மௌனி இலக்கியத் தடம் :: (தொ) ப.கிருஷ்ணசாமி
6. மௌனியின் நடை :::
6. மௌனியின் நடை :::
எம். டி. முத்துக்குமாரசாமி
மௌனியின் கதைகளை நாம் முதலில் கவனமாக வாசிக்க வேண்டும். அப்படி வாசித்தோமானால் தமிழை அவர் குறிப்பிட்ட விதமாகப் பயன்படுத்துவது புரியும். அந்த நடையில் தாத்பரியம் புலப்பட்ட உடனேயே அக்கதைகள் வாசகராகிய நம்மிடம் ஏற்படுத்தும் விளைவில் தன்மை அறிய வந்துவிடும். அப்படி அறிய நேரிட்டால் மௌனி பற்றி, மௌனி கதைகள் பற்றி, பொதுவாக கலை இலக்கியம் பற்றிய எழுத்தாளர்கள் பற்றிய, நம்மிடையே எழுப்பப்பட்டுள்ள மாயைகள் சிதைந்து போகக்கூடும். இந்த நோக்கத்தை மனத்தில் இருத்தியே மௌனியின் நடை பற்றிய சிறிய மாதிரி ஆய்வொன்றை நிகழ்த்திக்காட்ட விரும்புகிறேன். இவ்வகை ஆய்வு மௌனி கதைகள் என்று மட்டுமில்லாமல் பொதுவாக வாசித்தலையே நுட்பமாக்கும் என்றும் நம்புகிறேன்.
நடையியல் ஆய்வுகள் பெரும்பாலும் வார்த்தைகளையும் வாக்கியங்களையும் பத்திகளையும் எண்ணி வகைப்படுத்தி அவற் றின் ஒருங்கமைப்பைக் கண்டுபிடிக்கும் இயந்திரத்தனமான வாசிப்புகளாக உள்ளன. அவ்வகை ஆய்வுகள் நமக்குத் தேவையில்லை. வாக்கிய அமைப்புக்களின் உள் தர்க்கத்தைத் தத்துவப் பிரச்சினையாக மாற்றுவதன் மூலமே நடையியல் ஆய்வு நியாயம் பெறுகிறது. இவ்வாறு வாக்கிய அமைப்பையும், வாக்கியங்கள் இணையும் விதத்தினையும் மையப்படுத்துவதால் கதையாடலில் போக்கினை மறந்துவிட்டதாகக் கொள்ளலாகாது. கதையாடல் போக்கை நெறியாகக்கொண்டே வாக்கிய அமைப்பின் களம் இங்கே ஆராயப்படுகிறது. இனி. மௌனி கதைகளை வாசிக்கும் அனுபவம் நடையினால் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறதெனப் பார்ப்போம்.
"உறவு, பந்தம், பாசம்'' கதையின் ஆரம்ப வாக்கியத்தைக் கவனியுங்கள். '
இரவு முழுதும் கொண்ட பிரயாண அலுப்பிலும் அசதியிலும்கூட, ரயில் தன்னூர் நிலையத்தைக் காலை அடைந்தபோது, இவன் மனம் ஒரு குதூகலம் கொண்டது.'
உடலும் மனமும் நேரெதிர்த் திசைகளில் இயக்கம் பெறுவதையும் இரு இயக்கங்களும் சம்பந்தமற்று இவனாகப் பட்டவன் இடையில் நிற்பதையும் இவ்வாக்கிய அமைப்பு உடனடியாக உணர்த்துகிறது. 'இவன் குதூகலமடைந்தான்' என்று எழுதியிருந்தால் உடல், மனம் என்ற பிளவு ஏற்பட்டிருக்காது. ஆனால் மௌனியின் எழுத்தில் பொதுவாகவே மனித உடலுக்கு நிழலின் அந்தஸ்துகூட கொடுக்கப்படுவதில்லை. உடலை ஒதுக்கி மனத்தளத்திற்குச் செல்ல மொழி, பயன் படுத்தப்படுவதால், இந்த உடல் மனம் பிரிவினையை இயல்பானதாகவே மாற்ற மௌனியின் நடை யத்தனிக்கிறது. மேற் சொன்ன வாக்கியத்திலாவது உடலின் அசதிபற்றிய குறிப்பு காணப்படுகிறது. இதர வாக்கியங்களில் உடல் என்று ஒன்று இருப்பதாகவே தெரியாது. இனி கதையின் அடுத்த வாக்கியம்,
'ஆனால் இறங்கியதும் ரயிலடியைப் பார்வை கொண்டபோது மனது குதூகலம் அதிர்ச்சியென மாறலாயிற்று'.
