தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Wednesday, October 24, 2018

தேனடையும் பாம்பும் - ந. முத்துசாமி

ezhuttu_1966_08-89

தேனடையும் பாம்பும் - ந. முத்துசாமி

ஊரில் இருந்து அழைப்பிதழ் வந்தது அலுவலகம் விட்டதும் ஊர் சுற்றி விட்டு இரவு, அறைக்குத் திரும்ப வெகு நேரம் ஆகிவிட்டது. வந்ததும் அழைப்பிதழைக் கொடுத்தான் அறை நண்பன். படித்துப்பார்த்துவிட்டு மேஜை மீது தூக்கிப் போட்டேன். சென்னை மின் ஆரவாரமெல்லாம் அடங்கி விளக்குகள் அணைந்த பிறகு படுக்கப் போக வெகு நேரமாகி விட்டது.

புஞ்சையில் எங்கள் வீட்டுக் கொல்லைப்புறம் கைக் கெட்டும் தூரத்தில் ஒரு தேனடை; மறைவாக, மிக மறைவாக - யாருக்கும் தெரியாது என்று தான் நினைத்துக்கொண்டிருந்தேன் - தொங்கிக் கொண்டிருந்தது. அந்தக் கிளை தாங்கும், காத்திருக்கும் எனக்குக் காலம் வரும் வரை அது காத்திருக்கும் என்றிருந்தேன். கொல்லை வாயிற் படியில் நின்று தென்னைமர இடுக்கின் வழியே பார்ப்பேன். தினமும் பார்ப்பேன். தேனீக்கள் அமர்ந்து கருப்பாய் இருக்கும். காற்றில் அலையும் மயிராய் வந்து போகும் தேனீக்கள். பெண்ணின் மறைவிடம் போல் வளர்ந்து தொங்கும் தேன் கூடு. தினமும் பார்ப்பேன், கதவைப் பிடித்துச் கொண்டு கிணற்றின் கைப் பிடிச்சுவருக்கும் தென்னை மரத்திற்கும் இடை வழியே அலுப்புத் தோன்றும் வரை பார்த்திருப்பேன். அலுப்புத் தோன்றுமா? தேனல்லவா? தேன். மனதில் தேன் ஊறும்

எத்தனை நாட்களாய்க் காத்துக் கொண்டிருந்தேன் . பருவம் வரக் காத்திருந்தேன். கருப்பு இருட்டு அமாவாசைக்காக அல்லவா காத்திருந்தேன், அமாவாசை வரையில் தேனீக்கள் தேனைச் சேகரிக்கின்றன. பிறகு குடித்து விடுகின்றன என்று சொல்வார்களே என்பதால் தேன் திரண்டு பக்குவமாய் ஆகட்டும் என்று காத்துக் கொண் டிருந்தேன்.

பாம்பொன்று அந்தத் தேனடையைக் காவல் புரிந்து கொண்டிருந்தது. பாம்புக்கும் தேனடைக்கும் என்ன சம்பந்தம்? அது ஏன் அந்தத் தேனடைக்குக் காவல் இருக்கிறது. எனக்கு ஒன்றுமே புரிய வில்லை ;

அது எனக்கு ஒரு நாள் இரவுதான் தெரிந்தது. மோழையாய் தலையும் வாலும் அற்று சாண் நீளம் ஒரு பாம்பு அந்தத் தேனடைக்காகக் காத்துக்கொண்டிருந்தது. கொல்லை வாயிற்படி மறைவில் இருந்து கதவை ஒருக்களித்து ஒருகையால் கதவைப் பிடித்துக்கொண்டு அந்த இடுக்கு வழியே எட்டிப் பார்த்தேன். பாம்பு காத்துக் கொண்டிருந்தது. தென்னை மரத்தை ஒட்டி வேப்பமரத்திற்கிடையில் அந்தப் பாம்பின் வால் தெரிந்தது. நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று அந்தப் பாம்பிற்கு எப்படித் தெரிந்தது? அதற்குத்தான் கண்ணில்லையே. கண்ணில்லா விட்டாலும் நான் பார்த்ததை அது உணர்ந்து கொண்டது போலும். வால் வேப்பிலையாகி விட்டது. பூசாரியைப்போல் வேப்பிலை அடித்தது.

