தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Tuesday, April 05, 2016

இருட்டில் நின்ற... - சுப்ரமணியராஜு

இருட்டில் நின்ற...
 
சுப்ரமணியராஜு

தஞ்சைமாவட்டம் திருவையாறுக்கு பக்கம் உள்ள கிராமத்தில் பிறந்த சுப்ரமணியராஜச, படித்து பட்டதாரிகளாய் புதிய வீச் சுடன் இலக்கிய பிரவேசம் ஆன இளைஞர்களில் குறிப்பிடத்தக்கவர்.

தனிமனிதனின் பிரச்சனைகளே சமுதாயத்தின் பிரச்சனையாகிறது. ஆகவே தனிமனிதனின் உணர்வுகளை அனுதாபத்துடன் பரிசீலிப்போம் என்ற நோக்கத்துடன் சிறுகதைகளைப் படைத்த இளைஞர்களில் இவரும் ஒருவர். படைப்பின் கதையம்சம் மிகக் குறைவாக இருப்பினும் புதிய தலைமுறைகளுக்கு அந்த நிலைகளுக்குப் பொருள் காண அவர்கள் மேற்கொள்ளும் ஆத்ம விசாரணையும் வெளிப்பட்டிருக்கிறது. -

‘கசடதபற’ இதழில் சோதனை முயற்சிகளை மேற்கொண்டவருக்கு மாலன் தலைமையில் வெளிவந்த 'வாசகன் இதழ் இவரை விரிவான இலக்கிய பார்வைக்கு இட்டுச் சென்றது.

மிகச் சின்னவயசிலேயே சாலை விபத்தில் காலமாக இவர் நீண்டகாலம் வாழ வாய்ப்பிருப்பின் இலக்கியத்தில் சிலபல சிகரங்களை நிச்சயம் தொட்டிருக்க முடியும் என்பதை வெளிவந்திருக்கும் அவரது படைப்புகள் கட்டியம் சொல்லுகின்றன. 'இன்று நிஜம்' என்ற சிறுகதைத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது. இந்த தொகுப்பு இலக்கியவாதிகளால் பெரிதும் பேசப்பட்டது. நவீன கவிதையில் அழுத்தமாக கால் ஊன்றியவர் என்று சொன்னால் மிகையில்லை.
________________
Google_Ocr from [சோலை சுந்தரபெருமாள் தொகுத்த தஞ்சைச் சிறுகதைகள்]

இருட்டில் நின்ற...

ரயில் நின்று விட்டது. வெளியே இருட்டு. ஒரு உவமை சொல்ல முடியாத அளவுக்கு நல்ல இருட்டு. சிலர் என்ன நடந்தது என்று பார்க்க ஜன்னல் வழியே வெளியே தலையை நீட்டினார்கள். இன்னும் சிலர் கதவுப் பக்கமாய் நடந்தார்கள். ஏதாவது விபத்து நடந்திருக்கும் என்று பேசிக் கொண்டார்கள். 

கணேசன் மெதுவாய் சோம்பல் முறித்துக்கொண்டே ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான். கீழே ஒரு பெண், மேல்பர்த்தில் படுத்திருந்த அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள். அவன் புகையை ஊதியபோது சற்று முகத்தைச் சுளித்தாள். அவன் அவளை அலட்சியப்படுத்திவிட்டுக் கூட்டத்தைப் பார்த்தான். 

கீழே இறங்கியவர்களைப் பார்த்து ரயிலில் இருந்தவர்கள் என்ன ஆயிற்று என்று ஜன்னல் வழியாய்க் கேட்டார்கள். பதில் வராது போகவே இவர்களும் இறங்கிப் போனார்கள்.

கணேசன் கீழே இறங்கி வந்தான். அந்தப் பெண் இன்னும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். நல்ல நாட்டுக் கட்டை என்று மனசுக்குள் அவளைப் படுக்க வைத்தான்.

