தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Wednesday, December 05, 2018

கடற்கரை ரயில் நிலையம் - எஸ். ராமகிருஷ்ணன்

https://archive.org/details/KadarkaraiRayilNilayam

கடைசிக் குருவியும் பறந்த பிறகு நாங்கள் கடற்கரைக்கு வந்து சேர்ந்தோம். இனி பறவைகள் வரப்போவதில்லை. தணிந்த கடலின் மீது ஈர்ப்பு கொள்ளாது மணலை வெறித்தபடியே இருந்தோம். விளையாடும் பிள்ளைகளின் கூட்டம் கலைந்து போன பின்பும் அலைச்சலுற்ற சுவடுகள் மிஞ்சித் தெரிகின்றன. சாலையைப் பார்த்துத் திரும்பி உட்கார்ந்து கொண்டோம். என் பின்புலத்தில் வரம்பற்ற கடல் அலையடித்துக் கொண்டிருந்தது. இயக்கம் ததும்பிய சாலையில் உருவங்கள் கடந்து கொண்டே யிருந்தன. எஞ்சிய சிலர் இப்போதுதான் கடற்கரைக்குள் வரத் தொடங்கியிருக்கிறார்கள். குதிரைகளும் திரும்பிவிட்ட பொழுதில் வீடு திரும்பும் பெண்களின் நடையில் லேசான மிதப்பும் காற்றின் கதியால் கொண்ட அலுப்பும் படர்கிறது. நடக்கிறார்கள். 

எங்களில் எவரும் பேசத் தொடங்கவில்லை . பேச்சுக்கு முந்திய மெளனம் மட்டுமே மெல்லச் சுருண்டு இதழிதழாகப் படிந்து கொண்டிருந்தது. சிறுமிகளும் பறவைகளும் வெளியேறிய கடற்கரை, தன் குணாம்சத்தையே மாற்றிவிடுவதை மூவரும் உணர்ந்து கொண்டோம். தொலைதூர சர்க்கிள் கடிகார முள் மெல்லிய கறுப்புக் கோடாக நகர்கிறது. நின்று கொண்டிருந்த வாகனங்கள் கலைந்து விட்டன. தவறி விடப்பட்ட பூ ஒன்று காற்றில் பறந்து எங்கள் முன் ஆடி ஆடித் ததும்பி மணலில் சரிந்தது. இது உருவாக்கிய வார்த்தையொன்று மூவர் மனத்திலும் சுரந்து வெளிப்படும் முன்பு அடங்கியது. ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். நான் மற்ற வற்றிலிருந்து கவனம் கொள்ளாது என்னிடமிருந்த புஸ்தகத்தைப் பிரித்துக் கொண் டேன். நாற்பத்தி மூன்றாம் பக்கத்தில் துறவிக்கு வரும் காதல் கடிதத்தைத் திரும்பவும் வாசிக்கத் தொடங்கினேன். கடல் பற்றிய நினைவு மெல்ல அழியத் தொடங்கி மூவரும் பின் புலமற்ற வெற்றிடப் பரப்பில் இருப்பதாகவே உணர்ந்தோம். வேணுவும் சிவசுவும் எழுந்து கொண்டு சிறிது தூரம் நடந்தே போனார்கள். அவர்கள் போன பின்பு நான் புஸ்தகத்தை மூடிவிட்டு சாலையைப் பார்த்தபடியிருந்தேன். வழக்கத்தை விட வேகம் குறைவாகச் சென்றன வாகனங்கள். நீண்டு, ஒளி சரியும் ரோட்டில் சிலிர்ப்பு பரவுகிறது. வாகனங்கள் வராத நீண்ட கணமொன்றில் நான் சாலையை விட்டுப் புறமிருந்த வில்லியம் சிலையை நோக்கியிருந்தேன். குதிரையின் கனத்த புஜங்கள் மட்டுமே தெரிகின்றன. அவர்கள் பேசிக்கொண்டு வரத் தொடங்கிவிட்டார்கள். தங்களைப் பற்றியேதான் பேச்சு. கடற் கரையில் மூவரும் நடக்கத் தொடங்கினோம். உடைந்த படகு களின் வெளியில் பேச்சு காற்றில் சட்டென மறைந்து விடுகிறது. சமயங்களில் அது நீளவும் செய்கிறது. ஊருக்குச் சென்றுவிட்ட மனைவியைப் பற்றிப் பேசிக்கொண்டு வந்த வேணு திடீரென பேச்சை நிறுத்திக்கொண்டான். அவரவர் மனைவி பற்றிய சிந்தனையில் சில நிமிடங்கள் பேசாமல் நடந்து கொண்டி ருந்தோம். பெரிய அலையொன்று தோன்றி உயர்ந்து சிதறியது. பாறைகள் இல்லாத கடற்கரையில் அலைச் சப்தம் அதிக மிருப்பதில்லை . 

