தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Thursday, July 17, 2014

நியதியின் முன் - ஃப்ரான்ஸ் காஃப்கா - http://writerpayon.tumblr.com/post/38284000247

நியதியின் முன்
http://writerpayon.tumblr.com/post/38284000247
[ஃப்ரான்ஸ் காஃப்காவின் Before the Law என்ற குட்டிக்கதையின் சொந்த மொழியாக்கம். ஜெர்மனிலிருந்து ஆங்கில மொழியாக்கம்: வில்லா முயிர், எட்வின் முயிர்]

நியதிக்கு முன் ஒரு வாயிற்காவலன் நிற்கிறான். இந்த வாயிற்காவலனிடம் ஒரு கிராமத்தான் வந்து நியதியைப் பார்க்க அனுமதி கேட்டுக் கெஞ்சுகிறான். ஆனால் வாயிற்காவலன் தற்போதைக்குத் தன்னால் அனுமதி வழங்க முடியாது என்கிறான். அந்த மனிதன் அதைப் பற்றிக் கொஞ்சம் யோசித்துவிட்டு, தன்னைப் பிறகு ஒரு சமயம் அனுமதிக்க முடியுமா என்று கேட்கிறான். “அது சாத்தியம்தான். ஆனால் இப்போது முடியாது” என்கிறான் வாயிற்காவலன். வாசல் கதவு வழக்கம் போல் திறந்திருப்பதால் வாயிற்காவலன் ஓரடி நகர்ந்துகொள்ள, அந்த மனிதன் குனிந்து நுழைவாயில் வழியே உள்பக்கத்தை எட்டிப் பார்க்கிறான். அதை கவனித்துவிடுகிற வாயிற்காவலன் சிரித்து, “உனக்கு அவ்வளவு ஆர்வமிருந்தால் என் தடையையும் மீறி உள்ளே போய்ப் பாரேன். ஆனால் ஒரு விஷயம்: நான் பலசாலி. இத்தனைக்கும் நான் வாயிற்காவலர்களில் கடைசி ஆள்தான். ஒவ்வொரு கூடத்திற்கும் ஒரு வாயிற்காவலன் இருப்பான்; ஒவ்வொருவனும் கடைசி ஆளைவிட பலசாலியாக இருப்பான். மூன்றாவது வாயிற்காவலனே பயங்கரமாக இருப்பான்; என்னால் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்க்கக்கூட முடியாது” என்றான். இந்த சிரமங்களையெல்லாம் அந்த கிராமத்தான் எதிர்பார்த்திருக்கவில்லை; நியதி என்பது நிச்சயம் எல்லா சமயங்களிலும் எல்லோரும் சென்று பார்க்கக்கூடியதாகத்தான் இருக்க வேண்டுமென்று அவனுக்குத் தோன்றுகிறது; ஆனால் இப்போது அந்த வாயிற்காவலன் அணிந்திருந்த விலங்குத்தோல் கோட்டு, அவனது பெரிய, கூர்மையான மூக்கு, நீளமான, குறுகிய முரட்டு தார்த்தார் இனத்துக்குரிய கருப்பு தாடியையெல்லாம் கொஞ்சம் அருகிலிருந்து பார்த்துவிட்டு, உள்ளே போக அனுமதி கிடைக்கும் வரை காத்திருப்பதே நல்லது என்று முடிவு செய்கிறான். வாயிற்காவலன் அவனுக்கு ஒரு ஸ்டூல் தந்து கதவின் ஒரு பக்கத்தில் உட்கார்ந்துகொள்ள விடுகிறான். கிராமத்தானும் அங்கேயே நாள் கணக்கில், வருடக்கணக்கில் உட்கார்ந்துகொண்டிருக்கிறான். உள்ளே போக அனுமதி கிடைக்கப் பல முறை முயற்சி செய்து தன் ஓயாத நச்சரிப்பால் வாயிற்காவலனுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறான். வாயிற்காவலன் அடிக்கடி அவனுடன் சின்னச் சின்ன உரையாடல்களை நிகழ்த்துகிறான். அவன் குடும்பம் பற்றியும் இன்னும் பல விஷயங்களைப் பற்றியும் கேள்வி கேட்கிறான். ஆனால் அந்தக் கேள்விகளையெல்லாம் பெரிய துரைமார்களின் தோரணையில் அலட்சியமாகக் கேட்கிறான்; பிறகு எப்போதும் அவனைத் தற்போதைக்கு உள்ளே