ஹெப்ஸிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு
சி. சு. செல்லப்பா
இன்று தமிழ் இலக்கியத்தில் சிறுகதை போல் இல்லாமல் நாவல் வளர்ந்து வருகிறது என்பது உண்மையே. வளர் கிறது என்கிற போது தொகையளவில் மட்டும் இல்லை , தரத்திலும் கூடத்தான். இந்த நிலையில் நாவல்களை தரம் பிரிக்கிறபோது தலைசிறந்த நாவல், சிறந்த நாவல், நல்ல நாவல், சுமாரான நாவல் என்று ரகம் பிரிக்கத் தோன்றுகிறது எனக்கு. இந்த பாகுபாட்டின்படி பார்த்தால் தமிழில் சுமாரான நாவல்கள் என்று சொல்ல ஏதாவது கிடைத்தாலே பெரிய பாக்கியம் என்றே நான் கருதுகிறேன். மேலே சொன்ன தரப்பாகுபாடு பற்றி உதாரணம் காட்டிச் சொல் லப்போனால், இதுவரை தமிழில் வெளி வந்துள்ள நாவல்களில் தலைசிறந்தது மோகமுள்' சிறந்தவைகளில் போய்த்தேவு நல்ல நாவல்களில் நாகம்மாள் இதய நாதம்' என்று ஒன்றிரண்டு உதாரணம் காட்டுவேன் சுமாரான நாவல்கள் என்று வருகிறபோது கூட எனக்கு அதிக சங்கடம் இல்லை.
எனக்கு திருப்தி தருகிற சுமாரான நாவல்களே மிகக் குறைவு. உதாரணத்துக்கு மற்ற சிலதை சொல்வதைவிட எனக்கு விமர்சிக்கக் கொடுக்கப்பட்டிருக்கும் புத்தம் வீடு நாவல் ஒரு சுமாரான நாவல் என்று சொல்வேன். என் சுமார்' என்பதுக்கு அளவுகோல் என்ன என்று கேட்டால், ஓஹோ என்று சொல்லும்படியான தனித் தன்மையான முயற்சிகள் விஷய , உருவ , உத்தி வகைகளில் கையாளப் படாவிட்டாலும் அதாவது அதிகபட்ச சாதனை இல்லாவிட்டாலும், எலிமெண்டரி' என்கிறோமே அரிச்சுவடி நியதிகள்' அஸ்திவார விதிகளையாவது கவனித்து, அதாவது குறைகள் நீங்கியாவது அல்லது குறைந்த பட்ச குறைகளு டன் இருக்கிற நாவலை சுமார் என்பேன். பாஸ் மார்க் நாவல் என்று வைத்துக் கொள்ளுங்களேன். முப்பத்தைந்து சதவிகித மார்க் பாஸ்.
ஸ்ரீமதி ஹெப்ஸிபா ஜேசுதாஸன் நாவல் புத்தம் வீடு அவரது முதல் நாவல்; இதுவரை எழுதி இருக்கும் ஒரே நாவல். இந்த பதினைந்து நாவல்கள் விமர்சனக் கூட்டங்களில் கவனிக்கப்பட்ட நாவலாசிரியர்களில் ஒரே நாவல் எழுதியிருப்பவர் இவர்தான். எனவே ஆசிரியரின் முதல் நாவல் என்பதை மனதில் கொண்டே நான் இந்த நாவலைப் பார்க்கிறேன். விமர்சகனுக்கு அநுதாபம் இருக்க வேண்டும் என்று நேற்றுக் கூட்டத்தில் சொல்லப்பட்டது. அனுதாபம் என்றால், முன்கூட்டிய வெறுப்பும், அலட்சியமும் காட்டாமல் பார்ப்பது என்றுதான் அர்த்தமே தவிர, எதை யும் தட்டிக் கொடுப்பது என்று அர்த்தம் இல்லை. நடை போட்டுச் செல்லும் சொரணையுள்ள வண்டிமாட்டின் மீது விரலை வைத்தால் அது எகிறிப்பாயும். சொரணைகெட்ட மாட்டை தட்டிக் கொடுத்தால் அது கொஞ்சுவதுக்கு நின்று விடும். அதேபோலத்தான் அனுதாபம் காட்டுவதும். அனு தாபம் பெற இடம் இருந்தால் கொடுத்தே ஆகவேண்டும். இந்த நாவலுக்கு என் அனுதாபத்தை கொடுத்தே பார்க்கி றேன். ஏன் என்றால் அதுக்கு இது இடம் தருகிறது.
இந்த நாவல் நமக்கு முன் காட்டுகிற தென்ன, போடு கிற கேள்வி என்ன என்பதே கேள்வி. ஜாதி, அந்தஸ்து
இரண்டும் விளையாடும் விளையாட்டு எப்படி இருக்கும், எதில் முடியும், எந்த விதமாக முடியும் என்பதை ஒரு கோணத்திலிருந்து பார்க்கப்பட்டிருக்கிறது. இந்த விஷயம் தமிழ் நாவலுக்கு அப்படி ஒன்றும் புதுசு இல்லை. சிறு கதைகளிலும் சில நாவல்களிலும் கையாளப்பட்டிருப்பது தான். எனவே புதுசான ஒரு கதையாகப் படவில்லை எனக்கு. ஆனால் அந்தஸ்தும் வறட்டு கவுரவமும் ஒரு சோக நிகழ்ச்சியாக துன்ப முடிவுக்கு இட்டுச் செல்லாமல், ரோமியோ - ஜுலியட் லைலா - மஜ்னூன் வாழ்வு போல் ஆகாமல் லிஸி - தங்கராஜ் உறவு ஒரு இன்பமான முடிவுக்கு உதவி இருக்கிறது.
