தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Monday, May 23, 2016

கொரில்லா - ஷோபாசக்தி (முதல் அத்தியாயம்)

கொரில்லா - ஷோபாசக்தி
 (முதல் அத்தியாயம்)
"நான் உலகத்தால் ஏமாற்றப்பட்டு வருகிறேன்
நான் கடவுள்களால் ஏமாற்றப்பட்டு வருகிறேன்
நான் வரலாற்றால் ஏமாற்றப்பட்டு வருகிறேன்"
பவாஸ்துர்கி
________________

பேராசான் கார்ல் மார்க்சுக்கு
காதலியாய்க் கிடந்து, மரித்து
வரலாற்றின் இருள் அடுக்குகளில் சிதிலமாய்க்
கீறப்பட்ட அந்த ஊழியக்காரி
ஹெலன் டெமூத்தின் நினைவுகளுக்கு...
________________

தொடரும் ...
________________

Jakappu Anthony Thasan
CHEZ. R. JEYAKKODI
64, RUE MYRHA
75018 PARIS.
LE DIRACTOR,
O.F.P.R.A.,
IMMEUBLE LE FOREZ,
45, RUE MAXIMILIEN ROBESPIERRE,
94126 FONTENAYSOUS – BOIS CEDEX.
3. அரசியல் தஞ்சம் கோரும் விண்ணப்பம் (மேன்முறையீடு).
4. ஐயா நான் யாகப்பு அந்தோணிதாசன். இலங்கைத் தமிழ். ரோமன் கத்தோலிக்கன். பிறந்த திகதி : 26.12.1967. நான் சிறிலங்காவின் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த தீவுப் பகுதியிலுள்ள மண்டைதீவு எனும் தீவைச் சேர்ந்தவன். எனது தீவு யாழ்ப்பாண நகரத்திலிருந்து ஏறத்தாழ மூன்று கிலோ மீற்றர்கள் தொலைவிலுள்ளது.
5. எனது தாய் நாட்டில் எனக்கும் குடும்பத்தினருக்கும் இலங்கை - இந்திய இராணுவத்தினராலும் தமிழ் போராளிக் குழுக்களாலும் ஏற்பட்ட கொடுமைகளால் எனது உடல் மன நிலைகள் சிதைவடைந்த நிலையிலும் இரண்டு வருட சிறை வாசத்தின் பின்பும் எனது உயிரைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு சிறிலங்காவில் இருந்து தப்பி வந்து தங்கள் நாட்டில் அரசியல் தஞ்சத்தைக் கோரினேன். ஆனால் எனது தஞ்சக் கோரிக்கையை நீங்கள் மூன்று தடவைகள் நிராகரித்து விட்டீர்கள், என்னை பிரான்ஸை விட்டு உடனே வெளியேறுமாறு பொலிசார் கட்டளைக் கடிதம் அனுப்பியுள்ளார்கள். நான் வெளியேறி எங்கே செல்வது? எனது தாய் நாட்டில் எனக்கு நடந்த கொடுமைகளையும் ஏற்பட்ட உயிர் அபாயத்தையும் நான் விபரமாக தங்களுக்குத் தெரிவித்திருந்துங்கூட நீங்கள், 25 ஜூலை 1952 ஜெனிவாச் சட்டத்தின் இரண்டாவது பிரிவின் கீழ் மூன்று தடவைகளும் எனக்கு அரசியல் தஞ்சத்தை நிராகரித்துள்ளீர்கள். மிகவும் துரதிர்ஸ்டமான அந்த இரண்டாவது சட்டப்படி நீங்கள் கூறுவது என்ன? எனக்குத் தனிப்பட்ட ரீதியில் இலங்கையில் ஆபத்து இல்லை. எல்லா இலங்கைத் தமிழர்களுக்கும் உள்ள பொதுவான ஆபத்தையே நானும் எதிர்கொள்வதால் எனக்கு அரசியல் தஞ்சம் வழங்க சட்டம் மறுக்கிறது என்கிறீர்கள். நான் எனக்குத் தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட ஆபத்துக்களைச் சுட்டிக் காட்டிய பின்புங் கூட அவற்றிற்கு ஆதாரங்கள் எதையும் நான் தங்களுக்குக் காட்டாதபடியால் அந்த