https://archive.org/details/orr-12420_Adhu
மறுபடியும் மனைவியோடு சண்டை. சண்டை போட்டுவிட்டு அவள் சமைத்துப் போடுவதை மட்டும் சாப்பிட முடியுமா? காலைச் சாப்பாடு தவறிப் போய்விட்டது. இப்போது இராச் சாப்பாடுதான். ஆனால் படுத்துத் தூங்க வீட்டிற்குத்தான் திரும்ப வேண்டியிருக்கிறது. இந்த நடுநிசியில் அவளோ குழந்தை களோ விழிந்திருந்தால் வாசல் கதவு உடனே திறக்கும். இல்லாது போனால் நடுத்தெருவில் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாக வேண்டும்.
நல்லவேளை, கதவைத் தொட்டவுடனேயே திறந்து கொண்டு விட்டது. உள்ளே இருட்டு. பாவம், அவளும் குழந்தைகளும் காத்துக் காத்துக் கண்ணயர்ந்திருக்க வேண்டும். கதவைக் கூடத் தாளிடாமல்.
அவன் உள்ளே நுழைந்து விளக்கைப் போடாமல் கதவைத் தாளிட்டான். அது ஒரு விசித்திரமான போர்ஷன். கீழே சமையலி டமும் கூடியதோர் அறை. ஒரு குறுகிய மரப்படிக்கட்டு வைத்துப் பரண் மாதிரி ஒரு சிறு மாடியறை.
அவன் இருட்டிலே மாடிப்படி ஏறினான். மாடியில் கால் இடறிற்று. அவள்தான் சுருண்டு படுத்திருந்தாள்.
அவன் விளக்கைப் போடாமல் வேஷ்டி அணிந்து கொண்டு அவளருகில் படுத்துக் கொண்டான்.
அவள் தலையைத் தடவினான், தலைமயிர் விரித்துப் போட்டிருந்தது.
"தலையை வாரிப் பின்னிண்டிருக்கக் கூடாதா? எப்பலேந்து இந்த மாதிரி செண்ட் எல்லாம் பூசிக்கறே?
அவள் பதில் சொல்லவில்லை.
"நீ கோச்சுக்கலேன்னா ஒண்ணு சொல்லறேன். இந்த செண்ட் வேண்டாமே, தெருவிலே பொணம் போற வாசனையாயிருக்கு.”
அவள் ஒருமுறை சிலிர்த்துக் கொண்டாள். அவன் அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டான். இனிமே நாம சண்டை போட்டுக்கக் கூடாது. என்னென்னமோ விபரீதமாயெல்லாம் யோசனை வரது. செத்துப் பிசாசாய்ப் போயிடலாமான்னு தோணறது."
அவளுடைய மௌனம் அவனுக்கு ஆறுதல் அளித்தது.
சிறிது நேரத்தில் அவனுக்குப் பசி தாங்க முடியாமல் போயிற்று. "சாதம் ஏதாவது மிச்சம் மீதி இருக்கா?” என்று கேட்டான். "நீ எழுந்திருக்க வேண்டாம். நானே போய்ப் போட்டுக்கறேன்."
அந்த குறுகிய மரப் படிக்கட்டு வழியாகக் கீழறையை வந்தடைந்தான். அன்று வீடு திரும்பிய பிறகு முதல் முறையாக விளக்கு சுவிட்சைப் போட்டான். குழந்தைகள் தூங்கிக் கொண்டி ருந்தார்கள்.
அவர்களோடு அவன் மனைவியும் தூங்கிக் கொண்டிருந்தாள். அவள் தலை நன்றாக வாரிப் பின்னியிருந்தது. அப்படியானால் மாடியில் இருந்தது?
ஒரு கணம் மலைத்து நின்றவன் மாடியறைக்குப் பாய்ந்து சென்று அந்த விளக்கைப் போட்டான். அங்கு யாருமில்லை. ஆனால் அந்த மட்டரக செண்ட்டின் மணம் மட்டும் அங்கு வீசிக் கொண்டிருந்தது.
தளத்தைப் பற்றி
ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com