ரயிலை விட்டுக் கீழே இறங்கியபோது வெளியின் இருட்டு அதிகமாய்த் தெரிந்தது. கீழே எல்லோரும் குறுக்கு - நெடுக்குமாய்ப் போய்க் கொண்டிருந்தார்கள். அவன் சற்று நிதானமாய்ப் பார்த்தபோது ரயில் பாதையை ஒட்டி ஒரு பெரிய ஏரி இருந்ததைப் பார்த்தான். வலது பக்கத்தில் ஒரு பசுமையான வயலில் சலசலப்பை உணர முடிந்தது. எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள். இருட்டில் குரல்களின் வித்தியாசம் துல்லியமாய்க் கேட்டது. இன்னும் எவரும் உண்மையான காரணத்தைத் தெரிந்து கொள்ளவில்லை. காரணம் என்ன என்பதே அவர்களுக்கு அவசியமில்லாதது போல் தெரிந்தது. ஆனால் பேசிக் கொண்டிருக்க ஏதாவது ஒரு காரணம் போதும் என்பது போல் பேசினார்கள். - கணேசனைக் கடந்து போன சிலர் அவனிடமும் விசாரித்ார்கள். அவன் தெரியாது என்று பதில் சொன்னவுடன் அதை எதிர்பார்த்ததே போல் மற்றவர்களிடம் கேட்கப் போனார்கள். கணேசன்  கொஞ்சம் தள்ளியிருந்த வாராவதியின் மேல் போய் நின்று கொண்டு ஏரியைப் பார்த்தான். ஏரியின் கரைக்கு அப்பால் ஒரு உயரமான மேடையும் ஒரு பெரிய கிணறும் தெரிந்தது. பக்கத்தில் ஒரே ஒரு குடிசை மட்டும் தெரிந்தது. அங்கு ஒரு பம்ப்செட் இருக்கவேண்டும் என்று அவன் ஊகித்தான். 

இந்தத் தனியான இடத்தில் ஒரு சிறு குடிசையில் வசித்துக் கொண்டிருக்கும் அந்த யாரோ ஒரு உழவனை நினைத்துக் கொண்டான். எவ்வளவு சுகமான வாழ்க்கை இவன் தெருவுக்கு இவனே ராஜா. இவன் ஊருக்கு இவன் மட்டுமே குடிமகன். யாரோடும் பேசாமல் இவன் மட்டும் தனியாகத் தன் வேலையைக் கவனித்துக் கொண்டிருப்பான். பிறரின் ரகசியங்களை அவலாக மெல்ல நினைக்கும் ருசி இவனுக்கு இருக்காது. ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் காப்பியைக் குடித்துவிட்டு 'ஹிந்து வைப் படித்து விட் டு பக்கத்து வீட்டுக்காரனோடு வம்பளக்கப் போகாதவனாய் அவன் இருப்பான். - 

வேளா வேளைக்கு இருப்பதைத் தின்றுவிட்டு வயலில் உழப் போய்விடுவான். சொந்தக்காரன் எங்காவது பட்டணத்தில் ஒரு ரேஸ் கோர்ஸில் இவனது பகல்நேர உழைப்புகளையெல்லாம் குதிரை வாலில் விட்டுக் கொண்டிருப்பான். இந்த விவசாயிக்குக் கவலைகள் அவ்வளவாய் இருக்காது. ரேவதி, நளினி, விஸ்கி, பிராந்தி எதுவும் இருக்காது. சினிமாவோ கிடையாது. இவனின் ஒரே பொழுதுபோக்கு இவன் மனைவியாய்த்தான் இருக்கும். தன் உடலின் பசி உயரும் பகல் பொழுதில் கூட அவனால் அவன் மனைவியைக் குடிசைக்குள் கூப்பிட முடியும். அவளும் சிணுங்காமல் போவர்ள். நிம்மதியான வாழ்க்கை...ம்... 