ஆபத்துக்கள், ஆபத்துக்களே இல்லையென்ற முடிவுக்கு நீங்கள் வந்திருப்பது வருத்தத்துக்குரியது. ஐயா எங்கள் நாட்டில் எல்லாம் இராணுவம் ஒரு தமிழரை வெட்டிவிட்டு நாங்கள்தான் வெட்டினோம் என்று ஒரு சான்றிதழை வெட்டப்பட்டவருக்கு வழங்குவதில்லை. ஏதாவது ஒரு உறுதியான அரசியல் காரணத்தாலேயே எங்களை நோக்கி சுடப்படும் துப்பாக்கிக் குண்டு எந்தச் சுடுகுழலின் வழியாய் வந்தது என்பதை எம்மால் பல சமயங்களில் அறிந்து கொள்ள முடிவதில்லை. மேன் முறையீடு செய்யும் போது புதிய ஆபத்துக்கள் குறித்து எழுதுவது விண்ணப்பத்துக்கு வலுச் சேர்க்கும் என வழக்கறிஞர் அறிவுறுத்தினார். எனக்குப் புதிய ஆபத்துக்கள் ஏதும் இன்னும் ஏற்படாததையிட்டு நான் இப்போது மிகவும் வருந்துகிறேன்.
6. இணைப்பு
நான் 31.12.92 அன்று கொழும்பிலிருந்து புறப்பட்டு விமானம் மூலமாக உக்ரேன் நாட்டுக்கு வந்தேன். பின் அங்கிருந்து 06.01.93 அன்று புறப்பட்டு விமானம் மூலமாகத் துருக்கி வந்தேன். பின்பு 10.01.93 அன்று துருக்கியிலிருந்து புறப்பட்டு கப்பல் மார்க்கமாக 16.01.93 அன்று இத்தாலி வந்தேன். இத்தாலி நாட்டில் எனக்கு அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்ட காரணத்தினால் 20.01.93 அன்று இத்தாலியிலிருந்து புறப்பட்டு கார் மூலமாக பிரான்ஸ் வந்து சேர்ந்தேன்.
7. ஆனால் பிரான்ஸ் எல்லையில் நான் பிரஞ்சு எல்லைப் பாதுகாப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டு கைகளில் விலங்கிடப்பட்டேன். நான் பொலிசாரிடம் அரசியல் தஞ்சம் கோரினேன். உடனடியாகப் பொலிசார் என்னை ஒரு பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று சிறைவைத்தார்கள். என்னைத் திரும்பவும் சிறிலங்காவுக்கு நாடுகடத்தப் போவதாகக் கூறி என் பெயர் வயது முதலிய விபரங்களைக் கேட்டார்கள் (எனது பாஸ்போர்ட்டை துருக்கியில் பயண முகவர் பறித்து வைத்துக் கொண்டார்). பொலிசார் என்னை சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்போகிறார்கள் என அச்சமுற்ற நான் எனது உண்மைப் பெயரை மறைத்து ராதாசேதுபதி என்ற பொய்ப் பெயரைக் கொடுத்தேன். அவ்வாறே கையொப்பமும் இட்டேன்.
8. எனது சொந்தப் பெயரில் நான் சிறிலங்கா திரும்பினால் கொழும்பு விமானநிலையத்தில் வைத்தே பொலிசாரால் நான் கைது செய்யப்படுவேன் என்பது எனக்கு நன்கு தெரியும்.
9. அடுத்த நாள் (21.01.93) காலை பத்து மணிக்கு ஒரு பெண்மணி வந்து என்னை விசாரணை செய்து வாக்குமூலம் எடுத்தார். அந்த வெள்ளைக்காரப் பெண்மணி தமிழில் சரளமாக என்னுடன் உரையாடியதால் நான் எனது பிரச்சனைகளை அவருக்கு விபரமாக எடுத்துச் சொன்னேன். அன்று பிற்பகல் எனக்கு ஒரு பத்திரத்தை வழங்கி (எட்டு நாட்களுக்கான வதிவிட அனுமதிச் சீட்டு) பிரான்ஸ் நாட்டுக்குள் என்னை அனுமதித்தார்கள். அந்தப் பத்திரத்தின் நகலை இத்துடன் இணைத்திருக்கிறேன்.
