தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Friday, September 02, 2016

போர்ஹெசின் கதாபாத்திரம் தேடிய ஒற்றை வார்த்தை கவிதை: "மௌனி" - எம்.டி.முத்துக்குமாரசாமி

க.நா.சு கவிதை - விலை
payon twit






எம்.டி.முத்துக்குமாரசாமி


Poetry/prose/etc.,. © M.D.Muthukumaraswamy

Friday, September 2, 2016

போர்ஹெசின் கதாபாத்திரம் தேடிய ஒற்றை வார்த்தை கவிதை: "மௌனி"
http://mdmuthukumaraswamy.blogspot.in/2016/09/blog-post.html






மௌனி கதைகளைப் பற்றி நான் ஆறு கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அதில் ஒரே ஒரு “மௌனியின் நடை” என்ற சின்னஞ்சிறு கட்டுரை காவ்யா வெளியிட்ட ‘மௌனி இலக்கிய தடம்’ என்ற நூலில் இடம் பெற்றுள்ளது. இந்தக் கட்டுரையின் துர்பாக்கியம் என்னவென்றால் அதை ஜெயமோகன் படித்துவிட்டார். எனக்குத் தெரிந்தே அந்தக்கட்டுரையை ஏழு முறை அவர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டிருக்கிறார். ஒவ்வொரு முறையும் அக்கட்டுரையை வித விதமாக வாசிக்கிறார். அவர் தளத்தில் இரண்டு பகுதிகளாக வெளிவந்த கட்டுரையில் ஒரு இடத்தில் நான் மௌனியின் நடை மொண்ணையானது என்று சொன்னேன் என்கிறார். எங்கே ஐயா அப்படி சொன்னேன் என்று நினைத்துக்கொண்டே மேலும் வாசித்தால் இன்னொரு இடத்தில் நான் எழுதியது முக்கியமான கட்டுரை என்கிறார். வேறொரு இடத்தில் என் பெயர் குறிப்பிடாமல் என் கட்டுரைப் பகுதி ஒன்றை விரித்து எழுதியிருக்கிறார். என்ன செய்ய? மௌனியாக இருந்துவிடலாம் பாரதி விவாதம் போல மௌனி விவாதம் ஒன்றை இப்போது தொடங்க வேண்டாம் என்பதுதான் என் உடனடியான எண்ணம். ஆனால் சுமார் பத்தாயிரம் வார்த்தைகளில் நீட்டி முழக்கி ஜெயமோகன் என்ன சொல்கிறார் என்றால் மௌனி புதுமைப்பித்தன், சி.சு.செல்லப்பா, வெங்கட் சாமிநாதன், கநாசு முதல் நான் உள்ளிட்ட அத்தனை தமிழ் விமர்சகர்களும் மௌனிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அதிகபட்சம், அவ்வளவு தேவையில்லை என்பது அவர் வாதம். இது முற்றிலும் தவறானது. மௌனியின் நடையை ஆராய்வதன் மூலம் நான் மௌனியின் மெய்யியல் என்ன என்பதை சுட்டிக்காட்டினேன். மௌனியின் மெய்யியல் என்னுடைய தத்துவார்த்த சார்புகளுக்கு எதிரானது. அதை நான் இப்போது விளக்கப் போவதில்லை. ஆனால் மௌனி கதைகளின் முக்கியத்துவம் இன்னும் அதிகரித்திருக்கிறது என்றுதான் சொல்வேன். மௌனியை உருப்போட்டு நாம் படிக்க வேண்டும். அழகியல் காரணங்களுக்காக.


போர்ஹெசின் கதை ஒன்றில் ஒற்றை வார்த்தை கவிதையைத் தேடி செல்பவனைப் பற்றிய கதை இருக்கிறது. என்னைப் பாடாய் படுத்திய கதை அது. ஒற்றை வார்த்தை கவிதை என்னவாக இருக்கும் என்று போர்ஹெசின் கதாபாத்திரமாகவே மாறி, விடாமல் யோசித்து பார்த்திருக்கிறேன். தவம் தவமாய் அந்த ஒரு வார்த்தைக்காக காத்திருக்கலாமல்லவா என்று நினைத்திருக்கிறேன். என்றோ ஒரு நாள் ஒரு மாயக்கனவில் மின்னலாகி வரும் ஒற்றை விரல் என் நெற்றிப்பொட்டில் தீண்ட உயிரின் அலையாய் அந்த வார்த்தை மேலெழும்பி வரும் என்று நான் இன்றும் நம்புகிறேன். அந்த வார்த்தை மௌனியின் கதைகளுக்குள்ளாகவே இருக்கிறது. “எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?”, “சாவில் பிறந்த சிருஷ்டி”, “அழியாச்சுடர்”, “உலகம் அலுப்பு மயம், களைப்பு மயம்”, “எங்கிருந்தோ வந்தான்’, “கொஞ்ச தூரம்” “ ஆதாரம் தெரிந்தும் தவறை (பிரமை) தவிர்ப்பது எப்படி…தவறென உலகைக் காண்பதில்தான் போலும்”, “இருள், மறைவு, ஒளி, இசைவு முறை நியதினின்றும் நழுவியது போலும்” என நம்மை நிலைகுலையச் செய்யும் எத்தனை பதச்சேர்க்கைகள், எத்தனை வாக்கியங்களை மௌனி எழுதியிருக்கிறார்! அவருடைய கதைப்பிரதிகளில் ஒற்றை வார்த்தை கவிதையைத் தேடாமல் வேறெங்கு போய் தேடுவது?