கணேசன் திரும்பிப் பார்த்தான். அந்தப் பக்கமாய் வந்த கார்டு பலர் சூழ நடந்து கொண்டிருந்தார். ஒவ்வொருவரும் அவரைக் கேள்வி கேட்டுத் துன்புறுத்திக் கொண்டிருந்தார்கள். அவர் யாருக்கும் பதில் சொல்லாமல் அலட்சியமாய் நடந்து கொண்டிருந்தார். அவர்களும் விடாமல் அவரைத் துரத்தி ரயில் நின்று போன காரணத்தைக் கேட்டார்கள். கார்டு தன் கையில் பிடித்திருந்த விளக்கின் பச்சையை, சிவப்புக்கு மாற்றிவிட்டு, அவர்கள்ைப் பேசாமல் இருக்கும்படி சைகை காட்டிவிட்டு மேலே நடந்தார். ரயிலின் ஜன்னல் ஒரத்தில் உட்கார்ந்திருந்த ஒரு கிழவர், இப்படித்தான் போன வருஷம் நான் டில்லிக்கு போறச்சே." என்று கதை சொல்ல ஆரம்பித்தார். கணேசன் லயன் ஓரமாகக் கிடந்த கற்களில் ஒன்றைப் பொறுக்கி, சி, ஜனங்க ஏன் இப்படி அர்த்தமே இல்லாம அபத்தமா பேசிக்கிட்டிருக்காங்க என்று நினைத்தவாறே ஏரியில் ஒரு கல்லை எறிந்தான். ப்ளக் என்று ஒரு ரசிக்கும் படியான ஓசை கேட்டது. தூரத்தில் பம்ப்செட்டின் மேலே இருந்த விளக்கின் ஒளி தண்ணிரில் சிதறுவதைப் பார்க்க முடிந்தது.

அம்மா இருந்தா சொல்லுவா. தவளை இருக்கும். அடிக்காதடா! இப்ப அவ இல்லை. மறுபடியும் ஒரு கல்லை விட்டெறிந்தான். அவள் இருந்த வரைக்கும் கஷ்டப்பட்டாள். கஷ்டம் மட்டுமே பட்டாள். அவள் ரொம்பவும் எதிர்பார்த்த அண்ணன்கூட யாரையோ கல்யாணம் பண்ணிட்டு கல்கத்தா பக்கம் போய்விட்டான். அதன் பிறகு, ஊரில் இருந்த அம்மாவுக்கு அவன்தான் பணம் அனுப்பிக் கொண்டிருந்தான். அம்மாவுக்கு ஒரு ரேடியோ வாங்கணும்னு ரொம்ப நாளாய் ஆசை. கதா காலவேடிபம் கேட்கணுமாம். அவனால் கடைசிவரை அதை வாங்கவே முடியவில்லை. 

கணேசன் பட்டணத்தில் தான் குடியிருந்த ராயர் வீட்டை நினைத்துக் கொண்டான். அந்த வீட்டின் முன் பக்க அறையில் பத்து ரூபாய் வாடகைக்குக் குடியிருந்தான். ராயருக்குப் பெண்கள் இல்லை. தான் படிக்கும் கதைகளில், முன்பக்க அறையைத் தன் போன்ற பையன்களுக்கு வாடகைக்கு விடும் ராயர்களுக்கு மட்டும் எப்படி அழகான பெண்கள் இருக்கிறார்கள் என்று அவன் சந்தேகப்பட்டிருக்கிறான். 

ராயர் ரொம்பவும் நல்லவர். அவர் மனைவி ஒரு பதினைந்து வருஷப் படுக்கை நோயாளி. மனைவிக்கு மருந்து வாங்குவதிலேயே வாழ்க்கையை அழித்துக் கொண்டவர். கணேசனும் இந்த மருந்துகள் வாங்கும் விஷயத்தில் அவருக்கு உதவியிருக்கிறான். ஆனால் எந்த மருந்தும் அவளைக் குணப்படுத்தவில்லை. 

