தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Thursday, October 17, 2019

1. சுயதரிசனம் மௌனி,2. "மௌனி" யுடன் மூன்று நாட்கள் நகுலன்

மௌனி இலக்கியத் தடம் :: (தொ) ப.கிருஷ்ணசாமி
1. சுயதரிசனம் 
மௌனி 
சுயதரிசனம் என்பது உள்நோக்கிப் பார்க்கும் ஒரு வேலை. உள் நோக்குதல் என்பது Eternal search ஆகும், வேண்டும் என்று நினைத்து இதைச் செய்வதில்லை. தானாகவே நடந்து கொண்டு தானிருக்கிறது. இந்தத் தேடலின் முடிவு Self Satisfaction தான்; சுய திருப்தி தான். இந்த உள்நோக்கில் பல பிரிவுகள் உண்டு. ஆத்மதிருப்தி என்பதுகூட இந்தப் பிரிவு களின் ஒரு முடிவு மட்டும்தான். 
அந்தக் காலத்தில் இலக்கியம் படிப்பதில் ஒரு ஆசை இருந்தது. தேசீய எழுச்சியின் பரபரப்பின் விளைவாகவும் இது நேர்ந்திருக்கலாம். விஞ்ஞானத்தைப் படிப்பதில் இல்லாத ஆத்மதிருப்தி இலக்கியம் படிப்பதில் இருந்தது. 
இலக்கியம் என்றால் என்ன? தன்னுடைய அனுபவத்தை இன்னொருத்தன் தானாக சொந்தமாக்கிக்கொண்டு அனுபவித்தால் எப்படி இருக்கும் என்பதைக் காட்டும் தகுதி இருப்பது தான் இலக்கியம். அதனால் தான் ஒருத்தர் எழுதினதை மற்றவர்கள் படிக்க விரும்புகிறார்கள் . எங்கள் குடும்பமே காங்கிரஸ் பக்தர்களின் குடும்பம் தான். மகாத்மா காந்தி அப்போது கண் முன் பிரத்யட்சமாக இருந்தபோதிலும் மூர்த்தி வழிபாடு அப்போது ஏற்பட்டுவிடவில்லை. விவாதத்திற்குரிய பெரிய மனிதராகத்தான் அவரும் இருந்தார். 
தான் யார், என்பதை Express பண்ணிப்பார்க்கும் முயற்சி தான் இலக்கியமாகப் பரிணமிக்கிறது. 
அந்தத் தேடலின் லட்சியம் தான் சுய தரிசனம். இந்தத் தேடலில் தெளிவு கிடைக்க இலக்கியம் கை கொடுக்கிறது. இலக்கியம் என்பதே தேடலின் வெளிப்பாடு தான். அதில் கிடைக்கும் ஒரு லயம் தான் ஆத்ம திருப்தி. இறுதியில் நிலைப்பது மௌனம்தான். சொற்களற்ற நிலை. 

