தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Tuesday, August 02, 2011

ரத்த சந்தனப் பாவை-என்.டி.ராஜ்குமார்

ரத்த சந்தனப் பாவை-என்.டி.ராஜ்குமார்
இந்த ஓலைச்சுவடியை நாமல்லாத மற்றவர்கள் 
படிக்க நேரிடுமானால்NTRajkumar 
தலைசுற்றும் நெஞ்சு படபடக்கும் 
வெப்புறாளம் வந்து கண்மயங்கும் 
மூளை கலங்கும் 
படித்ததெல்லாம் வலுவற்றுப்போகும் என்று 
இப்போது 
என் எழுத்துக்களில் நான் வாதைகளை 
ஏவி விட்டிருக்கிறேன். 

முள்மூளையால் ஒளிந்து அடித்ததில் 
புண்ணாகிப்போன என்னுள் 
படமெடுத்தாடும் மூர்க்கம் 
மூளையைச் சொறிந்து புண்ணைப் பெரிதாக்க 
கொப்பளிக்கும் ரத்தத்தின் வெப்பம் தின்று 
புடைத்து நிற்கும் நரம்புகளில் 
பொலபொலவென முளைக்குமென் இரட்டைநாக்குகள் 
நேரம் பார்த்து நிற்கும் தீயெனச் சுழன்று 
கழிவிரக்கம்பேசி எவரின் அன்பையும் 
பிச்சைவாங்க மனமின்றி 
ஓலைத்தும்பின் நிழலுருவிலும் 
உன்துடை நடுங்க வைக்குமென் ஞாபகம் 
ஆனாலும் நீ கண்டுகொள்ள முடியாதபடி 
உன்னையும் யென்னையும் சுற்றியிருக்கும் 
ஏதெனுமொரு புற்றுக்குள் 
பதுங்கியிருக்கும் சீற்றத்துடன் 
அடி வாங்கிய நல்லபாம்பு. 

கடவுளை நான் கட்டவிழ்த்தபோது 
அவனில் ஒட்டிக்கொண்டிருந்த 
லட்சக்கணக்கான மனிதர்கள் 
அம்மணத்தோடு ஓடிப்போய் 
தற்கொலை செய்துகொண்டார்கள் 
தப்பிவந்த சிலர் இந்த சாவுக்கு 
யார் காரணமெனக் கேட்டபோது 
எங்களைப் பார்த்து ஆள்காட்டியது விரல் 
மல்லுக்கு வந்த மாமிசச்சாமியின் 
வெட்டி எறியப்பட்ட விரல் இருந்த இடத்தில் 
நவீன ஆயுதம் ஒன்று முளைத்திருந்தது 
கடவுள் இருந்த இடம் லட்சணம் கெட்டிருந்தது 

மாவிலையில் அகப்பை செய்து 
ஊட்டித்தந்த கூவரகில் 
கதை சொல்லும் மாயமரத்தை 
நட்டுவைத்தாள் படுகிழவி 
பூ உதிர்த்து வளர்ந்த பேனாவை 
ஒருமுறை திறந்து பார்த்தபோது 
அதற்குள் ஆழமாய் இறங்கியிருந்தது ஆணிவேர் 
அதன்முனைகொண்டழுத்தி எழுத முனைந்தபோது 
பாட்டியின் சேலையை உடுத்திக்கொண்டொரு 
வாயாடித் தத்தை கொறித்துக்கொண்டிருந்தது 
பழங்கனிகளை 
அதன் விதைகளையெடுத்து 
வரிவரியாய் நட்டுவைத்தேன் 
அதுவழியாய் பன்முகம்கொண்டு நடக்கிறாளிந்த 
பாசாங்கில்லா கிழவி 