அப்பட்டமாகச் சொல்லப்போனால் இது ஒரு காதல் கதைதான். லிஸி - தங்கராஜ் ஆசை நிறைவேற்றம் பற்றிய உத்தேசம்தான் ஆசிரியரின் முதன்மையான, ஏன், ஒரே நோக்கம் என்று சொல்லலாம். எனவே காதல் வழி கரடு முரடாகத்தானே இருக்கும். இருந்தாக வேண்டும் என்ற சம்பிரதாயமும் இருக்கிறதே. எனவே அதுக்குக் குறுக்கே வருகிறவர்கள் ஏற்படும் நிகழ்ச்சிகள், குரோதம். பொறாமை, இதெல்லாம் வந்தாக வேண்டும் இல்லையா? 'புத்தம் வீடு' பழம் பெருமை கொண்ட லிஸியின் தாத்தா கண்ணப்பச்சி. அவள் குடிகார தகப்பன், மூர்க்கனான சிற்றப்பா , குரோதம் காட்டும் சிற்றப்பா பெண் லில்லி, கபடமாக நடந்து கொள்ளும் அவள் கணவர் வைத்தியர் போன்றவர்கள் சிக்கல்களை ஏற்படுத்தி, அதிகப்படுத்தி விபரீதத்துக்கு கொண்டு விட்டு விடுகிறார்கள். பெரியவள் லிஸிக்கு மணம் ஆகாமல் சிற்றப்பா பெண் சிறியவள் லில்லி கல்யாணம், அந்தஸ்து குறைவான தங்கராஜ்லிஸியை மணக்க கேட்டல், இரண்டாலும் தந்தை ஆத்திரம், சிற்றப்பா கொலை, தங்கராஜ்மீது கொலைப்பழி , ஆனால் கொலை செய் தது குடிகாரத் தகப்பன், தந்தையின் தற்கொலை, உபதேசி யாரின் ஆதரவான செயல், உண்மை வெளிவருதல், தங்க ராஜ் - லிஸி திருமணம், ஓய்ந்த மனம் கொண்ட கிழட்டுக் கண்ணப்பச்சியின் வேறு வழியில்லாத சம்மதத்தோடு - இப் படியாகக் கதை முடிகிறது.
நாவலின் கதையம்சம் உங்களுக்கு தெரிந்திருக்கும் இதிலிருந்து. இந்தக் கதை ஏதாவது புதுசாகத் தொனிக்கிறதா? நம் சினிமாக்கதை போல இருக்கிறது என்று நான் சொல்லத் துணிவேன். மோகமுள் மாதிரி பால் உணர்வு கலையாசை சம்பந்தமான ஒரு அடிப்படை மனோதத்துவப் போராட்டம், பொய்த்தேவு மாதிரி நிஜத்துக்கும் பொய்க்கும் வித்தியாசம் காண இயலாத ஒரு வாழ்க்கை யாத்திரை அனுபவம். 'இதய நாதம்' மாதிரி குரலால் செய்த உபாசனையை இழந்து இதயத்தால் பகவானை உபாசனை செய்யும் நிலைக்கும் வடு ஏற்பட்டத்திலே நிம்மதி பெறுமுன் நடுவே பட்ட வேதனை. 'நாகம்மாள்' மாதிரி அப்பாவியாக இருந்து ஊர் அவருக்குக் கொடுத்த தொல்லையில் ஊரையே எதிர்க்கத் துணிந்த ஒருமனதின் போராட்டம் போல ஒரு விசேஷ' கதையம்சம் கொண்ட நாவல் இல்லை இது . அவை மாதிரி இருந்திருந்தால் ஒரு பெருமுயற்சி என்று நினைத்திருப்பேன்.
ஆக, ஒரு சாதாரணக் கதையம்சம் கொண்டது இந்த நாவல் . ஆனால் அதுக்காக நான் அதை ஒதுக்க, புறக்கணிக்க முற்படவில்லை. அவரது நோக்கத்தை, உத்தேசத்தை, கதைக்கருவை அவரவருக்கே விட்டுவிட வேண்டியதுதான் விமர்சகன் தர்மம். படைப்பாளி கொடுப்பதை ஏற்க மறுத்து விமர்சகன் எதிர்பார்ப்பதை விரும்புவது சரியான காரியம் இல்லை. எனவே, நாவலுக்கான விஷயத்தை அங்கீகரித்து, அதன் உள்ளடக்கத்துக்கு கைத்திறன் பயன்பட்டி ருப்பதையும் காணும் கலைத்திறனையும் நிதானிப்பதுமே விமர்சகன் வேலையாகும்.
பழகின கைகள் செய்கிற காரியத்தை புதுக்கைகளில் எதிர்பார்க்க முடியாது. ஆனால் ஹெப்ஸிபா ஜேசுதாஸன் கை சரியாக எழுத ஆரம்பித்திருக்கிறது. பனைவிளை கிராம மும் புத்தம் வீடும் நமக்கு அறிமுகப் படுத்தப்படுவது முதல் பாத்திரங்களும் ஒருவர் பின் ஒருவராகச் சேர்ந்து வருகிற போக்கில் ஒரு இடத்து, ஒரு மத, ஒரு ஜாதி, ஒரு பழக்க வழக்கச் சித்திரம் உருவாகத்தான் செய்கிறது. இனம் காண முடிகிற அளவுக்குக் கற்பனையில் உருப்பெருகிறது. பிரதேச நாவல் என்றால் ஏதோ அந்தப் பிரதேசத்துக் கொச்சையை அள்ளிக் கொட்டி விட்டால் போதும் என்று தப்பாக கணித் துக்கொண்டிருப்பவர்கள் நமது எழுத்தாளர்கள் பலரும். அதோடு ஒரு இடத்தை பூகோள ரீதியாக வர்ணித்து விட் டால் போதும் என்றும் நினைக்கிறார்கள். இது இல்லை; பிரதேச நாவல் என்பது ஒரு இடத்து மண்ணுக்கு உரிய தனி வித சுபாவம், காற்றாக எங்கும் பரவி இருக்கவேண்டும். அது தான் பிரதேசநாவலுக்கு மூச்சு . அமெரிக்க நாவலாசிரியர் வில்லியம் பாக்ஸரின் நாவல்கள் தலை சிறந்த உதாரணம். என் நாவல் வாடி வாசல்' மதுரை ராமனாதபுரம் மாவட்டங்களில் அவைகளிலும் குறிப்பிட்ட பிரதேசங்களில் தான் நடக்கும்.
