தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Friday, May 13, 2016

ரகஸிய ஆண்கள் - எஸ். ராமகிருஷ்ணன் : முன்றில் 19

 www.padippakam.com
ரகஸிய ஆண்கள் 
- எஸ். ராமகிருஷ்ணன் : முன்றில் 19
வெயிலின் அலைகளை உறிஞ்சியபடியே வெட்ட வெளியில் மேய்ந்து கொண்டிருந்த நாற்பது ஆடுகள் மெல்ல தன் நிறம்மாறி செந்நிறம் கொண்டதையும் அவை வெக்கைதிரட்சி தாங்காது பூமியை முட்டிப் பிளந்து தலை மண்ணில் புதைய வானை நோக்கி உயர்த்திய பின் கால்களுடன் குடுர மரணம் கொண்டதையும் தன் கனவில் ஏழுமுறை கண்ட தாசி வனமாலை இதன் பலனை அறிந்துகொள்ள தெற்கே ஆள் அனுப்பி தாதங்குளம் சுப்பையாபிள்ளையை கூட்டி வரச்சொன்னாள். நெடுங்காலமாகவே மணல்கோட்டை கிராமத்தில் தங்கிவிட்ட இரண்டு பிச்சைக்காரர்கள் தாதங்குளத்திற்கு வனமாலையின் பொருட்டு சென்றனர். அப்போது தாது வருசம் நடந்து கொண்டிருந்தது.
நாற்பது வயதைக் கடந்துபோன வனமாலையை தேடி ஆண்கள் எவரும் வருவது நின்று போனது. அவளும் உடல் பருத்து சுரக்குடுவை போலாகி வெடித்த உதடுகளும் தலைமயிர் கொட்டிப்போன தலையும், செம்பட்டை புருவமுமாகயிருந்தாள். ஆண்கள் வராத பத்து வருடங்களாக அவள் வீட்டு முன் கதவு பூட்டப்பட்டு கிடக்கின்றது. முன் வந்துபோன ஆண்களின் வசீகரமும் ஸ்பரிசமும் இப்போதும் சிறு துகள்களாக வீட்டு அறைகளில் மிதந்து கொண்டிருந்தன. அவள் வளர்த்து வந்த கிளிகள் எல்லாம் பூனைக்கு இரையாகிப்போயின.
என்றாலும் அவள் வீட்டின் மூன்றுமுக ஜன்னல்களும், உயர்ந்த படிக்கட்டுகள் கொண்ட மாடியறைகளும் ஊர்வாசிகளுக்கு பிரமிப்பை இப்போதும் தந்தபடிதானிருந்தன. மணல் கோட்டையில் வசிக்கும் எந்தப் பெண்ணும் வனமாலையின் வீட்டிற்குள் வந்ததேயில்லை. அவளை துர்நடத்தை கொண்டவள் எனவும் பார்த்த நிமிடத்திலே ஆண்களை வசியபடுத்திவிடும் வசியக்காரி எனவும் பெண்கள் ஏசினர். ஆனாலும் என்ன ஊர் பெண்கள் எல்லோர் மனதிலும்
முன்றில் 19 / 11
படிப்பகம்
________________
www.padippakam.Com
சிறிய ஆசையொன்று பாம்பை போல சுருண்டு கிடந்ததை அவர்கள் அறியாமலிருந்தனர். மனதின் விசித்திரப் போக்கில் அந்த ஆசை வளரவும் செய்தது. எல்லாப் பெண்களும் ஒரு முறையாவது வனமாலையின் வீட்டினுள் போய் பார்த்து வரவே விரும்பினர். ஆனால் வனமாலையோ எந்தப் பெண்ணையும் தன் வீட்டில் அனுமதித்ததேயில்லை.