- மீண்டும் கவனியுங்கள் . இங்கே அவன் ரயிலடியைப் பார்க்க வில்லை. ரயிலடியைப் பார்வை தானாகவே கொள்கிறது. அநேகமாய் மௌனியைத் தவிர வேறு யாரும் இப்படி எழுதுவதே இல்லை எனலாம். ஏற்கெனவே எடுத்துக்காட்டப்பட்ட வாக்கியமாவது சாதாரணமாக பேச்சு வழக்கிலும் பலரும் பயன்படுத்தக்கூடியதாகும் ஆனால் 'பார்வை கொண்டது' - போன்ற புலன்கள் தன்னிச்சையாக இயங்குவதாகக் காட்டுகின்ற பிரயோகங்கள் மௌனிக்கே உரித்தானவை. 'பார்வை கொள்ள நின்ற மரம்' 'அடிமரம் பார்வை கொள்ளவே பெரிதாகிக் கொண்டிருந்தது' போன்ற தொடர்களையும் 'அத்துவான வெளி' என்ற கதையில் காணலாம். ஆக உடலும், மனமும் புலன்களும் பிளவுபடுத்தப்பட்டுத் தனித்தனியாக இயங்குவது போல மௌனியின் நடை காட்டுவதை உடனடி யாக அறியலாம்.
|
மனமும் புலன்களும் பிளவுபட்டுக் கிடப்பதனாலேயே புலன் வழிப் பெறப்படும் புற விபரம் மனத்தைப் பெரும்பாலும் பாதிப்பதில்லை. நாம் எடுத்துக்காட்டாகக் கொண்ட வாக்கியத்தில் குதூகலம் அதிர்ச்சியென புறவிபரத்தால் மாறுதல் ஒரு கதை நிர்ப்பந்தமே தவிர மெளனியின் நடையால் உருவாகும் உலகக் கண்ணோட்டத்திற்கு ஒத்துப்போவதில்லை. புலன்வழி விபரங்கள் பெரும்பாலும் மௌனியின் கதாபாத்திரங்களுக்கு மேற்சொன்ன காரணத்தினாலேயே ' இருப்பதென', 'தோன்றுவதென', 'தோற்றம் பெறுகின்றனவாய்' மட்டுமே இருக்கின்றன. உதாரணமாக மௌனியின் கதாபாத்திரம் காண, ஒரு பூரண கர்ப்பிணி சாலையில் நடந்து சென்றாளென்றால் அவனுக்கு அவள் ஒரு பூரண கர்ப்பிணி போலத் தோன்றுவாளே தவிர பூரண கர்ப்பிணியாய் இருக்கமாட்டாள்.
அப்படி தப்பித்தவறி மனம் புறக்காட்சியின் ஒருமையில் அனுபவம் கொள்ளுமென்றால் கூட அனுமானம் அதை சந்தேகித்துக் கூட்டிக் கழித்துப் போனால் போகிறதென்று ஏற்றுக் கொள்ளும் சமயத்திலும்கூட புறவிவரம் புலன்களுக்கும் அகப் பட்ட அறிவென நடிப்பதாகவே மனத்திற்குத் தோன்றும். உதாரணமாக 'அத்துவானவெளியில் ஒரு வாக்கியம் :
'வேறு ஒரு விதமாகவும் அது மரமில்லை என அங்கே அப்படி நின்றிருக்க முடியாதென்றும் தோன்றவிருப்பதே அது மரமெனத் தோன்றப் போதுமான அத்தாட்சியாக இருந்து நிச்சயமாக மரமெனவே இருந்தது'.
