பிரம்மாண்டம் - சுரேஷ் குமார இந்திரஜித்
எல்லாமே பிரம்மாண்டமாக இருந்தது. மன எழுச்சியில் பிரம்மாண்டத்தை உள்ளடக்கி இரண்டு நாட்களாக கலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள், அரங்கில். நான், வெண்புரவியாய் மாறி சைக்கிளில் வந்திறங்கினேன். கட்டிடத்தின் பிரம்மாண்டம் என்னை ஈர்த்தது. வாசலில் பளிங்குத்தரையில் நின்றிருந்த வேளை, காற்று உற்சாகத்தைத் தூண்டும்படியாக, பிரம்மாண்ட கட்டிடத்தை எதிர்கொள்ளும் முறையில் வீசியது. காற்றில் குதூகலித்த, புல்லாங்குழல் இசை தன் இடத்தை நோக்கி என்னை இழுத்துச் சென்றது. மாடிப்படிகளின் வழியே நான் ஓடினேன். இசையின் இடத்தை நெருங்கி விட்டேன். அறை வாசலில் நிதானித்து உள்ளே பார்த்தேன். இருள்வெளியை தன் இயற்கையாகக் கொண்டிருந்தவன், ஆற்றலை இசையாக்கிக் கொண்டிருந்தான். இருள்வெளி குதூகலித்துக் கொண்டிருக்கவேண்டும். எதிரே ஒரு பெண். ஆனந்தபைரவி. நான் ஏற்படுத்திய சலனத்தில், திரும்பி, என்னைப் பார்த்தாள். ராகமே அவளென வடிவெடுத்திருந்தாள்; உற்சாகவெளியில் நான். வாசிப்பவனின் வலப்பக்கத்தில் அவன் பின்னே சென்று அமர்ந்தேன். அவளைப் பார்க்க என்னால் இயலாது என்று தோன்றியது. என் நலன் கருதிய விசித்திர சக்தியொன்று பெரிய நிலைக்கண்ணாடியொன்றை வாசிப்பவனின் இடப்பக்க சுவரையொட்டி வைத்திருந்தது. கண்ணாடியில் அவள். இரண்டு டியூப்லைட்டுகளின் வெளிச்சத்தில் கண்ணாடி மின்னியது. மின்னும் கண்ணாடிக்குள் ராகமென அவள்.
இருளில் வாசிப்பவன், இசையை முடித்து, புல்லாங்குழலை வைத்துவிட்டுக் கைகளினால் தரையைத் தடவி அதைக் காட்டிலும் பெரிய புல்லாங்குழலை எடுத்து வைத்துக்கொண்டான். ராகமென நின்றிருந்தவள் ஒரு பாடலை வாசிக்கச் சொன்னாள். இருள்வெளி மீண்டும் குதூகலித்தது. கண்ணாடியுள் நான் நுழைந்தேன். எங்கும் அவள் பிம்பமெனக் கண்ணாடி ஜொலித்தது. இசை, அவளின் முழங்கையாக, பின் விரல்களுமாக மாறியது. பாறைகளில் வெண்மையாய் சிதறிக்கொண்டு நதி பாயந்து வருகிறது. பசுமெபுல்வெளி எங்கும் படர்ந்தது. அவள் கைகள் கண்ணாடியுள். திரும்பும் திசையெங்கும் அவளின் மின்னும் கண்ணாடி பிம்பங்கள்.