என் மனைவியைப் பற்றி எதையோ நான் நினைத்துக் கொள்ளும்படியாயிற்று. அவளைக் கடற்கரைக்குக் கூட்டி வந்தால் கடல் அலைகளின் தெறிப்பைப் பற்றி எதையாவது சொல்வாள். சமயங்களில் அவளும் எதையும் பேசாது மணலில் கோலம் போட்டபடியே கால்களைக் குவிய வைத்து விரலில் மணலைப் பரப்பியபடியே இருப்பாள். கடற்கரையின் ஈரச் சிப்பிகளை வீட்டின் சமையல்கட்டு வரை சமயங்களில் கொண்டு வருவாள். வேணு சிகரெட் பற்ற வைத்துக்கொண்டான். அவன் மனைவியை ஊருக்கு அனுப்பி விட்டதைப் பற்றி நேற்றிரவே என்னுடன் வந்து பேசிவிட்டான். இரவில் இருவரும் மாடியில் தனித்திருந்தோம். அவன் இரண்டு பாட்டில்கள் ஐஸ் வாட்டர் பிரிட்ஜிலிருந்து எடுத்துக்கொண்டு வந்து மாடியில் உட்கார்ந்து கொண்டான். அவன் மனைவியின் பெயரை அடிக்கடி சொல் வதில் அவனுக்குப் புதிரைப் போல சின்ன வசீகரமிருந்தது . நாற்காலியில் சாய்ந்தபடி அவன் சுலபமாகச் சொல்லி முடித்துவிட்டான். என் மனைவியும் கேட்டுக்கொண்டிருந்தாள். 

நாங்கள் நெடுநேரம் மாடியில் பேசாது உட்கார்ந்திருந்தோம். அவன் தண்ணீர் பாட்டில்களைத் தீர்த்த பின்பு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான். என் மனைவி கீழ் இறங்கிப் போய் விட்டாள். நானும் புகைக்கத் தொடங்கினேன். அவனும் நானும் பேச வேண்டியதில்லை என அவன் அறிந்தே இருந்தான். அவள் திரும்பவும் மேலேறி வந்து படுக்கையினைப் போட்டாள். மூவரும் மாடியின் விஸ்தாரமான பரப்பில் தனித்தனியாகப் பாயைப் போட்டுப் படுத்தபடி வானத்தைப் பார்த்தபடி இருந்தோம். 

எங்கள் இருவரையும் பார்க்காது என் மனைவி வெளிச்சம் வருமிடம் பார்த்துப் படுத்து எதையோ படித்துக் கொண்டி ருந்தாள். யாரும் பேசாத நிமிடம் சட்டென உடைய, வேணு படுக்கையிலிருந்து எழுந்து கீழே நிறுத்தி வைத்திருந்த அவனுடைய ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு அவன் வீட்டுக்குப் போய்விட்டான். படுக்கை அப்படியே கிடந்தது. காலி தண்ணீர் பாட்டில்கள் இருந்தன. என் மனைவி வெகு சாவகாசமாக எழுந்து கீழே இறங்கிப் போய்த் தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்து வைத்துவிட்டுப் பாயை என் அருகில் போட்டபடியே என் தலையணைக்கு வந்து விட்டாள். தலையணை அடியிலிருந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டேன். சுழலும் புகையை இருவரும் பார்த்தபடி இருந்தோம். வேணு போய்விட்டான். 

