தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Wednesday, May 14, 2014

ஏழு பென்சில் சித்திரங்களும் ஒரு அழிப்பானும். - யூமா. வாசுகி

ஏழு பென்சில் சித்திரங்களும் ஒரு அழிப்பானும். - யூமா. வாசுகி


1
செய்தி அனுப்பிச் சொற்ப நேரமாகிறது – நீ
இந்நேரம் துடித்திறங்கி வந்திருக்க வேண்டும்
அலட்சியமா என்னிடம் – நெரிப்பேன் நின்
நீலகண்டம் சடையறுப்பேன்
நீ கெட்ட கேட்டுக்குக் கங்கை வேறு தலையில்
கேட்பதற்கு ஆளில்லை என்று
எங்காவது போய்க் கிடக்காதே
இதோ அழைக்கிறேன் வந்து நின்றி ஏவல் செய்
கொலுசணிந்த பெண் குறித்து
நான் கவிதை எழுத வேண்டியிருக்கிறது
மயானச் சாம்பலையெல்லாம்
துடைக்க மறந்து வந்தாயானால்
தொலைந்தாய் நீ
முடிவிற் சேர்ந்தேன் ஒரு காதலியின் சன்னிதானம்
பூஜை முறை எதுவுந் தெரியாத
முரடனாயிற்றே நான்
கவிதையில் என் ஆவியைக் கடத்திவைத்து
அர்ப்பணிக்க வேண்டும் அவளுக்கு
என் மொழி முதிர உதவி செய்
வசை மொழிந்தேன் என வருந்தாதே
செல்லக் கொஞ்சலை செலுத்திப் பார்த்தேன்
நான் கலைஞன், நீ கடவுள்
காலம் கடந்தும் நாம் இருப்போமாகையால்
உதவி செய்து ஒத்திருப்போம்
ஒருவருக்கொருவர்
என் காகிதங்களில் வந்து கட்டுண்டுகிட
வரைகின்ற வார்த்தைகளையெல்லாம்
விசையுறச் செய்



வரும்போது உன் நந்தியையும் நாகத்தையும்
அழைத்துவா –
அடிக்கடி சிகரெட்டும் டீயும் வாங்கி வர
அவையும் எனக்கு வேண்டும்.

2.
காதலெனும் பேறு சற்று முன்பு
என்னைத் தீண்டியது தோழனே . . .
அடுக்கு மாடி குடியிருப்பல்ல என் இதயம்
அதன் முகப்பில்
படிக்கட்டுகளோ கதவுகளோ இல்லை எனவே
வெளியிலிருந்து ஒருகாலை எடுத்துவைத்து
மிகச் சரளமாக உள் நுழைந்தது காதல்.
அது வரும்போது நான் விழித்திருந்தேன்
கொலுசொலி கேட்டுத் திரும்பினேன்
நொடியில் நூறு பங்கிலொன்றில்
சரியாகக் கண்டுகொண்டேன்
அதுவேதான் அதுவன்றி வேறில்லை
என்னிடம் இருந்ததையும் இல்லாததையும் கொண்டு
முடிந்தவரையிலும் முடியாதவரையிலும்
நான் அதை உபசரித்தேன்
என் எளிமையால் துடைத்துச் சுத்தமாக்கிய
துதிபீடத்தில் ஏற்றினேன்
ஆனால் அது ஒப்பவில்லை
இன்னும் அனேகருக்கு
தீட்சையளிக்க வேண்டியிருந்ததால்
வந்த வேகத்தில் விடைபெற்றது
துயரம் கிடந்தது அதற்கு மாற்றாக பீடத்தில்.
அதனிடமிருந்து வந்தது இதுவானபடியால்
தொழுதே ஆகவேண்டும் நான் துயரத்தையும்.
காதல் தோன்றியபோது தொடுத்த இன்பத்தை
வரையறுக்கின்ற வார்த்தைகள்ஏதும்
உன்னிடமுண்டா தோழனே?
மெய்யாகவே
என் வாழ்நாளைக் கொடுத்து
வாங்கிக் கொள்கிறேன் அவற்றை.