10. நான் எனது ஆரம்பக் கல்வியை மண்டைதீவு ரோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையிலும் உயர்கல்வியை யாழ் மத்திய கல்லூரியிலும் கற்றேன்.
11. 1983 யூலையில் நாட்டில் ஏற்பட்ட வன்செயல்களைத் தொட்ர்ந்து எனது மூத்த சகோதரன் தேவதாசன் LTTE இயக்கத்தில் இணைந்தார். 04.11.1983 அன்று பயிற்சிக்கென இந்தியா சென்றார். அதன் பின்னர் அவரைப் பற்றிய தகவல் ஏதும் இன்றுவரை எனக்குக் கிடைக்கவில்லை. -
12. எனது சகோதரன் இந்தியா சென்ற சில தினங்களிலேயே இராணுவத்தினர் எனது வீட்டுக்கு வந்து எனது சகோதரனைத் தேடினார்கள். அடிக்கடி வீட்டுக்கு வந்து சோதனையிட்டார்கள். 1984 மார்ச் மாதம் எனது தந்தையாரை குருநகர் இராணுவ முகாமுக்கு பிடித்துச் சென்று ஒன்பது நாட்கள் தடுத்துவைத்து சித்திரவதை செய்தார்கள். அடித்து அவரது காலை முறித்து பின் விடுதலை செய்தார்கள்.
13. எங்கள் குடும்பத்துக்கு இராணுவம் அடிக்கடி தொல்லை கொடுத்ததினாலும் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டதாலும் உடலும் உள்ளமும் பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்ட தந்தையால் தொழிலில் ஈடுபட முடியாமல் போக கா.பொ.த உயர்தரம் (வர்த்தகம்) முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்த நான் படிப்பை நிறுத்திவிட்டு தந்தையாரின் தொழிலான மணல் அள்ளும் தொழிலை ஏற்றுக் கொண்டேன்.
14 ஒய்வு நேரங்களில் வியாபார ஸ்தலங்களுக்கு விளம்பரப் பலகைகள் எழுதும் தொழிலையும் செய்து வந்தேன். LTTE இயக்கத்தினர் தங்களது இயக்கத்துக்காக சுவரொட்டிகளை வரைந்து தருமாறு என்னைக் கேட்டார்கள். அடிக்கடி அவர்களுக்கு விளம்பரங்களும் சுவரொட்டிகளும் வரைந்து கொடுத்தேன்.
15. தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாக மூன்று மேடை நாடகங்களையும் ஒரு வீதி நாடகத்தையும் எழுதி இயக்கினேன். வேள்வி (1985), தாகம் தீரும் வரை' (1985), 'கண்ணன் வருவானா (1987) ஆகிய நாடகங்கள் பல தடவைகள் மேடையேறின. வியாகுலப் பாடல் (1986) எனும் வீதிநாடகம் முன்னுறுக்கும் மேற்பட்ட தடவைகள் யாழ் மாவட்டமெங்கும் நடாத்தப்பட்டது.
16. 1987.10.10இல் இந்திய அமைதிப்படையினரும் புலிகளும் மோதத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து 18.01.1988இல் காட்டிக் கொடுக்கும் முகமூடி மனிதர்கள் சகிதம் காலை ஏழு மணிக்கு என்னைத் தேடி இந்திய இராணுவம் எனது வீட்டுக்கு வந்தது.
17. அப்பொழுது நான் வீட்டில் இருக்கவில்லை. தொழிலுக்கு சென்றுவிட்டேன். என்னை வேலணை இராணுவ முகாமில் வந்து சரணடையுமாறு கூறிய இராணுவம், நான் சரணடையாவிட்டால் மறுநாள் எனது குடும்பத்தினரைப் பிடித்துச் செல்வோம் என என் தந்தையாரிடம் கூறிச் சென்றது.