மாடியின் விசாலம் இருவருக்கும் மட்டுமேயான சின்ன வெளி போலச் சுருங்கிவிட்டது. அவள் வேணு இருந்த இடத்தை ஒருமுறை பார்த்துக்கொண்டாள். மிக மெதுவாக அவள் முகத்தைப் பற்றி முத்தமிட்டேன். நான்கு முத்தங்கள். அவள் திடீரென மாடியின் விசாலத்தை அறிந்து கொண்டவள் போல வெறித்தாள். பெரும் வெட்ட வெளியொன்று அகன்று திறந்து கிடப்பதை உணர்ந்த வளாகக் கண்களைத் தாழ்த்திக்கொண்டு ஆகாசத்தைப் பார்க்காமலிருக்க முயன்றாள். உதட்டில் படிந்த சிறிய பல் அமுங்க என் வலக்கரத்தை எடுத்துக்கொண்டாள். காற்று மெல்ல பரவத் தொடங்கியது. இருவரும் எதுவும் பேசாது காற்றின் சிறு சப்தத்தைக் கேட்டபடியிருந்தோம். பின் இருவரும் வெவ்வேறு நட்சத்திரங்களைப் பார்க்கத் திரும்பிவிட்டோம். கடற்கரையை விட்டு வெளியேறி இருந்தோம். அவர்கள் பேசிக்கொண்டே வந்திருக்கக் கூடும். 


“எதை யோசித்துக் கொண்டு வருகிறாய்?”' வாகனங்கள் வராத மேற்கு சாலையினைக் கடந்து கீழ் இறங்கும் தெருவினுள் நடந்து கொண்டிருந்தோம். ''நேற்றிரவைப் பற்றி'' என்றேன். வேணு சிரித்துக் கொண்டான். நானும் வேணுவும் பேசிக் கொண்டு வரும்போது சிவசு தெரு வினை வேடிக்கை பார்த்தபடியே வந்தான். அவன் ரோட்டில் போகும் ஆட்களைப் பற்றியே கவனம் கொள்ளக் கூடியவன். எங்களை விட்டு முன்னால் நடந்து போய்க் கொண்டிருந்த நடுத்தர வயதுப் பெண் ஒருத்திக்குச் சமமாகக் கூடவே சிவசுவும் நடந்து கொண்டிருந்தான். கடற் கரைக்குப் போய்த் திரும்பும் ஜோடி போல அவர்கள் முன்னால் போய்க்கொண்டிருந்தார்கள். சிவசும் தன்னை அந்தப் பாத்திரத் தில் பொருத்திக்கொண்டான். அந்தப் பெண் அடிக்கடி அவனைப் பார்த்துக் கொண்டாள். எதிரே வரும் சைக்கிள்காரன் கூட அவர் களைப் பிரிக்காது விலகியே வருகிறான். தெருவின் திருப்பத்தில் அவள் பிரிந்து போகும்போது சிவசு அவளை விட்டுப் பிரிந்து கொண்டான். துக்கம் சிறு இலையாக உதிர்ந்து கிடந்தது. வேணு தன் மனைவியைப் பற்றித் திரும்பவும் பேசத் தொடங் கினான். அவளுக்கு இரவில் தூக்கம் வருவதில்லை . எதையாவது படித்துக் கொண்டிருக்கிறாள் என்றான். எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்த பலூன் வியாபாரியைப் பார்த்ததும் நாங்கள் பேச்சை நிறுத்திக் கொண்டோம். சிவசு எங்களுடன் சேர்ந்து கொண்டான். மதார் சாகிப் தெரு வழியாக நடக்கத் தொடங்கினோம். 

குறுகலான வீடுகளும், வெளியே உறங்கும் மனிதர்களும், வரிசையாக நிறுத்தப்பட்ட சைக்கிள்களும், இரவுக் கடைகளும், தெருவிளக்கு ஒளியும் தெருவினை விநோதமாக்கிக் கொண்டி ருந்தன. மாட்டிறைச்சியின் மணம் தெருவில் நிரம்பியிருந்தது. முக்காடிட்ட பெண்கள் கடக்கிறார்கள். வேணு, நான், சிவசு மூவரும் தனியாக நடக்கிறோம். எவரும் எவரையும் தெரியாத மூவர் போலப் பிரிந்து நடந்து கொண்டிருந்தோம். ரோட்டோரக் கடையின் பழைய மாத இதழ்களைக் குனிந்து வேணு புரட்டிக் கொண்டிருந்தான். கறுப்பு வெள்ளையில் நடிகை புகைப்படங்கள். சிவசு தெருவைக் கடந்து விட்டான். நான் அத்தர் கடையின் முன்பு நின்றுகொண்டேன். மரணத்தை நினைவு படுத்தும் சுகந்தம் அங்கே கசிந்து கொண்டிருந்தது. தனியாக இளம் பெண் ஒருத்தி பூமாலையை அடுக்கிக் கொண்டிருந்தாள். 

