கல்குதிரை தற்காலச் சிறுகதைகள்
0 இந்தியா -
0 இந்தியா -
மயானத்தங்கம்
அன்னா பாவ் சாத்தே (Anna Bau Sathe) இன்றைய மராட்டிய தலித் எழுத்தாளர்களில் குறிப்பிடத் தக்கவர். அவரது எழுத்துக்களில் தலித் மக்களின் பரிதாபகரமான வாழ்க்கை நிலைமைகள் சித்திரிக்கப்படுவதையும் உயர் சாதி-பார்ப்பனீய விழுமியங்கள் கிண்டலுக்கும் குத்தலுக்கும் உட் படுத்தப்படுவதையும் காணலாம். மராட்டிய தலித் இலக்கியப்படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை சில ஆங்கில மொழியாக்கம் பெற்று அண்மையில் ஒரு தொகுப்பாக வெளிவந்துள்ளன. (Poisoned Bread, Translations from Modern Marathi Dalit Literature E. D. by Arjun Dangle, Orient Longman, 1992, Price Rs 165/- இத்தொகுப்பில் கவிதைகள், சிறு கதைகள், சுயசரிதைகளிலிருந்து சில பகுதிகள், தலித் இலக்கிய வரலாறு பற்றிய கட்டுரைகள், தலித் இலக்கியம் பற்றிய அழகியல் கட்டுரைகள் ஆகியன இடம் பெற்றுள்ளன) இத் தொகுப்பி லுள்ள Gold from The grave என்ற சிறுகதை இங்கு தமிழாக்கம் செய்து தரப்பட்டுள்ளது.
அன்னாபாவ் சாத்தே
தமிழில் :
வ. கீதா எஸ். வி. ராஜதுரை
பக்கத்து கிராமத்தில் இருந்த ஒரு பிரபலமான பணக்காரன் செத்துப் போய் அவன் புதைக்கப்பட்ட செய்தி பீமாவுக்குக் கிளர்ச்சியட்டாக அவனுக்கு ஒரே மகிழ்ச்சி. சமாதிக்குச் சென்று செத்துப் போனவனைப் பல முறை பார்த்து வருவது போலக் கற்பனை செய்து பார்த்துக் கொண்டான் புளிய மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு அவனது பிரிய மகள் . நாட்மா ஒருத்தியாகவே விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். . அவனது மனைவி உள்ளே சமைத்துக் கொண்டிருந்தாள். பீமா, சூரியன் மறை இருட்டுவதற்காகக் காத்திருந்தான். சூரியனை ஆவலோடு பார்த்தான். அதுவோ அவன் விருப்பத்துக்குத் தக்கபடி வேகமாகச் சாய்ந்து கொண் டிருக்கவில்லை .
பீமா ஒரு ஆஜானுபாகு. வெளியே போகும் போது வழக்கமாக ஒரு மஞ்சள் நிற வேட்டியும் சிகப்பு உருமாலையும் மோட்டாத துணியிலான சட்டையையும் அணிந்து கொள்வான். பார்ப்பதற்கு ஒரு குது பயில்வான் போல் இருப்பான். பெரிய, பருத்த தலை, தடிப்பான கதது' அடர்த்தியான புருவங்கள், அகலமான முகம், அதில் புசுபுசுவென்று வளற திருந்த மீசை- இவற்றைக் கொண்டே அவன் பல போக்கிரிகளை அச்சுறுத்திப் பணிய வைத்திருக்கிறான். அவனுக்கு எதைக் கண்டும் பயமில்லை.
வார்னா ஆற்றங் கரையோரமுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன் பீமா. சொந்த கிராமத்திலேயே வேலை தேடிக் கொள்வதற்கு அவனது உடல்பலம் உதவவில்லை. வேலை தேடி பம்பாயில் சுற்றித் திரிந்தான். நகரம் முழுவதும் அலைந்து வேலை தேடிப் பார்த்தும் பயனில்லாமல் போகவே கடைசியில் காட்டோரமாக உள்ள இந்தப் புறநகருக்கு வந்து சேர்ந்தான். மனைவிக்கு ஒரு தங்க நெக்லஸ் வாங்கிப் போட வேண்டும் என்ற அவனது கனவெல்லாம் வீணாகிப் போய் விட்டது. பம்பாய் நகரையே அவன் வெறுத் தான். வேலையையும் குடியிருப்பையும் தவிர வேறு எல்லாவற்றையும் அது வழங்கியது. புறநகர்ப் பகுதியில் கல்லுடைக்கும் தொழிலாளியாக அவன் சேர்ந்தான்.