கவி முத்தி யோகியாகிறான் என்பார் கு. பா. ரா. கவிதான் யோகியாகப் பரிணமிக்கிறான் என்பதை இது காட்டுகிறது யோகியினால் இலக்கியவாதிக்கு லாபம் உண்டு. சுயதரிசனம் என்பதற்கே இலக்கியம் தான் ஒரு நல்ல வழியாக இருக்கிறது. யோக சாதனைக்கும் அதுவே வழியாக இருப்பதுதான் இதில் விசேஷம். எனக்கு சமஸ்கிருதம் தெரியாது. ஆங்கில இலக்கியத்தில் கிடைத்த அனுபவத்தின் காரணமாக, மனப்போக்கில் பலவிதப் பரிணாமங்களைப் பிரித்துக்கொள்ள துணை கிடைத் திருக்கிறது. டாஸ்டாவஸ்கிகூட இப்படித்தான் பல தடவை சொல்கிறார்.  தெருவில் போகிறவர்கள் எல்லாம்கூட, எல்லா அனுபவங்களையும் சொல்லலாம். ஆனால் அதை இலக்கியமாகச் சொன்னால் மற்றவர்களின் மனதுக்கு, அதே நிலையில் அந்த உணர்வை மாற்றிவிட முடிகிறது. அதுதான் இலக்கியத்தின் சிறப்பு, தகுதி எல்லாம். குருடனுக்கு பாலின் கலரைச் சொல்ல முடியாது. ஆனால் எழுத்தின் மூலமாக குருடனின் அனுபவங்களை ஒட்டியே அதை அவனுக்கு உணர்த்திவிட இலக்கியத்துக்கு முடியும். 
இதனால்தான் நாங்கள் Literature Hons-ல் அப்போது அதிக மாகச் சேர்ந்தோம். 
மணிக்கொடி காலம் இதற்குக் கை கொடுத்தது. அப்போது . எழுதியவர்களிடையே ஒரு குடும்ப நெருக்கம் இருந்தது. ஒருத்தருக்கொருத்தர் எழுதினது பிடிக்கலே என்று சொன்னால்கூட, "என்னமோ எழுதிப் பார்த்தேம்பா. ஆனால் வரலையே'' என்று பதில் சொல்லும் மனப்பக்குவம் அன்று இருந்தது. இப் போது அந்த Tolerance எழுதுகிறவர்களுக்கு இல்லையே. 
ஆங்கில இலக்கியங்களைப் படிக்கும்போது கிடைக்கிற இன்பம் நாம் எழுதும்போதும் கிடைக்கிறதா என்று பார்த்துக் கொள்வதில் Frank discussion இருந்தது. 
வாழ்க்கை வசதி கிடையாத காலம். வேலை வாய்ப்புக் களும் இப்போதைய நிலையைவிடக் குறைச்சல். என்றாலும் Frustration என்பது இருக்காது. இந்தக் காலத்தில் அது அதிக மாகத் தெரிகிறது. 
அந்தக் காலத்தில் ஒருத்தரை ஒருத்தர் கடுமையாக விமர்சித்தால்கூட மன வருத்தங்கள் இதனால் வந்ததில்லை. 

பிச்சமூர்த்தி எனக்கு Senior. எனக்கு அவரிடம் உள்ள ஈடு பாடு காரணமாக அவரைக்கூட 'இதென்ன பேத்தியிருக்கார்' என்று நேருக்கு நேர் சொன்னாலும் பேசாமல் சிரித்துக் கொண்டு போய்விடுவார். 
படித்துக் கொண்டிருந்த காலத்தில் நாமும் சிறுகதை எழுதிப்பார்க்கலாமே என்ற ஆசைதான் எழுத்துக்குக் கொண்டு போய்விட்டது. 
அதுபோல சிதம்பர சுப்ரமணியம் வீணை வாசிக்கக் கற்றுக் கொண்டார். Aesthetic & Artistic Satisfaction தான் இப்படி யெல்லாம் செய்ய வைத்தது. இந்தச் சூழ்நிலையில்தான் எழுத் துக்கள் பிறந்தன. 
எங்களுக்குள்ளும் உள்ளூரில் 'குரூப்'கள் இருந்தன. அப்போது எழுதிக் கொண்டிருந்தவர்களிடமெல்லாம் “நான் எழுதியிருக்கிறேன் பார்'' என்று காட்டியிருக்கிறேன். 
நேராக எடிட்டர்களிடம் கதை கொடுத்தால் கேவலம் என்றுகூடப்பட்டது. அதனால் ராமையாவை தெரிந்திருந்தும் நேராக நான் மணிக்கொடிக்கு அனுப்புவதில்லை. அவருடைய நண்பரிடம் கொடுத்துத்தான் கொடுக்கச் சொல்வேன். ஸ்டாம்ப் வைத்து அனுப்பமாட்டேன். போடாவிட்டாலும், திரும்ப அனுப்பாவிட்டாலும் பரவாயில்லை என்று விட்டு விடுவேன். 
Artistic imagination காரணமாகவும், தன்னதைப் போடலையே என்கிற குறைய:ாலும் பலர் பல குறைகள் சொல்வார்கள். நாணயமில்லாதவன் என்றெல்லாம் திட்டுவதுண்டு. மற்ற குறையெல்லாம் இருந்தால் சொன்னால் தாங்குவோம். ஆனால் Artist-னுடைய ஆத்மாவைத் தொட்டால் சும்மா விட மாட்டோம். அதை யாரும் தொட்டதும் இல்லை. அதனால் தான் ஒருத்தருக்கொருத்தர் பகையே வந்ததில்லை. 
இதைப்பற்றி அதிகமாகச் சொன்னால் இன்பக் கனவு மாதிரி விரிந்து கொண்டே போய்விடும் போலிருக்கிறது. இப்போது தோன்றுபவைகளை, முன்பு அனுபவப்பட்டதைவிட நினைத்துப் பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது. 
ஆனால் என்னால் தமிழில் தோன்றுவதை எல்லாம் சொல்ல முடியவில்லை. சமஸ்கிருதத்தினால் கொஞ்ச நாள் தள்ளியது, இப்போது ஆங்கிலத்தைக்கொண்டு ஓடுகிறது. தனியாகத் தமிழில் நினைக்கிறதை முழுதாகச் சொல்ல எனக்கு முடிய வில்லை. அது தான் என்னுடைய இப்போதைய நிலை. 
ஞானரதம், 1970 