ராயர் அவனை வேறு வேலை கிடைக்கும் வரை அங்கேயே இருக்கச் சொன்னார். ஆபீஸில் மேலே இருப்பவனை முறைத்துக் கொண்டதன் விளைவு... தன் சுயமரியாதையைக் காப்பாற்ற வேலையை ராஜினாமா செய்தான். (ம்...என்ன பெரிய சுயமரியாதை சாப்பாட்டுக்கு வழியில்லாம!) சாப்பாட்டைப் பற்றி அவர் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லியும் மறுத்துவிட்டான். தன் மேல் பிறர் அனுதாபப்படுவதை மிகவும் வெறுத்தான். (ஆமா, இதுக்கு மட்டும் கொறைச்சல் இல்லை) 

வேறு வேலை இங்கே இனிமேல் கிடைக்காது. ஆறு மாதம்வரை இருந்து 'செட்டில்மென்ட் பணத்தை வைத்து ஒட்டியாயிற்று. எங்க போனாலும் Experience இருக்கா?ன்னு கேக்கற்ான். இருக்குன்னு சொன்னா அந்த வேலையை ஏன் விட்டேன்னு க்ேக்கறான். - வேலை நிச்சயமாய்க் கிடைக்காது என்று தெரிந்தவுடன் முன்பு வேலை பார்த்துக் கொண்டிருந்த தன் ஒன்றுவிட்ட மாமாவின் ஊரில் இருக்கும் மில்லுக்குப் போவதுதான் கடைசி வழி என்று தீர்மானித்துத் தன் மூன்று வருடப் பட்டண வாழ்க்கையை எக்மோர் ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் உதறிவிட்டு ரயில் ஏறினான். 

கூட்டம் என்ஜின் பக்கம் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு பெட்டியிலும் உட்கார்ந்திருந்தவர்கள் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார்கள். அந்தப் பெண்ணும் ஜன்னல் வழியே தனியாய் நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கும் கணேசனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். கணேசனுக்குத் திடீரென்று ராயர் வீட்டுக்கு நாலு வீடு தள்ளி இருந்த மாடி வீட்டு மைதிலியின் ஞாபகம் வந்தது. அவன் அவளை ரொம்பவும் விரும்பினான். இவள்தான் நம் மனைவி என்று தீர்மானமாய்க் காதலித்தான். - 

'யாரோ அடிபட்டுக் கிடக்கான் '

அவனைத் தேடவே இவ்வளவு நேரம் ஆயிடுச்சு '

செமுத்தியான அடி. உடம்பு பூரா அடி!... ஒரே ரத்தம்” 

மைதிலி மிக அழகாய்ச் சிரிப்பாள். அவள் சிரிப்பு ஒண்ணுதான் அவள் சொத்து. அந்தச் சிரிப்புக்காக அவன் பஸ் ஸ்டாண்டில் தினமும் காத்துக் கொண்டிருப்பான். கூட்டம் கொஞ்சம் பரபரப்பாய் பேச ஆரம்பித்தது. சிலர் என்ஜின் பக்கம் போய் அதைப் பார்த்துவிட்டு வர ஓடினார்கள். 
'உசிரு இருக்கா? 

தெரியல. பக்கத்து ஜங்ஷன்ல இருக்கற ஆஸ்பத்திரிக்கு எடுத்துண்டு போவாங்கன்னு நெனக்கறேன்.' 

'இருட்டுல ஒரு எளவும் தெரியல. 

மைதிலி போல ஒரு பெண் இனி உலகத்தில் தனக்குக் கிடைக்க மாட்டாள் என்று அவன் நினைத்தான். மைதிலியோடு பேச அவன் பலமுறை முயன்று தோற்றுப் போனான். அது தன்னால் முடியாது என்றும் முடிவு செய்தான். ஆனால் அவளோ இவனை பார்த்ததும் ஒரு லேசான புன்னகையைக் காண்பித்துவிட்டு உடனே முகத்தைத் திருப்பிக் கொள்வாள். இது போதும் என்று அவன் நினைத்தான். ... "

 'உசிரு இருக்காது. அந்தக் கார்டுகூட நாடி பாத்துட்டு ஒதட்டைப் பிதுக்கிட்டாரே.

 'அப்படியே இருந்தாலும் இவுக போறதுக்குள்ளே போயிடாதா? 

