தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Thursday, June 05, 2014

மழை : மரம் : காற்று - நகுலன் (நீண்ட கவிதை)

அவதாரிகை - *நகுலன்"

100 சிறுகதைகளை முன்னுரை

நன்றி கொல்லிப்பாவை சிற்றிதழ்



இந்தக் கவிதை - வரிசையை நான் 15-8-75 ல் ஆரம்பித்து 22-8-75 ல் முடித்தேன். இதை நான் ஏன் எழுத ஆரம்பித்தேன் -எப்படி முடித்தேன் ஏன்பதைப்பற்றி எனக்குத் திட்டமாகத் தெரியவில்லை. திரும்பிப் பார்க்கும் பொழுது சில விஷயங்களைச் சொல்லலாமென்று நினைக்கிறேன். 

-

சமீபத்தில் திரு ஆர். பார்த்தசாரதியை (ஆங்கிலத்தில் கவிதை எழுதும் இந்திய க் கவிஞர்களில் குறிப்பிடும்படியான ஒரு கவிஞர்) இங்கு வேறு சில எழுத்தாள - நண்பர்களுடன், சந்திக்க என ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. எங்க்ள் பேச்சுக்கிடையில் அவர் சொன்ன ஒரு விஷயம் மாத்திரம் என் மனதில் பச்சை பிடித்தது. அவர் சொன்னார் தமிழில் மேல்நாட்டுக் கவிதைகளை மொழி பெய்ர்ப்பதால் தமிழ் இலக்கியத்திற்கு அது வளம் சேர்க்கும். பிறகு தான் சமீபத்தில் படித்த "பிரக்ஞை' யில் பிரஷ்ட் எழுதி ஒருகவிதையின் ஒரு பிரசித்தமான வ.சி என் உள் ளத் தி ஸ் வளைய வந்து கொண்டிருந்தது. பிரஸ்தாப வரி ” .இதில் .... மரங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பது கொடுஞ்செயல்" பிரஷ்ட் இதை ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் கூறியிருக்கிருன் என்பது'தெளிவு. ஆனால் ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் உள்ள ஆபர்வமான ஒரு கேள்வி - கேட்கும் புத்தியில் பேசினால் என்ன என்ற கேள்வியும் என்னுள் எழுந்தது. நான் என் கவிதையில் எழுதியிருக்கிற மாதிரி நான் ஒரு புதுக்கவிஞன் இல்லை; நான் ஐரோப்பிய இலக்கியங்களைப் படிக்கலாம்; ஆங்கில ஆசிரியனாக இருக்கலாம்; ஆனால் ஒரு சம்பிரதாயத்தில் வந்தவன்; ஒரு சூழ்நிலையில் வாழ்பவன். இவைகளெல்லாம் தவிர்க்கப் பட வேண்டிய குறை பாடுகளென்றால், உண்மையாகவே சொல்கிறேன், என்னால் அவைகளிலிருந்து மீற மு டி யா து . அதைப் போலவே தான் என்னால் ஒரு அனுபவத்தை (அதைஎப்படி வேண்டுமானுலும் வரையறை செய்து கொள்ளுங்கள்) வைத்துக் கொண்டு தான் எழுத மு டி கிற து . பிறகு சமீபத்தில் நான் 'கணையாழி' யில் வந்த க. நா. சு. வின் காவியரூபத்தில் வந்த சுயசரிதையைப் படிக்க நேர்ந்தது. இது அந்தப் பத்திரிகையில் முற்றுப் பெறவில்லை. பலருக்கு அது காவியமாகவே படவில்லை; எனக்குப் பட்டது என்பதுதான் காரியம். பண்டிதர்களும் விதிகளும் என்றுமே சாசுவதம். ஆனால் ஒரு எழுத்தாளனுக்கு அவன் உணர்வும் அனுபவமும் தான் கட்டளை க் கல். அதனால் க. நா. சு. வின் 'சோதனை யைப் பின் பற்றி அனுபவத்தைச் சொற்சிக்கனத்துடன் மிகவும் நுட்பமாகவும் ஆழமுடனும் வெளியிடும் எந்த எழுத்தும் கவிதைதான் என்று ஏற்றுக் கொண்டு நாம் சாதாரணமாக ஏற்றுக் கொள்ளும் "யாப்பு' என்ற கட்டுப்பாட்டை மீறி இந்தக் கவிதையை எழுதியிருக்கிறேன். கடைசியாக ஆனால் அ - முக் கியமாக இல்லை. சமீபத்தில் நான் 'தெறிகள்" ல் படித்த 'கலாப்ரியா"" (என் அபிமானக் கவிஞர்களில் ஒருவர்) வின் "சுயம்வரம்" இக்கவிதைக்கு ஒரு அபூத காரணம் என்றும் சொல்ல வெண்டும்.



இந்தக் கவிதை - வரிசையில் சில மொழி பெயர்ப்புகளைச் சேர்த்திருக்கிறேன். மொழி பெயர்ப்பு பற்றி ஒரு வார்த்தை. இந்த மொழி பெயர்ப்புக்குத் தேர்ந்தெடுத்த கவிதைகள் அவைகள் பிரசித்த பெற்ற கவிஞர்களால் எழுதப்பட்டவை என்பதாலோ, அவர் - அவருடைய பிரசித்த பெற்ற கவிதைகளைத்தாள் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்ற அடிப்படையாலோ தேர்ந்தெடுக்கப்பட வில்லை. எனக்குப் பி டித்த கவிதைகளை, என் கவிதைக்குப் பொருத்தமான கவிதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். அடுத்தபடியாக மொழி பெயர்ப்பு அவசியமா? ஒரு எழுத்தாளன் தன் சிருஷ்டி வேகம் குறைந்தபோது மொழி பெயர்ப்பில் ஈடுபடுகிறான் என்கிறார்கள். எனக்கு இது பொருத்தமாகப் படவில்லை. இன்னும் ஒன்று ஒரு எழுத்தாளன், தேசம், காலம் என்ற எல்லைகளைத் தாண்டினவனாலும், அந்த எல்லைகளிலிருந்து கொண்டு தான் அவன் அந்த எல்லைகளை மீறுகிறான் . இதில் முக்கியம் என்னவென்ருல் எந்த மொழியில் எழுதினாலும் எழுத்தாளன் பாஷை அனுபவத்தின் குரல். அதை அவன் எப்படி அவன் மொழி - மூலம் வெளிப்பாடு செய்கிறான் என்பதுதான் சுவாரஸ் யமான விஷயம். இன்னுமொரு கேள்வி: மொழி பெயர்ப்பை எப்படிச் செய்ய வேண்டும்? நேரடியாகவா? எழுதப்பட்ட பாஷையின் இயல்புகளை ஒற்றியா? அல்லது மொழி பெயர்க்கப்படும் பாஷையின் இயல்புகளை ஒற்றியா? இதற்கு முடிவான ஒரு பதிலைக் கூறமுடியாது. ஆனால் பாஷையில் அனுபவமும் - மொழியும் புருஷனும் - பிரகிருதியும் போல் இணைந்திருப்பதால் இரண்டையும் இணைத்து மொழி பெயர்ப்பது தான் உத்தமம். இங்கு கூட ஒரு நூதன அனுபவம். தமிழில் பல வார்த்தைகள் இருக்கின்றன இதில் பல கலைஞனால் ஆளப்படாதவை. ஆனால் இத்தகைய வார்த்தைகளை தமிழில் மொழிபெயர்ப்பில் முதலாவதாகக் கொண்டு வரப்படுகையில் ஒரு நூதன உணர்ச்சி ஏற்பட்டாலும், மொழிபெயர்ப்பு கலாபூர்வமாக அமைந்தால், தமிழில் கூடுதல் வார்த்தைகள் எழுத்தாளனுக்குப் பொருத்தமான கருவிகளாக அமைந்து விடுகின்றன. சில இடங்களில் நேரடி யான மொழிபெயர்ப்பு சாத்தியமாவதில்லை. இது ஒருவகையில் மொழி பெயர்ப்பாளனின் திறமை யைப் பொறுத்தது. எனவே ஒரு நூலின் ஒன்றிற்கு மேற்பட்ட மொழி பெயர்ப்புகளின் அவசியம், மேலும் ஒரு படைப்பை ஒரு மொழியிலிருந்து என் மொழியில் நான் மொழி பெயர்க்கையில் அந்தப் படைப்பை இன்னும் சற்றுக் கூடுதலாக அணுகுகிறேன்.