உடல் பருத்துப்போன பின்பு அவள் வெளியில் எங்கும் போவது கிடையாது என ஆனது. மூன்று படுக்கையறைகள் கொண்ட அந்த மாடியறையில் கிடந்த கறுப்பு கட்டில்களில் மரக்காளான்கள் முளைத்துப் போயிருந்தன. வனமாலை ஜன்னலை ஒட்டிய படுக்கை கொண்ட அறையில்தான் இருந்தாள். அந்த அறையில் அவளது உருவப்படம் ஒன்று சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும். குழந்தைகள் எவரும் அவள் வீட்டின் முற்றத்தில் வந்து விளையாடப் பயந்தனர். அவளது கடந்த கால வசீகரத்தையும் நிர்வாணத்தையும் கண்டிருந்த மரப்பல்லிகள் அந்த அறையின் உத்திரத்தை விட்டு போகவேயில்லை. இரவில் அவை விடாமல் சப்தமிட்டு அவளின் தனிமையைப் போக்கின.
சிறுவயது முதலே வனமாலை கனவுகளால் அழைக்கழிக்கப் பட்டாள். கனவுகள் மெல்லிய சிறகை அசைத்தபடியே அவளைச் சுற்றி பறந்து கொண்டிருந்தன. வயதான தாத்தாவால் வளர்க்கப்பட்ட அவள் நிறைய பகல் கனவுகள் காணுபவளாக வளர்ந்தாள். இந்த உலகில் உள்ளவற்றையும், இல்லாதவை பற்றியுமான அவளது கனவுகள் பல்கி பெருகின. கனவுகள் எதிர்காலத்தை சொல்லக்கூடியது என்பதை பற்றியும், ஆண்களுக்கு வரும் கனவுகள் பெண்களுக்கு வருவதில்லை என்பதை பற்றியும் சிறு வயதிலேயே அவள் அறிந்திருந்தாள். வயசாளிகள் அனைவரும் கனவுகளால் துரத்தப்படுவதாக அவளது தாத்தா தினமும் புலம்புவார். அவளுக்கு பதினோரு வயதானபோது இது போல தீய கனவு ஒன்றைக் கண்ட தாத்தா அவளையும் கூட்டிக்கொண்டு மணல் கோட்டையிலிருந்து விலகி வடக்கே புறப்பட்டுப் போனார். அவர்கள் பயணமாகிக் கொண்டிருந்த கரிசல் பூமியில் இரவு வெகு சீக்கிரமாகவே வந்து விடுகிறது. வெட்ட வெளியில் இருவரும் உறங்கினர். அன்று தாத்தா ஒற்றைக்கண் உள்ள நாய்க்கூட்டம் தன்னை விரட்டுவதாக கனவுகண்டு திடுக்கிட்டு விழித்து கையில் கத்தியுடன்
முன்றில் 19 / 12
படிப்பகம்
________________
www.padippakam.com
வெட்டவெளியில் அமுங்கிய காற்றை வெட்டியபடி திசையில்லாமல் இரவெல்லாம் ஓடினர். வனமாலை கனவு கொண்டாள். மான்குட்டியொன்று நீரில் நீந்திக் கொண்டிருந்தது. நீரில் மெல்ல மானின் நிறம் கரைந்து போக நுரை போன்ற வெண்மையுடன் மான் துள்ளி கரையேறியது. வெண்ணிற மானின் பாய்ச்சலால் உடல் விழிப்புற்றபோது மண்ணில் ரத்த துளிகள் சிதறியிருப்பதை அறிந்தாள். உடல் அசதி கொண்டது.
வெட்டவெளியில் ருதுவாகும் பெண்கள் நட்சத்திரங்கள் போல அலைக்கழிக்கப்படுவார்கள் என தாத்தா சொன்னபோது அவள் பயந்து மணல் கோட்டைக்கு திரும்பிவிட்டாள். அது முதல் அவளது கனவுகளே அவள் நாட்களை உருவாக்கின. மணற்கோட்டையின் பூர்வீகவாசிகள் எல்லோரும் கனவின் விசித்திர அறைகளில் வாழ்ந்து கொண்டிருந்தனர். ஊரே தன் முந்தைய உருவத்தின் கனவில் தானிருந்து வந்தது.