‘எப்படி உளுந்தானாம்? - ஆனால் அவள் தன்னைக் காதலிக்கிறாளா என்பதை மட்டும் அவனால் அறியவே முடியவில்லை. தன்னுடைய அந்தப் பேடித்தனத்தை எண்ணி அவன் குமுறினான். ஏன் அப்படி இருந்தோம்? ஏன்? என்று பலமுறை தன்னையே கேட்டுக் கொண்டான். பற்களைக் கடித்துக் கொண்டான். மறுபடியும் ஒரு

சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு மணியைப் பார்த்தான். 11.30. 

அந்த ஆளு லயனை க்ராஸ் பண்ணறச்சே வண்டி வரதைப் பார்க்கல் போல. இங்க லயன் வேற வளஞ்சில்ல வருது' 

'டிரைவர்கூட கொஞ்சம் முன்னாலதான் பார்த்தாராம்.' 

'பாவிப் பசங்க ஏன் இப்படி நம்ம உயிரை எடுக்கிறானுவளோ தெரியலை. - 

கடைசியில் அவனால் அவளை அடைய முடியாமலேயே பேயிற்று. வேறு யாரோ ஒரு கணேசனுடன் அவளுக்குக் கல்யாணம் நடந்தது. அவன் ஒரு இன்ஜினியர் என்று கேள்விப்பட்டு அவன் மைதிலிக்காக வருத்தப்பட்டான். கல்யாணம் வெகு ஆடம்பரமாய் நடந்தது. இவன் ராயர் வீட்டு மொட்டை மாடியில் நின்று கொண்டுதான் அந்த மாப்பிள்ளை ஊர்வலத்தைப் பார்த்தான். கண்ணில் தளும்பி நின்ற நீரைக் கஷ்டப்பட்டுத் தேக்கிக் கொண்டான். அழக்கூடாது, அழக்கூடாது என்று தீர்மானமாய்ப் பல்லைக் கடித்துக் கொண்டு நின்றான். 

'பாடியை என்ன பண்ணுவாங்க? 

போஸ்ட் மார்ட்டம் பண்ணிட்டுத்தான் குடுப்பாங்க, லயன்ல விழறதுக்கு முன்னாடியே அவன் செத்துப் போயிட்டானா இல்லையான்னு கண்டுபிடிப்பாங்க.. '

நாளை பேப்பர்ல இந்த நியூஸ் வருமா? 

'ம்.கண்டிப்பாய் வரும். கொட்டை எழுத்தில் நாலு காலத்துல போடுவான்: 

'பாவம். சாகறதுக்கு முன்னாலே என்ன நெனச்சுக்கிட்டானோ. இருவத்தஞ்சு வயக ஆள் மாதிரிதான் தெரியுது. கல்யாணம் ஆயிடுச்சோ என்னமோ! 

இதற்குள் கார்டின் விஸில் சத்தம் கேட்டது. எல்லோரும் விழுந்தடித்துக்கொண்டு தங்கள் பெட்டிகளை நோக்கி ஓடினார்கள். என்ஜினின் ஹாரன் ஒசை ஒரு முறை நீளமாய் அலறியது. கதவு வழியில் அதிகக் கூட்டம் இருந்ததால் சிலர் ஜன்னல் வழியே தங்களைத் திணித்துக் கொண்டார்கள். - 

ஒரு வழியாய் எல்லோரும் ஏறிய பின் ரயில் மெதுவாய் நகர்ந்தது. கணேசன் மட்டும் கீழேயே நின்று கொண்டிருந்தான். ரயில் வேகமாய் நகர ஆரம்பித்தபோது இன்னும் சிலர் கதவு வழியில் உள்ள கைப்பிடியில தொங்கிக் கொண்டிருந்தார்கள். ரயில் முழு வேகத்தில் அவனைக் கடந்து போயிற்று. அவன் கடைசிப் பெட்டியின் பின்னால் தெரியும் சிவப்பு விளக்கு மறையும்வரை பார்த்திருந்துவிட்டு இன்னொரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டான் 
.