இவ்வளவும் எழுதிவிட்டேன். ஆனால் என் கவிதை . வரிசையில் - மொழிபெயர்ப்புகள் ஒரு அம்சம் மாத்திரம். இந்தக் கவிதையில் எந்த அனுபவத்தை எவ்வளவு தூரம் வெற்றியுடன் செய்திருக்கிறேன் என்ற நிர்ணயிப்பை வாசகர் களுக்கு விட்டுவிடுகிறேன்.

*நகுலன்"

மழை :  மரம் :  காற்று (1)

இப்பொழுது பிற்பகல் சரியாக மணி 4.30
நான் வெளித்திண்ணையில்
சற்றே சாய்வான நாற்காலியில்
சாய்ந்திருக்கிறேன்
என்முன்
.

கால்ஃப் மைதானம்
அதைச் சற்றிச் செல்லும்
மதில்;
ஆகாயம் ஒரே சாம்பலாக
மங்கலாகத் தோற்றம் உடையதாக
இருக்கிறது; காற்று மெல்லச்
சலித்து கொண்டிருப்பதனால்
ஒரு சீரான சப்தம்;
தென்னைமரம் சற்றே தலை விரித்தாடுகிறது
தொலைவில் கால்ஃப் மைதானத்தின்
நடுவில் ஒரு பெயர் தெரியாத
மரத்தின்
சிறிய கரிய இலைகள்
இப்பொழுது
காற்று மந்த கதியாகச்
சலித்தாலும்
அசைவற்று இருக்கின்றன;
காற்றுச் சற்றுத் துரிதமாகச்
சலிக்கையில்
அதன் இலைகள்
வேகமாக அசைகின்றன.
தெருவில் துருப்பிடித்த தந்திக்
கம்பம் ஒரு ஈர மினுமினுப்பில்
துப்புரவாகத் தெரிகிறது
அதன் பீங்கான் குமிழிகள்
மென்மையாகவும் வெண்மையாகவும்
சாவதானமாகத் தோற்றமளிக்கின்றன
ஒரு காகம் அந்தரத்தில்
மிதந்து செல்கிறது.
வருஷங்களுக்கு முன்
கோடையில்
ராத்திரி நேரம்
வீட்டில் இருக்கும் பொழுது
காற்று மரங்கள் ஊடு
விர்ரென்று
ஊளையிட்டுச் சென்றது
உள்ளத்தில் ஒலிக்கிறது
காற்று சற்று ஓய்ந்துவிட்டு
மறுபடியும் சலிக்கிறது.
மழை இன்னும் வரவில்லை.
நான் கூட இல்லை; எவ்வளவு சுகம்.
திடீரென்று படபடவென்று
நான்கு துளிகள்
பிறகு “சோ”வென்று
ஒரு பெரு மழை கொட்டு கொட்டு என்று
கொட்டுகின்றது.
.

நான் இன்னும்
என் நாற்காலியிலிருந்து
நகராமல் இருக்கிறேன்
ப்ரெஷ்டே சொல்லட்டுமே
மழை இல்லாத
மரம் இல்லாத
காற்று இல்லாத
இந்த நாயும் இந்தப்பேயும்
இல்லாத
ஒரு ஊரில்
நான் வாழவிரும்பவில்லை !

.

மழை :  மரம் :  காற்று (2)

இப்பொழுது பகல் 2 மணி
தொழிற்சாலை
ஸைரன் அலறுகிறது
நான் நேற்றுப் போல் இன்றும்
வெளித் திண்ணையில்
சற்றே சாய்வான நாற்காலியில்
சாய்ந்திருக்கிறேன்
என் முன்
வீட்டிற்குமுன்
வெளிமுற்றம்
ஆகாயத்தில்
சூரியன் ஒரு குளிர்மையுடன்
பிராகசித்துக் கொண்டிருக்கின்றான்
என் தம்பியின்
மூன்று பெண் குழந்தைகள்
12, 8, 4
பச்சைப் பாவாடை வெள்ளைச் சட்டை
சிவப்புச் சட்டை மஞ்சள் பாவாடை
வெளிறிய ப்ரௌன் பாவாடை கத்திரிப்பூக்
கலர்ச் சட்டை
விளையாடிக் கொண்டிருந்தார்கள்
ஒருவர் ஓட ஒருவர் பிடிக்க;
இருந்தால் போல் இருந்து
புல்வெளியில் மஞ்சள் நிற
வண்ணாத்திப் பூச்சிகள்
தத்திப் பறக்கின்றன
இப்பொழுதுதான்
உணர்கிறேன்
காற்று இலைகளுடன் சஞ்சரிப்பதால்
ஒரு இடைவிடாத
சப்த சுருதி
பல விஷயங்களிலிருந்து
விடுபட்டாலொழிய
காற்றுச் சலிப்பது
இலை அசைவது
திடீரென்று சூரியப்பிரகாசத்தில்
இலைகள்
வாடித் தாழ்வது
நமக்குத் தெரியாது
மணி 2.30, 2.40
ஸ்கூட்டரின் அலறல்
தம்பி ஆபீஸிலிருந்து  திரும்பிவிட்டான்
குழந்தைகள் விளையாட்டை
நிறுத்திவிட்டுப் போய்விட்டார்கள்
காற்றுச் சற்றுவேகமாகச் சலிக்க
மீண்டும் இலைகளின் சப்தம்
மேல் ஸ்தாயியில் சலிக்கிறது
ஏதோ ஒரு பூச்சி
க்ரிச் க்ரிச் என்று விசில் அடிப்பது
போல சப்திக்கிறது
காற்று சாவதானத்தில் மெதுவாக நடக்கிறது
மரங்கள்
உல்லாசமாக
இலைகள் வசீகரமாக
அங்குமிங்கும் தலை- அசைக்கின்றன
ஒரு பறவை-மங்கல் சாம்பல்
நிறம்-பெயர்
தெரியாது - ஆகாயவிமானம் மாதிரி
மேலிருந்து கீழ்
சறுக்கிக் கொண்டு வருகிறது
குழந்தைகள் இனி வரமாட்டார்கள்
அப்பா இப்பொழுதெல்லாம்
சரியாக இல்லை
அதைப் பற்றிப் பின்னர்
இப்பொழுது எதையோ கண்டு
பயந்து
பகல் 1.30 முதல்
வாசலில்
ஒரு சிமிண்ட் சதுரத்தளம்
அதில் ஒரு துளசிச் செடி
அதன் முன்
ஒரு பிள்ளையார் சிலை
அதன் முன்
ஒரு தளம்
அதில் கோலம்
அந்தக் கோலத்தில்
அவருடைய சிதறுண்ட
சித்தத்தைப் போல்
அரிசியை இறைத்து
வைக்கிறார்
பரம்ரைப் பணக்காரர்

எதைச் செய்தாலும்
அதற்கு ஒருவிதப் ப்ரயோஜனமும்
கூடாது
பறவைகள் வருகின்றன
அவர் உள்ளே போய்விட்டார்
அந்தச் சாம்பல்-மங்கல் வர்ணப் பறவைகள்
ஒன்று சேரத் தங்கள் அழகிய “ அலகால் ”
எவ்வளவு உற்சாகமாக அரிசியைக் கொறிக்கின்றன
பிறகு ஒரு மைனா
அதுதன் இரு சிறகுகளையும் “ ஜம் ” மென்று
விரித்துக் கொண்டு பறக்கையில்
சிறகின் ஓரங்களில் வெள்ளைத் திட்டுகள்
இருப்பதைப் பார்க்கிறேன்
கைக்குள் அடங்கும் ஒரு சிறு
கறுப்புப் பொடிப் பறவை
விர்ரென்று பறந்து செல்கிறது
வாலை உயர்த்திக் கொண்டு ஒருஅளவில்
அவர் மீண்டும் உள்ளே போய்விட்டார்
இதுதான் கஷ்டமாக இருக்கிறது
இரு கைவிரல்களையும்
பின்னிக்கொண்டு சூரியனைப்
பார்க்கிறார்.
அமெரிக்காவில் இருந்து வந்தவள்
( எனது சகோதரியைச் சொல்கிறார் )
அன்பின்
இருப்பிடம்
நான் ( அவளுக்கு மூத்தவன் ) படித்துக்
கொண்டிருந்தேன்
அவள் தன்
( படிப்பை முடித்தவுடன் வேலை ஏற்றுக்
கொண்டவள் )