அனுமதிக்க முடியாது என்ற தகவலில் கொண்டுவந்து முடிக்கிறான். தன் பயணத்துக்காக ஏராளமாய்க் கொண்டுவந்திருந்த பொருட்கள் எல்லாவற்றையும் எவ்வளவுதான் விலையுயர்ந்தவையாக இருந்தாலும் வாயிற்காவலனுக்கு லஞ்சம் தருவதற்காகத் தியாகம் செய்துவிடுகிறான். வாயிற்காவலனும் எல்லாவற்றையும் பெற்றுக்கொள்கிறான் - ஆனால் எப்போதுமே இப்படிக் குறிப்பிடுகிறான்: “நாம் எதையாவது செய்யாமல் விட்டுவிட்டோமோ என்று நீ நினைத்துவிடக் கூடாதே என்றுதான் நான் இதையெல்லாம் வாங்கிக்கொள்கிறேன்.” இப்படிப் பல வருடங்களுக்கு அந்த மனிதன் கிட்டத்தட்ட இடைவிடாமலே வாயிற்காவலன் மேல் கவனம் செலுத்துகிறான். மற்ற வாயிற்காவலர்கள் இருப்பது அவனுக்கு மறந்துவிடுகிறது; இந்த முதல் வாயிற்காவலன்தான் நியதியை சந்திக்க முடியாமல் தடுக்கும் ஒரே முட்டுக்கட்டை போலத் தோன்றுகிறது. தன் அதிர்ஷ்டத்தை சபிக்கிறான் - முதல் சில வருடங்களில் தைரியமாகவும் சத்தமாகவும்; பிறகு அவனுக்கு வயது ஏறிக்கொண்டு வர, அவன் தனக்குள் மட்டும் முணுமுணுத்துக்கொள்கிறான். குழந்தைத்தனமாக நடந்துகொள்ள ஆரம்பித்துவிடுகிறான். வருடக்கணக்கில் வாயிற்காவலனையே பார்த்துக்கொண்டிருந்ததில் அவனது விலங்குத் தோல் கோட்டின் காலரில் இருக்கும் உண்ணிகளைக்கூட அவனுக்குப் பழக்கமாகிவிட்டிருந்ததால் வாயிற்காவலனின் மனத்தை மாற்றும்படி அந்த உண்ணிகளிடம் கெஞ்சுகிறான். ஒரு கட்டத்தில் அவனுக்குப் பார்வை மங்கத் தொடங்குகிறது. உலகம் நிஜமாகவே இருண்டுதான் போயிருக்கிறதா அல்லது தன் கண்கள்தான் தன்னை ஏமாற்றுகின்றனவா என்று அவனுக்குத் தெரியவில்லை. இருந்தாலும் அந்த இருட்டிலும் நியதியின் நுழைவாயிலிலிருந்து அணைக்க முடியாத பிரகாசம் பொங்கி வருவது இப்போது அவனுக்குத் தெரிகிறது. இப்போது அவன் வெகுகாலம் பெற்ற அனுபவங்களெல்லாம் அவன் தலைக்குள் ஒன்றுதிரள்கின்றன - ஒரு விஷயத்துக்காக; வாயிற்காவலனிடம் அவன் அது வரை கேட்காமல் வைத்திருந்த ஒரு கேள்விக்காக. வாயிற்காவலனை அருகே வருமாறு சைகை செய்கிறான். ஏனென்றால் இறுகிக்கொண்டிருக்கும் தன் உடம்பை அவனால் நிமிர்த்த முடியவில்லை. வாயிற்காவலன் அவனருகில் குனிய வேண்டியிருக்கிறது. காரணம், அவர்கள் உயரத்தில் இருந்த வித்தியாசம் நிறையவே மாறிப்போய் அந்த மனிதனுக்கு பாதகமாக அமைகிறது. “என்ன வேண்டும் என்கிறாய் இப்போது? உன்னை லேசில் திருப்திப்படுத்த முடியாது” என்கிறான் வாயிற்காவலன். “எல்லோரும்தான் நியதியை அடையப் போராடுகிறார்கள். ஆனால் இவ்வளவு வருடங்களில் என்னைத் தவிர வேறு யாருமே இங்கு வந்து உள்ளே போக அனுமதி கேட்கவில்லையே?” என்கிறான் அந்த மனிதன். அவன் தன் முடிவை நெருங்கிவிட்டதை உணர்ந்துகொள்ளும் வாயிற்காவலன், மெல்ல உணர்வுகளை இழந்துவரும் அவனுக்குக் கேட்கும்படி அவன் செவிகளில் இப்படி கர்ஜிக்கிறான்: “இங்கே வேறு யாரையும் அனுமதித்திருக்க முடியாது. ஏனென்றால் இந்த வாசல் உனக்காகவே செய்யப்பட்டது. இப்போது நான் இதை மூடப்போகிறேன்.”