2. "மௌனி" யுடன் மூன்று நாட்கள் 
நகுலன் 
“மௌனி'' யுடன் மூன்று நாட்கள்-6, 7, 8 டிசம்பர் 1968-பேசிச் சிந்தித்துப் பொழுதைக் கழித்தது ஒரு அனுபவ மாகவே இருந்தது. இந்த அனுபவத்தை நமது வாசகர் களுடனும் எழுத்தாளர்களுடனும் “வஞ்சி நாட்டின்'' மூலம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். என்னைத் தவிர இந்த விஷயத்தில் பங்கு எடுத்துக்கொண்டவர்கள் சர்வஸ்ரீ ஷண்முக சுப்பையா, நீல. பத்மனாபன், மா. தக்ஷிணாமூர்த்தி ஆகிய என் நண்பர்கள். 'மௌனி" அநேகமாக எங்களுடன் பேசினார் என்று சொல்வதைவிட, உரக்கச் சிந்தித்தார் என்று தான் சொல்ல வேண்டும். சில சமயங்களில் அவர் விசாரணை “சிந்தனை செல்லா சேணெடுந்தூரம்'' சென்றது. மேலும், இலக்கியம், தத்துவம், லௌகீகம் என்பவை யெல்லாம் அவர் பேச்சில் அடிபட்டாலும், அடிப்படையாக அவர் வார்த்தை களைத் துரத்திக்கொண்டே சென்றார் என்றுதான் சொல்ல வேண்டும்; சில கட்டங்களில் என் போன்றவர்களுக்கு வார்த் தைகளும் அவரைத் துரத்திக்கொண்டே சென்றனவோ என்ற ஐயப்பாடு இல்லையா என்று கேட்காமல் இருக்க முடிய வில்லை .. 
அவருடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அநேகமாகப் பேச்சு "மௌனி'' கதைகளைப் பற்றிச் சுற்றி வந்ததிலும் எனக்கு ஆச்சரியமில்லை. இராமனிருக்கும் இடம் அயோத்தி என் பார்கள். இல்லாவிட்டாலும், இலக்கியப் படைப்பிற்கு ஆரம்பமே பிரத்தியக்ஷத்தைப் பிரத்தியக்ஷமாகக் காண்பது தான். அதன் பின்னர் தான் மற்றவை எல்லாம். ஸ்தூலத்தி லிருந்துதான் சூக்குமத்திற்குச் செல்ல முடியாது என்பதில்லை: நாம் நாமாக இருப்பதே நம்மை அவ்வளவு சுலபமாக ஸ்தூலத் திலிருந்து கழற்றிக்கொள்ள முடியவில்லை என்பது தான். 

எல்லாவற்றிலும்- இலக்கியம், தத்துவம், லௌகீகம்-இதுதான் அடிப்படைப் பிரச்சினையாக இருக்கிறது. சுந்தர ராமசாமி தன் “மந்திரம்' என்ற கவிதையில் எழுதிய மாதிரி, இந்த அடிப் படையை மறந்து செயல்படுகையில் 

நீ
நான் 
அவள்
 இவன் 
அவன் 
பூனை 
புண் 
பூ
புழு 
குண்டூசி 
குத்தூசி 
கடப்பாரை 
லொட்டு 
லொடக்கு 
எல்லாம் 
ஸ்வாமி 
உபயம்" 
என்ற கண்மூடித்தனமான பக்தி பரவசத்திற்குக் கொண்டுவிடு கிறது. ''மௌனி'' கூறிய மாதிரி ''பிரத்தியக்ஷத்தைப் பிரத்தி யக்ஷமாகத்தான் பார்க்க முடியும்''. அப்படிப் பார்க்கையில் பிரச்சினை மிகவும் சிக்கலாகத் தெரிகிறது. இந்தப் பிரச்சினை தான் முக்கியம் என்றாலும், இந்தப் பிரச்சினையையும் தாண்டி விடை காண முடியுமா என்ற ஒரு முயற்சியாகவே க. நா. சு. வின் எழுத்துக்கள் செயல்படுகின்றன. அதனால்தான் அவரை நான் தமிழில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாகக் கருதுகிறேன். இது நிற்க. 

