையாடினாள். தம்பியை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டால் விளையாட்டில் சேர்க்க மாட்டார்கள். ஆகவே வாத்தியாருக்கு அருகில் நின்றாள். குட்டித்தம்பி அக்காளின் அசட்டுச் சடையைப் பிடித்து விளையாடுகிறான். அக்கா முகத்தில் பிஞ்சுக்கைகளை அலைத்துச் சிரித்தான்.

விளையாட்டில் சேர்ந்து கொண்ட பிள்ளைகள் குட்டித்தம்பிக்கும் கோப்பம்மாளுக்கும் காய் விட்டார்கள். மாரியப்பன் ஒன்னாப்பு பிள்ளைகளோடு விளையாடினான். வேம்பு எப்போது பூத்தது, பூத்ததை உதிர்த்தது, பிஞ்சும் பூவுமானது எப்போது என்றெல்லாம் கோவாலு வாத்தியார் பார்த்துக் கொண்டிருந்தார்.

நெ.மேட்டுப்பட்டி பிள்ளைகள் எப்பொழுதெல்லாம் வேம்புடன் விளையாடினார்கள். கோவாலு வாத்தியார் சின்னப் பிள்ளையாக இருந்த போது அவருக்கு நிழல் விளையாட்டு சொல்லி கொடுத்தவர்களைப் பற்றியெல்லாம் தாத்தாவுக்கு முந்திய காலத்து வேம்பு மறக்கவே இல்லை.
நெ.மேட்டுபட்டியில் ரொம்ப வயசான வேம்பாகையால் தான் தோன்றிய காலத்தையும் நிழல் விளையாட்டுகள் தோன்றிய காலத்தையும் ஒரு வேளை மறந்து போயிருக்கலாம்.

கோப்பம்மாளை யாரும் விளையாட்டில் சேர்த்துக் கொள்ளாத போது வேம்பு அவளை பார்த்தது. அவள் பச்சைப் பாவாடையிலிருந்து தொங்கும் நாடாவை எடுத்து கடித்துக் கொண்டிருந்தாள்.
கோபால் வாத்தியாரின் பார்வை மரக்கிளைகளின் ஆராய்ச்சியிலிருந்து கீழிறங்கி விளையாட்டீனூடே பிள்ளைகளை நோட்டம் பார்த்தது. திரும்பவும் விட்ட கிளை தாவி ஏறியது கோபால் வாத்தியாரின் கவனம்.

ஒடிசலான கோபால் வாத்தியார் பிள்ளைகளுக்கு நிழல் விளையாட்டின் மீது வரும் ஆர்வத்தை தூண்டி வருகிறார் ஒவ்வொரு காலமும்.

நெ.மேட்டுபட்டி தெற்குத் தெருவில் தேய்ந்து கிடந்த நீண்டகாலப் புழுதிக்கூட இந்த வழியே போன காற்றால் அடித்துச் செல்லப்படும். தெருவே கரடு தட்டுப் போன வண்டிப் பாதையாய்க் கிடக்கும். இந்த வழியில் இப்போது வண்டிகள் செல்வதில்லை. ஆள் நடமாட்டமில்லாது போய்விட்டது. இதே வரிசையான வீடுகளில் வண்ணாக்குடிகளும் மாறிவிட்டன. ரேழிக்கதவின் உள்ளே பறந்து கிடக்கும் வீடு. உள்ளே கோப்பம்மாள் குமர் இருந்து கொண்டிருந்தாள்.

தன் பள்ளிக்காலம் ஓடியபின் தெருவழியே நடப்பது கூட இல்லை. வண்டிப் பாதை வழியாக ஓரமாய் நடந்து போய்க் காட்டில் மேயும் கழுதைகளைப் பத்தியபடி முள்ளு விறகுடன் திரும்பி வந்தாள். மாரியப்பன் வேணாத வெயிலோடு பண்ணை ஆடுகளுக்குப் பின்னால் காடே கிடையாகக் கிடந்து காய்ந்த வாடக்கரடுகளை ஆடுகள் தின்னும் சத்தத்தைக் கேட்டபடி தொரட்டியை நிலையாக ஊன்றியபடி கல்தூணாகி நிற்பான். ஆடு யார் பொலியில் தின்னாலும் மேஞ்சாலும் கண்ணுக்கு தெரியாமல் புலம்பிக் கொண்டிருப்பான்.

பனையேறி சேருமுக நாடாரிடம் குடித்த கள்ளு முட்டி உச்சிவெயிலில் தலைக்கேறும். ரத்தச் சிவப்பாக கண்ணு முழி பிதுங்கி நிற்கும். கண்ணில் ரத்தம் சொட்ட காத்துவாக்கில் மேற்காமல் திரும்பி நின்றபடி காட்டு கூப்பாடும் பாட்டுமாய் காடே தாங்காது. கட்டாந்தரை மாதிரி செம்பட்டையும் வங்கு வங்காய் பயல் உடம்பெல்லாம் சொரி உப்பரிஞ்சு போய் கிடப்பான் ஓடக் காட்டில்.