நாகம்மாள் நாவலுக்குப் பிறகு புத்தம் வீடு தான் ஒரு புதிய பிரதேசத்தை இனம் காணச் செய்யும் நாவல் என்று நான் நினைக்கிறேன். கொச்சைக்காக மட்டும் இல்லை, சுபாவத்துக்காக . பனையேறிகளின் வாழ்வு இங்கே படமாகிறது. இந்த ஜாதியாரின், இந்தத் தொழிலில் ஈடுபட்டவர்களைப் பற்றிய முதல் நாவல் இதுதான். கிருஸ்தவக் குடும்பம் இங்கே பேசுகிறது. கிருஸ்தவ சமூக நாவல் நான் தமிழில் படிப்பதும் இதுதான் முதல் தடவை. அன்று நாகம்மாள் கொங்கு நாட்டைக் காட்டியது. பி. எஸ். ராமையா தன் சிறு கதைகளால் மதுரை பிராந்தியத்தையும், புதுமைப்பித்தன் திருநெல்வேலி பிரதேசத்தை யும் கோணம் காட்டினார்கள். இப்போது திருநெல்வேலிக்கும் தெற்கே கேரளத்தை ஒட்டிய தமிழ்ப் பகுதியில் உள்ள கன்யாகுமாரி பிரதேசம் இதில் கோடி காட்டப்படு கிறது.
நான் திருநெல்வேலி ஜில்லாவையும் குமரிப் பிரதேசத் தையும் கொஞ்சம் அனுபவித்தவன். தாம்ர பரணி அங்கு ஓடினாலும் பனைமரம்தான் எங்கள் முன் நிற்கும். நாவலில் வரும் பனைவிளை போல் பல கிராமங்களை, கிராம வாசிகளின் பேச்சை நிறையக் கேட்டிருக்கிறேன். திருநெல்வேலிப் பேச்சுக்கும் பனைவிளைக் கிராமத்தாரின் பேச்சுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. நான் இந்த நாவலை படிக்கிறபோது ஒரு சில சொற்கள், தவிர மற்றப்படி எனக்குப் புரிந்தது. உதாரணத்துக்கு, அனந்தரத்தி, அடிச்சக் கூடு, பாட்டாக் காரர் , அக்காணி, டீக்கனார், புரோகதி, இற்செறிப்பு , புளாயிடம் போன்றவை. ஆனால் சந்தர்ப்பத்தில் இவைகளைப் பொருள் அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு நாவலில் வரும் பிரதேசச்சொற்களை இப்படித்தான் வாங்கிக்கொள்ள வேண் டும். இந்த நாவலில் பிரதேச மணம் எழுகிறது. ஆனால் மென்மையாக வீசுகிறது. அழுத்தம் இன்னும் விழுந்திருக்கவாம். முதல் நாவல் இல்லையா? கோடி காட்டி இருப்பது வளரும் கைக்கு அறிகுறி.
இந்த நாவலின் ஆரம்பப் பாராவே எனக்குத் திருப்தி தருகிறது. அதேபோல் பல இடங்கள் இருக்கின்றன. ஆனால் வர்ணனையும் நடையும் நாவல் நெடுக இதேபோல போயிருந்தால் அதிகக் கனம் நாவலில் ஏறி இருக்கும். போஷாக்கும் சேர்ந்திருக்கும்.
இந்த நாவல் புறம்போக்கான கதை சொல்லல் வழி பின்பற்றியது. மூன்றாம் மனிதப் பார்வை நாவல். ஆசிரியை கதையைத் தடம் பிசகாமலும் அவசியமான தகவல் களை மட்டும் தேர்ந்தெடுத்தும் சொல்லிச் செல்கிறார். சொல் செட்டு, வளர்த்தாத, நீர்க்காத சம்பாஷணை, இதெல்லாம் இருக்கிறது. கதாபாத்திரங்கள் வர்ணனை எல்லாம் கச்சிதமாகத்தான். பாத்திரங்கள் யாரும் அப்படி ஒன்றும் தீர்க்கமான, திடமான, அழுத்தமான பாத்திரங்கள் இல்லை. குறித்து முதன்மையாக இவர்தான் அடுத்தபடி இவன் என்றெல்லாம் சுட்டிச் சொல்லத்தக்க குறித்த தனிப்பாத்திரம் யாரும் இல்லை. ஏதோ குடும்பப் பெருமை மட்டும் பேசும்; இன்று சீர்குலைந்து கிடக்கிற ஒருகுடும்பத்தின்
ஜம்பத்துக்குக் குறியீடுகளாக நிற்பவர்கள் தான் காணப் படுகிறார்கள். சீராக இருந்த நிலமை அனுபவித்துச் சீர் கெடும் நாட்களையும் பார்த்து வரும் கண்ணப்பச்சி கூட முன் வந்து நிற்கவில்லை. எல்லோருமே லிஸி - தங்கராஜ் பிரச்னைக்கு உதவுகிற அளவுக்குத்தான் வந்து போகி றார்கள்.