18. மறுநாள் 19.01.1988 அன்று வேலணை சமாதான நீதவான் திரு. கோபாலபிள்ளை மூலம் வேலணை-வங்களாவடி IPKF முகாமில் சரணடைந்தேன். அந்த முகாமில் மட்ராஸ் எயிட் ரெஜிமென்ட்' எனும் பேர்கொண்ட இராணுவப் படைப்பிரிவு நிலைகொண்டிருந்தது. அந்தப் படைப்பிரிவின் தளபதி மேஜர் கிருஷ்ணசாமி என்னை விசாரணை செய்தார்.
19. IPKF ஆல் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு அங்கிருந்த ரகு, காசி எனும் இரு புலிப்போராளிகள் என்னைக் குறித்து சாட்சியம் அளித்தனர். நான் இயக்கத்துக்கு விளம்பரம் வரைவதாகவும் நாடகம் எழுதுவதாகவும் அவர்கள் அமைதிப்படையினருக்குக் கூறினார்கள். வேறு வழியின்றி நான் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தேன்.
20. என்னை முகாமிலேயே தடுத்து வைத்த அமைதிப் படையினர் 20.01.1988 அன்று எனக்குச் சாக்கினாலே முகமூடி அணிவித்து தங்களின் வாகனத்தில் ஏற்றி என்னை எனது கிராமமான மண்டைதீவுக்கு அழைத்து வந்தார்கள். அப்போது நேரம் அதிகாலை நான்கு மணி இருக்கலாம். '
21. அமைதிப் படையினர் மண்டைதீவு முழுவதும் ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்து அனைத்து வாலிபர்களையும் பிலிப்பு நேரியார் கோவில் மைதானத்திலே பிடித்து வந்து நிறுத்தினார்கள். என் முன்னே அவர்களை வரிசையாக வரச்செய்து அவர்களுக்குள் LTTE யினர் இருந்தால் அடையாளம் காட்டுமாறு கட்டளையிட்டார்கள். அந்த வரிசையில் LTTE எவரும் இல்லையென்று கூறினேன். அன்று கிராமத்தில் எவரையும் கைது பண்ணவில்லை. என்னை மீண்டும் முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.
22. பின்பு “ஏன் ஒரு புலியையும் பிடித்துத்தரவில்லை?" என்று கேட்டு தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு அடித்தனர். நான் முகாமிலிருந்த பன்னிரெண்டு நாட்களுமே என்னைச் சித்திரவதை செய்தனர். எனது பெற்றோரின் பெரு முயற்சியாலும் எனது ஊர் பிரஜைகள் குழுத் தலைவரான திரு. A. அம்பலவாணர் J.P அவர்களின் சிபாரிசின் அடிப்படையிலும் 31.01.1988 அன்று விடுதலை செய்யப்பட்டேன். ஆனால் தினமும் அமைதிப் படையினரின் உத்தரவின் பேரில் வேலணை IPKF முகாமுக்குச் சென்று கையெழுத்திட்டு வந்தேன். IPKF இலங்கையில் இருந்த நாள் முழுவதும் இவ்வாறு கையொப்பமிட்டு வந்தேன்.
23. IPKF 1990 இல் வெளியேறியதைத் தொடர்ந்து காட்டுக்குள் இருந்து நாட்டுக்குள் வந்த LTTE யினர் எனது வீட்டுக்கு வந்து 1990.05.05 அன்று என்னைக் கைது செய்தார்கள். முகமூடி போட்டுக் காட்டிக்கொடுத்த தமிழினத்துரோகி என்றும் இந்திய இராணுவத்துக்குத் தகவல் கொடுத்தேன் என்றும் பொய்க் குற்றம் சாட்டினார்கள். 