சவத்தைத் தேய்க்கும்
சோப்பை எனக்குக் கொடுத்து விட்டுப் போய்
விட்டாள் என்கிறார்
அவருடைய வியாதி எனக்குப் புரிகிறது
இதற்குப் ப்ரெஷ்ட் என்னச் சொல்வான் ?
வானம் கறுக்கிறது
அம்மா வா என்கிறேன்
அப்பா முறைக்கிறார்
அம்மா வயோதிகத்தினால்
இந்த சாய்வு நாற்காலி மாதிரி
சுருண்டுவிட்டாள்
“ சித்தாந்தச் சாமி திருக்கோவில் வாயில் ”
வரை சென்று வந்தவள் ஆதலால்
கட்டியவன் எப்படியிருந்தாலும்
பெற்றவைகள்
எப்படியிருந்தாலும்
நாதன் முடிமேல் நாகப்பாம்பு உண்டென்பதை
அறிவாள்
அம்மாவுக்கு நான் கி.ராஐநாராயணனின்
“ கரிசல் காட்டில் ஒரு சம்சாரி ”
என்ற குறுநாவலைப்
படித்துக் கொண்டிருக்கின்றேன்
அம்மா ஆவலுடன் கேட்டுக்
கொண்டிருக்கிறாள்
அப்பா உள்ளேயிருந்து வெளியே வந்துவிட்டார்
அம்மா அருகில் வந்து நிற்கிறார்
சாப்பிட
அம்மா எழுந்து போகிறாள்
இருட்டிவிட்டது
அந்தப் பெரிய மீனைப் பிடிக்க
நடுக்கடலில் ஸாண்டியாகோ,
கரையிலிருந்து தொலைதூரம் சென்ற
ஸாண்டியாகோவின் நினைவு எனக்கு வந்தது.


மழை  : மரம் : காற்று (3)

இன்றும்
மூன்றாவது நாளாக
வெளித்திண்ணையில்
சற்றே சாய்வான நாற்காலியில்
சாய்ந்திருக்கின்றேன்
என் மனமும்
என்முன் காணும்
மரத்தைப்போல்
மழைக் காரைப் போல்
பெட்டியில் சுருண்டு கிடக்கும்
பாம்பு போல் முடங்கிக் கிடக்கும்
காற்றைப் போல்
அந்தி வானைப் போல்
மயங்கிக் கிடந்தது
எனது இடது பக்கத்தில்
10 தப்படிக்கப்பால்
ஒரு நீண்ட சாய்வு நாற்காலியிலவர் தன் நீண்ட
தேகத்தை நீட்டிப் படுத்திருக்கிறார்
என் மனம்
அவரைப் பார்க்கையில்
அவர் மூளையின்
சுற்றளவையும் கனபரிமாணத்தையும்
பற்றி அர்த்தமில்லாமல் குழம்பிக்
கொண்டிருக்கிறது.
நான் என்றுமே சினிமா பார்த்ததில்லை
அதிகமாக அதனால்தான்
இன்றுபோல் இல்லை
நல்ல வெயில்
தார் ரோடெல்லாம் பேய்த்தேராக ஓடுகிறது
அங்கு அவள் பொய்யா - நிஐமா
என்று நான் குழம்பிக் கொண்டிருக்க
வாடித் தொங்கிய
இலைபோல் நின்ற
அவளைப் பார்த்தேன்
நான் அவளைப் பார்த்தேனா ?
அவள் என்னைப் பார்த்தாளா ?
எங்கள் இருவரிடையே
காற்று ஸ்தம்பித்து நின்றது
போல்
நாங்களும் பொய் - மெய்
போல்
பாம்புப்-பிடாரன்
மகுடி ஊத
சர்ப்பம் சீறி
வாலை வளையமிட்டு
மண்டையை
உயரவெடுத்து
படம் விரித்து
தன் பிளவுண்ட
நாக்கு வெளியலம்ப
நான் இங்கில்லை ?
யார் இந்த சுசீலா ?
யார்
இந்த நவீனன் ?
யார்தான் யார் ?
நான் வெகுதூரம்
சென்றுவிட்டேன்
அந்த அறையில்
அவர் நான் -சிவன் ஹரிஹர சுப்ரமண்ய ஐயர்
அந்த அறை
அவர்பேச்சு
எல்லோரும் - அவர் பேச்சுக்குச்
செவி சாய்த்துக் கேட்ட நாங்கள் - உட்பட ..
எனக்கு
“ எனது இடப்பக்கத்தில்
10 தப்படிக்கப்பால்
ஒரு நீண்ட சாய்வு நாற்காலியிலவர்
தன் நீண்ட தேகத்தை
நீட்டிப் படுத்திருக்கிறார்.
என் மனம்
அவரைப் பார்க்கையில்
அவர் மூளையின்
சுற்றளவையும் கனபரிமாணத்தையும்
பற்றி அர்த்தமில்லாமல் குழம்பிக்
கொண்டிருக்கிறது ”

அவர் எங்களுக்கு
விஸ்கியைச் சாவதானமாக
ஊற்றிக் கொண்டிருக்கிறார்
நாங்கள் பேசப் பச
அவர் பேசாமலிருக்கிறார்
நாங்கள் வார்த்தைகளால்
மீன் பிடிக்க யத்தனிக்க
அவர் மூளையில் சிலந்தி
வலை பின்னுகிறது
அவர் படித்துக் காட்டிகிறார்
“ அவர்கள் கத்திகளாலும் முள்
கரண்டிகளாலும்
வார்த்தைகளைத் தேடிக்
கொண்டிருந்தார்கள் ”.
.
அறைக்கு வெளியே
நாங்கள் பார்க்கிறோம்
ஒழுங்காக் கத்தரித்து
விடப்பட்ட செடிவரிசைகள்
இரவு வருகிறது
ஆகாயத்தில்
அந்த ஹோட்டலில்
வாடித் தொங்கிய
மின்சாரப் பந்து போன்ற
சந்திரன்
நாங்கள் “ வருகிறோம் ”
என்கிறோம்
அவர் “ ஆகாட்டும் ”
என்கிறார்
நாங்கள்
பிரிகிறோம்
நான் பார்க் வழியாகச்
செல்கிறேன்
இருட்டில்
செடிகளும்
நாகரீகமாக வளர்க்கப்பட்ட
புதர்களும்
எனக்குப் பேய்களாகத்
தோன்றுகின்றன
நடுக்கடலில் மீன் பிடிக்கச்
சென்ற ஸாண்டியாகோவுக்குத்
தன் இடது -கை- வலது -கை
பற்றிய விசாரம்
எனக்கோ
எது இடது கை
எது வலது கை
என்ற விசாரம்
அவர் செல்கிறார்
உனக்கு கையே இல்லை
யென்று
ஆமாம்
“ ஒவ்வொரு எழுத்தாளனும்
ஒரு ஏகலைவன்
அவனும் வெகு தூரம்
சென்றிருக்கின்றான் ”



   “ ஆ, ஆசையே. நீ ஒரு புராதன விருக்ஷம். இச்சைத்தான் உரம்;  உனது பட்டை; புடைத்து உறுதிபெற. உனது கிளைகள் வானத்தை  இன்னும் - இன்னும் அருகில் காண விழைகின்றன? மகாவிருக்ஷமே, உனது வளர்ச்சிக்கு முடிவே கிடையாதா ? உனது வேர் எவ்வளவு ஆழமாக ஊடுருவுகிறது. ஸைப்ரஸ் மரத்தைவிட? என்னவானாலும் மிகவும் ஜாக்கிரதையாகவே நாங்கள் உனது அடங்காத ஆசை படைத்த ஆல்பத்திற்குச் சில மாதிரிகளைச் சேர்த்திருக்கிறோம். சகோதரர்களே. நீங்கள் எவைகள் வெகு தொலைவிலிருந்து வருக்கின்றனவோ அவைகளில் செளந்தர்யத்தைக் காண்கிறீர்கள்.யானை வடிவான  பெருந்தேகம் படைத்த கோவில் சிலைகளை நாங்கள் போற்றுகின்றோம் - ஜ்வலிக்கும் ரத்தினங்கள் பதித்த சிம்மாசனங்களை ; சிற்ப வேலைப்பாடமைந்த அரண்மனைகளை - அவைகளுடைய அமானுஷ்ய சைதன்யம் உங்கள் பாங்கர்களின் கனவுகளை சிதிலமாக்கும் பார்வை எல்லாம் இரண்டாகப் பார்க்கச் செய்யும்; வர்ணம் பூசிய பற்களுடைய கை நகங்களுடைய பெண்கள் ; மந்திரங்களில் தேர்ச்சி பெற்ற பக்கிரிகள்; அவர்கள் மீது அவர்களை மெல்ல வருடும் பாம்புகள்......