காடு அவனுக்குப் பயனுள்ள வேலையையும் குடியிருக்க ஒரு வீட்டையும் தந்தது. தனது பலத்தைக் கொண்டு அவன் பாறைகளைத் தாக்குவான். மலை பின் வாங்கும். அவனது சம்மட்டி அடியில் கடுங்கற்பாறைகள் அகலமாக வாய்பிளக்கும். கல்லுடைக்கக் குவாரியில் காண்டிராக்ட் எடுத்திருந்தவன் பீமாவின் உழைப்பைப் பாராட்டினான், பீமாவுக்குத் தனது வேலையில் மிகவும் திருப்தி. ஆறு மாதத்திற்குள் கல்லுடைக்கும் இடத்தை மூடி விட் டார்கள். பீமாவுக்கு வேலை போய்விட்டது. ஒரு நாள் காலை வேலைக்குச் சென்றபோது வேலையில்லை என்ற செய்தி அதிர்சியினைத் தந்தது. அவன் குழம்பிப் போனான். பசி பட்டினி பற்றிய எண்ணம் அவனைப் பெரும் கவலையில் ஆழ்த்தியது.
தனது ஆடைகளை கட்கத்தில் இடுக்கியவாறு காட்டிலுள்ள நீரோடை யருகே வந்து நின்றான். குளித்துவிட்டு வீட்டை நோக்கி நடக்கத் தொடங் கினான். சுற்று முற்றும் சாம்பல் குவியல்கள்- சிதைகளின் எச்சங்களாக இருக்க வேண்டும்-அங்கு இருப்பதைப் பார்த்தான். கருகிப்போன எலும்புகள் சிதறிக் கிடப்பதையும் பார்த்தான். சாவைப் பற்றிய எண்ணம் அவனுக்கு பீதியுண்டாக்கவில்லை. இறந்து போனவன் வேலை இல்லாமல் இருந்திருக்க வேண்டும். சாவு அவனுக்கு நிம்மதியைக் கொடுத்திருக்கும் என்று நினைத்தான். பட்டினி அவனது முகத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பது அவனுக்குத் தெரியும். அவனது பிரிய மகள் சாப்பாடு கேட்டு அழுது கொண்டே இருப்பாள். மனை வியோ முகத்தைத் தூக்கி வைத்துக் கொண் டிருப்பாள். கையாலாகாத நிலையில் இவற்றையெல்லாம் அவன் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
சாம்பல் குவியலின் மேல் ஏதோவொன்று மின்னுவது திடீரென்று அவன் கண்ணுக்குத் தென்பட்டது. அருகிலிருந்து பார்ப்பதற்காக அவன் முன் பக்கமாகக் குனிந்தான். அது சுமார் பனிரெண்டு கிராம் எடையுள்ள தங்க மோதிரம். சட்டென்று அதை எடுத்துக் கொண்டான். அதைத் தனது உள்ளங் கையில் வைத்து அழுத்திப் பார்த்த அவனுக்கு எதையோ கண்டெடுத்துவிட்ட சந்தோஷம் தலைக்கேறியது. சிதை எரிந்த சாம்பலில் தங்கத்தைக் கண்டு பிடித்தது உயிர் வாழ்வதற்கும் பசியை விரட்டியடிப்பதற்குமான ஒரு வழியை பீமாவிற்குக் காட்டியது.
அடுத்த நாள் அவன் சுடுகாடுகளையும் இடுகாடுகளையும் தேடி நாற் புறமும் அலைந்தான். சாம்பல்களைச் சலித்தெடுத்து தங்கமணிகளைப் பொறுக்கி எடுத்தான். கடுக்கன், மூக்குத்தி, கொலுசு, அல்லது நெக்லஸ் இப்படி ஏதாவதொன்று இல்லாமல் அவன் வீட்டிற்குத் திரும்புவதே இல்லை என்றாயிற்று. சிதைக்கு ஊட்டப்பட்ட நெருப்பின் கடும் உஷ்ணத்தில் தங்கம் உருகி எலும்புகளில் ஒட்டிக்கொண்டு விடுவதை அவன் கண்டான். எனவே கருகிய எலும்புகளை சின்னச் சின்னத் துண்டுகளாக உடைப்பான். அதில் அந்த விலைமதிப்புள்ள உலோகத்தின் குன்றிமணியாவது கண்டு பிடித்துவிட கொஞ்சம் கூட சிரமப்படாமல் மண்டையோடுகளையும் மணிக்கட்டு எலும்புகளையும் உடைத்துத் தூளாக்குவான். சாயங்காலமாக பம்பாயின் புறநகர்ப் பகுதியான குர்லாவுக்குச் சென்று தங்கத்தை விற்றுவிட்டு பணத் தோடு வீட்டிற்குத் திரும்புவான். வழக்கமாக பிரிய மகள் நாட்மாவுக்கு பேரீச்சம் பழப் பாக்கெட் ஒன்று வாங்கி வருவான்.