24. குஞ்சன் வயலிலுள்ள அவர்களது முகாமில் ஒரு வார காலமாக தடுத்துவைத்து 13.05.1990இல் என்னை விடுதலை செய்தார்கள். ஆனால் அவர்கள் தொடர்ந்தும் என் நடவடிக்கைகளை கண்காணித்துக் கொண்டிருந்தார்கள் என்பதை நான் அறிவேன்.
25. சிறிலங்கா இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 1990 யூன் மாதத்தில் இரண்டாவது ஈழப்போர் ஆரம்பமானது. யாழ் கோட்டையை மீட்கும் நோக்கத்துடன் 22.08.1990இல் ஊர்காவற்துறையில் இருந்து இலங்கை இராணுவப் படைப்பிரிவுகள் நாரந்தனை-சரவணை வேலணை- மண்கும்பான் -அல்லைப்பிட்டி வழியாக மண்டை தீவுக்கு வந்தது. அவர்களோடு தமிழ்க் குழுக்களின் இளைஞர்களும் சேர்ந்து வந்தார்கள். கடல் வழியாக வந்த இலங்கை கடற்படையினரும் எமது தீவை வளைத்துக் கொண்டார்கள்.
26. எங்கள் வீட்டின் பின்புறம் விமானக் குண்டு வீச்சுக்களிலிருந்து தப்பிப்பதற்காக ஒர் பதுங்கு குழி அமைத்திருந்தோம். அதற்குள் எனது இரு தம்பிகள், தங்கை, அம்மா ஆகியோர் என்னோடு உள்ளே ஒளிந்திருந்தனர்.
27. சரமாரியாக சுட்டுக்கொண்டும், ஷெல் அடித்துக் கொண்டும் வந்த இராணுவத்தினர் எனது வீட்டை தீயிட்டுக் கொளுத்தினர். பின்னர் பதுங்கு குழி அருகில் வந்து உள்ளே எட்டிப்பார்த்தனர். நாங்கள் எல்லோரும் கைகளை உயர்த்தியவாறே மேலே வந்தோம்!
28. இராணுவத்தினர் சுமார் பத்துப் பேர் இருப்பார்கள். அவர்களோடு நான்கு காட்டிக்கொடுக்கும் தமிழ் இளைஞர்களும் இருந்தனர். அந்த இளைஞர்களிடையே எனது கிராமத்தைச் சேர்ந்த சந்தியா சசிதரன் என்ற இளைஞரும் இருந்தார்.
29. அவர் என்னைச் சுட்டிக்காட்டி நான் LTTE ஆதரவாளன் என்றும் எனது அண்ணன் பெரிய LTTE உறுப்பினர் என்றும் எனது குடும்பமே LTTE ஆதரவுக் குடும்பம் என்றும் இராணுவத்தினருக்கு கூறினார். இதைக் கேட்டதுமே இராணுவத்தினர் ஆவேசக் கூச்சலிட்டவாறே என்மீதும் என் இரு தம்பிமார் மீதும் பாய்ந்து வாள்களாலும் கத்திகளினாலும் தாக்கினார்கள்.
30. எனக்கு தலையில் விழுந்த வாள் வெட்டுக் காரணமாக நான் மயங்கி விழுந்து விட்டேன்.
31. நான் கண் விழித்த போது யாழ் பொது மருத்துவமனையில் இருந்தேன். என் கால்களை அசைக்க முடியாமலிருந்தது. இராணுவத்தினர் எனது கால் எலும்புகளை அடித்து நொறுக்கி விட்டிருந்தார்கள். என் தலையில் தையல் போடப்பட்டிருந்தது. என்னை கத்தோலிக்க மதகுருவான வில்வரசிங்கம் அவர்கள் படகு மூலம் எடுத்து வந்து ஆஸ்பத்திரியில் அனுமதித்ததாகவும் என் இரு தம்பிகளான அருள்தாசனையும், நிமலதாசனையும் இராணுவம் வெட்டிக் கொலை செய்து விட்டதாகவும் அவர்களின் உடல்கள் கூட கிடைக்கவில்லையென்றும் பின்பு என் பெற்றோர் மூலம் அறிந்து கொண்டேன்.