நான் உள்ளிருந்து
வெளி வந்து விட்டேன்
என் முன் அந்தப் பெயர்
தெரியாத - சாம்பல் -மங்கல்-
வர்ணப் - பறவைகள்
வரிசையாக அணிவகுத்த விமானப்
படைகள் போல வெளிமுற்றத்தில்
சறுக்கிக் கொண்டு வந்தன
மணி பிற்பகல் 4.15



 மழை : மரம் : காற்று (4)

இன்று நான்காவது நாள்
மணி 6
வழக்கமாக
2.30 மணிக்கே
இந்த வெளித் திண்ணையில்
வந்து உட்கார்ந்திருப்பவன்,
இந்தக் கவிதைத் தொடரை
எழுத உட்கார்பவன்,
டெல்லியிலிருந்து வந்த
உறவினர் - அதிதிகளை
ஊர் காண்பிக்க
அழைத்துச் சென்றவன்
இப்பொழுதுதான்
என்
சற்றே சாய்வான
நாற்காலியில்
அமர முடிந்தது
இன்று வானம் ஒரே
மழை மூட்டமாக இருந்தது
காற்றின் அசைவில் கூட
தண்ணீரில் தோய்ந்த ஒரு ஓசை
மழைத் துளிகள்
வெளித் திண்ணைக்குக் கீழ்
வரிசையாக ஐந்து படிகள்
பிறகு அந்தச் சிமிண்ட் தளம்
சிமிண்ட் சுற்றுக்கட்டு
அதன்மேல் அந்தச் சிமிண்ட்
சதுரத் தெட்டி
அதன் முகப்புச் சுவரில்
பிள்ளையார்
அதன் உள் துளசிச் செடி
பிள்ளையார் கீழும்
நான் மேலுமாக
அதைவிட
நந்தனைப் போல்
நான் வெளியே நிற்கிறேன்
நானும்  ஒரு பறையன்தான்
அதில்தான் எவ்வளவு சௌகரியங்கள்
எல்லாக் குழுவிற்கும்
வெளியில்
அவர் பார்ப்பதற்கு
பகட்டில்லாத மனிதர்
(அவர் பதவியைப் பார்க்கையில்)
கனமான மூளையை
உடையவர்
பார்ப்பதற்கு ராமநாதன்
மாதிரி இருந்தார்
என்னைக் கேட்டார்
“ நீங்கள் ஏன் எழுதுகிறீர்கள்?”
“ நான் என்னையே தேடிக்
கொண்டிருக்கிறேன் ”
அவர்
“ ஏன் ?” என்று என்னை மீண்டும் என்னைக்
கேட்டார்
மௌனம் என்னைக் கைதட்டி அழைத்தது
காற்று அசைந்து கொண்டே இருக்கிறது
மழை பெய்யாவிட்டாலும்
ஒரு ஈரக் கசிவு
எங்கும் வியாபிக்கும்
அந்தரத்தில்
தென்னையின்
பச்சை இலைகள்
செம்பருத்திச் செடியில்
கிளை நுனியில்
தொங்கும் சிவப்புப் பூக்கள்
வாழை இலையில்
சாம்பல் பூத்த
அடிப்பச்சை
பாதையில் மனித சஞ்சாரமில்லை
அம்மா
சொன்னது நினைந்து
மனமோடுகிறது.

“மையோ
மறிகடலோ
மரகதப் பச்சையோ
அய்யோ
இவளழகு ”

“நென்னல் கண்ட
திருமேனி
இன்று
நிலை தளர்ந்து
வாடுவதேனோ ?”

தெருவில் யாரோ
ஒரு பிச்சைக்காரன்
அவன் கால் புண் மீது
ஒரு பச்சைத்
தளம்
மழை வாரா விட்டாலும்
காற்று “முனகி”க்
கொண்டே இருக்கிறது
பறவைகள்
உள் அடங்கி விட்டன.
“மௌனி”யின்
கதை ஒன்றில்
வாசல் ஜன்னலூடு
வெளித் திண்ணைக்கப்பால்
தலைவிரித்து
நின்று கொண்டிருந்த
ஒரு மரத்தை
ஒருவன்
வீட்டில் தான் தனியாக இருந்தவன்
வெறித்துப் பார்த்துக்
கொண்டிருந்தான்
என்று ஒரு கட்டம்
இவனும் வெகுதூரம்
சென்றிருக்கிறான்.
“ பட்டுப்போன ஆரஞ்சு மரத்தின்    கவிதை”
விறகு வெட்டி !
என் நிழலை வெட்டு;
எனக்கு
நானே ஒரு மலடியாகப் போகும்
நிலைமையைப் பார்த்துக் கொண்டிருக்கும்
அவஸ்தையிலிருந்து
என்னை விடுவி!!

கண்ணாடிகள் சூழ
நான் ஏன் பிறந்தேன்
பகல் பொழுது
என்னைச் சுற்றி வட்டமிடுகிறது
ராத்திரியில்
ஒவ்வொரு நக்ஷத்திரமும்
என்னை ப்ரசவிக்கிறது

நான் என்னைப்
பார்த்துக் கொண்டிருந்து
வாழ விரும்பவில்லை

எறும்பும்
கழுகும்
எனது இலைகளும்
பறவைகளுமாக
நான்
கனவு காண்பேன்
விறகு வெட்டி !
என் நிழலை வெட்டு;
எனக்கு
நானே ஒரு மலடியாகப் போகும்
நிலைமையைப் பார்த்துக் கொண்டிருக்கும்
அவஸ்தையிலிருந்து
என்னை விடுவி!!
மணி 7.45
வெளித் திண்ணையும்
அதன் முன்னுள்ள புல்வெளியும்
இருளில் மறைகின்றன.

நான் சற்றே சாய்வான
நாற்காலியிலிருந்து
விடுபடுகிறேன்.