ஷண்முக சுப்பையா ''மௌனி''யிடம் உங்கள் கதைகளில் பலர் பல சொல்கிறார்கள். “பிரபஞ்சகானம்'' என்ன, ''சாவில் பிறந்த சிருஷ்டி'' என்ன, இப்படிப் பேச்சுகள், ஆனால் எனக்கு என்னவோ உங்கள் “இந்நேரம், இந்நேரம்'' என்ற கதைதான் பிடித்திருக்கிறது என்றார். 

"மௌனி' : ஏன்? 

சுப்பையா : அதைப் பற்றித் திட்டவட்டமாக என்ன . சொல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். 

நான் : ஒரு நல்ல கதையை நல்லது என்று சொன்னால் போதும். 

மௌனி : என்றாலும், என்னைத் தவிர அவனுக்கும் இதில் படித்து அனுபவிக்க விஷயம் உண்டு என்ற அடிப்படையிலிருந்து எழுத்தாளன் தன்னை விடுவித்துக்கொள்ள அப்படி ஒன்றும் எளிதில் முடிவதில்லை . 

நான் : எழுத்தாளன் எப்படியோ, அப்படித்தான் வாசகனும். இதை முதலில் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். 

இதை எவ்வாறு மௌனி'' ஏற்றுக்கொண்டார் என்பது எனக்கு இன்னும் தெளிவாகவில்லை. 

மௌனி : சரி. நீங்கள் சொல்லுங்கள். 

சுப்பையா : ஒருவேளை எனக்குப் பிடிபட்ட அனுபவம் அதில் தெரிகிறது என்பதனால் இருக்கலாம். 

மௌனி : அது சரி உங்கள் அனுபவம்-என் அனுபவம் எந்தக் கட்டத்தில் சந்திக்கின்றன? 

நான் : நீங்கள் எங்கு போய்க்கொண்டிருக்கிறீர்கள்? 

மௌனி : (சிரித்துக்கொண்டே) சரி. நானே சொல்லிவிடுகிறேன். ஒருவனுக்குக் கல்யாணம் பேசப் பெண் கேட்கப் போயிருக்கிறார்கள். இவன் அவர்கள் வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறான். அவர்கள் வரும் “சாவதானமும்'' இவன் மனத்தின் ஓட்டத்தையும், பிரத்தியக்ஷத்தையும், சூக்குமத்தையும், எதிர்க்கட்சி நிலையில் அடுத்து அடுத்து வைத்து இவன் மன ஓட்டத்தை வாசகன் உணர வேண்டும் என்பது தான் உத்தேசம், 


மௌனம். நாங்கள் யோசித்துக் கொண்டிருந்தோம். தூலமாகப் பல பொருள்களை நிழல் கோலமாக மௌனி'' இந்தக் கதையில் வரைந்திருந்தார் என்பதும் என் மனதில் பட்டது. மேலும் “மௌனி கதைகளில்'' இக்கதை இல்லை என்ற நினைவு எனக்குச் சுப்பையா மீது உள்ள மதிப்பை அதிகரிக்கச் செய்தது. 

நான் வேண்டுமென்றே "மௌனி''யிடம் "ஆமாம் 'புதுமைப்பித்தனிடம்' காணும் விவிதாம்சங்கள் உங்கள் படைப்பில் காணவில்லை என்கிறார்களே'' என்றேன். 

என் அடிமனம் 'திருமந்திர'ப் பாடலிலிருந்து ஒரு வரியை அரற்றிக் கொண்டிருந்தது. 

"பசு வண்ணம் பல வண்ணம் 
பால் வண்ணம் ஒரு வண்ணம்'' 

என்பது தான் அவ்வரி. எவ்வளவு பசுக்கள்-''புதுமைப் பித்தன்', 'மௌனி”, ராமாமிருதம், செல்லப்பா, க. நா. சு..... 'மௌனி'' குரல் என் சிந்தனையை அறுத்தது. 