சிரசில் எதையோ சிலாகித்துக்கொண்டே 
குறிபார்த்தடிக்குமென் மாந்ரீகக் கிழவியைப்போல் 
பளிச்செனச் சொல்லிவிடுகிறேன் கண்ணில்பட்டதை 
சொல்லித்தெரிவதா சொல்லில் உதிக்கும் சூட்சுமம் 
கொழுந்து விட்டெரியும் தீயினுள்ளே 
நீலப்புடவை கட்டி புணர்ந்தாடுகிறாள் 
நெருப்பு மங்கை 
ஒரு முத்தம் கேட்டு கெஞ்சுகிறேன் நான் 
குழந்தையின் மலம் துடைத்தெறிகிறாள் மனைவி 
ஒரு முத்தம்கேட்டு அலைகிறேன் நான் 
குழந்தையின் மூத்திரத்துணியை கழுவிப்போடத் தருகிறாள் 
முனைவி 
ஒரு முத்தம் கேட்டு புலம்புகிறேன் நான் 
குழந்தையை உறங்கவிடாத நாயின் வள்வள்ளை 
திட்டித்தீர்க்கிறாள் மனைவி 
ஒரு முத்தம் கேட்டு சண்டையிடுகிறேன் நான் 
பால்குடிக்கும் குழந்தையின் மார்பை மறைக்கிறாள் மனைவி 
ஒரு முத்தம் கேட்டு கறங்குகிறேன் நான் 
கொசுக்கள் அண்டாமலிருக்க வலைபோட்டு மூடுகிறாள் மனைவி 
அடிவயிர் கிழிசல் காய்ந்தபின்னும் 
பச்சை உடம்புக்காரி பதறுகிறாள் என்னைப் பார்த்து 
எரிகிற உடலின் மனவிளி நிராகரிக்கப்படுகையில் 
புணர்ச்சி பழகிய பேருடலில் விந்து முட்டி நிற்கிறது 
எனது மிருகங்களின் கூரேறிய குறிகளை 
மிகப்பக்குவமாய் வெட்டிச்சாய்த்தும் 
மூளையின் பின்னால் பதுங்கியிருக்கிறதொரு 
கலவரமனம். 

நண்பனாக தோழனாக அண்ணனாகயிருந்த 
இரவுநிலா ஏனிப்படி ஆனது 
யாருக்கு வந்ததிந்த மனநோய் யாரிடமிருந்து தொற்றியது 
இரவுநிலவே இரவுநிலவே ஏனிப்படி சதிக்கிறாய்? 
நட்சத்திரங்களோடு பூக்களோடு இலைகளோடு 
நீரோடு நிலத்தோடு மரத்தோடு என்னோடு 
சுவாரசியமாய் பேசிக்கொண்டிருந்த இரவின் நிலவுவாயில் 
எப்படி வந்ததிந்த கரை உடைந்த ரத்தவெள்ளம் 
ரணம் எனக்குப் பயமில்லாத ஒன்று 
பழைய இரவும் சுகமானதே 
சுழிநேரம் என் காலைப் பிடித்திழுக்க 
குருதி வெள்ளத்தில் மூழ்கி மூச்சுத்திணறி 
எனது வாழ்க்கையின் பாதி 
பிணங்களாய் மிதக்கிறபோது 
எனது இரவு மென்கரளை தின்னத் தயாராகிவிட்டது 
மூதாதைகள் மறைந்திருக்கும் 
கண்ணுக்குத் தெரியாத அந்த ஆல விருட்சத்திலிருந்து 
பறந்துவந்த ஒரு கருங்காக்கை 
எனது சுடலையின் தலைமாட்டில் வந்திருந்து 
கரைந்து விளிக்கிறது 
நான் புறப்படுகிறேன் 
உனது இதயத்தில் வெளிச்சம் விழும்பரை 
எனது பூக்களின் தலைகளைத் திருகி எறிந்து கொணடிரு நண்பா 

நானொரு குழந்தையாகி செல்ல மனைவியின் 
கர்ப்பக் கவிதைக்குள் உருண்டோடிக்கொண்டிருந்தேன் 
மருத்துவச்சி சொன்னாள் படுசுட்டியென்று 
குறித்தநேரத்திற்குமுன்பாகவே பனிக்குடத்தை 
கால்கொண்டு மிதித்து 
தலைகீழாக வந்து குதித்தேன் 
உயிர்குளிர முலை தந்தாள் 
ஆனந்தம் பேரானந்தம் பரமானந்தம் 
சொல்ல முடியா என்னவோ ஒன்று 
முடியவில்லை எழுதியது பாதியில் நிற்கிறது 
பேனாவை புத்தகத்திற்குள் வைத்தபடி 
குட்டிபோடு மயிலிறகேயென சொல்லிவிட்டு 
வயிறு பசித்து முலைதேடும் குழந்தையின் சிறுவாயருகில் 
பால் பொங்க நின்றேன் நானொரு முலையாய். 