பாம்பால் தேனடைக்குத் தீம்பில்லை, அது எனக்காகத்தான் தேனடையைக் காத்துக் கொண்டிருக்கிறது. பாம்பின் தலைப்பக்கம் தெரியவில்லை, ஆனால் அது தேனடைக்குள் இல்லை என்று தான் நினைக்கிறேன், பாம்பின் விஷம் தேனில் கலந்து விடாது என்ற நம்பிக்கை இருந்தது. சுயத்தேனாகக் கிடைக்கும் என்று நாக்கில் நீர் ஊறக் காத்துக் கொண்டிருந்தேன்.

அமாவாசைக்கு இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன? அந்தக் கருப்பிருட்டு, வானில் நட்சத்திரங்கள் பூத்து வர இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன? மேற்கு வானத்தில் பூசணிக்கீற்று நிலா தொங்கிக் கொண்டிருந்தது. அமாவாசை இரவுக்கு இன்னும் எத்தனை நாள்? வேப்பிலை அடிக்கிறது பாம்பு. சல சல வென்று சப்தம், வேப்பிலைக்காற்று மேலே வீசுகிறது. கதகதப்பாய்ச் சூடு மேலே ஏறுகிறது. மூச்சு இறைக்கிறது. மயிர்க்கால்கள் குத்திடுகின்றன கெட்டியாகக் கதவைப் பிடித்துக்கொண்டேன். புளியங் கொம்பைக் குரங்கு பிடித்துக் கொள்வதைப் போலக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். உடம்பின் பாரம் கையில் விழுந்தது. மொத்தப் பாரமும் கதவில் சாய்ந்தது. கதவின் காது பிய்த்துக் கொண்டு போகாமல் இருக்க வேண்டுமே என்ற கவலை வந்துவிட்டது. என் பாரத்தைத் தாங்க அந்த வாசலுக்குச் சக்தியில்லை, ஒன்று கதவைச் சாத்து அல்லது கதவில் சாயாதே என்னும் பிடிவாதம் அந்த நிலைப்படிக்கு. தேனடையைப் பார்ப்பதற்காகக் கட்டிவைத்த வாசலா? இவ்வாசலுக்கு முன்பே தோன்றியதா இந்தத் தேனடை என்று கேட்கிறது வாசல். நியாயம் தான் எத்தனை நாட்களாய் அமாவாசைக்காகக் காத்துத் தினமும் நான் சாயத் தாங்கும் இது ஆனால், இந்தப் பூமி என்னை , நிலைப்படியை, கதவை தேனடையைப் பாம்பைத் தாங்க வில்லையா என்று நான் நினைத்தது தவறுதான். ஆனால் அது இன்றைக்குத்தான் தெரிகிறது. தேன் ஊறத் தேனடை எனக்காகக் காத்திருக்கும்' என்று நினைத்தேன்.

பூசணிக் கீற்று சங்களவு ஆயிற்று, சங்கு பரங்கிக் காயாய் மாறி கீழ் கடலில் விழுந்து மிதக்க இன்னும் எத்தனை நாள்? பிறகு அதைக் கூறு போட்டு விற்க தர்ப்பைப் புல்லோடு வருவார் சாஸ்திரிகள். எள்ளும் தண்ணீரும் இறைத்து விட்டு தட்சிணைக்கு ஏய் என்பேன். அவள் வருவாள். 

''சாஸ்திரிகளே தாலிக்குத் தங்கம் வாங்க நாள் பாரும்.''

கடலில் விழுந்த பரங்கி என்ன வாச்சு, அழுகிப் போச்சு, வானம் இருண்டுதான் இருந்தது. அமாவாசை வரவேயில்லை.