32. என்னையும் சகோதரர்களையும் வெட்டும் போது எனது பெற்றோரையும் சகோதரியையும் ஓடுமாறு இராணுவம் கட்டளையிட்டதாகவும் அவர்கள் அவ்வாறே ஓடி மண்டைதீவு புனித தோமையார் கோவிலில் இருந்து இரண்டு நாட்களுக்குப் பின் மண்டைதீவிலிருந்து தப்பி ஓடி படகின் மூலம் பாசையூர் சென்று புனித அந்தோனியார் கோவில் அகதிமுகாம் சென்றடைந்ததாகவும் கூறினார்கள்.
33. ஆஸ்பத்திரியில் சனநெருக்கடியான நிலமையாய் இருந்தபடியால் மருத்துவரின் வேண்டுதலால் 18.09.1990இல் ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறி பாசையூர் அகதிமுகாம் சென்று எனது குடும்பத்தினருடன் தங்கியிருந்தேன். என்னை பெற்றோர் அகதிமுகாமில் வைத்து பராமரித்தார்கள். அகதிமுகாம் வாழ்க்கை யும் நிம்மதியாய் அமையவில்லை. அடிக்கடி விமானங்கள் அகதிமுகாம் மீது குண்டுகளை வீசின. தவிர இராணுவமும் பல வழிகளிலும் முன்னேறிக் கொண்டிருந்தது. எப்போது பாசையூருக்குள் இராணுவம் நுழையும் என்று சொல்ல முடியாத நிலை. எனது பெற்றோருக்கு நான்கு ஆண்பிள்ளைகள். எஞ்சியிருப்பது நான் ஒருவனே. எனவே, என்னையாவது காப்பாற்றும் நோக்கத்தோடு என்னைக் கொழும்பு சென்று வாழுமாறு தந்தையார் கூறினார். பத்தாயிரம் ரூபாய்கள் பணமும் தந்தார்.
34. நான் 14.01.1991இல் பாசையூர் அகதிமுகாமை விட்டுப் புறப்பட்டு தனியார் பஸ் மூலம் கேரதீவு சென்று அங்கிருந்து படகு மூலம் பூநகரி சங்குப்பிட்டி சென்று சைக்கிள் மூலம் 16.01.1991இல் வவுனியாவில் உள்ள எனது உறவினர் தேவநாயகம் அவர்களின் வீடு சென்றடைந்தேன். ஒரு நாள் அங்கு தங்கி மரக்கறி ஏற்றி இறக்கும் அவருக்குச் சொந்தமான லொறியில் (TN TRANSPORT) 17.01.1991 காலை புறப்பட்டு மாலை எட்டு மணிக்கு கொழும்பு சென்றடைந்தேன். -
35. கொழும்பில் Avendal Lodge, 24/6, மகிந்த மாவத்த, மருதானை எனும் முகவரியில் தங்கினேன். 20.01.1991இல் காலை 6.30 மணிக்கு மருதானைப் பொலிசாரும், மருதானை பொலிஸ் நிலைய (கொழும்பு-10) பொறுப்பதிகாரி பேர்னார்ட் டீ சில்வாவும் எனது தங்குமிடத்துக்கு வந்து என்னையும் அங்கிருந்த ஏனைய தமிழ் வாலிபர்களையும் கைது செய்து மருதானை பொலிஸ் நிலையத்துக்கு கூட்டிச் சென்றனர். அங்கு கூடுகளில் எங்களை அடைத்து உடைகளைக் கழற்றி அனைவரையும் நிர்வாணமாக்கி விசாரணைகள் செய்தனர். ஏற்கனவே சுமார் முப்பது இளைஞர்கள் அங்கு பிடிபட்டு இருந்தனர். என் உடலில் உள்ள காயங்கள் குறித்து கடுமையாக விசாரித்தனர். நான் உண்மையைக் கூறினேன். பொலிசாரோ இல்லை LTTEE இராணுவத்தோடு நடந்த மோதலில் ஏற்பட்ட காயங்களே இவை எனக் கூறி என்னைக் கடுமையாகத் தாக்கினார்கள். -