பின்நாட்களில் வனமாலையின் வீட்டில் கனவுகளுக்கு பலன் சொல்வதற்காகவே பதிமூன்று ஆண்கள் இருந்தனர். அவர்கள் பகல் நேரத்தில் கீழ் கூடத்தில் சீட்டாட்டம் ஆடியபடியேயிருப்பார்கள். இரவில் சமையற்கட்டில் உறங்குவார்கள். அவர்கள் தன் முகம் காட்டாது பலன் சொல்லுவார்கள். அவர்களும் கூட சென்ற கோடை காலத்தில் அவளை பிரிந்து போய் விட்டனர். பதிமூன்று பேர்களில் இளையவனான ஒருவன் மட்டும் பெண்களின் விபரீத கனவுகளுக்குப் பயந்து வழிப்பாதையில் இருந்த தாழஞ்சுனையில் மூழ்கி இறந்து போய்விட்டான் என தகவல் அவளுக்கு கிடைத்தது. அவனுடைய மயில்கரை வேஷ்டியொன்று சமையற்கட்டின் கொடியில் நீண்ட நாளாக உலர்ந்து கொண்டே யிருந்தது.
வனமாலையின் வீட்டுக் கதவினை தட்டும் ஆண்கள் எவரும் தன் உரு மறைந்தே வந்தனர். அந்நாட்களில் வீட்டில் அவளது செளந்தரியம் பெரிய வலைபோல எங்கும் விரிந்து கிடந்தது. எப்போதும் ரகஸிய ஆண்களின் நிழல் நடமாட்டம் அந்த வீட்டில் இருந்தபடியே இருந்தது. மணல் கோட்டையில் வருடத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே மழை பெய்யும். அங்கிருந்த நூறு வீடுகளுக்கும் அந்த மழையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்.
முன்றில் 19 / 13
படிப்பகம்
________________
www.padippakam.com
திடீரென ஒரு மதியம் உறைந்துபோய் வெயிலின் திரை கிழிந்து மழை ஊரில் வெளிப்படும். அந்நாட்களில் ஆணும் பெண்களும் உறங்குவதில்லை. மழையின்போது உறங்க முடியுமா என்ன? ஒட்டு வீடுகள் மழைச் சப்தத்தை பெருக்கின. ஈரம் காணாது நடுங்கிக் கொண்டிருந்த தெருச்சுவர்கள் மழையால் ஈர்ப்பு கொண்டன. சரியாக நாலே நாள் பெய்த பின்பு மழை அடையாளம் மறைந்து ஊர் தன்வசப்படும். அந்த மழையும் கூட தாது வருசத்தில் வராது போனது.
இது போன்ற கோடை இரவுகளில் வீடுகளில் உறங்கும் ஆண்களை பெண்கள் வெறித்துக் கொண்டிருப்பார்கள். உறக்கத்தின் போது பிறக்கும் அழகு தனியே மிளிர்ந்து கொண்டிருக்க வீட்டுப் பெண்கள் சப்தம் செய்யாது விழித்திருப்பார்கள். எப்போதாவது அசந்து உறங்கிக் கொண்டிருக்கும் பெண்ணை பார்த்த ஆண் பயமும் துக்கமும் கொள்வது தவிர்க்க முடியாதது.
கோடைக்காலம் முடிவற்று போய்க்கொண்டேயிருந்தது. துர் சகுனங்களின் காற்று ஊரை சுற்றி வீசிக்கொண்டேயிருந்தது. புழுதியை வாரி இறைக்கும் காற்றால் வீட்டுக் கதவுகள் அரிபட்டன. எல்லோரும் சோகை கொண்டது போல இருந்தார்கள். தூக்கத்தில் நடப்பவர்கள்போல இயங்கிக் கொண்டிருந்தனர். தினமும் ஊரைச் சுற்றி நட்சத்திரங்கள் அறுந்து வீழ்வதை கண்டு ஆண்களும் பெண்களும் துயர்வடைந்தனர்.