வேணு என்னுடன் சேர்ந்து கொண்டான். வாசல் படியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் பெண்கள் எங்களைப் பார்த்துக்கொண்டும் பேசியபடியுமிருந்தார்கள். 

நீண்ட மைதானம் போலிருந்த மன்னர் காலக் குதிரை லாயம் நுழைவாசல் பக்கம் வந்து விட்டோம். வெளியே பூட்டியிருந் தார்கள். சிவசு வேணுவின் அருகாமைக்கு வந்து விட்டான். மூவருமே பேசிக்கொண்டோம். மிகப் பொதுவான தெருவைப் பற்றிய பேச்சாகக் கூட அது அமைந்தது. அதை அப்பாவைப் பற்றியதாக சிவசு மாற்றிவிட்டான். அப்பாவைப் பற்றிப் பேசத் தொடங்கினோம். சிவசு அப்பாவைப் பற்றிப் பேசுவதைக் கடந்த சில வருடமாக இயல்பாகக் கொண்டிருக்கிறான். அப்பாவைப் பற்றிப் பேசுவதன் மூலம் மட்டுமே தன்னைப் பற்றிப் பேச முடியு மென சிவசு நினைக்கிறான். அதையும் பேசியபடியே நாங்கள் நடந்து காலனி முதல் வளைவுக்குள் வந்துவிட்டோம். ஒன்றிரண்டு சைக்கிள்காரர்கள் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். சிறிய பாலம் போன்ற மேடையின் வலப் பக்கத்தில் நாலைந்து ஸ்கூல் பையன்களின் தோற்றம் கொண்ட வர்கள் இருட்டில் உட்கார்ந்திருந்தார்கள். இடப் பக்கம் நாங்கள் உட்கார்ந்து கொண்டோம். அந்தப் பையன்கள் கால்களுக் கிடையிலிருந்த பீர் பாட்டில்களை உடைத்துக் குடிக்கத் தொடங்கியிருந்தார்கள். மெல்லிய போதையின் ஸ்பரிசம் முன்பே குரல் தாழ்ந்து ரகசியம் போலச் சிரித்துக் கொள்ளத் தொடங்கினார்கள். வேணு அவர்களையே பார்த்தபடி இருந்தான். பீர் பாட்டில்கள் மாறிக்கொண்டே இருந்தன. அந்தப் பையன்கள் மீது வேணுவுக்கு கோபமும் அர்த்தமற்ற வெறுப்பும் நிரம்பியது. அவன் திட்டியபடியே நடக்கத் தொடங்கிவிட்டான். நாங்களும் கிளம்பிய பின்பு அந்தப் பையன்கள் ரோட்டில் பீர் பாட்டில்களை உருட்டி விளையாடிக்கொண்டிருந்தனர். முதல் வளைவின் முனை சரிந்து காலனிகளின் உள்புறமாக மடிந்தது. எனக்குப் பசிக்கத் தொடங்கியது. இரும்புக் கிராதி யிட்ட வீடுகளைக் கடந்து நடந்து கொண்டிருந்தோம். வேணு தன் மனைவியை எதற்கோ திட்டியபடி தனியே நடந்தான். பதிமூணாவது தெரு முனையில் பெட்ரோமாக்ஸ் வைத்த கடை தெரிந்தது. வேணு சிகரெட் பாக்கெட்டை நசுக்கி எறிந்தான். கடையில் பச்சை வாழைப் பழங்கள் ஒளியில் வெறித்தன. மூவருமே இது வரை அறியாத புதிய பொருளைப் பார்ப்பது 

போல பல நிமிடங்கள் அந்தப் பழங்களைப் பார்த்தபடி இருந்தோம். அதன் வடிவம், நிறம் எல்லாமே அசாதாரண நிலையில் தோன்றின. சாப்பிட்டு முடித்த வாழைப் பழத் தோலை கவனமாகக் கூடையில் வாங்கிக்கொண்டான் கடைக்காரன். சிகரெட் பாக்கெட் வாங்கிக்கொண்டோம். பிளாஸ்டிக் கேனி லிருந்து தண்ணீரை அவன் சரித்து எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தான். வேணு கடையில் தொங்கிய மாலைப் பேப்பரைப் பிரித்துப் படித்தபடியே சிகரெட் பற்றவைத்தான். டென்னிஸ் விளையாட்டில் தோற்றுப்போன சீன அமெரிக்கனின் முகம் தெரிந்தது. துப்பாக்கியால் டீச்சரைச் சுட்டு வீழ்த்திய சிறுவனைப் பற்றிய செய்திப் படங்கள் பக்கத்தை நிறைத்தன. 

அக்காலனியின் கடைசித் தெருவுக்கும் வந்துவிட்டோம். இனிப் பிரிவது தனிச் சாலைதான். நகரம் எங்கள் பின்புறத்தில் சரிந்து கிடந்தது. வேணு தன் கற்பனையிலிருந்த துப்பாக்கியை இயக்கி உடன் வந்த சிவசுவைச் சுடத் தொடங்கினான். இருவருக்குமான விளையாட்டு தொடங்கியது. தப்பி ஓடும் உளவாளியைப் போல பாவனை கொண்டபடி சிவசு ஓடத் தொடங்கினான். பொய்த் துப்பாக்கியின் வேட்டை தொடர இருவரும் ஓடுவதும் சுடுவதுமாக ஆள் அற்ற தெருவில் போய்க்கொண்டிருந்தார்கள். நான் மட்டுமே திரும்பிப் பார்க்கத் தொடங்கினேன். 

நகரம் முற்றாக மாறிவிட்டது. எந்தப் புள்ளியில் என் வீடு இருக்கிறது என அடையாளம் கொள்ள முடியவில்லை. வரிசை வரிசையாகச் சுவர்கள் மட்டுமே தெரிகின்றன. நகரம் வீழ்ந்த பாதைகளின் தொகுப்பாக இருந்தது. மாபெரும் கடலின் சுவடேயில்லை. இப்போது நகரில் கடல் இல்லை. மணல் வெளி பரந்த கடற்கரையு மில்லை . குறுக்கிட்டு பாவிய கட்டட விளிம்புகள் மட்டுமே நகரமாகின்றன. நகரின் தென் மூலையில் வரும் பயணி எவனுக்கும் கடற்கரை நகரில் இல்லைதான். ரயில் ஒன்று வேகம் குறையாது நகரின் இடைவெளிப் பாதைகள் வழியாகப் போய்க்கொண்டிருந்தது. ஒரு நகரத்தை யாராலும் பார்க்க முடியாது என்பதாக உணர்ந்தேன். எண்ணற்ற கிளை வழிகளின் தொகுப்பின் மையமே நகரம் போலும். வீட்டிலிருந்த என் மனைவி, ஊரிலில்லாத வேணுவின் மனைவி எதுவும் இந்தக் கணத்தில் இல்லை . 

நகரைப் பார்த்தபடி பின் திரும்பியபடியே நடக்கத் தொடங் கினேன். என் புலத்தில் துப்பாக்கியால் சுட்டு விளையாடும் 


இரண்டு சிறுவர்கள் வரக் கூடும். என் அடுத்த அடியின் பின்புறத்தில் நகரம் விலகிக்கொள்கிறது. மிக மெதுவாகவே நடந்தேன். என்னைக் கடந்து போகின்றன பனை மரங்கள். பொருள்களை விட்டுப் பின் போய்க்கொண்டிருந்தேன். வேணுவும், சிவசுவும் ரோட்டில் படுத்துக் கிடந்தார்கள். இருவருமே சுடப்பட்டிருக்கக் கூடும். என்னைப் பார்த்தபடியே படுத்துக் கிடந்தனர். கடக்கும் என் கைகளைப் பற்றி இழுத்து தரையில் கிடத்தினர். மூவருமே ரோட்டில் படுத்துக் கொண் டோம். நெடுநேரம் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். பேச்சு சுழன்று எங்களின் வராத கனவினைப் பற்றியதாகச் சுருண்டு கொண்டது. விடியும் தருவாயில் நாங்கள் எழுந்து கொண்டோம். இது எந்த ஊரின் வழி எனத் தெரிய வில்லை . பாதையை விட்டு விலகி பரந்த பரப்பில் நடந்தோம். வயல்கள் நிரம்பிய வெளி தொடர்ந்தது. இன்னமும் சில நட்சத்திரங்கள் இருந்தன. மேடேறி கீழ் இறங்கியதும் ஏரி தெரிந்தது. சலனமே இல்லாத ஏரி. ஏரித் தண்ணீரை விலக்கி நிலா போய்க் கொண்டிருந்தது. எங்கள் ஆடைகளைக் களைந்து விட்டுத் தண்ணீரில் ஓடி வீழ்ந்தோம். இரவு கொஞ்சம் மிஞ்சியிருந்தது. ஏரியில் சிறு அலைகளை உருவாக்கினோம். ஏரியின் நீர் தேவதைகள் விழித்துக்கொண்டு வரக் கூடும் என வேணு சப்தமிட்டான். ஒரு நீர் தேவதையைக் காண எங்களுக்கு ஆசை பெருகியது. நீரில் மிதந்தோம். நீரும் ஆகாசமும் தவிர்த்து எதுவும் இப்போதில்லை . சிவசு ஏரியின் வலக் கரையைக் காட்டினான். ஆட்டுக்குட்டி யொன்று மேய்ந்து கொண்டிருந்தது. புல்லில் பதுங்கிய இரவை மேய்ந்த ஆடு தன் கொம்புகளால் பகலைக் கொண்டு வந்து கொண்டிருந்தது. நாங்கள் நீரிலிருந்தபடியே ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தோம். 