இப்படிப் பிணச் சாம்பல்களைச் சலித்தெடுத்து வாழ்க்கையை ஓட்டி வந்தான். வாழ்க்கை-மரணம் என்ற புதிரை அவனால் விளக்கிக் கொள்ள முடியவில்லை. அவனைப் பொறுத்தவரை இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு பற்றிய உணர்வே இல்லை. பணக்காரனின் சாம்பலில் தங்கம் இருக்கும் என்பதும் ஏழையின் சாம்பலில் ஒரு குன்றுமணி அளவு கூடத் தங்கம் இருக்காது என்பதும் அவனுக்குத் தெரியும். உலகத்திலுள்ள இந்த ஏழைகள் வாழும் பொருட்டுப் பணக்காரர்கள் சாக வேண்டும், என்றும் ஏழைகளுக்குச் சாக உரிமை ஏதும் இல்லை என்றும் அவனது எளியமனம் அவனை நம்ப வைத்தது. அவமானம் நிறைந்த வாழ்க்கை நடத்துபவர்களுக்கு வாழவோ சாகவோ அழைப்பு இல்லை என்று அவன் தன் நண்பர்களிடம் தீர்க்கமாக அறிவித்தான். இரவும் பகலும் சுடுகாடுகளையும் இடுகாடுகளையும் தேடினான். பிணந்தின்னும் பேய் போல அவன் பிணங்களைக் கொண்டே வாழ்ந்தான். எனவே அவனது வாழ்க்கை பிணங்களுடன் பிரிக்க முடியாதபடி பின்னப்பட்டு விட்டது.
அச்சமயத்தில் விதோதமான சம்பவங்கள் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருந்தன. சமாதிகளில் புதைக்கப்பட்டிருந்த பிணங்கள் தோண்டி எடுக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப் பட்டிருந்தது. ஒரு லேவாதேவிக்காரனின் இளம் மருமகளின் பிணம் சுடுகாட்டிலிருத்து ஆற்றங்கரைக்கு இழுத்துச் செல்லப் பட்டிருந்ததாகக் கூறப்பட்டது. இது மக்களிடையே பீதியைத் தோற்றுவித்தது. போலீஸார் உஷார் படுத்தப்பட்டனர். ஆயினும் இடு காட்டின் பிணங்களைப் பாதுகாப்பது எளிதான காரியமாக இருக்கவில்லை. இரவு முழுக்க மயானத்தில் காவல் காப்பது சாத்தியமா என்ன?
சூரியன் மறைந்தது. இப்போது இருட்டு. மனைவி போட்ட சாப்பாட்டை பீமா சாப்பிட்டான். அவனது எண்ணங்களைப் புரிந்து கொண்ட அவள் அவன் எங்கே போக உத்தேசித்துள்ளான் என்று கேட்டாள். “இந்தத் தொழிலை விட்டு விடுவோம்.'' என்று நயமமாகக் கூறினாள். “இதெல்லாம் அருவருப்பான விஷயம். சாம்பலை சலித்துப் பார்ப்பது, பிணங்கள், தங்கம் - எல்லாமே கோரமான விஷயங்கள். ஜனங்கள் நம்மைப்பற்றி பேசத் தொடங்கி விட்டார்கள். “வாயை மூடு'' என்று அவளிடம் கத்தினான் பீமா. மனம் புண்பட்டவனாக சிடு சிடுப்புடன் கூறினான்: ''எனக்கு என்ன இஷ்டமோ அதைச் செய்வேன். ஜனங்கள் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும் நான் சம்பாதிக்காவிட்டால் யார் நமக்குச் சோறு போடுவார்கள்?''
