நன்றி : https://www.facebook.com/pages/சுந்தர-ராமசாமி/168411476697548
காற்றைத் திரித்து
நகத்தைக் கிழிந்து
விளக்கேற்றி.....
ஊனைக் கரைத்து
உயிரைப் பிழிந்து
எழுத்தாக்கி......
நெஞ்சைக் குத்தி
விரலைத் தேய்த்தும்
படைத்தேன்
திரியை எரித்தது விளக்கு
விளக்கை அணைத்தது காற்று
விரலையும் கரைத்தது குருதி
எனினும்
என்னை அழிக்க யாருண்டு
எழுத்தில் வாழ்பவன்
• • •
இரங்கற் கூட்டம்போட ஆட்பிடிக்க அலையாதே
நம் கலாச்சாரத் தூண்களின்
தடித்தனங்களை எண்ணி
மனச்சோர்வில் ஆழ்ந்து கலங்காதே .
இருப்பினும்
நண்ப,
ஒன்று மட்டும் செய்.
என்னை அறியாத உன் நண்பனிடம்
ஓடோடிச் சென்று
'கவிதையை எழுப்ப முயன்று கொண்டிருந்தவன்
மறைந்து விட்டான்' என்று மட்டும் சொல்.
உன் கண்ணீர் ஒரே ஒரு சொட்டு
இந்த மண்ணில் உதிரும் என்றால்
போதும் எனக்கு.
• • •
இப்போது நான் மீண்டும்....
இப்போது நான் மீண்டும்
நண்ப, எனக்கு உறக்கமில்லை
இருளின் செழுமை சேர்த்து
ரகசிய அறைகளில் நெசவாகிக்கொண்டிருக்கும்
இனங்கூற முடியாத ஏதோ ஒன்று நெற்றிப்பொட்டை
சதா தாக்கிக்கொண்டிருக்கிறது
இன்று அதிகாலை வாசல் கதவைத் திறந்தபோது
எதிரே சீரழிவின் துள்ளி மறியும் கோலம் ஒன்று
இன்றுவரை (உன்) அன்பைச் சொல்வதில்
தோல்வியே தொடர்கிறது
அன்பு என்பது ஆபத்து
இசை என்பது அவசரம்
கலை என்பது கொலை
அச்சுக் காட்டில் முளைத்து நிற்கும்
அறிவின் அகங்காரம்
கண்ணீரைத் துடைக்க முடியாது
(என்) துக்கத்திற்கு விடுமுறை இல்லை என்பதறிவேன்
இருப்பினும் அது சற்றுத் தூங்கினால்
நானும் சற்றுத் தூங்கமுடியும்
சதா ஒரு சத்தம்
செவிப்பறையைத் துளைக்கும் இரைச்சல்
சந்தடி: அவலங்களின் கோலங்கள்
நடுநெஞ்சில் அவலம் பீறிட்டது
மீண்டும் இறந்தேன் நேற்று
ஆனால், வருவேன் மீண்டும்
வருவேன் என்று என் முன் சொன்னவன்
வந்த பின் வருவேன் நான்.
• • •
ஓவியத்தில் எரியும் சுடர்
அந்த ஓவியத்தில் எரியும் சுடரை
கண் இமைக்காமல் பார்க்கிறது அந்தக் குழந்தை
அதன் விரல்நுனிகள் துடிக்கின்றன
தன் விரல்நுனிகளால்
எரியும் சுடரைத் தொடத்
துடிக்கிறது அதன் மனம்
சுடர் அருகே
தன் விரல்களைக் கொண்டுபோன பின்பும்
தயங்கி
மிகத் தயங்கி
தன் தாயின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கிறது
அந்தக் குழந்தை
அந்தச் சுடர்
தன்னை எரித்துக்கொண்டே
ஓவியத்தை எரிக்காமல் இருக்கும் விதம்
அந்தக் குழந்தைக்கு விளங்கவில்லை
அந்தச் சுடர்
உருவாகி வந்தபோது
ஓவியாவின் விரல்களை எரிக்காமல் இருந்த விதம்
அந்தக் குழந்தைக்கு விளங்கவில்லை
அழிக்காமல் எரியவும்
அழகாக நிற்கவும்
எப்படிக் கற்றுக்கொண்டது அது ?