அந்நாட்களில் தான் வனமாலைக்கு கனவு வந்தபடி யிருந்தது. கனவுகளுக்கு பலன் சொல்லும் சுப்பையா பிள்ளையை கூட்டிக்கொண்டு ஊர் வந்து கொண்டிருந்தவர்கள் கூட தீவினையின் வளையங்கள் ஊரை பற்றிக் கொண்டதை தொலைவிலே கண்டனர். பசு ஒன்று கர்ப்பம் கலங்கி மஞ்சள் பாரித்த உடலும் சூரியனை வெறித்த கன்றுடனும் இறந்து கிடந்தது. சுப்பையா பிள்ளை ஊரில் நுழையும்போதே மரண வாடையை நுகர்ந்தபடியே வந்தார். பசுவின் மரணத்தால் பயங்கொண்ட சிறுமிகள் வீட்டின் உள் அடுக்குகளில் பதுங்கிக் கொண்டு பெருமூச்சு விடுவதும் முணுமுணுப்பதும் துல்லியமாக கேட்டது.
முன்றில் 19 / 14
படிப்பகம்
________________
www.padippakam.com
இப்போதும் தானியங்கள் மீதிருந்த வீடாக இருந்தது வனமாலையிடம் மட்டுமே. தெருவில் படிந்த கறுப்பின் ஊடே விளையாடிக்கொண்டிருந்தார்கள் சிறுவர்கள். இரட்டை பெண்களான பெரிய பாண்டியம்மாவும், சின்னப் பாண்டியம்மாவும் உடல் நலிவுற்று சோர்ந்து கிடந்தனர். மூத்தவள் சின்னப்பாண்டியம்மாளின் வற்றிய மார்புகளை பார்த்தபடியே நான் செத்து போக போறனடி உன்னைய விட்டுட்டு என சப்தமிட்டுக் கொண்டிருந்தாள். சின்னவளுக்கு பேச்சு கொள்ளவில்லை. இருவருமே சூடான சோளக்கஞ்சிக்கு ஆசை கொண்டிருந்தனர். சின்னப்பாண்டியம்மாள் அக்காளிடம் தோன்றிய முகவிகாரங்களைக் கண்டு அஞ்சியபடியே உறங்கினாள்.
கவலை கண்டிருந்த சிறுவர்கள் சாணம் உலர்ந்த திண்ணையை விட்டு அகலாது தெரு பார்த்தபடி இருந்தனர். மரங்களை விட்டு காற்று பிரிந்து போயிருந்தது.
வனமாலையின் வீட்டிற்கு சுப்பையாபிள்ளை வந்தபோது மாலையாகியிருந்தது. ஊரை சுற்றிலுமான திறந்தவெளியில் இன்னமும் வெளிச்சம் அடங்கவேயில்லை. மாடி அறைகளில் அவர் நுழைந்து அவளைக் கண்டபோது அவள் முதுகு நீண்ட நாற்காலியை போட்டு ஜன்னலை வெறித்தபடியே உட்கார்ந்திருந்தாள். பருத்த அந்த உடலை பார்க்க அசூயையாக யிருந்தது. தரையெங்கும் உலர்ந்து கிடந்த தாம்பூல சக்கைகளை வெறித்தபடியே அவர் சொன்னார்,
"இனிவரும் நாற்பது நாட்களுக்குள் இவ்வூர் அழிந்துவிடும். ஆடுகளை போல நாட்களும் செந்நிறம் கொண்டுவிடும்". ஒலைப்பெட்டி நிறைய தானியமும் இரண்டு நாணயமும் வைத்து அவள் மரப்பலகையில் வைத்திருந்ததை எடுத்துக் கொண்டு வீடு விலகி ஊர்வழி வரும்போது மடத்தில் இருந்த பிச்சைக்காரர்கள் இருவரும் அவரை அன்றிரவு அங்கேயே தங்கச் செய்தனர்.