கண்ணாடியுள்ளே, அவள் என்னைப் பார்த்து விட்டால், நானும் அதைத் தாங்க இயலாது நொய்ந்து விடுவேன் என்றும் தோன்றியது. கண்ணாடியின் ஜொலிப்பில் கண்கள் கூசின. அவளின் மின்னும் கண்ணாடி பிம்பங்கள் என்னைச் சுற்றி சுழன்றன. இசையின் ஒரு கட்டத்தில் அவள் கண்களை மூடினாள். அவள் சிந்தையெங்கும் இசையே ஆனதான பிரகாசத்தை முகம் கொண்டது. மேகமண்டலம், பனிமலை, எங்கு நோக்கினும் பனி படர்ந்த குன்றுகள். சந்நிதியின் முன் தோன்றுவது, அந்த பாவம். ஆஹா ஆஹா என்று கோஷமிட்டு தேவராட்டம் ஆடினர், மனிதர்கள். திரைவிலக சூத்ரதாரி கூத்தனாய் ஆடினான். அரங்கில் கேட்ட பாகேஸ்வரி இப்பாட்டிற்குள் ஊடுருவியது. கண்களைத் திறந்தாள். கண்கள் ஒளிர்ந்தன. பரவசத்தில் முகம் வசீகரம் கூடி பிரகாசித்தது. பாறைகள் முழங்கின.
மனிதர்கள் வினோத ஆடைகளுடன் ஒரு சேர ஒழுங்காக ஆடிக்கொண்டே பாடினர். மீண்டும் கண்ணாடிக்குள் நான். அவள் முகம், அவள் வடிவம். அவள் முழங்கை. அவள் விரல்கள். கண்ணாடியின் ஜொலிப்பு. ஆனந்த பைரவியும் அவளே; பாகேஸ்வரியும் அவளே. புலம்பாதே மனமே. அதீத கற்பனை வயப்படாதே. நான் கற்பனை வயப்படுவேன். குதூகலிப்பேன். இது போன்ற சந்தர்ப்பங்கள் எனக்கு அரிது. சிறு குருவியெனக் காற்றைக் கிழிப்பேன். கிளைகளில் அமருவேன். மரம் விட்டு மரம் பறப்பேன். ஸாக்ஸபோனின் கல்யாண வசந்தமாக காற்றில் படர்வேன். இருளில் வாசிப்பவன், வாசிப்பை நிறுத்தினான்.
அவள் கூட வந்திருந்த மனிதர், கிளம்புவதற்கு சமிக்க்ஷை காட்டினார். இருளில் வாசிப்பவனையும் சாப்பிடக் கூப்பிட ஆட்கள் வந்தனர். இக்குழப்பத்தில் அவள், அவனிடம் சொல்லிக் கொண்டு விடை பெற்றாள். மாயம் போல் மறைந்தாள். கண்ணாடி வெறுமையாய் மின்னியது. சாப்பிடக் கூப்பிட வந்தவர்களை பொருட்படுத்தாது அவன் தேக்ஷை வாசிக்க ஆரம்பித்தான். நிர்ப்பந்தத்தால் நிறுத்தி விட்டுப் புல்லாங்குழலை உறையில் வைத்து விட்டு, கழியைத் தேடினான். நான் அறையை விட்டு வெளியே வந்தேன். பிரம்மாண்டமான கட்டிடம். அதற்கேற்ற காற்று. ஒன்றிரண்டு நண்பர்களே நின்றிருந்தனர். விடை பெற்று என் வெண்புரவியில் ஏறி, முன்னால் சாக்கடை ஓடும் என் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன். அப்போது பிரம்மாண்டங்களை விழுங்கி இருள்வெளி விகசிக்க ஆரம்பித்தது
-கனவு, 11
-1989
தட்டச்சு : ரா ரா கு
புனைவுகளின் உரையாடல்
சுரேஷ்குமார இந்திரஜித்
நானும் நண்பர் கிளாடியஸ் குலோத்துங்கனும், அந்த ஹோட்டலின் மொட்டை மாடியில் அமர்ந்திருந்தோம். குளிர் சாதன வசதி செய்யப்பட்ட அறைக்குள் மது அருந்துவதைக் காட்டிலும், உயரமான மொட்டை மாடியில் மது அருந்துவதே பிரியந்தரக்கூடியதாக உள்ளது.