இவ்வாறாக அனுமானம் அத்தாட்சிகளை முன்வைத்து முடிவுக்கு வரவேண்டிய அவசியமில்லாதிருக்கும் போது புறக் காட்சி மௌன சங்கேதப் புதிராய் மாறிவிடுகிறது அல்லது உடலும் மனமும் இல்லாத புலன்களின் விழிப்பாய் புறவுலகு தோற்றம் கொள்கிறது. மீண்டும் அத்துவான வெளியிலிருந்து ஒரு வாக்கியம்:
'தலைதெரிய தான் மறைந்தே எல்லாவற்றையும் பார்ப்ப தான உணர்வு கொண்டான்'.
உடல், மனம், புலன்கள் ஆகிய வற்றோடு நான்காவது பிளவாக இருப்பது அனுமானம். அனுமானத்தின் வேலை புற விபரங்களை மன தர்க்கத்திற் கேற்ப ஒட்டியோ வெட்டியோ காட்டுவது மட்டுமல்ல. மனத்தைத் தொடர்ந்து வேவு பார்ப்பது அனுமானத்தின் வேலையாகும். இதையும் மௌனியின் பல வாக்கியங்கள் காட்டுகின்றன. உதாரணத்திற்கு இரண்டு வாக்கியங்கள்.
''சாப்பிட்டு, சீக்கிரமாகவே கௌரி வீட்டிற்குச் செல்லுவதில் தன் மனது ஆர்வம் கொள்ளுகிறது என்பதை இவன், கண்டு கொள்ளா மலில்லை'' (உறவு, பந்தம், பாசம்) ''
அன்று மாலை நிகழ்ச்சியை இப்போது நினைவு கூர்ந்து நிச்சயமடைய, நடக்க இருப்பதின் நீண்ட முன் சாயையும், பின் நடந்தவைகளின் மறைந்த மறுதியின் ஞாபகத்தையும் கலந்துகொள்ள வேண்டி யிருக்கிறது'' (தவறு)
இவ்வாறாக உடல், மனம், புலன்கள், அனுமானம் ஆகிய பிளவுகளுடைய மனிதர்களிலே கதைக்கு சம்பந்தமுடைய அல்லது சம்பந்தமில்லாத மனித ஜீவித முரண்பாடுகளை எடுத்தியம்பும் கதைசொல்லும் குரல் தொடர்ந்து வருகிறது. மேற்சொன்ன நான்கு பிளவுகளிலும் முரண்பாடுகளைக் காணும் இந்தக் கதைசொல்லும் குரல் கதாபாத்திரங்களின் மனங்களினூடே போகும்போது நிச்சயத்தன்மையுடனும் அவர்கள் புறத்தோற்றத்தினை, செயல்களை விளக்கும்போது சந்தேகத்துடனும் ஒலிப்பதைக் கேட்கலாம். இரு உதாரணங்களைக் கவனியுங்கள் .
முதல் வகை
'பழைய நினைவுகள் வசீகரமெனப்படுவதிலும், சோகமும் கலந்ததென இவனுக்குத் தோன்றியது'
'எதிரே தீபத்தின் சுடரொளியில் தன் நிருத்தியம் கலைவு பட்டதென, ஒரு இனிய கனவு கலைய இந்த நினைவா என்பதில் இவள் மனம் வருத்தமடைந்தது'
இரண்டாம் வகை
எதிரே ஒளி படர்ந்த தரையில் நீண்டு வளர்ந்து வரும் நிழல்கள், ஒன்றுகூடிப் பிரிந்து சலிக்கும் ஒரு விநோத காட்சி யில் இவன் லயித்திருந்தான் போலும். 'யாரோ சிலர் கோவிலுள் நுழைகிறார்கள் போலும்'.