மழை : மரம் : காற்று (5)

இன்று செவ்வாய்கிழமை
மணி 3
நான் வழக்கம் போல்
வெளித் திண்ணையில்
சற்றே சாய்வான நாற்காலியில்
உட்கார்ந்து கொண்டிருக்கிறேன்
வெயில் பளீரென்று
அடிக்கையில்
மரங்கள் இலைகள்
எல்லாம் அசைவற்று
இருக்கின்றன
காற்று தூங்கிக் கொண்டிருப்பது
போல்
அடுத்த நிமிஷம்
நிழல்வர
காற்று அசைய
காகங்கள் கரைய
மீண்டும்
காற்றின் காலடிகள்
செய்யும்
சுருதிலயம்
இன்று வானத்தில்
நீல இடைவெளிகள்
பஞ்சு போன்ற மேகங்கள்
அவை அருகே  
சற்றே கறுத்த
மேகங்கள்
ஒரு குளிர்ந்த காற்று
என்னை ஸ்பரிசித்துச் செல்கிறது
இன்று தென்னை மரத்தின்
உயரம் என்னைப்
பார்க்கிறது
ஒரு துலைவில்
அதன் அசையும் கிளைகள்
மிருதுவாக அங்குமிங்கும்
அலையும்
(மிருதுவான காற்றில்
லேசான கூந்தலை
நினைவுறுத்துகிறது )
“ ஒரு நிமிஷம்
நாங்கள் இருவரும்
வேறுவேறு இருப்பினும்
ஒரு சேர இணைகிறோம் ”
மேகம் நகர
நிழல் பரவும்
சாகசம்.
அவர் இங்கில்லை
தென் சரகில்
உள்ள அறைக் கதவின்
முன் காலிரண்டும்
மண்டியிட்டு முன்வர
கண்கள் குத்திட்டு
நிற்க
ஏதோ குருட்டு
யோசனையில்
மனங் குழம்ப
பட்டமரம்
போல் இருக்கிறார்
மனிதன்
என்ற மரத்தின்
அசையாத நிலை
ஒரு ஸ்தம்பனம்
மரத்தைப் போல
மண்ணைக்
கௌவிப் பிடிக்கும்
அடிவேர்
ஆடத் தொடங்கும் பொழுது
அவன் ஓயாத தத்தளிப்பை
உணர்த்தும்
அவன்
அசையாத நிலை
அதிகமாகக்
குடித்தவன்
நிலைதவறி
நிலத்தில்
வீழ்வது
போல்
ஸிமிண்ட் தளத்தின்
மீது
ஒரு காகம்
ஒய்யார நடைபோடுகிறது
இல்லை
இல்லவே இல்லை
யார் சென்னார்கள்
நான் ஒரு
புதுக் கவிஞன்  என்று
ஆதாரமற்ற
கவலைகள்
எங்கிருந்தோ வரும்
சலனங்கள்
சிறுவனாக இருக்கும்
போது கோவிலைச் சுற்றி
வருகையில்
யாரோ
காகம்
சனீச்வர பகவானின்
வாகனம்
என்றது
என் உள் பிரகாரத்தில்
வளைய வர
துப்பாக்கியின்
சனியன்
என் முன்
அந்தரத்தில்
நீண்ட வரி போல்
அசைவற்று நிற்கும்
ஒரு மரம்போல்
நிற்க
சற்றே
உயரமான
அரளிச் செடி
ஒரு பாம்பு
போல்
“கண்டதுண்டோ
கண்ணம்மா
நடுப்பகலில்
நான் கண்ட
கனவில்
காகமும் செடியும்
தோட்டாவின் சனியனாகவும்
பாம்பின் உடலாகவும்
உருமாறிய உள்ளச் சிதறல்  !! ”

இவனும்
வெகுதுலைவில்
சென்றவன் தான்
இவன் இடைநின்ற
ஒரு ஜன்னல் வழியூடு
ஒரு மரத்தைக் கண்ட காக்ஷி
இவன் ஜன்னலின் அருகில்
அந்த மரம் தன் கிளைகளை
கைகள் போல்
மிகவும் சாகசத்துடன்
அங்குமிங்கும் துழாவிக்
கொண்டிருந்திருக்கவேண்டும்
“மௌனி” யின்
நிழல்,
இல்லையா
இகர முதல்வி !
என்ன செய்வது
இவன் கவிதை இவ்வாறு
“ என் ஜன்னல் பக்க மரமே,ஜன்னல் மரமே
என் ஜன்னல்  திரையை நான்
கீழே போடுகிறேன் இரவு
வருகையில் ;
ஆனால் ஒரு பொழுதும்
நம்மிருவரிடை
உனக்கும் எனக்கும் இடை
திரை வேண்டாம் ! ”

மணி 4.30 என் பேனா இங்கு நிற்கிறது.


மழை : மரம் : காற்று (6)

இன்று புதன் கிழமை
இப்படிச் சொல்வதில்தான்
எவ்வளவு மகிழ்ச்சி
இந்த ஆறு நாட்களாக
இப்படித்தான்
உனக்குத் தெரிகிறது
இல்லையா ?
இப்பொழுது மணி 1.35
வெளித் திண்ணையில்
சற்றே சாய்வான
நாற்காலியில்
அமர்ந்திருக்கிறேன்
சுற்றும் இருட்டிக்
கொண்டு வருகிறது
மழையுடன்
கலந்த காற்று
மெதுவான நடைபயிலும்
இப்பொழுது
கண்ணில் தெரியும் படியாக
முதலில்
மழைத்துளிகள்
ஏறி
இறங்கி
மழை பெய்கிறது
நிற்கிறது
மழை நனைந்த
மண் நாற்றம்
காற்று மெதுவாகக்
குறைந்து வருகிறது
மழை
இல்லாமல் போகிறது
துளசித்
தொட்டிக்கருகில்
ஒரு குருவி
ஒரு மைனா
இருந்தது இப்பொழுது
எங்கிருந்தோ
க்ரிச் க்ரிச்
சப்தம்
பாதை
மௌனமாகக் கிடக்கிறது
மழைத் துளியின்
ஸ்பர்ச சுகம்
மீண்டும்
மழை மெதுவாகப் பெய்கிறது
லேசாக ஆரம்பித்தது
மேன் மேலும்
ஒரு ஒழுங்காக
காற்றின்
கதி அதிகரிக்கையில்
தென்னையின்
மட்டைகள் அசைகின்றன
மற்ற மரங்களின்
இலைகள்
அப்படியே இருக்கின்றன
விடாமல் பெய்யும்
மழையின்
கனத்த சப்தம்

“பந்தல் கட்டிப்
பாய் விரித்து
சந்தை விட்டு
சயனக் கிருகம்
புகுந்தேன்,தோழி ”

“ ஊசி மழை பெய்ய
வாசி விட்டு
நேசத்தன் நெடுங்கரையில்
நாசமாக நின்றேன்
நான்,தோழி”

“ காற்றடிக்குது
மழை பெய்யுது
கண்கண்ட
இடமெல்லாம்
விண்வெளி முழுவதும்
புனல் மூட்டம்
மண் அனைத்தும்
மழை நாற்றம் .”

“என் மனம்
அம்மணம்”

இன்று
இந்தச் சற்றே சாய்வான
நாற்காலியில்
உட்கார்ந்து கொண்டு

புல்வெளியில்
மண்சுவரில்
அருகில்
தொலைவில்

வெய்யிலும்
நிழலும்
விளையாடும்
விளையாட்டைப்
பார்க்க
முடியாது;
இன்று
பக்ஷிகள்
வாரா;

ஒரு காகம்
இடையில்
பறந்து சென்றாலும்;

என்றாலும்
தந்திக் கம்பியில்
ஒரு குருவி;

எதிரில் இருக்கும்
கிளி மரத்தின்
வெளிறிய பச்சை இலைகள்

மழைச் சிதறலில்
“ கொல் ” லென்று
சிலிர்க்க
அதன் சித்திரம் போன்ற
உருவம்
கனவு போல்
என் கண்ணை மயக்கும்
இவனும்
வெகு தூரம் சென்றவன் தான்
சொல்கிறான்