3

சிறு குரலில் பேசிய உன் கொலுசு
விடுத்த வடிவம் என் நெஞ்சில் வைசூரி
வலிக்காமல் இனிதுறையும்.
இன்றுன்னைக் காணாத
வேதனை வேறுவிதம் - அதில்
மூழ்கிஎழுந்ததும்  திக்பிரமை.
கிடைத்ததற்கரியதைப்போல் திருடிச்
சூடின சூழ்ந்ததெல்லாம் - ஆயினுங்குறையாமல்
அப்படியே உள்ளது திகைப்பு
இன்று யாருக்குமே
சொல்லுக்குச் சரியாக ஸ்வரபடவில்லை சைகை
பட்டம் விடுவதற்கு மொட்டை மாடியில்
இடம் கேட்ட சிறுவர்கள்
அவதூறுகளைச் சுமந்து குழு பிரிந்தனர்
எந்த பெண்ணிடமிருந்தும் எனக்கு
நற்தொண்டாற்ற வரவில்லை உன் சாயலின் ஒரு சதவீதமும்.
இணை சேர்ந்து நகரும் சிவப்புப் பூச்சிகளை
சாலையோடு சைக்கிள்ச்சக்கரங்கள்
விளையாட்டுச் செலவாய்ச் சிதைக்கின்றன
வெறுத்து மேகத்திரை இழுத்து
மறைந்தான் சூரியன்
கடும் விரக்திக் கோடை மழை ஒழுகி
கட்டிடச் சுவர்களில் சோர்வு நீர்ச்சலுவை .
நடந்தால் ஈரத்தரையில் தடம் பதியுமெனத் தயங்கி
கடைப் படிக்கட்டில்  காத்திருக்கிறேன்
கொஞ்சம் திடம் வருவதற்கு .
நான் இறந்த குழந்தை - என் உதடுகளைக்
கன்னத்தோடு ஒற்றிக்கொண்டால்
முத்தம் பெற்றதாகிவிடாதென்று புரிந்து என்னைக்
கைவிடுகிற இன்றின் முற்றத்தில் -
முன்னால் சென்ற ஆட்டோவிலிருந்து விழுந்த ரோஜா
அடுத்து வந்த பேருந்தினடியில் சிக்கியது
ரத்தம்  தெறிக்காத தூரத்திற்கோடினேன்
இன்றின் மையத்தில்
வாய் திறவாத முயலாய் அமைந்த குப்பைத்தொட்டியில்
அணையாத சிகரெட்டை வீசிச் சென்றார்கள்
தொண்டைச் சூடுற்ற முயலைக் காணாதிருக்க
முகம் மறைத்த கைகுட்டையில்
கண்களைக் கிழிக்கின்றன காட்டெருதுகளின் நாவுகள்
முடியும் அகாலத்தில்
தலைக்குமேல் சுழலும் மின்விசிறி தன்
மெத்தச் சுடுவியர்வையால் துளை க்குமோ என்னை
வலிக்காமல் இனிதுறையும் வைசூறித் தெம்பிற்கு
உன் பார்வைப் புழக்கமற்ற தினங்கள் பலவும்
தாங்கும் தகுதியுண்டு
இடையிடையே நீ தெளிய வைத்தால்
தண்ணீராவது பருகிக்கொள்வேன்.

4.
நீ என்னை ஏறிட்டுப் பார்த்தாய்
உன் பார்வை எனும்  எஸ்கலேட்டர் படிகள் இயங்கின
வழிகாட்டும் வரைபடத்தை வழங்கின கொலுசுகள்
நான் நின்றதுதான் தெரியும் நெடுந்தொலைவு நீங்கினேன்
வந்த இடமொரு வதை முகாம் - அங்கே
கொல்லும் கருவிகளின் கூட்டத்தில்
கருப்புப் புள்ளியிட்ட சுரிதாரும் உண்டு
உச்சிக்கிளை இலவங்காய் வெடித்து - பஞ்சுப் பிசிறு
மெல்ல நிலமணைவதுபோல்
சிமெண்டுத் தரையின் சிகையொப்பனை
சிதையாதபடிபோலும் நடந்தாய்
அதைக் கண்ட பிறகுமா நான் பிழைத்திருப்பேன்
ரூப அரூபங்கள் எல்லை பிரிகின்ற பாங்கை
நடையென்று சொன்னால் அது தவறு
உன் கொலுசொலி நிரம்பிய கடல் இந்த வராண்டா
கணுக்கால் காற்றுந்த சின்ன
அலைகளென ஒதுங்கியசைகிறதே புடவை.
உதித்தபோது உணரவில்லை - உன் நெற்றியில்
நிலைத்தபோதே நோக்கினேன்,
சீதளச்சூரியன் சுருங்கியதாய் ஒரு பொட்டு.
நடைவழியில் நான் நிறுத்தியிருந்த
கிரகிப்புத் தூண்களெல்லாம் - உன்
ஒயில் தாளாமல் வீழ்ந்தேன். நானும் வீழ்ந்தேன்,
............... முன் உள்ள இருக்கையில்
நீ அமர்கிற விமரிசையில்
பெரு முனிவன் தவவலியால்
மன்றாடிப் பெற்ற அனுக்கிரகத் தூசிகளை
உள்ளங்கையில் வைத்து ஊதினான் - அவை
லிப்ட் மூலம் கட்டிடத்தின்
இரண்டாம் தளம் வந்து இருக்கையில் படிந்தன,
அமர்ந்தது நீயில்லை.
உன் பெண்மைப் பிரபஞ்சத்தில்
காதலின் முதல் பிரணவம் ஓதினேன்
விம்மும் அதன் விழுதுகள் எல்லாம்
உன்னைச் சிறையெடுக்க விரைகின்றன
தப்பி மறைந்துவிட முடியாது மாதேவி - நீ
செல்லும் இடமெல்லாம் காட்டித்தரும் கொலுசுகள்
அதைக் கழற்றவும் இயலாதபடி
காவல் கடமையாற்றும் கருணையின் கண்களுக்கு
இமைகளேயில்லை.

5.
பெரிதினும் பெரிதான சோதி
பெண்கள் விடுதியில் தஞ்சம் - தன்
அவதார மகிமையுணராது
பேருந்து நெரிசலில் அடைந்து வரும்.
ஒலி உபதேச நூலின் பக்கங்களை
நடையில் பறக்கவிடும் கொலுசுகள்.
கேசச்சுருள் பிரிந்து
நுதலில் நளினமாட நுழைகையில்
பேராலயமாகப் பெயரெடுக்க எனக்கு
பக்தி பக்குவம் போதாதோ என
ஏ.ஸி. முனகலாய் அழும் அலுவலகம்.
எல்லையற்ற ஏக தத்துவம் -
..............., கதவுகளுக்கும்
வருந்திக் காத்திருந்த எனக்கும்
சமமாய்ப் பகிரும் கனிந்த பார்வை.
வேதகோஷப் பறவைகள்
அதைச் சுற்றி வருகின்றன - தானொரு
விக்ரகம் என்பது விளங்காமலே
விளையாட்டாய்ப் பேசிப்போகும்
சிரஞ்சீவிக் கீர்த்தனை சிறிதே உணவுகொள்ள
கீர்த்தி வட்டம் தெளியும்
கேண்டீனுக்கு உள்ளும் புறமும்
படைப்பும் நிலையும் செயலும்
மல்லிப் பூக்களாய் ஆரோகணித்த
என் சஞ்சாரதேசம் -
அறிவின் உட்கிடையடுக்குகள் அனைத்தும் முயன்று
குறிப்பாலுங் கொள்ளமுடியாது களைத்த
நுண்மா நுண்மையின் திருமேனி,
நிற்கும்போதும் அமரும்போதும் அதன்
பின்னணியாய் அமைந்து அருகதை பெற
பொருட்கள் தவிக்கின்றன.
கொன்ற கலியுடலே வளைகளாலான கரம்
அடக்கமாய்
காகிதத்தில் ஏதோ எழுதுகிறது
தாளில் பிரதிபலித்த தியானப்பெருமை
பார்த்திருந்த என்னையும்
பிரசித்தனாக்கியது
இவ்வுலகில்- இப்பிறவியில் - இப்போதே
நிகழும் அதிசயத்தின் அருகிலிருக்க
அனுமதிபெற்றேன்
எனக்கு மட்டும் புரிந்தது அதன் பரிபாஷை.