''என்னைத் தப்பாக புரிந்துகொள்ளாதே. பேயைத் போல மயானத்தில் சுற்றியலைவது உனக்குத் தகுதியான தொழில் அல்ல. பயத்திலேயே செத்து விடுவேன் போலிருக்கிறது. அதை நினைத்தாலே எனக்குக் குலை நடுங்குகிறது"
பேய்கள் இடுகாட்டை மட்டும் தான் சுற்றி வருகின்றன என்று உனக்குச் சொன்னது யார்.'' என்று திருப்பிக் கேட்டான் பீமா. ''பம்பாய் நகரமே பேய்கள் நிறைந்த குடியிருப்புதான். உண்மையான பிசாசுகள், வீடுகளில் வசிக்கின்றன. செத்துப் போன பிசாசுகள் சமாதிகளில் அழுகிக்கொண்டிருக் கின்றன. பேய் பிசாசுகள் உற்பத்தியாவது நகரங்களில்தான், காடுகளில் அல்ல'' என்று பேச்சை முடித்தான் பீமா. இது அவள் வாயை அடக்கியது. அன்றிரவும் பயணத்துக்கு ஆயத்தமானான் பீமா. பம்பாய் முழுவதும் அறியலைந்தும் வேலை கிடைக்கவில்லை, சாம்பல்தான் தங்கத்தைத் தந்தது என்று அவளிடம் உறுமினான். ''நாள் முழுக்கக் கல் உடைத்து இரண்டு பாய்தான் வாங்கினேன். இப்போதோ சுடுகாட்டுச் சாம்பலில் ஒரு நாள் வேலை பார்த்தால் பத்து ரூபாய் கிடைக்கிறது. கோபத்தோடு வீட்டிலிருந்து வெளியேறினான். அவன் தனது இராக்கால உலாவைத் துவங்கியபோது எங்கும் நிசப்தம் நிலவிற்று.
தலையைச் சுற்றி ஒரு துணியைக் கட்டிக்கொண்டான். ஒரு சாக்குப் பையைத் தொப்பி போல அணிந்து கொண்டு நீண்ட அடியெடுத்து நடந்தால் கையிடுக்கில் கூர்மையான கடப்பாறை, சுற்றிலும் கும்மிருட்டு, ஆனால் பயப்படவில்லை. ஒரு சேலை, பாவாடை, ஜாக்கெட், பேரீச்சம்பழப் பாக்கெட் இவற்றை வாங்குவது பற்றிய எண்ணம் மட்டும் அவன் மனத்தில் குடியிருந்தது எதோவொன்று நடப்பதற்காக இரவு காத்துக் கொண்டிருப்பது பேர் தோன்றியது. தாங்க முடியாத அமைதி. அமைதியைக் குலைத்து ஊளையிட்டு விட்டு ஒரு குள்ள நரிக் கூட்டம் விரைந்தோடியது. பாதையிலிருந்து ஒரு பாம்பு நெளிந்து நெளிந்து காட்டிற்குள் சென்றது. ஒரு ஆந்தை கிறீச்சிட்டது. மேலும் கிலியூட்டும் வகையில் நிசப்தம் அதிகரித்தது.பீமா கிராமத்தை நெருங்கினான். குத்தவைத்து உட்கார்ந்து சுற்றும் முற்றும் பார்த்தான். கிராமம் மௌனத்தில் ஆழ்ந்திருந்தது. யாரோ ஒருவரது இருமல் சத்தம், ஒரு விளக்கு கண் சிமிட்டியது. பிறகு மீண்டும் ஒரே நிசப்தம். பீமா நிம்மதிப் பெருமூச்சு விட்டான். மயானத்திற்குள் நுழைந்து புதிதாய்ப் பிணம் புதைக்கப்பட்ட குழியை மூடியிருந்த மண்மேட்டைத் தேடினான். ஒரு மண் மேட்டிலிருந்து மற்றொன்றுக்குத் தாவி வந்தான். உடைந்து போன மண் சட்டிகளையும் மூங்கில் தப்பைகளையும் சிதறியடித்துவிட்டு ஒவ்வொரு மண் மேட்டிலும் தீச்குச்சியை உரைத்துப் பார்த்துப் பணக்காரனின் சமாதியைத் தேடிப் பிடித்தான்.