அன்றிரவு சுப்பையா பிள்ளையும் கனவு கண்டார். காது நீண்ட குதிரையொன்று குமிழ் பிடி கொண்ட கதவை தட்டிக் கொண்டேயிருந்தது. குதிரையின் உடல் நீண்டு தெருவெங்கும்
முன்றில் 19 / 15
படிப்பகம்
________________
www.padippakam.com
வளைந்திருந்தது. இடைவிடாத தட்டுதலால் கதவு திறந்து கொள்ள குதிரை படியேறி உமிப்படுக்கையொன்றில் படுத்துக் கொண்டது. கனவின் கதியின்று நழுவி விழிப்புற்ற சுப்பையாபிள்ளை எழுந்து கொண்டார். குதிரை தட்டிய கதவு யாருடைய வீடு எனப் புரிந்தது. பொழுது விடிந்ததும் அவர் வனமாலையின் வீட்டிற்குள் சென்றார்.
சிறுபடிக்கட்டுகள் கொண்ட மரக்கட்டிலில் அவள் மட்டுமே உடைகளற்று உறங்கிக் கொண்டிருந்தாள். வெயில் அவள் கால்விரல்களைத் தொட்டுக் கொண்டிருந்தது. சுப்பையா பிள்ளையின் காலடி சப்தத்தால் விழித்த அவள் எழுந்து கொள்ளாமல் புரண்டபோது வீங்கிய ஸ்தனங்கள் சரிந்தன.
அவள் முகத்திற்கு எதிராக சுப்பையா பிள்ளை சொன்னார்,
"இந்த முழுநிலவின் நாளுக்கு முன் உன்னை தேடி ஒருவன் வருவான், அவனே நீ சந்திக்கும் கடைசி ஆண்”. அவர் போன நாளின் மறுதினம் பகல் நீண்டு சென்று கொண்டேயிருந்தது. ஊற வைத்த தானியங்களை தின்றபடியே ஜன்னலின் அருகே உட்கார்ந்திருந்தாள் வனமாலை, தெருவில் சப்தத்தை கொட்டியபடியே மேய்ந்து கொண்டிருந்த கோழிகள் உணவாகிப் போனதால் நிசப்தம் மட்டுமே நிரம்பியிருந்தது.
மேலத்தெருவின் கடைசி வீட்டுப் பெண்கள் நால்வர் ஒன்றுகூடி தானியக்குதிரை கவிழ்த்தனர். தூசிகளும் கல்துகள்களும் நிரம்பிய தானியங்கள் கொஞ்சம் மீதமிருந்தன. வாசல் பக்கம் வந்து தானியத்தை புடைத்தனர். தானியங்களின் உரசல் சப்தம் கேட்டு சுல்பொந்துகளிலும் கிணற்று உள் அடுக்குகளிலும் மறைந்திருந்த பறவைகள் விழிப்புற்று படை படையாக கடைசி வீட்டு முன் இறங்கின. பறவை கூட்டத்தின் வரலால் அந்தப் பகல் துகள் துகளாகி சப்தங்களால் நிரம்பியது. வீட்டின் முன் விழும் பறவைகள் மண்ணில் தலையை சிலுப்பி சுல்துகளை கொத்துவதும், தானியத்திற்காக வாயைப் பிளப்பதையும் கண்டு, முறத்தை அப்படியே வைத்து விட்டு அந்தபடியே அந்தப் பெண்கள் தானிய அறைகளுக்குள் ஒடியபோது பல பறவைகள் அலகில் தானியத்தோடு ஊரைப் பிரிந்து பறக்கத் துவங்கின. ஊர் மடத்தில் படுத்துக் கிடந்த இரண்டு பிச்சைக்காரர்களும்கூட இதைப் பார்த்தனர். பறவைகள்
முன்றில் 19 / 16
படிப்பகம்
________________
www.padippakam.Com
போனபிறகு வெளிறிய ஆகாசத்தை ஏறிட்டுப் பார்க்க ஊரில் எவருக்கும் மனம் துணியவில்லை.