ஊதாச்சட்டை வெயிலில் அசைவதை பார்த்து சுற்றி சுற்றி முள்ளு சேகரிப்பாள் கோப்பம்மாள். அன்று ராத்திரி கோப்பம்மாள் சோறெடுக்க வந்தாள். எல்லோர் வீட்டிலும் வாங்கி கொண்டு மாரியப்பன் வீட்டிற்கு வந்தாள். மாரியப்பன் இருட்டில் நின்றுக் கொண்டு கோப்பம்மாள் என்றான். அவனிடம் வந்தாள். கோப்பம்மாளின் சோத்துப்பானைக்குள் கையைவிட்டு ஒரு கை அள்ளி வாயில் போட்டுக் கொண்டான். நல்லா இருக்கு என்றான்.

கோப்பம்மா உனக்கு... என்று இன்னொரு கவளம் அள்ளி அவளிடம் நீட்டினான். மறுக்காமல் வாங்கிச் சாப்பிடாமல் பானையில் சேர்த்துக் கொண்டாள்.

அந்த இரவோடு அவள் சோறெடுக்க வரவில்லை. அவள் ஆத்தா தான் அழுக்கெடுக்க வந்தாள். கோப்பம்மாள் இப்பொழுதெல்லாம் வெளியில் வருவது கூட இல்லை. தண்ணிக் கிணத்தில் நின்ற போது கரை வழியாக ஆடுகளோடு புழுதிக் கிளப்பிப் போய்கொண்டிருந்தான் மாரியப்பன். அவள் இருந்த பக்கம் திரும்பி பாராமல் உர்... ரென்று முகத்தை வைத்துக் கொண்டு நடந்தான். அவள் அருகில் சப்தநாடி எல்லாம் அடங்கி நடந்து கொண்டிருந்ததே தெரியாமல் காட்டுக்குப் போனான்.

அவள் இருந்த பக்கம் எட்டி பார்க்காத நாளில் கோப்பம்மாளை பெண் கேட்டு வந்துவிட்டார்கள். தெற்கே வெகு தொலைவான விருந்தாளிகள். ராத்திரியோடு பெண்ணழைத்து போக இருந்தது.
கிணத்தங்கரை பக்கம் குடத்துடன் போய் காத்திருந்தாள். காட்டிலிருந்து வரவே இல்லை அவன்.
வீட்டுக்கு வந்த போது வாசலில் கிடந்த அழுக்குப் பொதியில் அது துருத்திக் கொண்டு வெளியே தெரிந்தது.

இற்று உருக்குலைந்து போன ஊதாசட்டை தான். அதை யாருக்கும் தெரியாமல் உருவி எடுத்துக் கொண்டு போனாள்.

கந்தல் கந்தலாய் சிதிலமடைந்து போன ஊதாச் சட்டையில் எல்லா இடமும் பொத்தலும் ஒட்டுமாய் இருந்தது.

நெஞ்சுத் தூரத்தில் வெக்கை திரண்டு தீக்கங்கு போல் பழுத்து எரிந்தது.

உப்பரித்து வீசும் ஊதாச் சட்டையை மார்போடு புதைத்துக் கொண்டு கேவிக் கேவி அழுதாள். முகத்தில் ஒற்றிக் கொண்டாள். ஆறுதல் அடைய மறுத்த தீக்கணு எரிந்து கொண்டிருந்தது. கோப்பம்மாள் ஊதாச் சட்டையை ஊருக்குக் கொண்டு போக வேண்டிய மஞ்சள் பையில் தன் சேலையுடன் எடுத்து வைத்தாள்.

பின் வாசல் சுருக்கிருட்டில் இருட்டுப் பூச்சிகள் சத்தத்துடன் இருளைப் பெருக்கியடி இரைந்து கொண்டிருந்தன.
****


மதினிமார்கள் கதை – கோணங்கி

உடனே அடையாளம் கண்டு விட்டான். சந்தேகமில்லாமல்; இவன் கேட்ட அதே குரல்; அதே சிரிப்பு. வியாபாரம் ஆனாலும் ஆகாவிட்டாலும் சலிப்பில்லாத அதே பேச்சு. ஆவுடத்தங்க மதினியா.

சாத்தூர் ரயிலடியில் வெள்ளரிக்காய் விக்கிறவனை சேர்த்துக் கொண்டு ஓடி வந்தவளென்று கேள்விப்பட்டிருந்த நம்மூர் மதினியா இப்படி மாறிப் போனாள். என்ன வந்தது இவளுக்கு. இத்து நரம்பாகிப் போனாளே இப்படி.


இவளைக் காணவும்தான் பழசெல்லாம் அலைபாய்ந்து வருகிறது. பிரிந்து போனவர்களெல்லாம் என்ன ஆனார்கள். அவர்களெல்லாம் எங்கே போய் விட்டார்கள். பிரியத்துக்குரியவர்களையெல்லாம் திரும்பவும் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியதாயிருக்கிறது. எங்கே அவர்களை?


அவன் வந்த ரயில் இன்னும் புகை விட்டபடி புறப்படத் தயாராய் – ஜன்னலோரம் போய் நின்று பூக்கொடுக்கிற, நஞ்சி நறுங்கிப் போன ஆவுடத்தங்க மதினியைப் பார்த்தான். கூடை நிறையப் பூப்பந்தங்களோடு வந்திருந்தாள். பூ வாடாமலிருக்க ஈரத்துணியால் சுற்றியிருந்தாள் அதை.