வானத்தில் கருமேகங்கள் கூடின. இருட்டு அதிகரித்தது, ஒரு மின்னல் கீற்று தோன்றி மறைந்தது. மழையை நினைத்ததும் பீமாவுக்கு பயம் பிடித்துக் கொண்டது. மழை பெய்தால் புதிய சவக்குழியைக் கண்டுபிடிப்பது சாத்திய மில்லை. அவசரம் அவசரமாக நடந்ததில் அவனுக்கு வியர்த்துக் கொட்டத் தொடங்கியது.
சவக்குழியை நெருங்கியதும் பயம் பிடுங்கித்தின்ன, அவனுக்கு மூச்சே நின்றுவிட்டது. பற்களை நற நறவென்று கடிக்கும் சத்தம் கேட்டது. ஊளையிடுவதும் மண்ணைப் பிறாண்டுவதும்கூட காதில் விழுந்தன. பீமாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் தள்ளாடி முன்னே சென்றான். மீண்டும் நிசப்தம். சில நொடிகளுக்குள் யாரோ எதையோ உதைப்பது அவன் காதில் விழுந்தது. பீமாவை பயம் கவ்வியது. அவன் வாழ்க்கையில் முதன் முதலாக ஏற்பட்ட பீதி இது, பேய் பிசாசு பற்றிய பீதி.
ஆனால் விரைவில் அவன் சமாளித்துக் கொண்டான். உணர்ந்ததும் அவன் வெட்கித்துப் போனான். சவக்குழியில் இருந்த புதைக்கப்பட்ட பிணத்துக்காக இங்கே குள்ள நரிக் கூட்டமொன்று வந்திருந்தது. குழமது வைக்கப்பட்டிருந்த கல்லை அவை தொடவில்லை. மாறாக பக்கவாட்டில் குரு பறித்துப் பிணத்தையடைய முயற்சி செய்து கொண்டிருந்தது. சதையின் நாற்றத்தை முகர்ந்தவுடன் அன்மையில் இறந்து போனவன் புதைக்கப் பட்டிருந்த சவக்குழியைக் குள்ள நரிகள் பசி வெறியுடன் தாக்கிக் கொண்டி ருந்தன. தரையில் மூக்கை வைத்து முகர்ந்து பார்த்து, சதையின் நாற்றத்தால் கிளர்ச்சியூட்டப்பட்டு, சவக்குழியை மேலும் தீவிரமாக தாக்கிக் கொண்டிருந்தன.
பீமாவுக்குக் கோபம் பொங்கியது. சவக்குழி மேட்டின் மேல் ஏறி, பணக்காரனின் சமாதி மீதிருந்த கற்களுக்கிடையே நின்று கொண்டான். பெரிய கற்களைப் பொறுக்கி எடுத்து குள்ள நரிகள் மீது வீசினான். இந்தத் தீடீர்த் தாக்குதலால் பயந்துபோன குள்ள நரிகள் ஓடி ஒளிந்தன.
இதனால் ஊக்கமடைந்த பீமா, குள்ள நரிகள் மீண்டும் வருவதற்கு முன்பு பிணத்தை எடுக்க முடிவு செய்தான். அவன் மும்முரமாக வேலை செய்து கொண்டிருக்கையில் குள்ள நரிகள் அவனைத் தாக்கின. ஒரு குள்ள நரி அவன் மீது பாய்ந்து வெறிபிடித்தது போல அவன் போர்த்தியிருந்த சாக்குப்பையைக் கடித்துப் பிடுங்கியது, அது கிழிந்ததைக் கண்ட பீமா கலக்கமடைந்தான். தனது கோரைப் பற்களில் ஒட்டிக்கொண்ட சாக்குப்பைத் துண்டுகளைத் துப்பிவிட்டு குள்ள நரி மேலும் வேகத்துடன் பீமா மீது பாய்ந்தது. தாக்குதலை எதிர்கொள்ள பீமா ஆயத்தமானான். கூர்மையான கடப்பாறையால் ஒரு குத்துக்குத்தி அந்த விலங்கை வீழ்ந்தினான். செத்த நரி அருகில் கிடக்க அவன் சவக்குழியைத் தோண்டத் தொடங்கினான். ஆனால் குள்ள நரிக் கூட்டம் எல்லாப் பக்கங்களிலிருந்தும் அவனைத் தாக்கத் தொடங்கியது. பயங்கரமான சண்டை .