6.
அன்று குளித்தது
மண்ணோடும் விண்ணோடும் தொடர்பற்ற
ஒரு வகை நீரால்.
வாயிலோடு சென்றவர்கள்
கனவானுக்குச் சொல்வதைப்போல்
வணக்கம் தெரிவித்து - குழந்தையிடம்
கொஞ்சுவதைப்போல் கேட்டார்கள்
“முடிந்ததா வாழ்வின் முதல் குளியல்?”
நகரத்தின் அனைத்து வீடுகளின்
கதவுகளையும் தட்டி
“நான் எப்போதேனும் உங்களுக்கு
குற்றமிழைத்திருந்தேனாயின்
இப்போதே தண்டித்து விடுங்கள் - நாளையே நான்
நிரபராதியாக வேண்டியிருக்கிறது”
என்று நெகிழ்ந்து நேற்றிரவு
கேட்டுக்கொள்ள விரும்பியதை
அறிந்திருந்தினர் அனைவரும்
அழுக்கான பழைய உடை
உறவையும் மரியாதையையும்
இப்போதுதான் காட்டுகிறது -
“வேண்டுமானால் அருமையானவனே
உன் உடலில் படாமல் ஓரிரு இழைதூரம்
விலகியே இருந்து மறைக்கட்டுமா”
“வேண்டாம் என் பொருட்டு உன்
வழக்கம்  மாற்றாதே” என்றேன்
பரவசம் மட்டுமே செல்லும்படி
இடுங்கியிருந்தது உணவுக்குழாய்
ஒரு மிடறு பழச்சாறு பருகியபின்
உதடு துடைத்த விரல்களில்
முன்னம் முதலில் குடித்த முலைப்பால் வாடை
வீசிய காற்றைச் சாக்கிட்டு
மூடிய அறைக்கதவு
தெருச்சகுனம் பார்த்து திருப்தியுடன் திறந்தது
நீள வாய்ப்பாக வந்தது ரயில்
“உயர்ந்தவனே படிக்கட்டில் நின்று வராதே
உள்ளே வந்தமர்ந்து எனக்கு உதவி செய் -  நீ
செல்லும் காரியம் நானறிவேன்” என்றது ,
ஓடும் ஓசைக்கிடையில்.
இது மிகப்பெரிய கட்டிடத்தின் வாயில்
இங்குதான் அவள் என்னை
சந்திப்பதாகச் சொல்லியிருந்தாள்
உடல் அணுப்பிராணிகளின் பல்லாயிரம் செவிகள்
காத்திருக்கின்றன கொலுசொலிக்க.

