3.கதாச்சுருள் - கோணங்கி
--------------------------------
இப்போதெல்லாம் சிறுகதைகள் அவசரப் படுத்துகிற ஒவ்வொரு பொருளையும் விளக்குவதில்லை. எதார்த்த வடிவத்தின் வரம்புக்கு வெளியில் எதிர்புனைவின் சூறாவளியில் குரல்பலவும் சேர வேண்டியிருக்கிறது. இதுவரையான வடிவத்தின் மரபிலிருந்து விலகிய. மாறிக்கொண்டே இருக்கும் கதையை மொழியின் உருக்களாக சேர்க்க விளைகிறேன். தன்னைவிட்டு நெடுந் தொலைவிலிருந்து பிரபஞ்சத்தின் குரல்" உலவும் வெளித்துகளையும் காண நேர்கிறது. துடிக்கும் வார்த்தைகளை தனி மொழியில் வெளிப்படுத்தினேன். நேர்ந்த அனுபவங்களிலிருந்து எல்லாவற்றையும் சொல்லப்போவதில்லை. முக்கியமாக பிளக்கும் இடைவெளியில்தான் மொழி தன்னைப் புத்துருக்கொள்கிறது. ஏனெனில் சாவின் சமீபத்தில் பிறந்த அராபியக் கதைகளின் கட்டமைப்பை ஷீரஸாத் சொல்ல நேர்ந்ததால் புதிய கதை வெளியின் துகள்களை அங்கிருந்தே நெடுங்கனவில் அடைகிறேன். என்விரலால் எழுத நேர்ந்த முன்கதைகளின் வார்த்தைகளைச் சிலுவையாகத் தூக்கிச் சென்றேன் பல சந்தர்ப்பங்களில். என் நிழலே விழாத கதையை முன்னும் பின்னரும் எழுத நேர்ந்தது. எதார்த்த உருக்கள் கரைந்து வேறு ரூபம் கொள்ள இருந்ததும் என்னை விட்டு விலக நேரும் போது நடக்கிறது. அடைத்துக்கொண்ட எழுத்தாளனின் பிம்பமோ கதா மந்திரப் பரப்பை சிதைக்கவும் வசீகரம் இழக்கவும் பயன்படுகிறது. பிரதி முக்கியமென்றாலும் கற்பனையான ஒன்றிலிருந்து துவங்கி குருதியில் இறங்குகிற உப்புக்கத்திகளாக வார்த்தையை கவனமாக விட்டுச் செல்வது எழுத்தாளன் மட்டும்தான். அறிவின் அதிகாரத்தையும் அதை எதிர்த்த அறிவு ஜீவிகளின் சிந்தனைச் சாரளங்களில் எழுத்தாளன் இறந்துவிட்டபிறகு பிரதிகளை அழுத்திப் பிரிக்கும் போதும் தாள் முகமூடிகளை அணிந்தே சும்மாகிடந்த எழுத்தாளனின் சவத்தை அறுக்க நேர்ந்திருக்கிறது. வார்த்தைகளை இணைத்துப் புதியவிளையாட்டைத் தொடர்ந்த போதும் சறுக்கிவிடுகிற கதையின் முன் னறியாத விதிகளை மார்க்வெஸ்ஸிடமிருந்தும் போர்ஹேயிடமிருந்துமே கற்றுக் கொண்டாலும் கீழைக்கதா மந்திரப்பரப்பில் அலைவுறும் ஐந்திணைகளில் இட மாறும் சூனியக்காரிகளை இவர்கள் யாராலும் சமாளிக்க முடியவில்லைதானே.
காகிதத்தில் விழுந்த விரல் ரேகையின் சுழற்சியில் வார்த்தைக்கு முந்திய திரவ மனநிலையில் பழைய வேதி ஏடுகளுடன் ரஸவாதியைச் சந்திக்க நேர்கிறது முதலில். காலனியக் காலத்திற்கு முந்திய உடலையும் புலனையும் தோண்டி எடுத்து எலும்புகளின் ஆய்வுக் குறிப்புகளை அரூபத்துகள் மட்டத்துக்கு சுருக்கிட்டு 'கதை' அழிப்பு நடந்த சில வருஷங்களில் கதைசொல்லியின் கழுத்தை நெறிக்க வந்த அதிநூதனவாதிகளுடன் "சமஸ்கிருதக் கதைமரபே தமிழுக்கு.. வேறு சுயமரபில்லை " என இரும்பு முகமூடிக்கடியில் சிரித்தவர்களும் கர்னாடக முரசு
கொட்டி (Anti Literature) பரப்பிய நான் லீனியர் எழுத்துக்காலமும் - தன் கதையில் வரும் உணர்ச்சிவசப்பட்ட சுதாபாத்திரமாக மாறிப்போன தட்டை அட்டைக் கோட்டு ஒற்றைக் கருத்துருவ நியூஸ்பிரிண்ட் அச்சு எந்திரக் கதைக்காரர்களும் காலந்தவறி வந்த ரயிலை விட்டிறங்கி ஓடிவர நேரமிருக்கிறது இன்னும். பகுத்தறிவின் கூரிய வாட்களுடன் சமூகவியல் எதார்த்த வகை அறிவு ஜீவிகளும் எழுத்தாளர்களும் இழந்த கதைமரபை சமூக உடலில் தேடித் தேடி தோற்றுப்போனார்கள். உடலுக்குள் புலனுணர்வுகளுக்குள் தர்க்கத்தில் உருக்கிவார்த்த கருத்துருவத்துள் அடைத்துப்பார்க்க எந்தக் கூண்டிலும் அடைபடாமல் தோலுக்குமேல் ஒரு இஞ்ச் இடை வெளியுடன் பரவியுள்ள பிதாமந்திரப்பரப்பை ஒவ்வொரு கதைக்காரனின் மரபுரிமையாக அறிவிக்கப்பட வேண்டும். சிறுத்தையின் உடல்புள்ளிகளையே மிருக விநோதச் சுருள் என்பேன், தான்தோன்றியான சிறுத்தைப் புள்ளிகளில் தான் நவீனக் கதைக்காரனின் இருப்புக்கான குறியீடு இடம்பெற்றுள்ளது. குரல்களை தொன்மத்தை நோக்கிய பிலவாயிலில் நின்றவாறு கூவியது நடந்தேறி வருகிறது. புனைவின் வசீகர ஆளுமைகளை, உறங்கும் எலும்புகளின் கனவை, யுத்தங்களால் சேகரிக்கப்பட்ட குருதியின் பழங்கால நினைவுகளை ஊடுருவிப்பாயும் பாட்டிமாரின் கதாமண்டல - தாந்திரீக மொழியைப் புறந்தள்ளிவிட்டுச் சமூகவியலும் ஃபோட்டோ ரியலிஸமும் அ-நேர்கோட்டு மேல் தளத்தில் வெட்டிச் சாய்த்த வேகத்தில் முனிகள் அடைந்த புளியமரங்களும் சாய்ந்ததுதான் துரதிருஷ் டமானது. வீர்யமிக்க யதார்த்த மரங்களைவிட பொந்தாயிரம் புலி ஆயிரம் வாழ்ந்த பேய்க்கதைகள் கூறும் கிராமத்தின் ஆத்மாவை ஒவ்வொரு புளிய இலையின் நடுக்கத்திலும் புளிப்பு வாசத்திலும் பசுமைச் சாறு கசியும் கதாச்சுருள் மரப்பட்டைகளின் விருவுகளில் எறும்புகளாக ஊர்ந்து கால்களை அசைத்துக் கொண்டிருக்கின்றன. கதைக்குள் கூடிவந்த மைய சாராம்ச கலாவேகத்தின் சகாப்தம் முடிந்தபின்னும் மியூசியத்துக்குள் இன்னும் பட்டாபிஷேகம் நடந்து கொண்டிருக்கிறது.
முகத்தில் வாசித்த எழுத்தை கதைக்குப் பின்னே ரகசிய இழைகளாக வைத்திருக்கிறேன். பழைய வீடுகள் சொன்ன சேதியிலிருந்து கதையின் முதல் வரி துவங்கியிருந்தது. முதல் எழுத்தில் இறங்கிய திரவமனநிலையில் இருட்டுத் தண்ணீருக்குள் போய்க்கொண்டே இருக்கிறேன். தண்ணீரான எழுத்தில் இறங்க இறங்க இழுத்துக் கொண்டிருக்கிறது. மூழ்கிக்கொண்டிருக்கும் போது மடிக்கப்பட்ட தாள் பரப்பில் மனிதர்கள் தீக்குமிழாகச் சுழல்கிறார்கள். ஒவ்வொரு தாளிலும் ஒவ்வொரு முதல்வரி தனித்தனி இடங்களிலிருந்து எதிரும் புதிருமாகத் துவங்கி அறுபடுகின்றன. ஒன்றையொன்று சந்தித்துக் கொள்வதில்லை. விலகி விலகி விழும் முதல்வரி அடங்கிய வேறு கதைகள் தாறுமாறாய் சிதறிக்கிடக்கும். எழுதப்போகும் கதைகளுக்கான முதல் வார்த்தை இருட்டுத் தண்ணீரில் சலனமடைந்தவாறு மறையும். எந்த எழுத்தைத் தொட்டாலும் தண்ணீராக மாறிவிடக்கூடிய உருமாற்றம். நான் எழுதிய எழுதாத வார்த்தைகள் குவிந்த அச்சுப் பிரதிகளும் கைப்பிரதிகளும் தொட்டதும் நீராக உருமாறுகின்றன. அவற்றை * திரும்பவும் கதைகளாக மாற்ற, தண்ணீரால் வார்த்தைகளுக்குள் அடங்க முடியவில்லை. சதாவும் சலனமடைந்தபடியே சேர்ந்து சேர்ந்து ஒன்றாகும் வார்த்தைகளை என் விரல்கள் வேக வேகமாகத் தொட்டுக் கொண்டே நகர்கின்றன. உணர்வில் மட்டுமே கரையும் கதைகள் சிலவும் வருகின்றன. தோற்றும் போகின்றன. நீரின் மாயத்திலிருக்கும் கதைகள் முன்னறியாத விதிகளில் இயங்குவதால் எதார்த்தத்தையும் மாயத்தையும் பிரித்தெடுப்பதில் தோற்று விடத்தான் முடியும்.