முரண்பாடுகள் 'ஞாபகம் காண, மறதியைத் தேடுவதில் ஜடமென இவன் அவ்விடத்திலேயே வீற்றிருந்தான்.'
'ஒரு பயங்கரம், இனிமையைத் தூண்டி இருக்கும் பிரமையை அடைந்தான்'
மாலையில் கோவிலுக்குச் செல்லுபவர்கள் நிழல்கள் . 'அவர்'களை முந்திக்கொண்டு கர்ப்பக்கிருக இருளில் ஒன்றாவது ஒரு உன்னத காட்சியென மனதில் கொள்ள இருக்கும், எட்டிய வெளியில் ஒரு விளக்கொளி தெரிந்தது. உலகமே எரியத் தோன்றுவது எட்டி இப்படிச் சிறு விளக்கெனத் தோற்றம் கொடுத்திருக்கலாம்'.
கதைசொல்லும் குரலும், கதாபாத்திரங்களின் மனங்களும் அனுமானங்களை மட்டுமே மனிதனின் பற்றுக்கோடென்று எண்ணி இயங்குவதுபோலத் தோன்றும்.
உடலுக்கு எவ்வித முக்கியத்துவம் கொடுக்காமல் மனம், புலன்கள், அனுமானம் ஆகியவை தன்னிச்சையாக இயங்குவனவாக காட்டும் உத்தேசத்துடன் மௌனியின் வாக்கிய அமைப்புக்கள் இருப்பதால் அவை சுலபமாகக் கனவுத்தன்மையை விளைவாக வாசகரிடத்தில் ஏற்படுத்துகின்றன. இம்முடிவின் வீச்சுகள் என்னென்ன என்பதை நான் தொகுத்து சொன்னால்தான் மௌனியின் கதைகளைப் பற்றிய ரசனை விமரிசனங்களை மீறி ஒரு நிலைப்பாட்டினை நீங்கள் எடுக்க முடியும். எனவே மேற்சொன்ன முடிவின் வீச்சுக்களை பின்வருமாறுத் தொகுக்கிறேன்.
1. உடலுக்கு உரித்தானவை இச்சைகள். இச்சைகளின் வழிப்பட்டவை புலன்கள். புலன்களின் தொகுப்பு மனம் அல்லது மூளை. மனத்தின் களம் ஆசை. ஆசையின் உபகரணம் அனுமானம். அனுமானங்களின் தொகுப்பு அறிவு. அறிவின் நோக்கம் ஆதிக்கம். ஆதிக்கத்தின் நோக்கம் இச்சை நிறை வேற்றம். உ.டலின் குறையே மனத்தின் குறை. இவ்வாறாக அமைக்கப்பட்ட மனித ஜீவித மெய்மையை மறுத்து பொய் யான மொழி உலகத்தையே மௌனியின் நடை உண்டாக்குகிறது.
2. பொய்யின் வன்முறை கொடுமையானது. பொய்யைப் பொய்யென அறியாத உடல்களைப் பொய்யின் போதை சீரழித்துவிடும்.
3. நேர்த்தியான உடல்களை உருவாக்குவதற்கான பிரயத்தனங்கள் அற்ற சிறுபத்திரிக்கைக் கலாச்சாரத்தில் மௌனியின் கதைகள் உன்னதமாகக் கொண்டாடப்படுவதில் வியப்பில்லைதான்.
4. மனித வாழ்க்கையோ அழிவோ அதன் அபத்தத்தையும் அர்த்தத்தையும் மனித ஜீவிதமெய்மையை அடிப்படையாகக் கொண்ட மனித அறமே நிர்ணயிக்கவல்லது. உடலைத் தவிர்த்த மனத்தின் மொழி அறமில்லை. எனவேதான் மௌனியின் கதைகளிலுள்ள கதைசொல்லும் குரல் கடவுள் என்ற கருத்தாக்கத்தின் குரலாக அத்துவான வெளி என்று பேசித் திரிகிறது.