லிஸி , தங்கராஜ் இருவருமே இன்னும் உருவாகாத. சிறு வயது வளர்பருவத்தினர் போலத்தானே இருக்கிறார்கள். தங்களைச் சுற்றியுள்ள தங்களவர்கள் ஆட்டுகிறபடி எல்லாம் தானே நடந்து கொள்கிறார்கள். தங்கள் காரியத்தை சாதிக்கத் தக்க வழி வகை தெரியாமல், தீர்மானிக்க முடி யாமல் தவிக்கிறார்கள். ஏதோ ஏசுநாதர் அருள் இருந்து அவர்களை சேர்த்து வைக்கிற மாதிரிதான் (உபதேசியார் தானே துப்பு துலக்கி தங்கராஜ் விடுதலைக்கு வழி செய்கிறார்) அவர்கள் பிரச்னை தீர்கிறது. இந்த நாவலில் லிஸி - தங்க ராஜ் பிரச்னைதான் முக்கியமே தவிர, லிஸியோ தங்க ராஜோ, வேறு யாரோ முக்கியம் இல்லை. ஒரு குறிப் பிட்ட கட்டத்தில் நிறுத்தப்பட்ட இரண்டு அந்தஸ்து வித்யாசக் குடும்பத்தவர்கள் சில சிறு மனப்பிராந்திகளைக் கொண்டு, நினைத்து, காரியம் செய்து சிக்கல்களை விளை வித்துக் கொள்கிறார்கள். அவதிப்படுகிறார்கள். அவர்களில் லிஸிக்குத்தான் பிரச்னை கொஞ்சம் கடுமையாக உள்ளது. உள்ளூரத் திடம் இருந்தாலும் வெளியே நடந்து கொள்கை யில் அதைத் தக்க சமயத்தில் காட்டச் சக்தியற்றவளாகவே இருக்கிறாள். தங்கராஜோ தான் செய்கிற காரியம் என்ன என்பதை அவன் உணர்ந்தவன் தான். ஆனால் ஆசையை சக்திக்கு மீறிக் கொண்டு விட்டவன் முன்னும் போக முடி யாமல் பின்னும் போக முடியாமல் இக்கட்டான நிலைமை யில் குழம்புகிறான். அவனாகப்பிரச்னைக்குத் தீர்வு காணவில்லை. அவன் சக்திக்கு மீறி அவன் ஆசைப்பட்டதுபோல் அவன் சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியால் தான், பிறரது சக்தி யால் தான் அவன் பிரச்னை தீர்கிறது.
மொத்தமாக, இந்த நாவல் ஒரு முழுமை பெற்றி ருப்பது படுகிறது; ஒருவிதத் திருப்தியும் தருகிறது. ஆனால் ஒரே ஜாதி ஆனாலும் பனையேறித் தொழில் குடும்ப அந்தஸ்து மாறுபாடு சம்பந்தமான ஒரு பிரச்னையை ஆரம்ப முதல் மென்மையாக, நாசூக்காகக் கையாண்டு மெது வாக லாகவமாக கதை வளர்த்து வந்த படைப்பாளி கடைசி அத்யாயத்துக்கு முந்தின அத்யாயத்திலே, அதாவது அண் ணன் மகள் மூத்த லிஸிக்கு மணமாகுமுன் தம்பி மகள் சின்னவள் லில்லிக்கு மணம் ஆகவும் வந்த அடுத்த அத்யாயத் திலேயே இதுவரை உளப்போக்கு ரீதியாக கதை ஜோடித்து வந்ததை கைவிட்டு விட்டு, ஒரு கொலை, கைது, விசாரணை, தற்கொலை, விடுதலை ஆகிய நிகழ்ச்சிகளை ராக்கெட் வேகத் தில் மளமளவென அடுக்கி, லிஸி - தங்கராஜ் மணத்தை முடித்துப் பார்க்க ஏன் இந்த அவசரம்? அதோடு அவர்கள் பிரச்னை தீர, தன் பெண்ணுக்கு முன் தம்பி பெண்ணுக்கு மணம் நடந்த ஆத்திரம், பனையேறித் தொழில் செய்யும் தங்கராஜ் தன் பெண்ணை கட்டிக்க கேட்ட கோபம் இரண் டும் சேர தங்கராஜ் அரிவாளாலேயே தன் தம்பியைக் கொன்று, தங்கராஜ்தான் கொலை செய்தவன் என்று பழி சுமத்தி விசாரணை நடக்கச் செய்து, பின் தன் குற்றம் தன்னை அறுக்க அண்ணன் தற்கொலை செய்து கொண்டது இதெல் லாம் அவசியமா இந்த நாவலுக்கு. இங்கே கொலையும் தற் கொலையும் பிரச்னையாக வந்திருந்தால் சரி. ஆனால் இவை ஒரு நொண்டிச்சாக்காக, கதை முடிச்சவிழப்புக்கு சுளுவாக உதவக்கூடிய ஒரு நிகழ்ச்சியாகவே வருகின்றன. உண்மை யில் இந்த அத்தியாயத்தைப் புத்தகத்திலிருந்து அப்படியே எடுத்து விட்டால் என்ன என்று தோன்றுகிறது எனக்கு. செய்து விடலாம். அதுக்கு பதில் இடைச் செருகல் செய்ய எனக்கு உரிமை கிடையாதே.