நம்மூரிலிருந்து கொண்டுவந்த சிரிப்பு இன்னும் மாறாமலிருந்தது அவளிடம். ஒவ்வொரு தாய்மாரிடமும் முழம் போட்டு அளந்து கொடுக்கிறாள். கழுத்தில் தொங்கும் தாலிக்கயறும், நெற்றியில் வேர்வையோடு கரைந்து வடியும் கலங்கிய நிலா வட்டப் பொட்டுமாக அவளைப் பார்த்தான். தானே அசைகிற ஈர உதட்டில் இன்னும் உயிர் வாடாமல் நின்றது.


கண்ணுக்கடியில் விளிம்புகளில் தோல் கறுத்து இத்தனைக் காலம் பிரிவை உணர்த்தியது. வருத்தமுற்று ஏங்கிப் பெருமூச்சு விட்டான். அவளை எப்படியாவது கண்டு பேசி விட நினைத்தான். அதற்குள் இவனைத் தள்ளிக் கொண்டுபோன கூட்டத்தோடு வாசல்வரை வந்து; திரும்பவும் எதிர்நீச்சல் போட்டு முண்டித் தள்ளி உள்ளே வருமுன் விடைபெற்றுச் செல்லும் ரயிலுக்குள் இருந்தாள். பெரிய ஊதலோடு போய்க் கொண்டிருந்தது ரயில்.


மூடிக் கிடந்த ஞாபகத்தின் ஒவ்வொரு கதவையும் தட்டித் திறந்து விட்ட ஆவுடத்தங்க மதினி மீண்டும் கண்ணெதிரில் நின்றாள். அதே உதடசையாச் சிரிப்புடன், பழையதெல்லாம் ஒவ்வொன்றாய்ப் புது ஒளியுடன் கண்ணெதிரே தோன்றியது. ஆச்சரியத்தால் தோள்பட்டைகளை உலுக்கிக் கொண்டு நடந்தான்.


பஸ் ஸ்டாண்டுக்குள் நின்றிருந்த தகர டப்பா பஸ்ஸைப் பார்த்தான். ‘நென்மேனி மேட்டுப்பட்டி’ க்கு என்று எழுதியிருந்த போர்டைத் திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டு சந்தோஷப்பட்டான். இப்போது சொந்த ஊருக்கே பஸ் போகும்.


பஸ்ஸில் ஏறிக்கொண்டிருக்கும் எல்லாருக்கும் கையெடுத்து வணக்கம் சொல்லணும் போல இருந்தது. யாராவது ஊர்க்காரர்கள் ஏறியிருக்கிறார்களா என்று கழுத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டான். தெரிந்த முகமே இல்லாமல் எல்லாமே வேத்து முகங்கள். எல்லாரும் இடைவெளியில் இறங்கி விடக் கூடியவர்களாக இருக்கும்.


பஸ் புறப்பட்டது. ஒரே சீரானச் சத்தத்துடன் குலுங்கா நடையுடன் நகர்ந்து கொண்டிருந்தது பஸ். மதிப்பு மிகுந்தவற்றை எல்லாம் நினைவுப்படுத்திக் கொள்ளும் இசையென சத்தம் வரும். காற்று கூட சொந்தமானதாய் வீசும், சட்டையின் மேல் பட்டன்களை எல்லாம் கழட்டி விடவும் பனியனில்லாத உடம்புக்குள் புகுந்து அணைத்துக்கொண்ட காற்றோடு கிசுகிசுத்தான். ஜன்னலுக்கு வெளியில் பஜாரில் யாராவது தட்டுப்படுகிறார்களா என்று முழித்து முழித்துப் பார்த்துக் கொண்டே வந்தான். திரும்பவும் ரயில்பாதை வந்தது. வெறுமனே ஆளற்றுக் கிடந்த ஸ்டேஷனில் சிமெண்டு போட்ட ஆசனங்கள் பரிதாபத்துடன் உட்கார்ந்து கொண்டிருந்தன. ரயில்வே கேட்டைக் கடந்து வண்டி மேற்காகத் திரும்பி சாத்தூரின் கடைசி எல்லையில் நின்றது. அங்கொரு வீட்டில் யாரோ செத்துப் போனதற்காகக் கூடி ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்கள். பஸ்ஸில் வந்த பெண்கள் இங்கிருந்து அழுது கொண்டே படியிறங்கிப் போகவும் பஸ் அரண்டு போய் நின்றது.


செத்த வீட்டு மேளக்காரர்கள் மாறி மாறித் தட்டும் ரண்டாங்கு மேளத்துடன் உள்ளடங்கி வரும் துக்கத்தை உணர்ந்தான். முதிர்ந்த வயதுடைய பெரியாள் உருமியைத் தேய்க்கிற தேய்ப்பில் வருகிற அமுத்தலான ஊமைக் குரல் அடிநெஞ்சுக்குள் இறங்கி விம்மியது. அந்த இசைஞர்கள் ஒட்டுமொத்த துக்கத்தின் சாரத்தைப் பிழிந்து கொண்டிருப்பதாய் உணர்ந்தான். யாராலும் தீர்க்க முடியாத கஷ்டங்களையெல்லாம் அடிவயிற்றிலிருந்து எடுத்து ஊதிக் கொண்டிருந்த நாயனக்காரரின் ஊதல், போகிற பஸ்ஸோடு வெளியில் வந்து கொண்டிருந்தது.


என்றோ செத்துப்போன பாட்டியின் கடைசி யாத்திரை நாள் நினைவுக்கு வந்தது. மயானக்கரையில் தன் மீசை கிருதாவை இழந்த தோற்றத்தில் மொட்டைத் தலையுடன் இவனது அய்யா வந்து நின்றார்.