குழந்தையின் விரல்களில் அப்போதும்
வியப்பு துடித்துக்கொண்டிருக்கிறது.
• • •
அது குழந்தை ..
மொழியை வலையாக மாற்றி
வீசிப் பிடிக்க முயன்றபோது
கிழித்துக்கொண்டு வெளியே ஓடிற்று உண்மை
பிடிக்கப் பின்னால் பாய்ந்தேன்
பலன் இல்லை ..
மூச்சுத் திணறி சோர்ந்த சரிந்தேன்
பின் ஏதேதோ யோசனைகள்
தூக்கம் ..
கண் விழித்ததும் குழந்தைப்போல்
மார்பில் அமர்ந்திருந்தது உண்மை
மௌனம் பிடிக்கும் என்றது
யோசனை பிடிக்கும் என்றது
அதிகம் பிடிப்பது
அன்புதான் என்று சொல்லிச் சிரித்தது ..
• • •
உறவு ..
உறவு அது அப்படித்தான்
கவர்ந்திழுக்கும் அத்தர் நெடியடிக்கும்
அணைத்துப் பிசையும் பூப்பூவாய்ப் பூக்கும்
மனங்கள் இணைத்து ஆக்கங்கள் மலரும்
காலடியில் அடிவானங்கள் குவியும்
அதன்பின் எகிறிக் குதித்து இரத்தம் கசியும்
துருவின் துகள்கள் புற்றுப்போல் குவிந்து
பார்வைகள் திரியும்
கசப்பு மண்டி அடித்தொண்டை அடைத்து
மலக்கிடங்கில் விழுந்து சாகும்
மீண்டும் உயிர்த்தெழுந்து வாசம் பரப்பி
வளைய வரத் தொடங்கும்.
• • •
எல்லாவற்றையும் நன்றாகப் பார்க்க, அது அதற்கான இடைவெளி தேவைப்படுகிறது.
சில சமயம் காலத்தின் இடைவெளி. சில சமயம் தூரத்தின் இடைவெளி.
• • •
“எழுதிட்டே இருங்க. எழுதறதுதான் மருந்து…” எழுதினால் அம்மாவை மறக்க முடியுமா என்றேன்.
“மறக்கிறதாவது? இன்னும் துல்லியமா ஞாபகத்தில் பதிவாங்க. ஆனா எழுத்தில் இருக்கற நினைவுகளில வலி இருக்காது. ஏன்னா மத்த நினைவுகளில காலம் பின்னால ஓடுது. நாம முன்னால இருக்கோம். எழுத்து எவர் டைம்லைன்னா இருக்கு…” எழுத்தின் வலிமை பற்றி பல தடவைகளிலாக சுந்தர ராமசாமி சொல்லியிருக்கிறார். அவமானங்கள், இழப்புகள் போன்ற தாங்க முடியாத விஷயங்களைக்கூட எழுதும்போது இனிமையாக மாற்றிக் கொள்ளலாம். எழுத்து உருவாக்கும் உலகம் எப்படியோ தன்னை இனிதாக்கிக் கொள்கிறது. “…ஏன்னா, நிஜ வாழ்க்கையின் துன்பங்களில் ஒரு சாரம் இல்லை. இருந்தா அது நமக்குப் புரியறதில்லை. அந்தத் தத்தளிப்புதான் துக்கமே. அப்பத்தான் மனசு கிடந்து அலையடிக்குது. மரணம், அவமானம், இழப்பு, பிரிவு….. ஏன் ஏன்னுதானே நம்ம மனசு கிடந்து தவிக்குது. எழுத்தில அதெல்லாம் வாறப்ப நமக்குத் தெரியறது ஏன்னு. அதான்….”
# ஜெயமோகனின் “சுந்தர ராமசாமி – நினைவின் நதியில்”.
• • •
நினைவின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் பிழைகளின் அவமானம்.
• • •
ஒரே ஒரு கவிதை
போதும்
இந்த ஜென்மம் பொருள்பட
என்பது
என் நம்பிக்கை
அதை எழுதிவிடக் காத்துக்கொண்டிருக்கிறேன்.
• • •
வீணை ஒலியோடு ஒரு சூட்சமமான கணத்தில் அவள் குரல் இணைவதும் மற்றும் ஒரு சூட்சமமான கணத்தில் அவள் குரல் நழுவ, வீணை தனித்து ஒலிப்பதும் என்னை வாரிச்சுருட்டும்.