முதல் பஸ் கடந்த பின்பு நாங்கள் அவசரமாகக் கிளம்பி நகரை நோக்கி நடக்கத் தொடங்கினோம். அலுவலக ஞாபகம் எங்களைப் பற்றிக்கொண்டது. முறிப்பள்ளம் வழியாக வரும் போது கூரை வீடுகள் தென்படத் தொடங்கின. கூரை வீட்டுத் தெரு உள்ளே கடந்து போகும்போது இரண்டு பெண்களின் கனத்த குரலும் அழுகையொலியும் கேட்கத் தொடங்கின. ''அய்யா, எங்களை விட்டுட்டு இப்பிடிப் போயிற பாத்தீகளே அய்யா! உங்களை விட்டா எங்களுக்கு யாருய்யா இருக்கா?” அந்தப் பெண்களின் அழுகையொலி நீண்டு வேதனையைப் பெருக்கியது. 

வாசலில் கிடந்த உரலில் நடுத்தர வயது ஆள் ஒருவன் தலையைக் கவிழ்த்து உட்கார்ந்து கொண்டிருந்தான். அவன் கால்களைப் பற்றிய படி இரண்டு வயசுப் பெண்கள் அழுது கொண்டிருந்தனர். நாங்கள் பார்த்தபடியே நின்றோம். வீட்டின் மஞ்சள் ஒளியில் உத்திரத்திலிருந்து வேட்டி ஒன்று சுருக்கிடப்பட்டுக் காற்றில் ஆடியபடியே தொங்கிக் கொண்டிருந்தது. உரலில் உட்கார்ந் திருந்தவன் விசும்பும் பெண்களை நிமிர்ந்து பார்க்கவில்லை. அந்தப் பெண்களிருவரும் உத்திரத்தைப் பார்ப்பதும் குரலெடுத்து அழுவதுமாக இருந்தார்கள். உரலிலிருந்து அவன் எழும்போது சின்னவள் ஓடிவந்து காலைக் கட்டிக் கொண்டு எங்களை விட்டுட்டு போகாதீங்கய்யா என சப்தமிட்டாள். 

படலுக்கு வெளியே நின்ற எங்களைப் பார்த்ததும் அவன் அருகில் வந்து தீப்பெட்டி கேட்டான். பீடியைப் பற்ற வைத்துக்கொண்டு தெருவில் அவன் போன பின்பு நிசப்தம் திரும்பியது. ஓடுகள் வேய்ந்த ரயில்வே ஸ்டேஷனுக்குள் நாங்கள் போனபோது காகங்கள் கரைந்து கொண்டிருந்தன. அசதியும் தூக்கமின்மையும் அழுத்த, ரயில் பாதையைப் பார்த்த படி இருந்தோம். திட்டு திட்டாகப் பவுடர் படிந்த முகத்துடன் கையில் கூடையுடன் அழுது முடித்திருந்த சின்னவள் இரும்புக் கிராதி மீது சாய்ந்து நின்றிருந்தாள். நாங்கள் நால்வரும் நகரத்துக்குத் திரும்பக் காத்திருந்தோம்,