36, 28.01.1991 பிற்பகல் பன்னிரண்டு மணியளவில் என்னையும் இன்னும் ஏழு இளைஞர்களையும் இராணுவ ட்ரக்கில் ஏற்றி கல்கிசையில் இருந்த தற்காலிக இராணுவ முகாமுக்கு அழைத்துச் சென்று அங்கு ஒப்படைத்தார்கள். அங்கும் எனது உடலில் உள்ள காயங்கள் குறித்து விசாரணை செய்தார்கள். முகமூடி அணிந்த உருவம் ஒன்று என்னை LTTE என்று அடையாளம் காட்டியது. அதைக் கேட்டவுடனேயே இராணுவத்தினர் என்னை பலமாகத் தாக்கினார்கள். அப்போதுதான் இலேசாக மாறிக் கொண்டிருந்த காயங்களின் மேல் துவக்குப் பின்புறத்தால் தாக்கினார்கள். கைவிலங்கிடப்பட்ட நிலையில் மேசை மீது எனது கைகள் வைக்கப்பட்டு விரல்கள் மீது தடியால் தாக்கியதால் எனது வலது கையின் நாலாவது விரல் முறிந்தது. நடுவிரலும் சிதைக்கப்பட்டது. பின் எனது கால் விரல்களை சிறு குறடு ஒன்றினால் பிடித்து மடக்கி சித்திரவதை செய்தார்கள். பொலித்தீன் பையை நெருப்பில் உருக்கி எனது ஆணுடம்பின் மீது ஊற்றினார்கள். எனது இடது கையில் மெல்லிய கத்தியால் மூன்று தடவைகள் கீறி மிளகாய்த்துள் போட்டார்கள். நான் மயங்கி விட்டேன்.
2. பின்பு 30.01.91இல் என்னை மீண்டும் மருதானை பொலிஸ் நிலையத்தில் இராணுவத்தினர் ஒப்படைத்தார்கள். நான் அடிக்கடி மயங்கி விழுந்தவாறேயிருந்தேன். குண்டு வைக்கவா கொழும்பு வந்தாய்? எனக் கேட்டு பொலிசார் என்னை சித்திரவதை செய்தார்கள். ஒரு வாரத்தின் பின்பு என்னை மாற சிறையில் அடைத்தார்கள். மருதானை பொலிஸ் நிலையத்திலிருந்து என்னை சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்ற சப்-இன்ஸ்பெக்டரின் பெயர் பெரேரா ஆகும். எனக்கு சிறையில் தரப்பட்ட இலக்கம் D.C. 627.
3. மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை என்னை மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வார்கள். நீதிபதி பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தின் கீழ் எனக்கு மேலும் மூன்று மாதங்கள் விளக்க,மறியலை விதிப்பார்.
4. இரண்டு வருடங்களாய் நான் சிறையில் வருந்திய நிலையில் 25.12.1992 அன்று அமைச்சர் எம். எஸ். செல்லச்சாமி அவர்களுடைய சிபாரிசின் அடிப்படையில் மாற சிறையிலிருந்து சில இளைஞர்கள் விடுவிக்கப்பட்டனர். நானும் விடுதலையானேன். (பின்பு இந்த சிபாரிசை ஏற்பாடு செய்ததற்காக அமைச்சர் எம்.எஸ். செல்லச்சாமியின் செயலாளர் கோவிந்தராஜன் என்பவர் என்னிடம் பத்தாயிரம் ரூபாய்களை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டார்).
5. விடுதலையாகி வந்து 26/1, டாம் வீதி, கொழும்பு-13 எனும் முகவரியில் தங்கினேன். 27.12.1992இல் மீண்டும் நித்திரையில் வைத்து புறக்கோட்டைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.
6. பொலிஸ் அதிகாரிகாரிகளிடம் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் சிறையிலிருந்து விடுதலையாகி வந்தேன் என்று கூறினேன். அவர்கள் அதை அக்கறை பண்ணவில்லை. 28.12.1992 காலையில் பொலிஸ் நிலையத்துக்கு அடையாளம் காட்ட சில தமிழ்க் குழுக்களை சேர்ந்த வாலிபர்கள் வந்தனர். அவர்களில் எனது அயற் கிராமமான அல்லைப்பிட்டியைச் சேர்ந்த முரளிதரன் என்பவரும் இருந்தார். அவர் என்னை LTTE ஆதரவாளன் என்று பொலிசாருக்குக் காட்டிக் கொடுத்தார்.