சமாதியைப் பாதியளவு தோண்டிவிட்டான். ஆனால் அவனது சதையைக் கடித்துப் பிடுங்கிக் கொண்டிருந்த குள்ள நரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தோண்டுவதைச் சற்று நிறுத்த வேண்டியதாயிற்று. அவனைத் தாக்கிய குள்ள நரிகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு அடிகொடுத்தான். அடி வாங்கிய குள்ள நரிகள் கீழே விழுந்தன. ஆனால் மற்ற நரிகளோ மேலதிக வெறியுடன் அவன் மீது பாய்ந்துவிழுந்து அவனது சதைகளைக் கடித்தன.
குந்தியின் இரண்டாவது மகனின் பெயரைத் தாங்கிய பீமா, அவனது அன்றாட உணவான பிணத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காகக் குள்ள நரி களுடன் போராடிக்கொண்டிருந்தான். கிராமத்தின் அருகே ஈவிரக்கமற்ற சண்டை நடந்து கொண்டிருந்தது. நாட்டின் புராணங்களின் வரலாற்றில் ஒருபோதும் பதிவு செய்யப்படப்போகாத சண்டை அது.
எங்கும் அமைதி. பம்பாய் நகரம் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது. கிராமம் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. மயானத்தில் கொடூரமான யுத்தம் சீற்றத் துடன் நடந்து கொண்டிருந்தது. மனிதன் தங்கத்திற்காகவும் விலங்குகள் உணவுக்காகவும் போராடிக்கொண்டிருந்தன.
பீமா கூர்மையான கடப்பாறையால் தாக்கி விலங்குகளை வீழ்த் தினான். அவனது தாக்குதல்களுக்குத் தப்பிய நரிகளோ அவனது சதைகளைக் கிழித்தன. தாக்குண்ட விலங்குகளோ பலமாக வீறிட்டலறின. கடிவேதனை தாங்காது அலறிய பீமா விலங்குகளைக் கெட்டவார்த்தைகள் சொல்லித் திட்டினான்.
வெகு நேரத்திற்குப் பிறகே குள்ள நரிகள் தம் தாக்குதலை நிறுத்தின; தம்மைக் கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொள்வதற்காக. அதைக் கண்ட பீமா சமாதியைத் தோண்டத் தொடங்கினான். மண்ணைக் கொத்தி விட்டு முகத்திலிருந்த வியர்வைத்துளிகளைத் துடைத்துக் கொண்டான். அவன் முற்றிலும் தளர்ந்து போய்விட்டான். சவக்குழிக்குள் அவன் இறங்கியதுமே குள்ள நரிகள் மீண்டும் அவன் மீது பாயத் தொடங்கின. அவற்றை அவன் ஓங்கி அடித்தான். தோல்வியடைந்த விலங்குக் கூட்டம் சிதறியோடி விட்டது. ஆஜானுபாகுவான பீமாவிற்கு அவனது பலமும் விடாமுயற்சியும் . வெற்றியைத்தேடித் தந்துவிட்டன.
பீமா கடும் முயற்சி செய்து பிணத்தை மேலே இழுத்தான். தீக்குச்சியை உரசி பிணத்தை கிட்டத்திலிருந்து பார்த்தான். விறைத்துப் போன சவம் சவக்குழியில் அவனெதிரே நின்று கொண்டிருந்தது. அதன் உடல் முழு வதையும் தடவித் துழாவிப் பார்த்தான் பீமா. ஒரு விரலில் மோதிரம் இருந்தது. அதை எடுத்துச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டான். காது களில் இருந்த கடுக்கண்களைப் பிய்த்து எடுத்துக் கொண்டான். பிணத்தின் வாய்க்குள் கொஞ்சம் தங்கம் இருக்கலாம் என்ற நினைவு வந்தது. அதன் வாய்க்குள் விரலை விட்டான். ஆனால் தாடைகள் இறுக்கமாக மூடியிருந்தன. எனவே ஆப்பு போலக் கடப்பாறையைப் பயன்படுத்தி வாயைத் திறக்க வேண்டியதாயிற்று. அதை அகலமாகத் திறந்து விரல்களை உள்ளே நுழைந் கான். அச்சமயத்தில் தான் குள்ள நரிக் கூட்டம் ஊளையிட்டவாறு காட்டுக்குள் ஓடத் தொடங்கியது. நரிகள் ஊளையிடுவதைக் கேட்ட கிராமத்து நாய்கள் பலமாகக் குரைக்கத் தொடங்கின. ஜனங்களைத் தூக்கத்திலிருந்து எழுப்பின. இடுகாட்டிலிருந்து நரிகளை விரட்ட எல்லோரும் ஒன்றாகப் போகலாம் என்று பாரோ கூறியது பீமாவின் காதில் தெளிவாக விழுந்தது. அவன் உடல் மழுவதும் நடுங்கத் தொடங்கியது. பிணத்தின் வாயில் இருந்த ஒரு மோதி பக்தை எடுத்துச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டான். வாய்க்குள் முழுமையாகத் தேடிப் பார்த்துவிட அவனது விரல்கள் இரண்டை உள்ளே நுழைத்தான். வாய்க்குள் ஏதும் இல்லை. வாய்க்குள்ளிருந்த தனது விரல்களை எடுப்பதற்குப் பதிலாக தவறுதலாக முதலில் கடப்பாறையை உருவி எடுத்து விட்டான்.