சாகக்கிடந்தாள் அம்மா 
மருத்துவர் சொன்னார் கர்ப்பப்பாத்திரத்தை 
எடுத்துவிடவேண்டுமென்று. 
எனது முதல் வீடு இடிந்து தலைகுப்புற வந்து விழுந்த 
வேற்றுலக அதிர்ச்சி 
எனது மூப்பனின் சுடலையிலிருந்தொரு ஜோதி 
ஒரு முட்டையின் வடிவில் பறந்து சென்று 
இளமையை வாரிக்குடித்த மயக்கத்தில் 
ஒரு தீக்கொழுந்தைப்போல் நின்றுகொண்டிருந்த 
அம்மாவின் வயிற்றில் சென்றது கிளிக்குஞ்சாகிக் கொண்டது. 
மண்ணெடுத்துச் சுட்டுப்பொடித்து அரித்துத் தின்றாளவள் 
மண்வாசனை முதலில் வந்தப்பிக்கொண்டதப்படி. 
மாடன் கோவில் திருநீறை மடியில் கட்டிவைத்து அள்ளித்தின்ன 
நானந்த சாம்பல் கிண்ணத்தில் பாதுகாப்பாய் மிதந்தேன். 
பாம்புகள் புணருமொரு பௌர்ணமி நாளில் 
மணக்கும் மரவள்ளிக்கிழங்கைப்போல் பூமியில் வந்திறங்கிய 
என்னுடலில் ஒட்டிக்கொண்டிருந்த அழுக்கை 
தெற்றிப்பூ, கஸ்தூரி மஞ்சள், சிறுபயறு பொடித்துத் தேய்த்து 
குளிப்பாட்டி முலைப்பால் தந்து உறங்க வைத்த அம்மா 
குடல்புண்ணில் வயிறு நொந்து ஏங்கி அழுகிறபோது 
முண்டு மொருவீடு இடிந்தென் தலையில் வீழுமோவென 
மூப்பனின் குரலில் அழுகிறது கிளிநெஞ்சு. 

இப்பமெல்லாம் பழைய சூரியனா உதிக்குது 
பழைய மழையா பெய்யிது 
பேரு தெரியாத்த பூச்சிகளொக்க 
புதுசு புதுசா மொளைக்குது 
ஒலகம் போகுது இந்தப் போக்குல 
இதுல என்னடான்னா ஏதோ ஒரு நீக்கம்புல போவான் 
எழுதிவச்சுட்டு செத்தானாம் 
காது இவ்வளவு அகலம் மூக்கு இவ்வளவு பெரிசு 
கைகாலு நீளம் கவுட்டைக்க எடையில கெடக்குறது 
எல்லாத்தையும் 
இப்பம் கொஞ்சம் தலதெறிச்சு போறவனுக வந்து 
மலைய விட்டு தாளோட்டு குடிய மாத்துங்குறானுக 
பொறம்போக்குல சாய்ப்பு கெட்டுனா 
அவுத்துட்டு ஓடுங்குறானுக 
படிச்ச புள்ளையளுக்கு சர்க்கார் 
உத்தியோகம் கொடுக்கமாட்டங்குறானுக 
எங்க குட்டிச்சாத்தானப்போல 
உருண்டோடுகிற பழைய மேகமே 
நீ விடுகிற இடிகளெல்லாம் 
இவனுகளுக்கத் தலையிலபோய் விழாதா. 

எங்களது முரட்டுத்தனமான பூமி 
உங்களுக்குக் கரடுமுரடாக இருக்கலாம் 
ஒரு நிம்மதி என்னவென்றால் 
எங்களது உலகத்தில் நாங்களேயெல்லாமும் 
ஒருநாள் ஒருநேரம் ஒருநொடிப்பொழுதில் 
என்னவெல்லாமோ நடக்கிறதிங்கு 
இரவுத்தொழில் செய்கிறோம் 
அப்படியென்றால் பகலில் நாங்கள் 
செய்யமாட்டோம் என்று பொருளல்ல 
தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும் 
கூட்டிவிடுவதிலிருந்து 
பல் முளைக்காத குழந்தை பால் குடிக்க வருகையில் 
முலை கொண்டழுத்தி மூச்சுத் திணறடித்து 
கொல்வதுவரை. 