இவனைப் பெத்த அம்மாவைப் பிரசவத்துடன் வந்த ஜன்னி கொண்டுபோய் விட்டதும் நாலாவதாகப் பிறந்த பிள்ளை நிலைக்க வேண்டும் என்பதற்காக இவன் மூக்கில் மந்திரித்துப் போடப்பட்டிருந்த செம்புக் கம்பிதான் மூக்கோரத்தில் இருந்துகொண்டு ‘எம்மா…. எம்மா…….’ என்றது. அம்மா இல்லாவிட்டாலும் தெக்குத் தெரு இருந்தது. மேலெழும்பும் புழுதி கிடந்தது அங்கு. புழுதி மடியில் புரண்டு விளையாட, ஓடிப் பிடிக்க, ஏசிப்பேசி மல்லுக்கு நிற்க, தெக்குத் தெரு இருக்கும். எல்லாத்துக்கும் மேலாக இவன் மேல் உசுரையும் பாசத்தையும் சுரந்து கொண்டிருக்க மதினிமார் இருந்தார்களே. வீட்டுக்கு வீடு வாசல்படியில் நின்றுகொண்டு இவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருக்கும் சமைஞ்ச குமரெல்லாம் ‘செம்புகோம்…. செம்புகோம்….’ என்று மூச்சுவிட்டுக் கொண்டார்களே!


பல ஜாதிக்காரர்களும் நிறைந்த தெக்குத் தெருவில் அன்னியோன்யமாக இருந்தவர்களை எல்லாம் நினைவு கூர்ந்தான்.


தனிக்கட்டையான தன் அய்யா கிட்ணத்தேவர் திரும்பவும் மீசை முளைத்துக் கிருதாவுடன் இவன் முன் தோன்றினார்.


‘அடேய் …. செம்புகோம் ….. ஏலேய்…..’ என்று ஊர் வாசலில் நின்று கூப்பிடும்போது இவன் ‘ஓய் … ஓய் ….’ என்ற பதில் குரல் கொடுத்தபடி கம்மாய்க்கு அடியில் விளிம்போரம் உட்கார்ந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தான். தூண்டிலை எடுத்து அலையின் மேல் போடுவான். மீனிருக்கும் இடமறிந்து மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டே அத்தம்வரை போவான்.


பண்டார வீட்டு மதினிமார்களெல்லாம் மஞ்ச மசால் அரைத்து வைத்து ரெடியாகக் காத்திருப்பார்கள். ‘கொழுந்தன் வருகிறாரா ….’ என்று அடிக்கொருதரம் குட்டக்கத்திரிக்கா மதினியைத் தூதனுப்பித் தகவல் கேட்டுக் கொள்வார்கள். தண்ணிக்குள் நீந்தித் திரியும் மீனாக இவன் தெருவெல்லாம் சமைஞ்சு நிற்கும் மதினிமார் பிரியத்தில் நீந்திச் சென்றான். ஒரு மீனைக் கண்டதுபோல எல்லாரும் சந்தோஷப்பட்டார்கள்.
கீகாட்டுக்கறுப்பாய் ‘கரேர் ….’ ரென்ற கறுப்பு ஒட்டிக் கொள்ள ‘அய்யோ … மயினீ ….. கிட்ட வராதே…… வராதே …..’ என்று சுப்பு மதினியை விட்டுத் தப்பி ஓடினான். பனையேறி நாடார் வீட்டு சுப்பு மதினிக்கும், பொஷ்பத்துக்கும் இவன் மேல் கொள்ளைப் பிரியம். ‘நாங்க ரெண்டு பேருமே செம்புகத்தையே கட்டிக் கிடப் போறோம் ……’ என்று ஒத்தைக் காலில் நின்று முரண்டு பண்ணுவதைப் பார்த்து இவன், நிசத்துக்கே அழுதபடி, ‘மாட்டேம்…. மாட்டேம்….. மாட்டம் போ.’ என்று தூக்கி எறிந்து பேசினான். உடனே அவர்கள் ஜோடிக் குரலில் ‘கலகலகல ….’ வெனச் சிரித்து விடவும் ஓட்டமாய் ஓடி மறைவான் செம்பகம்.


குச்சியாய் வளர்ந்திருக்கும் சுப்பு மதினியும், ரெட்டச் சடைப் பொஷ்பமும் ஒவ்வோர் அந்தியிலும் பனங்கிழங்கு, நொங்கு, தவுண், பனம்பழம் என்று பனையிலிருந்து பிறக்கிற பண்டங்களோடு காத்திருப்பார்கள். இவனுக்காக, இவனைக் காணாவிட்டால் கொட்டானில் எடுத்துக் கொண்டு தேட ஆரம்பித்து விடுவாள் ரெட்டச்சடை புஷ்பம்.


பனையேறிச் சேருமுக நாடார் வீட்டுக்குக் கள்ளுக் குடிக்கப் போகும் அய்யாவுக்கும் ரெட்டச்சடைக்கும் ஏழாம்பொருத்தமாய் என்னேரமும் சண்டதான். அவளை மண்டையில் கொட்டவும், சடையைப் பிடித்து இழுக்கவும் “இந்த வயசிலும் கிட்ணத்தேவருக்க நட்டனை போகலே….” என்று சேருமுக நாடார் சிரித்துக் கொள்வார். ‘ஓய்…..மருமோனே’ என்ற கீகாட்டுப் பேச்சில் ‘தாப்பனும் மோனும் பனையேறிமோளை கொண்டு போயிருவீயளோ. சோத்துக்கு எங்க போட்டும் நா … மடத்துக்கு போயிறவா’ என்று கள்ளு நுரை மீசையில் தெறிக்கப் பேசுவார் நாடாரு. இதைக் கேட்ட அய்யாவுக்குக் ‘கெக்கெக்கே …’ என்று சிரிப்பு வரும் வெகுளியாய்.