"என்ன துரைஸ்வாமி?'' 

“இல்லை. பொருளாதாரப் பிரச்சினை ஒரு பிரச்சினையே இல்லை என் கதைகளில் என்றும் சொல்கிறார்கள்.'' 

மௌனி: நீ என்ன இப்படிப் பேசுகிறாய்? சாதாரண விஷயங்கள்கூட உனக்குப் பிடிபடவில்லையே. 

உண்மைதான். அப்படிப் பிடிபடாததற்குக் காரணம் என்ன என்பது அவர் புரிந்துகொள்ளாத. அளவிற்கு நான் பிழைத்தேன் என்ற நினைவில் எனக்கு ஒரு மன நிறைவு. அவரிடம் 

"சரி, சொல்லுங்கள்'' என்றேன். "வர்ணங்கள் எவ்வளவு?'' 

"பல" 

என் மனம் ''திருமந்திர'' அடியை முணுமுணுத்தது. 

“இதோ பார், இது பச்சை, இது சிவப்பு, இது நீலம் என்பது ஒரு வகை. இன்னொருவகை இந்தச் சிவப்பில் எவ்வளவு விவிதாம்சங்கள் என்பது.'' 

'அதாவது ஒரு நிறத்தில் பல நிறங்களைக் காட்டுவதில் தான் விவிதாம்சம் என்று சொல்கிறீர்கள்.", 

“வைத்துக்கொள்'' 

அதாவது இவர் சூக்குமத்தின் பொருட்டுத்தான் ஸ்தூலத்தை ஏற்றுக்கொள்கிறார் என்று தோன்றியது.. நானும் இந்தக் கணியை ஒருபடி கூடுதல் சென்று ஏற்றுக்கொள்பவன் ஆதலால் அதைப்பற்றித் தொடர்ந்து பேசவில்லை. ஆனால் அன்று இரவு ''குறளில்'' கூறியபடி "உவப்பக் கூடி உள்ளப் பிரிதல்'' என்பதற்கேற்ப இதைப்பற்றியே என் மனம் சுற்றிச்சுற்றி வந்தது. 

இன்று தக்ஷிணாமூர்த்தியும், நானும், “மௌனியும்". 'மௌனி தக்ஷிணாமூர்த்தியிடம்" பரிகாசப் பார்வை என்றால் என்ன ? 

த : ஒரு வாக்கியத்தைக் குறித்து இப்படிச் சொல்கிறார்கள். ஆனால்?... 

மௌனி : இல்லை. இருக்கிறது. இது காரமான கிண்டல் பார்வையிலிருந்து எப்படி வேறுபடுகிறது? 

எனக்கு “மௌனி'யை ஒரு நான்கு மாதங்களுக்கு முன் சந்தித்தபொழுது அவர் இதைப் பற்றிப் பேசியது ஞாபகம் வந்தது. 

த : ஒன்று அறிவின்பாற் பட்டது; மற்றது உணர்ச்சி வசப்பட்டது. 

மௌனி : மேலும். 

எனக்கு நாங்கள் எல்லோரும் அவர் தன்னுடன் தான் பேசிக் சொள்வதற்கு ஒரு சாக்ஷியாகத்தான் பட்டது. ஒரு மனிதனுக்குத் தனக்குத்தான் பேசிக் கொள்வது என்பது ஒரு நிர்ப்பந்தம், அதனால்தான் அவனுக்கும் ''அறிவு பேதலித்தவனுக்கும்'' ஒருவகை ஒற்றுமை; இந்தக் கட்டத்தில்தான் கலைஞனும், போதம் சிதறியவனும் சந்திக்கிறார்கள். இந்த இடத்தில் நான் எந்த விஷயத்தைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்பதை வாசகர்கள் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன். நான் : நீங்கள் தான் சொல்லுங்கள். மௌனி : பரிகாசப் பார்வை பிரயோகமாக வேண்டு மானால் மூன்றாவது ஆள் தேவை. 

விடைகளைவிட கேள்விகள் தான் முக்கியமாகத் தோன்றுவதால் இத்துடன் நிறுத்திக் கொள்வோம்" என்றேன். 

அடுத்த நாள் தக்ஷிணாமூர்த்தி வரவில்லை. 

இன்று நானும், நீல பத்மனாபனும், சுப்பையாவும், "மௌனியும்''. 