     “ அவஸ்தைகள் , சரி ? - எல்லாவற்றிற்கும் மேலாக, வாழ்க்கையின் உறுதிநிலை . காதலின் நீண்ட அனுபவம் ; உண்மையைச் சொல்வதென்றால் சொல்லில் சொல்ல முடியாதவைகள் ; ஆனால் பிறகு, நக்ஷத்திரங்களின் கீழ் என்ன பயன் ? இன்னும் சொல்லால் சொல்ல முடியாத நக்ஷத்திரங்களின் கீழ்  ? என்றாலும் எந்த வழிப் போக்கனும் மலையில் இருந்து பள்ளத்தாக்கிற்கு ஒரு  பிடி மண்ணைக் கூட கொண்டு வருவது கிடையாது - சொல்லில் சொல்ல முடியாத இந்தப் பூமியிலிருந்து ஒரே ஒரு வார்த்தையை மாத்திரம் அவன் பிடித்துவிட்டான். பவித்ரமான , மஞ்சள் நீலமான ஜென்டியன் புஷ்பம் . நாம் இங்கிருப்பது வேறொன்றுமில்லை - இவ்வாறு சொல்வதற்குத் தானோ - வீடு, பாலம், புனல் சிதறும் செயற்கை ஊற்று, வாசல் கதவு, ஜாடி பழ மரம், ஜன்னல் இருக்கலாம் ;  ஸ்தூபி, கோபுரம் ? ஆனால் சொல்வதற்கு நினைவு படுத்திக் கொள் , ஆ இந்த மாதிரி சொல்வதற்கு , அவைகள் கூட இவ்வளவு தீவிரமாக நிலைபேறாக இருப்பதற்கு , முயற்சி செய்யவில்லை. இந்தப்பூமியின் தந்திரமான ரகசியம், காதலர்களைத் தூண்டிவிடுவதும் கூட, அவர்கள் காணும் ஒவ்வொன்றும் அவர்களுக்கு உவகை வெறியில் உட்கார்ந்து எழுந்து நர்த்தனம் செய்யத்தானே? வாசற்படி : ஒரு காதல் - இணைக்கு அதன் தாத்பர்யம் என்ன ? வேறென்ன, அவர்கள் தங்கள் வழக்கமான தேய்ந்த வாசற்படியைத் தாங்களே சற்றுக் கடந்திருக்க வேண்டுமின்றி வேறென்ன : அவர்களும் அவர்களுக்கு முன் பலர் செய்த மாதிரி , அவர்களுக்குபு பின் பலர் செய்யப் போவதைப் போல் ...இயல்பாகத்தான் ! ”

மணி மூன்றடிக்க ஐந்து  நிமிஷம் : மழை நின்று விட்டது : முற்றத்தில் வசீகரமான வெயில்: ஒரு அழகான அமைதி .

மழை : மரம்: காற்று (7)

வியாழக்கிழமை
பகல்
மணி 4
இதை ஒரு விரதம் மாதிரி
அனுஷ்ஷக்கிறேன்
இதைச் செய்வதற்கு நான்
என்னைப் பழக்கி
கொண்டுவிட்டேன்
இந்தச்
சற்றே சாய்வான நாற்காலியில்
உட்கார்ந்து
கொண்டிருக்கின்றேன்
நல்ல வெயில்
சிமிண்ட்தளம் வரை
நிழல்
அதற்கப்பால்
நல்ல பளிச்சென்ற
ஆனால் கண்களைக் கூச
செய்யாத வெயில்
எதிரே
வீட்டின் மண்சுவர்கள்
மண்நிறம்
எதிரே கேட்டருகில்
ஒரு தென்னையின்
சிரம் தாழ்த்திய
ஒரு தென்னை மட்டை
அதன் கீற்றுகள்
அதன் கச்சிதமான
நிழல்
நடுவில்  ஒரு கூர்மையான
வெயில்
இருபுறமும்
ஒளி இடையிட்ட இடையிட்ட
ஒழுங்கான நிழல் கதிர்கள்
மண்சுவரில்
கிளி மரத்தின்
மங்கலான
அதன் மங்கலான
சிறு சிறு இலைகள்
சற்றே மென்மையான கிளைகள்
இடப்புறம்
பெயர் தெரியாத ஒரு செடியின்
அழுத்தமான நிழல் உருவங்கள்
வெயில் படிபடியாகக் குறைய
நிழல் உருவங்கள்
மெல்ல மெல்ல மங்கி
வெயில் பின் வாங்க ஒரு கணம்
இல்லாது போகும் விந்தை
ஒரு மரம் கொத்திப் பறவை
பளீரென்று
தன் மஞ்சள் சிறகடித்து
அந்தரத்தைக்
கிழித்துச் செல்கிறது
ஆகாயம்
ஒளி நீலம்
வெயிலும் நிழலும்
வெயிலின் பகைப்புலத்தில்
நிழலுருவம் வரையும்
விந்தை
அசலை விட
நகல்
நகலை விட
அசல்
ஒரு மரத்தின்
செடியின் கிளையில் இலையின்
நிழல்
அதை விட அதை விட
எது
ஏன்  இப்படி
எதை
நம்மைக் கவனிக்கச்
செய்கிறது ?
பிரதிபலிப்பின் வசீகரம்
கோடுகள்
வளைவுகள்
( அசலின் பிடிப்படாத புதிர் )
ஒழுங்கான வரையறை
மனித
மூளையின்
நேர்த்தியான கோடுகள்
சிந்தனையின் சைதன்யம்
நிச்சலனமான
உயிரின்  பிரவாகம்
அமைதியின்
நிசப்தரூபம்
ஒரு தட்டு
நிறைய
ஆப்பிள் பழங்கள்
ஆனால் மேலே
இங்கே அங்கே
பார்க்கிமிடமெல்லாம்
ஒளிப்பிரவாகம்
பச்சை
சிமின்ட்  கலர்
ஆகாய நீலம்
ஒளியில் தோய்ந்த
மரத்தின்
கிளை
அடி மரம்
கிளைகள் - இலைகள்
எல்லாம்
கண்ணை வருடுகின்றன
வெறுந் தரையில்
ஒரு வர்ணச் சிதறல்
பிரகுருதியின்
நிதானம்
இங்கு வரும்
பறவைகள்
வெயில்
நிழல்
மரம் செடி
என்னைப் பற்றி என்ன நினைக்கின்றன என்று
எனக்கும் சரி
அவளுக்கும் சரி
பிரக்ஞையில்லை
ஆனால்
நாங்கள் இணைகிறோம்
நானும்
சுசீலாவும் போல்
இப்பொழுது காற்று
வேகமாகச்
சலிக்கிறது
இலைகள் அசைகின்றன
நிழல்கள் மறைக்கின்றன
என் பேனா
சலிக்கிறது
நான் வெறும் சாக்ஷி
மௌனம்
என்னைக் கைதட்டி
அழைக்கிறது
வார்த்தைகள் என்னைவிட்டு விலகிப் போகின்றன
ஒரு இடத்தில்
ஒரு மணி நேரம்
உட்கார்ந்திருப்பது என்பது
பலரிடம்
பல மணி நேரம்
பல்லவி பாடுவது போல்
இல்லையடி என்று சொல்லடி
குதம்பாய் !
என் கண்கள்
வெறும் ஒளிச்சாரங்கள்
அளவானவை
இவளும் வெகுதூரம்
சென்று வந்தவள் தான்
சொல்கிறாள்
“ என்னுடைய கண்கள்
மூடப்படுமுன்
நானும் மற்ற கண்கள் உடைய
ஜீவன்கள்
பார்ப்பது போல் பார்க்க
விரும்புகிறேன்;
( அவைகளுக்கு வேறு வழியாகப் பார்க்கத் தெரியாது )
                            •
எனக்குச் சொல்லப்படுமானால்
இன்று நான் ஆகாயத்தையே
என் இரு கண்களாக, வேண்டு
மென்றால், வைத்துக் கொள்ளலாமென்றால்
நான் சொல்கிறேன் எனது இதயம்
இரு கூறாக உடையும் ; என்
தேகத்தின் சுயபரிமாணத்தால்;
புல்வெளிகள் எனது , மலைகள்
எனது
எல்லாக் காடுகளும் , கணக்கற்ற
நக்ஷத்திரங்களும்
எவ்வளவு பகல் என்னால்
கிரகித்துக் கொள்ள முடியுமோ ?
எனது வரையறைக்குட்பட்ட
கண்களுக்குள் அவ்வளவும்
தாழ்ந்து செல்லும் பறவைகளின் சலனங்கள்
காலைக் கதிரவனின் மஞ்சள் -  பழுப்பான பாதை -
எப்பொழுது நான் அவைகளைப்
பார்க்க  விரும்புகிறேனோ அப்பொழுது -
இந்தச் செய்தி என்னைச் சாக அடிக்கும்
எனவே, எனக்கு ரக்ஷை, நான் நினைக்கிறேன்
எனது இயல்பான நிலைக்கேற்ப
ஜன்னலின் கண்ணாடிச் சாளரத்தில்
என் கண்களால் பார்க்கப் பார்ப்பது
எங்கே மற்ற ஜீவன்கள்
தங்கள் கண்களை
வைக்கின்றனவோ அங்கே
கதிரவனின் ஒளிக்குக் கூசாமல்.