மௌனியின் கதை சொல்லலும் முக்கியமானது. “நினைவுச்சுவடு” கதையில் வரும் ஒரு பத்தியை கவனியுங்கள் “அவள் ஒரு விலை மாது. ஒரு காலத்தில் சேகருடன் உறவு கொண்டாடியவள். எத்தனையோ பேர்ககளின் அடிச்சுவட்டை தாங்கிய மணல் பரப்புத்தான் அவள் உள்ளம். முன் நடந்தவன் சுவட்டை அழித்து நடப்பவரும், நடக்கும்போதே சின்னத்தைக் களைந்து நடப்பவரும் உண்டு. யார், எப்படி நடந்தால் என்ன், மணல் பரப்பிற்கு நடப்பவர் யாரென்று உணர்வு உண்டா? மயங்கிய எண்ணங்களில்தானே இன்பக் கனவுகள் காண்பது?” வேறு யார் தமிழில் எந்தவித முன் தீர்ப்புகளும் இல்லாமல் மேற்சொன்னவாறு வாசக மனதையும் பார்வையையும் விசாலப்படுத்தும் விதத்தில் கதை சொல்லியிருக்கிறார்கள்? அதுவும் இவ்வளவு குறைவான வரிகளில்?


போர்ஹெசோடு உணர்வுபூர்மாக என்னை இணைத்த இன்னொரு கண்ணி மௌனி. மௌனியின் கதைகளின் hallucinatory character என்னை வசீகரித்ததுபோல வேறெவருடைய கதைகளும் என்னை வசீகரித்திருக்கவில்லை. தப்பிவிட வேண்டும் தப்பிவிட வேண்டும் என்று மனதிற்குள் அரற்றிக்கொண்டே மௌனியை வாசிப்பவனாக நான் இருந்த போதிலும் மௌனியின் பிடியிலிருந்து விடுபட்டவனாக நான் என்றுமே இருந்ததில்லை. மௌனியின் ‘மனக்கோட்டை’ சிறுகதையில் உள்கதையாக வரும் குட்டிக் கதை அப்படியே போர்ஹெசின் கதை போலவே இருக்கும். படித்துப்பாருங்கள்:

" சிறிது இளைப்பாறி, பிறகு நடக்கலாம், என ஒரு மரத்தடியில் உட்கார்ந்தான். எதிரே உற்று நோக்கிக்கொண்டிருந்தான். கோட்டை கொத்தளங்கள், எட்டித் தெரியும் குன்றுகள் எல்லாம் எட்டி நகர்ந்து மறையத் துடித்து, கானல் சலனத்தில் தெரிந்தன. இந்தக் கோட்டையை இது வரையிலும் பார்க்கதவனானாலும், அதைப்பற்றி அனேக விஷயங்களைக் கேட்டும், படித்தும் தெரிந்து கொண்டிருந்தான். மறைந்த கோவில் வெங்கலத் தேரையும், கோட்டைப் பாதாளச் சுரங்க வழிகளையும், பராபரிச் செய்திகளென, இவன் கேட்டிருக்கிறான். திரேதாயுகத்தில், அதன் நிர்மாணம், ஸ்தல மகிமைப் புராணம், உண்மைக் கூற்றென சரித்திரம், கற்பனைக்கதிகள், முதலிய என்னவெல்லாமோ அதைப் பற்றி புத்தக ரூபமாகப் படித்து தெரிந்துகொண்டவன். இப்போது தனக்குத் தெரிந்ததெல்லாவற்றையும் நினைக்கும்போது, அபத்தமென, சிரிப்பு கூட தோன்றியது. பக்தியில் கோவிலுக்கு வெங்கலத் தேரை வார்த்துவிட்டு, எதிரிகளை முறியடிக்க, விநோதமான குறுக்குப் பாதைகளை, வெகுயுக்தியுடன் கண்ட ஒரு மேதாவி வீரதீர சக்கரவர்த்தி, தொலைவிலே எதிர்க்கவரும் எதிரிகளை முறியடைக்க, அவர்களின் மத்தியில் திடீரெனப் புகவும், பிறகு தோற்றால் திடீரென மறைந்து கோட்டையை அடையவும், அநேக சுரங்கப்பாதைகளை அமைத்தான். ஓரு தரம் அவ்வகை செய்யத் தீர்மானித்து, அநேகரை, எட்டிய வெளியில் விரோதிகளெனக்கண்டு அவர்களிடை புகுந்து வீர தீர பராக்கிரம் செயல்கள் புரிந்து சுரங்க வழியே கோட்டையை அடையும் ஆவலில் தோற்று, மறைய நினைத்தபோது எல்லாம் மறந்துவிட்டது. அவர்கள் மத்தியிலே, அவர்களாகவே 'ஜே-ஜே' கோஷமிட்டு கோட்டையை அடைந்தான். அவர்களும் மறந்து, தாங்களென மதித்து, இவனையே அரசனாக்கி, கோட்டையை அடைந்து கைகட்டி கட்டளைக்குக் காத்திருந்தனர். அவர்களோடு வெங்கலத் தேரும், சுரங்கப்பாதைகளும் மறந்து மறைந்துவிட்டன. இந்திரன், பிரும்மஹத்தி தோஷ நிவாரணம், சுனையில் முழுகி சுவாமி தரிசனத்தில் கண்டது ….தற்போது ஒருவராலும் இந்திரனாக முடியாததினாலும், அதுவும் மறந்துவிட்டது. மறைய பாழடைந்து கொண்டிருக்கிறது. அந்த அரசன் அவன் தகப்பன் அவன் அவன் மகன் இவன் எனக் கொண்டு, கடல் கடந்து வாணிபம செய்தது இமயத்தை வென்றது, பேரவை கூட்டியது, முத்தமிழ் பரிமாறியது. அது இது எல்லாமும், மனப்பிராந்தியில் சரித்திரமாகி, கல்பனைகளுடன் உண்மையும் மறந்துவிட்டது. கோவில் கோட்டை குளம் எல்லாமுமே, இவன் பார்வைக்கு, ஒன்றெனத் தோனற, இப் பாழ் தோற்றம் இவெனெதிரில் மௌனமாக ஏங்கிப் புலம்பி நின்றன. கானல் சலனத்தில் எங்கேயோ எட்டிய வெளியையும் நாடிப் போகத் துடித்துக்கொண்டிருக்கிறது."⁠


எதிரி ராஜனோடு சேர்ந்து உங்களுக்கு எதிராக நீங்களே போரிட்டு, வெற்றி பெற்று மீண்டும் ராஜாவாக முடி சூடுகிற கதை அளிக்கிற மன விரிவும், வரலாறு, காலம், தன்னிலை, யதார்த்தம் இவைகளுக்கு இடையே உள்ள உறவினைப் பற்றி கிடைக்கின்ற பார்வையும், அதனால் ஏற்படுகிற மன எழுச்சியையும் சொல்லி மாளாது.



ப.சிங்காரத்திடம் மௌனியை விட அதிகமான மின்னல் வாக்கியங்கள் இருக்கின்றன என்கிறார் ஜெயமோகன். இருக்கட்டும். இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் அவை எப்படி மௌனியின் முக்கியத்துவத்தை குறைக்கமுடியும்?


மௌனியை காஃப்காவோடு ஒப்பிடவேண்டும் என்ற கண்டுபிடிப்பை நிகழ்த்திருக்கிறார் ஜெயமோகன். மனித வாழ்வின் அபத்தத்தைத் தீண்டிய எந்த எழுத்தாளனின் பிரதியிலும் காஃப்காவை நாம் பார்க்கலாம். இந்த ஒப்பீட்டில் பெரிதாக ஒன்றுமில்லை.