தாடைகள் டப்பென்று மூடிக் கொண்டன. அவனது விரல்கள் பிசாசுப பிடியில் சிக்கிக் கொண்டது போல மாட்டிக் கொண்டன. பீமாவின் உடல் முழுக்க தாங்கொணாத வலி பாய்ந்தோடியது.
மயானத்தை நோக்கி ஜனங்கள் லாந்தர் விளக்குகளுடன் வருவதைப் பார்த்தான். பயம் அவனைக் கவ்வியது. பிணத்தின் மீதான அவனது கோபம் பொங்கி எழுந்தது. வெறியுடன் அவன் கடப்பாறையால் மண்டையோட்டை அடித்தான். அடியின் தாக்கத்தில் அவனது விரல்களின் மீதிருந்த தாடைகளின் இறுக்கம் சற்றுத் தளர்ந்து கொடுத்தது. அவனது விரல் எலும்புகளில் பற்கள் ஆழப் பதிந்திருந்தன. இடுகாட்டை அவன் மாசுபடுத்தியதைக் கண்டு பிடித்து விட்டால் ஒன்று அவனைக் கொன்று விடுவார்கள், அல்லது நன்கு புடைத்து விட்டுப் போலீஸிடம் ஒப்படைத்து விடுவார்கள் என்பது அவனுக்குத் தெரியும். பிணத்தை நோக்கியவாறே அவன் நினைத்தான். பேய் என்று அவர்கள் அழைப்பது இதைத்தானோ. கோபத்துடன் அவன் பிணத்தை மேலும் பலமாக அடித்தான்-'சனியனே என்னை விடு' என்று சபித்தவாறு.
இப்போது ஜனங்கள் மயானத்தை நெருங்கிவிட்டனர். பீமா பிணத்தின் வாய்க்குள் கடப்பாறையை விட்டு நெம்பி அதைப் பிளந்தான். வாய் பிளந்த வுடன் தனது விரல்களை சற்று எச்சரிக்கையுடன் வெளியே எடுத்தான். துண்டு துண்டாக வெட்டுப் பட்டு போயிருந்த அவற்றின் அடிப்பகுதிகள் நார் நாராகக் கிழிந்திருந்த தோலில் ஒட்டிக் கொண்டு தொங்கிக் கொண் டிருந்தன. வலி தாங்க முடியாமல் துடித்தான். தனது முஷ்டிக்குள் ஒருவாறு, உடைந்த விரல்களை வைத்துக் கொண்டு வீட்டை நோக்கி ஓட்டம் பிடித்தான்.
வீட்டையடைந்ததும் கடுமையான காய்ச்சல் கண்டது. அவனது நிலை மையைப் பார்த்து மனைவியும் குழந்தையும் புலம்பத் தொடங்கினர்.
அவனது விரல்களை வெட்டியெடுக்க வேண்டியதாயிற்று. அவனைக் காப்பாற்ற அது ஒன்றுதான் வழியென்று மருத்துவர் கூறிவிட்டார். விரல் களை இழந்த அன்றுதான் கல்லுடைக்கும் வேலை குவாரியில் மீண்டும் தொடங்குகிறது என்பதை அறிந்தான். பீமா என்ற பெயரிடப்பட்ட அந்த பிரம்மாண்டமான மனிதன் குழந்தையைப் போல் அழுதான். கற்களை உடைத்துத் துகள்களாக்கிய அந்த விரல்களைத் தான் மயானத்துத் தங்கத்தின் பொருட்டு அவன் இழந்துவிட்டான்,