முற்றாய் முறுவலித்தல்.
வலிகளைப் பேரார்வத்துடன் சக ஆட்கள் மீது பரீட்சித்துப் பார்ப்பதில் ஆனந்தம் கொள்ளும் பண்பு கும்பல் மனோபாவத்தின் அங்கம். சிறுவர்களின் வன்மம் இன்னும் குழப்பத்திற்குரியது; சிடுக்கானது. தாவல் செய்து ஆர்ப்பரிக்கும் பருவம்! அதில் பெருந்தொற்று போல வெறுப்பும் வெறியும் தனது பரவலை பெருக்கிக் கொள்வது பெருவிந்தை. அங்கிருந்தே அவை பெரியவர்களின் சந்தைகளுக்கு ஏற்றுமதியாகிறது. அந்த உணர்வின் பீடிப்பே போர்களின் குற்றங்களின் அஸ்திவாரம்.
சிறுவயதில் எங்கிருந்தோ மரபணுக்குள் அமர்ந்து கொண்டு இன்னொருவனை மண்டியிடவைத்து சிரிக்கச் சொல்லும் அந்த மாயக்காரணி பற்றிய திகைப்பு அத்தனை எளிதில் நீர்த்து விடக்கூடியவை அல்ல.
பசினி என்பவனின் சந்தர்ப்பப் பிழைகளைக் குறித்து வைத்துக் கொண்டு அவனைத் தனிமையில் இம்சிக்கிறார்கள் நண்பர்கள். அவன் ஒரு புழு என்று குறிப்பிட்டுக் கொண்டே இருப்பதில் நான் உன்னை மிதிப்பேன் குச்சால் கிண்டுவேன் என்ற ஆணவத்தின் சாயலும் அர்த்தப்படுகிறது. இவற்றில் பங்கு கொள்ளாமலும் அதே சமயத்தில் குருதியில் கொதிக்கும் ஆற்றலை கவனித்தாக வேண்டிய நிர்பந்ததிற்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்டும் பார்வையாளனாக வேடமணிந்து கொள்கிறான் டோர்லஸ். பசினிக்கும் தனது இம்சைகளை அனுபவிப்பதில் ஏதோ சுகம் இருக்கிறதோ என்ற குழப்பம் ஏற்படுகிறது. அவன் தன்னிடம் கோரும் உதவியை மறுத்துவிட்டு மனக்கணக்குப் போட இருக்கட்டும் இந்த அத்தியாயம் என்றே நினைக்கிறான்.
தனது சந்தேகத்தை விளக்க யாரும் தயாராக இல்லை எனத் தெளிகிறான். அதுவே அவனுக்குள் ஒரு சிலைத்தனிமையை வளர்க்கிறது. அவனது கற்பனை எண்ணைப் பற்றிய புரிதலின்மை என்றைக்கும் எஞ்சியே இருக்கும் என்பதை தனது ஆசிரியரின் அக்கறையற்ற விளக்கத்தினால் தெரிந்து கொள்கிறான். இவர்களிடம் பசினி பற்றிய விபரங்களைத் தெரிவிப்பதால் ஏதும் நீதி விளைந்திடப்போவதில்லை என்று தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொள்கிறான்.
பைத்தியக்கார விடுதிகளால் ஆனது இந்த புவியின் கட்டிடங்கள் என்பது வெகு இளமையிலேயே புரிந்து விடுகிறது.
கண்டிப்பான கல்வியகத்தில் ஹார்மோன்களும் இளங்குருதியும் அழுத்தப்படுகையில் பொந்தோ விரிசலோ எது கிடைத்தாலும் அதில் பீய்ச்சியடிக்கின்றன கோரம். அப்படித்தான் இவ்வுலகத்தில் வெறுமனே துளிர்க்கும் விடவிதைகள் உருவாகியபடியே இருந்திருக்கின்றன.
ஈகோ என்பது ஒரு சமூக அச்சாணியாக நின்றபடி இப்படித்தான் சகடங்கள் உருண்டாக வேண்டுமென அறைகூவும் தோறும் உயிருள்ள வண்டிகளில் பயணிப்பவர்களுக்குப் பலவிதமான விபத்துகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
தனக்குள் களங்கத்தை நிறைத்து வைத்திருக்கும் ஒருவன் தான் இன்னொருவனில் களங்கத்தைத் தேடுகிறான். புறமே அகத்தின் ஆடியன்றி வேறில்லை! வதந்திகளுக்கு அப்படித்தான் ஒரு ஜனநாயக பீடம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது வரலாறெங்கிலும்.
இருளுக்கும் பிரகாசத்திற்கும் தனக்கும் பிறருக்கும் தனியனுக்கும் கும்பலுக்கும் இடையில் ஒவ்வொரு எண்ணங்களும் நசுங்கி நெளிந்த செம்பாக வெளிவருகிறது. மகிழ வாய்ப்பிருக்கும் தருணங்களையும் காரணங்கள் ஏதுமின்றியே குத்திக் கிழிக்கும் பொன்மனம் ஏகப்பட்டவை.
எதிர்மறை எண்கள் என்ற கற்பனை நடைமுறையில் ஏற்படுத்தும் கணிதச் சமன்பாட்டுப் பயன்கள் எத்தகையவையோ அத்தகையவை கற்பனை ஏற்படுத்தும் விளைவுகள். இளம் பருவத்திலிருந்து முதிர்வடைதல் குறித்த பகீரங்கமான தேடல்களையும் தாண்டி தத்துவார்த்தமான கேள்விகளைக் கண்டடையும் அற்புதமான படம்.
Young Torless (1966)
Volker Schlöndorff
மீள்
No comments:
Post a Comment