நண்பர் நகரிலுள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றின் நிர்வாக இயக்குநர். தெருவோரக்கடைகளில் உணவு சாப்பிடுவதும் இதைப்போன்ற இடங்களில் மது அருந்துவதுமே அவருக்கு உண்மையில் பிடிக்கும். ஸ்டார் ஹோட்டலின் உடைமையாளர், இப்படி சாப்பிடுவதிலும் மது அருந்துவதிலும் உள்ள பிரச்சினை காரணமாக அதைத்தவிர்த்துவிடுவது வழக்கம். வெளியூர் என்றால் பிரச்சினை இல்லை. நண்பர் எனக்காக வந்திருந்தார். தவிர புறாத்தோப்பிலுள்ள இந்த ஹோட்டலில் உள்ளவர்களுக்கு அவரைத்தெரியவும் செய்யாது. ஊழியர்களை நிர்வகிப்பதில் அவருக்குள்ள உளவியல் பிரச்சினைகள் பற்றியும் ஆங்கிலோ இந்திய ரிஸப்ஷனிஸ்ட் பெண்ணின் பாவனைகள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார். நான் அவருடன் பேசிக்கொண்டே அடுத்த டேபிளில் எனக்கெதிரே அமர்ந்திருந்த அன்னிய நாட்டுப் பெண்ணைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அறிவான முகம், நிறம் வெள்ளை அல்ல; பளபளக்கும் மாநிறம். தலைமுடி கறுப்பக இருந்தது.அழகாக இருந்தாள்.அவளுக்கு எதிரேஅமர்ந்திருந்த அன்னிய நாட்டு மனிதன் வெள்ளையாக இருந்தான்.
அன்னிய நாட்டு மனிதர்களைச் சந்திக்கும் சூழலில், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என விசாரிப்பது என் வழக்கம். நான் படித்துக்கொண்டிருந்த போது, தெலுங்கு டப்பிங் சினிமா பார்க்கச் சென்ற தியேட்டருக்கருகே இருந்த டீக்கடையில் பார்த்த ஜெர்மனியைச் சேர்ந்த இருவரைப் பற்றி ஏற்கனவே ”பீஹாரும் ஜாக்குலினும்” என்ற சிறுகதையில் எழுதியிருந்தேன். நான் பாரிஸில் இருந்த போது யதேச்சையாக வாங்கிய புத்தகத்தின் ஒரு பகுதியில் நான் அவர்களை அப்போது சந்தித்த விவரம் பற்றி அப்புத்தகத்தின் ஆசிரியகளான அவர்கள் குறிப்பிட்டிருந்ததைப் பார்த்து எனக்கு ஆச்சரியம் ஏற்ப்பட்டதையும், பீஹாரில் கணவரைக் கலவரத்தில் இழந்து அழுது கொண்டிருந்த பெண்ணும் ஜாக்குலின் என்ற பெயர் கொண்ட அவளும் ஒருவர்தானா என்ற சந்தேகம் ஏற்பட்டதையும், அவளைச்சந்திக்கும் வாய்ப்பை ஒரு இழையில் தவற விட்டதையும் அச்சிறுகதையில் நான் குறிப்பிட்டிருந்தேன். வாஇப்பை இழந்துவிட்டது இன்னும் என்னை வதைத்துக் கொண்டிருக்கிறது.