தண்ணிர் அருகிப் போனதால் வனமாலையின் உடலில் கசகசப்பும் காளான் வாடையும் பெருகத் துவங்கியது. கண் இமைகள் ஒட்டிக்கொண்டு பார்வையை மறைந்தது. பெருமூச்சிட்டவாறே அவள் நாற்காலியில் பகல் எல்லாம் உட்கார்ந்திருந்தாள்.
ஊரின் கிழக்கேயிருந்த வேதக்கோவில் காற்றால் அழிவுற்றது. உப்பின் வாடை பரிந்த கோவில் கதவுகள் சக்கைகளாக பிரிவுண்டன. உலர் இலைகளும் நத்தை கூடுகளும் கோவிலில் நிறைந்தன. மரச்சிலுவையை அப்பிய நத்தைக் கூடுகளை கண்ட பாதிரியும் அவரது மணமாகாத மகளும் உலர் இலைகளுள் மண்டியிட்டு பிரார்த்தனை செய்தனர். பாதிரியின் மகளுக்கு ஊரைவிட்டு பிரிந்துபோன ஸ்நேகிதிகளின் ஞாபகமும் கிணற்றில் உதிரும் பன்னிர் பூ மரம் அழிந்து நாளும் நினைவில் வர புழுதிக் காற்றை சபித்தபடியே கண்ணிர் சிதற பிரார்த்தித்தாள். அவளது கண்ணிரின் சப்தம் வேதக் கோவிலில் சென்று பதுங்கிக்கொண்டது. பாதிரியின் வீட்டில் மட்டுமே உயிரோடிருந்த சேவல் ஒன்று இடைவிடாமல் பகலிலும் கூவி ஒய்ந்தது. -
காலி வீடுகள் அதிகமாகிப் போனதால் ஆள்முகமறியா இருட்டு தெருவில் நிரம்பிற்று. மண் சட்டிகளில் வறுபடும் தானியங்களுடன் எறும்புகள் கருகும் வாடை ஊரில் சுழன்று கொண்டிருந்தது. எறும்பு புற்றிலிருந்த் தானியம் தேடி கரிசல் வெளியை தோண்டி கலைந்தனர் ஆண்கள்.
நிலா வளர்ந்த நாட்களில் வனமாலையின் உடலில் வெடிப்புகள் துவங்கின. வேதனையாலும் இருட்டாலும் அவள் படுத்தே கிடந்தாள். ஜன்னி கண்டவள் போல பிதற்றினாள். ஊரின் தனிவெளியில் நின்றிருந்த மரத்தின் கிளைகளில் இறந்துபோன குழந்தைகள் தொங்கிக்கொண்டு அவளை அழைத்து சிரிப்பதாக கற்பனை கொண்டாள்.
வியாழன் அன்று ஊர் அறிந்திராத வெக்கை காற்று கிளம்பியது. வீட்டின் கூரைகள் பறந்து போயின. கோழிக் கூண்டுகள் வானளவு உயர்ந்து சுழன்றன. வைக்கோலை வாரி
முன்றில் 19 / 17
படிப்பகம்
________________
www.padippakam.com
இறைத்தது காற்று. பெரிய பாண்டியம்மாள் இறந்து போனாள். பிணத்தின் பின்னே போன இரண்டு பிச்சைக்காரர்களும் ஊரே பயும்கொள்ளும்படி அழுதனர். அந்த நாளில் பல வருடத்தின் பின்பு மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து தெருவில் நடமாடினாள் வனமாலை.