மழை : மரம் : காற்று (8)

இன்று
வெள்ளிக்கிழமை
சுபதினம்
இதற்கு  ஏதாவது அர்த்தமுண்டா ?
ஒரு வகையில் இல்லை;
ஒரு வகையில் உண்டு,
சற்றே சாய்வான இச்சாய்வு
நாற்காலியில்
உட்கார்ந்து கொண்டிருக்கிறேன்
இன்று காலையில்
சற்றுக் கூடிவிட்டது
“ பாலத்துச் சோசியனும்
கிரகம் படுத்துமென்று விட்டான் ”
மிகச் சிறந்த
மனோ - வியாதிகளைக்
குணப்படுத்தும்
டாக்டரும்
எவ்வளவு ஸெமினார்களில்
எவ்வளவு பேப்பர்கள்
படித்திருக்கிறார்
என்னிடம்
“ இந்த வயசில் ஆஸ்பித்திரியில்
அட்மிட் செய்து
அவரை வதைப்பானேன்
அப்படி வேண்டுமென்றால்
உன்னால் முடியாதென்றால்
இங்கு  கொண்டு விட்டுவிடு
வயது 78 அல்லவா
இந்த வயதில் சிலர்
இப்படி ஆகிவிடுகிறார்கள் ”


“நானென்ன செய்ய
சாவின் பயத்திற்கு
மருந்தில்லை ” என்றார்
நானென்ன சொல்வது  ?
ரூ. 20/-ஐ அவரிடம்
கொடுத்தேன்.
அழகாக வாங்கி  வைத்துக்
கொண்டார்.
இங்கு இப்பொழுது இந்தச்
சற்றே சாய்வான நாற்காலியில்
இருக்கிறேன்
குரலை உயர்த்தி
அவரை அதட்டிச்
சாந்தப் படுத்தித்
தூங்க வைத்துவிட்டு
இப்பொழுது அவர்
மண்போல்
அவர் தூங்குகிறார்
நான் மரம் போல்
இருக்கிறேன்

சீராகச் செல்லாதவர்
உடன் வாழ்வர்
நேராகச் சென்றவர்
அறிவார்
“சித்தம் சிதற
செத்த கட்டை
சிவலோகம்  சேரும் ”
என்று
சொல்லடி, குதம்பாய்
இவன் எழுத்து மூலம் ஜயித்தான்
அவன்  “ “ “
உவன்  “ “ “
புகழ் வேணும்
புஸ்தகம் எழுத்தாளர்களின்
சம்மதம் வேணும்
இந்த அழகில்
“ எனக்கே என் எழுத்தின் மேல்
சந்தேகம் வந்து விடுகிறது “
என்ற பிரலாபம்
பைத்தியங்கள்
அவஸ்தைகள்
வெறுங் கேலிக் கூத்து.

“ஐயோ
நான் செத்துவிடுவேன்
அதுதானே உன் ஆசையும் ”
அழுகிறார்.
நான் என்ன சொல்ல ?
அவர் தூங்கிய பிறகு
இங்கு வந்து உட்கார்வதைத்
தவிர
அந்த மூலையில் அந்தக்
கிளி மரம்
இளவெயில்
அதன் நிழல்கள்
மிருதுவாகப் புல்வெளியில்
படர்கிறது
தென்னையில்
மட்டைகளில்
சில மட்டைகளின்
சில கீற்றுகள்
அசைகின்றன
நான்
ஒன்றுமே இல்லை
காற்றுச் சற்று வேகமாக  அடிக்கிறது
ஒரு தென்னையின்
ஒரு நீளம்
ஒரு தடித்த
நிழலாகப் புல்வெளியில்
எங்கிருந்தோ ஒரு காகத்தின்
ஈன சுவரம்

இவர்களும் வெகு  தூரம்
சென்று வந்தவர்கள் தான்
சொல்கிறார்கள் .

“ தாஸ்மாத் த்வமுத்திஷ்ட்ட, ”
யஸோ லபஸ்வ
ஜித்வா ஸத்ரூன் புங்க்ஷவ ராஜ்யம்
ஸம்ருத்தம்
மயைவைதே நஹதா: பூர்வமேவ
நிமித்த மாத்ரம் பவ ஸவ்யஸாசின்
கண்ணன் காண்டீபனுக்குச்
சொன்னது: ஆகையால்  நீ
எழுந்திரு; புகழை  அடை. உன்
பகைவர்களை வென்று,
ஐச்வரியமான  ராஜ்யத்தை
அனுபவி. என்னால் மாத்திரம்
அவர்கள் இதற்கு முன்னாலேயே
கொல்லப்பட்டார்கள்.நீ அதற்கு
ஒரு உபாதி மாத்திரம்,ஏ
ஸ்வ்யாஸாசின்.”
ஆம்
நிமித்த மாத்ரம் பல
நான் வேறு, இந்தச் சற்றே
சாய்வான நாற்காலி வேறு
என்ற பேதமில்லாமல் நாற்காலியும்
நானுமாக இருக்கும் இந்நிலையில்
மரமும் மண்ணும், புல்வெளியும்,
நிழலும் வெயிலும் எல்லாம் எல்லாம்
அலை அலையாக, நிலை பெயராத
மரம் என்றென நான்
காற்று சலிக்கிறது
நிழல் பரவுகிறது
பறவைகள் கூவுகின்றன
மரம் நிற்கிறது
நிமித்த மாத்ரம் பவ
காலை : மணி 10. 10

மழை: மரம்: காற்று (9)

மீண்டும்
இங்கு
இந்தச் சற்றே சாய்வான நாற்காலியில்
வந்து
உட்கார்ந்து கொண்டிருக்கிறேன்
இன்று - சற்று முன் -
ரகுவிடமிருந்து
“ நாட்கள் ”
பற்றிக் கடிதம் வந்தது
அவர் என்ன எழுதினார்
என் பதில் காரியமில்லை
அவர் எழுதியிருந்த விதம்
தான் எனக்கு பிடித்திருந்தது
ஒருகேள்வி
எழுப்பியிருந்தார்;
சில பாத்திரங்கள் பற்றி
“பாத்திரங்களை மாதிரிகளை
வைத்துக் கொண்டு பார்த்தால்
பாத்திரங்கள் பாத்திரங்கள்  தானா ?”
இதைப் பற்றி என் மனங்குழம்பியது
என் முன்
இந்த வெளிமுற்றத்தில்
புல்வெளி
மண் சுவர்
சிமின்ட் தொட்டி
அதன் முகப்பில்
பதித்த பிள்ளையார்
மூலையில் கிளிமரம்
தென்னை மரத்தின்
மரங்களின்
இலைகளின்
மெதுவான ஓட்டமான
சாதாரணமாகப்
போகும் காற்றினால்
சன்னமான ஓசை
மரத்தைப் பார்த்து
மண்ணைப் பார்த்து
சுழலும் காற்றைக் கேட்டு
இந்தச் சற்றே சாய்வான
நாற்காலியில்
இருக்கும்
எனக்கு
அவர்  துயில் விழித்து
ஓசைப் படாமல்
நடை பயிலும்
அவர் நடையில்
கதி
என்னை என்னவோ
செய்கிறது
வாய் திறந்து பேசினார்
“ சாப்பிடுகிறீர்களா ?”
“ போடா.
சாப்பாடு....சாப்பாடு ”
இதற்கு
என்ன செய்வது ?
ரகு,
உங்களுக்குத் தெரியுமா
“ பக்கத்தில் பக்கத்தில்
இருக்கிறோம்
சில சம்பவங்கள்
நடக்கின்றன
அப்பொழுது
ஒருவன் நம் பக்கத்தில்
இருந்தாலும்
அவன் வெகு தூரத்தில்
இருப்பதாக உணர்கிறோம் ”

ரகு
தமிழில் மகத்தான
கவிஞன் சொன்னது
ஞாபகம்
வருகிறது
“ வாய்ச் சொற்களினால்
என்ன பயனுமிலை ”
மூளையின் நேர்த்தியான
கோடுகளினாலும்;
கண்கள்
உள்ளத்தின்
சாளரங்களாகப் போகும்
பொழுது
அவை மூலம்
யார் எதைப் பார்க்கிறார்கள் ?
எட்டிப் பார்க்கிறார்கள்
விலகிப் போகிறார்கள்
கூச்சலிடுகிறார்கள்
அழுகிறார்கள்
சிரிக்கிறார்கள்
கோபப் படுகிறார்கள்
தங்களைக் கண்டு
தாங்களே பயப்படுகிறார்கள் ”