மரபிலக்கிய பயிற்சி இல்லாததால் மௌனியின் மொழி வலுவற்று இருக்கிறது என்பது ஜெயமோகனின் இன்னொரு கண்டுபிடிப்பு. மொழி அவ்வாறா இயங்குகிறது? அன்றொரு நாள் ஆட்டோக்காரர் ஒருவர் கண்டெய்னர் லாரிகளில் கோடி கோடியாய் பணக்கட்டுகள் பிடிபட்டதை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது தன் வயிற்றெரிச்சலை வெளிப்படுத்த, “கும்பித்தீ கூரையில பற்றி எரியுது சார்” என்றார். அந்த ஆட்டோக்காரர் கொங்கைத் தீ மதுரையை எரித்த சிலப்பதிகாரக் கதையை நிச்சயமாக வாசித்திருக்க வாய்ப்பில்லை. பின்னே எப்படி அவருடைய பேச்சில் சிலப்பதிகாரத்தின் மொழிப்படிமம் தடம் பதித்தது? ஏனெனில் மொழி இயங்கும் விதம் அப்படி. நீங்கள் தமிழ் மொழியை பாவிப்பவராக இருந்தாலே போதும் நீங்கள் தமிழ் மரபுக்குள் வந்து விடுகிறீர்கள். மௌனியின் “காதல் சாலை” என்ற கதையில் இந்த பத்தியை வாசியுங்கள்:”தனக்கு முன்னால் போடப்படிருந்த பெரிய வைக்கோல் போர், பழுப்பாக வைக்கோல் மாதிரியே தோன்றவில்லை. நன்கு காயாமல் பசுமை கலந்த பழுப்பிலேயே, உயர்ந்து, ஏதோ தோற்றம் கொண்டது. தூரத்தில் இருந்த வேலிக்கால் காட்டாமணக்கு செடியின் மீது ஒரு குருவி வாலை ஆட்டிக்கொண்டு கத்தியது. அது கத்திக்கொண்டே இறக்கும் போன்று தோன்றியது. ‘சீ சீ! அவள் போய்விட்டாள்’ என்றது அக்குருவி. “யார்? எங்கே?” என்றான் இவன். மிக வெட்கமுற்றுப் பறந்தோடிவிட்டது அக்குருவி. “குருவியே உனக்கு புத்தியில்லை. ஏன் கத்திக் கத்தி சாகிறாய்?” என்று வெற்று காட்டாமணக்கு செடியைப் பார்த்துச் சொன்னான். திடீரென்று எழுந்து நடக்கலானான். சிறிது சென்றவுடன் மற்றொரு முள் குத்த இவன் கீழே உட்கார்ந்தான். முள்ளைப் பிடுங்கி எறிந்தான். பக்கத்தில் ஒரு எருக்கஞ்செடி முளைத்திருந்தது. அதன் மலராத மொட்டுக்களை நசுக்கினான். அப்போது உண்டான சிறு சப்தத்தில் கொஞ்சம் ஆனந்தம் அடைந்தான்.“ இந்தப் பத்தியில் நீங்கள் ஒரு சங்க அகக்கவிதையை அடையாளம் காணாவிட்டால் உங்களுக்கு சங்க இலக்கியம் தெரியாது என்றுதான் அர்த்தம். மௌனிக்கு சங்க இலக்கியம் தெரியாதே என்று நீங்கள் கூக்குரலிடலாம். ஆனால் மேற்கண்ட பத்தியை எழுதியிருகிறாரே? ஒரு மொழியினை பயன்டுத்துவதாலேயே வந்து சேர்கின்ற கொடை அது.


ஜெயமோகனின் பத்தாயிரம் வார்த்தைகள் கட்டுரையைத் தாண்டியும் மௌனியின் கதைகள் தொடர்ந்து நம் அகங்களை நோக்கி கண் சிமிட்டி காந்த அலைகளை வீசிக்கொண்டேதான் இருக்கும். ஏனெனில் இலக்கிய விமர்சனம் என்பது இலக்கிய பிரதியை வாசித்து பொருள்கோள் முறைகளை விசாலப்படுத்துவதுதானே தவிர இலக்கிய பிரதிகளின் ஆசிரியனை ஒரு அரசவை கொலு மண்டபத்தில் தகுதிக்கேற்ப நாற்காலி கொடுத்து அமரவைப்பதும் அல்ல ஏற்கனவே உடகார்ந்திருக்கும் ஆசனத்தைப் பிடுங்கி குப்புறத்தள்ளிவிடுவதும் அல்ல. அந்த மாதிரியான விமர்சனங்களை ஜெயமோகன் எழுதும்போதெல்லாம் என் எதிர்ப்புக் குரலை பதிவு செய்வது அவசியமாகிறது. மேலும் அரசவை கொலு மண்டபம் என்பதே ஒரு கடந்தகால அநாகரீகம்.


மௌனியின் கதைகளை மீண்டும் மீண்டும் அணுக்கமாக வாசியுங்கள் நண்பர்களே.


சொல்ல மறந்துவிட்டேனே. போர்ஹெசின் கதாபாத்திரமாய் மௌனியின் கதைகளுக்குள்ளாக ஒற்றை வார்த்தை கவிதையை தேடினேன் என்றேனல்லவா, அது தவறான பாதை; உண்மையில் அந்த ஒற்றை வார்த்தை கவிதை: “மௌனி”.