ஊர் ஊருக்குக் கிணறு வெட்டப்போகும் இவன் அய்யாவும், தெக்குத் தெரு எளவட்டங்களும் கோழி கூப்பிடவே மம்பட்டி, சம்பட்டி, கடப்பாறை, ஆப்புகளோடு போய்விடுவார்கள். சுத்துப்பட்டி சம்சாரிமார்கள், கிட்ணத்தேவன் தோண்டிக் கொடுத்த கிணத்துத் தண்ணீரில் பயிர் வளர்த்தார்கள்.


அய்யா கிணத்து வேலைக்குப் போகவும் தெருத் தெருவாய் சட்டிப் பானைகளை உருட்டித் தின்பதற்கு ஊரின் செல்லப் பிள்ளையாய் மதினிமார் இவனைத் தத்தெடுத்திருந்தார்கள். இவனுக்கு ‘ஓசிக்கஞ்சீ ….’ ‘சட்டிப் பானை உருட்டீ….’ ‘புது மாப்ளே …’ என்ற பட்டங்களுண்டு. ராத்திரி நேரங்களில் எடுக்கிற நடுச்சாமப் பசிக்கு யார் வீட்டிலும் கூசாமல் நுழையும் அடுப்படிப் பூனையாகி விடுவான். இவன் டவுசர், சட்டை, மொளங்கால் முட்டில் அடுப்புக்கரி ஒட்டியிருக்கும்.


தெருமடத்தில் குடியிருக்கும் மாடசாமித் தேவரோடு சரிசமமாய் இருந்து வெத்தலை போட்டுக் கொண்டு தெருத் தெருவாய் ‘புரிச்சு … புரிச் …’ என்று துப்பிக் கொண்டே போய்ப் பண்டார வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொள்வான்.


‘மாப்ளைச் சோறு போடுங்கத்தா …. தாய்மாருகளா…..’ என்றதும் கம்மங் கஞ்சியைக் கரைத்து வைத்து ‘சாப்பிட வாங்க மாப்பிளே ….’ என்று சுட்ட கருவாட்டுடன் முன் வைப்பார்கள்.


நாளைக்குக் கல்யாணமாகிப் போற காளியம்மா மதினி கூட வளையல் குலுங்க இவன் கன்னத்தைக் கிள்ளி விட்டு ஏச்சங்காட்டுவாள். இந்தக் காளியம்மா மதினிக்குச் சிறுசில் இவனைத் தூக்கி வளர்த்த பெருமைக்காக இவன் குண்டிச் சிரங்கெல்லாம் அவள் இடுப்புக்குப் பரவி அவளும் சிரங்கு பத்தியாய் தண்ணிக்குடம் பிடிக்க முடியாமல் இடுப்பைக் கோணிக்கோணி நடந்து போனாள். இப்போதும் சிரங்குத் தடம் அவள் இடுப்பில் இருக்கும்.


‘செம்புகோம்…. செம்புகோம்.. செம்புக மச்சானுக்கு வாக்கப்படப் போறேன் … பாரேன்…..’ என்று முகத்துக்கு நேராக ‘பளீ’ ரென்ற வெத்தலைக் காவிப் பல் சிரிக்கக் காளியம்மா மதினியின் சின்னையா மகள் குட்டக் கத்திரிக்கா திங்கு திங்கென்று குதித்துக்கொண்டே கூத்துக் காட்டுவாள்.
‘அட போட்டீ… குட்டச்சீ’ என்று முணுமுணுத்தபடி இவன் மூக்குக்கு மேலே கோபம் வரும். அவள் உடனே அழுது விடுவாள். ‘மயினி ….. மயினி….. அழுவாத மயினீ ……’ ‘உம் …’ மென்று முகங்கோணி நிற்கும் குட்டக்கத்திரிக்காவைச் சமாதானப்படுத்த கடைசியில் இவன் கிச்சனங்காட்டவும்தான் அவள் உதட்டிலிருந்து முத்து உதிரும், சிரிப்பு வரும்.


வாணியச் செட்டியார் வீட்டு அமராவதி மதினி அரச்ச மஞ்சளாய்க் கண்ணுக்குக் குளிர்ச்சியான தோற்றத்துடன் பண்டார வீட்டுத் திண்ணைக்கு வருவாள். அவளைக் கண்டதுமே கூனிக் குறுகி வெட்கப்பட்டுப்போய் குருவு மதினி முதுகுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு சிரிப்பான் செம்பகம். மேட்டுப்பட்டி நந்தவனத்தில் பூக்கிற ஒவ்வொரு பூவும் அமராவதி மதினி மாதிரி அழகானது.