நடப்பது வேதனை தருவதாகயிருந்தது. ஊரின் புற வெளிவரை நடந்து திரும்பியபோது பார்வை மங்கி எதுவும் புலப்படாமல் போனது அவளுக்கு எப்பக்கம் வீடு உள்ளது என அறியாது காற்றில் எதையோ தேடுபவள் போல அலைவுற்றாள். பின் அந்த பிச்சைக்காரர்களே அவளை வீடு அழைத்து வந்தனர். அதன்பின் அவளுக்கு நாட்கள் மறந்து போயிற்று. முடிவற்ற ஒரே நாளில் தான் இருப்பதாகவே உணர்ந்தாள். பின் வீட்டின் மண் கலயம் ஒன்று உருண்டு உடைவதையும் யாருடைய காலடி சப்தமோ வீட்டில் அலைவதையும் ஒருமுறைக் கேட்டாள். அந்த சப்தம் ஆணின் காலடியாகவேயிருந்தது. சுப்பையாபிள்ளை சொன்னதன் ஞாபகம் வந்தது.
காலடி சப்தம் மிக அருகில் வந்து அவள்முன் நின்றது. அவள் தலையைத் திருப்பினாள். "சாவிய எங்க வச்சிருக்கே" அந்தக் குரல் மிக கடினமானதாக இருந்தது. என்றாலும் அதை அவள் விரும்பினாள். அது அவளுக்குள் வேட்கையை அதிகப்படுத்தியது. அவளது தலையணைக்குள் முரட்டு கையொன்று எதையோ தேடி அவளை புரட்டியது. அவள் மயிர் நிறைந்த அந்த புறங்கையை பற்றிக் கொண்டாள். பிசுபிசுப்பான தன் உதட்டோடு அந்த கைகளை பதித்தபோது அந்த மனிதன் அசைவில்லாமல் நின்றான்.
"கட்டிலில் உட்கார்' - என்ற அவள் குரலுக்கும் அடிபணிந்தான். அவள் உஷ்ணமூச்சை அறிந்தபடியே கேட்டாள்.
"வெளியே இப்போது பகலா, இரவா" "பகல் முடியப்போகிறது". அவன் உள்ளங்கையிலிருந்து அவனுக்கு இருபது வயதுக்குள்தானிருக்கும் என அறிந்து கொண்டாள். அவன் உடல் கூழாங்கற்கள் போல இறுகி சில்லிட்டிருந்தது. நீண்ட முன்றில் 19 / 18
படிப்பகம்
________________
www.padippakam.com
நாட்களுக்குப் பின் தன் படுக்கையில் அமர்ந்திருக்கும் மனிதனின் தலைமயிரை அவள் விரல்கள் கோதின. சுருள் சுருளாக தலைமயிர். புரண்டு படுக்கையின் கீழ் இருந்த நாணயங்கள் சிலவற்றை எடுத்து அவன் உள்ளங்கைகளில் வைத்து கிசு கிசுக்கும் குரலில் சொன்னாள்.
"இன்றிரவு இங்கேயே இருந்துவிடு. எல்லா நாணயமும் உனக்கு உரிமையாகிவிடும்”,
அவன் நாணயத்தை தன் பல்லால் கடித்துப் பார்த்துவிட்டு கைகளில் பொதித்துக்கொண்டான். அவனிடமிருந்து மறுப்பு வராதலால் அவள் குரலை உயர்த்தி சொன்னாள்.
"நான் குளிக்க வேண்டும். எங்காவது போயி தண்ணிர் எடுத்து வாயேன்”.
அவன் எழுந்து அறையைவிட்டு கிளம்பும் முன் அறை முகப்பில் இருந்த மர அலமாரிகளைத் திறந்தான். நூற்றுக் கணக்கான ஜோடி செருப்புகள் நிறமிழந்து வாய் பிளந்து சரிந்தன. அவன் தண்ணிர் தேடி சென்றான்.