5. மனித அறத்தைக் கையாளத் திராணியற்ற மௌனி - யின் நடை திரும்பிப் பார்த்தல், வேர்களைத் தேடுதல், காதல் ஞாபகங்கள் ஆகியவற்றைக் கையாளத் தகுதியற்றது. ஏனெனில் மேற்சொன்ன பொருள்கள் மனித ஆன்மீகத்தோடு சம்பந்தமுடையவை. மனித ஆன்மீகம் உயிர் தரிக்கின்ற உடலோடு ஆரம்பித்து உயிர் தரிக்கின்ற மனித உடலோடு முடிகிறது: சாவிற்கு அப்பால் என்ற சிந்தனையோ காலத்தை நிறுத்தி வைக்கின்ற விருப்போ அதனுள் வராதவை.
6. வாழ்க்கையை அதன் ஜீவத்துடிப்புடன் எதிர் கொள்ள தைரியமில்லாதவர்கள் அபாயமில்லாத, நெருக்கடியில்லாத, வேதாந்த, பாதுகாப்பு கொண்ட மௌனியின் கதைகளை ரசித்துத் தங்கள் சாய்வு நாற்காலிகளில் உட்கார்ந்திருக்கலாம்.
'வேர்கள்' கருத்தரங்கு
ஜனவரி 1992
'நிகழ்' ஜுன் 1992 எம். டி. முத்துக்குமாரசாமி கட்டுரை மீதான ஒரு விமர்சனம்
மா. கணேசன்
-
-
"வாக்கிய அமைப்புக்களின் உள் தர்க்கத்தைத் தத்துவப் பிரச்சினையாக மாற்றுவதன் மூலமே நடையியல் ஆய்வு நியாயம் பெறுகிறது'' என்று எம்.டி.எம். கூறுகிறார். ஆனால் அங்கே புதிதாக ஒரு பிரச்சினை கிளம்புகிறது. உடலின் கன பரிமாணம் எம்.டி. எம். மின் ஆய்வை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. அதனாலேயே மௌனியின் எழுத்தில் உடலுக்கு நிழலின் அந்தஸ்துக்கூட கொடுக்கப்படுவதில்லை'' எனக் கூறுகிறார். 'உடல், மனம், புலன்கள், அனுமானம் என்பவை மௌனியின் எழுத்தில் பிளவுபடுத்தப்பட்டிருப்பதால் அவை தன்னிச்சையாக இயங்காமல் ஒரு கனவுத்தன்மையோடு புனையப்பட்டிருக்கின்றன' என்பது சரியில்லை. தனது வாக்கிய அமைப்புக்கள் மூலம், பிளவுகள் மூலம் மௌனி தன் கதாபாத்திரங்களுக்குள் ஒளிந்திருக்கும் ரகசிய மனிதனைச் சுட்டுகிறார். இப்படி மனதைத் தொடர்ந்து வேவு . பார்த்திடும் செயலைப் பாவச் செயலாகக் கருத வேண்டியதில்லை. தாம் என்ன செய்கிறோம் என்பதை அறியாமலே வாழ்வது ஒருவித குருட்டுத்தனம்தான்.
நேர்த்தியான உடல்களை உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்தும் எம்.டி.எம். மின் உடலைப் பூஜிக்கும் கலாச்சாரம் பரிணாமப் பார்வையில் மிகவும் பிற்போக்கான விஷயமாகும். நேர்த்தியான உடல் தான் பரிணாமத்தின் இலக்கு என்றால் இயற்கையானது மனதை உருவாக்கிவிடாமல் நேரே நேர்த்தி யான உடல்களை உருவாக்கியிருக்கும்-அதற்கு மனிதனையே உருவாக்கியிருக்க வேண்டாமே.
'வேர்கள்' கருத்தரங்கு
-----------------------------------------------------------------------------------------------------------------------