தாவாரத்தில் இருந்து கொண்டே என்னேரமும் பூக்கட்டும் குருவு மதினி, அமராவதிக்கென்றே தனீப்பின்னல் போட்டு முடிந்து வைத்திருக்கும் பூப்பந்தை விலையில்லாமலே கொடுத்து விடுவாள். குருவு மதினிக்கும், அமராவதி மதினிக்கும் கொழுந்தப் புள்ளை மேல் தீராத அக்கறை.அவன் குளித்தானா சாப்பிட்டானா என்பதிலெல்லாம். ஊத்தைப் பல்லோடு தீவனம் தின்றால் காதைப் பிடித்துத் திருகி விடுவாள் அமராவதி மதினி. கண்டிப்பான இவளது அன்புக்குப் பணிந்த பிள்ளையாய் நடந்துகொண்டான் செம்பகம்.


இவனது எல்லாச் சேட்டைகளையும் மன்னித்து விட குருவு மதினியால்தான் முடியும். எளிய பண்டார மகளின் நேசத்தில் இவன் உயிரையே வைத்திருந்தான். சுத்துப்பட்டிக்கெல்லாம் அவளோடு பூ விக்கப் போனான். காடுகளெங்கும் செல்லங்கொஞ்சிப் பேசிக் கொண்டார்கள் இருவரும். இவன் வெறும் வீட்டு செல்லப் பிள்ளையானான்.


குருவு மதினியின் அய்யாவுக்குக் காசம் வந்து வீட்டுக்குள்ளேயே இருமிக்கொண்டு கிடந்தார். அவரைக் கூட்டிக்கொண்டு போய் ஆசாரிப் பள்ளத்தில் சேர்ப்பதற்காக ராப்பகலாய்ப் பூக்கட்டினாள். அவளுக்கு நார் கிழித்துக் கொடுத்து ஒவ்வொரு பூவாய் எடுத்துக் கொடுக்க; அவள் சேர்ப்பதை, விரல்கள் மந்திரமாய்ப் பின்னுவதைப் பார்த்துக் கொண்டே பசிக்கும்வரை காத்திருப்பான். பசித்ததும் மூஞ்சியைக் குராவிக் கொண்டு கொறச்சாலம் போடுவான்.


‘இந்தா வந்துட்டன் இந்தா வந்துட்டன்’ என்று எழுந்து வந்து பரிமாறுவாள் குருவு மதினி.


சீக்காளி அய்யாவைக் கூட்டிக் கொண்டு போகவேண்டிய நாள் வந்ததும் இவனையும் ஆசாரிப் பள்ளத்துக்குக் கூட்டிக்கொண்டு போனாள். ‘வரும்போது ரெண்டு பேரும் பொண்ணு மாப்ளையா வாங்க….! ‘ என்று எல்லாரும் கேலி பண்ணிச் சிரித்து அனுப்பினார்கள். மலையாளத்துக்குக் கிட்டெயே இருக்கும் அந்த ஊரில் நாலு மாசம் மதினியோடு இருந்தான். அப்பவெல்லாம் இவள் காட்டிய நம்பவே முடியாத பாசத்தால் இவன் ஒருச்சாண் வளர்ந்து கூட விட்டான். சுகமாகி வரும்போது அய்யாவுக்கு வேட்டியும் இவனுக்குக் கட்டம் போட்ட சட்டையும், ஊதா டவுசரும் எடுத்துக் கொடுத்துக் கூட்டி வந்தாள். குருவு மதினிக்கு எத்தனையோ வயசான பின்னும் கல்யாணம் நடக்கவில்லை. குருவு மதினிக்குக் கல்யாணமானால் ஊரைவிட்டுப் போய்விடுவாளோ என்று பயமாக இருக்கும். ‘மயினி …. மயினி …..நீ வாக்கப்பட்டுப் போயிருவியா ….. மயினீ ….’ என்பான் .’ என் ராசா செம்புகத்தைக் கெட்டிக்கிடத்தான் ஆண்டவன் எழுதியிருக்கான் புள்ளே ….! ‘ என்றாள்.மெய்யாகவே அவள் சொல்லை மனசில் இருத்தி வைத்துக் கொண்டான் செம்பகம்.


கீ காட்டிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்த ராசாத்தி அத்தையும் அவளது ஆறு பொட்டப் பிள்ளைகளும் எப்போது பார்த்தாலும் பூந்தோட்டத்தில் அக்கறையாய்ப் பூவெடுத்துக் கொண்டு வந்து கொட்டானுக்கு ஆழாக்கு தானியத்தைக் கூலியாக வாங்கிக் கொண்டு போனார்கள். ராசாத்தி அத்தைக்கும், நாடார் வீட்டு மதினிமார்களுக்கும் குருவு மதினியோடு பேசுவதற்கு எவ்வளவோ இருந்தது. தங்கள் கீகாட்டு ஊரைப் பற்றியும் அங்கு விட்டு வந்த பனைகளைப் பற்றியும் ஆந்திராவுக்குக் கரண்டு வேலைக்குப் போய்விட்ட ராசாத்தி அத்தைவீட்டு மாமாவைப் பற்றியும் சொல்லச் சொல்ல இவனும் சேர்ந்து ‘ஊம்….’ கொட்டினான்.
இவன் அய்யாவுக்குக் கலயத்தில் கஞ்சி கொண்டு போன மாணிக்க மதினியின் அழுகுரல் கேட்டு எல்லாரும் ஓடினார்கள்.


கிணத்து வெட்டில் கல் விழுந்து அரைகுறை உயிரோடு கொண்டு வரப்பட்ட அய்யா அலறியது நினைவில் எழவும் திடுக்கிட வைத்தது இவனை.