மௌனி : (பத்மனாபனிடம்) இலக்கியத்தில் கொச்சையைப் பிரயோகப் படுத்துவதைப்பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன? ஷண்முக சுந்தரம், ஜானகிராமன், ஹெப்ஸிபா ஜேசுதாசன், நீங்கள் எல்லோரும் எழுதுவதைப் பார்த்தால் இம்மாதிரி ஒரு இயக்கமே தோன்றிவிட்ட மாதிரி தோன்றுகிறது. இது அவ்வளவு ஆரோக்கியமானதா? 

கலைஞன் என்ற அளவில் 'மௌனி'' இந்த விஷயத்தைப் பற்றி ஒரு அடி முன் சென்றே யோசித்திருக்கிறார் என்று எனக்குப் பட்டது. ஆனால் நான் ஒன்றும் சொல்லவில்லை. 

பத்மனாபன் : எனக்குக் கைவந்த பாஷையில் எனக்கு அறிந்த அனுபவ உலகை நான் சித்திரித்திருக்கிறேன். இதைத் தவிர நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. 

மௌனி : உங்கள் நாவலை வைத்துக்கொண்டு நான் பேசவில்லை. இலக்கியத்தில் கொச்சை அடிப்படை அனுபவ மொழி பெயர்ப்பாக இயங்கும் மொழியாகுமா என்பது என் கேள்வி. அப்படியாகும் பொழுது அது எவ்வளவு தூரம் பல பிராந்தியக்காரர்களுக்குப் படித்து அனுபவிக்க முடியும்? நான் : ஒரு விஷயம். அப்படி ஒன்றும், ஒன்றுமே அயனாக வழங்குவதில்லை. அனுபவத்திற்கேற்ப எழுத்தாளன் வார் ததைகளை உருமாற்றியும், சிதைத்தும் உபயோகிக்கிறான். வழக்கிலுள்ள சொறகள் பாத்திரத்திற்கு இயைந்த சொறகள். இப்படிப் பலவகை. மேலும் எழுத்தாளன் எழுதியதின் முழு அனுபவத்தை அதே வண்ணம் வாசகன் வாங்கிக கொளவதும் இல்லை, முடியவும் முடியாது. 

பத்மனாபன் : இந்தப் புரிகிறது, புரியாதது என்பது மொழியை மாத்திரம பொறுத்த பிரச்சினையன்று. 

மௌனி : (என்னிடம்) நீங்கள் என்னைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ஒரு நாவல் முழுவதையும் கொச்சையிலேயே எழுதலாமா என்பது என் கேள்வி. 

நான் : மன்னித்துவிடுங்கள். தனிப்பட்ட நூல்களை வைத்துக் கொண்டு தான் என்னால் இதைச் சர்ச்சை செய்ய முடியும். எனக்குத் தெரிந்தவரையில் நீங்கள் குறிப்பிட்ட நான்கு ஆசிரியர்களும் படித்துப் புரிந்துகொள்ள முடியாத அளவிற்குப் பிராந்தியச் சொற்களையோ, அவர்கள் ஜாதிச் சொற்களையோ கலக்கவில்லை. கலந்த அளவிற்கு அவைகள் சிறப்பாகத்தான் இருக்கின்றன. மேலும் இன்னும் வராத பிரச்சினைக்கு நாம் இப்பொழுதே ஏன் பரிகாரம் தேடவேண்டும்? 

மௌனி : மீண்டும் சொல்கிறேன். நீங்கள் என் கேள்வியைப் புரிந்து கொள்ளவில்லை. எழுத்தாளன் என்ற வகையில் எழுத்து சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்சினையிலும் அவன் ஈடுபட வேண்டியவனாக இருக்கிறான். நான் : இருக்கலாம், என்னைப் பொறுத்தவரை நான் எல்லோர் சொல்வதையும் கேட்கிறேன். ஆனால் என் வழியை நான் தான் தேர்ந்து கொள்கிறேன். ஒரு எழுத்தாளனுக்கு முதலும் கடைசியுமாக வேண்டுவது அவன் சுதந்திர உணர்ச்சி. என்னைப் பற்றியவரை இதற்குமேல் இதில் பேச்சிற்கு இடமில்லை. 

மௌனி : (சிரித்துக்கொண்டே) சரி. இந்த விஷயத்தைப்பற்றி இவ்வளவு பேசியதே நல்லது. 