போகட்டும் இந்தப் பெரிய குறையிலும் ஒரு ஆறுதல் படிப்பவனுக்கு. கொலை, வழக்கு, தீர்ப்பு, தற்கொலை இத்யாதிகளுக்கெல்லாம் ஆசிரியை காட்சிகள் கட்டங்கள் ஆர்ப்பாட்டமாக எழுப்பாமல், க. நா. சுப்ரமண்யம் பொய்த் தேவு' வில் சொல்லி இருப்பது போல நிதானமாகச் சொல்லிச் சென்றுவிட்டார். இருந்தாலும் இந்தக் கட்டம் தேவையில்லை, இதுக்கு மாறாகக் கதையின் மென்மையான போக்குக்கு ஏற்ற இசைவான வேறு சந்தர்ப்பங்களை ஏற் படுத்தி சுதாவாக கதை விருவிருப்புக்கு வழி செய்திருந்தால் சுருதி மாறி இருக்காது என்று சொல்லத் தோன்று கிறது.
இன்னொரு குறை உதாரணத்துக்கு :
இந்த மாதிரி எழுதுவது அறுபதுக்களில் பத்தாம் பசலி எழுத்துதான். வேத நாயகம் பிள்ளையும், ராஜம் அய்யரும் மாதவையாவும் அன்று முக்கால் நூற்றாண்டுக்கு மேற்பட்ட பழய காலத்தில் இந்த மாதிரி எழுதினதுக்கு மன்னிக்கலாம் - தமிழுக்கே முதல், ஆரம்ப நாவல்கள் என் பதுக்காக, அநுதாபமாகப் பார்த்து . வ.வெ.சு. அய்யரின் 'குளத்தங்கரை அரசமரம்' இப்படிப் பேசினபோது கூட அது கதாபாத்திரமாகத் தன் உணர்ச்சியைக் கலந்தது. அது பொருத்தமானது. ஆனால் இங்கே சாட்சியாக உள்ள ஆசி ரியை தன் உணர்ச்சியை அப்பட்டமாகக் கலக்கிறார். கதாபாத்திரங்கள் அசட்டு அபிமான இருக்கத்தோடு (செண்டி மென்டலாக) நடந்து கொள்வதுதான் நம் தற் போதிய நாவல், சிறு கதைகளில் காண்பது சகஜமாக. இங்கு ஆசிரியையே சென்டிமென்டலாக தன் வேதனைக்குரல் கொடுக்கிறார். இது கலைத்தரமானது இல்லை. இதே மாதிரி இந்த ஒரு இடத்தில் பனையேறிகளின் வாழ்க்கை பற்றி துயரக்குரல் கொடுத்திருப்பது; ஆசிரியை தன்னை முன் நிறுத்திக் கொண்டு 'பனையேறிகள் மகாநாட்டு தலைமைப் பிரசங்கம் போல் தொனிக்கிறது. இதெல்லாம் தவிர்த்தாக வேண்டியவை, சுமாரான நாவல் என்பதிலிருந்து அடுத்த படிக்கு இது நல்ல நாவல் என்ற பிரமோஷன் பெற வேண்டு மானால்,
இந்த நாவலில் அங்கங்கே உபமானங்கள் யதார்த்த மாகவும் நல்ல கவனிப்பைக் காட்டுவதாகவும் இருக்கின்றன
உதாரணமாக... (பக்கம் 6) இன்னும் சாது வடித்து அழகு பார்க்க', 'பேர் போடப் போனோம்' போன்ற அழகான பேச்சு வழக்கு பிரயோகங்கள் காணப்படுகின்றன. கொச்சைச்சொல்லை பாத்திரங்களின் பேச்சிலே தான் சொல்ல லாம், ஆசிரியர் எழுதக்கூடாது என்று மேடை மேல் தமிழ் எழுதச் சொல்லித்தரும் போதகர்களை பார்க்கிறோம். இந்த நாவலாசிரியை ஒரு கலாசாலைப் பேராசிரியர் : 'ஆனா லும் குறட்டையின் ஒலி பெலந்தான் பெலமாகக்' காறித்துப் புவதிலிருந்து அறியலாம்' என்று எழுதி இருக்கிறார். தெரிந்தேதான் அவர் இந்தச் சொல்லை உபயோகித்திருக் கிறார் ஆசிரியை. எனக்கு இது உடன்பாடு.
இங்கிலீஷ் வாக்கிய அமைப்பு என்றும், இங்கிலீஷில் நினைத்து தமிழில் எழுதுகிறார்கள் என்றும் ஒரு கிளிப்பிள்ளை புகார் உண்டு. அவள் பலர் காண வெளியில் வருவது கூடாது. இது அவள் விலையை குறைப்பதாகும்' என்று எழுதி இருக்கிறார் .... இதுவும் எனக்கு உடன்பாடு. வளரும் தமி ழுக்கு இதெல்லாம் தேவைதானே.
ஆக, புத்தம் வீடு' நாவலை நான் படித்து வந்தபோது இன்றைய பல நாவல்களை நான் உதறிவிடுவது போல் என் னால் புறக்கணிக்க முடியாதபடி அது என் கவனத்தை நீடிக் கச் செய்து கொண்டிருந்தது. அதன் நிறைகுறைகள் என் மனதில் பட்டதைக் கொண்டு சுமாரான நாவல் என்று சொல்லுகிறேன். அதோடு இந்த ஆசிரியரின் அடுத்த நாவலை எதிர்பார்க்கிறேன். அது நல்ல நாவலாகவோ சிறந்த நாவலாகவோ இருக்கக்கூடும்.
===========================
*****************************
சிதம்பர சுப்பிரமணியனின் இதய நாதம்
ஜடாதரன்
ஒரு நாத யோகியைக் கதாநாயகனாக வைத்து எழுத வேண்டும் என்ற ஆசை வெகுநாட்களாக இருந்துவந்தது. அதன் விளைவே இந்தப் புத்தகம்'' என்று தன்னுடைய முன்னுரையில் கூறுகிறார் ஆசிரியர் , ந . சிதம்பர சுப்ரமணி யம் அவர்கள். நாதோபாசனையில் தன் வாழ்வை அர்ப் பணித்துக்கொண்டுவிட்ட ஒரு மகானுடன் பழகிய அனுபவ நிறைவு இந்த நாவலைப் படித்து முடித்ததும் நமக்கு ஏற்படு கிறது.