வெளியில் கிடக்கும் ஆளற்ற வெறுங்கிணறுகள் தூர நகர்ந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு கிணத்து மேட்டிலும் இவன் அய்யா நிற்பதைக் கண்டான். திரும்பவும் எழுந்து நடமாட முடியாமல் நாட்டு வைத்தியத்துக்கும் பச்சிலைக்கும் ஆறாத இடி, இவன் நெஞ்சில் விழ, கடைசி நேரத்தில் சாத்தூர் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போன நாளில் அனாதையாகச் செத்துப் போனார் அய்யா. பஸ்ஸில் நீண்டிருந்த ஜன்னல் கம்பியில் கன்னத்தைச் சாய்த்துத் தேய்த்துக் கொண்டு கலங்கினான்.


அன்று சாத்தூரில் ரயிலேறியதுதான். ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ரயில் நின்று புறப்படும்போது மதினிமார்கள் கூப்பிடுகிற சத்தம் போடும் ரயில்.


அய்யாவின் நினைவு பின்தொடர சாத்தூர் எல்லையில் கேட்ட உருமியின் ஊமைக்குரல் திரும்பவும் நெஞ்சிலிறங்கி விம்மியது.


சூழ்ந்திருந்த காடுகளும், பனைமரங்களும் உருண்டு செல்ல பஸ்ஸிற்கு முன்னால் கிடக்கும் தார் ரோடு வேகமாய்ப் பின்வாங்கி ஓடியது. ஜன்னல் வழியாக மேகத்தைப் பார்த்தான். ஒரு சொட்டு மேகங்கூட இல்லாத வானம் நீலமாய்ப் பரந்து கிடந்தது. ரோட்டோர மரங்களில் நம்பர் மாறி மாறிச் சுற்றியது. ஆத்துப் பாலத்தின் தூண்கள் வெள்ளையடிக்கப்பட்டு மாட்டுக்காரர்களால் கரிக்கோடுகளும், சித்திரங்களும் வரையப்பட்டிருந்தன. தண்ணீரில்லாத ஆத்தில் தாகமெடுத்தவர்கள் ஊத்துத் தோண்டிக் கொண்டிருந்தார்கள்.


பாலம் கடந்து மேட்டில் ஏறியதும் ஊர், தெரிந்துவிட்டது. உள்ளே நெஞ்சு ‘திக்கு… திக்….’ கென்று அடித்துக்கொள்ள ஊரை நெருங்கிக் கொண்டிருந்தான் செம்பகம். தூரத்தில் தெரியும் காளியங்கோயிலும் பள்ளிக்கூடத்துக் கோட்டச்சுவரும் இவனை அழைப்பது போலிருந்தது.


எல்லா மதினிமார்களுக்கும் கண்டதை எல்லாம் வாங்கிக்கொண்டு போகிறான். மதினிமாரெல்லாம் இருக்கும் தெக்குத் தெருவை நெருங்க இருந்தான் செம்பகம். மனசு பறந்து கொண்டிருந்தது. எல்லாரையும் ஒரே சமயத்தில் பார்த்து ஆச்சரியப்பட இருந்தான். சீக்கிரமே ஊர் வந்து விடப்போகிறது. எல்லா மதினிமார்களையும் தானே கட்டிக்கொண்டு வாழவேண்டும். ‘காளியாத்தா அப்படி வரங்குடுதாயே….’ என்று முன்பு கேட்ட வரத்தை நினைத்துக்கொண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். பஸ்ஸிற்கும் சந்தோஷம் வந்து துள்ளிக் குதித்தது. மனசு விட்டுப் பாடினான். ‘ம்… ம்… ம்…. ம் ம் ம்வும்…..’ மென்ற ஊமைச்சங்கீதமாய் முனங்கிக் கொண்டு வந்தான் செம்பகம். பருத்திக் காட்டில் சுளை வெடிக்காமல் நிலம் வெடித்துப் பாளம் பாளமாய் விரிசலாகிக் கிடக்கும். வாதலக்கரை சித்தையாத் தேவனுக்கு வாழ்க்கைப் பட்டுப்போன மாணிக்க மதினி இருந்தால் காடே வெடித்திருக்காது. இப்படி ஈயத்தைக் காய்ச்சும் வெயிலும் அடிக்காது. மாணிக்க மதினியோடு எல்லா மதினிமார்களும் பருத்திக் காட்டில் மடிப்பருத்தியுடன் நின்ற கோலமாய் கண்முன் தோன்றும். இருக்கிற ஒரு குறுக்கத்திலும் எத்தனை வகை தானியங்களுக்கு இடம் வைத்திருந்தாள். அவள் மனசே காடாகும் போது தட்டா நெத்துக்கும் பாசிப்பிதம் பயறுக்கும் நாலு கடலைச் செடிக்கும் பத்துச்செடி எள்ளுக்கும் இடமிருந்தது. காடே கிடையாகக் கிடக்க விதித்திருந்தது அவளுக்கு. காட்டு வெள்ளாமையும் அவளோடு போயிற்று.