பத்மனாபன் : அது சரி. ஒரு எழுத்தாளன் தன் எழுத்தைத் தானே செலவு செய்து வெளிக்கொண்டு வருவது சிறந்ததா அல்லது அது ஒரு பத்திரிகை மூலம் வருவது சிலாக்கியமா? 

நான் இந்த விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை - எனக்கு விடை தெரியும் என்றாலும்! 

மௌனி : (பத்மனாபனிடம்) நீங்கள் ஒரு எழுத்தாளர். ஒவ்வொரு எழுத்தாளனும் அவன் எழுத்தாளன் என்ற வகையில் அனுகூல அனுபவ பாவனையும், அனுபவ சாத்திய பாவனையும் உடையவன். அதாவது ஆங்கிலத்தில் சொல்வதென்றால் Imaginative Sympathy, Region of possibility என்ற இரண்டையும் உணர்ந்தவன். இவன் இப்படிப்பட்டவன், இது இவ்வாறுதான் செயல்பட முடியும் என்று அறிந்துகொள்ள அவனால் இயலும். இந்த அடிப்படையில் நீங்கள் உங்கள் கேள்விக்கு விடை கூற முடியுமா? 

 பக்மனாபன் : நீங்கள் சொல்வது சரி. எனக்கு விஷயத்தில் என் அனுபவத்தைத் தாண்டிப் பார்க்க முடியவில்லை . 

மௌனி : (சிரித்துக்கொண்டே) எந்த எழுத்தாளனும், ஒரு பத்திரிகை பலத்தாலோ, அதன் ஆசிரியர் துணையாலோ (அதை அவன் எவ்வாறு அடைகிறான் என்பதுபற்றி நான் இங்கு பேச விரும்பவில்லை) தன் எழுத்துப் பாவிக்க வேண்டுமென்று நினைக்கிறானோ அவனுக்கே அவன் எழுத்தில் நம்பிக்கை இல்லை என்பதுதான் அர்த்தம். 

எனக்கு அவர் ''அதை அவன் எவ்வாறு அடைகிறான்'' என்றதுதான் இந்தக் கேள்விக்கே அடிப்படையாகப் பட்டது. எனக்குத் தெரிந்தவரை, கம்பன் கூறிய மாதிரி இந்த உலகில் “ இல்லாதன இல்லை" என்பது மாத்திரமன்றி இருக்கக் கூடாதவை தான் இருந்துகொண்டே இருக்கின்றன என்றும் , அவைகளை இல்லாமல் ஆக்குவதற்கு, நான் ஒரு இந்தியன், ஹிந்து என்ற அடிப்படையில் ஜன்மந்தோறும் 'குருஷேத்திர'' யுத்தந்தான் ஒருவனுக்கு அவன் கைக்கொள்ள வேண்டிய ஒரே வழி என்றும் தோன்றியது. நான் சிந்தனையில் ஆழ்ந்து விட்டேன் . 

மௌனி : என்ன துரைஸ்வாமி சிந்தனை? நான் : நீங்கள் எப்படி எழுதுகிறீர்கள்?

 மௌனி : அனுபவம் ஒரு புள்ளி. அந்தப் புள்ளியை இழை பிசகாமல் ஒரு வட்டமாகப் பரிபூர்ணமாக்க, அனுகூல அனுபவ பாவனையாலும், அனுபவ சாத்திய பாவனை யாலும் முயற்சிக்கிறேன். சில சமயம் வெற்றி; சில சமயம் தோல்வி. 


9-8-1968 “மௌனி'' திருவனந்தபுரத்திலிருந்து சிதம்பரத்திற்குச் சென்றார். சிதம்பரம் ஜெயராமன் பாட்டு ஞாபகம் வந்தது. ஒருமுறை தில்லை வெளி சென்றார் திரும்பி வருவாரோ என்பதுதான் அது. அவ்வாறு இருந்தும் திரும்பி வந்து தான் பெற்ற அனுபவத்தை எங்களுடன் கலந்துகொண்ட அனுபவத்திற்கு நான் செய்வது இந்தக் கட்டுரையை அவருக்குச் சமர்ப்பிப்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதுடன் இக்கட்டுரையை முடித்துக் கொள்கிறேன்
'வஞ்சிநாடு' இதழ், ஜனவரி 11, 25, 1969 

No comments:

Post a Comment