கதையில் கந்தசாமி பாகவதர் என்பவரின் வாயிலாகக் குறிப்பிடும் கருத்தின்படி, ஆசிரியர் தன் கலையின் பயனை அடைந்துவிட்டார் என்று சொல்லவேண்டும்.
'எங்கேயாவது ஒரு மூலையில் அழுக்கு வேஷ்டியை கட்டிக் கொண்டு ஒரு பரம ரசிகன் உட்கார்ந்திருப்பான். நீ பாடும் பாட்டைக் கேட்டுவிட்டு, ஆத்மானந்தத்தினால் உன்னை மனப்பூர்வமாக ஆசீர்வதிப்பான். அதுதான் நீ கற்ற வித்தையின் பலன்'' என்று கதாநாயகனிடம் கந்தசாமி பாகவதர் கூறுகிறார். உண்மையான கலையின் பயனை எவ்வளவு அழ காகக் கூறிவிட்டார் அவர். பாரதப் பண்பில் நம்பிக்கையும் சங்கீதத்தின் தெய்வத்தன்மையில் ஈடுபாடும் கொண்ட ரசிக உள்ளங்களுக்கு இதய நாதம்' ஒரு வரப்பிரசாதம்!
சொல்லப்போனால் இந்தக்கதையின் ஜீவநாடியே சங்கீதம் தான். ஆகவே வழக்கமாக நாம் படிக்கிற நாவல்களிலிருந்து சற்று விலகிய பாட்டையில் தான் கதை நடை போடுகிறது. அதுவே அதற்கு ஒரு சிறப்பாகவும் அமைந்துவிடுகிறது. சாதாரண மனிதனுடைய எண்ணங்களுக்கும் கலைஞ்னொரு வனின் எண்ணங்களுக்கும் வேறுபாடு உண்டு. அதிலும் கலையை ஒரு யோகமாகப் பயிலும் ஒருவனைக் கதாநாயகனாக வைத்து எழுதும்போது, அப்படிப்பட்ட ஒரு யோக அனுப வத்தை உணர்ந்திருந்தாலன்றி, எழுத்தில் வெற்றி பெற்று விட முடியாது. ஆசிரியர் எழுத்தில் இந்த வெற்றியை அடைந்திருக்கிறார் என்று சொல்லும்போதே அவரது கலை உபாசனையை' நாம் வணங்காமல் இருக்க முடியவில்லை.
கதை :
ஒழுங்குமுறையில்லாது ஊதாரியாக வாழ்ந்து அற் பாயுசிலேயே கண்ணை மூடிவிட்ட வைத்தியின் பிள்ளை கிட்டு விற்குக் கேட்போர் அதிசயிக்கும் சங்கீத ஞானம் பிறவியி லேயே வாய்த்திருந்தது. ''அப்பா சங்கீதம் கற்றுக் கொண்டு சிரிப்பாய்ச் சிரித்தது போதும். இவனுக்குச் சங்கீதம் வேண் டாம்'' என்று நினைக்கும் அவனுடைய விதவைத்தாய், தன் தமையனுடன் அவனை அனுப்பிவைத்து சாஸ்திரோக்தமான கல்வி பயிற்றுவிக்க எண்ணுகிறாள். கிட்டுவுக்கு மாமாவையும் பிடிக்கவில்லை. இந்த ஏற்பாடும் பிடிக்கவில்லை. ஆகவே தன்னையே நம்பியிருக்கும் தாய்க்குக் கூடச் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறி விடுகிறான் அவன்.
வழியில் ஒரு கல்யாணக் கோஷ்டியைச் சேர்ந்த கிழவர் ஒருவரின் அபிமானத்துக்குப் பாத்திரமாகி அவருடன் கிளம் பும் அதிருஷ்டம் அவனுக்குக் கிடைக்கிறது. பையனிடம் இருக்கும் சங்கீத ஞானத்தைக் கிழவர் தெரிந்து கொண்ட
போது, அந்தக் காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வித் வானான திருவையாறு சபேசய்யரிடம் சிஷ்யனாக அவனைக் கொண்டு சேர்த்துவிடுகிறார் அவர். பத்து வருஷத்தில் குருவே வியந்து பாராட்டும் ஞான ஒளியைப் பெற்றுவிடு கிறான். இந்தப் பத்து வருட காலத்தில் அவனுக்குத் தன் ஊர் நினைவோ தாயின் நினைவோ வந்ததாகத் தெரியவில்லை. சபேசய்யர் காலமானபோதுதான் அவனுக்குத் தன் தாயின் நினைவும் ஊரின் நினைவும் வருகின்றன. அதுவரை தனக் குத் தாயார் உயிருடன் இருப்பதையே வெளியே சொல்லிக் கொள்ளாமல் இருந்தான். அதன்பின், சபேசய்யரின் மனைவியிடம் உண்மையைக் கூறி உத்திரவு பெற்றுக் கொண்டு ஊருக்குக் கிளம்புகிறான்.
அங்கே பாழ்மனையும், ஆறு வருடத்துக்கு முன்பே தாய் இறந்து போய்விட்ட செய்தியும் அவனை அறைந்து திருப்பு கின்றன. வெதும்பிய மனத்துடன் திருவையாறு திரும்பி விடுகிறான்.
அவனுடைய கலைத்திறமை எல்லாராலும் ஒருங்கே பாராட்டப் பெறுகிறது. பேரும் புகழும் அவனைத் தேடி வந்து அடைகின்றன. செல்வம் வரும் வழியை அவனாகவே அடைத்துவிடுவது தான் வேடிக்கை இதில்.