கண்ணெட்டும் தூரம்வரை நிலம் வறண்டு ஈரமற்றுக் கிடக்கும் தரிசு நிலங்களில் வேலிக்கருவை தோண்டிக் கொண்டிருந்தார்கள். மஞ்சள் மூக்குடன் கூடிய விறகு லாரிகளில் அடையாளம் தெரியாதவர்கள் பாரம் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். மந்தைத் தோட்டத்தில் கிணத்தை எட்டிப் பார்த்துக்கொண்டு படுத்திருக்கும் கமலைக்கல்லும், தோட்ட நிலமும் நீண்டகால உறக்கத்திலிருந்து மீளாமல் இன்னும் இறுகிக்கொண்டிருந்தது. தோட்டத்தை ஒட்டி நின்ற பஸ் இவனை இறக்கிவிட்டுச் சென்றது.


தெக்குத்தெரு வாசலில் படம்போட்ட தோல்பையுடன் நின்றான். குப்புற விழுந்து கிடக்கும் தெக்குமடத்தில் ஒருகல்தூண் மட்டும் தனியாய் நிற்க அதன்மேல் உட்கார்ந்திருந்த காக்கா இவனைப் பார்த்துக் கரைந்துகொண்டு ஊருக்கு மேல் பறந்து சென்றது.


தெருவை வெறிக்கப் பார்த்துக்கொண்டே நடந்தான். தெருப் புழுதியே மாறிப் போய் குண்டும் குழியுமாய் சீரற்று நீண்டு கிடந்தது தெரு. இவன் பண்டார வீடுகளிருந்த இடத்துக்கு வந்து நின்றான். இருண்ட பாகமான வீடுகளாய் இற்று உதிர்ந்து கொண்டு வரும் கூரை முகட்டிலிருந்து மனதை வதைத்தெடுக்கும் ஓலம் கேட்டது. மனதைப் புரட்டிப் புரட்டிக் கொண்டுபோய் படுகுழியைப் பார்த்துத் தள்ளிவிட்டுச் சிரிக்கிற ஓலமாய்க் கூரைகளில் சத்தம் வரும். தெருவே மாறிப்போய் – குறுனையளவுகூட இவன் பார்த்த தெருவாயில்லை. தெருவே காலியாகிவிட்டது. தெருத் தெருவாகத் தேடினான். முன்பு கண்ட அடையாளம் ஏதாவது தட்டுப்படுமா? – என்று பார்த்தான். எவ்வளவோ மூடிவிட்டது. புதிய தராதரங்கள் ஏற்பட்டு, இவனைச் சுற்றி வேடிக்கை பார்க்கவந்த கூட்டத்துக்குள் இவன் இருந்தான். சிறுவர்களும் பெரியவர்களும் இவனைப் பார்த்து சலசலத்துக் கொண்டார்கள். ‘என்ன வேணும்’ மென்ற சைகையால் இவனை அந்நியமாக்கினார்கள்.


இவன் ஒவ்வொன்றாய்ச் சொல்லச் சொல்ல எல்லாரும் ஆச்சரியப்பட்டுக் கொண்டார்கள். இன்னும் கூட்டம் இவனைச் சுற்றி வட்டமாக நின்றது.


வந்தவர்களுக்கு எவ்வளவோ வேலைகள் இருக்கும். கூட்டங்கூடி நேரத்தை வீணாக்காமல் பெண்களெல்லாம் தீப்பெட்டி ஒட்டப் போய்விட்டார்கள். குழந்தைகள் ‘ஹைய்ய்ய்….’ என்ற இரைச்சல் போட்டுக்கொண்டு தீப்பெட்டி ஆபிஸ் பஸ் வந்து கொண்டிருப்பதைப் பார்த்து ஓடிவிட்டார்கள். கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த பெரியவர்களுக்கு வெட்டிப் பேச்சே பிடிக்காது. காட்டில் வெட்டிப் போட்டிருந்த வேலிக்கருவையைக் கட்டித் தூக்கி வர கயறு தேடப்போனார்கள். கொஞ்சநேரத்தில் ஒரு சுடுகுஞ்சி கூட இல்லாமல் இவன் தனித்து விடப்பட்டான்.


எல்லாம் தலைக்குமேல் ஏறி சுமையாய் அழுத்த குறுக்கொடிந்துபோய், ரொம்ப காலமாய் ஆட்டுப்படாமல் கிடந்த மதினி வீட்டு ஆட்டுரலில் உட்கார்ந்தான். தலையில் கைவைத்தபடி மூஞ்சியில் வேர்த்து வடியத் தரையை வெறிக்கப் பார்த்தான். மூஞ்சியில் வழியும் அசடைப் புறங்கையில் துடைத்துக் கொண்டான்.


‘கொழுந்தனாரே…. எய்யா…. கப்பலைக் கவித்திட்டீரா…..கன்னத்தில் கை வைக்காதிரும்…. செல்லக் கொழுந்தனாரே….எய்யா….’ என்று எல்லா மதினிமார்களும் கூடிவந்து எக்கண்டம் பேச, அவர்கள் மத்தியில் இருக்க வேண்டியவன், இப்படி மூச்சுத் திணறிப் போய் ஆட்டுரலில் உட்கார்ந்திருக்கும்படி ஆனது.


நாளைக்கு மீண்டும் ஓடிப்போன செம்பகமாய் நகரப் பெருஞ்சுவர்களுக்குள் மறைந்து போவான். இருண்ட தார்விரிப்பின் ஓரங்களில் உருவமே மாறிப்போய் – பேரிரைச்சலுக்குள் அடையாளந்தெரியாத நபராகி – அவசர அவசரமாய்ப் போய்க்கொண்டிருப்பான் செம்பகம்.