நான், நண்பரிடம் ‘எக்ஸ்க்யூஸ் மீ’’ என்று நாடகப் பாணியில் கூறி விட்டு, கை கழுவ செல்வதான பாவனையில் அவ\ர்களைக்கடந்து சென்று, கைகளையும் கழுவிவிட்டு, திரும்பி வரும்போது அவர்கள் டேபிளருகே நின்று சிகரெட் பற்ற வைத்தேன். அவனையும், அவளையும் பார்த்துப் புன்னகைத்தேன். பிறகு அவனருகே அமர்ந்தேன். அவனைப்பற்றி விசாரித்தேன். அவன் ஃப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவன் என்றும் ஓவியன் என்றும் கூறினான்.அந்தப் பெண்ணிடம் அவளைப்பற்றி விசாரித்தேன். அவள் மொராக்கோ நாட்டைச் சேர்ந்தவள் என்றாள். சில வருடங்களுக்கு முன் நான் ’க்ரையோஜெனிக்ஸ்’ தொடர்பான கருத்தரங்கில்கலந்து கொள்ள பாரிஸ் வந்தது பற்றி இப்போது ஏதும் கூறவில்லை. ( இவ்விஞ்ஞானத்தில் தற்போது எனக்கு நாட்டமில்லை) எனக்கு ஓவியங்கள் பற்றி அதிக அறிவு கிடையாது. அச்சமயத்தில் எனக்கு ’டாலி’ என்ற ஓவியர் பெயர் நினைவிற்க்கு வந்தது. அவர், இத்தாலியா, பிரான்ஸா, ஸ்பானிஷா அல்லது வேறு நாட்டவரா என்று எனக்குத் தெரியவில்லை. எனவே ஜாக்கிரதையாக டாலி ஓவியங்களைப் பற்றி விசாரித்தேன்.எனக்குத் தெரிந்த சில ஃப்ரெஞ்சு நாவசிரியர்களின் பெயர்களைக்குறிப்பிட்டேன். அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இதுதான் எனக்குத்தேவை. இந்தியாவில், தமிழ் நாட்டில், மதுரையில் புறாத்தோப்புதெருவிலுள்ள கந்தசாமிக்கோனார் ஹோட்டலின் மொட்டை மாடியில் ஒருவர் வந்து, டாலி ஓவியங்களைப்பற்றி விசாரித்தார் என்றும், ஃஃப்ரெஞ்ச் நாவலாசிரியர்களைப் பற்றிக் குறிப்பிட்டார் என்றும் பேசுவான், எழுதவும் செய்வான். மொராக்கோ நாட்டைப் பற்றி எதுவும் தெரியாத ஒரு துர்பாக்கிய நிலையில் நான் இருந்தேன்.அவளிடம் மொராக்கொ நாட்டைப் பற்றி விசாரித்தேன். மொராக்கோ நாடு ஃப்ரெஞ்சுக் காலனியாக இருந்து மார்ச் 2, 1956 ஆம் ஆண்டு விடுதலை பெற்றது என்றும், இஸ்லாம் மதத்தினைச் சேர்ந்தவர்கள் அதிகம் என்றும், அரசர் பெயர் ஹாஸன் II என்றும், பிரதம மந்திரி பெயர் அப்துல் ரஹ்மான் யூசுஃப் என்றும், பார்லி, கோதுமை, பேரீச்சம்பழம் ஆகியவை முக்கியப் பயிர்கள் என்றும் கூறினாள். மொராக்கோ நாட்டின் சரித்திரத்தையும் பூகோளத்தையும் அறிந்தவனாக விடை பெற்று என் நண்பனிடம் மீண்டும் வந்தேன்.
அந்தப் பெண்ணின் வித்தியாசத் தோற்றம், நண்பரையும் கவர்ந்திருக்க வேண்டும். அந்த்ப் பெண்ணைக்குறிப்பிட்டு ’எந்த நாடு?’ என்று கேட்டார். நான் ’மொராக்கோ’ என்றேன் ’வித்தியாசமாக இருக்கிறாள்’ என்றார்.
அடுத்த ரவுண்டுக்குப் போனோம். இந்தச் சந்தர்ப்பத்தில் ’பீஹாரும் ஜாக்குலினும்’ சிறுகதை நினைவுக்கு வந்துகொண்டேயிருப்பதற்கான காரணங்களை யோசித்துக் கொண்டிருந்தேன். அத்துடன் மது அருந்தும் சந்தர்ப்பங்கள் பற்றி அடிக்கடி கதைகளில் வர நேர்வது பற்றியும் யோசித்துக்கொண்டிருந்தேன். அத்துடன் மது அருந்தும் சந்தர்ப்பங்கள் பற்றி அடிக்கடி கதைகளில் வர நேர்வது பற்றியும் யோசித்துக்கொண்டிருந்தேன். நண்பரிடம் இவை பற்றிக் கூறினேன். ‘ வாழ்வில் மது அருந்தும் சந்தர்ப்பங்கள் அதிகமானால், கதைகளிலும் அவை வரத்தானே செய்யும் ? மது அருந்தும் சந்தர்ப்பங்கள் ”க்ரியேட்டிவானவை” என்றார். நல்ல சாக்கு என்று எடுத்துக்கொள்வதா, நல்ல காரணம் என்று எடுத்துக்கொள்வதா என்று யோசனை ஏற்பட்டது.