7. பொலிஸ் நிலையத்திலிருந்த ஒவ்வொரு நாளும் தாங்கொண்ணாத சித்திரவதைகளை அனுபவித்தேன்.
8. பின்னர் 15.01.1993இல் எனது உறவினர் திரு. மருசலீன் அவர்கள் பொலிசாருக்கு லஞ்சமாய் இருபத்தையாயிரம் ரூபாய் களைக் கொடுத்து என்னை விடுவித்தார். ஆனால் ஒவ்வொரு நாளும் பொலிஸ் நிலையம் வந்து கையெழுத்து இடுமாறு உத்தரவிடப் பட்டேன்.
9. ஒவ்வொரு நாளும் நான் கையெழுத்திடப் போகும் போதெல்லாம் அங்கிருக்கும் பொலிசார் என்னைப் பிடித்து அடிப்பார்கள். சட்டையைக் கழற்றி வருவோர் போவோருக்கெல்லாம் எனது காயங்களைக் காட்டி கொட்டியா எனக் கூறி பரிகசிப்பார்கள். காலை ஒன்பது மணிக்கு பொலிஸ் நிலையம் போகும் என்னை இரவு தான் திரும்பிச் செல்ல அனுமதிப்பார்கள். பகல் பொழுது முழுவதும் சித்திரவதைகளோடு பொலிஸ் நிலையத்திலேயே கழிந்தது.
10. தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகியும் இரண்டு வருடங் களைச் சிறையில் கழித்தும் உடலாலும் உள்ளத்தாலும் பலவீனப்பட்டிருந்த எனக்கு இந்த தொடர் சித்திரவதைகளை தாங்க முடியாமல் இருந்தது. இனியும் சித்திரவதைப்பட்டுச்சாக முடியாது என்ற முடிவோடும் எனது உறவினர் திரு. மருசலீன் அவர்களின் உதவியோடும் ஒரு பயண முகவருக்கு இரண்டு இலட்சம் ரூபாய்களைக் கொடுத்து அவரின் ஏற்பாட்டின்படி போலிக் கடவுச் சீட்டு ஒன்றுடன் இலங்கையை விட்டுத்தப்பினேன்.
11. ஐயா, நான் ஏன் எனது தாய்நாட்டை விட்டு வெளியேறினேன் என்பதற்கான காரணங்களை மேலே தந்துள்ளேன். கருணையுள்ளத்துடன் எனது விண்ணப்பத்தைப் பரிசீலித்து எனது தாய் நாட்டில் யுத்தம் முடிந்து அமைதி ஏற்படும் வரை தங்கள் நாட்டில் எனக்கு அரசியல் தஞ்சம் வழங்கி என் உயிரைப் பாதுகாக்குமாறு மிகுந்த தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
12. எனது இந்த விண்ணப்பம் பரகசியப்படுத்தப்ப்டுமாயின் எனக்கு மிகுந்த ஆபத்து ஏற்படும் என்பதால் இவ்விண்ணப்பத்தின் இரகசியத்தைக் காக்குமாறும் தேவையேற்படின் ஒரு நேரடி விசாரணைக்கு என்னை அழைக்குமாறும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
13. நன்றி.
                                                             14. இவ்வண்ணம்                                                        தங்கள் உண்மையுள்ள,                                                         யா. அந்தோனிதாசன்.
மேலதிக இணைப்புக்கள்:
    • இவ்விண்ணப்பத்தின் பிரஞ்சு மொழி பெயர்ப்பு, 
    • எனது தேசிய அடையாள அட்டை, 
    • நான்கு புகைப்படங்கள், 
    • எல்லைப்புற பொலிசாரால் வழங்கப்பட்ட ஆவணத்தின் நகல்.
: