தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Saturday, July 23, 2016

கன்னி - ஜெ.பிரான்சிஸ் கிருபா - https://www.facebook.com/j.franciskiruba

Thursday, ‎October ‎13, ‎2016 4.27pm
Kaliya Murthy
3 hrs ·

தெரிந்தோ தெரியாமலோ உன் காலடி மண்ணெடுத்து ஒரு பூமி செய்துவிட்டேன்
உன் ஈரக்கூந்தலை கடலாகச் செய்யுமுன்னே கடந்து போய்விட்டாய்
உயரத்திலிருந்து சூரியனாய் வருத்துகிறது ஒற்றைப்பார்வை
வெப்பத்தில் வறள்கிறது எனது சின்னஞ்சிறிய பூமி
நீரூற்று தேடிக் கிணறுகள் தோண்டினால்
பீறிட்டடிக்கிறது ரத்தம். கண்ணே,
இரண்டொரு தீர்த்தமணிகளைத் தானமிடு.

- "கன்னி "நாவலில், ஃபிரான்சிஸ்கிருபா.

இருள் வெடித்து அடிவானில் வெளிச்சம் பட்டை பட்டையாக உரிய ஆரம்பித்த போது கடலின் குணம் முற்றிலும் மாறிவிட்டது. அது விரோதியைப் கண்டதுபோல் முகத்தைத் திருப்பிக்கொண்டது. நீர்ப்பரப்பு மீது பொன்பட்டு தகதகத்தது. இரவெல்லாம் கூடிக் குடித்துவிட்டு விடிந்ததும் யார் நீ என்று விசாரிக்கிற தடுமாற்றமான குடிகாரனின் நடவடிக்கைக்கும் அதற்கும் பேதமொன்றும் பெரிதாக இல்லை. கண்ணுக்கெட்டும் தொலைவில் கட்டிடங்களோ மனிதர்களோ தென்பபடவில்லை. கடலைத் தவிர மற்றதெல்லாம் பொட்டல் வெளியாகப் பட்டிருந்தது. கடலின் திடீர் செருக்குக்கு இதுவும் ஒரு காரணமாக அமைகிறதோ என்னவோ!

24 May · 

'மழை வந்திருக்குமோ, மழை வருகிறதே என்று அவள் வானத்தை முகம் நிமிர்த்தி பார்த்திருப்பாளோ, அப்போது மழையின் முதற் துளி நெற்றிப் பொட்டில் விழுந்திருக்குமோ, 'ஐயோ இவள் நனைந்து போவாளே, துளிகளின் தொடர் தெரிப்பில் உடல் கன்றிப் போவாளே என்று இந்த முதற் துளி அலறிக் குரல் கொடுத்திருக்குமோ, அதைக் கேட்டு வானம் இரக்கப்பட்டு ஒரு துளியோடு மழை பொழிவதை நிறுத்தியிருக்குமோ, ஒரு முழு மழையின் ஏக்கத்தை இந்தத் தனித்துளி தாங்கி நிற்கிறதோ...'

26 April · 

கண்ணீர் துளிகளும் அவனை விட்டு விலகி ஓடுவதில் அவசரம் காட்டியதும் அழுவதை சட்டென்று நிறுத்தி விட்டான்.

19 April · 

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் எல்லாம் அந்த ஸ்டுடியோவில் ஃபோட்டோ எடுத்திருந்தார்கள். நிறைய அக்காக்களின் அழகழகான படங்களும் இருந்தன. இவர்களும் சினிமாவில் நடிப்பார்களாயிருக்கும். பெயர் தெரியவில்லை. எடுத்த ஃபோட்டோவை எதற்காக வந்து வாங்கிக் கொண்டு போகவில்லை என்று யோசித்தான். காசு தட்டுப்பாடோ என்னவோ.

ஏசு சாமி ஃபோட்டோ எடுத்தபோது அவர் நெஞ்சுக்குள் பந்தாக திரண்டு எறிந்து கொண்டிருந்த பரிசுத்த ஆவி நெருப்பாக ஃபோட்டோவில் வந்துவிட்டது. அதுபோல பாண்டி வயிற்றுக்குள் குழைந்திருந்த பூரி கிழங்கும் வடையும் ஃபோட்டோவில் வந்து விடுமோ என்று அஞ்சினான். அவன் அஞ்சியபடி நடக்கவில்லை. அது ஒருவகையில் ஆறுதலாக இருந்தது.

15 April · 

சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த வண்ணத்துப்பூச்சியின் செயல் தான் மீண்டும் கோபமூட்டியது. அது தன் வண்ணச் சிறகுகளைக் குவித்து வானத்தைப் பார்த்து கடவுளை நோக்கி கள்ளத் தனமாக பிராத்தனையில் ஈடுபட்டது, 'என் தேவனே, சர்வ வல்லமை படைத்தவறே! எந்த மனிதன் என்னை எங்கிருந்து துரத்தியடித்தானோ, அவனை நீர் அங்கிருந்து துரத்தியடிக்க வேண்டுகிறேன். அந்த வலிய மிருகத்திடமிருந்து இந்த எளிய ஜீவனைக் காப்பீராக' என்று அது மனசுக்குள் ரகசியமாக மீண்டும் மீண்டும் ஜெபித்துக்கொண்டிருந்தது. அதன் சிறகுகள் பயபக்தியோடு குவிவது வெளிப்படையாகத் தெரிந்து, அவனுக்குள் வெறி பற்றிக்கொண்டது. கோபத்தில் எரித்து விடுவது போல பூச்சியை உக்கிரமாகப் பார்த்தான். அது பிராத்தனையை நிறுத்தவே இல்லை. கடைசியில் அவன் கொலை வெறியோடு பூச்சியை நோக்கிப் பாய்ந்தான். அது தப்பித்தெழுந்து அங்குமிங்கும் பறந்தது. விடுவதாக இல்லை அவன். பூச்சியைத் துரத்திக்கொண்டு ஓடினான்.

11 April · 

சிறகுகளை விரித்து மிதக்கும்போது பறவைகளுக்கு வாய்க்கிறது வில்வடிவம். அம்புகளுக்கு பதில் வில்லே பாய்ந்து செல்லும் அற்புதம்.

11 April · 

கலைந்து பறக்கும் கூந்தலுக்கு ஒரு கிளிப் வாங்கி மாட்டி காற்றை ஏமாற்றினாள்.

10 April · 

அக்காவின் அருகில் சென்று அவள் முறை வருவதற்கு சற்று முன்பு காதோரம் நெருங்கி தாழ்ந்த குரலில் கேட்டான். "எக்கா, உங் கூட போட்டாவுல நானும் நிக்கட்டா?"

"ம்ஹூம். நான் மட்டும்தான் நிக்கனும்" தணிந்த குரலில் கறாராக மறுத்துவிட்டாள்.

தேவாலயத்தின் கூரையிடிந்து பாண்டி தலையில் மட்டும் விழுந்தது. வலியில் துடித்தான். நெஞ்சு விம்மி கனத்தது. அங்கேயே முழந்தாளிட்டு 'கடவுளே இந்த போட்டோ மிஷின் இப்போதே பணாலாகிப் போக வேண்டுமென்று' பிராத்தனை செய்ய ஒரு வேகம் பொங்கி வந்தது. ஆனால் பாண்டியால் அப்படி நினைக்க முடியவில்லை. அக்காவைப் படமெடுக்க வேண்டுமே.

10 April · 

திண்ணமாகத் தேர் வடம் போல் பிசிறின்றிப் பின்னப்பட்ட கரிய சடையை எடுத்து வானத்தில் வீசினாள். அது 'ம்கூம் நான் போகமாட்டேன்' என்று அவள் முதுகில் போய் அணைந்தது.

9 April · 

ப்யூரிட்டிக்கு ஒரு பவர் இருக்கு, எல்லா விதத்திலயும். வணங்கித் தான் ஆகணும். வேற வழியேயில்லை - குறிப்பா ஆண்களுக்கு.
- அமலா அக்கா

Saturday, 11 October 2014

கன்னி - ஜெ.பிரான்சிஸ் கிருபா

யாரேனும் நீ படித்த நாவல்களில் பிடித்த நாவல்  சிலவற்றை சொல் என்றால் நாலைந்து நாவல் பெயர்களைச் சொல்லுவேன். இனி யாரேனும் என்னிடம் கேட்டால் முதலில் சொல்வது ‘பிரான்சிஸ் கிருபாவின் கன்னி’ நாவலாகத் தான் இருக்கும். வேறு எவரின் எந்த வித சாயலும் இல்லாமல் கிருபாவுக்கென்றே  பிரத்யேகமான நடையில் கன்னி நாவலை குழந்தையைப் பத்து மாதம் ஒரு தாய் கருவில் சுமப்பது போல சுமந்து பெற்றெடுத்திருக்கிறார். இந்த நாவலைப் பற்றிய வாசிப்பு அனுபவம் எழுதுவது அவ்வளவு சுலபமாக எனக்குப் படவில்லை. குறைந்தது நூறு பக்கமாவது எழுத வேண்டி வரும். அது போக வார்த்தைகளில் எழுதிச் சொல்வதை விட அதை நீங்கள் படித்து உணர்வதே சரியாக இருக்கும் என்று தோன்றியதால், இந்த நாவலில் நான் ரசித்த பல வரிகளில் சிலவற்றை மட்டும் இங்கே தருகிறேன். இதைப் படித்ததும் இந்த நாவலைப் படிக்க வேண்டுமென்ற ஆசை உங்களுக்குத் தோன்றவில்லை என்றால் இனி நான் வாசிப்பதையே நிறுத்திக் கொள்கிறேன்.

தன் ஆசை நாயகின் மீது விழும் முதற் மழைத் துளியினை வர்ணிக்கிறார்.

'மழை வந்திருக்குமோ, மழை வருகிறதே என்று அவள் வானத்தை முகம் நிமிர்த்தி பார்த்திருப்பாளோ, அப்போது மழையின் முதற் துளி நெற்றிப் பொட்டில் விழுந்திருக்குமோ, 'ஐயோ இவள் நனைந்து போவாளே, துளிகளின் தொடர் தெரிப்பில் உடல் கன்றிப் போவாளே என்று இந்த முதற் துளி அலறிக் குரல் கொடுத்திருக்குமோ, அதைக் கேட்டு வானம் இரக்கப்பட்டு ஒரு துளியோடு மழை பொழிவதை நிறுத்தியிருக்குமோ, ஒரு முழு மழையின் ஏக்கத்தை இந்தத் தனித்துளி தாங்கி நிற்கிறதோ...'

காதலியின் மீது அமர்ந்த வண்ணத்துப்பூச்சியின் துரத்திவிடுகிறான் பாண்டி. அந்த வண்ணத்துப்ப்பூச்சியின் செய்கையை இதை விட அழகாக யாரேனும் சொல்ல முடியுமா என்ன?!

சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த வண்ணத்துப்பூச்சியின் செயல் தான் மீண்டும் கோபமூட்டியது. அது தன் வண்ணச் சிறகுகளைக் குவித்து வானத்தைப் பார்த்து கடவுளை நோக்கி கள்ளத் தனமாக பிராத்தனையில் ஈடுபட்டது, 'என் தேவனே, சர்வ வல்லமை படைத்தவறே! எந்த மனிதன் என்னை எங்கிருந்து துரத்தியடித்தானோ, அவனை நீர் அங்கிருந்து துரத்தியடிக்க வேண்டுகிறேன். அந்த வலிய மிருகத்திடமிருந்து இந்த எளிய ஜீவனைக் காப்பீராக' என்று அது மனசுக்குள் ரகசியமாக மீண்டும் மீண்டும் ஜெபித்துக்கொண்டிருந்தது. அதன் சிறகுகள் பயபக்தியோடு குவிவது வெளிப்படையாகத் தெரிந்து, அவனுக்குள் வெறி பற்றிக்கொண்டது. கோபத்தில் எரித்து விடுவது போல பூச்சியை உக்கிரமாகப் பார்த்தான். அது பிராத்தனையை நிறுத்தவே இல்லை. கடைசியில் அவன் கொலை வெறியோடு பூச்சியை நோக்கிப் பாய்ந்தான். அது தப்பித்தெழுந்து அங்குமிங்கும் பறந்தது. விடுவதாக இல்லை அவன். பூச்சியைத் துரத்திக்கொண்டு ஓடினான்.

கடலைப் பற்றி…!

இருள் வெடித்து அடிவானில் வெளிச்சம் பட்டை பட்டையாக உரிய ஆரம்பித்த போது கடலின் குணம் முற்றிலும் மாறிவிட்டது. அது விரோதியைப் கண்டதுபோல் முகத்தைத் திருப்பிக்கொண்டது. நீர்ப்பரப்பு மீது பொன்பட்டு தகதகத்தது. இரவெல்லாம் கூடிக் குடித்துவிட்டு விடிந்ததும் யார் நீ என்று விசாரிக்கிற தடுமாற்றமான குடிகாரனின் நடவடிக்கைக்கும் அதற்கும் பேதமொன்றும் பெரிதாக இல்லை. கண்ணுக்கெட்டும் தொலைவில் கட்டிடங்களோ மனிதர்களோ தென்பபடவில்லை. கடலைத் தவிர மற்றதெல்லாம் பொட்டல் வெளியாகப் பட்டிருந்தது. கடலின் திடீர் செருக்குக்கு இதுவும் ஒரு காரணமாக அமைகிறதோ என்னவோ!

மனநலம் பாதிக்கப் பட்ட பாண்டி மண்ணுக்குள் புதைந்து போவது போல கற்பனை செய்கிறான்.

முதலில் சுவாசிக்க காற்றில்லாமல் திணறல் ஏற்பட்டது. பிறகு சிறுகச் சிறுக மண்ணை சுவாசிக்கப் பழகிக் கொண்டான். மண்துகள்கள் நுரையீரலில் நிரம்பி நாசி வழியே வெளியேறின. மேகங்களை விளக்கிக்கொண்டு சூரியன் நம்ப முடியாத இக்காட்சியை எட்டிப்பார்த்தது. முற்றிலும் புதைய ஒரே ஒரு கணம் மீதமிருந்தபோது அவன் உள்ளங்கால்களில் மஞ்சள் வெயில் கடைசி முத்தத்தைப் பதித்தது. அவனையே வியப்போடு பார்த்துக்கொண்டு போனது சூரியன். அஸ்தமான விளிம்புக் கோட்டில் அவசரத்தில் முட்டி தலை பிளந்து தொடுவானில் சூரியனின் ரத்தம் பரவிப் பெருகி வந்தது.

சிறுவயதில் புகைப்படம் எடுக்க செல்லும் பாண்டியின் மனவோட்டம்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் எல்லாம் அந்த ஸ்டுடியோவில் ஃபோட்டோ எடுத்திருந்தார்கள். நிறைய அக்காக்களின் அழகழகான படங்களும் இருந்தன. இவர்களும் சினிமாவில் நடிப்பார்களாயிருக்கும். பெயர் தெரியவில்லை. எடுத்த ஃபோட்டோவை எதற்காக வந்து வாங்கிக் கொண்டு போகவில்லை என்று யோசித்தான். காசு தட்டுப்பாடோ என்னவோ.

ஏசு சாமி ஃபோட்டோ எடுத்தபோது அவர் நெஞ்சுக்குள் பந்தாக திரண்டு எறிந்து கொண்டிருந்த பரிசுத்த ஆவி நெருப்பாக ஃபோட்டோவில் வந்துவிட்டது. அதுபோல பாண்டி வயிற்றுக்குள் குழைந்திருந்த பூரி கிழங்கும் வடையும் ஃபோட்டோவில் வந்து விடுமோ என்று அஞ்சினான். அவன் அஞ்சியபடி நடக்கவில்லை. அது ஒருவகையில் ஆறுதலாக இருந்தது.

குட்டி குட்டியா ரசிச்ச பல இடங்களில் சில.

காப்பியும் அம்மாவும் பாண்டிக்காகக் காத்திருந்தார்கள்.

விஷயம் வெளித்தெறிந்ததும் மக்களில் ஊமைகளைத் தவிர மற்றெல்லோரும் வாய் நோக சபித்தார்கள்.

வேப்பிலைச் சாந்தில் சிறு நெல்லியளவு உருட்டி கையில் எடுத்த பாட்டி ‘ஆ...’ காட்டச் சொன்னாள். அவள் வாயிலும் ‘ஆ’ இருந்தது.

கண்ணீர் துளிகளும் அவனை விட்டு விலகி ஓடுவதில் அவசரம் காட்டியதும் அழுவதை சட்டென்று நிறுத்தி விட்டான்.

சின்னப் பொன்னான அவளும் குட்டி சுடிதார் போட்டிருக்கிறாள். அது சுமாராகத் தான் இருந்தது. ஏன்னா, அவளுக்கு நக்கல் ஜாஸ்தி.

கபடி, கள்ளன் போலீஸ், ஐஸ் ஃபால் ரெடி, பிள்ளையார் பந்து, கிளியான் தட்டு, பாண்டி, தட்டாமாலை எல்லாம் கிரிக்கெட் வந்ததும் பெண்கள் விளையாட்டாகிவிட்டது.

ரேடியோ பாடினால் எஸ்.பி.பி, ஜானகி, ஏசுதாஸ் என்று யாரையும் விடாது. குறைத்து விரட்டிவிடும்.

யாராவது பாசத்தோடு ‘ஜிம்மி ஜிம்மி’ என்றழைத்தால் ‘ஆமா… அம்மியும்… ஆட்டு உரலும்…’’ என்று பாட்டி முணுமுணுக்கத் தவரமாட்டாள்.

அவன் சோகமடைந்ததும்  ஜிம்மியும் சோகமாகிவிட்டது. அதன் கண்கள் ‘என்ன என்ன’வென்றன. கட்டளையிட்டால் ஸ்கூலுக்குப் போய் ஜிம்மியே பரிட்சை எழுதி அவனை பாசாக்கி விடுவது போல் பாசத்துடன் சுற்றிவந்தது.

நேரடி சந்திப்புகளில் அவள் வாய் தான் பேசியது, எழுத்தில் அவள் இதயம் ஒலித்தது.

கலைந்து பறக்கும் கூந்தளுக்கு ஒரு க்ளிப் வாங்கி மாட்டி காற்றை ஏமாற்றினாள்.

ரத்தபந்தகளுக்கு ஒரு அர்த்தமும் இல்லை. அன்பு தன்னியல்பா வரணும்.

சற்றேறக்குறைய அது ஒரு காதல் கடிதத்தின் குறை பிரசவம் போலிருந்தது. சிசுக் கொலை போல அதை கிழித்துப் போட்டுவிட்டு தெளிவடைய நாட்கள் பிடித்தன.

இதில் குறிப்பிட்டிருந்த வரிகள் அனைத்தும் மொத்த நாவலில் ஒரு 30% தான். பிடித்த வரிகளை அடிக்கோடிடுவது என் வழக்கம். இந்த நாவலில் அடிக்கோடிடாத வரிகளைத் தான் ஆங்காங்கே பார்க்க முடிகிறது. கவித்துவமான நடை! உணர்ச்சிகளைத் திணிக்காமல் கதையின் போக்கிலேயே நம்மால் எளிதாக உணர முடியும். ஆனால் புதிதாக வாசிப்பவர்களுக்கு இந்த நாவல் உகந்ததா என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. என்னை மிகவும் கவர்ந்தது மனநலம் பாதிக்கப்பட்டவனின் உலகத்தைக் காட்டியிருப்பது. அது கற்பனையின் உச்சம்!

தீக்குள் 
விரலை வைத்த 
காதல் இன்பம் 
இப்புதினம்

கன்னி
ஜெ.பிரான்சிஸ் கிருபா
தமிழினி பதிப்பகம்
விலை ரூ 250/-

-த.ராஜன்

தாண்டவராயன் கதை - பா.வெங்கடேசன்

தனக்கென தனி பாணியினாலான கதைகளின், கதை சொல்லலின் மூலமாக தமிழ் இலக்கியத்தில் முக்கியமான பங்காற்றிக்கொண்டிருக்கும் பா.வெங்கடேசனை இலக்கியப்பரிட்சயம் நன்குள்ள பலரும் அறிந்திராத அவலம் கவலைக்குரியது. கடந்த ஆண்டு காலச்சுவடில் இலவசமாக 'ராஜன் மகள்' தொகுப்பைத் தராமலிருந்திருந்தால் நானும் இவரை அறிந்திருப்பதில் சந்தேகம் தான். 'ராஜன் மகள்' சிறுகதைக்காக வாசகசாலை நடத்திய அமர்வினால் மட்டுமே பா.வெங்கடேசனை வாசிக்க நேர்ந்தது. இவர் தன்னுடைய கதைகளில் இன்னொருவரின் கனவுகளுக்குள் செல்வது, தன்னுடைய கனவில் வேறொருவரைத் தேடுவது, இரு வேறு காலங்களில் வாழ்பவர்கள் ஓரிடத்திற்கு வருவது, பல வருடங்களாய் ஒரே வயதில் இருப்பது,தனது காதலி இறந்து போனது தெரியாமலே பல நூறு வருடங்களாக தனது காதலிக்கு கடிதம் எழுதி அனுப்புவது என அடுக்கடுக்காய் பிரமிப்புகளைத் தந்துகொண்டே கதை சொல்கிறார். கதை சொல்லல் மீது அவருக்கிருக்கும் காதலை அவரது கதைகளில் உணரமுடியும். நமது மூதாதையர்களின் கதை சொல்லலில் ஒளிந்திருக்கும் மாய எதார்த்தமே இவரது கதை சொல்லலிலும் அடிநாதம்.

தாண்டவராயன் கதை. நாவலின் பின் அட்டையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள் - தன் மனைவியின் கண்நோய்க்கான மருந்தைத் தேடி அதற்காகத்தான் செல்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே கதைகளின் நிலத்திற்குப் பயணமாகிறான் ட்ரிஸ்ட்ராம். எழுதப்பட்ட வரிகளின் நடுவிலிருந்து மூதாதையர்களின் ஆவிகளை புலப்படுத்தத் தெரிந்த டப்ளின் நகர நூலகர், கூடுவிட்டு கூடு பாயும் வித்தை கற்ற சுல்தானிய ஒற்றன், இறந்தவர்களின் உடலிலிருந்து உருவங்களை மாயமாய் மறையச் செய்யும் களிம்பு தயாரிக்கும் இருநூறு வயது பூசாரி, இவர்களோடு அன்புசெய்வதைத் தவிர வேறெந்த வித்தைகளையும் கற்று வைத்திராத ஒரு சேரிப் பெண் ஆகியோர் அவனுக்கு உதவுகிறார்கள்.

லிட்டில்போர்டில் வாழும் ஹென்றி குடும்பத்தவரை சில நிமிடங்களில் ஓவியம் (அதைப் புகைப்படம் என்று அறியாத காலம்) வரைகிறான் ஒரு மாயச் சைத்ரீகன். தனது மூன்றாம் மகளின் உடை எதேர்ச்சையாக விலகியதை தூரிகையால் மறைக்காமல் அப்படியே வரைந்ததைக் கண்டும் அதை மாற்றி வரைந்து தர மறுத்ததாலும் அந்த மாயச் சைத்ரீகன் கொல்லப்படுகிறான். லிட்டில்போர்டில் சாபக்காடு ஒன்று உள்ளது. அது ஆதாம் ஏவாள் தின்ற பழத்திலிருந்து விழுந்த விதையில் முளைத்த காடு. இந்தச் சாபக்காட்டினுள் நுழைந்தவர்கள் மறுபடி வீடு திரும்ப முடியாது. மாயச் சைத்ரீகனின் உடலை சாபக்காட்டின் எல்லையில் புதைக்கிறார்கள். அந்த நிகழ்வின் பின்பு கேத்தரின் ப்ரிட்ஜெட் (மூத்த மற்றும் இரண்டாம் மகள்) பிறந்த வீடு திரும்பவேயில்லை. ஹென்றியோ வெள்ளப்பெருக்கில் உண்டான கொசுக்கடியால் இறந்து போகிறான். எடித் (மூன்றாம் மகள்) தோடியாஸின் காதலை எடித்தின் புகைப்படம் காரணமாக மறுக்கின்றனர் தோடியாஸின் பெற்றோர். ஆகையால் இருவரும் சாபக்காட்டினுள் நுழைந்துவிடுகிறார்கள். இந்த பாவத்தைப் போக்க தோடியாஸின் தம்பி ஆம்ப்ரோஸை ஹெலனுக்கு (நான்காம் மகள்) மணமுடித்துத் தருகின்றனர். ஹெலனின் கணவன் இரத்த சோகையிலும் அதே காரணத்தால் அவள் குழந்தை பிறந்த உடனும் இறந்து போகின்றது. இப்படியிருக்க எலினாரை (கடைக்குட்டி மகள்) முடிந்த வரை படிக்க வைக்க முயற்சி செய்கின்றனர். தன் குடும்பத்தின் தரித்திரத்திற்கு காரணமான அந்த ஓவியத்தை (புகைப்படம்) இரண்டாம் முறை காண நேர்கையில் எலினார், ட்ரிஸ்ட்ராமை காதலனாகவும் பின் கணவனாகவும் ஏற்க நேர்கிறது.

எலினார், ட்ரிஸ்ட்ராம் சாபக்காட்டினுள் சல்லாபிக்க நேர்கிறது. அதன் பின்பு காரணமறியாமல் அவள் கண்களில் நோய் வருகிறது. இதற்கு காரணம் தான் தான் என சுயஇரக்கத்தின் காரணமாக பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி எலினாரை மணமுடிக்கிறான் ட்ரிஸ்ட்ராம். பதினாறு ஆண்டுகள் ஆயிற்று. அவளது கண்கள் குணமடையவும் குழந்தைப்பேறு பெறவும் மருந்து தேடி அழைகின்றனர். எந்த பயனும் இல்லை. பின்பு பணி நிமித்தமாக அரசால் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறான் ட்ரிஸ்ட்ராம்.

இந்தியாவில் சத்யபாமா, கெங்கம்மா, சொக்க கெளட, முதலியார், ஷெஸ்லர், பூசாரி என பல்வேறு மனிதர்களின் சந்திப்பு நேர்கிறது. கிராமத்தில் வாய்வழியாக உலவி வரும் தாண்டவராயனின் கதையைக் கேட்க நேரிடுகிறது.  தாண்டவராயன் கதைக்கும் ட்ரிஸ்ட்ராம் மருந்து தேடி அழைவதற்கும் துயிலாரின் வரலாற்றிக்கும் ஸ்வப்னஹல்லி அகதிகளுக்கும் என்ன சம்மந்தம் என முடிச்சி அவிழ்வது தான் இறுதி பாகம்.

இதற்கிடையில் உள்ளே நுழைந்தால் பழைய வாழ்விற்கு திரும்ப முடியாத இருட்டுச் சத்திரத்தின் கதை, வனமோகினி, ட்ரிஸ்ட்ராமின் சிந்தனைக்குள் கெங்கம்மா நுழைவது, தன்னை எலினாராக ட்ரிஸ்ட்ராம் உணர்வது, பகலில் மரமாயும் இரவில் அரக்கியாயும் உருமாறும் பூதகையின் கதை, தங்கப் புதையலைத் தேடி தோற்ற கதை, கெங்கம்மா கூறும் செல்லியின் கதை, இந்தியாவில் கேட்க நேரும் நீலவேணியின் சர்க்கம் ட்ரிஸ்ட்ராமின் கற்பனையாக இருப்பது, காற்றுப்புலி, கூடு விட்டு கூடு பாய்தல், மருந்து வெளி உலகில் இல்லை கதைகளுக்குள் இருப்பது என ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு பரிணாமத்தில் பயணமாகின்றது. மேலும் வரலாறும் நிஜமும் கற்பனையும் கனவும் கதையோடு பின்னிப்பிணைந்து இருப்பதில் இந்நாவல் தனித்துவம் பெறுகின்றது.

முதன் முதலில் ஜெ.பிரான்சிஸ் கிருபா, சு.வேணுகோபால், பெருமாள் முருகன், யுவன் சந்திரசேகர், கண்மணி குணசேகரன், ரமேஷ் பிரேதன் ஆகியோரை வாசிக்கும் பொழுது அவர்களின் படைப்புகளைத் தாண்டி அவர்கள் மேல் தனி மரியாதை உண்டானதற்கு முக்கியமான காரணம், இன்றில்லையென்றாலும் என்றேனும் ஒரு நாள் தங்களின் படைப்புகள் வாசகனைச் சென்று சேரும் என்ற நம்பிக்கைத் தவிர வேறெந்த உந்துதலும் இல்லாமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பது. இவர்களைப் போன்றே பா.வெங்கடேசனின் எந்த படைப்பிற்கும் பெருமளவிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. அவரோடு உரையாடுகையில் 'தாண்டவராயன் கதை' பன்னிரெண்டு வருட உழைப்பென்றார்.

ஒரிஜினல் நியூஸ் ரீல் | முன்றில் பதிப்பகம் | விலை ரூ.25/-
ராஜன் மகள் | காலச்சுவடு பதிப்பகம் | விலை ரூ.110/-
தாண்டவராயன் கதை | ஆழி பதிப்பகம் | விலை ரூ.575/-

இது தவிர இவரின் மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. இவரின் அடுத்த நாவலான 'பாகீரதியின் மதியம்' இன்னும் சில மாதங்களில் காலச்சுவடு வெளியீடாக வரவிருக்கின்றது.

- த.ராஜன்