7.
காலகாலமாய்க் கேட்டுக்கொண்டிருந்த
காதல் பெண்ணைக் கண்டேன் காலதேவா
அடையாளத்திற்கென்று நீ கொடுத்தனுப்பிய
இலச்சினை இருந்தது அவளிடம். நன்றி!
அவள் நடக்கிற நீள் வராண்டா
என் காதல் ரசச்சரடு
படுத்திருந்த மஞ்சள் வெயிலில் பாதங்கள் பதித்தாள்.
நான் உற்றறியவே வந்த உருவின்
கொலுசொலி துய்த்தேன்
இது பொறுக்க முடியாத நன்மை - பொங்கட்டும்.
இனி தரிப்பதற்கில்லையொரு பாத்திரம்.
அருட்களஞ்சியம் அணுகிற்று - அகக்காம்புகள்
சுரக்கத் துடித்தன புலமை.
மகாசுவை பின்புலத்தில் மேல் நோக்கு
மோகம் உரக்க - புன்னெறிச் சந்நதமடங்கிற்று,
செழித்த புனிதம் அவள்.
ஆற்றுவித்தது நல்லதாபம் அசாந்தியில்லை - தேவா
காலாந்திரக் கீழ்நிலை கொன்றன கொலுசுகள்
சொல்லுக உடனே - அந்தச் சொற்களில்
சுகம்பெறுவேன் நானும் என்றது பேரியற்கை.
கனவுகளில் கற்றுவைத்த மந்திரம் சொன்னேன்
சென்ற ஆயுளெல்லாம் செதுக்குவேலை செய்து வைத்த
சங்கற்பமொன்று சமர்ப்பித்தேன்
ஆழப்பொருள் அமைவு. அமைதியின்றி
அள்ளி இறைத்தேன் என் அருநிதியம்.
பாவம் நீ முட்டாளே உனக்கு
புரியும்படியாகவே சொல்கிறேன் கேள்
ஒடுக்கிப் பிடித்தும் ஓங்கிய பதட்டத்தோடு
உன்னை எனக்கு பிடித்திருக்கிறது என்றேன்
என்ன உதவி வேண்டும் என்கிறாள் அவள்
தேவா . . .
உன் கிண்டல் நகைக்கங்குகள் தீய்க்கின்றன.
உன் தயாளத்தின் தாதுநாடி இறுகுகிறது என் கழுத்தில்
காலதேவா . . .
கவிப்பிறவி நான் - களைப்புண்டாக்க
முடியுமா உன்னால் ?

8.
என் வரம்பற்ற உத்தேசத்தின்
விவரணைச் சுழற்சியில்
கசிகிறது யுத்தப் புகழ்ச்சி.
எந்த  சொல்லமைப்பிற்குள்ளும் வராமல்
குழப்பிக்காட்டும் வகையிலே தயாரித்தேன்
என் வழக்கின் விபரத்தை.
கவர்ச்சியுள்ள பிரச்சினை மீதல்ல
காண்கின்ற எல்லாவற்றிலும் தெரியும்
கடுமையான சந்தர்ப்பத்தைக் குறித்து - என்
உக்கிரக்கோட்பாட்டோடு கலந்தாலோசிக்கிறேன்.
தற்காப்பாக
உடன்படிக்கை தயாராகுப் மேசையை
கடித்து துண்டாடினேன் பற்களால்
நோக்கமற்று நடக்கின்ற
கலகத்தின் தலைவனாகிய நான்
கருத்தின் உள்ளடுப்புகளில் மாறும் புத்தமைப்பு
உறுப்பைத் தீண்டுகிற கிளர்ச்சியோடு ,
விசாரணையில் காட்டவேண்டிய
சமரச நெகிழ்ச்சியை
சிறுநீரால் மூழ்கடித்துவிட்டேன்
சொல்லுங்கள் !
ஏன் எப்போதும் விடுபடுகிறது
விடுதலைப் பட்டியலில் என் பெயர்
பெயரை அடித்த கொடுங்கோல் பேனா
என் சட்டைப் பையிலிருந்தது
அதைப் பதுக்கும்போது நீங்கள் பார்த்தீர்களா
என்னை
படுதோல்வி அடையவைப்பதற்கான சூத்திரம்
என் வாதத்தின் ஒரு வார்த்தையையேனும்
ஒப்புக்கொள்வது என்பதை நீங்களறியவில்லை
படுகொலை - சித்ரவதை - அவமதிப்புகளின் சாரமாக
எழுகின்ற  என் நிபந்தனைகளைப் பிளக்கும்போது
உன்மத்தம் கோரும் குரலெ ஒழுகுவதை
நீங்கள் கண்டுபிடிக்கப்போவதில்லை
உங்கள் அறியாமையால் என்
ஊக்கத்தின் மமதையேறுகிறது
உடைக்கிற அதிநியாயம் கொண்ட
என் மறுப்பு
இப்படியே விட்டுவைக்கப்போவதில்லை
எதையும் என்னையும்.


அமுத பருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு. 
கவிதைத் தொகுதியிலிருந்து