அவன் திரும்பியபோது ஊரின்மீது பூரண நிலா மிதந்து கொண்டிருந்தது. வீடுகளை, தொழுவங்களை, அறுபட்ட மரங்களை வசீகரமாக்கிக் கொண்டிருந்தது வெண்ணிறம். வீட்டின் பின் கதவுகளை திறந்தான். தண்ணிர் அலம்பும் சப்தம் கேட்டுவிடாமல் பானையை கீழே வைத்தான்.
மரப்படிக்கட்டுகள் வழியாக வனமாலையை அழைத்துக் கொண்டு வந்தான். அவள் எதோ ஒரு கனவின் பாதியிலிருந்து அறுபட்டு எழுந்து வந்தாள். துவை கல்லில் உட்காரச்செய்து தண்ணிர் ஊற்றினான். தண்ணிரின் சப்தம் கேட்டு உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் விழித்துக்கொண்டு நாக்கை சப்பியபடி கைகளால்_ எதையோ_தேடி _ பிதற்றினர் பலவீடுகளிலும்.
ஈர உடலுடன் அவளை அறைக்கு கூட்டி வந்தான். நெடு. நாட்களாக திறக்கப்படாத அந்தப் புட்டிகளை அவன் திறந்தான். அத்தரின் வாடை அறையை நிரப்பியது. காற்றின் வேகத்தில் ஊரெங்கும் பரவியது. நெசவாளியும் குழந்தைகள் அற்றவளுமான
முன்றில் 19 / 19
படிப்பகம்
________________
www.padippakam.com
செளந்தரவல்லி இரவில் திடீரென பரவிய அத்தர்வாடை. தாங்காது மயங்கி விழுந்தாள்.
ஆண்களை விலக்கி உறங்கிக் கொண்டிருந்த பெண்களும் கூட இவ்வாடையால் நடுக்கமும் வேட்கையும் கொண்டு ஆண் உடல் புகுந்தனர். அவன் அறையிலிருந்த எல்லாப் பொருட்களையும் மூட்டை கட்டினான். சிறுவிளக்கு ஒன்று மட்டுமே அந்த அறையில் எரிந்து கொண்டிருந்தது. குருவியென தட்டளியும் விளக்கின் சுடரில் வனமாலையைப் பார்த்தான். அவள் உடல் திறந்து கிடந்தாள். விளக்குடன் நெருங்கி வரும்போது அவள் நிழல் சுவரேறி உயர்ந்து விட்டத்திற்கு வந்தது. விடிவதற்குள் ஒரேயொருமுறை அவளை முத்தமிட்டான். கசப்பும் உப்பின் வாடையும் கொண்ட முத்தம் அது. நாற்பதாவது நட்சத்திரம் எரிந்து வீழ்ந்த காலையில் புறப்பட்டு ஊர்விட்டுப் போனான். ஊரை அடுத்த நாளும் அத்தரின் வாசனை சுற்றிக் கொண்டிருந்தது. மூன்றாவது நாள் அவள் வீட்டில் நுழைந்த பிச்சைக்காரர்கள் சிதறிய நாணயங்கள் மூன்றை கண்டெடுத்தனர். திறந்து கிடந்த படுக்கையறையில் வனமாலையின் ஸ்தனங்களில் நகங்களை பதித்தபடி நின்றிருந்த வெருகுபூனை ஆள்முகம் கண்டு தாவி ஓடியது. அவர்கள் அருகில் சென்று பார்த்தபோது வனமாலை இறந்து இரண்டு நாளாகிப் போயிருந்தது.

வரப் பெற்றோம்
காத்திருப்பு (கவிதை)
ஆசிரியர் : ரவி சுப்ரமணியன் விலை : 20.00 வெளியீடு : அன்னம், சிவகங்கை
நானும் சாத்தானும் நண்பர்கள் (கவிதை)
ஆசிரியர் : வளன்
விலை : 12.00
வெளியீடு : அனிதா பிரசுரம்,
23/2, கிழக்கு புது பைகாரா தெரு, உறையூர், திருச்சி
முன்றில் 19 120
படிப்பகம்