அவள் எனக்காக அங்கு இருக்கிறாள். என் வருகையை எதிர்பார்த்து. என்னை பார்க்க வேண்டும் என்பதை தவிர அவளுக்கு வேறு துக்கம் இல்லை. நானோ துடித்து கொண்டிருக்கிறேன்.
என்னால் ஓடிப்போக முடியாமல் இருக்கலாம். ஆனால் நிச்சயம் நடந்து போய்விட முடியும். அவள் இருப்பிடம் எனக்கு தெரிய வேண்டும்.
அந்த வீணை ஒலி மீதேறி நான் போக முடியுமா? தூரங்களை ஒலி மூலம் கடக்க முடியுமா?
--சுந்தர ராமசாமி ஜே ஜே சில குறிப்புகள்
• • •
ஜே ஜேயை நான் சந்திக்கும்போது உடல் தாண்டி, மொழி தாண்டி, எங்களுக்குள் ஆத்மீகப் பிணைப்பு ஏற்படும் என்று நம்பினேன்.
கருத்து உலகங்களிலும் இலக்கிய உலகங்களிலும் சகபயணிகளாக நாங்கள் யாத்திரை செய்வோம்.நேர் சந்திப்புகள் அடிக்கடி நிகழும்.
அவனிடமிருந்து நான் தெரிந்துகொள்ள வேண்டியவை எவ்வளவோ. சர்ச்சைகள் . தெளிவுகள் . அறியாத உலகங்கள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன.
கருத்துகளையும் கனவுகளையும் பகிர்ந்துகொள்ளத்தக்க தோழமை. மனம் எப்படி ஏங்குகிறது ஏன் இதற்கு…!
• • •
“கலைஞன் மரணத்தை ஏற்க மறுத்து, தனக்கே உரித்தான சப்தங்களை விட்டுவிட்டுச் செல்கிறான். அவனுடைய சப்தங்கள் மூலம் நாம் அவனை நூற்றாண்டுகள் தாண்டிச் சந்திக்க முடிகிறது. மனிதனைப் பரவசத்தில் ஆழ்த்தும், புல்லரிப்பில் ஆழ்த்தும் என் சப்தத்தை விட்டுவிட்டுப் போக வேண்டும்”
• • •
......
ஆனால் தன் ஆயுளுக்குப் பின் நிதி வழங்கப்படும் காலத்தை மட்டுமே நம்பி ஒரு எழுத்தாளன் வாழ நிர்ப்பந்திக்கப்படுவது ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தின் இருப்பைக் காட்டவில்லை.
அரசியல், கல்வித்துறைகள், இலக்கிய அமைப்புகள், திரைப்படங்கள், சமய நிறுவனங்கள் ஆகிய அனைத்தும் வணிக மதிப்பீடுகளை ஏற்றுக் கொண்டு குறுகிய வழிகளில் செயல்படுவதைப் போற்றும் ஒரு சமூகம் நோயுற்ற ஒரு சமூகம் என்பதில் தவறில்லை.
இந்த நோயின் காரணமாக மேலான மதிப்பீடுகள் இன்று முற்றாகச் சரிந்து விட்டன.மட்டுமல்ல தாழ்ந்து கிடக்கும் மதிப்பீடுகள்தான் நடைமுறை சாத்தியமானவை என்ற நியாயமும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டது.
வணிக சினிமாவின் சீரழிந்த மதிப்பீடுகள்தான், தமிழ் அறிவுவாதிகள் என்று கூறிக் கொண்டு நெளியும் அநேகரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அடிப்படையில் இது நிலவுடைமை சமூகத்தின் மதிப்பீடுகள் ஆகும்.
யார் உண்மையில் அறிவுவாதிகளோ, யார் தரத்திற்காகவும் மேன்மைக்காகவும் நிற்கிறார்களோ அவர்களை மக்களுக்குத் தெரியாது. யார் யாரை மக்களுக்குத் தெரியுமோ அவர்கள் மக்களின் அடிப்படை நாகரிகத்தையே சிதைத்து அந்தச் சிதைவிலேயே தங்கள் குறுகிய நோக்கங்களின் வெற்றிகளில் திளைப்பவர்கள்.