ஒரு பணக்காரர் வீட்டுக் கல்யாணத்தில் பாட ஒப்புக் கொண்ட அவன், கச்சேரிக்குக் குறிப்பிட்டிருந்த காலத்தில் வராமல் சந்தியா வந்தனத்தில் ஈடுபடவே, தனவந்தர் வெகு கோபமாயும் உதாசீனமாகவும் பேசிவிடுகிறார். அப்போது ஏற்பட்ட மனக் கொந்தளிப்பில் ''பணத்துக்காகப் பாடும் வழக்கம் இன்றோடு தொலைந்தது ' என்று கூறி சங்கீதத்தை ஈசுவரார்ப்பணம் செய்வது என்று உறுதியெடுத்துக்கொள் கிறான். இதற்கிடையிலே சபேசய்யரின் மனைவி தருமாம் பாளின் முயற்சியில் அவளுடைய தங்கையின் பெண் நீலா கிட்டுவுக்கு மனைவியாக வந்து வாய்க்கிறாள். பணத்தைத் துச்சமாக மதிக்கும் இவனுக்கு நேர் எதிரிடையான மனப் போக்குள்ள அவளுடன் நடத்தும் குடும்ப வாழ்க்கை இடர் மிகுந்ததாக அமைகிறது. ஆயினும் கிட்டு தன் தீர்மானத் லிருந்து கடைசிவரை பிறழவேயில்லை.
பணவிவகாரம் காரணமாக வீட்டில் சண்டை ஏற்படா மல் இல்லை. ஒரு நாள் வீட்டில் ஏற்பட்ட சண்டையில் மனம் வெறுத்துப்போய் வீட்டைவிட்டே வெளியேறிவிட எண்ணுகிறான் அவன். அவனுடைய நண்பர் கந்தசாமி பாகவதர் கூறும் நல்லுரைகள் அவனைப் பிடித்து நிறுத்து கின்றன. வீடு திரும்பும் கிட்டுவை அமைதியுடன் நீலா வரவேற்கிறாள். 'விதி செய்யும் கொடுமை போதும். நீயும் நானும் ஒருவருக்கொருவர் கொடுமை செய்துகொள்ள வேண்டாம்' என்று கூறி கிட்டு அந்தச் சச்சரவுக்கு ஒரு முத்தாய்ப்பு வைக்கிறான்.
தவத்தின் மகிமையும் ஒளியும் அதற்கேற்படும் இடைஞ் சல்களினால் தான் வலுப்பெற்று மெருகேறுகின்றன. அதைப் போலவே, கிருஷ்ண பாகவதர் என்று எல்லோரும் கொண் டாடும் கிட்டுவின் வாழ்விலும் அவ்வப்போது இடைஞ் சல்கள் வெவ்வேறு உருவில் பிறந்து அவன் தன் தவமேன் மையை விளக்குகின்றன. அற்புதமான சாரீரமும், கிருஷ்ண பாகவதரின் வழியில் அந்தரங்க சுத்தியுடன் கூடிய ஈடுபாடும் கொண்ட தாழி ஒருத்திக்கு சிக்ஷை சொல்லிவைக்கும் நிர்ப் பந்தம் அவனுக்கு ஏற்பட்டுவிடுகிறது. நண்பர் ஒருவர் வற் புறுத்தியபோது, இது தனக்கு ஒத்ததில்லை என்று தயங்கிய அவனே, நாளடைவில் அந்தப் பெண்ணின் குணத்தினாலும் சங்கீதாப்யாசத்தில் அவளுக்கிருந்த உண்மையான பக்தி யினாலும் கவரப்பட்டு ஊராரின் ஏளனப் பேச்சுக்களைப் புறக்கணிக்கும் மனநிலையை அடைந்து விடுகிறான். ஆயினும் அவனே எதிர்பாராத நிலையில் அவள் உள்ளத்தில் அவனிடம் ஏற்பட்டிருக்கும் பிரேமையை தெரிந்து கொண்டபோது அதிர்ச்சியடைகிறான். அந்த நிமிஷம் முதல் அந்த சிக்ஷைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறான்.
இந்த இடைக்காலத்தில் பாலாம்பாள் அவனிடம் காது டிய குருபக்தியும் அவளது அன்பைக் கண்ட நீலாவின் உள்ளப் புகைச்சலும் ரசமான சம்பவங்கள்.
வாழ்க்கையில் ஒரு சாதாரண மனிதனாகத் தொடங்கி, கலையின் மகோன்னத சிகரத்தை எட்டிப்பிடித்து கிருஷ்ண பாகவதர் என்றால் சங்கீதத்தின் பாதுகாவலர் என்னும் நிலையை அடைந்த அவனுக்குக் கடைசியாக ஒரு பெரும் வீழ்ச்சி. அவனுடைய சாரீரம் அவனைத் திடீரென்று கை விட்டு விடுகிறது. வாழ்க்கையில் எத்தனையோ அடிகளைத் தாங்கிக் கொண்ட அவனால் இந்த அடியைத் தாங்க முடிய வில்லை .