இதைப் போல
கூட இருந்தவர்கள்
விலகிப் போகிறார்கள்
மீண்டும்  திரும்பி
அருகே வருகிறார்கள்

இதிலெல்லாம்
நான்
 எதை அடையாளம்  காண்கிறேன்
அந்த அமெரிக்கக்
கவிஞன் எழுதிய மாதிரி
“ இப்பொழுது இரவு
மேலும்
தனது செருக்கு
வயோதிகம்
இவைகளால்
இவன் மனம்
இருண்டு விடுகிறது.
பயம்,
மஞ்சள் நிறமான கூக்கூவென்று
சப்திக்கும்
பறவை,
தனது அலகினால்
கூண்டைப் பிறாண்டுகிறது”
ரகு,
மனிதன் மகத்தானவன்
என்கிறார்கள் .
எனக்குத் தெரியவில்லை.
அவர் நடமாடிக்
கொண்டிருக்கிறார்
எல்லாரும் பயப்படுகிறார்கள்
நான்
இந்த வெளித் திண்ணையில்
இந்தச் சற்றே சாய்வான
நாற்காலியில்
இருந்துக் கொண்டு
என் முன் இருக்கும்
புல்வெளியைப் பார்த்துக்
கொண்டிருக்கிறேன்
பறவைகள்
சப்திக்கின்றன
இவர்
ஒரு தட்டில்
அரிசியைத்
தனது சிதறின
சித்தத்தைப் போல்
சிமென்ட்
தளத்தில்
இரைக்கிறார்
ஆனாலும்
ரகு,
இதற்கெல்லாம்
நாம் பயப்படவேண்டிய
அவசியமில்லை
நாம் ஒன்றையும்
அடையாளங் கண்டு
கொள்ளவும்
அவசியமில்லை.
நிமித்த மாத்திரம் பவ
என் முன் வெயில் நிதானமாக
அடித்துக் கொண்டிருக்கிறது.
மணி 1. 30.



மழை: மரம்: காற்று (10)

ரகு,
நான் மீண்டும்
சொல்கிறேன்;

நான்
புதுக்கவிஞனே
இல்லை என்னைப் புதுக்கவிஞன்
என்று
யார் சொன்னது ?

“எனக்கு ...
ஆங்கிலம் தெரியாது,
தமிழ் வராது ”

என்றாலும்
நான் புஸ்தங்களில்
வாழ்பவன்
என்னை வேறு தள்ளும்
மனிதர்கள்
அவர்கள்
மறுபடியும்
வந்து சேரும் பொழுது
அவர்கள் கூடப்
பழகுகிறேன்
ரகு,
இங்கு நாம் வரும்பொழுதும்
போகும் பொழுதும்
தனியாகத் தான்
வருகிறோம் - போகிறோம்
அப்படியென்றால்
ரகு
யாருக்கு யார் துணை ?
நாம்
என்னதான்
செய்துவிட்டோம் ?
அவன் கூறிய
மாரி
இது வீடு
இது பாலம்
இது புனல் சிதறும் செயற்கை
ஊற்று
வாசல் கதவு
ஜாடி
பழ-மரம்
ஜன்னல்
இருக்கலாம்:
ஸ்தூபி
கோபுரம் ?”
என்று சொல்வதைத் தவிர ?

ஆனால்
ரகு,
ஒன்று சொல்ல
விரும்புகிறேன்
இந்த எட்டு நாட்களாக
எல்லோரையும்
விட்டு விட்டு
இந்தச் சற்றே சாய்வான
நாற்காலியிலிருந்து
கொண்டு
நான் தனியாக
என்று இல்லை
நானே இல்லாமல்
இந்த வெளிச்சத்தில்
இந்தக் காற்றில்
இந்த வெயிலில்
இந்த நிழலில்
இந்த ஜோடி மைனாக்கள்
அவர் இறைத்த அரிசிகளை
சிக் சிக்
என்று கத்திக்
கொண்டு
கொறிப்பதை
இந்தத் தென்னை மட்டைகள்
காற்று ஏறி இறங்கி வீச
உல்லாசமாகத்
தலையாட்டுவதை
வேறு மரங்கள்
அசைவற்று
நிற்க
நான்
என்னை விட்டுச் செல்லும்
நழுவல்
விடிந்தால்
உலகம் நமக்குக் காத்துக்
கொண்டிருக்கிறது;
அதிலிருந்து
இப்படிக் கழன்று கொள்வதில் தான் நமது
விமோசனம்

இவனும் வெகுதூரம்
சென்று திரும்பி வந்தவன்
தான்
சொல்கிறான்

“ கொழுந்தினைக் காணிற்குவலயந் தோன்றும்
எழுந்திடங் காணில் இருக்கலுமாகும்
பரந்திடங்காணில் பார்பதி மேலே
திரண்டெழக் கண்டவன் சிந்தையுளானே”

மணி 2 இந்தச் சுபதினத்தில் இந்தக் கவிதை
முற்றுப் பெற்றதைக் குறித்து நான் மகிழ்ச்சியுறுகிறேன்.
என் எதிரே திறந்த வெளி ;சாந்தமான வெயில் ஒளி.

_______________________________________________

அடிக்குறிப்பு :
மொழி பெயர்க்கப் பட்ட மேல்நாட்டுக்
கவிஞர்களின் பட்டியல் :
BAUDELAORE, LORCA, FROST,
RILICE, EMILY DICKINSON
வடமொழிப்பகுதி : பகவத்கீதை
தமிழ்ப்பகுதி : திருமந்திரம்


 தட்டச்சு : தீட்சண்யா ரா


TO POSTERITY (http://www.csee.umbc.edu/~stephens/POEMS/brecht1)

1.

Indeed I live in the dark ages!
A guileless word is an absurdity. A smooth forehead betokens
A hard heart. He who laughs
Has not yet heard
The terrible tidings.

Ah, what an age it is
When to speak of trees is almost a crime
For it is a kind of silence about injustice!
And he who walks calmly across the street,
Is he not out of reach of his friends
In trouble?

It is true: I earn my living
But, believe me, it is only an accident.
Nothing that I do entitles me to eat my fill.
By chance I was spared. (If my luck leaves me
I am lost.)

They tell me: eat and drink. Be glad you have it!
But how can I eat and drink
When my food is snatched from the hungry
And my glass of water belongs to the thirsty?
And yet I eat and drink.

I would gladly be wise.
The old books tell us what wisdom is:
Avoid the strife of the world
Live out your little time
Fearing no one
Using no violence
Returning good for evil --
Not fulfillment of desire but forgetfulness
Passes for wisdom.
I can do none of this:
Indeed I live in the dark ages!

2.

I came to the cities in a time of disorder
When hunger ruled.
I came among men in a time of uprising
And I revolted with them.
So the time passed away
Which on earth was given me.

I ate my food between massacres.
The shadow of murder lay upon my sleep.
And when I loved, I loved with indifference.
I looked upon nature with impatience.
So the time passed away
Which on earth was given me.

In my time streets led to the quicksand.
Speech betrayed me to the slaughterer.
There was little I could do. But without me
The rulers would have been more secure. This was my hope.
So the time passed away
Which on earth was given me.

3.

You, who shall emerge from the flood
In which we are sinking,
Think --
When you speak of our weaknesses,
Also of the dark time
That brought them forth.

For we went,changing our country more often than our shoes.
In the class war, despairing
When there was only injustice and no resistance.

For we knew only too well:
Even the hatred of squalor
Makes the brow grow stern.
Even anger against injustice
Makes the voice grow harsh. Alas, we
Who wished to lay the foundations of kindness
Could not ourselves be kind.

But you, when at last it comes to pass
That man can help his fellow man,
Do no judge us
Too harshly.

Bertold Brecht
translated by
H. R. Hays

("There was little I could do. But without me
The rulers would have been more secure. This was my hope"