நிலைப்படியைப் பிடித்துக்கொண்டே நின்றேன். தூங்கிவிட்டேன். எத்தனை நாட்கள் தூங்கினேனோ தெரியவில்லை. ஆனால் அமாவாசை வரவேயில்லை. வரட்டும், வரட்டும் ஒரு நாள் வராமலா போகும் என்று காத்திருந்தேன் ஓர் அடி எடுத்து வாயிற்படிக்கு அப்பால் வைத்திருக்கக் கூடாதா? அதுவாக வராவிட்டாலும் நானாகப் போகலாம் இல்லையா? இந்த யோசனை முன்பே தெரியாமல் போயிற்று கண்ணில் தாக்கம் சுழல நிலைப்படியைப் பிடித்துக் கொண்டே நின்று இருந்துவிட்டேன். உடம்பு நிலைப்படிக்கு இப்பாலும் தலை மட்டும் அப்பாலும் இருக்க எட்டிப் பார்த்துக் காத்திருந்துவிட்டேன். அமாவாசை இருட்டு வராமலா போகும்? தேனடை ஓடியா போகும்? எதிரில் இருக்கும் கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போவதில்லை.

தூங்கித்தான் விட்டேன். தூங்கிய நேரத்தில் அமாவாசை வந்து போய் இருக்குமோ என்று இப்பொழுது நினைத்துப்பார்க்கிறேன். என்ன பயன்? ஆனால் அமாவாசை எனக்குத் தெரிந்து வரவில்லை. ஆகவே தேனடையில் தேன் ஊறியிருக்கும். குழந்தை வரப் பால் ஊறித் திரண்டிருக்கும் முலையைப் போலத் திரண்டிருக்கும்.

இருளின் நிறத்தில் தேனடை கலந்து போய் விட்டது. பாம்பின் வால் மட்டும் வேப்பிலையாய் ஆடுகிறது. வேப்ப மரத்தின் அடிப்பகுதி சொர சொரப்பாய்த் தெரிகிறது. மேல் கிளைகளும் தழையும் தெரியவில்லை. தேனடையைக் காணவில்லை. அது இருளில் கலந்து போய்விட்டது. அது இருளில் கலந்ததால் இல்லை என்று ஆகுமா? இல்லை. விடியும்போது எனக்காகக் காத்திருக்கும்.

ஒரு குரங்கு வந்தது. அதன் உடம்பு தெரிய வில்லை. இருளை அது போர்த்திக் கொண்டிருந்தது. நீண்ட முகம் தெரிந்தது. என்னைப்பார்த்துச் சிரித்தது. பற்கள் மட்டும் நட்சத்திரங்கள் போல் பளிச்சென்று தெரிந்தன. அடி உதட்டைப் பிதுக்கி முழுப் பற்களையும் எனக்குக் காட்டிவிட்டு ஒரே தாவில் வேப்ப மரத்தின் அடியில் தாவி ஏறி விட்டது. அது மரத்தில் ஏறுவது தெரியவில்லை. அடிக்கடி, தாவுக்குத் தாவு எட்டி எட்டித் தென்னை மரத்தின் ஓரமாய் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது. ஆமாம், அது வேப்ப மரத்தில் ஏறிக் கொண்டிருக்கிறது. எனக்காகத்தான் அது மரத்தில் ஏறிக் கொண்டிருக்கிறது. எனக்குத் தேனடையைக் கொண்டு வருவதற்காகவே அது மரத்தில் ஏறிக்கொண்டிருக்கிறது. நிச்சயம் தேனடையைக் கொண்டு வரும் ராமனுக்கு சீதையைச் செய்தியாய்க் கொண்டுவந்த குரங்கு அது.

ஐயோ! அதோ பாம்பு தேனடைக்குக் காத்துக் கொண்டிருக்கிறதே! குரங்கைப் பிடுங்கி விடுமே . கள்ளையும் குடித்து விட்டுத் தேளையும் கொட்டிக் கொண்ட குரங்கின் கதையாய்ப் போய் விடுமே! அதெல்லாம் இல்லை. குரங்கிடமா அதன் சவடால். அதெல்லாம் நடக்காது. கிரைப் மிக்சர் குழந்தையைப் போல் பாம்பின் மென்னியைப் பிடித்து விடும் குரங்கு. அவிழ்ந்து தொங்கும் கூந்தலாய்ப் புரளும் பாம்பின் உடல். அதன் மூச்சுத் திணறும், வாயைப் பிளக்கும். நச்சுப்பல் வெளித் தெரியும். பல்லின் இடுக்கில் நஞ்சு பீச்சி வரும். சனியன் குரங்கு அதுவும் தேன் தான் என்று குடித்துவிட போகிறது. விஷம் தேனில் கலந்து விடப் போகிறது. பாம்பு நாக்கால் உதட்டைத் தடவிக் கொள்ளும். இரைட்டை நாக்குப் பாம்பு. பாம்பால் குரங்குக்கு ஆபத்தில்லை. அது கெட்டியாய்ப் பாம்பின் மென்னியைப் பிடித்து விடும். கீழே முறுக்கு அவிழும் கயிறாய்ச் சுழலும் பாம்பின் உடல். எனக்காகத்தான் அந்தப் பாம்பைப் பிடிக்கப் போய் இருக்கிறது குரங்கு. குரங்கின் வால் தான் பாம்பாய் இப்படி நீண்டிருக்கிறது போலும் பாம்பால் அதற்கு ஆபத்தில்லை. தன் வால் தான் என்பதால் விஷமில்லை என்று ஆகுமா? தேளின் வாலில் விஷமில்லையா? தன்னையே கடித்துக் கொண்டு செத்த பாம்பின் கதை எனக்குத் தெரியும். இருந்தாலும் பாம்பாய் நீண்ட தன் வாலின் மென்னியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு விடும் இக் குரங்கு.