தேவதைகளைத் தவிர மனிதனுக்குப் பொருத்தமில்லாத விதிகளைத் தான் மீமனித மாயச் சுருள் போல பல என் கதைகள் கொண்டிருப்பதால் மாறுபட்ட விதிகளை ஏற்க மறுப்பதும் நடக்கிறது. மாறிப்போன கதைகளின் வரிசைக் கிரமமான விவரிப்பை நான் கொடுக்க முயற்சிக்கப் போவதில்லை.
கிராம தேவதைகளுக்குப் பலியிடப்பட்ட பன்றி இறைச்சி தொங்கும் உடை மரத்திலிருந்தும் மாமிச வெறியிலிருந்தும் அச்சுறுத்தும் தேவதைகளின் மொழிப் பிராந்தியங்களுடன் எதார்த்தவாதிகள் ஒருபோதும் ஒத்துப் போவதில்லை.
எழுதப்பட்ட வரிகளால் தாறுமாறாய் சிதறிக்கிடக்கும் என் அறை. கதைகள் கொண்டு செல்லும் மீமனித மாயச் சுருளின் அடையாளங்களை காகிதக் கற்றைக்குள் புரட்டிப் புரட்டி கவனமாகத் தடயம் பார்க்க வேண்டி இருக்கும். என் அறை மூலையில் மர ஸ்டேன்டில் வைக்கப்பட்ட பாதரஸ விளக்கில் தனியே மிதக்கும் சுடரில் புகுந்து எரியும் பிரதிகளை தலைகீழாகப் பிடித்திருக்கிறேன். எழுத்துக்கள் உருகி மெலியப் பயன்படுத்திய ரஸக்கரைசலில் நிறக்கோடுகள் உருமாறுவதை சில வேளை யாராவது காணக்கூடும். என் கைப்பிரதியில் படியவிட்ட பாதரஸத் திரியின் சுடர் படபடத்துப் பற்றிக்கொண்டு காகிதம் முழுவதும் பரவிய தீயில் உருகும் கதைக்குள் பாதரஸமாக உருமாறும் வார்த்தைகள் புதுமைப்பித்தன் என்ற ஹடயோகியிடமிருந்து வாழையடி வாழையாக வந்து சேர்ந்திருக்கக் கூடுமோ.
இரவும் வந்த சாகுருவி 'சா' எனக் கத்தும் குரலில் யாரோ இறந்த பயம் நெஞ்சைக் கவ்வ அத்தை அடிக்கடி சாகுருவியிடம் என்னைக்காட்டி என்மீது 'சா' எனச் சொல்லிவிடாமல் சேலைமுந்தியால் மூடி என் தலையை மறைத்தபோது குருவி 'சா'யென சிரித்தது. எப்போதாவது என் தலைக்கு மேல் சாகுருவி 'சா வென்று சொன்னால் நிச்சயம் எழுதுவதை நிறுத்தி விட்டுச் செத்துப்போவதாய் நம்புவதாக இருக்கிறது இன்னும். என் கதைகள் மீதோ நகர்ந்து கொண்டிருக்கும் கதாபாத்திரங்களின் மீதோ சாகுருவி நிழல் விழாமல் அதன் குரல் படாமலும் காத்து வருகிறேன். அது வந்து விடும் ஒவ்வொரு இரவையும் கொண்ட என் எழுபது கதைகளையும் சாகுருவியின் சாவுத்துடி பற்றிக் கொண்டிருப்பதால் அதை வாசகர்கள் கொஞ்சம் இடம் மாறி இடம் மாறி அமர்ந்து வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பேதை உள்ளான் கதையை எழுதிவிட்டால் உடனடியாக அன்று இரவு சாகுருவி என்மேல் பறக்கக் கூடும். பேதை உள்ளான் கதையை நான் எழுதியிராத போதும் அது மார்த்தாண்டன்பட்டிக்கு வாழ்க்கைப்பட்டுப்போன மூன்று அத்தைகளின் கதையாகத்தான் இருக்கும். என் கதைகளுக்கான ரகசிய இழைகளை அவர்களே அறியக்கூடும். அல்லது குறுக்கே பாயும் 'சா....' வென்ற குரல் சுழற்சியில் சாப எழுத்தும் கதைமரபும் கொண்டு செல்லும் சாகுருவியைக் கேளுங்கள்.