சர்வர், ஆர்டர் பண்ணியிருந்த சூடான எலும்புகளற்ற கோழித்துண்டுகளையும், முட்டைப்பொரியலையும் கொண்டு வந்து வைத்தான். நண்பர், ஹோட்டலுக்கு அவர் வாங்கியுள்ள சோஃபாக்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். தற்போது, ஹாங்காங்கிலிருக்கும் என் கஸினின் மார்க்கெட்டிங் திறமை பற்றி நானும் கூறினேன். அவருடன் நான் கோவையில் தங்கியிருந்த போது ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சி என் நினைவுக்கு வந்தது.
நானும் என் கஸினும், ராபர்ட் என்பவருக்காக மதுவும், கொறிப்பதற்க்கான காரங்கள் மற்றும் சுண்டல் ஆகியவைகளையும் வாங்கி வைத்திருந்தோம். அவர் மாலை ஆறு மணிக்கு வருவதாகக் கூறியிருந்தார். மணி ஆறேகால் ஆகியிருந்தது. ’ நாம் ஆரம்பிப்போம்; அவர் வந்து கலந்து கொள்ளட்டுமே ‘ என்றேன். ‘ ’அவரிடம் பிஸினெஸ் பேச வேண்டியிருக்கிறது. அவர் வந்த பின் ஆரம்பித்தால் அவருக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல இருக்கும்’ என்றார் கஸின். அவர் ஆறரை மணிக்கு வந்து அனைவரையும் போல மன்னிப்புக் கேட்டார்.
ஆரம்பமாகியது. சற்று நேரத்திலேயே பிஸினெஸ் படிந்து விட்டது. இனி சற்று இறுக்கமின்றி இருக்கலாம். வந்திருந்தவன் அதிக மதுப் பழக்கம் இல்லாதவன் எனத் தோன்றியது. மது அவனுக்குப் பரவசத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது.
’என் மனைவி மிக அழகானவள்; ஆனால் அவள் இப்போது உயிருடன் இல்லை, தெரியுமா?’ என்றான் ராபர்ட். அவனுக்குப் போதை ஏறிவிட்டது என்ற எண்ணத்தை நானும் கஸினும் ஒருவரையொருவர் பார்த்துப் பரிமாறிக்கொண்டோம்.
’நான் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துக்கொண்டிருந்தபோது அவள் அவள் ஒரு பெண்கள் கல்லூரியில் முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்தாள். 27c நல்லூர் பஸ்ஸில் அவள் ஏற வேண்டும்.பஸ் ஸ்டாப்பில் தான்…….. சார் ……. எங்கள் காதல் வளர்ந்தது. நாங்கள் இருவரும் ஒரே மதம். ஆனால் அவர்க்கள் பிள்ளை மார். நாங்கள் கவுண்டர். எவ்வளவு கடிதங்கள் ! இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன். இரு வீடுகள் எதிர்ப்புகளுக்கிடையே நாங்கள் பதிவுத்திருமணம் செய்துகொண்டோம்.முதல் குழந்தை பிறந்ததும் அவர்கள் வீட்டில் உள்ளோர் சேர்ந்து கொண்டார்கள். அதுவரை பயங்கர கஷ்டம். எனக்குச் சரியான வேலை இல்லை. பிரசவச்செலவுக்குக் கையில் காசில்லை. அவள் வீட்டிலுள்ளோர் சேர்ந்த பின்னர் தான் என் கஷ்டம் தீர்ந்தது. இரண்டு குழந்தைகள்…. இரண்டும் பெண் குழந்தைகள். திடீரென்று இருதய நோய் ஏற்பட்டு இறந்து போய்விட்டாள் ஸார். இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு அவர்களை எப்படி நான் வளர்த்து திருமணம் செய்து கொடுக்க முடியும். வாழ்க்கை என்பதே கஷ்டம்தான். இப்படி என்னை விட்டுப் போய்விட்டாள். அவளை மறக்க முடியவில்லை. அவள் எனக்கு எழுதிய காதல் கடிதங்கள்தான் எனக்கு ஆறுதல் தருகின்றன. ‘