குரங்கு மரத்திலிருந்து இறங்கி விட்டது. எனக்குத் தெரியாமல் ஓடப்பார்த்தது. இளித்து அழகு காட்டி விட்டு ஓடியது. அடி எடுத்து வைத்தேன். பூமியில் புதைந்திருந்த பாதத்தை இப் பொழுது இழுக்க வில்லையா? இதை முன்பே செய்திருக்கக் கூடாதா? குரங்கு குறுக்கிடும் முன்பே இதை செய்திருக்கக்கூடாதா? தேனடை என்ன வாயிற்று என்று பார்க்கத் தோன்றவில்லை. குரங்கு பாம்பை பிடித்துக்கொண்டுதான் ஓடுகிறது போலும். மனம் போன்று இருண்ட பாதை யில் அது ஓடிக்கொண்டிருக்கிறது. பின் தொடர்ந்தேன் . பாம்பு என்னவாயிற்று?

பாழடைந்த கூரை வீடு. கூரை பிய்ந்து காற்றோடு என்றோ கலந்து போய்விட்டது. கட்ட விழ்ந்த மூங்கில் கழிகள் சரிந்து மொட்டைச் சுவுருக்கு அப்பால் சாய்ந்து கிடந்தன. மழை பொழிந்து சுவர் கரைந்து மண் பூமியில் முட்டு முட்டாய்க் குவிந்து கிடந்தது. நீர் வழிந்த பாதை சுவர் முழுதும். குட்டிச் சுவர்கள் கழு மரங்கள் போல் இருட்டு வானத்தைப் பார்த்து நிமிர்ந்து நின்றன. எத்தனை யுகமாய் இது காற்றும் மழைக்கும் ஈடு கொடுத்ததோ? எங்கும் ஒரே இருட்டு. கூரை வீட்டுக்குள் இருட்டுத்திரண்டு ஒடுங்கி விட்டது. குரங்கு அந்த வீட்டுக்குள் போய்ப் புகுந்து கொண்டு விட்டது. அது குரங்கின் இருப்பிடம். குரங்கைப் பின் தொடர்ந்தேன்.

குரங்கைக் காணவில்லை, பாம்பைக் காண வில்லை. தேனடையைக் காணவில்லை. என்னவாயின?

குரங்கு நுழைந்த வீட்டில் குரங்கேயில்லை. கதவற்ற நிலைப்படியே. உள்ளே எட்டிப் பார்த்தேன் . குரங்கைக் காணவில்லை. கதவில்லாவிட்டாலும் பூட்டிவைத்த இருட்டு.

வெளியில் தலையை இழுத்துக் கொண்டேன், ஒரு காளை மாடு வந்தது. இந்த மாடு எங்கிருந்து வந்தது? எனக்குப் போட்டியாக வந்தது?