பண்டுபண்டொரு காலமிருந்தது 
சின்னச்செடியைப் பறிக்கமுயன்றால்கூட 
கதிர்கம்பெடுத்து அடிக்க வருவாளாம் காட்டுக்கிழவி 
பட்சி பறவைகள் படுக்க மடிகொடுத்து நிற்கும் மரம் 
அதைக் கட்டிப்பிடித்துக்கொண்டு நிற்கும் கருடக்கொடி 
விஷம் முறிக்க வளரும் வேர் பறிக்க 
மரம் செடி கொடிகளிடம் 
உத்தரவு கேட்டு நிற்பான் மூப்பன் 
கொடுங்காற்றாய் வரும் மந்திரமூர்த்தி 
ஒரு வேர் பிழுதால் 
ஐந்து மரம் செடி கொடிகளை நட்டுவைக்கச் சொல்லி 
பயமுறுத்திச் செல்வான் 
புராதனமக்களின் தெய்வங்கள் 
மரம் செடி கொடிகளாய் வளர்வதுண்டு 
எந்தக் கிளை அல்லது கொடி சாபமிட்டதோ 
மலைகளைச் சுரண்டித் தின்னும் மானங்கெட்ட ராச்சியத்தில் 
காய்ந்த சுள்ளிகளாய் நீண்டு குத்துகிறது 
சூரியக் கம்புகள். 

அம்மாவிற்கு உளுந்துவடை ரொம்பப் புடிக்கும் 
நான் விடியற்காலையில் எழுந்து குடிக்கும் முதல் கோப்பை 
சாராயத்தைப்போல 
ரசித்து ருசித்துத் தின்பாள் 
மேலும் 
எந்த அவசியத்திற்கு வைத்திருக்கும் பணமானாலும் சரிதான் 
கடன் வாங்கியேனும் 
கேட்ட உடனே யெடுத்துத்தரும் ஒற்றை ரூபாவில்கூட 
அவளின் அதீத அன்பு நிறைந்திருக்கும் 
பிறகு 
அம்மாயில்லாத வாழ்வை நினைத்தால்கூட 
நீரின்றி துடிக்குமெனது மீன்குஞ்சு 
இருப்பினும் நான் தாயில்லா பிள்ளையானால் என்ன செய்வேன் 
உழைக்காமல் மக்குப்பிடித்துப்போன உடலை 
கட்டாயப்படுத்தி கூலிவேலைக்கு அழைத்துச் சென்றுவருகிறேன் 
கொஞ்சமிருந்து ஓய்வெடுக்கும் சுக்குக்காப்பிக் கடையில் 
சூடு மணக்க வடைபோடுகிறான் தொழிலாளி 
ஒரு குழந்தையைப்போல 
வாங்கித்தாடவென 
அடம்பிடிக்கிறது அம்மாவின் நினைவு 
போன மாதமே பாதுகாத்து வைத்திருக்குமிந்த 
நூறுரூபாய் நோட்டை 
சில்லறையாக்க மனமின்றி 
தினமும் கடந்துசெல்கிறானிந்த அம்மாவின் செல்வம். 

நோயுற்ற எல்லாவற்றிற்கும் மருந்து கொடுக்கிறான் மூப்பன் 
எல்லோரும் பயன்படுத்திப்போட்ட சொத்தையான சொல்லுக்கு 
அடர்த்தியான வாக்கைப் பயன்படுத்துகிறேன் 
அப்பனின் மருந்துப் பெட்டிக்கள் மூளையெனும் வார்த்தை 
சிரச்சோறாக வந்து சமைகிறது 
சொற்கள் ஒவ்வொன்றும் கவிதைக்கிளிகளாக மாறி 
காட்டின் மௌனத்தினிடையே சிலம்பி மறைந்தொரு 
தவத்தைப் பரப்புகிறது 
நானும் ஒரு கண்தெரியாதவனைப்போல 
மிக சூசகமாகவும் கவனமாகவும் அடியெடுத்து வைக்கிறேன் 
எனது உயிரெழுத்தின் குறுக்கே யந்த காட்டாளனின் புராதன நதி 
ஓடிக் கொண்டிருக்கிறது. 
~
ரத்த சந்தனப் பாவை (2001) - தமிழினி பதிப்பகம்