இந்த வேதனையிலிருந்து அவனை மீட்டு அவனுக்கு மன அமைதி கொடுக்கிறார் கந்தசாமிப் பாகவதர். கதையில் கிட்டுவுக்கு அவ்வப்போது நல்லுரை கூறி உதவும் இந்தப் பாத்திரம் பக்குவப்பட்ட மனநிலையுள்ள ஒரு அற்புதமான பாத்திரம்
" உன்னுடைய அருமையான குரலை இழந்து நீ வேதனைப் படுகிறாய். வாஸ்தவம்தான். அதனால் என்ன குடி முழுகிப் போய்விட்டது? உன் காதுகள் கேட்ட நாத வெள்ளத்தில் இதுவரை ஈடுபட்டிருந்தாய். இனி, செவிக்கு எட்டாத இனிய நாதத்தில் ஈடுபடுவதற்குத்தான் உனக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. நீ நாதத்தின் எல்லையைக் கடந்துவிட்டாய். அடுத்தபடியில் இருப்பது மௌனம்.'' என்று அவர் கூறியதும்,
இதுவரையில் பகவானைக் குரல் கொடுத்துக் கூப்பிட்டு வந்தேன். இனி என் இதயத்தால் அவரைக் கூப்பிடுவேன்' என்று பக்குவப்பட்ட மனத்துடன் கிட்டு பதிலளிப்பதும், கதையின் முடிவில் வரும் சுவையான சம்பாஷனைகள் மட்டு மல்ல, கதையின் இதயநாதமாக ஒலிக்கும் வார்த்தைகள்
ஆடம்பரமில்லாத நடையில் அலுப்புத்தட்டாத வகை யில் அவசியமான சம்பவங்களை மட்டும் கொண்டதாகக் கதையை ஆசிரியர் நடத்திச் செல்லும் பாணி வியக்கத்தக்க தாக இருக்கிறது. கதை முழுவதும் ஒரே சீரான அமைதி விரவிக்கிடக்கும் அழகு , கதை படிக்கும் போது. தெய்வசந்நி தானத்தில் நிற்கும் புல்லரிப்பை ஏற்படுத்துகிறது. அங்கங்கே முத்துக் கோத்தாற்போல் ஆசிரியர் தெளிக்கும் சில கருத் துக்களைப் பார்ப்போம்.
'சங்கீதத்தை ஒரு யோகமாகவும், தபஸாகவும், பெரிய வர்கள் கருதி வந்தார்கள். ஆனால் தற்காலத்திலே, பாட கர்கள் கீர்த்தியும் செல்வமும் செல்வாக்கும் அடைவதுடன் தங்கள் சாதனை பூரணத்துவம் பெற்றுவிட்டதாக நினைத்து விடுகிறார்கள். சங்கீதம் என்பது ஒரு தொழில் முறையாகி விட்டது. மனிதனின் ஆத்ம ஞானத்தை உயரவைப்பதற்குப் பதில் அது கீழிறங்கிவந்து லௌகிக பேரம் பேசுவ தாகிவிட்டது.'
'மரணம். வாழ்க்கையில் ஒரு நிச்சயமான அம்சமாக இருந்த போதிலும் அது எவ்வளவு தூரம் மனிதனுடைய உள்ளுணர்விலே தைத்து அவனுக்கு வாழ்க்கையின் தத்து வத்தைப் போதிக்கிறது. தருமபுத்திரர் நச்சுப் பொய்கை யில் ஆச்சரியப்பட்டது போல், வாழ்க்கையிலே, மனிதன் ஏன் மரணத்தைப்பற்றிய சிந்தனையேயின்றி வாழ்க்கையைச் சதமென்று எண்ணி ஈடுபட்டு நிற்கிறான் என்பது ஆச்சரியப் படவேண்டிய விஷயமாகத்தானிருக்கிறது''
உலகத்தில் பார்க்கப்போனால், மனிதனுடைய தன்மை அவன் கையில் இருக்கும் பணத்தைப் பொறுத்த தாகத்தான் இருக்கிறது. ஏழையின் சொல் மாத்திரம் அம் பலம் ஏறமுடியாமல் இருப்பதில்லை. ஏழையே அம்பலத் துக்கு வரமுடிகிறதில்லையே...''
மனது பக்குவமடைய மயானம் ஒரு பயிற்சியைக் கொடுக்கிறது. வாழ்க்கையின் உண்மையே மயானத்தில் ஆரம்பமாகிறது.''
' -
ஒரு நல்ல நாவலைப் படிக்கும் போது ஒரு வாழ்க்கை யையே வாழ்ந்துவிட்ட உணர்வு தோன்றக்கூடுமானால் அதுவே பெரிய பாக்கியம். 'இதயநாத த்தைப் படிக்கும் போது ரசாநுபவம் நிறைந்த ஒரு நல்ல கச்சேரியைக் கேட்ட மன நிலைமை ஏற்படுகிறது.
இதயநாதம் ஒரு லட்சிய நாவல். வாழ்வில் ஒவ்வொரு துறையிலும் சில விசேஷங்கள் இருக்கின்றன. அவற்றை அறிந்தவர்கள் தான் அந்த விசேஷங்களைப்பற்றிப் பேசமுடி யும். சங்கீதத்தின் அருமையை அனுபவித்து உணர்ந்திருக் கும் திரு. சிதம்பர சுப்பிரமணியம் இந்த நாவலை ஆக்கித் தந்திருப்பது தமிழுக்கு நல்ல தொண்டு.
இதயநாதம் தெய்வகீதம் பற்றிப் பேசும் ஒரு உயர்ந்த கதை. அதைப் பேசி விளக்க முடியாது. அனுபவித்து அனுப வித்து நெக்குருகத்தான் முடியும்.
''எங்கே மகான்களும் மேதைகளும் வாழ்கிறார்களோ, அவர்கள் அனைவருக்கும் என் வந்தனங்கள்.''
தமிழ் நாவல்கள் (நாவல் விழாக் கட்டுரைகள்)
Publication date 2012-01-06
Topics எழுத்தாளர்கள், சாண்டில்யன், தி. ஜானகிராமன், ந. பார்த்தசாரதி, ராஜம் கிருஷ்ணன், விக்கிரமன், கட்டுரை, கி.வா.ஜ., நாவல், படைப்புகள், அகிலன், ஆர்வி, கா.ஸ்ரீ.ஸ்ரீ., கு. அழகிரிசாமி
Collection openreadingroom; additional_collections
'
'
தமிழ்ப் புத்தகாலயம்