வந்த மாடு ஒரு மூங்கில் முளைக்கடியில் வந்து நின்றது. முளையில் தொங்கிய பழம் தும்பில் தானே காலில் பிணைத்துக் கொண்டது, எனக்காகத்தான் அந்தத் தும்பு தொங்கிக் கொண்டிருந்தது என்று நினைத்தேன். இனிமேல் நீ கிட்டே அண்ட முடியாது என்னும் தீவிரம் காளையின் விழியில். நீண்ட கொம்புகள், சீவிட்ட கொம்புகள். கிராமத்துக் காளை. பசும்புல்லை மேய்ந்து கொழுத்த காளை. அடித்தடித்து தலை விரிந்து பூமியில் இறங்கிய அந்த முளையில் அது தன்னைப் பிணைத்துக் கொண்டு விட்டது. எத்தனை அடி வாங்கி அது பூமியில் நிலைத்ததோ? இல்லையென் றால் அதை நான் பிடுங்கிக் கொண்டு வந்திருக்க மாட்டேனா? நான் முளையைச் சுற்றி, சுற்றித் தேய்ந்த பாதை, மண் புரண்ட இடம், இளி முத்திரம் சுவறிக் குழைந்த சேறு, முளையில் கட்டிய மாடு.

முளையைச் சுற்றி வந்து தும்பு நீளம் குறைந்து கீழே இழுக்கப் படுத்துக்கொண்டு விட்டது. அதன் விழிகளில் காதல் வேகம். மூச்சில் காமச் சூட்டின் கதகதப்பு வீசுகிறது. மாடு படுத் துக் கொண்டு விட்டது. மூளையில் உராய்ந்து நெறுக்கமாய்ப் படுத்துக் கொண்டுவிட்டது.

தேனடை எங்கே என்று இன்னமும் தேடினேன்.

அதோ மாடு சப்புக் கொட்டுகிறது. நாயைப் போல் அது காலில் இடுக்கிக் கொண்டு எதையோ நக்கிச் சப்புக் கொட்டுகிறது. சப்புக் கொட்டுகிறதா இல்லை அசை போடுகிறதா? மாட்டின் நாக்கில் என்னவோ மஞ்சளாய்த் தெரிந்தது.

தேனடை எங்கே? பாம்பு என்னவாயிற்று? எனக்கு ஒன்றுமே புரிய வில்லை.

தேனடையை நினைத்து அழலாமா என்று நினைத்தேன். அழுகை நெஞ்சை அடைத்தது. எங்கோ சிரிப்பொலி கேட்டது. என்னை நினைத்து எள்ளும் சிரிப்பொலி. எங்கே கேட்கிறது? கண்ணை இருட்டியது. பாம்பாய் நீண்டத் தன் வாலைச் சுருட்டி வைத்துக்கொண்டு சிரித்தது குரங்கு. எங்கே? என் தேனடை எங்கே என் தேனடை எங்கே' என்று விரல்களால் என் வாயைக் கிழித்துக்கொண்டு கத்தினேன். அடிவயிற்றை இழுத்துக் கொள்ளும்படியாய்க் கத்தினேன். சப்தம் வெளியில் வரவில்லை, எனக்குள்ளேயே ஒடுங்கி விட்டது படர்ந்து எரிந்து அணையும் விளக்காய் ஒடுங்கி விட்டது. ''தேனடைதான் முளை' 'முளைதான் தேனடை" என்ற கேலிச் சிரிப்பிற்குப் பிறகு கிராமத்து முளையில் பழம் தும்பில் மாடாய்ப் பிணைத்துக்கொள்ள இருந்த முட்டாளே! என்று நீண்டு ஒடுங்கியது எங்கிருந்தோ வந்த சப்தம்.

இருண்ட என் மனக்குள் திரும்பிப் பார்த்தேன். ஒன்றும் தெரியவில்லை. எழுந்ததும் முதல் வேலையாக புஞ்சைக்கு ஒரு வாழ்த்துத் தந்தி அனுப்பி வைத்தேன்.

****(விட்டு தான் எள்ளும் பைப்பு)

''உடன் பிறந்த தளை' - தி. சோ. வேணுகோபாலன்

அறிவின் சிறையாய் 
இதயத்தின் உள்ளுறையாய் 
இறுகப் பற்றிய 
சோம்பல் - 
ரப்பர் குழாய் வளையம் ! 
எழுத்துக் காற்று 
எண்ண மணம் சுமந்து 
உலகம் சுற்ற 
முடியாமல் 
வளையக் குழாயுள் 
விழியிருண்டு 
விம்முகிறது !

No comments:

Post a Comment