இப்படி ஒரு நிலைமை அவனுக்கு ஏற்பட்டதற்காக நாங்கள் வருந்தினோம். அவனுடைய வெள்ளை மனது எங்களைக் கவர்ந்ததாகக் கூறினோம். பார்ட்டி போதுமென்று முடித்துக் கொண்டோம். ராபர்ட் எழுந்து நின்ற நிலையில் தள்ளாடினான். அவனைப் பத்திரமாகக் காருக்குச் செல்லும்படி கூறினோம். ‘ கூட வரவா ‘ என்று கேட்டதற்கு, ’ வர வேண்டாம் ‘ என்று கூறி தள்ளாடியபடி நடந்து சென்றான். நாங்கள் அவன் சென்ற பின்னர் வருத்தங்களைப் பரிமாறிக்கொண்டோம்.
இரண்டு நாட்கள் கழித்து, நானும் என் கஸினும் காரில் சென்று கொண்டிருந்த போது, ராபர்ட்டும், ஒரு பெண்ணும், இரு பெண் குழந்தைகளும் காரிலிருந்து இறங்கி ஒரு ரெஸ்டாரன்டுக்குள் செல்வதைப் பார்த்தோம். எனக்கும் கஸினுக்கும் பெரிய ஆச்சரியமாக இருந்தது. காரை நிறுத்திவிட்டு ராபர்ட்டின் கார் டிரைவரை அழைத்தோம். எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு ஒரு மாதிரியாக அவன் குடும்பத்தைப் பற்றி விசாரித்தோம். அவன், மனைவி, குழந்தைகளுடன் சாப்பிடச் செல்வதாக டிரைவர் கூறினான். மனைவி இறந்துவிட்டதாகக் கேள்விப்பட்டதாகக் கூறியதற்கு டிரைவர் எங்களை முறைத்து, ’அதுதான் உயிரோடு போராங்களே ஸார்’ என்றான்.
கஸின் கார் ஓட்டிக்கொண்டு வந்தார்.” ஏன் பொய் சொன்னான்?” என்றார். ”புனைவு மர்மம் மிகுந்தது” என்றேன். கார் சென்று கொண்டிருந்தது.
இந்தச் சம்பவத்தைத் தற்போது கிளாடியஸ் குலோத்துங்கனிடம் கூறினேன்.’ ஏன் இப்படிக் கூறினான்’ ?. என்றார். நான் மவுனமாக இருந்தேன். நண்பர் எழுந்து கை கழுவி வந்தார்,. பேப்பரில் கையைத் துடைத்து விட்டு சிகரெட் பற்ற வைத்தார்.
”நடந்த சம்பவமாக நான் கூறியது அனைத்தும் புனைவு” என்று கூறினேன். நண்பர் சிகரெட்டை இழுத்துப் புகையை விட்டார். உண்மையைச் சொல்லிவிட்டுப் புனைவு என்று ஏமாற்றுகிறீர்களா ? “ என்றார். இல்லை ; புனைவை உண்மை போலச் சொன்னேன்’ என்றேன். நண்பர் மவுனமாக சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார்.
மொராக்கோ நாட்டுப் பெண்ணும், ஃப்ரான்ஸ் நாட்டு ஆணும் எங்களிடம் கை குலுக்கி விடை பெற்று மறைந்தார்கள்.
நன்றி : ”மாபெரும் சூதாட்டம்” – சிறுகதைத்தொகுப்பு – காலச்சுவடு பதிப்பகம்